அறிஞர் அண்ணாவின் கட்டுரைகள்


அந்த `யாரோ சிலர்!'

சென்னை சர்க்கார்- தமிழ்நாட்டில் இந்தியை விருப்பப் பாடமாக ஆக்கியிருக்கிறது. இது, உண்மையிலேயே பாராட்டக் கூடியது மட்டுமன்று, சென்னை சர்க்கார் தீர யோசித்துச் செய்த இந்தக் காரியம், தமிழ் மக்கள் அனைவ ராலும் பெரிதும் வரவேற்கப்பட்டு அதற்காக நன்றி செலுத்தவும் கடமைப்படக் கூடியதாகும். ஆண் பெண் உட்பட ஆயிரத்துக்கு மேற்பட்ட தமிழ் மக்களைச் சிறைக்கு அனுப்பியும், இரு இளைஞர்களின் உயிரைப் பலி வாங்கியும், விருப்பப் பாடமாக்கப்பட்ட இந்தியை, மீண்டும் கட்டாயப்படுத்துவது முறையும், நேர்மையும் அல்ல என்பதைச் சர்க்கார் நன்கு உணர்ந்ததா லேயே தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில் அதனைக் கட்டாயப் பாடமாக்காமல் விருப்பப் பாடமாக ஆக்கியிருக்கின்றனர். சர்க்காருக்கு அவசியமற்ற தொல்லையை உண்டாக்க வேண்டு மென்று கருதுபவர்களைத் தவிர, வேறு எவரும் சர்க்காரின் இந்தத் திட்டத்தைத் தவறென்று கூற மாட்டார்கள்.
இனி, ஆந்திரம், கேரளம் ஆகிய பகுதி களில் இந்தியைக் கட்டாயப் பாடமாக்கி விட்டுத் தமிழ்நாட்டில் மட்டும் அதனை ஏன் விருப்பப் பாடமாக்க வேண்டுமென்று சிலர் கேட்கின்றனர். சில பத்திரிகைகளும் இது பற்றி எழுதின. சர்க்காரின் இத்திட்டத்தைக் கண்டிக்கும் முறையில் கல்வி அமைச்சர், பத்திரிகை களுக்குப் பதிலளிக்கும் முறையில், தம்முடைய கருத்தையும் சர்க்காரின் முடிவையும் நன்கு தெளிவுபடுத்தியும் இருக்கிறார். இந்த நிலையில், `எருதுப் புண் காக்கை அறியாது' என்பது போல், 20-6-48ல் சென்னையில் கூடிய காங்கிரஸ் இத்திட்டம் கண்டிக்கப்பட்டிருக்கிறது. மாநாட் டுக்குத் தலைமை வகித்த தோழர் முத்துரங்கம் அவர்கள்.
``யாரோ சிலர் சொல்லுகிறார்கள் என்பதற்காகச் சர்க்கார் இப்படிச் செய்யலாகாது. சர்க்கார் தைரியத்துடன், தங்கள் கொள்கைகளை நடைமுறைக்குக் கொண்டுவரவேண்டும், இந்தியை விருப்பப் பாடமாக்கினால் எல்லோ ரையும் கற்கும்படி சொல்கிறோம், கட்டாய மாக்கினால் எதிர்ப்புக் கிளர்ச்சி நடத்து வோம் என்று கூறுகிறவர்களைக் கண்டு அஞ்சக் கூடாது.''
என்று பேசியிருக்கிறார். தோழர் முத்துரங்கம் அவர்களால் கருதப்படும் அந்த `யாரோ சிலர்' யார் என்பதை இதற்குள்ளாக அவர் எப்படி மறந்து விட்டார் என்று தெரியவில்லை. ஆனால் சர்க்கார் மட்டும், அந்த `யாரோ சிலரை' நன்கு அறிந்திருக்கிறார்கள். அவர்கள் யார்? எப்படிப் பட்டவர்கள்? இந்தியைத் தமிழ்நாட்டில் கட்டாயப் பாடமாக்கக் கூடாதென்று ஏன் கூறுகின்றார்கள்? அவர்கள் கூறுவது நியாயமா அல்லவா என்பன எல்லாம் சர்க்காருக்குத் தெரிந்ததால்தான், சர்க்கார் தமிழ் நாட்டில் இந்தியை விருப்பப் பாடமாக்கியுள்ளனர். இதற்கு முன் ஒருமுறை நன்கு அறிந்த அந்த யாரோ சிலரைத் தோழர் முத்துரங்கம் போன்றார் மீண்டும் ஒருமுறை அறிய விரும்ப வேண்ண்டாமென்று கேட்டுக் கொள்ளுகிறோம்.
இனி, `ஆந்திர, கேரளப் பகுதிகளுக்கு இந்தியைக் கட்டாயப் பாடமாக்கிவிட்டுத், தமிழ் நாட்டுக்கு அதனை விருப்பப் பாடமாக்கியது நியாயமும் நேர்மையுமல்ல, மாகாணம் முழு வதும் இந்தி கட்டாயப் பாடமாக இருக்க வேண்டும், அல்லது அது எங்கும் விருப்பப் பாடமாக ஆக்கப்பட வேண்டும்'` என்றும், தோழர் முத்துரங்கம் அவர்கள் பேசியிருக்கிறார்.
ஆந்திரரும், கேரளரும், கன்னடியரும் இந்தியைக் கட்டாயக் கல்வியாகக் கற்றுக் கொள்ளுமாறு சர்க்கார் வற்புறுத்துகின்றனரா? அல்லது அவர்களே அந்த மொழியைக் கட்டாயமாகக் கற்றுக் கொள்ள விரும்புகின்ற னரா? என்பதைக் கவனிக்கும்போது, ஆந்திரரும், கேரளரும், கன்னடியரும், இந்தி மொழி கட்டாயப் பாடமாவதை எதிர்க்க வில்லை என்றே தெரிகிறது. 1938ல் இந்தி மொழி கட்டாயப் பாடமாக ஆக்கப்பட்டபோது கூட அவர்கள் தங்களுடைய எதிர்ப்பைக் காட்டிக் கொள்ள வில்லை. எனவே அவர்கள், இந்தி கற்பதை விரும்புகின்றனர் என்று சர்க்கார்ர் கருதியதால் தான், அவர்களுக்கு அதனைக் கட்டாயப் பாடமாக வைத்துள்ளனர். ஆனால், தமிழ் மக்கள், இந்தி கட்டாயப் பாடமாக்கப்படுவதை எப்போதுமே விரும்பவில்லை. எனவேதான், சர்க்கார், ஆந்திர, கேரளப் பகுதிகளுக்கு இந்தியைக் கட்டாயப் பாடமாகவும், தமிழ் நாட்டுக்கு அதனை விருப்பப் பாடமாகவும் ஆக்கியுள்ளனர். இந்த நிலையில், ``யாரோ சிலர் சொல்கிறார்கள் என்பதற்காகச் சர்க்கார் இப்படிச் செய்யக்கூடாது'' என்ற யோசனையைத் தோழர் முத்துரங்கம் அவர்கள் சர்க்காருக்குக் கூறிவிட் டால், சர்க்கார் ஒருவேளை தங்களுடைய திட்டத்தை மாற்றி அமைத்துவிடும் என்று அவர் கருதுகிறார் போலும்! ஆனால் சர்க்கார், நிலைமையை நன்கு பரிசீலனை செய்த பின்னரே, தமிழ்நாட்டில் இந்தியை விருப்பப் பாடமாக ஆக்குவதென்ற முடிவுக்கு வந்து அவ்விதம் செய்துள்ளனர் என்பதைத் தோழர் முத்துரங்கம் அவர்கள் அறியும்படி செய்வது நம்முடைய கடமையாகும். அதோடு தமிழ்நாட்டில் இந்தி மொழியைக் கட்டாயப் பாடமாக்குவது கூடாது என்பதற்குரிய சில குறிப்புகளையும் வெளி யிட்டுத் தமிழ் நாட்டில் இந்தி கட்டாயப் பாடமாக இருக்க வேண்டுமென்று கருதுபவர்கள் தங்களுடைய தவற்றை உணரும்படி செய்வதும் இன்றியமை யாததாகும்.
வட இந்தியருள்ளும் ஒரு சிறு பகுதியின ரால் மட்டும் பலப்பல மாறுதல்களுடன் பேசப்படுவதும், இற்றைக்கு 500 ஆண்டுகளுக் குள்ளாகவே சமஸ்கிருதம் உருது முதலான மொழிகளிலிருந்து எடுக்கப்பட்ட சில எழுத்துக்களையும், சொற்களையும் கொண்டு உண்டாக்கப்பட்டதும், பழைய அறிவு நூற் செல்வம் இல்லாததுமான ஒரு கலப்புச் சிதைவு மொழியாகிய இந்தி மொழியை இந்தியா முழு வதுக்கும் பொது மொழியாக வைத்துவிடலாம் என்பது ஒரு சிலரின் நோக்கம். இவ்வாறான ஏழை மொழியாகிய ஒரு புது மொழியை இந்தியாவிலுள்ள எல்லாப் பள்ளிக்கூடங்களிலும் கட்டாயப் பாடமாக்கி அதனை இந்தியாவிற்கே ஒரு பொது மொழியாக்கி விடலாம் என்று நினைந்து, அத்துறையில் பெரு முயற்சி எடுத்துக் கொண்டிருக்கும் சில தலைவர்கள் நாம் கீழே தரும் வினாக்களுக்குத் தக்க சான்றுகளுடன் விடைகள் அளித்த பின்பே அவர்கள் அதனை நம் மக்கட்குக் கட்டாயப்படுத்தும் பெரு முயற்சியில் ஈடுபட வேணுமாய் விண்ணப்பித்துக் கொள்கின்றோம்.
தமிழ் நாடல்லாத வேறெந்த நாட்டிலாவது அவர்களின் தாய்மொழியை நீக்கி வேறொரு அயல் மொழியைக் கட்டாயப் பாடமாக வைத்துக் கற்பிக்கப்படுகின்றதா? அங்ஙனமாயின் எந்த நாட்டில் எம்மொழி என்பதைத் தக்க சான்று களுடன் விளக்கிக் காட்டுக!
இந்தி மொழியை இந்தியா முழுவதுக்கும் பொது மொழியாக்குவதினின்றும் மக்களிடையே யுள்ள பிளவுகள் நீங்கி ஒற்றுமை உண்டாகும் என்னும் கூற்றுக்கு யாதாயினும் சான்று காட்டி அதனை மெய்ப்பிக்க முடியுமா?
ஒரு மொழியையே பேசும் ஒரு நாட்ட வரிடையே பலவகைப்பட்ட பிளவுகளும், சச்சரவுகளும் காணப்படும் நிலைமையில், பல மொழிகளைப் பேசும் பல நாட்டவரையும் ஒரு பொது மொழி கற்பதனால் ஒற்றுமையாக்கி விடலாமென்று கருதிப் பாடுபடுவது, `உமிக் குற்றிக் கை சலித்த' பான்மையாக முடியுமல்லது அதனால் யாதும் பயன் விளையுமென்று சொல்ல முடியுமா?
இப்போது ஒரு மொழியையே (ஆங் கிலத்தையே) பொதுமொழியாக வைத்துப் பேசி வரும் இங்கிலாந்து, அயர்லாந்து, ஸ்காட்லாந்து ஆகிய மூன்று தீவுகளிலுமுள்ள நாலேகாற்கோடி மக்களுள்ளும் பிளவுகளும், சச்சரவுகளும் இல்லாமலா இருக்கிறது?
இந்தியாவில் உள்ளவர்களின் மூன்றில் இரண்டு பகுதியினரால் அதாவது 25 கோடி மக்களால் இந்தி மொழி பேசப்பட்ட வருகின்ற தென்னுங் கூற்றுக்குத் தக்க ஆதாரங்களுடன் எந்த ஆண்டிலாவது எடுக்கப்பட்ட இந்தியக் குடிக் கணக்கின்படி புள்ளி போட்டுக் காட்ட முடியுமா? அல்லது இப்பெரும் பொய்யை மறைக்கும் ஆற்றலாவது எவருக்கேனும் உண்டா?
இப்போது சற்றேறக்குறைய 16 கோடி மக்களாற் பேசப்படுவதும், உலகப் பொது மொழியெனச் செல்வாக்குப் பெற்றுத் திகழ்வதும், கடந்த 150 ஆண்டுகளாக இந்தியா முழுவதிலும் உள்ள எல்லா வகை அலுவல் நிலையங்களிலும் வைத்து வழங்கப்பட்டு வருவதும் ஆன ஆங்கில மொழியின் உதவிகொண்டே நம் நாட்டு மக்கள் ஒருவருடன் ஒருவர் கலந்து பேசி அளவளாவ முடியாத நிலைமையில் ஒருவர் ஆங்கிலத்தில் பேசினால் அதன் பொருளை அறிந்து கொள்ள முடியாது திகைக்கும் ஆயிரக்கணக்கான தமிழ் மக்கள் காணப்படும் இந்த நிலைமையில், இனிப் புதிதாக ஒரு பொதுமொழியைக் கற்று அதன் வாயிலாக இந்திய மக்கள்ள் அனைவரும் ஒருவருக்கொருவர் அளவளாவி ஒற்றுமையுடன் இனிது வாழலாம் என்று கருவது யாங்ஙனம் இயலும்?
நம் இந்திய மக்கள் நூற்றுக்கணக்கான ஆண்டுகளுக்குத் தொடர்ந்து இந்தி மொழியைக் கற்றுக் கொண்டாலும், அதன் உதவி கொண்டு இப்போதைய நிலையைப் பார்க்கிலும் ஒரு கடுகளாவது உயர்ந்து செல்ல இடம் உண்டாகுமா? அல்லது இந்தி மொழியில் உயர் நிலையை அடைய வழி காட்டும் ஏதொரு நூலாவது உண்டா? அங்ஙனம் உளதாயின் அந்நூலின் பெயர்தான் யாதோ?
நமது செந்தமிழ் மொழியின் பழைமை, இளமை, இனிமை முதலிய மேதக்க பெருமை களையும் அம்மொழியின் கண் மிளிரும் ஒப்புயர் வற்ற விழுமிய கருத்துக்களோடு கூடிய அரும் பெரும் நூல்களையும் 7000, 8000 கல் தொலைவிற்கு அப்பால் உள்ள மேனாட்டு ஆங்கிலேயர், ஜர்மனியர் முதலான மக்கள் பேசியும் கற்றும் வருதலோடு, தத்தம் மொழிகளி லும் அந்நூல்களை மொழி பெயர்ந்து விளக்க வுரைகளும் எழுதி அவற்றிற்குத் தக்க பெருமை அளிக்கும்போது, நமக்கு மிக நெருங்கிய தொடர்புடையவர்களான 400, 500 கல் தொலை விலிருக்கும் நம் வட இந்தியர்கள் மட்டும் நம் மொழியையோ அல்லது அதன்கண் உள்ள நூல்களையோ ஒரு சிறிதும் கண்ணேறெடுத்துப் பாராமல் இருப்பதன் காரணம், அவர்களுக்கு நம் மீதும், நம் மொழியின் மீதும், நம் மொழியின் கண் உள்ள சிறந்த நூல்களின் மீதும் உள அழுக்காறும், மனக்காழ்ப்பும், பொறாமையுமே யல்லாது வேறு ஏதாவது காரணம் இருக்கிறதாக கூற எவருக் கேனும் நாவெழுமா?
இந்திய நாட்டின் ஒரு பகுதியினரான வடவர்களுககே நம்மீதும் நம் மொழியின் மீதும் நல்ல அபிப்பிராயம் இல்லாமல் இருக்கும் பொழுது, நாம் மட்டும் அவர்களுக்கு நன்மதிபுக் கொடுத்து அவர்கள் மொழியைக் கட்டாயமாகக் கற்கவேண்டுமென்று நம் நாட்டுத் தலைவர்களில் சிலர் இப்போதும் மடிகட்டி நின்று பிடிவாதஞ் செய்வதன் பொருள்தான் யாதோ?
தென்னாட்டவர்கள் இந்தி கற்றுவிட்டால் வடநாடு சென்று உத்தியோகம் பார்க்க வசதியாய் இருக்குமென்று சிலர் கூறுகின்றனர். அங்ஙன மாயின், இப்போது வடநாட்டிலுள்ள இந்தி கற்ற அத்தனை பேரும் உத்தியோகத்தில் அமர்ந்து தான் இருக்கிறார்களா? வடஇந்தியாவில் வேலையில்லாத் திண்டாட்டம் என்பது அறவே இல்லையா?
தென்னாட்டில் இந்தி இயக்கம் தொடங்கிய திலிருந்து வட நாட்டிலுள்ள பலர் தென்னாட்ட வர்கள் இந்தி கற்றுவிட்டால், அவர்கள் நம் நாட்டுக்கு வந்து உத்தியோக வேட்டையாட முயல்வார்களே, அப்போது எங்கள் பாடு திண்டாட்டமாய் முடியுமே என்று கிளர்ச்சியைச் செய்து வருகிறார்களாமே! அது உண்மையா அல்லது பொய்யா?
தமிழ் மக்கள் இந்தி கற்றுக் கொண்டாலும், கற்றவர்களில் நூற்றுக்கு எத்தனை பேருக்கு வடநாட்டில் உத்தியோகம் கிடைக்கும்?
இஞ்ஞான்றைத் தமிழ் மக்கள் பலர் பெங்களூர், மைசூர், சிகந்தராபாக்கம், புனா, பம்பாய், கல்கத்தா, கராச்சி, காசி, காக்கிநாடா, நெல்லூர் முதலான வட இந்தியாவின் பற்பல ஊர்களிலுஞ்சென்று, அங்குத் தம் வாணிக வாழ்க்கையிற் சிறப்பெய்தி இருக்கின்றனரே! இம்மேலே குறிப்பிட்ட ஊர்களில் வைகி வாழ்ந்து வரும் நந்தமிழ்மொழி பேசும் தமிழ் மக்கள் எல்லோரும் தமக்கு ஒரு பொதுமொழி இல்லாத தனால், தாம் நடாத்தும் வாணிக வாழ்க்கைக்கு ஏதேதோ இடையூறுகள் ஏற்படுவதாகவும், அதனால் தமக்கும் தாம் சென்று உறையும் ஊர்களில் இருப்பவர்கட்கும் பொதுமொழியாக இந்தி மொழியை ஆக்கி உதவ வேண்டுமென்று முறையிட்டு விண்ணபித்துக் கொண்டார்களா?
அல்லது வட இந்தியாவின் பற்பல பகுதி களின் பற்பல மொழிகளைப் பேசுபவர்களான பெருந்தொகை மக்கள் நந்தமிழ் நாட்டின் கண் உள்ள பற்பல ஊர்களிலும் வந்திருந்து வாணிகம் முதலான தொழில்களைச் செய்கிறார்களே! அவர்களாவது தங்களின் வாணிக வாழ்க்கைத் துறைகளிற் பயன்படுத்திப் பேசுவதற்காக இந்தியைப் பொதுமொழியாக்கி உதவ வேண்டு மென்று கேட்டுக் கொண்டார்களா?
இங்ஙனம் தென்னாடிருந்து வடநாடு சென்று உறையும் தமிழராவது, அல்லது வடநாட்டிலிருந்து தென்னாடு வந்து வாழும் வடவர்களாவது, தங்கள் இருசாராருக்கும் பொதுவாக இந்தியைப் பொது மொழியாக்கித் தருதல் வேண்டுமென்று கேட்டுக் கொண்டார்கள். அதற்காகவேதான் `நாங்கள்' இந்தியைப் பொது மொழியாக்க முயன்று வருகின்றோம் என்பதாக நாளது வரை எந்த இந்தி இயக்கத் தலைவர் களாவது கூறவில்லையே. மற்ற அத்தலைவர்கள் இந்தி மொழியைப் பொதுமொழியாக்கினால் இந்திய மக்களுக்கு நன்மைகள் பல உண்டாகு மென்று தங்கள் கருத்திற்பட்டதாகவும், அத னாலேதான் தாங்கள் இந்தியைப் பொதுமொழி யாக்க முயன்று வருவதாகவும் தானே கூறினார் கள்- கூறுகின்றார்கள். இதனால், இத்தலைவர் களின் இவ் ஒரு செயலானது பொது மக்களின் விருப்பத்திற்கு முற்றிலும் மாறுபட்ட வேண்டாக் கிளர்ச்சி என்பது புலப்படவில்லையா?
இவ்வாறாக எவராலும் விரும்பி வேண்டிக் கேட்டுக்கொள்ளப்படாத ஒரு பயனுமற்ற கிளர்ச்சியாகிய இந்தி கட்டாயக் கல்வி முறையைத் தோழர் முத்துரங்கம் போன்றார் சிலர் தம் தலைமீது தூக்கிச் சுமந்து திரிவதன் காரணம், அவர்களுக்கு இதுபோன்ற பயனற்ற துறைகளில் இறங்கித் தம் காலத்தையும், முயற்சியையும் பொது மக்களின் பணத்தையும் செலவு செய்வதைத் தவிர, வேறு மக்களுக்கு நன்மைகள் ஏற்படக் கூடிய துறைகளில் இறங்கிப் பாடுபடு வதற்குரிய ஆற்றலும், ஆர்வமும் இல்லை யென்று கருதுவதா, அல்லது அவர்களின் போக்கை வேறு வகையில் நினைத்து அழுவதா?
இனி, தாய்மொழியாகிய தமிழைப் படியாத வர்கள் நூற்றுக்குத் தொண்ணூறு பேருக்கு மேல் காணப்படும் இந்த இரங்கத்தக்க நிலைமையில், இந்தியைக் கட்டாயப் பாடமாக்குவோம் என்று கங்கணம் கட்டி நிற்கும் தமிழ் மக்கள் சிலரின் ஒரு செயலை நோக்குமிடத்து, அது `தாய் தஞ்சையில் தன் கைப் பிச்சை எடுக்கத் தனயன் குடந்தையில் கோவீகை புரிந்தது' போலுமன்றோ இருக்கிறது. என்னே! இவர்களது அறிவுடைமை! தாய் மொழியை விடுத்துப் பிற மொழி கோடல் பெருமையாகுமா?
பெரியீர்! நம்மை அடுத்த ஆந்திர (தெலுங்கு) நாட்டை நோக்குங்கள். அம்மொழி யின் ஆக்கத்தை அறியுங்கள். அவர்களின் பேச்சுக்களையும், எழுத்துக்களையும் பாருங்கள். மொழிக்காகச் செய்யும் முயற்சியை நோக்குங் கள்- அவர்கள் இப்போது ஆந்திரா யுனிவர்சிட்டி என்ற பல்கலைக் கழகம் ஏற்படுத்தி, அதில் தெலுங்கு மொழியைக் கட்டாயக் கல்வியாக வைத்துக் கற்றுத் தேர்ச்சியடைய ஏற்பாடு செய்து வருகிறார்கள். மலையாளத்திலும் கேரளா யுனிவர்சிட்டி என்ற பல்கலைக் கழகம் ஏற்படுத்தி, மலையாள மொழியையும் நன்கு பயின்று வருகின்றனர். இங்ஙனமே வங்க நாட்டைக் காணுங்கள். அவர்கள் தங்கள் மொழிக்காக கைக் கொண்ட முயற்சியைக் கேளுங்கள். வங்க இளைஞர்கள் தாய்மொழியைக் கங்கணம் கட்டிக் கொண்டு காத்தார்கள். உடல், பொருள், உயிர் அனைத்தையும் அந்நாட்டு மக்கள் தங்கள் மொழிக்காகத் துறந்தார்கள். அதனால், அவர்கள் தாய்மொழி சிறப்புற்று இலங்குகிறது. சீர் பெற்றுத் திகழ்கிறது. ``உழைப்பின் வாரா உறுதிகள் உளவோ?'' இங்ஙனம் தமிழரல்லாத ஒவ்வொரு மொழி பேசுவோரும், தத்தம் மொழிகளையே முதன்மையாகக் கற்றுத் தேர்ந்து முன்னேற்ற மடைய வேண்டுமென்ற பெருமுயற்சி செய்துவர, அவ்வறியுடையோர்களைப் பார்த்தாயினும் அறிவு பெறாது ஒரு முயற்சியும் இல்லாமல் இந்தியைக் கட்டாயப் பாடமாக்குவதால் வரும் இன்னல்கள் என்ன? என்று தமிழை இகழ்ந்து பேசிக்கொண்டு வறிதே காலங் கழிக்கும் தோழர் முத்துரங்கம் அவர்கள் போன்றாரைத் தமிழர் என்று அழைப்பதா? தமிழுக்குக் கேடு சூழும் தமிழ் மொழிப் பகைஞர் என்று அழைப்பதா கூறுமின்கள்! தாய்மொழிப் பற்றே தாய்நாட்டுப் பற்றென்பதை உணராது, தான் தோன்றித் தம்பிரான்களாய்த் தடுமாறித் திரியும் தமிழ் மக்கள் சிலரைப் பார்த்து வருந்துவதைவிட வேறு என்ன செய்ய இயலும்?
இனித், தாய்மொழிப் பற்றே தாய் நாட்டுப் பற்றென்பதை நன்குணர்ந்த கவி மன்னராகிய இரவீந்திர நாதர் ``கீதாஞ்சலி'' என்னும் உலகம் போற்றும் ஒரு நூலை முதல் முதலில் தம் தாய் மொழியாகிய வங்கத்திலன்றோ யாத்தார். உலக மறிந்த பெரியாராகிய பாலகங்காதார திலகர் தாம் அருளிச் செய்த ``கீதா ரகசியம்'' என்னும் நூலைத் தம் தாய் மொழியாகிய மகாராஷ்டிரத்திலன்றோ வெளியிட்டார். இந்திமொழி இந்தியாவிற்குப் பொது மொழியாக வேண்டுமென்று பாடுபட்ட வருள் தலை சிறந்தவரான காந்தியடிகள் தமது `வரலாற்றை' தம் மொழியாகிய கூர்சரத்திலன்றோ எழுதிக்காட்டினார். மேலே குறிப்பிட்ட மூவரும் ஆங்கிலத்தில் நிரம்பிய புலமை பெற்றவர்கள். அவர்கள் எழுதும் ஆங்கிலத்தின் அழகான நடையை ஆங்கிலேயரே போற்றி மகிழ்கின்ற னர். இப்பெரியார்களின வாழ்வுஞ், செயலும், பிறவும் உலகுக்கு எடுத்துக்காட்டாக, நின்று துணை செய்கின்றன. தாய்மொழிப் பற்றே தாய் நாட்டுப் பற்றென்பதை அவர்கள் தெள்ளிதில் உணர்ந்தே தாய்மொழிக்கு ஆக்கந் தேடினார்கள்.
இந்தி மொழியைத் தமிழ்நாட்டில் கட்டாயப் பாடமாக்கினால், தமிழ் மொழி தன் சிறப்பை இழந்துவிடுமென்பதையும், தமிழ் மக்கள் தம் தாய்மொழியாகிய தமிழை மறந்து விடுவார்கள் என்பதையும், நம் தமிழ்ச் சகோதரர்கள் நன்கு ணர்ந்து தமிழ்நாட்டுக்கும், தமிழ் மொழிக்கும் ஆக்கந் தேடுவார்களாக. தமிழரையும், தமிழ் மொழியையும் தாழ்த்தும் பொருட்டும், இந்தி பேசும் நாட்டவரையும் இந்தி மொழியையும் உயர்த்தும் பொருட்டும், ஒருசில சுயநலமிகள் செய்துவரும் சூழ்ச்சிகளை உணராது நம் தமிழ் மக்களிற் பலர் அவற்றை மெய்யெனக் கொண்டு தம்மையும் தம் அருந்தமிழையும் இழிவுபடுத்தி ஐயகோ! ஏமாந்து போகின்றனரே! இனியேனும் அவர்கள் அப்பொய்ம்மையை உணர்ந்து தமக்கும் தம் தாய் மொழிக்கும் ஆக்கந் தேடுவார்களாக.
இப்போது ஆயிரக்கணக்கான வட இந்தி யர்கள் தமிழ்நாட்டின் பல பகுதிகளிலும் புகுந்து வாணிகம் முதலிய தொழில் முறைகளினால் பெரும் பொருள் சேர்த்துக் கொண்டு போவது யாவரும் அறிந்ததே. இந்த நிலைமையில் இந்தியும் பொதுமொழியாக மாறிவிட்டால் ஆயிரக்கணக்கானவர்கள் இலட்சக் கணக்காகப் பெருகி வந்து இன்னும் பெரும் ஊதியத்தைப் பெற்றுப் போவதற்கு எளிதாய் இருக்குமென்று நினைக்கிறார்கள் போலும்! ஆம்- ஆம், ஒரு சாரார் நீங்கிவிட்டால், தமிழ் நாட்டவர்கள் வியர்வை வடியத் வடிய தேடிய பொருளைக் கவர்ந்து செல்வதற்கு இன்னொரு சாரார் முன் எச்சரிக்கையாகவோ ``ஆரியக் கூத்தாடினாலும் காரியத்திலேயே கண்'' என்ற பழமொழிப் படி அதற்குரிய ஏற்பாடுகள் எல்லாம் செய்ய வேண்டுமல்லவா, தமிழர்கள் ஏமாந்த பேர் வழிகள் என்று அறிந்தவர்கள் என்னதான் செய்ய மாட்டார்கள்!
தமிழ் அன்பர்களே! பொன் விலங்கைக் கழற்றி இருப்பு விலங்கை மாட்டிக் கொள்வது போல ஒரு சாராரின் அடிமைத் தனத்தில் நின்றும் விடுபட்டு, இன்னொரு சாராருக்கு அடிமைத் தனமாகும். ``பிறப்புரிமை எங்கள் அடிமைத் தனம்'' என்னும் இழிந்த நோக்கத்தை மாற்றி `நாங்களும் மக்கட் கூட்டத்தவர்தான்- எங்களுக் கும் பகுத்தறிவு இருக்கின்றது- நாங்களும் பிற நாட்டினரைப் போன்று தனித்து நின்று எங்கள் வாழ்க்கையை நடாத்தும் ஆற்றலும், வீரமும் உள்ளவர்கள்தான்- நாங்களும் வட நாட்டில் ஆயிர மன்னரையும் ஒருங்கே கங்கை நதிக் கரையில் புறமுதுகிட்டோடச் செய்த செங்குட்டு வன் பெருமைக்கு உரியராய் அழைத்த தமிழ் வீரர்தான்' என்ற உயர்ந்த நோக்கத்தோடு கூடிய உணர்ச்சி நரம்புகள் தமிழ்ப் பாலுண்ட உங்கள் உடம்புகளில் ஓடிக் கொண்டிருக்குமாயின், இந்தி மொழியைக் கட்டாயப் பாடமாக்க வேண்டு மென்று கூச்சலிடுகிறவர்களது சுயநல ஆரவாரத் துக்குத் தக்க அறிவிப்புக் கொடுத்துத் தமிழ் மொழியைக் கட்டாயப் பாடமாக்கும் பெருஞ் செயலை மேற்கொள்ளுங்கள். இல்லையேல், நீங்கள் உங்கள் வாழ்க்கையின் பின் உங்கள் வழித் தோன்றும் தமிழ்ச் சிறாருக்கு மாபெருங் கேடு அடிகோலி வைத்தவர்களாவீர்கள். அவர்கள், ``நாங்கள் தமிழரோ அல்லது வேறு இனத்தவரோ'' என்று நினைக்கும் நிலைமையில் நின்று கலங்குவார்கள்.
இப்போது ஆங்கிலம் ஒன்றானே நமது தமிழ் மொழி எவ்வளவு சீர் குலைந்திருக்கிற தென்பதைப் பாருங்கள். நாட்டுப் புறங்களில் இருப்பவர்கள் கூடத் தாம் பேசும் பொழுது ஆங்கிலச் சொற்களை வலிந்து பொருத்திப் பேசி விடுகின்றனர். எடுத்துக்காட்டாக, ``இன்று காவ்வி ப்ஸ்டாய் இருந்தது.'' உனக்குக் கொஞ்சங் கூட சென்ஸ் இல்லை. ``ப்ளீஸ் ஜானகி இந்தப் பென்சிலை மெண்ட் பண்ணித் தா'' என்று பேசுவது கண் கூடு. இந்த நிலைமையில் இந்தியும் பொதுமொழியாக மாறிவிட்டால், நம் தமிழ் மொழி என்னவாகும் என்பதைச் சற்றே உணர்ந்து பாருங்கள்.
``ஏரோக்ரா! நீ பசாருக்குப் போயி ஒன் ருப்பிக்குச் சாவலும் ஆடஅணாவுக்கு டாலும் வாங்கிக்கினு இதா ஆவ்.''
என்றல்லவா பேசுவார்கள். இந்தச் சொற் றொடரில் எத்தனை தமிழ்ச் சொற்கள் இருக் கின்றனவென்று நீங்களே கணக்கிட்டுப் பாருங்கள். பிறமொழிக் கலப்பால் இக்காலத்துத் தமிழ் நடை தன் இனிமையும், தூய்மையும் பழைமையும் குன்றியிருப்பதை எவரெவர் உணராதார்! மேல்நாட்டவர்கள் தமிழ் மொழியைப் போற்றுவதில் ஆயிரத்தில் ஒரு பங்கு தானும் நம் தமிழ் மக்கள் பலரிடத்துக் காணப்படவில்லையே! குமரி முனைக்கும், இமயமலைக்கும் இடையே யுள்ள பூமிப் பரப்பின் பொது மொழியாக ஒரு காலத்தில் இருந்த பைந்தமிழ் திரும்பவும் அந்நிலையை அடையும் நாளும் உண்டாகுமா? அதற்காக நமது உடன்பிறப்பாளர்களான தமிழ் இள வீரர்கள் ஆர்வத்தோடு முயற்சி எடுத்துக் கொள்வார்காள? அல்லது பிற நாட்டவர்களின் வாலைப் பிடித்துத் தொங்குவதுதான் ``எங்கள் பிறப்புரிமை'' என்று வாளா இருப்பார்களா?
இமயம் நீரிடை மூழ்கிக் கிடந்த காலத்தி லும், இந்து மகா சமுத்திரம் நிலப்பரப்பாய் இருந்த காலத்திலும் நம் தமிழ் மக்கள் வாழ்வு நடத்தினார் கள் என்று சொல்லப்படுகிறது. தமிழர் களுடைய வும், தமிழ் மொழியிலுடையவும் தொன்மை சரித்திர காலத்தையுங் கடந்து, அதற்கு அப்பாலும் அப்பாலும் ஊடுருவிச் சென்று நீண்டு போவது. இப்போது தமிழனுக்குத் தாய் மொழிப் பற்று ஒரு சிறிதும் இல்லையென்பது உலகறிந்த தொன்று. தமிழனுக்குத் தாய் மொழி யினிடத்துத் தணியா வேட்கை என்று எழு கிறதோ அன்றே அவன் வாழ்வு மணம் பெறும். முதலில் பல்வழியிலும் சிதறுண்டு கிடக்கும் நம் தமிழ் இனத்தை ஒருமைப்படுத்துவதற்குக் கருவியாக வுள்ள தமிழைச் சரிவரக் கற்று, நாம் எல்லாரும் ஒரே இனத்தவர் என்று கண்ட பின்பு வேண்டுமானால், விரும்புகின்றவர்கள் கட்டாய மின்றி இந்தி மொழியையும் கற்றுக் கொள்ளலாம். தாய் மொழியில் புலமை நிரம்பப் பெற்ற பிள்ளை வேறு பல மொழிகளைப் பயிலலாம் - தடுப்பவர் எவருமில்லை.
நாமும், நமது தமிழ் மொழியும் விடுதலை யும், முன்னேற்றமும் அடையக் கூடிய முறையில் சுயநலங்கருதாது உழைப்பவர்களை ஆதரித்து முன்னணியில் நிற்கச் செய்வதே தமிழ் மக்களாகிய உங்கள் கடமை அறிவுடை அன்பர் களே! எல்லாரும் ஒருங்கு சேர்ந்து மக்கள் கவலையொழிய- காலமாறுதலால் வளர்ச்சி குன்றி ஒளி மழுங்கியிருக்கும் தமிழ் மொழி பழைய உன்னத நிலையை அடைய முயற்சி செய்யுங்கள். ஒரு காலத்தில் உலகமெலாம் வழங்கி வாழ்ந்ததாகக் கருதப்படும் நமது தமிழ் மொழியை- இப்போது ஒரு குறிப்பிட்ட எல்லைக் குள் சிறைப்படுத்தியிருக்கும் இளமை குன்றாப் பழந்தமிழ் மொழியை, அவ்வெல்லைக்குள் இருக்கும் மக்களாவது சரிவரப் பேசவும் எழுதவும் தெரிந்து கொள்ளக் கூடியதாக்கும் கட்டாயத் தமிழ்க் கல்வி முறையை உண்டாக்கும் ஏற்பாடுகளைச் செய்வதிலேயே இன்னும் மிகுதியான ஊக்கமும் உழைப்பும் எடுத்துக் கொள்ள வேண்டும்.
பள்ளிக்கூடங்களில் சொல்லிக் கொடுக்கப் படும் பாடங்கள் சிலவற்றைத் தமிழிலேயே கற்றுக் கொடுக்கும்படி செய்யப்பட்டிருக்கும் ஏற்பாடு ஓரளவுக்குத் தமிழ் மொழிக்கு ஆக்கந் தருவதாயினும், அந்த ஏற்பாடு தனித் தமிழ் வளர்ச்சிக்கு அடிகோலுவதாகாது. பல சொற்கள் தமிழில் மொழி பெயர்க்கப்படாமல் அப்படியே உச்சரிக்கப்படுகின்றன. பிறமொழிகளில் இருக் கும் எந்தச் சொல்லையும் தமிழாக்கி, அதாவது ஆங்கிலச் சொல்லையோ, சமஸ்கிருதச் சொல் லையோ, அப்படியே தமிழில் உச்சரிக்காமல், அச்சொற்களை எல்லாம் தமிழில் ஆக்கிக் கொள்ள வேண்டும். எடுத்துக்காட்டாக சைக்கிள் என்ற ஆங்கிலச் சொல்லை `ஈருருளி' என்றும், `பிரத்யட்சம்' என்ற சமஸ்கிருதச் சொல்லைக் `கண்கூடு' என்றும் தமிழில் சொல்லும் நிலை மையை மாணவர்களுக்கு உண்டாக்க வேண்டும். அப்போதுதான் சர்க்கார் தமிழ் மொழி வளர்ச்சி யில் கருத்துக் கொண்டுள்ளனர் என்று கருதப் படுவர். இங்ஙனமன்றித், தமிழ்ப் போர்வைக்குள் ஆங்கிலமும், சமஸ்கிருதமும், இந்தியும் பிறவும் புகுந்து, தமிழ் மொழி வளர்ச்சிக்கு இடையூறு உண்டாகும் முறையில் பாடப் புத்தகங்கள் அமையுhனால், அது, தமிழை வளர்ப்பதற்குப் பதிலாக அதனை அழிப்பதாகவே முடியும். எனவே, நாம் கூறும் இந்த யோசனையை `யாரோ சிலர்' கூறுகின்றார்கள் என்று சர்க்காரும், வாளா இருந்து விடாமல், ஆவன செய்ய வேண்டு மென்று கேட்டுக் கொள்வதோடு, இந்தியை விருப்பப் பாடமாக வைத்திருக்கும் ஏற்பாட்டில் உள்ள சில சிக்கல்களையும் நீக்கி, விருப்பப் பாடமென்பதற்குரிய முறையை இன்னும் நன்றாகத் தெளிவுபடுத்தியும், திருத்தியும் அமைக்க வேண்டுமென்றும் சர்க்காரைக் கேட்டுக் கொள்கிறோம்.

(திராவிட நாடு - 27.6.1948)