அறிஞர் அண்ணாவின் கட்டுரைகள்


அரக்கு மாளிகை!

கேள்விகள் எழுதிடுவேன்! - இது மற்றோர் வகையினரின் போர் முறையாகி விட்டது. கேள்விக்கேற்ற பதில்தானே தரமுடியும். ஒருவர் அனுப்பியிருக்கும் கேள்வித்தாளைப்படித்து விலாநோகச் சிரிக்கவேண்டி நேரிட்டுவிட்டது. அவர் எவ்வளவு “தெளிவு” கொண்டவர் என்பதற்கு தலைப்பிலேயே உதாரணம் ததும்புகிறது. 24-1-43 திராவிடனில் விஷயம் கண்டனம் - இதுதான் தலைப்பு! இதன் பொருள் என்ன! கிளர்ச்சி சிலர் உள்ளத்திலே மருட்சியை உண்டாக்கிவிட்டது பாருங்கள்! திராவிடன் நின்று ஆண்டு பலவாயின - நடப்பது திராவிட நாடு! இதை உணராமலோ, உணர நேரமோ, பொறுமையோ இல்லாமலோ இருக்கும் அவசர வாதிதான், கேள்விகள் விடுக்கிறார். ஒரு சோறு பதம் பார்ப்போம்.

இராமாயணமென்பது சாமான்யமன்று! இது அவருடைய திருவாக்கு. சரிதான், ஸ்வாமிகளே, சீதாசமேத ஸ்ரீராமச்சந்திரர் கதை சாமான்யமானது அன்றுதான்! அதை ஸ்ரவணம் செய்த ஓர் பக்தன் இராமாயணம் சாமான்யமன்று, அது ஓர் ஆள் பளு இருக்கிறதே என்று கூறினதாகக் கேள்வி! ஸ்வாமிகளின் அனுபவம் எப்படியோ - என்று அவருக்குப் பதில் கூறாதிருக்க முடியுமா சொல்லுங்கள்!

ஒவ்வோர் நாளும், இராமாயணம் கேட்கச்சென்று தூங்கிவிடுவானாம் ஒரு பாட்டாளி. அவன்மீது உட்கார்ந்தபடி, அனுமன் தோள்மீதேறி அரிபகவான் தசகண்டனுடன் போரிட்ட கதையைக் கேட்பது வாடிக்கையாம் ஒரு குறும்பனுக்கு! ‘ரமாரமண கோவிந்தா! கூறியதும், உறங்குபவன்மீது சவாரி செய்பவன், எழுந்திருக்க, உறங்குபவனும் எழுந்து விழுந்து கும்பிட்டுவிட்டு வீடு செல்வானாம். அந்த ஏமாளி சொன்னான் யாரோ கேட்டதற்கு, ‘இராமாயணம் சாமானியமா, அது ஒரு ஆள் பளுவுள்ளதாச்சே’ என்று. அதுபோல் யாராருக்கு, எவ்வெவ் வகையிலே அனுபவமிருக்கிறதோ அதற்கேற்றபடி “சாமான்யமா இல்லையா” என்பதைக் கூறமுடியும். நாடகத்திலே அனுமார் வேடம் போடுந் தோழர் சொல்லுவார் இராமாயணம் என்றால் சாமான்யமா! எவ்வளவு ஆடவேண்டும், குதிக்க வேண்டும், முகத்தைச் சுளிக்க வேண்டும், வாலிலே நெருப்புப் பந்தம் கொளுத்திவிட்டால், ஜாக்ரதையாக இருக்கவேண்டும், அடேயப்பா! இராமாயணமென்றால் சாமான்யமா, என்று அந்தத் தோழர் கூறுவார். என்னைக் கேள்விகேட்ட ‘ஸ்வாமிகள்’ எத்தகைய அனுபவத்தால், இராமாயணம் சாமான்யமன்று என்று கூறுகிறாரோ, தெரியவில்லை. இவ்வளவு வைதிகத்திடம், நான் என் பேனா முனைக்கு வேலை தரக்கூடிய கேள்விகளை எப்படிப் பெற முடியும்! கேளுங்கள், அந்தச் சுவாமிகளின் மற்றோர் மணியை! சில ஏடழப்பின் பல ஏடுண்டே! இந்தப் பிராசத்துக்கு என்ன பொருளோ! முன் பல் போனால், கடைப்பல் உண்டே என்று பல் உதிர அறை வாங்கியவன், கூறிடவும் முடியும், பொருளற்ற பிராசம் பேசுவது என்ற நோய் பிடித்தால். பல ஏடு இருப்பின் இருக்கட்டுமே! சில ஏடு அழிப்பது போதும், சிந்தனைக்கு வேலைதா! கண்டனத்தைத் தெரிவிக்க! புரட்சி மனப்பான்மையைக் கிளற! கடையிலே பத்துடன் இரும்பு இருப்பின், ஒரு டன் விற்றானதும், ஒரு டன் போனால் ஒன்பது உண்டே என்று பிராசம் பாடினாலாவது பொருளுண்டு. ஆரிய ஆதிக்கத்தை அழிக்க மக்களைத் தயாரிக்கும் வேலைக்காக, ஆரிய ஏடுகளிற் சிலவற்றைக் கொளுத்தி, உணர்ச்சியையும், உத்வேகத்தையும், எழுச்சியையும் உண்டாக்குவதே எமது வேலை என்பதை, எழுத்தில் எது அனுப்பினாலும், “திராவிட நாடு” இதழில் இடம்பெறுமென்று எண்ணிய அந்த ஸ்வாமிகளுக்குக் கூறுகிறேன். அவர் ஓர் இரும்பு வியாபாரியாம்! இராமாயண புத்தகம் என்று வேறு நினைவுடன் இருக்கையில், ஏதாவது இரும்புச் சாமானை எடுத்துப்பார்த்து, ஏ! அப்பா எவ்வளவு பாரமாக இருக்கிறது இராமாயணம். இது ஸாமனிய மல்லவே! என்று அவர் முடிவு செய்திருக்கலாம். அத்தகைய தீர்ப்பிலே நான் தலையிட முடியுமா!!

அவர் போற்றும் அந்த இராமாயணத்திலே, ஆயுதம் இழந்த இராவணனை, இராமன், இன்று போய் நாளை வா! என்றார் என்று எழுதியிருக்கிறார்கள். அதுபோல் நான் கூற அனுமதி கோருகிறேன், “ஸ்வாமிகளே! ஸாரமேயற்ற சரடுகள் வேண்டாம். ஏதாவது சத்தான கேள்விகள் இருந்தால் அனுப்புங்கள்.” என்று கூறுகிறேன். கலை சம்பந்தமாக தமிழர் நிலை சம்பந்தமாக, ஆரிய - திராவிட இன சம்பந்தமாக, உலகக் கருத்துகள் சம்பந்தமாக, கேள்விகள் இருக்கட்டும்! வெறும் ஊமைக் கூச்சல் வேண்டாம்! வேறு வேலை இருக்கிறது செய்ய!!

நான் எழுதியனுப்பிய ஸாமான்யமான கேள்விகளல்ல என்று ஸ்வாமிகள் கூறிக்கொண்டு, ஸாயங்கால வேளைகளைக் கழிக்கலாம். ஸத்ததா காலட்சேபம் அதுவாக இருப்பின், நான் எப்படி அதைத்தடுக்க முடியும்! நடக்கட்டும்!! ஏன், சுயமரியாதைக்காரர்கள், ஏடுகள் சிலவற்றை எரியிட எண்ணினர், என்பதைத் தெளிவாகத் தெரிந்து கொள்வது சாமான்யமான காரியமன்று, ஸ்வாமிகளே!

நாடாண்ட ஓர் இனம், ஓடாண்ட கூட்டத்தால் ஒடுக்கப்பட் டிருக்கும், நெஞ்சம் வேகும் நிலையை மாற்ற, நாட்டிலே மெல்ல மெல்லக் கிளம்பும் புரட்சிப் புயல், அது! சாமான்யமன்று!!
* * *

சில தோழர்கள், பிரச்னை நன்றாக விளக்கப்பட வேண்டும் என்பதற்காக, வினாக்கள் அனுப்புகின்றனர். அவர்கட்கு என் நன்றியறிதலைத் தெரிவித்துக்கொள்ளுகிறேன். ஆனால், ஆரிய ஏடுகளைத் தீயிலிட வேண்டுமென்று எந்நோக்கத்துடன் கூறுகிறோம் என்பதையும் அவர்கள் எண்ணிட வேண்டுகிறேன். அடிக்கடி நான் எழுதி வருகிறேன், புராணக் குப்பைகள் அவ்வளவையுமோ, வெறுங் கற்பனைகள் முழுவதையுமோ, பிற மத நூற்கள் யாவற்றையுமோ கொளுத்த வேண்டுமென்றன்று, இப்போது நாம் கிளர்ச்சி செய்வது. பிறமத போதனைக்குச் சாதனமானதும், நம்பொணாப் புராணம் நிரம்பியதும், கற்பனை மலிந்ததுமான ஏடுகள், தமிழரால், புனித நூல், பக்திமார்க்க ஏடுகள், வீடு பெற வழி செய்வன, என்ற முறையில் ஏற்றுக் கொள்ளப்பட்டும், போற்றி வளர்க்கப்பட்டும் இருப்பதையே நாம் கண்டிக்கிறோம். இலக்கியமென்றால் அதிலே கற்பனையே இருக்கக்கூடாது என்று கூறவுமில்லை, பிற இனத்தவரின் மார்க்க நூற்களைப் படிக்கவே கூடாது என்றுங் கூறவில்லை. பிற வளர்க்க வழிகேடுகளை, நமது இன மார்க்கம் என்று நம்பி மோசம் போய்விட்டோம் என்ற எச்சரிக்கை செய்கிறோம். நாட்டிலே, நமது மத ஏடுகள்” என்று ஆச்சரியப்படுவதினாலேயே, தமிழர்களுக்கு ஆரிய அடிமையாக இருப்பது கண்டு மனந்துடிக்காது, தோல் தடித்துப் போயினர். இராமனைப் பற்றியும், கம்பனுக்கும் முற்பட்டவர்கள் சத்தம் நூற்களிலே குறிப்பிட்டுள்ளனரே. கலித்தொகையில் உளதே, சிலப்பதிகாரத்தில் உளதே, என்று நண்பரொருவர் கேட்டுள்ளார். கலித்தொகையும், சிலப்பதிகாரமும், இலக்கியங்களென்று மதிக்கப்பட்டுப் போற்றப்பட்டு வருகின்றனவேயன்றி, மார்க்க நூற்களென்று கொண்டாடப்பட்டோ, பாராயணம் செய்யப்பட்டோ, அவைகளிலுள்ள நிகழ்ச்சிகள், பூஜை, விரதம், நேமநிஷ்டை, திருவிழாக்களாக ஆக்கப்பட்டோ இல்லை என்பதை அன்பர்கள் அறிய வேண்டுகிறேன். கோப்பெருந்தேவிக்குக் காப்புக்களையும் விழாவோ, கோவிலன் பிறந்த தின விழாவோ, கண்ணகி திருமணமோ, விசேஷ பூஜா நாட்களாக இல்லை, ஆனால், சீதா கலியாணம், ஸ்ரீராமநவமி, கொண்டாட்டங்கள் உண்டு. அதிலே ஆரியருக்குக் கொண்டாட்டம் என்பதை நான் கூறத் தேவையில்லை. தமிழரின் நெறியையும், மனப்பாங்கையும், ஆரியத்துக்குத் துதிபாடும் விதமானதாக்கி விட்ட நூற்களையே நெருப்பிலிட வேண்டுகிறோம்.

ஒரு வேடிக்கையான விஷயம்! மகா விஷ்ணுவின் பல அவதாரங்களிலே, தமிழர் வணங்கும் நிலை, இராமகிருஷ்ணன் எனும் இரு அவதாரங்கட்கு மட்டுமே ஏற்பட்டது. மற்றவைகள் ஏதோ எப்போதே பேசப்படுவதோடு முடிந்து விடுகிறது. வராக அவதாரத்துக்கு வடை பாயசத்துடன் பூஜை தினங் கிடையாது, மச்சாவதாரத்துக்காக நோன்பு நைவேத்தியம் மக்கள் செய்வதில்லை, கூர்மாவதாரத்துக்குக் கொண்டாட்டங்கள் நடை பெறுவதில்லை, வாமனாவதாரத்துக்கு வைபவங்கள் நடை பெறுவதில்லை, பரசுராமனுக்குக் கூடப் படாடோபமான பூஜைகள் நடப்பதில்லை, கிருஷ்ண ஜெயந்திகளும், இராமநவமிகளுந்தான் நிலைபெற்றுத், தமிழரின் நினைப்பிலே இடம் பெற்றுவிட்டன. ஏன்? இலக்கியப் பாதுகாவலர் இதற்குச் சற்றுத் தம் ஆராய்ச்சியைச் செலவிட வேண்டுகிறேன்.

இலக்கியங்கள் கூடாதென்றுங்கூறவில்லை, இலக்கியங் களிலே, கற்பனையலங்காரங்கள் இருத்தலாகாதென்றுங் கூறவில்லை. ஆனால், எவை தமிழரின் கருத்தைக் கெடுத்து, நிலையை நொறுக்கி, ஆரியரின் அடிபணிய வைக்கின்றனவோ அவைகளே நமக்காகா என்றுரைக்கிறேன். இதனைத்தான் தோழர்கள் தெளிவாகத் தெரிந்துகொள்ள வேண்டுகிறேன். இதை உணர்ந்தால், இராமனைப்பற்றி இன்னின்ன ஏடுகளிலேயும் குறிப்புண்டே என்று வினா எழாது. கம்ப இராமாயணத்தைக் கொளுத்தினதும், ஆரியமே அன்றோடு அழிந்தொழியும் என்றா சுயமரியாதைக்காரர் கூறுகின்றனர். ஆரியத்தை மக்கள் ஒதுக்கிவிடத் துணிவு கொண்டனர் என்பதற்கு அச்செயல் ஒரு சான்று! தமிழருக்குள்ள ஆரியமோகம் அழிக்கப்படவேண்டும் என்பதற்கு உணர்வூட்டும் ஒரு செயல், ஒரு தூண்டுகோல்.

கம்ப இராமணத்தைக் கொளுத்தி விட்டால் போதுமா என்று கேட்பதுடன், ஒரு தோழர், பிறமொழியிலே முழு நீள இராமாயணம் இருக்குமே என்றும், வால்மீகி இராமாயணம் இருக்குமே என்றும் கூறுகிறார். உண்மையில் வால்மீகி இராமாயணத்தைத்தான் அப்படியே மொழிபெயர்த்திருப்பின், ஆரியக் கடவுள்கள், பத்தினிகள், வீரர்கள் யோக்யதை வெட்ட வெளிச்சமாகித் தமிழர் கேலி செய்து வெறுத்தொதுக்கக்கூடிய வேண்டாப் பொருள்களாகி விட்டிருக்கும். ஆரியரின் வாழ்க்கை முறையின் வக்கிரங்களும், அரசுகளிலே நேரிட்ட சதிகளும், குடும்பங்களிலே உண்டான கலகங்களும் அப்படியே தமிழர் அறியும்படி கம்பர் செய்திருப்பின், தமிழர், ஆரியரை ஒரு காட்டுமிராண்டிக் கூட்டமென்று கேலி செய்திருப்பர்; இன்று காலில் விழுந்து வணங்குவது போன்ற கேவலமனப்பான்மை வந்திருக்காது. ஆனால் கம்பர் தமது, தமிழ் முழுவதையும் ஆரியப் பாத்திரங்களின் மீது அழகுறப்பூசித், தமிழர் நெஞ்சத்திலே அவை இடம் பெறச் செய்தார். அவரது திறமை, நமக்குப் பயன்படாமல், வேதகாலமுதல் நமது வாழ்வைக்கெடுத்து வந்த ஆரியத்துக்குப் பயன்பட்டது. அற்புதமான சிற்பி, ஆனால் கட்டியிருப்பதோ அரக்கு மாளிகை. ஆகவேதான், அதைக் கொளுத்திவிட கூடாது என்று கூறுகிறோம்.

ஏதோ, பரதா! கம்ப இராமாயணத்திலே ஏதாவதோர் பாடலை எடுத்துப் பதம் பிரித்துப் பொருள் உரைத்து, இதனால் தமிழர் இழிவு செய்யப்பட்டுள்ளனர் என்று காட்டு பார்ப்போம், என்று தமிழ்ப் பண்டிதர்கள் கேட்கின்றனர். நோக்கம் என்ன? பாடலைப் பதம் பிரித்து பொருள் உரைத்தானதும் தமிழ்ப் பண்டிதர், தலைப்பாகையைச் சரிப்படுத்திக் கொண்டு, மூக்குக் கண்ணாடியைத் துடைத்துப் போட்டுக்கொண்டு, தொண்டையைக் கனைத்துக்கொண்டு, “அவர் பொருள் உரைத்தது தவறு பதம் பிரித்தது தவறு” என்று ஆரம்பித்து, வெறு பொருள் உரைத்திடத் தொடங்குவார். ஒன்றுக்கு ஒன்பது பொருள் உரைக்க ஓயுங்கூட்டமல்ல அது! புத்தியில்லாதவன் என்ற பதத்தைப் புத்தியில் - ஆதவன் என்று பிரித்தாராம் ஒரு பண்டிதர்! அத்தகைய வேலைத்திறனைக் காட்ட, பாட்டு எடு, பதம் பிரி என்று கேட்கின்றனர் என்பது யாருக்குத் தெரியாது. எனவே, விவாத வீரர் என்ற பெயருக்காகவே, வேலை செய்வதைவிட்டுத், தமிழரின் வாழ்வில் எவ்வளவு தேவையிருக்கிறதென்பதை அறிந்து, அதைப்போக்க, ஆரிய மோகம் போகவேண்டு மென்பதை உணர்ந்து, அம்மோகத்தை அமோகமாக ஊட்டும் ஏடுகளைத் தீயிலிடத்துணிவு கொள்ள வேண்டுமென்று, அந்தத் தோழர்களுக்குக் கூறுகிறேன்.

கம்பர் விழாக்கள் நடத்தியும், கலை மாநாடுகள் கூட்டியும், புலவர்கள் தத்தம் கற்ற வித்தையைக் காட்டும் விளையாட்டைச் செய்ய முனைகிறார்களே தவிர, நாட்டிலே உள்ள மக்களின் நினைப்பிலே ஊறிக்கிடக்கும் நச்சு எண்ணங்கள் போக்கிட ஏதும் செய்வதில்லையே என்று இரங்கத்தான் வேண்டி இருக்கிறது. புது உலகத்துக்கான எண்ணம் எழ ஓர் இலக்கியம் இயற்ற ஏன் இவர்கள் முன்வரக் கூடாது என்று நான் கேட்டால் கோபித்துக் கொள்கிறார்களே தவிர, ஏடும் எழுத்தாணியும் ‘எடுத்துக்கொண்டு உட்கார்ந்து, ‘இதோ பார்’ என்றுகூறி எழுதிடக் காணோம்! எப்படி எழுதுவார்கள்? வரப்பிரசாதம் பெற்றவர்களே கவி பாடுவார் எனும் கதைகளையும், ஆண்டவனே முதல் அடி எடுத்துக் கொடுத்தால்தான் அருட்பாடல் பாட இயலும் என்ற கதையையும் படித்துப் படித்து தன்னம்பிக்கை தேய்ந்து போன பிறகு, தேவாலயம் சுற்றவும், தெரிந்த பாடலுக்குப் புது விருத்தியுரை எழுதவும் அவர்களால் முடியுமே தவிர, இன எழுச்சியும் தமிழ்த் தரணியின் விடுதலைக்கு கருத்துக்கொண்ட “கலை” செய்யும் நிலை அவர்கட்கு வரவில்லை!! ஆகவே தான், அவர்கள் அறிவும் திறனும் படைத்தவர்களாக இருந்தும், பழைய அரக்கு மாளிகைகளில் குடி இருப்பதே மேல் என்று கருதுகிறார்கள். “ஐயன்மீர்! வெளியே வந்துவிடுங்கள், அரக்கு மாளிகைகளைக் கொளுத்தப் போகிறோம்” என்று சுயமரியாதைக் காரர்கள் கூறுகின்றனர். தீ என்றதும், அத்திருக்கூட்டம் திகில் கொள்கிறது, பாபம்!
11.4.1943