அறிஞர் அண்ணாவின் கட்டுரைகள்


அப்பாவிகளே!

ஏகாதிபத்ய சர்க்காரின் ஊழியராக, உயர்ந்தரக ஊழியராகப்பலகாலம் இருந்து, ஓய்வுபெற்ற ஒருவர், “குலசம் ரட்சணராக”க்கோலம் கொண்டு, சேலம் பகுதியிலே பிராமண சங்கம் ஏற்படுத்தி இருக்கிறார்! பிராமண சமுகத்தின் கஷ்டநஷ்டங்களைக் கவனித்துப் பரிகாரம் தேடவும், பாதுகாப்புத்தேடவும், அந்தச்சமுகத்தை மற்றச் சமுகங்கள் இழிந்தும் பழித்தும் பேசுவதைத் தடுக்கவும், இந்தச் சங்கம் பாடுபடுமாம். விரைவிலே, மாநாடு கூட்டப்போகிறார்களாம். திவான் சர். சி.பி. இராமஸ்வாமி ஐயர் தலைமை வகிக்க இசைந்திருக்கிறாராம்.

இந்தச் “சங்கத்தை”நாம் வரவேற்கிறோம்! அப்பாவிகளான திராவிடர்கள், பிராமண சமுகம் ஒன்றும் செய்யாது இருக்கிறது என்றும், அந்தச்சாதுச் சமுகத்தை மற்றவர் அனாவசியமாகத் தூற்றுகிறார்கள் என்று, கூறுவதும், பிராமணசமுகம் என்றோ ஓர்காலத்திலே உச்சநிலையிலிருந்தது, மண்டலங்களை ஆட்டிவைத்தது என்றபோதிலும் இன்று, அடங்கிவிட்டது என்று கருதுவதுமாக உள்ளனர். பிராமண சங்கத்தின் சொல்லும் செயலும், இந்த அப்பாவிகளின் அகக்கண்களைத் திறந்துவைக்கும்; ஆகையினாலேயே இந்த பிராமண சங்கத்தை நாம் வரவேற்கிறோம்.

எவ்வளவோ சங்கங்களிலே இது ஒன்று. ஆனால் ‘பிற்படுத்தப்பட்ட - ஒடுக்கப்பட்ட - சுறண்டப்பட்ட சமுகங்கள், தங்களின் தேய்வைத் தடுத்துக் கொள்ள, வாழ்வை புதுப்பித்துக்கொள், மற்றவர்களின் பிடியிலே சிக்கிக் கொண்டிருப்பதிலிருந்து தப்ப” சங்கங்கள் ஏற்படத்திக் கொள்வது முறை அவசியம், விடுதலை உணர்வின் அறிகுறி. ஆனால், இருக்கும் நிலையைக்குலையாமல் பாதுகாத்துக்கொள்ள, மேலும நிலையை உயர்த்திக்கொள்ள, மேலும் நிலையை உயர்த்திக் கொள்ள, மேலும் நிலையை உயர்த்திக்கொள்ள, சுறண்டுதலுக்கும் ஆதிக்கத்துக்கும் மேலும் கொஞ்சம் வழி செய்துகொள்ள, சங்கங்கள் ஏற்பட்டால் அது விடுதலையின் அறிகுறியல்ல, ‘கொண்டதைவிடாதானின்’ மனப்போக்கின் குறி. ‘ஏழைகள் சங்கம்’ தங்களின் கூலி உயர்வுக்காகவும், வட்டித் தொல்லை வரித்தொல்லை முதலியனவற்றிலிருந்து மீளவும், அமைக்கப்படும் நேரத்தில், ‘மார்வாரிகள் மகாஜனசங்கம்’ வேறோர்புறம் அமைக்கப்பட்டு, பணத்தைப் பாதுகாப்பது, வட்டிவிகிதத்தை உயர்த்துவது, கடனைத் திருப்பித் தருவதிலே தாமதம் ஏற்பட்டால், சுலபத்தில் சொத்துக்களை ஏலம் போடுவதற்கேற்றபடியான சட்டம் பெறுவதுபோன்ற “சத்காரியாதிகளுக்கு” வேலைசெய்ய ஆரம்பித்தால், அந்த வேடிக்கையான வேதனையை என்னென்பது!

பிறாமணசங்கம், அமைக்கப்படவேண்டிய அளவு அந்தச் சமுகத்துக்கு இன்று நேரிட்டுள்ள கெடுதல்கள் என்ன? என்றும் போல் இன்றும் அவர்களை அப்பாவிகள் “சாமி”யாக்கிப் ‘பாதபூஜை’ செய்து “மோட்சலோகத்து தூதுவராக்கி,” “ஆண்டவனுக்கும் மக்களுக்குமிடையே தரகராக்கி” வைத்துக் கொண்டுள்ளனர். ஆலயத்திலிருந்து சர்க்கார் காரியாலயம் வரையிலே, அந்தச் சமுகம், வசிஷ்டர் காலத்திலிருந்தது போலவே இன்றைய வாதாரச்சாரியார் காலம் வரையிலே இருக்கிறது. இன்றும், உலகிலே எத்தனையோ சாமராஜ்யங்கள் சரிந்து, வல்லரசுகள் வீழ்ந்து, வீரஇனங்கள் நசித்துப் போன இன்றும், உலகிலேயே அந்த ஒரு சமுகம் தான் உயர்கூõதியாய் - முதல் ஜாதியாய் - வாழ்கிறது. என்றாலும், ‘பாதுகாப்பு’ தேவை என்று சங்கம் கூட்டுகிறார்கள். ஏன்? இப்போது, எங்கும் ஏன் இந்த ஒருகுலத்துக்கு மட்டும் இவ்வளவு உயர்வு? என்ற கேள்வி பிறந்திருக்கிறது. நிலைகுலையவில்லை, கேள்வி மட்டுமே கிளம்பி இருக்கிறது! அதற்கே, அமைத்துவிட்டனர் சங்கம்!! “ஆமாம்! நாங்கள் உங்களை ஆளப்பிறந்தவர்கள் தான்!” என்று கூறுகிறார்கள். அப்பாவிகளே! அந்தச்சமுகத்தை அடங்கிவிடட் சமுகம் என்று எண்ணுகிறீர்களே, சரியா? யோசியுங்கள்! நன்றாக யோசியுங்கள்!!

(திராவிடநாடு - 25-11-1945)