அறிஞர் அண்ணாவின் கட்டுரைகள்


அறப்போருக்கு அழைக்கிறார்!

அறப்போருக்கு அழைக்கிறார்! ஆகா இந்தியை நுழைக்கிறார். ஆணவத்தைத் துணை யெனக் கொண்டவர்களின் சதிப் பேச்சிலே மயங்கி, அவினாசியர், கட்டாய இந்தியை நுழைக்கிறார். களம் வா தமிழா! என்று அழைக் கிறார். கல்லறை இருக்கிறது சென்னையில்! மொழிப் போரில் உயிர்நீத்த உத்தமர்களின் கல்லறை!

காளைகள் பலர், பலப்பலர் உள்ளனர். கட்டாய இந்தியை எதிர்த்துக் கடுஞ்சிறை சென்று, கல் உடைத்தவர்கள். செக்கும் இழுத்தவர்கள், சமையலறையிலிருந்து நேரே சிறை நோக்கிச் சென்ற, சீலமிகு செந்தமிழ்த் தாய்மார்கள் உள்ளனர்!

சிறையிலே, தாயுடன் இருந்து, குழந்தைப் பருவத்திலேயே சிறைக் கஞ்சானாகி, வளர்ந்த குழந்தைகள், சிறுவர் சிறுமியாக உள்ளனர்.

காவி அணிந்தோர்- கலை பயின்றிருந் தோர் - காடு கழனி உழுது கொண்டிருந்தோர் அனைவரும், களம் வந்தனர்- அற்பமென்போம் அந்த இந்திதனை அதன் ஆதிக்கம் தன்னை வளர விடோம் என்று முழக்கமிட்டுக் கொண்டு.

ஆசிரியர் திருமலைசாமியும் அஞ்சா நெஞ்சுடன் அழகர்சாமியும் தமிழர் பெரும் படையை நடத்தி வந்தனர். சென்னைக் கடற்கரை தமிழரின் இல்லமாகி விட்டது. பாரதியார் பரணி- விசுவநாதம் வீரமுரசு ஒலிக்கும் இடமாகி விட்டது. திருமண வீட்டு அழைப்பு போல், சென்னைத் தாய்மார்கள், தெருத்தெருவுக்குச் சென்று, செந்தமிழைக் காப்பதற்குச் சேனை ஒன்று தேவை! பெரும் சேனை ஒன்று தேவை! என்று சிந்து பாடினர். பெரியார் பெரும்படை உரு வெடுத்தது.

டாக்டர் தருமாம்பாளம்மையார், மலர் முகத்தம்மையார், பண்டிதை நாராயணி அம்மை யார், மூவலூர் இராமாமிருதத்தம்மையார் கிளம்பினர்- பவனிவந்தனர். செந்தமிழ் நாட்டில், இவைகள் எல்லாம் கனவில் கண்ட காட்சிகளோ! என்று எண்ணிவிட வேண்டிய விதமாக ஆண்டு சில சென்றுவிட்டன. அறப்போர் நடாத்தியதால் கிடைத்த ஆர்வம், அடியோடு மறைந்து போய்விட்டால் என்ன செய்வது என்ற அச்சம் போலும், அன்பர் அவினாசியாருக்கு- ஆகவே தான், அறப்போருக்கு அழைக்கிறார். இந்தி இஷ்ட பாடந்தான்- தமிழகத்தில் என்றார். அவர் மீது சிலர் சீறினர்- உடனே அமைச்சர் மாறினார்- இங்கும் இந்தி கட்டாய பாடந்தான், என்று கூறுகிறார். தமிழரைத் துச்சமென்றெண்ணி, வலிய வம்புக்கு நிற்கிறார். அறப்போர் நடாத்தும் படி அழைக்கும் அவினாசியாருக்கு அந்தநாள் நிகழ்ச்சிகள் அவ்வளவாகத் தெரியாது. ஆச்சாரியார் அறிவார் அனைத்தும், ஆனால் அவருக்கோ நேரம் இராது. அவினாசியாரிடம் பேச- சீனத் தூதருடன் சிற்றுண்டியும், நேபாளத் தூதருடன் விருந்தும் திபேத்திய கன்னியரின் திருநடனமும், நிஜாம் தூதருக்குப் பேட்டியும் தரவே, அவருக்கு நேரம் போதாது- நினைப் பிலே திடீர் நடுக்கம் கொள்ளும் அவினாசியாரி டம் பழங்கதை பேச நேரம், எப்படிக் கிடைக்கும்!

விஷயம் தெரியாததாலும், நிலைமை புரியாததாலும்,அமைச்சர், இந்த ஆகாத திட்டத்தைப் புகுத்துகிறார்- அறப்போருக்குத் தமிழரை அழைக்கிறார்.

தமிழர் அவினாசியாரின் அழைப்பை ஏற்றுக் கொள்ளத் தயங்கப் போவதில்லை! தமிழர், அறப்போர் புரிய, என்றுமே தயங்கின தில்லை. சேரன் செங்குட்டுவன் காலத்திலிருந்தே. தமிழர் தயங்கினதில்லை. தமது மொழிக்காகப் போரிட தமிழர், தமது மொழி மூலம் கிடைக்கும் வாழ்க்கை வழியின் மேம்பாட்டினை நன்கு அறிவர்- எனவேதான் அந்த மொழிக்கு இழுக்கு வருகிறதென்று தெரிந்தால், கூட்டினை விட்டு வெளிக் கிளம்பும் சிங்கங்களாகின்றனர். இம் முறையும் சரி, அறப்போர் புரியத் தமிழர் அஞ்சப் போவதில்லை. அந்த நாளில், தமிழருக் கும், தமிழ் மொழியைக் குலைக்கும் காங்கிரஸ் கட்சியினருக்கும், இருந்த நிலையும், இன்றுள்ள நிலையும், தமிழர் நன்கு அறிவர். அன்றும் ஆட்சிப் பீடத்தில் நாம் இல்லை.

இன்றும் ஆட்சிப் பீடத்தில் நாம் இல்லை.

அன்று, தமிழ் மொழிக்குப் படை திரட்டி, வெற்றி காண, அறப்போர் தொடுத்தோம்.

இன்றும் தொடுப்போம்! தமிழரின் உள்ளம், பண்பட்டுள்ளது இப்போது, அறப்போர், முன் பிருந்ததைவிட மும்முரமானதாக இருக்கும். தமிழரின் வீரவரலாற்றுச் சுவடியில், மேலும் சில இதழ்கள் சேர்ப்போம்- பொன் எழுத்துக்கள் பொறித்திட, சீமானுமல்ல பூமானுமல்ல நாம்- செங்குருதியால் எழுதிக் காட்டுவோம். செந்தமிழைக் காத்திட அறப்போர் நடாத்தும் செய்தியை அவினாசியாருக்குக் கூறுகிறோம், உமது அறைகூவல் ஏற்றுக் கொள்ளப்படும்- அறப்போர் துவக்கப்படும்- என்று கடமையைச் செய்வதிலே எஃகு போன்ற உள்ளமும், நீதி வழங்குவதிலே துலாக்கோல் போன்ற மனோ நிலையும், எளியோர் விஷயத்தில் இளகிய மனமும் இருத்தல் வேண்டும், ஒரு ஆட்சி பிறரால் போற்றப்பட வேண்டுமானால்,

ஆட்சியைப் பிடித்துக் கொள்ள ஆஷாட பூதி வேஷமிட்டு நின்று, நல்வாக்குக் கூறி, நான் உமக்கு ஊழியம் செய்யவே அனுமதி கேட்கிறேனே ஒழிய, ஊராளும் பதவியா கேட்கிறேன் என்று உள்ளம் உருக்கும் பேச்சுப் பேசி,பதவியில் அமர்ந்து கொண்டதும், தமக்கும், பதவிக்கும் ஏதோ பரம்பரை பாத்யதை இருப்பது போல எண்ணிக்கொண்டு, பிடி! அடி! சுடு! என்று பிதற்றிக் கொண்டு, யார் எத்தகைய நியாயமான விஷயத்தைச் சொன்னாலும், நீதிக்காக வாதாடி னாலும், அவர்கள் மீது அடக்குமுறையை வீசி, அட்டகாச வாழ்வு நடாத்தியதால், அவதியுற்று அழிந்த பல ஆளவந்தார்களின் தொகுப்பு நூல், சரிதம் ஆள வருவோருக்கு, அற்புதமான வழிகாட்டி- எச்சரிக்கை- ஒரு வரலாறு. ஆனால், நமது ஆட்சியாளர்கள், நாள் தவறாமல் `இந்தியன் பினல் கோடைப் புரட்டிப் புரட்டிப் பார்த்து, யாரார் மீது என்னென்ன செக்ஷன் வீசலாம், எந்தெந்தப் பத்திரிகைக்கு ஜாமீன் கேட்கலாம். எங்கெங்கு தடை உத்தரவுகள் பிறப்பிக்கலாம் என்று படித்துத் தெரிந்து கொள்வதிலே அக்கறை காட்டு கிறார்களே தவிர, உலக வரலாற்றுச் சுவடியைப் படித்துத் தமது உள்ளத்தைத் திருத்திக் கொள்ள முயற்சிப்பவர்களாகக் காணோம்.

ஆச்சாரியார் ஆட்சி செய்து கொண்டிருந் தாரே, அன்று இருந்ததைவிட இன்று காங்கிர சுக்குப் பலம் அமோகமாக வளர்ந்திருக்கிறது என்பதை நாம் அறியாமலில்லை.

திருச்செங்கோட்டார், அன்று- இன்று இந்தியாவின் கவர்னர் ஜெனரல்! அறிவோம். இரண்டுக்கும் உள்ள தாரதம்மியமும் அறிவோம்.

ஆச்சாரியாரின் மருகர், பெர்லினில் விருந்துண்கிறார்- லண்டனில் பேசுகிறார்- அறிவோம்- அதனால் அவர் ஆனந்தமடை வார்- அவருடைய இனத்தவர் பூரிப்படைவர்- புல்லேந் தும் பரம்பரை என்று எண்ணாதீர்- பாரீர், பாரெங்கும் எமது ஆதிபத்யம் பரவுகிறது என்று உளறிக் கொட்டும் அளவுக்குச் சில `பிரகிர்திகள்' பித்தம் பிடித்து அலைகின்றன, என்பதையும் அறிவோம்.
கவர்னர்களாய்- அமைச்சர்களாய்- தூதுவர்களாய்- துரைமார்கள் காலி செய்து விட்டுப் போன வெல்வெட்டு மெத்தைகளில் கொலு வீற்றிருப்பவராய், காங்கிரஸ் தலைவர்கள், பலமும் புதிய நிலையும் பெற்றுள்ளனர் என்பதை யும் அறிவோம்.

அகில உலகிலும் அவர்கள் தொடர்பு ஏற்படுத்திக் கொண்டுள்ளனர் - தெரியும் அதுவும்.

ஆளவந்த அவர்கள், அவர்களை ஆட் களாக்கிவிட்ட அண்ணல் காந்தியாரைப் படு கொலைக்கு ஆளாக விட்ட அசகாயச் சூரர்கள்- இதை நாம் அறிவோம், அவர்கள் அறியார்!

அகிம்சையை, வாழ்க்கைக்கும், நாட்டு ஆட்சி முறைக்கும் ஏற்ற அசைக்க முடியாத திட்டம் என்று அல்லும் பகலும் அனைவரதமும் பேசிக் கொண்டிருந்தவர்கள், அடி உதை கொடுத்தும்- ஆள் தூக்கிச் சட்டம் போட்டும்- பத்திரிகைகளைத் தடுத்தும்- பேசுவோர்க்கு வாய்ப் பூட்டுச் சட்டமிட்டும், துப்பாக்கியைக் காட்டியும்தான், நாட்டிலே இதுபோது, ஆட்சி செய்ய முடிகிறது- இதை அவர்கள் அறிவ தில்லை- நாம் அறிவோம். நடைபெறுவது, அகிம்சைக் கொள்கையை அடிப்படையாகக் கொண்ட ஆட்சி அல்ல என்பதை நாம் நன்றாக அறிவோம். அன்று, தமிழ் மொழி, கலை ஆகியவைகளிலே உள்ளூரப் பற்று இருந்தாலும், வெளியே காட்டிக் கொள்ளவோ, அதற்காகப் போரிடவோ முடியாத நிலையில் ஆயிரமாயிரம் தமிழர்கள் இருந்தனர்- சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கிறோம். ஏகாதிபத்யத்துடன் எதிர்த்துப் போரிடுகிறோம்- நாட்டு விடு தலைக்குப் போரிடும் பெரும் பணியிலிருக்கும் எமக்குத் தமிழ் மொழி, கலை என்பன போன்றவைகள் சில்லறைப் பிரச்னை கள் என்றே தோன்றுகின்றன. எனவே, நாங்கள் அவைகளில் ஈடுபட மாட்டோம். தமிழ் மொழியை, தமிழ்க் கலையை, தமிழ் இனத்தைப் பாதுகாக்க முடியும் எங்களால் தக்க சமயத்தில். தக்க விதமாக. இது விடுதலைப் போர்க்காலம். மொழிப் பிரச்சனைக்காக மோதிக்கொள்ள இதுவல்ல நேரம்! இது அன்னிய ஆட்சியின் பிடியிலிருந்து நாட்டை மீட்க வேண்டிய மகத்தான போர் புரியும்- சிலர் சாக்குக் கூறினர்- ஆனால் பலர் உண்மையாகவே, இந்தக் கருத்துடன் இருந்தனர். எனவே அவர்கள், மொழிப் போர் நடைபெற்றபோது, ஆடவரும், பெண்டிரும், குழந்தையும், கிழவரும், சிறை சென்றபோது, தாளமுத்துவும், நடராஜனும் இறந்தபோது, கண்ணீர் பெருக்கெடுத்தது என்றாலும், துடைத்துக்கொண்டு, துரைமார்களை எதிர்க்கும் தூயபோரில் ஈடுபட்டு, தாய்மொழிப் போரில் ஈடுபடாமலிருந்து விட்டனர். அது அன்று! இன்று? அன்று இலேசாக இருந்து இன்று கனமாகியுள்ள அவினாசியார் இதை அறிந்து கொள்ள முயற்சிக்கட்டும்- பிரமாதமான மூளை பலம் தேவையில்லை இதற்கு- சராசரி அறிவு போதும். அவினாசியாருக்கு அந்த அளவு நிச்சயம் உண்டு. சற்றே சிந்திக்கட்டும்- அன்று இருந்த நிலைக்கும் இன்று இருப்பதற்கும் இடையே உள்ள வித்தியாசம் விளங்கும்.

ஆளவந்தவருக்கு, சிந்திக்க அவகாசம் இல்லாமற்போய்விடக் கூடும். எனவே, அவருக்கு அன்று இருந்த நிலைமைக்கும் இன்றுள்ள நிலைமைக்கும் உள்ள வித்தியாசத்தை நாமே விளக்கியும் விடுகிறோம். நமது சொந்தக் கருத்தின் துணை கொண்டல்ல- அவினாசிகள் அறிந்திருக்கும் `தமிழ் மணி' எனும் காங்கிரஸ் ஏட்டின் கருத்தையே கல்வி மந்திரியாருக்குக் காணிக்கையாகத் தருகிறோம்.

``யாரோ, சிலருடைய பூச்சாண்டி'' என்று சொல்லப்படுவது ஒரு பத்தாண்டுகளுக்கு முன் னர் உண்மையாக இருக்கலாம். ஆனால், இன்றைய நிலை அதுவல்ல. தமிழ்நாட்டிலே இன்றைய தினம் மொழிப்பற்று, இனப்பற்று வளர்ந்துவிட்டது. இதில் கட்சி வேறுபாடுகள் கூடக் கவனிக்கப்படுவதில்லை. அவ்வளவு தூரம் நிலைமையிலே மாற்றம் ஏற்பட்டுவிட்டது. இதனை நாம் கண்ணியமாக ஒப்புக்கொண்டே தீர வேண்டும். நடுநிலை நின்று நாட்டைக் கவனிப் போருக்கு இது விளங்காமற் போகாது. நாமும் ஒரு காலத்தில் கட்டாய இந்திக்கு ஆதரவு கொடுத்து வந்தோம். இந்திக்கு எதிர்ப்புக் காட்டியோருக்கு நாம் எதிர்ப்புக் காட்டி, அதனால் கல்லடியும், சொல்லடியும் பட்ட காலம் ஒன்றுண்டு. இவ்வளவும் எதற்கு? நாடு சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த காலத்தில் அந்தப் போராட்டத்துக்கு இந்த எதிர்ப்புகள் இடையூறாக இருக்கக் கூடாது என்பதற்காக எதிர்ப்புகளை யெல்லாம் எதிர்த்துப் போராடினோம். ஆனால், இன்றைய நிலை அதுவல்ல. கிடைத்த சுதந்திரத்தைக் கொண்டு, நாட்டிலே அமைதியை நிலவச் செய்து, உற்பத்தியைப் பெருக்கி, முத லாளித்வத்தை முறியடித்து, தொழிலாளரை வாழ வழி செய்ய வேண்டும் என்பது நமது குறிக்கோளாகிவிட்டது. எனவேதான், இப்படிப் பட்ட வேளையில் வீண் வம்பு எதற்கு என்கிறோம். இந்தி கட்டாய பாடமாக இருப்பதை விட, இஷ்ட பாடமாக இருப்பதே உண்மையில் பலன் தரக்கூடிய முறை. சர்க்கார் தமிழரின் வெறுப்புக்கு ஆளாகாதிருக்க வேண்டுமானால் இம்முறையைக் கடைப்பிடிப்பதே சாலச் சிறந்தது. இதனால் நாம் இந்தியை வேண்டாமென்று சொல்லுவதாக யாரும் கருதி விடக்கூடாது. இந்தி மட்டுமல்ல வேறு எத்தனை பாஷைகளை வேண்டுமானாலும் மக்கள் தெரிந்து கொள்ளுவது நல்லது என்பதே நமது அபிப்பிராயம். தமிழ் நாட்டின் தற்போதைய நிலையில் கட்டாய இந்தி கூடாது என்பதை கருத்துடையோர் யாரும் மறுத்துக் கூறமாட்டார்கள்.

``எனவே, எல்லாவற்றையும், உணர்ந்த நாம், நாட்டின் நிலையறிந்து, நடுநிலை நின்று நல்லதைச் சொல்லுகிறோம், சர்க்காரும், தலைவர் களும் கேட்டால் கேட்கட்டும், கேட்காவிட்டால் போகட்டும்.''

அன்று இருந்ததைவிட இன்று காங்கிரசின் பலம் வளர்ந்திருக்கிறது என்பதற்கான எடுத்துக் காட்டுகளைக் கூறினோம். ஆனால், அந்தப் `பலம்' ஒரு மாயமான்- பொன்மான்- பதவி, பளபளப்பு, இவை. ஆனால் உண்மையான பலம்- மக்களின் ஆதரவு அன்று. நமக்கு இருந்ததைவிட இன்று அமோகம். `தமிழ் மணி' கணகணவென ஒலிக்கும் வேளை. அந்த எழுச்சிக் குரலை அடக்க, வெள்ளி மணிகளும் வேதிய மணிகளும் வீறிட்டழுது பார்க்கும் காலம்! அன்று சாமான்யர்களாக இருந்தோம்- வெள்ளை யரின் மேற்பார்வையின் கீழ் ஆட்சி செய்யும் அளவுக்கு மட்டுமே அந்தஸ்து பெற்றிருந்தோம்- இன்றோ வெள்ளையர் வீற்றிருந்த வெல்வெட்டு மெத்தைகளிலே கொலுவீற்றிருக்கிறோம்! என்று இந்த மாறுதலை, மமதையை மட்டுமே தரக்கூடிய இந்த உயர்நிலையை எண்ணி, ஏமாற வேண்டாம் என்று எச்சரிக்கிறோம் நாடாள வந்தோரை. அன்று, மொழிப் போரில் கலந்து கொள்ளாதிருந்த ஆயிரமாயிரம் தமிழர்கள், இன்று, ஆதரவு தர முன்வந்துள்ளனர். நமது பலத்திலாவது, அவினாசிகளுக்குச் சந்தேகம் பிறக்கக் கூடும்- அந்த ஆயிரமாயிரம் தமிழர்களின் பலத்திலே, சந்தேகம் பிறக்காது என்று நம்புகிறோம்- ஏனெனில் அவர்களின் பலம்தான். அவினாசி களை ஆளவந்தார்களாக்கிற்று. ஆங்கிலரை ஓட்டிற்று.- ஏகாதிபத்யம் அமைத்திருந்த எண் ணற்ற இடையூறுகளைப் பொடிப் பொடி யாக்கிற்று. அவர்கள், காங்கிரசின் மூலபலம்! அந்த `மூலபலம்' இன்று, ஆளவந்தார்களின் அட்டகாசத்துக்குப் பராக்குக் கூறிக் கொண்டிருக்க மறுக்கிறது. ஆண்மையை இழக்க மறுக்கிறது. அறப்போரில் ஈடுபடத் துடிக்கிறது, அவினாசியாருக்கு இந்தச் செய்தியை அர்ப் பணிக்கிறோம்.

மகாமேதை- காந்தீய ஸ்லோகங்களுக்கு விதவிதமா பாஷ்யம் கூறும் பண்டித சிரோமணி, குல்லூகபட்டர் என்றெல்லாம், புகழ் பெற்ற ஆச்சாரியார், இந்தக் கட்டாய இந்தியைத் திணித்து, தமிழரின் உள்ளத்தை மிதித்ததால், ஏற்பட்ட எதிர்ப்பு, அப்படிப்பட்ட அசகாய சூரனையே, என்னென்ன சொல்லச் செய்தது என்பதை, அவினாசியார் அறியார்.

``புற்றிலிருந்து ஈசல் கிளம்புவது போலிருக் கிறதே! எங்கிருந்து வருகிறார்கள். இந்தத் தொண்டர்கள்'' என்று பேச நேரிட்டது. அந்தப் பேரறிவாளர் பேசினார்- பேசினாரா! பிரலாபித் தார்!
``இந்தச் சனியனுக்கு இவ்வளவு எதிர்ப்புக் கிளம்பும் என்று தெரிந்தால், இதைத் துவக்கியே இருக்கமாட்டேனே!'' என்று அழுதார்.

கையில் கிடைத்ததைக் கொண்டு அடிப்பேன் என்று கர்ஜனை செய்து பார்த்து விட்டு, இவ்வண்ணம் கதறினார்.

கிரிமினல் சீர்திருத்தச் சட்டத்தைப் பிர யோகப்படுத்திப் பார்த்து விட்டு, இப்படிப் பேசினார்.

`விடுதலை', `குடி அரசு', `சண்டே அப்சர்வர்', ஆகிய இதழ்களுக்கு `ஜாமீன்' கட்டச் சொல்லி, உத்தரவிட்டுப் பார்த்துவிட்டு, இதுபோலக் கை பிசைந்து கொண்டு கதறினார்.

விடுதலை ஆபீசைச் சோதனையிட்டுப் பார்த்துவிட்டு இந்தி எதிர்ப்பு நிலையத்தைப் பிரித்துப் போட்டுப் பார்த்துவிட்டு, இந்தி எதிர்ப்பு முகாமிலேயே பேதமூட்டிப் பார்த்துவிட்டு, கடைசியில் ஆச்சாரியார் அழுகுரலில்தான் பேச நேரிட்டது. ஆச்சாரியார் அந்நிலை அடைந்தார் என்றால், அவினாசியார், தனக்கு எந்நிலை ஏற்படும் என்பதைச் சற்று சிந்திக்க வேண்டும்.

அன்று, நாம் இந்தி எதிர்ப்புக் கிளர்ச்சி நடத்தியபோது, ஏதோ அரசியல் சூழ்ச்சி என்று கூறினோர் உண்டு, கூறிடக் கொஞ்சம் ஆதாரமும் கிடைத்தது, ஏனெனில், அப்போது நமக்கு இந்த அரண்மனைவாசிகளின்- ஆகா வழிகளின் தொடர்பு இருந்தது- தொடர்புதான்- தோழமை அல்ல! அரண்மனைவாசிகளின் தொடர்பு இருந்த தற்குக் காரணம்- அப்போது நாம் தனியாக, திராவிடர் கழகமாக, விளங்கவில்லை. நமது தலைவரின் தளராத உழைப்பைத் தர்பார் சுந்தரர்கள் தங்கள் தன்னலத்துக்காகப் பயன் படுத்திக்கொள்ள, தந்திரமிட்டு வந்த காலம், ஜஸ்டிஸ் கட்சியிலே சீமான்களும், துரைமார் களின் செல்லப் பிள்ளைகளும், இருந்து கொண்டு, தியாகரும், நாயரும் அமைத்த கொள்கையை வெறும் கேலிக் கூத்தாக்கி, கட்சியை, அரசியல் கழைக் கூத்தாடிகளின் கொட்டகை ஆக்கி வைத்திருந்த காலம், நமது தலைவருக்கும், இயக்கத்தின் முக்கிய உறுப்பினர்களுக்கும், ஐஸ்டிஸ் கட்சியின் நிர்வாகக் கூட்டத்திலே, இடம் அளிப்பதையே ஏதோ பெரிய மனது வைத்துச் செய்கிற பெரிய உபகாரம் என்று எண்ணி இறுமாந்திருந்த காலம்.

அந்தத் தொடர்பு, நம்மை வேறு கட்சியினர் அலட்சியமாகக் கருதவைக்கவே உதவிற்று. சீமான்களின் மோகனப் புன்னகையை நம்பக்கம் சில சமயம் வீசுவர் கொள்கையைப் பற்றிய திட்டம் என்றாலோ, எள்ளும் கொள்ளும் அவர்கள் முகத்தில் வெடிக்கும். காங்கிரசை எதிர்க்க ஓர் படை திரட்டித் தயாராக வைத்திருப் பதாக, துரைமார்களிடம் கூறி சுய இலாபம் தேடிக் கொள்வதொன்றே அரண்மனையில் அரசியல் நடத்திய அந்த அபூர்வ மனிதர்களின் அந்தரங்க நோக்கம். அப்படிப்பட்டவர்களிடம் `தொடர்பு' என்றால், இலட்சியவாதிகள் நம்மைப் பற்றி ஏளனமாகத்தானே கருதியிருப்பர். ஆனால் நம்மை ஏளனம் செய்பவர்கள், அறியார்கள். நாம் ஏற்படுத்திக் கொண்டிருந்த அந்தத் தொடர்பு, அரண்மனைக்கும் பார்ப்பனரல்லாதாரின் பெயரால் நிறுவப்பட்ட கட்சிக்கும் உள்ள `தொடர்பை' சேதம் செய்ய, என்ற சூட்சுமத்தை, அந்தத் தொடர்பு இருந்த காலத்திலே நாம் நடத்திய அறப்போர் கண்டே தமிழகம் ஆச்சரியமுற்றது, இன்று! அந்தத் `தொடர்பு' இல்லை! அன்று நம்மிடமில்லாத, அரிய திட்டங் கள் இன்று உள்ளன. அன்று அந்தத் தொடர்பைக் கண்டதால் நம்மிடம் சேரமறுத்த இளைஞர்கள் இன்று பலப்பல ஆயிரவர் பரணி பாடுகின்றனர். படை வரிசையில் கூடுகின்றனர். அரண்மனைக் காரருக்கு ஒரு தீவிரத் திட்டம் தீட்டுவதென்றால் திகில்! கிளர்ச்சி என்றால் கிலி! போராட்டமென் றால் பீதி! காருண்ய மிகுந்த சார்க்காருக்கு வினயமாக விஷயத்தைக் கூறி வந்த காலம்- அது மலை ஏறிப் போய்விட்டது- அந்தக் கறையை, தாளமுத்து நடராஜனின் இரத்தத்தைத் கொண்டு கழுவிச் சுத்தப்படுத்தியாகிவிட்டது. இப்போது நாம் மக்கள் மன்றம் அமைத்திருக்கி றோம்- மகத்தான போராட்டங்களை நடத்தும் மனப்பண்பும் தியாக உணர்ச்சியும் கொண்ட தோர் அணிவகுப்பைத் தயாரித்திருக்கிறோம். எனவே, திருச்செங்கோட்டார், டில்லி உயர் தேவதையாகிவிட்ட அளவு, காங்கிரசின் பலம் வளர்ந்துவிட்டது என்று. வெளிக்குத் தெரியும்; அதேபோது, கூர்ந்து நோக்கினால், ஆர அமர யோசித்தால், நமது பலம், வளர்ந்திருக்கும் அளவும் வகையும், ஜொலிப்பிலே, காங்கிரசை விடக் குறைவு என்ற போதிலும், தாங்கும் சக்தியிலே, காங்கிரசை விட அதிகம் என்பது நன்கு விளங்கும்.

ஒரு இலட்சியத்தைப் பெறுவதும், அதனை ஈடேற்ற, எத்தகைய தியாகம் செய்யத் தயாராகி விடுவது என்ற உள்ளம் உரம் பெறுவதென்பதும், சாமான்யமான காரியமல்ல, அந்தச் சாதனையில் நாம் வெற்றி பெற்றிருக்கிறோம்.

நாம் ஓர் தனி இனம்- தன்னலக்காரரின் சூழ்ச்சியினால் தாழ்ந்து போனோம். நாடாண்ட இனம், எனினும் நயவஞ்சகர்களிடம் சிக்கி நசித்துப் போனோம் என்பதை அறிந்து கொண்டோம்.

நாம் கூறுவதுபோல, திராவிட இனம் என்று கூறிக்கொள்ள, மனம் இல்லாத சிலபலரும் கூட, தென்னாட்டவர்- தென்னிந்தியர்- தமிழர்- என்று பலப்பல பதங்களைக் கூறிடுவர். ஆனால் பாதையோ, ஒன்றுதான். திராவிட இனத்தின் மார்க்கத் துறை ஆரியரிடமும், அரசியல் டில்லியிலும், பொருளாதாரம் பம்பாயிலும் பிணைக்கப்பட்டிருப்பதை, நாம் கூறி, தனி அரசு கோருகிறோம்- திராவிட நாடு திராவிடருக்கு என்று பேசுகிறோம். அந்த அளவுக்கு முறைக்கும் வரமறுக்கும் பலர், வடநாட்டவருக்கு இங்கு வாணிபத் துறையிலே ஆதிக்கம் வளர்ந்து வருவதைக் கண்டு வருந்தி, இது ஆகாது என்று தான் பேசுகின்றனர். தனிநாடு கோரவில்லை என்ற போதிலும், வடநாட்டாரின் இந்தப் பொரு ளாதார ஆதிக்கம் கூடாது என்று கூறாமலில்லை.

வடநாட்டின் நோக்கமெல்லாம், இந்தியா- இந்திய தேசியம்- இந்திய கலாச்சாரம் என்ற வாய் வேதாந்தம் பேசிக் கொண்டே திராவிடத்தை- தென்னாட்டை, வெறும் விவசாய நாடாகவும், மூலப் பொருள்களை உற்பத்தி செய்து வெளியே அனுப்பிவிட்டு, வெளியார் தயாரித்து அனுப்பி வைக்கும் `பொருள்களை' வாங்கி உபயோகிக்கும் மார்க்கட்டாகவும் செய்வதுதான் என்பதை இப்போது, நமது கழகத்திலே மட்டுமல்ல, வேறு பல இடங்களிலே, வட்டாரங்களிலேயும் உணருகிறார்கள்- விசாரப்படுகிறார்கள்- ஒரு சிலர் வெளியே எடுத்துக்கூற வெட்கப்பட்டுக் கொண்டும் உள்ளனர்.

கிழக்கிந்திய கம்பெனியின் கால முதற் கொண்டு நேற்று வரை, சீமைத் துரைமார்கள் எப்படி இந்திய பூபாகத்தைப் பட்டிக்காடாகவும், பருத்தியை ஏற்றுமதி செய்துவிட்டு ஆலை ஆடைகளை இறக்குமதி செய்யும் இளித்தவாயர் வாழும் இடமாகவும், புண்ணாக்கை அனுப்பிவிட்டு சாக்லெட்டாக இறக்குமதி செய்து, ஆஹா! என்ன இனிமை! எவ்வளவு மணம்! என்று கூறிடும் கருத்தற்றோர் நிரம்பிய இடமாகவும் அந்தப் பூபாகத்தை ஆக்கி வைத்தார்களோ, அதேபோல இப்போது வடநாட்டார், திரா விடத்தை நடத்தி வருகிறார்கள். இந்த உண்மை மறைக்க முடியாத அளவுக்கு இன்று வெளிச்ச மாக்கப்பட்டுவிட்டது.

பெரியசாமித்தூரன்- மிகவும் அமைதி யான உள்ளம் படைத்த காந்தீயவாதி- `ஈரோட்டு வாடை பட்டுக் கெட்டுப் போனவரல்ல' அவினாசியாரின் ஆத்மார்த்த நண்பர்களிலே ஒருவராம்- அவர் நடத்தும் `காலச் சக்கரம்' எனும் இதழில், வடநாட்டவரின் பொருளாதார ஏகாதிபத் யத்தைப் பற்றிக் கட்ட்டுரை வெளிவருகிறது என்றால், இந்த உண்மை, மறைக்க முடியாத அளவு வளர்ந்து விட்டது என்றுதானே பொருள்.

``யுத்த காலத்திலே வெள்ளையர் சம்பந்தப் பட்ட கம்பெனிகளை ஆரம்பித்தால் அதிக சலுகைகள் பெறலாம் என்ற நம்பிக்கையுடன் சர் ஆர்.தேஷர்டலால் என்பவர் ஒரு டாடா- பிர்லா திட்டத்தைத் தயாரித்தார். அதன் விளைவாகப் பெரிய ஆபத்து இந்தியாவின் பொருளாதாரத் துறையிலே ஏற்படும் நிலைமை உண்டாகியிருக்கிறது.

சில உதாரணங்களை எடுத்துக் கொள் வோம். பிரிட்டனிலிருக்கும் `மாரிஸ்' என வழங்கப் படும் கார்களை உற்பத்தி செய்யும் நப்பீல்டு பிரவும் இந்தியாவிலிருக்கும் பிர்லா என்னும் பிரபல முதலாளியும் சேர்ந்து ஆரம்பித்திருக்கும் ஒரு ஸ்தாபனம் இந்துஸ்தான் மோட்டார் கம்பெனி என வழங்கப்படுகிறது. இதில் சுமார் 100-க்கு 25 சதவிகிதம் நப்பீல்டு பிரவுக்குப் பங்கு இருப்பதாகப் பம்பாயில் வெளியாகும் ப்ரீபிரஸ் ஜர்னல் என்னும் பத்திரிகையின் வாயிலாகத் தெரிய வருகிறது. இந்தக் கம்பெனி `இந்துஸ்தான் டென்' என்னும் கார்களை உற்பத்தி செய்வதாகும். இந்தியாவிலே செய்யப்படும் முதல் கார் இதுதான் என்று பல பத்திரிகைகளிலே நாம் பார்த்தோம். ஆனால் `காமர்ஸ்' என்னும் பத்திரிகையிலிருந்து இந்தக் காரின் முக்கியமான உறுப்புக்களெல்லாம் இங்கிலாந்திலிருந்து நமது தேசத்துக்கு இறக்குமதி செய்யப்படுகின்றன என்பதும், அவைகளை ஒன்று சேர்த்துக் காரை ஓடும் நிலைமைக்குக் கொண்டு வருவதுதான் இந்தியாவில் நடக்கும் மோட்டார்த் தொழில் என்பதும் தெளிவாகிறது. ஆகையால் `இந்துஸ்தான்' என்னும் பெயரைத் தவிர இந்தியாவில் உற்பத்தி செய்யப்பட்டது மேற்படி காரில் ஒன்றும் இல்லை என்பது தெளிவாகிறது.

இரண்டாவதாக, சாய உற்பத்தித் தொழிலை எடுத்துக்கொள்வோம். இம்பீரியல் கெமிகல்ஸ் என்னும் பெயர் எல்லோருக்கும் தெரியும். அது சமீபத்திலே டாடா கம்பெனியாருடன் ஒரு ஒப்பந்தம் செய்து கொண்டிருக்கிறது. அந்த ஒப்பந்தப்படி அந்தக் கம்பெனி உற்பத்தி செய்யும் சாயங்கள் இந்தியாவில் உற்பத்தி செய்யப்பட்ட தாக விற்கப்படுகின்றன.

இந்தியாவிலே பெரும் பணக்கார முதலாளி களில் ஒருவரான டால்மியாவை எடுத்துக் கொள்வோம். `டைம்ஸ் ஆப் இந்தியா' என்னும் பத்திரிகையையும் அதை உற்பத்தி செய்யும் சாதனங்களையும் அவர் சுமார் இரண்டரை கோடி ரூபாய் கொடுத்து வாங்கியிருக்கிறார். எனினும் வெள்ளையர்களுடைய ஆதிக்கத்தில் எவ்வித மிருந்ததோ அப்படியேதான் இன்னும் அது இருக்கிறது.

யுத்த காலத்திலே 1942ம் வருஷம் அமெரிக்க டெக்னிக்கல் தூது கோஷ்டி கிராடி யின் தலைமையில் இந்தியாவிற்கு வந்தது நேயர்களுக்கு ஞாபகமிருக்கலாம். அது இந்தியத் தொழில் வளர்வதற்காகக் கூறிய யோசனைகளை அரசாங்கம் ஏற்றுக் கொண்டதாகவே தெரிய வில்லை. ஆனால் 1940ஆம் வருஷத்திலே கிழக்கிந்திய நாடுகளின் பொருள் புலத்தை அதிகரிப்பதற்காகக் கூடிய `ஈஸ்டர்ன் குரூப்' என்னும் மகாநாட்டில், பிரிட்டிஷ் சாம்ராஜ்ய நாடுகளில் ஒரே தொழிலைப்பல நாடுகளில் ஏற்படுத்தித் தொழில் அபிவிருத்திப்பலத்தை வீணாக்காலாகது என்பதைக் காரணமாகக் காட்டி, ஆஸ்டிரேலியா ஆகாய விமானங்களை உற்பத்தி செய்வதால் இந்தியா அவைகளை உற்பத்தி செய்யக் கூடாது என்று தீர்மானித்தார் கள். இவ்விதம் இந்தியாவின் தொழில் அபிவிருத்தியை நசுக்கும் கொள்கையே இங்கி லாந்தின் உயிர் நாடி என்று எண்ணும் பிரிட்டிஷ் வியாபாரக் கூட்டத்தோடு உறவாடி நம் வியாபரத் தில் பங்கு கொடுத்து, நமது வியாபாரத் திட்டத்தை அவர்கள் நிர்ணயிக்கும் அளவில் நமது இந்திய முதலாளிகள் நடந்து கொள்வது மிகவும் வருந்தத்தக்க நிலைமைதான்.

முன்கூறியபடியே, மோட்டர் ஹவுஸ் (குஜராத்) லிமிமெட் என்னும் ஸ்தாபனமும், நேஷனல் ரேயான் கார்ப்பரேஷன் என்னும் கம்பெனியும் ஏற்படுத்தப்பட்டிருக்கின்றன. இவைகளெல்லாம் இந்தியாவின் புதுத் தொழில் களைக் கட்டுப்படுத்தி அந்நியர் ஆதிக்கத்தில் வைப்பதற்கும் இந்தியாவைப் பிற நாட்டுப் பொருள்களுக்கு ஒரு மார்க்கெட் ஆக்குவதற் கும் ஏற்படுத்தப்பட்ட ஸ்தாபனங்கள் போன்றே சேவை செய்ய முடியும்.

இப்புது ஏகாதிபத்தியத்தை ஒழிக்க வேண்டும்.

இவ்விதம், காலச்சக்கரம் கட்டுரை வெளியிடுகிறது.

சுதந்திரப் போராட்டத்திலே ஈடுபட்டிருந்த காரணத்தால், நாங்கள் தமிழகம், தமிழ் மொழி, தமிழ்க் கலை, தமிழ் நாகரீகம் என்பவைகளைப் பற்றிக் கவனியாமலிருந்து வந்தோம்- அக்கறை இல்லாததால் அல்ல, அவகாசம் கிடைக்காததால்- என்பதை இன்று எண்ணற்ற தமிழ் இளைஞர்கள் ஒப்புக் கொள்கின்றனர்.

பிரசண்ட விகடன் ஆசிரியர் போலச் சிலர், கட்டாய இந்தி கூடாது, அதை ஒழிக்கக் கிளர்ச்சி நடத்துவோம் என்று கூறுகிறார்கள். தமிழ் மணி ஆசிரியர் போல், பலர், தமிழகத்தின் தன்மானம் காப்பாற்றப்பட வேண்டும், தன்னலக்காரரின் கொட்டம் அடக்கப்பட வேண்டும். வகுப்பு வாதம் பேசுவது மட்டுமல்ல, செயலில் மும்முரமாகச் செய்துவரும் பார்ப்பனருக்கு ஆதிக்கம் இருக்கக் கூடாது, பதவியில் அமர்ந்ததும், காங்கிரசின் கோட்பாடுகளையே காற்றிலே பறக்கவிட்டு விட்டு, அதன் தூய்மையைக் கெடுத்த கயவர் களிடமிருந்து தமிழகம் மீட்கப்பட வேண்டும் என்று பேசுகின்றனர்.

தேசீயப் போராட்டம் என்ற போர்வைக் குள்ளே புகுந்துகொண்டு காங்கிரசைத் தமது கைப் பொம்மையாக்கிக் கொண்டு, கபட நாடக மாடும் முதலாளிமார்களின் முகாமை முறியடித்து, நாட்டிலே வளர்ந்து வரும் காங்கிரஸ் பாசீசத்தை ஒழித்து, பாமரன் வாழவும், பாட்டாளி மீளவும், சமதர்மம் தழைக்கவுமான திட்டம் தேவை- இத்தகைய திட்டம் தோன்றாதபடி தடுத்து, இலாபக் கோட்டைகள் கட்ட விரும்பும் வடநாட்டு முதலாளித்வ முறை ஒழிக்கப்படத்தான் வேண்டும் என்பதை மதுரை,தமிழ்நாடு போன்ற இதழ்கள் அச்சம் தயை தாட்சணியமின்றி எடுத்து எழுதிக் கொண்டுள்ளன.

இவ்வளவும் ஈடேற தமிழரசு தேவை- எல்லை பற்றி உள்ள தொல்லையைக் கல்லி எடுத்து வீசிவிட வேண்டும், தமிழருக்குத் தமிழரசு வேண்டும் என்று முரசு கொட்டுகிறார், காங்கிரஸ் நடாத்திய சுதந்திரப் போராட்டத்தில் முன்னணி இருந்த நண்பர் ம.பொ.சி.

இங்ஙனம் பலர், பலப்பல அளவு, வருகின்றனர், நாம் தன்னந்தனியே கேலிக்கும், கண்டனத்துக்கும், எதிர்ப்புக்கும் ஏசலுக்கும் இடையே சென்று கொண்டுள்ள பாதையில்!

கற்கள் வீழ்ந்தன- கண்டனச் சொற்கள் வீழ்ந்தன- நமது உடலிலிருந்து இரத்தம் சொட்டிற்று. கண்களிலிருந்து நீரும் சொட்டிற்று- நாம் சளைத்து விடவில்லை- பாதையினின்றும் விலகிவிட வில்லை- கற்கள் விழுவது குறைய லாயிற்று- கற்களை வீசினோர், இப்போது அதோ தமிழ் மொழி, தமிழரசு தமிழ் சோஷலிச அரசு, வடநாட்டு வாணிப ஆதிக்க ஒழிப்பு முறை என்று பலப்பல பகுதிகளில்- நாம் செல்லும் பாதையிலே உள்ள பகுதிகளில்- வரக்காண்கிறோம்- வாட்ட வருத்தத்தை மறக்கிறோம்- வாழ்க நம் தோழர்கள்! வளர்க அவர்தம் ஆர்வம்! என்று கூறுகிறோம்.

அவினாசியார், இந்தத் தோழர்களை, ஒன்று சேரச் செய்கிறார் அவரும் திராவிடர்தானே!

கட்சி வேறுபாடுகளைக் கூடக் கவனிக்க மாட்டார்கள். இந்த, மொழிப் பிரச்சனை பற்றிய கிளர்ச்சியில்- என்று தமிழ் மணி எழுதுகிறது. உண்மை. ஆனால், ஊடுருவிப் பார்த்தால், தமிழருக்குள் இருப்பதாகக் கருதப்படும் கட்சி வேறுபாடுகள், மனப்பிராந்தி, அல்லது நெடு நாட் பழக்கத்தால் ஏற்பட்ட எண்ணம் உண்மை நிலையல்ல- என்பது விளங்கும். பெரியாரின் தூத்துக்குடிப் பேருரை, இதனைத் தெளிவுபடுத்தி யுமிருக்கிறது. அன்றாட அரசியல் பிரச்சனையும் ஆட்சியைக் கைப்பற்றும் பிரச்னையுமல்ல. திராவிடர் கழகத்துக்கு நாட்டுக்கு ஓர் புதிய நிலை- மக்களுக்கு ஓர் புதிய மாண்பு- அரசுக்கு ஓர் புதிய அந்தஸ்து- அவினாசிகளுக்கும் ஓர் அற்புதமான விடுதலை- டில்லியிலிருந்து- படேலிடமிருந்து வடநாட்டு பாசீசத்திடமிருந்து விடுதலை- வாங்கித் தரும் எண்ணம். திராவிடர் கழகத்துக்கு; எனவே, `வேறு வேறு கட்சிகள்' என்ற பேச்சுக்குப் பொருள் இனி இல்லை. இப்போது உள்ளது இரண்டே கட்சிகள்- ஒன்று இந்தியா அரசு என்ற சாக்குக் கூறிக் கொண்டு, இலாப வேட்டைக்காரர்களிடம் நாட்டை ஒப்படைப்போர், ஓர் கட்சி, நாட்டை மீட்டு, நற் பண்புகளுக்கு உறைவிடமாக்கி, மக்களை வாழ வைக்க, அறப்போர் புரியும் மற்ற்றோர்ர் கட்சி; இவைகளே உள்ளன.

இந்த நிலையைத் தெளிவுபடுத்துகிறார். அவினாசியார். தமிழரை அறைகூவி அழைப் பதன் மூலம் கட்டாய இந்தியை நுழைப்பதன் மூலம்.

கடும்போர் மூண்டு விடும் என்பதற்கான அறிகுறிகள், தென்படுகின்றன- தெளிவிருப் பின்- மிச்ச மீதியாவது இருப்பின்- நாடாள வந்தவர்கள், தெரிந்து கொள்ளலாம். காற்றடிக் குது- கடல் குமுறுது என்பார்களே, அந்த நிலை, பிறக்கிறது. இந்திக்குத் தமிழ் நாட்டில் ஆதிக்க மாம்! நீங்கள் எல்லோரும் வாருங்கள் தோழர்களே! என்று புரட்சிக் கவியின் குரலொலி கேட்கிறது. ``மாங்குயில் கூவிடும் பூஞ்சோலை நம்மை மாட்ட நினைக்கும் சிறைச்சாலை!''- என்று எங்கெங்கிருந்தோ, எண்ணற்ற இளைஞர்களின் இருதய கீதம், காற்றிலே மிதந்து வருகிறது. முன்பு ஆண்ட ஆச்சாரியார், `கேளாக்காதினர்' எனவே. காற்றிலே மிதந்து வந்தகானம், தாளமுத்துவின் மனைவியின் தாலி அறுபட்டு, அந்தத் தமிழ் மாது, ஐயகோ! என் கணவனின் உயிர் குடித்தாயே, இந்திப் பேயே! என்று அலறித் துடித்து அழும் அளவுக்கு வளர்ந்தபிறகே அவர் காதில் பட்டது. அவினாசியாருக்குக் கேளாக் காதிருப்பதாக நாம் கேள்விப்படவில்லை. எனவே, தமிழரின்படை வரிசையில் பேச்சுக் கிளம்பும்போதே, நிலைமையை அறிந்து, நடந்து கொள்வார் என்று இன்னமும் நம்புகிறோம்.

மயிலையும், திருவல்லிக்கேணியும், மனோரம்மியமான இடங்கள்- நிமிர்ந்து நடப் போருக்கு- குனிந்து நடப்போருக்கு மிரட்டும் இடங்கள். ஆம்- ஆம்- ஆனால், மக்கள் மன்றம் அங்கு இல்லை! ஆயிரங் கூத்தாடினாலும் காரியத்தில் கண்ணாயிருக்கும் அரசியல் கழைக் கூத்தாடிகளும், யார் ஆண்டாலும் நமது வாழ்வு ஆனந்தமாக இருந்தால் போதும் என்று கருதும் அரசியல் தரகர்களுமல்லர், ஒரு நாட்டின் ஜீவ நாடி! அவினாசியார், அத்தகையோரின் பேச்சைக் கேட்டு, ஏமாறுகிறார். ஆந்தைக்கு அஞ்சி, கிளியைக் கொல்கிறார்! வல்லூருக்குப் பயந்து கொண்டு மாடப் புறாவைக் கொல்கிறார். புலி வேடமிட்டோர்க்குப் பயந்து கொண்டு, புள்ளி மானைக் கொல்கிறார். இந்தி மொழி வேண்டும் என்ற இலாப நோக்குடையார் பேச்சைக் கேட்டுக் கொண்டு, செந்தமிழைச் சீரழிக்கிறார்- தமிழர் செய்யக்கூடாததைச் செய்யத் துணிகிறார்- பத்துப் பாட்டைப் பாடிடும் நாட்டில், செத்த வட மொழிக்குச் சேடியாக இருக்கும் அளவு நிலை பெற்ற, இந்தியைக் கட்டாயப் பாடமாக்குகிறார்- தமிழரின் உள்ளத்தை, அதிகாரக் கோல் கொண்டு குத்துகிறார்- அணைக்க முடியாத பெரு நெருப்பை மூட்டி விடுகிறார்- ஆண்மைத் தமிழரை, அறப்போருக்கு அழைக்கிறார்.

ஆம்! ஆம்! அறப்போருக்கு ஆயத்தமாக இருக்கத்தான் வேண்டும் என்று திராவிடர் கழகத் தலைவர் அறிவித்துவிட்டார்- தொண்டர்களைக் கண்டு பேச வருகிறார்.

ஒதுங்கி நிற்பவர்கள்- அது இல்லை இது இல்லை என்று பேசுபவர்கள் ஆகியோருக் கெல்லாம், சோதனை வருகிறது- போர் வருகிறது. இதிலே தெரிந்துவிடும். சிலர் ஏன் ஒதுங்கினர் என்ற சூட்சமெல்லாம், என்று கூறப்படுகிறது. ஆம்! அறப்போர் தொடுத்தால் தான், சோதனை வந்தால்தான், சூட்சுமம் தெரியும்- நிச்சயம் தெரியும். ஆனால், ``பார்த்தீர்களா பயல்களை! போரில் சேரவே காணோமே'' என்று பிறர் கூறக் கூடிய நிலையில் இளைஞர் எவரும் இருந்து விட மாட்டார்கள்- இலட்சியத்தில் பற்றும், அறப் போரில் ஈடுபட்ட அனுபவமும் கொண்ட எந்த இளைஞரும், இந்தச் சோதனையிலே தவறிவிட மாட்டார்கள். மாறாக, ஒதுங்கியிருந்தது இதனால் தான் போலும்- போர் என்றால் முன்னுக்கு வருகின்றனர்- சீர் வரிசை பெறுவதற்கு வராது போயினும்கூட, போர் என்றால், அழைப்புக் கிடைக்காமலும், வருகிறார்கள்- என்று கூறும் படியான நிலையில்தான், எந்த இளைஞனும் நடந்து கொள்வான். இதை அறப்போர் தொடுத்த தும், அறிந்து கொள்ளலாம்.

ஒதுங்கி நிற்பவர்கள்- வேறு இடத்தில் இருப்பவர்கள்- எதிர்பாராத இடங்களிலிருந்து வந்து சேருபவர்கள்- என்று இம்முறையிலே, படை வரிசை விரிவடையும், பலமடையும். போர் என்றால், ஆட்சியாளர்கள் அந்த அற்புதக் காட்சியைக் காண வேண்டும். தடை செய்யப் பட்ட `போர் வாள்- தடை செய்யப்பட்ட `இராவண காவியம்' திணிக்கப்படும் `இந்தி' இவைகளுக் கெல்லாம் ஒரே பதில்தான் உண்டு- அறப் போர்! அறப்போர்!

இந்த ஆட்சியாளர்கள், தமக்கு யாரும் எதிர்க்கட்சி இல்லை என்ற எண்ணத்தால் இறுமாந்துள்ளனர். உண்மையும், அவ்வித மாகவே இருக்கிறது- எதிர்க்கட்சி இல்லை. சட்ட சபையிலேயே, தூங்குபவர்களைத் தட்டி எழுப்பக் கூட ஆள் இல்லை- அந்த அளவுக்கு நிலைமை ஆகிவிட்டது. கம்யூனிஸ்டுகளையோ வேட்டையாடி ஒழித்து விடுவது என்ற அகில உலகத் திட்டத்தின்படி, இங்கேயும் ஏறக்குறைய அடக்கியாகி விட்டது. பாட்டாளிகளுக்கும், உழவர்களுக்கும் பகல் பட்டினியும் இராப் பட்டினியும் மாலை நேரத்தில். காமராஜ்- சர்தார் வேதரத்னம் ஆகியோரின் உபதேசமும் இருந்து வருகிறது. போலீசும், பட்டாளமும் இருப்பது போதாதென்று. புதிய புதிய அவசர சட்டமும், போட்டு ஆட்சியாளர்கள், புதிய பலம் தேடிக் கொண்ட வண்ணம் உள்ளனர்.

பாமர மக்களிடம் பயமும், பாசமும் ஏற்படுத்தி முக்கியமான பிரச்னைகளை மூடி வைக்கத் தந்திரம் செய்து, காஷ்மீரைக் கவனி, நிஜாம் போகிற போக்கைக் கவனி!- என்று கூச்சல் குண்டுகளை வீசுகின்றனர். காஷ்மீர்ர் பிரச்னை கலக்கத்தையும், நிஜாம் போக்கு கவலையையும் தருவது உண்மையானால், இவைகள் முன்னால் இருக்கும்போது, ஏன், மூலையில் கிடக்கும் இந்தியைக் கொண்டு வந்து வைத்துக் கொண்டு கூத்தாட வேண்டும். முக்கியமான பிரச்னை களைக் கவனிக்க வேண்டாமோ!

போதுமான அரிசி இல்லை- கேட்டால், மக்காச் சோளம் தின்னு என்கிறார் மந்திரியார்.

ஏனய்யா அரிசி கிடைக்கவில்லை என்று கேட்டால், மழை இல்லை என்று கூறுகிறார் காங்கிரஸ் தலைவர்.

ஏனய்யா மழை இல்லை என்று கேட்டு, முதலமைச்சர் தாமாகவே ஓர் விசித்திரமான காரணமும் கூறிவிட்டார். ஒழுக்கம் இல்லை, எனவே மழை இல்லை- இது முதலமைச்சரின் வாயிலிருந்து உதிர்ந்த முத்துகள். முதலமைச் சராக இருப்பானேன்- எங்காவது மூலைக் காளிக் கோயிலிலே பூஜாரியாக அமரலாமே இப்படிப் பட்ட இலட்சணமான பதில்களுக்கு அங்கு நல்ல மதிப்புக் கிடைக்குமே என்று கூறத் தோன்று கிறது. ஆனால் ஓமந்தூரார் ஓரளவுக்குத் திராவிடப் பண்புடன் உள்ளவர் என்று கூறுகிறார் களே என்ற எண்ணம் வந்து, நம்மைத் தடுக்கிறது. கேட்க, எதிர்க்க யாரும் இல்லை, யார் துணிந்து கேட்டாலும் அடக்கிவிடச் சட்டமும், சட்டம் தரும் ஆயுதமும் இருக்கிறது, பாமரரைப் பசப்ப, பத்திரிகை பலம், இருக்கிறது. என்ற காரணத்துக் காக, இவர்கள் எப்படி வேண்டுமானாலும், ஆண்டு கொண்டிருப்பது, அனைவரும் நாமென்ன செய்வது என்று இருந்துவிடுவது என்று நிலைமை வளர்ந்தால், அதற்குப் பெயர், பாசீசம்தானே! பாசமும், பயமும் ஒன்று கூடினால் பிறப்பது பாசீசம் - அது பாமர மக்களைப் பாழ்படுத்தும் நஞ்சு. நம்மை அந்த நஞ்சு கொல்லாமுன்னம் நாம் அந்த நஞ்சினை நசுக்கியாக வேண்டும். பக்கிங்காம் கர்னாடி ஆலைத் தோழர்களை, அந்தப் பாசீசம் படாத பாடுபடுத்திற்று. தலைவர் திரு. வி.க.வை, அந்தப் பாசீசம் வீட்டிற்குள் அடைத்து வைத்தது. கோவைத் தொழிலாளர்களின் கும்பியில் நெருப்பைத் கொட்டிற்று. அந்தப் பாசீசம் உழவர்களின் உள்ளத்தில் ஓராயிரம் ஈட்டிகளைச் சொருகுவது போலத் தொல்லை தந்தது அந்தப் பாசீசம். அதன் கொடுக்குகள், இங்கு இல்லை, ஒரு இடத்தில் இல்லை- இந்தியப் பூபாகம் முழுவதும் பரவி இருக்கிறது. ஒரு பத்துக் குடும்பத்தார், இட்டது சட்டம், நினைத்தது நியாயம் என்ற நிலைமை ஏற்படுத்திவிட்டது. சமதர்மத்தை, சம உரிமையைக் கேலிக்குரிய பேச்சாக்கி விட்டது. புல்லை வீசி விட்டோம் கீழே. இனி வாளை எடுத்திடுவோம். என்று வறட்டுத் தலையரும் கூவிடும் நிலை பிறந்தது எதனாலே! செத்த வடமொழிக்கு, சிங்காரிப்புகள் நடப்பது எதனாலே! ஆரிய நாகரிகம் அகிலமெல்லாம் பரவுக என்று முன்ஷி கூறியது எதனாலே! ஓமந்தூராரும் ஈரோட்டாரின் கையாள்தான் என்ற பித்தர் சிலர் பேசத் தொடங்கியது எதனாலே! சென்னைக் காங்கிரஸ் மந்திரிசபை, காங்கிரசின் கொள்கைக்கே மாறாக நடக்கிறது என்று மேலிடத்துக்குச் சாடிசொல்லச் சிலர் கிளம்பியது எதனாலே! இவை, யாவும் ஒரே காரணத்தி லிருந்து கிளம்பும் பலரகமான நிலைமைகள்- அந்தக் காரணம்தான், நாட்டிலே வளர்ந்துள்ள பாசீசம். பாசீசத்தை நாடாள விட்டு விட்டு, புதுமைகளாக வீடுகளிலே இருப்பதை விட, சிறைகளில் வாடுவதும், வேலாயுதங்கள் போல மரக்கிளைகளில் தொங்குவதும்கூட, விடுதலை விரும்பிகளுக்கு, மேலானதாகத் தோன்றும் அவினாசியார். இத்தகைய மன எழுச்சியை ஊட்டுகிறார்- அறப்போருக்கு அழைக்கிறார்.

(திராவிட நாடு - 4-7-1948)