அறிஞர் அண்ணாவின் கட்டுரைகள்


அறப்போர் - பலன், பல!

கதிரவன் காய்கிறான்! அவர்கள் ஓய் வெடுப்பதில்லை! கார் மிரட்டுகிறது. அவர்கள், கடமையைச் செய்யாமலிருப்பதில்லை! அவரவர் தத்தமது சொந்த நலனுக்கான காரியத்தில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் வேளை- இவர் களோ, நாட்டின் எதிர்காலத்தை நோக்கமாகக் கொண்டு நற்பணியைத் தளராமல் செய்து வருகின்றனர். அதோ ஒருவர் அவசர அவசரமாக செல்கிறார் தமது அலுவலகம் நோக்கி- சென்றால் தான் குடும்பம் செம்மையுற நடத்த முடியும் என்ற எண்ணம் அவருக்கு! இதோ இன்னொருவர், சற்று ஏளனமாகப் பார்க்கிறார்- இதுகளுக்கு ஏன் இந்தத் தொல்லை- என்று பேசுகிறது அவருடைய பார்வை! ஏளனம் கண்டு, அவர்கள் தமது கடமையைக் கைவிடவில்லை. எந்த நேரத்தில், சென்னை நகரில் மக்கள், பல்வேறு பணிபுரியக் கிளம்புகின்றனரோ, எப்பணி புரிந் தேனும் குடும்பத்தை நடத்த வேண்டுமே என்ற கவலையுடன், தொழில் நிலையம் நோக்கியோ, துரைத்தன அலுவலகம் நோக்கியோ, நாணய மான, பணிபுரியவோ, நாட்டு மக்களைக் கெடுக் கும் காரியம் செய்யவோ, இலாப வேட்டைக்கோ, வாழ்க்கை எனும் மூட்டையைச் சுமக்க வேண்டுமே என்ற வாட்டத்துடனோ, ஏதோ ஓர் வகையான வேலையில் ஈடுபடப் பலரும் செல்கின்றனரோ, அதே நேரத்தில், சொந்த நலனை மறந்து, நாட்டு மொழியைக் காக்க, வீட்டையும் துறந்து, பணிபுரிகின்றனர். அறப்போர் வீரர்கள்.
இந்தி ஒழிக! தமிழ் வாழ்க! எனும், அவர் களின் குரலொலி கேட்ட வண்ணம் இருக்கிறது. பள்ளி வாயலில்- ஒவ்வோர் நாளும், ஓய்வின்றி முழக்கமிடுகின்றனர்- மாணவச் சிறாரின் மனம் உருகும் வகையில் காண்போரின் கண்ணியவான் களின் கண்களெல்லாம் கேள்விக் குறிகளாக மாறும் விதத்தில்! ஆசிரியர்களும், மாணவர் களும் வகுப்புகளில் சந்திக்கும்போது, மாணவரின் பெயரை, முத்துச்சாமி! முருகானந்தா! சின்னசாமி! சீனுவாசா! என்று அழைக்கும்போதும், மாணவர் கள் அதற்குப் பதில் கூறும்போதும், ஆசிரியர் மாணவர் ஆகிய இருவரின் செவிகளிலும் அறப்போர் முழக்கத்தின் எதிரொலிதான் கேட்கிறது. எங்கிருந்தோ கிளம்பிவரும் ஏக்கக் குரலொலி கேட்கிறது. இந்தி ஒழிக! தமிழ் வாழ்க! என்று அறப்போர் வீரர்கள் முழக்கமிடும் காட்சியும், மனக்கண் முன் தோன்றுகிறது. பாடம் படித்திட- ஏடுகளைப் பிரித்ததும், மாணவர்களின் கண்களிலே, அசோகர் அக்பர் படங்களோ, ராமகிருஷ்ணன் படங்களா புத்தகத்திலே பொறித்திருந்த போதிலும், அந்த உருவங்களல்ல, கடமைக்காக, வாயிலில் நின்று, கனிவுடன் தம்மை நோக்கி, ``தம்பீ, இந்தி படிக்காதே!'' என்று கூறிய, அறப்போர் வீரர்களின் உருவங்களே, தெரிகின் றன! அவர்கள், பள்ளி மாணவர்களின் நினைப்பி லிருந்து நீங்கா நிலைபெற்று வருகின்றனர்- ஒவ்வோர் நாளும் ஒரு மணி நேரம், உள்ளன் புடன் அவர்கள் ஆற்றும் தொண்டின் மூலம், இது மட்டுமல்ல, இந்தி படிக்கும் மாணவர்களின் தொகையும் மறியல் நடக்கும் பள்ளியில் குறைந்துகொண்டே வருகிறது.
ஒரு நாளைக்குப் போலீஸ் நடவடிக்கை பரபரப்பாக இருக்கும். மற்றோர் நாள் மந்த நிலை பெறும், ஓர் நாள் பெருங்கூட்டம் சேர்ந்து உடன் முழக்கமிடும், மற்றோர் நாள், கூட்டம் இராது. ஓர் நாள் கடும் வெயில் இருக்கும், இன்னோர் நாள் மழை பொழியும், எந்த நிலை இருப்பினும், அறப்போர் வீரர்கள் தமது கடமையினின்றும் வழுவாமல், பள்ளி வாயிலில் நின்று, இந்தி ஒழிக! தமிழ் வாழ்க! என்று முழக்கமிட்ட வண்ணம் உள்ளனர்.
திடீரென்று ஓர் நாள், நீங்கள் ஊர்வலம் சென்றீர்கள்- கைது செய்கிறோம்! என்று போலீஸ் கூறுகிறது. வழக்கமான புன்னகை, மலருகிறது. முழக்கத்திலோர் புதுச் சக்தியும் வளருகிறது- போலீசுக்கு வேலை அதிகரிக்கிறது- தொண்டர் கள் கைது செய்யப்பட்டனர் என்ற செய்தி நகரெங்கும் பரவுகிறது. பிறகு, ஏனோ மீண்டும் ஓர் திடீர் மாறுதல் காணப்படுகிறது. போலீஸ் போக்கில் உயர்தர அதிகாரிகள் ஏதோ பேசிக் கொள்கிறார்கள்- கூடிக் கூடி- பிறகு கைது செய்து அழைத்துச் சென்ற தொண்டர்களை, விடுதலை செய்கின்றனர்.
கைது செய்யப்பட்ட அன்று, அறப்போர் வீரர்கள், எவ்வண்ணம் சென்றனரோ, என்ன முழக்கமிட்டனரோ, எப்பக்கம் சென்றனரோ, அதே முறையில், மறுநாளும் தொடர்ந்து நடைபெறுகிறது. ஆனால், அன்று கைது செய்த போலீஸ், பிறகு வாளா இருந்துவிட்டது, என்ன செய்வதென்று புரியாத நிலைபோலும். ஆனால், என்ன நிலை இருப்பினும், என்ன போக்கினைச் சர்க்கார் மேற்கொள்வதாயினும், அறப்போரில் மட்டும் மாற்றம் ஏதும் இல்லை- அந்த முழக்கம் கேட்ட வண்ணமிருக்கிறது.
பலன் என்ன காண்கின்றனர்! வெற்றி அவர்களை நாடி வரக் காணோமே!- என்று பலர் எண்ணுவர்- இயற்கை! சட்டை செய்யாதது போல இருந்து விடுவோம் அவர்களின் ஆர்வம் சருகென உலர்ந்து தானாக உதிர்ந்து போய் விடும் என்று ஆளவந்தார்கள் எண்ணுகின்றனர். நண்பர்கள் சந்தேகம், நாடாள்வோரின் சாகசம், ஏமாளிகளின் அக்கறையற்ற தன்மை, எத்தர் களின் எக்களிப்பு, எதனையும் பொருட்படுத்தாது. அறப்போர் வீரர்கள் தமது கடமையைச் செய்து வருகின்றனர். இந்தி ஒழிக! தமிழ் வாழ்க! என்று தமிழகத்தின் முழக்கத்தைப் பரப்பியவண்ணம் உள்ளனர். ஆம்! அவர்களின் அறப்போர் முழக்கம் கேட்டவண்ணமே இருக்கும்- ஆட்சி யாளர்கள் அவர்களைச் சிறையில் தள்ளி விட்டால், அந்தக் கடமையை மேற்கொண்டு பணிபுரிய, வேறு அறப்போர் வீரர்கள் முன்வரு வர்! தொடர்ந்து நடந்தபடி இருக்கும். துவண்டு விடும் என்று ஆளவந்தார்கள் நினைப்பது, தவறு. பலன் காணோமே என்று நண்பர்கள் வாடுவதும் கூடாது, ஏனெனில் பலன்,, பலவகையிலே கிடைத்தபடி இருக்கத்தான் செய்கிறது.
இங்கு மட்டுமல்ல, எங்கும் இந்தி எதிர்ப்புப் போர் நடைபெற்று வருவது பற்றிய, பேச்சு, ஆளவந்தார்களின் வட்டாரத்திலே பேசப்பட்டு வருகிறது- அத்துடன், தொடர்பான பேச்சாக, இந்தி மொழி பற்றிய பிரச்னை பேசப்பட்டு வருகிறது- அந்தப் பேச்சின் விளைவுகளெல் லாம் நமது குறிக்கோளுக்கு அரண் தருவன வாகின்றன.
`தென்னாட்டு உறுப்பினர்கள் கூடி டில்லி யில் பேசி, முடிவு செய்தனர். மொழிப் பிரச்னை பற்றி, என்ன அந்த முடிவு? இந்தியைக் கட்டாயப் படுத்தியே ஆகவேண்டும். உடனடியாக இந்தி மொழிக்கே ஆட்சி மன்றத்திலே உயர்வு தந்தாக வேண்டும்- என்றா? இல்லை! அவர்களுக்கு, அந்தத் துணிவு பிறக்கவில்லை- பிறக்க முடியாது, அவர்கள் அறிவர். அறப்போர் நடைபெறுவதை! எனவே,மெள்ள மெள்ள, படிப்படியாக, நாளா வட்டத்தில், ஒரு பதினைந்து வருஷ கால அவகாசம் கொடுத்து- இப்படித்தான் இந்தியைப் புகுத்த முடியும் என்று பேசுகிறார்கள். அதிகார பலத்தைக் கொண்டு, அன்னிய மொழியைத் திணித்து விட முடியாது என்பதை, ஆட்சியாளர் களுக்கு நாம் நடத்தி வரும் அறப்போர் உணர்த்தி விட்டது. கட்டாயமில்லை- கட்டாயப்படுத்த வில்லை- இஷ்டப்பாடமாகவே வைத்திருக் கிறோம்- என்று, செல்லுமிடமெல்லாம். அமைச் சர்கள் கத்துகிறார்கள். ஆராய்ந்து பார்த்தால், அலசிப் பார்த்தால் அவர்கள் கூறுவத பொருந்தா உரை, என்பது விளங்கிவிடும். என்ற போதிலும் கட்டாயப் பாடமாக இந்தியைப் புகுத்தவில்லை என்று ஒப்புக்காகவேனும், அமைச்சர்கள் ஓலமிட வேண்டிய நிலை இருப்பதற்குக் காரணம், தொடர்ந்து நடந்து வரும் அறப்போர்தான்! அமைச்சர்கள் இதுபோலப் பேசும்போது, இந்தி கட்டாயப் பாடமல்ல, இஷ்டபாடந்தான் என்று வாதாடும்போது, அவர்களின் மனக்கண்முன் தோன்றுவது என்ன காட்சி? பள்ளி முன் நிற்கும் அறப்போர் வீரர்கள், பணிவுடன், மாணவர்களை இந்தி படிக்காதீர்! என்று கேட்டுக் கொள்ளும் காட்சிதானே!
அமைச்சர்கள், பிடிவாதத்தை அல்ல, இன்று நம்பிக் கொண்டிருப்பது, பலத்தையுமல்ல, அவர்கள் பசப்புப் பேச்சை மட்டுமே நம்பிக் கொண்டிருக்கிறார்கள்- இந்தி கட்டாயப் பாடமல்ல என்று பன்னிப் பன்னிப் பசப்பிப் பேசினால், மக்களின் மனத்தை மயக்கிவிடலாம் என்பதே அவர்கள் நோக்கம். அறப்போரைத் தமது பலத்தால் முறியடிக்க முடியாது என்பதை உணர்ந்து கொண்டனர். இந்த அமைச்சர்கள். எனவேதான் பசப்புப் பேச்சு பலிக்கிறதா என்று பரீட்சை பார்க்கின்றனர். அறப்போர் வீரர்களின் ஆற்றலை அமைச்சர்கள் அறிந்து கொண்டனர்- எனவேதான், அமைச்சர்களின் போர் முறை யிலே, குறிப்பிடத்தக்க இந்த மாற்றம் ஏற்பட்டி ருக்கிறது.
அறப்போர் வீரர்களுக்கு, இந்த நிலை, மேலும் உற்சாகத்தைத்தான் ஊட்டுகிறது! அவர் களின் ஆர்வத்தை மேலும் வளமாக்க, நாள் தோறும் இங்கிருந்து மட்டுமல்ல, துணைக் கண்டத்தின் பல பாகங்களிலுமிருந்து, இந்தி மொழிக்கு இடியும் ஏளனமும் கிளம்பியபடி இருக்கிறது!
இந்தி மொழி ஏகாதிபத்தியமா? ஏற்கோம்! என்று அரசியல் நிர்ணய சபையிலே டி.டி. கிருஷ்ணமாச்சாரியார் முழக்கமிடுகிறார்- அறப் போர் வீரர்களின் தூதுவர் போல!
ஆங்கில மொழிச் சொல்லை நீக்கி விட்டு, பிரதேஸ் எனும் இந்திச் சொல்லைப் புகுத்த வேண்டும் என்று அரசியல் நிர்ணய சபையிலே ஒருவர் கூறுகிறார், நேரு, ``செச்சே! இதென்ன பித்தம்! பிரதேஸ் என்றால், யாருக்குப் புரியும்? நிலையான பொருளே கிடையாதே அந்தச் சொல்லுக்கு.'' என்று பேசுகிறார். ``பிரதேஸ்'' தோற்றுவிடுகிறது!
இந்தி மொழி பரப்பும் கழகத்தைச் சார்ந்த, தோழர் சத்யநாராயணா என்பவர்,
``மாகாண நலத்துக்குக் குந்தகம் விளை விக்கும் வகையிலும், மாகாண மொழிகளின் வளர்ச்சிக்கு மாறாகவும் திணிக்கப் பெறும் பொது மொழி யெதுவும் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது தான். கட்டாயமின்றி இயல்பாக, பிறர் உரிமை யைக் கெடுக்காமல், செய்யப்படும் காரியந்தான் வெற்றி பயக்கும்'' என்று கூறுகிறார்.
காமராஜர் கூட,
``சென்னை மந்திரிசபை முக்கிய திட்டங் களை அமுல் நடத்தப் புகுவதில் மக்கள் எண்ணங்களைக் கவனிப்பதேயில்லை. முன்பு இந்தியைக் கட்டாயப் பாடமாக்கியபொழுது 1800 பேர் சிறை சென்றதை நினைத்துப் பார்க்காமல் கல்வி மந்திரி வெளியிட்ட ஒரு அறிக்கை வேண்டாத ஒரு நிலைமையை உண்டாக்கி விட்டுள்ளது. இந்தியைக் கட்டாயப்படுத்த வேண்டாமென்பது என் சொந்த அபிப்பிராயம்.''
என்று கூறுகிறார், இவ்வண்ணம், இந்தி மொழிக்கு இடியும் ஏளனமும், எங்கும் கிளம்பிய படி இருப்பது ஏன்! அறப்போர் தான் அதற்குக் காரணம்! இந்தி மொழி ஏகாதிபத்தியம், முளையி லேயே அழிக்கப்பட்டு வருகிறது. அறப்போர் வீரர்கள்! உங்கள் முழக்கம், எங்கும் எதிரொலிக் கிறது! சென்னையில் எங்கோ ஓர் மூலையில் கவனிப்பாரற்ற நிலையில், யாரோ சிலர், போடும் கூச்சல் என்று இதனைத் துச்சமென்று கருதுவ தாகப் பாவனை செய்த போதிலும், யாருடன் உரையாடிக் கொண்டிருந்தாலும், டில்லியில் உலவினாலும் தமது வீட்டுக் கொல்லையில் உலவினாலும், அறப்போர் வீரர்காள்! நீங்கள்தான், அவர்களின் அகக்கண்முன் தெரிகிறீர்கள்! ஒவ்வோர் நாளும், இந்தி ஒழிக, தமிழ் வாழ்க! என்று நீங்கள் இடும் முழக்கம், புகாத இடமில்லை, கேளாத நாளில்லை! அமைச்சர்களின் செவி களில், இந்த முழக்கம் ஒலித்தவண்ணம் இருக் கிறது! ஆகவேதான், அவர்கள் எங்குச் சென்றா லும், எதைப் பேசச் சென்றாலும், உங்களைப் பற்றியே பேச நேரிடுகிறது! அறப்போர் வீரர்களே! நீங்கள் அமைச்சர்களை மறந்தாலும், அமைச்சர் கள் உங்களை மறக்க முடியாது- அவ்வளவு வெற்றிகரமாக, அவர்களின் சிந்தனையில் இடம் பெற்றுவிட்டீர்கள்! அறப்போர் தொடர்ந்து நடைபெறட்டும்! அமைச்சர்களின் திட்டம் மாறியே தீரும், என்ற உறுதியுடன், பணிபுரியும் உங்கள் முயற்சி வீண் போகாது! வீண் போகாது!!

(திராவிட நாடு - 21.11.48)