அறிஞர் அண்ணாவின் கட்டுரைகள்


அரசியல் ஆகராதி! சிவராமன் புதிய வெளியீடு!
தேச பக்தர்கள் என்றால் காங்கிரசார்தான் காங்கிரஸ்காரர்கள் மட்டுமே தேச மக்தர்களாக இருக்கமுடியும். காங்கிரசில் சேராதவர்கள் யாவரும் தேசத் துரோகிகள்.

இவ்விதம், ஒரு ஆகராதி இருக்கிறதல்லவா - ஆர்வத்தினால் அவசரத்திலே தயாரிக்கப்பட்ட ஆகராதி! - இது சரியில்லை - எப்படியோ, மக்கள் இந்த முறையிலே எண்ணவும் பேசவும் பழகிவிட்டனர்.

தேச விடுதலைப் போரைக் காங்கிரஸ் ஸ்தாபனம் நடத்திவந்ததால், அதைச் சேர்ந்தவர்கள் யாவரும் தேசபக்தர்கள், மற்றவர்கள் யாவரும், தேசத் துரோகிகள் என்று மக்கள் எண்ணினர். இனியும் மக்கள் அவ்விதம் எண்ணிக் கொண்டிருக்கக்கூடாது - அது தவறு. காங்கிரசின் கோட்பாடுகளிலே சிலவற்றை அனுசரிக்க முடியாமலும், நியாயமாகவே கருத்து வேறுபாடு கொண்டும் சிலர் அந்த ஸ்தாபனத்தில் சேரவில்லை. ஆனால், அதற்காக அவர்களைத் தேசத்துரோகிகள் என்று கூறிட முடியாது - கூறக்கூடாது - அப்படிக் கூறியே பழக்கப் பட்டிருந்தாலும்கூட, இனியாவது அதனை விட்டுவிட வேண்டும்.

நாட்டு விடுதலை கிடைத்துவிட்டது - ஆகவே இனித் தேசபக்தி என்பதற்குப் புதிய பொருள், கோட்பாடு, ஏற்பாடாகவேண்டும்.

நாட்டுச் சேவை நோக்குடன் உள்ள நிர்வாக அலுவல்கள், ஐதோ ஓர் குறிப்பிட்ட அரசியல் கட்சியினருக்கு மட்டுமே உரிமை உள்ளவை என்று குறுகிய நோக்கம் கொள்ளக்கூடாது. திறமைசாலிகள் யாராக இருப்பினும் எங்கு இருப்பினும், எந்தக் கட்சியேயாயினும், அவர்களின் சேவையை நாட்டுக்குப் பயன்படுத்திக் கொள்ளவேண்டும்.

எங்கே, எப்போது, சர். ஏ. இராமசாமி முதலியார் இதுபோலப் பேசினார்? என்று கேட்கத் தோன்றும் உங்களுக்கு. ஆனால், ஆச்சரியத்தைக் கேளுங்கள், மேலே வெளியிட்டிருப்பது, அவருடைய பேச்சல் சி.ஆர். ரெட்டியார் ஊரையுமல்ல - பாரிஸ்டர் இரத்னசாமி பேச்சல்ல - லிபரல், ஜஸ்டிஸ், முதலிய கட்சியினரின் பேச்சுமல்ல.

அப்படியா! அவர்கள்தானே, இது போலப் பேசுவர் - நிர்வாக காரியத்துக்குத் திறமை வேண்டும் - தேச பக்தி என்பது ஒரு கட்சிக்காரருக்கு மட்டுமே ஏகபோக உரிமையல்ல, தேசபக்தி என்றால் ஒரு குறிப்பிட்ட கட்சியிலே உள்ளவர்களுக்கு மட்டுந்தான் ஏற்படும் உன்னத எண்ணம் என்று நினைப்பது தவறு - என்றெல்லாம் அவர்கள்தானே பேசுவர். அதைப்போன்ற பேச்சாகத்தானே இருக்கிறது நீ மேலே குறித்திருப்பது யார் அவர், இவ்விதத் தெளிவுரையை, குடிஅரசுக் கோட்பாட்டைக் கூறியவர் என்று கேட்பீர்கள் இவலுடன்.

தினமணி ஆசிரியர் ஸ்ரீசிவராமனின் பேச்சு இது - இமாய்ய ஆம்! ஜ÷லை 2ந் தேதி சென்னைச் சிந்தாதரிப்பேட்டையிலே, பேசியிருக்கிறார் இதுபோல.

“அமெரிக்கா போய் வந்தது வீணாகவில்லை, சார்! பாருங்கள், வழக்கமாகக் காங்கிரஸ்காரர்கள் பேசுகிற முறைப்படி இல்லாமல், தேசபக்தி, காங்கிரசல்லாதாருக்கும் உண்டு. அவர்களிலே திறமைசாலிகள் பலர் உள்ர் - அவர்களை மக்கள் தூஷிக்கக்கூடாது என்றெல்லாம் அறிவுரை புகன்றிருக்கிறார் - இது அமெரிக்க நாட்டு வாசத்தால் அவருக்கு உண்டான ஜனநாயக உணர்ச்சிதான் என்று கூறவும், பாராட்டவும் தோன்றும், எனக்குத்தான் அவ்விதமான எண்ணம். ஒரு விதத்தில், ஓரளவுக்கு, அமெரிக்கப் பயணம், இந்த அறிவுரைக்குக் காரணந்தான். புதிய ஆகராதி - அல்லது ஆகராதியிலே உள்ள தேச பக்தி என்ற பதத்துக்குப் புதிய பொருள், எழுதும் அளவு, முன்னேற்றம் ஏற்பட்டது. வரவேற்கக் கூடியதுதான். பண்பு மலருகிறது என்று எண்ணியும் மகிழலாம். ஆனால்...?

“ஆனால்... ஏன் சார்? ஏன் இழுக்கிறீர்கள்?” என்று கேட்பீர்கள்.

சிவராமனாரின் புதிய பதிப்பு ஆகராதி. இந்தச் சமயம் வெளிவர வேண்டிய அவசியம் என்ன, என்பதைக் கொஞ்சம் சிந்திக்கும்போதுதான், அமெரிக்கா அல்ல, ஆசமயம், சந்தர்ப்பம், அவரை அவ்விதம பேசவைக்கிறது என்று நான் எண்ணுகிறேன்.

நிர்வாகத் திறமை-சட்ட அறிவு-சர்வதேசத் தொடர்பு-ராஜதந்திரம்-அரசியல் நுணுக்கம் - தொழில் திறம் - இன்னோரன்ன கொண்டவர்கள் காங்கிரசுக்கு வெளியே உள்ளனர். ஏராளமானவர்கள். அவர்கள் எல்லாம் திராவிடர் கழகமுமல்ல! ஆழ்வாராதிகளைக் கவனப்படுத்தும் அரிய திருநாமதாரி சர். இராமசாமி. கலை ஆர்வத்தில், டி.கே.சி.யுடன் போட்டியிடும் அளவு, புது இடம் பிடித்துக் கொண்ட சர். சண்முகனார், கத்தோலிக்க மார்க்கத்தின் காவலர் போன்ற இரத்னசாமி, தொழில் நிபுணத்திலே டாட்டாக்களை ஒத்த ஜி.டி. நாயுடு, இன்னோரன்னவர்கள் உள்ளனர் - காங்கிரசல்லாதார்.

சிவராமனின் புதிய - ஆனால் சீரிய யோசனையின்படி, இவர்களைக் காங்கிரசில் இல்லை என்ற காரணத்துக்காகத் தேசபக்தி ஆற்றவர்கள் என்று கூறுவோர், அவர்களுடைய சேவையைப் புறக்கணிக்கவே கூடாது. ஆனால், நடந்தது என்ன? நடைபெற்றுக் கொண்டிருப்பது என்ன? இனியும் நடைபெறப் போவது என்ன? இந்த நிபுணர்கள், நிந்தனைக்கு ஆளாகாமல், நாட்டின் நிலையை உயர்த்தும் நற்பணி புரியும் இடமும் வாய்ப்பும் அளிக்கப் பெறுவரா? சிவராமனின் வெளியீடான புதிய ஆகராதி முறைப்படி, இது நடைபெறவேண்டும் - ஆனால், காரியத்திலே இது நடைபெறாது!! ஏன்? இங்குதான் சூட்சமம் இருக்கிறது. நண்பர் சிவராமனின் ஊரை, இனி, இவ்விதமான தலைவர்களை நாட்டுப் பணிக்கு அமர்த்தவேண்டும், அவர்களைத் தேசத்துரோகிகள் என்று தூற்றக்கூடாது, என்று புதிய திட்டம் வகுத்திடும் பேச்சல் - எதிர் காலத்துக்குத் திட்டமல்ல - நிகழ்கால நடவடிக்கை ஒன்றுக்கு, நண்பர் சிவராமனின் ஆதரவு தரும் வாதம் இது.

தேசபக்திக்கு உறைவிடம், காங்கிரசே என்று பேசப்பட்டு, அதிலே சேராதவர்கள் ஐசப்பட்டு வந்த நாட்களிலே, பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தின் தூண்களாக, அடக்குமுறையை அகமகிழ்வுடன் பிரயோகிப்பதில், ஜெனரல் டயர சீடர்களாக இருந்த, பல பார்ப்பனப் தலைவர்கள், இப்போது தேசபக்தர்களின் இரத்தத்தால் மெழுகப்பட்ட ஆட்சிமுறை அமைப்புகளிலே, நிபுணர் மன்றத்திலே, நிர்வாக நிலையங்களிலே, ஜாம் ஜாமென வீற்றிருக்கிறார்கள் - விடுதலைச் சாசனம் தயாரிக்கிறார்கள், அரசு அமைக்கும் அரும் செயலில் உடுபட்டிருக்கிறார்கள். அரசியல் நிர்ணய சபையிலே, சர். கோபால்சாமி ஐயங்காரும், சர். ஆல்லாடி கிருஷ்ணசாமி ஐயரும், மற்றும் சில பார்ப்பனத் தலைவர்களும், வீற்றிருக்கிறார்கள் - நமது நண்பர்கள் காக்கன, முனுசாமி, ஆழகேசன் போல, கண்டுபிடிப்பவருக்கு ஆயிரம் ரூபாய் இனாம்! என்று விளம்பரம் வெளியிடவேண்டிய நிலையிலா? அல்ல! அல்ல! - அகில இந்தியாவும், ஆச்சரியப்படும் படியான அந்தஸ்துப் பெற்று - கமிட்டிகளிலே, பொதுமன்றத்திலே, எதிலும், எப்போதும் ஏக்களிப்புடன்!

இவர்கள் காங்கிரசல்லவே! கஷ்ட நஷ்டம் பட்டறியார்களே! சட்டத்தினூடே என்னென்ன சந்து பொந்துக்கள் உண்டு என்று தேடிப்பார்க்கும் குணாளர்களாயிற்றே, ஊ;புபக் காய்ச்சியபோது இவர்கள் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தின் ஊலைக்கூடத்திலே அடக்குமுறைக்கான கருவியைத் தமது திறமை எனும் தழலில்போட்டுக் காய்ச்சி அடித்துக் கூராக்கினவர்களாயிற்றே, பூர்ணசுயராஜ்யமா? நான்சென்ஸ்! நடக்குமா? ஆகிம்சையா? செச்சே! பைத்யாகரத்தனமல்லவா? ஆர்டினென்ஸ்சா? ஆமாம். அதற்கு அதிகாரம் உண்டு சட்டப்படி, என்று இம்மொழிகள் பேசிவந்தவர்களாயிற்றே, இவர்கள் காங்கிரசல்லாதார் மட்டுமல்லர், ஏகாதிபத்திய தாசர்கள், பட்டம் பதவிகளில் புரண்டவர்கள், சொத்து சுகம் என்பதையே குறியாகக் கொண்டவர்கள்.

இப்படிப்பட்ட காங்கிரஸ் வைகரிகள், தேசத்துரோகிகள், இடுப்பொடிந்தவன், இருமலால் நொந்தவன், கரமிழந்தவன், கண் இழந்தவன், கஷ்டநஷ்டப்பட்டவன், ஆகிய பல்வேறு வகையான கஷ்டம் அனுபவித்த காங்கிரஸ்காரர்கள் இருக்க, அவர்களை எல்லாம் தாண்டிக்கொண்டு, மேலான இடத்தில், உயர்ந்த பீடத்தில், நாட்டின் எதிர்காலத் திட்டத்தை உருவாக்கும் பணியிலே, முக்கிய புருஷர்களாவதா? இது தர்மமா, நியாயமா? இதையும் நாங்கள் கண்டு சகிக்கத்தான் வேண்டுமா? என்று இப்போது சில காலமாக, சோகமும் சீற்றமும் கலந்து குரலில், மனவேதனையுடன், காங்கிரசிலே உள்ள திராவிடத் தோழர்கள் குமுறிக் குமுறிக் கேட்கின்றனர், தியாகத் தீயிலே விழ நாங்கள், வெளிச்சம் போட்டுத் திரிய அவர்களால் ஆகுமா இந்த ஆக்கிரமம்? காங்கிரசார் நாங்கள் இருக்க, கபடத்தாலோ, கருத்தற்ற தன்மையாலோ, ஏகாதிபத்தியத்துக்குத் தாசர்களாய்த், தேசத் துரோகிகளாய் இருந்து வந்தவர்கள், எப்படி, இந்த இடத்தில் ஆமரலாம்? என்று ஆத்திரமும் அழுகுரலும் கலந்தபடி கேட்கலாயினர். கொஞ்சம், கலக்கம் ஏற்பட்டது.

உண்மைதானே! கேட்பதிலே அர்த்தமிருக்கிறதே - நியாயமுந்தானே? எப்படி அவர்கள் மேலிடத்தில் அமர்ந்தனர் - என்று சிந்தனையில் குழம்பிற்று - செந்தேள் கொட்டுவது போலிருந்தது. பதை பதைத்த காங்கிரஸ திராவிடர்களின் கேள்விகள் பாபம்! அவர்களின் மனம் பதறாமல் இருக்க முடியாதல்லவா? காங்கிரசில் இல்லை, வேறு கட்சி நடத்துகிறார், சர்க்காரில் வேலை பார்க்கின்றனர், என்ற காரணத்துக்காக, அவர்கள் இராமசாமிகளை, சண்முகங்களை, எவ்வளவு கடுமையாகக் கண்டித்துள்ளனர் - பழி சுமத்தியுள்ளனர் - எத்தனை முறை முழக்கமிட்டிருப்பர், தேசத் துரோகிகள் - நாட்டைக் காட்டிக் கொடுப்பவர் ஒழிக, ஒழிக என்று, அவ்விதமாகப் பேசிய போது, அதே குற்றத்தை, இன்னும் கொஞ்சம் அதிகமாக, மேலும் கொஞ்சம் பச்சையாக, அவர்களை விடச் சற்றுத் தைரியமாகச் செய்து வந்த, சர். கோபாலசாமிகள், ஆல்லாடிகள் ஆகியோரையும் கண்டனர் - கண்டனத்துக்குரிய கும்பலிலே இவர்களும் சேர்ந்தவர்களே, என்று கூறினர். ஆனால், இன்று, ஆல்லாடிகள், கோபாலசுவாமிகள், காங்கிரஸ் தலைவர்களுக்கு வழி காட்டுவேராராக, அவர்களின் புகழ்ச்சிக்கும் பூஜைக்கும் உரியவர்களாக உள்ளனர் - இதையும் காண்கின்றனர் - கண்ணெனும் புண்கொண்டு, சீற்றமும் சோகமும் பீறிட்டு வராதா?

வரட்டுமே சார், தாராளமாக வரட்டும், கேள்வி கேட்கட்டும், கவலை வேண்டாம். இதோ நான் இருக்கிறேன் - என்று ஒரு குரல் கிளம்புகிறது. கலக்கமடைந்த முகாமிலிருந்து. ஓஹோ! நம்ம சிவராம்! வாப்பா! சௌக்யந்தானே இத்திலே... உபய குசலோபரி நடக்கிறது.

காங்கிரசல்லாதவர், எப்படி உன்னதமான பதவிகளிலே இருக்கிறார் என்பதைத்தானே இதுகள் கேட்கின்றனர். கேட்கும், நாம், முன்பெல்லாம் சொல்லிண்டிருந்தோú, காங்கிரசிலே இல்லாதா, யாராக இருந்தாலும் சரி, மேதாவியாகக் கூட இருக்கட்டும், எங்களுக்கு ஆவா, அனாவசியம் - ஆவாளெல்லாம் தேசத் துரோகிகள்தான் - என்று பேசினோமே, அதனால், ஏறின இவேசம் இதுகளை ஆட்டிவைக்கிறது. அதனாலேதான், நம்ம சர் ஆல்லாடி, ஆவாளுடைய இன்றைய நிலையைக் கண்டு இதுகளுக்கு, ரோஷமும் கோபமும் குத்திண்டு வர்ரது என்கிறார் சிவராமர்.

இமா! அதேதான். ஆனா, சிவராமா! இந்த மனக்கொதிப்பு, ஏதேனும் தொல்லையா வந்து முடியுமோ? என்னா, கொதிப்படைந்திருப்பவா, ஜஸ்டிஸ்காரா அல்ல, காங்கிரசிலே உள்ள திராவிடாளன்னோ என்று ஸ்ரீஜத் சஞ்சலம் கேட்கிறார். கவலையே வேண்டாம் கொஞ்சம் புதிய உபதேசம் தேவை, செய்தால், இதுகள் தானாக அடங்கிவிடும், என்கிறார் சிவராம்.

நம்ம சிவராம் சொன்னால் சரியாக இருக்கும்டா! இல்லாமலா, கோயங்கா, சிவராமை அமெரிக்கா அனுப்பிவைத்தார் என்று ஸ்ரீஜத் சஞ்சலமே கூறிவிடுகிறார்.

பிறகு, ஆரம்பமாகும் சத்கதா காலட்சேபந்தான், சிவராமனின் தெளிவுரை - தேசபக்திக்குப் புதிய பொருள், திறமை உள்ளவர்களை உபயோகிக்க வேண்டியதன் அவசியம், இத்யாதி, இத்யாதி.

ரத்னச் சுருக்கமாகக் கூறவேண்டுமானால், கோபால்சாமி முதலான ஆரிய உத்தமர்களை, காங்கிரசல்லாதவர் என்ற காரணத்துக்காக, நிந்திக்கப்படாது, கேள்வி கேட்கப்படாது, மதிப்புக் குறைவாப் பேசப்படா, ஆவா, மேதாவிகள், சகல சாஸ்திர விற்பன்னா, ஆவாளுடைய சேவை நாட்டுக்குத் தேவை - ஆவா சாமான்யாளல்ல - ஆரிய சிரேஷ்டாளன்னோ! - என்பது தனமணி சிவராம் ஐயர்வாளுடைய அபிப்பிராயம் இதற்குத்தான் இதோப தேசம் அமெரிக்கா அல்ல இசான், அந்தப் பரம்பரைப் பண்பு!

(திராவிடநாடு - 3-8-47)