அறிஞர் அண்ணாவின் கட்டுரைகள்


அந்தப் புரவிகள்!

காசாக் குதிரைகள் நீப்பர் நதியிலே நீர் பருகின!

ரஷியா வெங்கும், இந்தச் செய்தி குதூகலமூட்டிற்று. உலகெங்கும் இச்செய்தி கேட்டவரின் உள்ளத்திலே உவகை பொங்கிற்று. விமான பலமும், விஞ்ஞான பலமும் பெருகிய இக்காலத்திலுங்கூட, ரஷியர்களுக்குக் காசாக் குதிரை வீரர்களிடம், அபாரமான மதிப்பு, குன்றாத அன்பு, குறையாத நம்பிக்கை! எது கெடினும் இவரின் உரம் நமது நாட்டை மீண்டிடும். காசாக் குதிரைகளின் காலடிச் சத்தம் கேட்கும் வரையிலே, நமது மண்ணை எதிரி கவ்வ நேரிடுமேயன்றி ஆளமுடியாது என்று கூறுவர். அத்தகைய வீரதீரப்பணி புரியும் புரவி வீர்கள், அந்த காகாக் வகுப்பினர். அக்குதிரைப்படை, சென்ற ஆண்டு, கணவாய்களிலும், காடு மேடுகளிலும் காலங்கழிக்க நேரிட்டது. புயலெனக் கிளம்பி, பூங்காவினை, அழிப்பதுபோல எதிர்ப்பட்ட சந்திகளைச் சாய்த்துக்கொண்டு நாஜிப்படை மாஸ்கோ வாயற்படிவரை சென்று, கொக்கரித்த போது, காசாக் குதிரை வீரர்கள், இனி ரஷியாவிலே, ரம்மியமாக நடமாட முடியமா? அவர்களின் அஞ்சா நெஞ்சாற்றலும், மயிர்க்கூச்செரியும் போர்முறையும், திடீர்ப் பாய்ச்சலும், மின்னல் வேகமும், இனி நாடு காணுமா என்று சோவியத் மக்கள் சோர்ந்தனர். வோல்கா நதிக்கரைக்கே, எதிரிகள் வந்துவிட்டனர். டெஸ்னா, நீப்பர் முதலிய நதி அரண்களைக் கடந்துவிட்டனர், இனி என் செய்வது என்று சோவியத் மக்கள் ஏங்கினர். உலகமே ரஷியா தீர்ந்துவிட்டது என்று துக்கத்துடன் கூறிவிட்டது. கசங்கியக் கண்களுடன் மற்றவர் இருக்கும்போது வீரத்தலைவன் ஸ்டாலின் மனமுடைந்தானில்லை. இந்தச் சுவஸ்திகச் சூறாவளியை நான் சமாளிக்க முடியும் என்று உறுதியுடன் அந்தக் காலத்திலேயே, அதாவது, ஆபத்தும் நெருக்கடியும் சூழ்ந்துகொண்டு, அழிவு ஆர்ப்பரித்துக்கொண்டு, ஜெர்மன், விமானங்கள் சீறிக்கொண்டிருந்த அந்தக் காலத்திலேயே, சர்ச்சிலிடம் கூறினாராம்! முதலமைச்சர் சின்னாட்களுக்கு முன்னராற்றிய சொற்பொழிவிலே, இதனைக் குறிப்பிட்டார். எவ்வளவு மனோதிடம் இருந்திருக்க வேண்டும், அந்த மாவீரனுக்கு!!

ஆம்! வீரம், வீண்போகவில்லை! சோவியத் வீரர் சிந்திய இரத்தம் விழலுக்கிரைத்த நீராகவில்லை. வெற்றி அறுவடை இதோ நடந்து வருகிறது. செருக்குடன் உலவிய நாஜிகளின் சிரங்கள் சோவியத் அறிவாளுக்கு இறையாகின்றன. சுவஸ்திகச் சூரத்தனம் எனும் கற்பாறையைச் சோவியத் சம்மட்டி தூளாக்குகிறது! அந்த வெற்றியின் பயனாகவே, காசாக் வீரர்களின் குதிரைகள், நீப்பர் நதியிலே - நாஜிகளின் மூர்க்கத்தனமான தாக்குதல் நடந்த இடத்திலே - நீர் பருகின!

கடந்த இரண்டு மாதமாக, எந்தக் கோடை தாக்குதலிலே எமக்கு ஈடு இல்லை என்று நாஜிகள் கூவினரோ, அதே கோடையிலே சோவியத் வீரர்கள் கொடுக்கும் சம்மட்டி அடி, ஹிட்லரின் படைகளுக்குப், போர் பயங்கரமானதுதான்! என்ற உண்மையை உபதேசம் செய்வது போலிருக்கிறது.

இதுபோது நடைபெறும், மகத்தான போர், உலக சரிதத்தையே, நேசநாடுகளின் நிலைமையையே, மாற்றி விட்டது. எண்ணூறு மைல், அப்போர் முனையின் அமைப்பு! அத்தகைய பரந்த போர் முனையிலே, பல திக்குகளிலேயும் சோவியத் படை பாய்கிறது, பிரம்மாண்டமான தாக்குதல்கள், பிடிவாதமான எதிர்த்தாக்குதல், பிணக்குவியலை இழுத்துச் செல்லும் இரத்த ஆறுகள், பிடிபட்ட இடங்கள் மீட்கப்டுவதால் உண்டாகும் பெருமிதம், இவையே, இரண்டு திங்களாகத், தொடர்ந்து நடந்து வருகின்றன. பனியிலே புலி, பகலவன் கிளம்பியதும் அவர்களுக்குக் கிலி, என்று, ரஷியரைக் கேலி செய்த நச்சு நாவினரும், ஹிட்லர், ரஷியாவின் நெற்களஞ்சியத்தை, சுரங்கங்களைப் பிடித்துவிட்டான், சாறுபோய் விட்டது, வெறுஞ்சக்கைதான் மிச்சம் என்றுரைத்த சழக்கரும், இந்தச் சோவியத் வெற்றிகளுக்கு என்ன பதில் கூறுவர்!

பிரயான்ஸ்க் பிடிபட்டது, டாகன்ராக் வீழ்ந்தது, ஸ்டாலினோவை மீட்டு விட்டோம், சுமி, பிடித்தாகி விட்டது, கொனடாப் பிடிபட்டது, அனாபாவும் டேமிடோவும் கிடைத்துவிட்டன, என்று நாள்தோறும், பல இடங்கள், சோவியத் படைகளால் மீட்கப்படும் செய்தி வந்த வண்ணம் இருக்கிறதே, இந்த வெற்றிகள், சாமான்யமானவை என்று யார்கூற முடியும், விவரமறியாதாரும் விஷமிகளுந்தவிர.

ரஷியர் போர்க்களத்திலே மத்திய முனையிலே, மாபெரும் ரயில்வே ஜங்ஷன் பிரயான்ஸ்க்! அது இன்று ரஷியரிடம்!! இதன் பொருள் என்ன? எப்பக்கமிருந்து, எந்தச் சமயத்திலே, ரஷியப்படை கிளம்புமோ, என்ற திகிலை, நாஜிகளுக்கு ஊட்டும் செய்தி பிரயான்ஸ்க் பிடிபட்டது என்ற சம்பவம்! அது மட்டுமா? டெஸ்னா என்ற நதிக்கரையிலே, ஜெர்மானியர் அமைத்திருந்த அரண்களைத் துளைக்க, பிரயான்ஸ்க் முகாமாகும்! முகாமாகி, டெஸ்னா அரணும், துளைக்கப்பட்டும் போய்விட்டது. இது மட்டுமா? இன்று, ஜெர்மானியருக்கே பெரியதோர் பாதுகாப்பு அரணாக இருக்கும், ஸ்மாலன்ஸ்க் எனும் இடத்தை ரஷியர் தாக்க, பிரியான்ஸ்க், மூலஸ்தானமாகி விட்டது. அதைப்போலவே, சில நாட்களுக்கு முன்னர், ரஷியர் நவரோசிஸ்க் என்ற இடத்தைப் பிடித்தனர் என்று படித்தோம். இது பட்டியன்று! ஜனநடமாட்டமே உள்ள வெறும் பட்டினமுமன்று! உயிர் நாடி போன்ற இடம். கருங்கடலின் முக்கிய மான துறைமுகம் நவரோசிஸ்க்! இது இன்று செஞ்சேனையிடம்!! இங்கு போர்க்கப்பல்கள் அணிவகுத்து நிறுத்த வசதி உண்டு. இத்துடன், இங்குதான், ரஷியாவின் பிரக்யாதி பெற்ற சிமிட்டி உற்பத்தி நிலையம் இருக்கிறது. ஸ்டாலினோ, டான்பாஸ் வெளிக்குத் திறவுகோல், இங்கே சோவியத்கொடி இன்று பறக்கிறது. நிலக்கரிச் சுரங்கம் மிகுந்த இடம் இது. பெரிய பெரிய தொழிற் சாலைகள் மிகுந்த இடம் ஸ்டாலினோ! 1941 முதல், நாஜியிடம் சிக்கிச் சொல்லொணாக் கொடுமையை அனுபவித்த நகரம் ஸ்டாலினோ! அது இன்று, செங்கொடியைச் சிறப்புறப் பறக்கவிடுகிறது.

அஜாவ் கடலிலிருந்து ஸ்மாலென்ஸ்க்வரையே மூண்டுள்ள இப்போரின் இரு முக்கிய குறிகள், ஸ்மாலென்ஸ்க், கீயவ், என்பன. இந்த இரு இடங்களையும், எப்படியும் பிடித்தே விடுவது, அதுவும் பனிக்காலம் பிறக்கு முன்னர், என்ற இலட்சியத்தோடுதான் செஞ்சேனை போரிடுகிறது. நாம் முதலிலே காசாக் குதிரைகள் நீப்பர் நதியிலே நீர் பருகின, என்று குறிப்பிட்டோம்! அந்த வீரர்கள், முன்னோடும் வீரர்கள்! இரு இலக்குகளை எப்படியும் பிடிப்பது என்ற உறுதியுடன் பாய்ந்துவரும் சோவியத் சேனையின், மணியோசை அது! எனவேதான் அந்தப் புரவிகள் நீப்பரிலே நீர் பருகின என்ற செய்தி அவ்வளவு களிப்பை சோவியத் மக்களுக்கு உண்டாக்கிற்று. இது மட்டுமா! கதிரவனின் ஒளிபட்டு, மேலும் செந்நிறங்கொண்டு பிரகாசிக்கும், செம்பொன் நிறமான கூட கோபுரங்கள் தெரிகின்றனவாம், சோவியத் படைகட்கு! எவ்விடத்துக் கூடகோபுரம்? பண்டாக்களும் பணியாக்களும் ஆளும் புண்யஸ்தலத்துக் கூடங்களன்று! நாஜியிடம் சிக்கித்தவிக்கும், கீயவ் நகரத்துக் கூட கோபுரங்கள்! அவை தொலைவிலே தெரியும் அருகில், சோவியத் படை இருக்கிறது. சின்னாட்களிலே, கீய்வ், ஸ்மலன்ஸ்க், வீழ்ந்தன, என்ற செய்தி கிடைக்க வேண்டும், என்று நாம் ஆவலுடன் எதிர்நோக்கியபடி இருக்கிறோம். மகத்தான வெற்றி பெற்றுவரும் செஞ் சேனை, இதனைச் சாதித்தே தீரும்! வாழ்க, செஞ்சேனை, வெல்க!!

26.9.1943