அறிஞர் அண்ணாவின் கட்டுரைகள்


அந்த வெண்கலச்சிலை!
விளாடிவாஸ்டாக் நகரிலே, வீரர்களின் கண்களுக்கும் கருத்துக்கும் விருந்தாக, புரட்சிக்கருத்தினருக்கு எழுச்சி தரும் விதத்திலே, வெற்றிவீரன், விதியை வென்ற தீரன், மதிகொண்டு மதத்தை மாய்த்த மறவன், சோவியத் சிற்பி, சோர்விலாச் சிங்கம், லெனின் உடைய உருவமொன்று, வெண்கலச்சிலையாக அமைந்திருக்கிறது. கெம்பீரமான தோற்றத்துடனுள்ள அந்த வெண்கலச்சிலை, பசிபிக்கடற்பக்கம் இருப்பவரை பற்றி ஒரு வெளிநாட்டுத் தோழர், அதோ அந்தப் பசிபிக் கடலிலே, முக்கியமான போர் முடிவுகள் நடத்தப்படும்” என்று வெண்கலச் சிலை, சுட்டிக் காட்டுவது போலிருக்கிறது என்று கூறுகிறார்.

விளாடி வாஸ்டாக்கிலே உள்ள வெண்கலச்சிலை, இதைக் கூறுவதுடன், ஜப்பானியர்களின் கூடாரமான டோக்கியோவையும் சுட்டிக்காட்டி, “இந்த மண்ணாசைக்காரர்கள் கடலைக்கலக்கி, விண்ணைக்கருக்கி, நிலத்தைக் குலுக்கி வலுவிழந்துள்ள இனத்தவரைவெட்டி வீழ்த்துவர், உஷார்!” என்று உலகிற்கே சுட்டிக்காட்டுகிறதோ வென்று நாம் கருதுகிறோம். ஏனெனில், வீரன் லெனின், இந்தியா எனும் இந்த நிலப்பரப்பு, நெடுங்காலமாக, நெஞ்சைப் பறிகொடுத்த, நெறியை மறந்த, நாடி முறுக்கிழந்த, நாச நினைப்பைப் பெற்ற, நானாவிதக் கூட்டத்தினரின் சாவடிபோன்று இருந்துவருவதையும், சாத்திரங் கூறிமக்களின் ஆத்திரத்தை அடக்கிடும் சழுக்கரும், மடத்தனத்தைப்புகுத்தி மனமருளை உண்டாக்கும் மதபோதகர்களும், கட்டுக்கதைகளைக்கூறி மக்களின் கருத்தைக் கெடுக்கும் குடிலரும், சாமபேததான தண்டமெனும் சதுர்வித உபாயங்கற்று, சிண்டு முடிந்துவிடும் சாணக்கியரும், மலிந்த இடமாக இருந்து வருவதையுங்கண்டு, இந்தப் பூபாகத்தின் மீது பாயவும் இறைகொள்ளவும், கடல் அலைபோல் கபடக்கருத்து மனதில் கொந்தளிக்கும் ஜப்பானியர் ஒரு நாள் கிளம்புவர் என்பதையும் முன்கூட்டியே தெரிந்து கொண்டேயிருப்பார். வேறு தலைவர்கள் அந்தராத்மாவைத் துணைகொண்டனர், மருளே கண்டனர், லெனின் துணைகொண்டது அறிவை, எனவே, இவ்வுண்மையை அறியாமற் போகவில்லை. வெண்கலச்சிலை, விளம்பிடுவது இதுவாகத்தான் இருக்கும். இன்று நிலைமை அந்த அளவுக்கு வந்துவிட்டது. அசாம் மாகாணத்திலே, ஜப்பானிய விமானங்கள் குண்டுகளை வீசத்தொடங்கி விட்டன. ஏறக்குறைய நூறுவிமானங்கள் வட்டமிட்டனவாம், குண்டு பொழிந்தனவாம், நேசநாட்டு விமான நிலையங்களையும் சென்ற வாரம் தாக்கினவாம். ஆனால் அசாம் அஞ்சவில்லை! அசாம் அஞ்சிடத் தேவையுமில்லை!! அச்சமே, இன்று ஜப்பானியரை, அசாம்மீது பாயச்செய்கிறது. அசாமிலிருந்து கிளம்பும், நேசநாட்டுப்போர் முழக்கம், பர்மாவிலே பாசறைகள் அமைத்துக்கொண்டுள்ள ஜப்பானியரின் செவியைக் குடைகிறது! ஜப்பானிய ராணுவ ஏற்பாடுகள் பிரிட்டிஷ் அமெரிக்க விமானத் தாக்குதலால் பர்மாவிலே குலைந்துவருகிறது. சீன மண்ணிலே, சீறிடும் சியாங்கின் படைகள், செக்கியாங்கிலேயிருந்து சிதறிடித்து விட்டன ஜப்பானியப் படைகளை, சாலமன் போரிலே, ஜப்பானின் ஜம்பம் சாயவில்லை. பக்க மேளத்தின் கதி இதுவெனில், பிரதமபாடகர், அங்கு, ஸ்டாலின்கிராடிலே, இருப்புக் கோட்டையிலே, இரத்த ஆற்றிலே, முகாரி பாடுகிறார்.

ஸ்டாலின் கிராட்! சரிதத்திலே ஒரு தனிச்சிறப்புள்ள சம்பவம்! உலகப்போர் வீரர்கள் கண்டு களித்து, கேட்டுக்களித்து, வீர உணர்ச்சி பெற வேண்டிய கோட்டமாக விளங்குகிறது. டாங்கிப் படைகளால் உடைக்கப்பட முடியவில்லை! விமானப் படையினால் நொறுக்கப்பட முடியவில்லை! தரைப்படையினால் தகர்க்கப்பட முடியவில்லை! ஸ்டாலின்கிராடை எதிர்த்து எதிர்த்து ஜெர்மன் படைகள் சளைக்கின்றனவேயன்றி, ரஷியர் சளைக்கவும் சாயவும், சோர்ந்து போகவும் பயந்து ஓடவும் மறுக்கின்றனர். ஸ்டாலின்கிராட், அச்சுநாட்டினரின் கொட்டத்துக்கு ஒரு சவக்குழி!

அதைக்கண்டு, அச்சுநாட்டுக் கீழ்க்கோடி பங்காளி அஞ்சா திருக்க முடியுமோ! மேலும், இனி பலமான முன்னேற்பாடுகளுடன் சீனா மூலமாகவும், இங்கிருந்தும், நேசநாட்டுப் படைகள், கிளம்பி, பர்மாவைத் திருப்பிப் பிடிக்க ஏற்பாடு பூர்த்தியாகி இருக்கிற செய்தியும் கிலிமூட்டிவிட்டது. மற்றும், பலம் பொருந்திய பிரிட்டிஷ் கடற்படையொன்று, இந்துமகாசமுத்திரத்திலே இருக்கும் செய்தியும் ரோமலின் ரணகளத்திலே, பிரிட்டிஷ் வெற்றி முரசும் கெட்டியாகக் கேட்பதும், ஜப்பானை மருட்டிவிட்டிருக்கும். எனவேதான் மருண்ட ஜப்பான், அசாமின்மீது பாய்கிறது. மருளாது அசாம்! இந்தியாவிலே, அச்சு நாட்டினரின் கைக்கூலிகளின் ஆர்ப்பாட்டத்தைக்கண்டு அயராமல், யுத்த ஏற்பாடுகள் அமோகமாகி விட்டன. கடலோரப் பாதுகாப்பும், ராணவ முஸ்தீப்பும், ஏ.ஆர்.பி. திட்டமும் இவை போன்றவையும் நேர்த்தியான முறையிலே உள்ளன. இனி அஞ்ச வேண்டாம்! அந்த வெண்கலச்சிலையின் வீரமொழிகளை ரசமாகக் கொள்வோம், விரோதிக்கூட்டத்தின் குடலை அறுப்போம், ஸ்டாலின்கிராட் என்ற வீரமொழியைப் பூஜிப்போம், வீரராவோம் - வெற்றி நமதே!!
1.11.1942