அறிஞர் அண்ணாவின் கட்டுரைகள்


அறிமுகப்படுத்துகிறேன்
அடிபறை! கொட்டு முரசு! ஊதுசங்கு! முழங்கு நாதசுரம்! கொண்டுவா பூர்ணகும்பம்! தெளிபன்னீர்! சூட்டுங்கள் புஷ்பஹாரம்! எடுங்கள் ஆரத்தி! முகூர்த்த வேளை தவறுமுன் முடிசூட்டுங்கள்! ஜெயகோஷம் செய்யுங்கள்! மங்கள ஸ்நானம் செயதுவிட்டுப் பொன்னாடை உடுத்திப் பணி அணியுடன் பவனிவரும பார்த்திபனுக்குப் பாராக்குக் கூறுங்கள்! பட்டத்தரசனாக அவர் இஷ்டப்பட்டுவிட்டார், இனிப்பயமில்லை துயரில்லை, வாழ்புக்கு வளமில்லையே என்ற கிலியுமில்லை, அவர் வாயுரையே ஓர் வரப்பிரசாதம், புன்னகையோ புதுவிருந்து, கைகுலுக்கினாலே மெய்சிலிர்க்கும்! மேதினி அறிந்த மேதாவி! மேலை நாடறிந்த அனுதாபி! அவரைப் பெறுவோம் அகமகிழ்வோம்! அயர்வு போகும், ஆண்மை மிகும், இடர் ஒழியும், ஈடற்ற பேறு கிடைக்கும், உயர்வுமிகும், ஊக்கம் பிறக்கும், எங்கும் வெற்றி, எது நமக்கு இனிக்குறை, ஐயம் வேண்டாம், ஒன்று படுவோம், ஓட்டுவோம் பகையே, ஔவை மொழி எனக்கொள்வீர் இதனை, அஃதே நமது வழி என அறிவீர்! என்று இன்று பல்லாண்டு கூறிக்கொண்டு சினம்பும் பலம்பொருந்திய கேசரிகளும், பக்குவமுணர மறுக்கும் பகலவப் பார்வையாளர்களும், திக்குமுக்காடித் திசைகொருவராக ஓடிடும் நாள் இருப்பதைத் தெரிந்து கொள்ளாமல், திறந்த வாயிலிருந்து பிறந்தவைகளைத் சேற்றினைக் கரத்திலெடுத்து மேனியில் பூசிக் கொண்டு சந்தன வாடை மணக்குது பாரீர் என்று கூறித் திரிகிறார்களே, நல்ல மனிதர்களுக்கு ஏனோ பாசம் மிகுந்து, என்னைச் சில கூறிடத் தூண்ட, நான், கூற என்ன இருக்கிறது. அவர்கள் அறியாமையால் கூறுவதாக இருப்பின் உண்மையை அறையலாம். குறைமதியினராக இருப்பின் அதனை நிறையாக்கச் சில முதுமொழி பெய்யலாம்.

அப்படி அவர்கள் அறியாதார் அல்லவே! அவர்களுக்கு நான் கூற என்ன இருக்கிறது என்ற சோகம் மிகுந்திடவே, நிலைமையின் காரணமாக நெஞ்சுக்கு நஞ்சு புகுத்திக்கொண்டு, வஞ்சக வலையில் சிக்கி தர்பாரில் தஞ்சமடைந்த பஞ்சசைகள் போல அவர்கள் ஆனனார்களே என்று ஆயாசப்பட்டு, அவர்களை அவர்களே உணரவும், அவர்கள் முன்னாளில் பலர் உணர உரைத்திட்ட அறிவுரையையே, அவர்கட்கு நினைவூட்டி அவர்களை நல்வழியிலே சேர்த்து வைக்கவும் இன்று முயலுகிறேன். நோய் முற்றாதிருக்குமானால் இம்முறை பயன் படக்கூடும். முற்றிப் பேயிருந்தால் வீரம் பூரம் தரத்தான் வேண்டும், அது பிறகு இது முதலில்! வயிறு தாங்கா அளவு உண்டு வலிகொண்டு புரளும் வைத்தியருக்கு, பிறர் வலி போக்க அவர் வகையுடன் தயாரித்த மாத்திரைகளில் இரண்டொன்றை இழைத்துத தரும, மருந்தரைக்கும் கூட்டாளிபோல இதைச் செய்கிறேன், வைத்தியரின் வலிபோகச் செய்யும் இந்த உதவிக்குக் கைமாறு எதிர்பார்க்கவில்ரலை, மாறாக நிந்தனையைத்தான் பெறுவோம் என்பதும் தெரியும், தெரிந்துமே இதைச் செய்கிறேன், தெளிவு இல்லாததால் அல்ல, அவர்கள் என் தோழர்கள் என்பதை இன்னமும் நான் மறவாததால்!

பரதா! ஏன் பதைக்கிறாய்! பீடிகையைப் பலமாகப் போடுகிறாய்! என்ன சேதி? எவர்மீது தாவா? - என்று கேட்கத் துடிக்கும் தோழர்களுக்கு. சேலம் மாநாட்டின் எதிரொலியால் கிலி பிடித்துக்கொண்டு அலையும் சில கதியிலிகள் எண்டே அவர்களுக்குக் கொடிபிடிக்கத் தமிழரின் படை நடத்துமளவு பலமும் பயிற்சியும் பெற்ற நம் நண்பர்களிலே சிலர், இசைந்தது கண்டால், கோபமும் சோகமும் மிகுந்திடாதா! புலிமீது எலி சவாரி செய்தால் எப்படி இருக்குமோ அது போலன்றோ இருக்கிறது. புதுத் தலைவர்கள் என்போர் பழைய ஜஸ்டிஸ் கட்சியின் குட்டையில் ஊறின மட்டை என்றுபெருமையுடன் விருது கூறிக்கொண்டு வாழ்ந்த வீரர்களைப் பறை அடிக்கவும் கொடி பிடிக்கவும், பாதந்தாங்கவும் பராக்குக் கூறவும் பெற்றிருககும் விந்தை! எந்தச் சொக்குப் பொடியினால் எனதருமைச் சிங்கங்களுக்கு இந்தப் பங்கப்படும் நிலை உண்டாகிவிட்டதோ தெரியவில்லையே! ஏங்குதே என்மனம், தூங்குதே அவர்களின் ரோஷம். என்னே பரிதாபம்!! பெரியாரினால் விளைந்த பெருங்கேடுகளைப் பெருமதியினர், பெரிய இடத்தில் கூடிப் பெரியதோர் முயற்சி செய்றார்கள்! இப்பெரியார்கள் செய்யும் பெருஞ் செயல் பலவும் சிறியராகிய நாம் சிந்தித்து வியாகூலமடைய வேண்டிய விஷயமல்ல. அவர்கள் அதுவும் செய்வர், மேலும் செய்வர்; ஆனால் எதனையும் அரைத் தூக்கத்திலே செய்வர், ஆகவே ஆரம்பம் அடாணாவாகவும், முடிவு முகாரியாகவுமே இருந்திடும. எனவே அது பற்றிநாம் நித்திருக்கத் தேவையில்லை, ஆனால் அவர்களின் பேச்சை நம்பிப் பெருங்கேட்டினத் தமக்குத் தாமே தேடிக்கொள்ளும் நண்பர்களை எண்ணியே நான் விசனிக்கிறேன்.

அரசனாக இருப்பதைவிட அரசர்களை அரசாட்சியிலே அமர்த்தும் ஆற்றலுள்ளவராக இருப்பது போற்றதலைப் பெறவழி. பொன்மாளிகை பெற்றுப் போக போக்யித்திலே புரண்டுகொண்டு இந்த மன்னன், என் சிருஷ்டி, இவன் முடியைப் பெற்றது எனது திறமையினாலேதான்! முடியுடடை மன்னன் என் கைப்பிடியிலே இருக்கிறான் என்று பெயரமையுடன் பேசிக்கொண்டு இருக்கவேண்டுமென்பதிலே சிலருக்குப் பிரேமை உண்டு. ஒரு சிலருக்கு அந்தநிலை கிடைப்பதும் உண்டு . . ! சில சமயங்களிலே தட்டுத் தூக்கும் தாதிக்குக் கூடத் தரணி ஆளம் வேந்தன் தாசனாவதுண்டு. ஒரு அதரம் அரசுகளை ஆக்கிடவும் அழித்திடவும் காரணமாக இருந்ததுண்டு. ஆனால் அந்த நிலை ஜொலிப்பது போலவே, ஆளைத் தீய்த்து விடவும் காரணமாக இருந்திருக்கிறது. அரசாட்சியிலே ஒருவனை அமர்த்தும ஆற்றல் பெற்றவன், அந்த அரசனாலேயே அழிக்கப்பட்டதுமுண்டு. அங்ஙனம் அழிக்கப்பட்டு அழுதவர் கதையை ஆள்தேடி ஆசனத்திலே அமர்த்த ஆவல் கொள்ளும் அன்பர்களுக்குக் கூற ஆசைப்படுகிறேன். ஆளை இன்று தேடுவதன் பலன், நாளைக்கு அவர் தம் தாளின் கீழ் சிக்கி நசுக்குண்டு போவதாக இருக்குமே, இதனை அறியாது ஏன் இவர்கள் ஆள்தேடி அரசராக்கும் வேலையிலே இறங்குகிறார்கள், பாவம், அந்நாளிலே, அரசுக்கு ஆள் இல்லாவிட்டால், அரண்மனை யானையிடம், மாலை கொடுத்து அனுப்புவராம், யானை ஊர் சுற்றுமாம், நாடு திரியுமாம், எவனாவது ஒருவன் கபதிதிலே மாலையைப் போடுமாம், அவனை அரசனாகக் கொள்வாராம் அந்நாட்டார். அனால் யானையின் உதவியாலேதானே அரசு பெற்றோம் என்று அந்த மன்னன் கரியின் காலைக் கும்பிட்டு வாழமாட்டான். சமயம் கிடைக்கும்போது, அதன் மீது அமர்ந்து அங்குசத்தால் அதனை அடக்குவான், வேற்று வேந்தனுடைய போரிடப் போகும் சமயத்திலே அதே வேழத்தின் உடல் வேறு தலை வேறாவதுமுண்டு அரசு தேடிக் கொடுதததாயிற்றே என்று அந்த யானைக்கு ஆலயம் கட்டுவதில்லை யாரும், அதுபோலத் தலைவர் பதவிக்கு இன்னவரைக் கொண்டுவரவேண்டும் என்று எண்ணமிடுக் கால்கடுக்கச் சுற்றினால் பலம் பின்னப்படுமே தவிர பரிபாலனம் பீடத்திலே ஏறம் பாக்கியமோ, கடைசிவரை அடப்பந் தாங்கும் பதவியோ கூட இருக்குமென்று கூற முடியாது, ஆள் தேடிகள் பாடு அவ்வளவு ஆபத்தானது.

Warwickc The king maker. வேந்தரை உண்டாக்கும் வார்விக், என்றோர் வீணன் இருந்தான் ஆங்கில நாட்டிலே முன்பு, ஆறாம் என்றி என்பவனுக்கும் நாலாம் எட்வர்டு என்பானுக்கும், பிரிட்டிஷ் ஆட்சி வியமாகப் போட்டி. இதிலே நுழைந்தான் வார்விக் சீமான். தனது ஆற்றலால் எட்வர்டுக்கு அரசு கிடைக்கச் செய்தான். அரசனாக்கும் ஆற்றல் படைத்தோன் என்ற அடைமொழி பெற்றுச், சீமான்களின் சீராட்டுதலுக்கும் பாராட்டுதலுக்கும் மயங்கிக் கிடந்தான். பவார்விக்கின் வசீகர வாழ்க்கை, கடைசி வரை இருந்ததாக இல்லை. எந்த எட்வர்டு அரசனாவதற்கு, வார்விக் கச்சையை வரிந்து கட்டி வேலை செய்தானோ அதே எட்வர்டு, பாய்ந்தான் வார்விக் மீது, வாவிக் 1970 ஆம் ஆண்டு, பிரான்சுக்கு ஓடினான்! முடிதரித்த மன்னன் என்பிடியிலே இருக்கிறான் என்று பெருமை பேசியவனுக்கு, இக்கதி கித்தது. இச்சை தான் பொல்லாத நச்சரவாயிற்றே, இதன் கடியினால் விஷம் ஏறிப்போயிருந்த வார்விக், தனது அரசனாக்கும் வேலையை நிறுத்திக்கொள்ளவில்லை. ஆறாம் என்றியின் மனைவி, மார்கரேட் எனும் மாது, பிரஞ்சுக்காரி, அவள அடுத்தான், உன் கணவனை மன்னனாக்குகிறேன் என்ற கூறினான். மீணடும் போர்மூண்டது, எட்வர்டு தோற்றான், என்றி பட்டத்துக்கு வந்தான் என் திறம் எப்படி! என்று எக்காளமிட்டான் வார்விக்! இந்த வாழ்வு நிலைத்ததா? இல்லை! அடுத்த ஆண்டிலே அங்கில நாட்டுக்கு வந்தான் எட்வர்டு! போர் மீண்டும்! 1471 - ஆம் ஆண்டு (க்ஷயசநேவ) பார்னட் என்ற களத்திலே, வார்விக் கொல்லப்பட்டான், பார்னட் களத்திலே என்பதை அறந்தவர், இந்த வீண்வேலையிலே ஈடுபட்டு வேதனை அடைவானேன் என்று விவேகம் பெற்றனர், அந்த நாட்டிலே, பித்தம் பிடித்தவன் என்றி, பேராற்றல் படைத்தவன் எட்வர்டு, இருவரையும் மாறி மாறி ஆதரித்து, தனது ஆதரவால் தான் எவரும் அரசனாக முடியும் என்ற எண்ணத்தை மதுவாகக் கொண்டவன் வார்விக். அந்த மதுமதியை மயக்கிற்று, சீமானையும் மாய்த்தது. இன்று வார்விக் வேலையிலே ஈடுபடுகிறார்கள் நம் நண்பர்களிலே சிலர்! பரிதாபம்!! இங்கே இதுபோது பித்தம் பிடித்த என்றியும் இல்லை, பிடிகேட்கும் எட்வர்டும் இல்லை. என்றாலும், தலைவராக்கும் திறமையைத் தம்மிடம் இருப்பதாகத் தவறாகக் கருதிக்கொண்டு சில வார்விக்குகள் கிளம்பி இருக்கிறார்கள். அவர்களின் நோக்கம், பெரியார் அமர்ந்துள்ள பீடத்திலே சர்.சண்முகத்தை அமரச் செய்யவேண்டும் என்பதாம்! பெரியார் அமர்ந்துள்ள பீடத்திலே, அவரைத் தள்ளிவிட்டு உட்கார, சர்.சண்முகம் ஒப்புவாரா என்ற சந்தேகம் பிறக்கவே, அதற்கோர் யுத்தி செய்து, பெரியார் தமது பீடத்தைக் காலி செய்துவிட்டார், வேறு இடம்போய் விட்டார், எனவே தலைவருக்காக ஒரு ஆசனம் தயாரில் இருக்கிறது, என்று கூறி அழைக்கிறார்கள் சர்.சண்முகத்தை! அவர் அதனை நம்புவதாகவும் தெரிகிறது! அவருக்கு வார்விக் வரலாறு தெரியும்.


இந்த விதித்திர வட்டம்,. கும்பலுக்கு இடங்கெடாத குணாளர்கள் கூட்டம், தெரியவில்லையா, அதுதானய்யா, சேலத்திலே தமது வீரதீர கெம்பீர பராக்கிரமத்க் காட்டி, நிபுணத்துவத்தை தீட்டி, சு.ம.க்களை ஒட்டி, கீர்த்தியை நிலைநாட்டிப் பெரியாரையும் அவருடைய தோழர்களையும் வாட்டி வதைத்து, வெற்றிக் கொடிபிடித்து, வீரத்தம்பட்ட மடித்து, விழாக் கொண்டாடிய வீராதி வீரர்கள் கூட்டம் இருக்கிறதே - இன்னமும் புரியவில்லையா, சரி; சரியாக விளக்குகிறேன். பட்டம் பதவி எனம் புண்ணியங்களை ஏற்க மறுக்கும் மாபாவிகளை முறியடிக்க ஞாயிறு நோக்கிகள் உண்டல்லவா, அந்தக் கூட்டம் சென்னையிலே பிபிரவரியிலே மாநாடு போட்டு, மக்களை இரட்சிக்கப் போசியார்களாம்!! விபூதியும் நாமமும் வேண்டிய மட்டும போடலாம்! வேலுடம் சூலமும வெள்ளி தங்கம் முதலிய எந்த உலோகத்திலும் செய்துவைத்துக்கொண்டு மகனுக்குப் பிடிலும், சீனுவாச ஐயரைக் கொண்டு மகனுக்குப் படிப்பும் சொல்லித்ர அமர்த்தலாம், இராமநவமி கொண்டாடி இரகுபதி ராகவ ராஜாராம் படி, புரோகிதரின் திரப்பாதத்தைத் தலையிலே சூடி, மோச் சாம்ராஜ்யத்திலே முதலிடம் தேடிக்கொள்ளலாம்! எதைச் செய்பவராக இருந்தாலும் ஏற்றுக்கொள்வார்கள்! கொள்கையை மேடைக்கும், வாழ்வுக்கும் வளைவு நெளிவும் வைத்துக் கொண்டுள்ள வசீகரச் சீமான்களும், அவர்களின் புன்னகையிலே சொக்கிக்கிடந்து அங்கத்தை வளர்க்கப் பங்கப்படும சிங்கங்களும், ஒன்று கூடலாம்! ஆணும் பெண்ணும் அலியும் ஒன்றே, அவரவர் செய்கை எவரே கண்டார், என்பது சித்தாந்தம். வருவீர், வருவீர் என்ற கூவுவர், எவரையும்! இவ்வளவு விரிந்த பரந்த மனப்பான்மையுடைய வித்தகர்கள் விமரிசையாகக் கூடி, புதிய தலைவருக்கு முடிசூட்டி, கொடிவிரித்துக் கொட்டு முழக்கடித்து பவனி வரப்போகிறார்கள்
!!
காணக்கண் காட்சியே
கதியற்றாரின் மீட்சியே
காணக்கண் காட்சிய
கண்டவுடன் கைகுலுக்கி
கவனிப்பார் நேர்த்தியே,
கார்விட்டு இறங்கியதும்
களைத்திடுவார் மூர்த்தியே,
காணக்கண் காட்சியே!
என்ற கீதத்தைப் பாட நாடு துடிக்கிறது! விரைவிலே இந்த வீரர் விழாவைக் காண ஆவலாக வெகுபேர் இருக்கிறார்கள்!

மாநாடு கூட்டுமுன்னம், இவர்கள், பெரியாருக்கு நாட்டிலே செல்வாக்கு உண்டா இலையா? என்பது பற்றி விவாதித்திட ஒரு அமைப்புக் கூட்டம் நடத்தினாராம். ஒரு தோழர உரத்த குரலிலே சொன்னாராம், செல்வாக்கு, மகாசெல்வாக்கு! என்னய்யா இருக்கிறது நாயக்கருக்குச் செல்வாக்கு!! ஏதோ இந்த ஜனங்களிடம் செல்வாக்கு இருக்கிறது, அதனால் என்ன! என்று. பணசக்திக்கும் ஜனசக்திக்கும் போட்டிப் பந்தயம் நடத்தவும் இந்தப் பழைய பசலிகள் நிக்கின்ற, அவ்வளவு பரிதபிக்கக் கூடிய அளவு அவர்களின் மதி தேய்ந்திருக்கிறது. நிதி மிகுந்து மதி தேய்ந்திருககும் பேர்வழிகளின் கதி, யாதாகும் என்பதை ஏடுகளிலே அல்ல, நாடு சுற்றினாலேயே தெரிந்துகொள்ளலாம்! தெரிந்துகெள்ள வேண்டியதை விரைவாகத் தெரிந்து கொண்டால் அவர்கள் அவர்கள் வேறு காரியத்திலே விரைவாகத் தெரிந்து கொண்டால் அவர்கள் வேறு காரியத்திலே ஈடுபடலாம். அதற்காகத்தான் அவர்கள் விரைவாக மகாநாட்டைக்கூட்டி விடவேண்டும என்று ஆசைப்படுகிறேன். அந்த அவசரம் அவர்களுக்கும் இருந்து தீரும், யார்கண்டார்கள், இன்று ஏற்பட்டிருக்கும் கூட்டு எத்தனை நாள் நீடிக்குமோ? எந்த விநாடி முறிந்து போகுமோ! எனவேதான் கூட்டு உடையுமுன், குட்டு வெளிப்படும் முன், கூட்டிவிடுங்கள் மாநாட்டை, கேட்டு விடுங்கள் நாட்டுமக்கள் சொல்ல இருப்பதை, என்ற அந்தக் கூட்டத்துக்குக் கூறுகிறேன், விட்ட குறை தொட்டகுறையின் காரணமாக!!

புதுத்தலைவரைப் புனருத்தாரண நோக்கத்துடன் தேடும் இந்தப் புனிதர்களின் போக்கு மிகவேடிக்கையாக இருக்கிறது. ஒரு கட்சியின் தலைவர், சரியாக நடக்கவில்லை என்றால், அவரை நீக்குவதற்கு, அவருடன் போரிடவேண்டும, நேர்முகமாக! கட்சிப்போர் என்றால், காகூவல்ல, காகித வேட்டல்ல, கல்வீச்சுமல்ல! கட்சியிலே பற்றுக்கெண்டவர்களின் மனத்தை மாற்றி, அவரை நீக்கும்படி பிரசாரம் செய்து ஆதரவு தேடிக், கட்சியின் மாநாட்டிலே வந்திருந்து, அங்கு வேறோர் தலைவரைத் தேர்ந்தெடுக்க வேண்டும். இதுவே முறை! ஒருமித்த கருத்திருப்பின், புதுத்தலைவரை, மாநாட்டுப் பந்தலிலே, ஏகோபித்த ஒட்டுகளால் தேர்ந்தெடுப்பதும் பிளவுபட்ட அபிப்பிராயம் இருப்பின், ஓட்டுக்கணக்கெடுத்து, பெரும்பான்மையான ஓட்டு யாருக்குக் கிடைக்கிறதோ அவரைத் தலைவராகக் கொள்வதும், நியாயம் நாணயம்! ஆனால் இவர்களின் நியாயம் இருக்கிறதே, அது மனுவும் மாந்தாதாவும் பொறாமைப் படக்கூடியது! இவர்கள் சொல்கிறார்கள், பெரியார் இப்போது தலைவரல்லர், அவர்கட்சியின் அங்கத்தினரும அல்லர், கட்சிக்கு இப்போது தலைவரே இல்லை, ஆகவே புதிதாகத் தலைவரைத் தேர்ந்தெடுக்கப் போகிறோம் என்று. பெரியார் விரட்டப்பட்டாரா? என்ற கேட்டால், இல்லை, அவராகவே விலகிக் கொண்டார் என்று கூறுகின்றனர். எப்போது? என்ற கேட்டால், சேலத்திலே மாநாடு நடந்ததே அன்று என்று கூறுகின்றனர். சேலத்திலே அவர் தானே தலைமை வகித்தார்? ஆம்! போட்டி உண்டா? இல்லை! பூசல் எழுந்ததா? கிடையாது! அங்கு ஏதேனும் ஆட்சேபனையைக் கிளப்பினீர்களா? இல்லை! மாநாட்டிலே பெரியார், கட்சியைவிட்டு விலகுவதாகச் சொன்னாரா? சொல்லவில்லை! அப்படியானால், அவர் இப்போது கட்சித்தலைவரல்லர் என்று கூறுகிறீரே, அது எப்படிப் பொருந்தும் என்று கேட்டால், அன்று கட்சியின் பெயரை மாற்றிவிட்டார் என்று கூறுகிறார்கள், கீழ்ப்பாக்கத்துக்குள்ளே இருந்தல்ல, வெளியே உலவிக்கொண்டே!

இவர்களின் போக்கைக் குடிஅரசு கண்டிக்க ஆரம்பித்ததும், கட்சியின் கறை போக்கப் புதுத்தலைவர் வருகிறார் என்றும், பெரியாரின் போக்கினாலேயே கட்சி கெட்டுவிட்டது என்றம், கட்சியின் தளபதிகள் பலர் ஒதுக்கிவிட்டதே பெரியார் போக்கின் பயனாகத்தான் என்றும், கூறிக் கவாத்துப் பழகுகிறார்கள். யாரை அவர்கள் தலைவராக்கி, எந்தெந்தத் தளபதிகளின் மேற்பார்வையின் கீழ், கட்சியைப் புனிதப் படுததி, அதனை ஓர் மகத்தான கட்சியாகச் செய்யப் போவதாகக் கூறுகிறார்களோ, அவர்களிடம் கட்சி, இருந்தது முன்பு. அந்த நேரத்திலே கட்சியிலே இருந்தது என்ன? தலைவர்களென்போரின் போக்கு எவ்வண்ணம் இருந்தது? நடவடிக்கைகள் எத்தகைய இலட்சணத்திலே இருந்தன? தொண்டர்களின் நிலைமை யாது? பொதுமக்களிடம் தொடர்பு உண்டா? பிரசாரம் உண்டா? அரசியல் விபசாரம் எந்த அனளவிலே இருந்தது? என்பன போன்றவைகளை எண்ணிப் பார்த்தால் கட்சியைப் பெரியாரே வேண்டாமென்று சொல்லிவிட்டுவிட்டாலும், மறுபடியும், அந்த மகானுபாவர்களிடம் கொண்டுபோய்ச் சேர்ப்பது, மாபாதகம் என்பதை, மனம் கூறும், இனப்பண்பு, அறிவுறுத்தும், ஆனால் அகசரிளும், பகலவப் பார்வையாளர்களும், பிடிவாதமாகக் குருட்டுப் போக்கிலேயே செல்லுவது என்று தீர்மானித்துவிட்டனர், அவர்களின் விழிதிறக்க நான் கூறக்கூடியது, மணிமொழி, என் மொழியல்ல. அவர்கள் நல்ல நினைப்போடு இருந்தபோது நமக்கெல்லாம் கூறியதைத்தான் நான் நல்ல நினைப்போடு இருந்தபோது நமக்கெல்லாம் கூறியதைத்தான் நான் அவர்களின் நினைப்புக் கெட்டிருககிற நேரத்திலே கவனத்திற்குக் கொண்டு வருகிறேன், நட்புமுறை காரணமாக.

ஜஸ்டிஸ் கட்சியிலே ஒண்டவந்த பிடாரி ஊர்ப்பிடாரியை ஒட்டப்பார்த்தது ஜஸ்டிஸ் கட்சியின் பீடை தொலைந்தது - ஜஸ்டிஸ் கட்சியை எதிர்த்துப் பழித்தும் அடுத்துக் கெடுத்தும் வந்தவர் ஒழிந்தார் - இவைபோன்ற வாசகங்களை, எழுதவும், தங்கள் பேனா முனைகள் பயன்படவேண்டிய அளவு இழிநிலை ஏற்படும் என்று அவர்கள் எண்ணியிருக்க மாட்டார்கள். கண்சிமிட்டிக் காலந்தள்ளும் காரிகைக்கு, விடுதி புகும்வரை, விபச்சாரந் தவிர வேற வகையில்லை என்பது தெரியாமல் இருப்பதுபோல! இன்று, ஜஸ்டிஸ் கட்சியின் ஒண்டவந்த பிடாரியாகவும், சனியனாகவும், பீடையாகவும் பெரியார் இவர்களின் கண்களுக்குத் தோன்றுகிறார். அது பெரியாரின் குற்றமல்ல, வெளியனின் விழிக்குத் தந்தைகூட, தாக்க வருபவன் போலத்தான் தெரியுமாம்! இந்த முறையிலே பெரியாரைத் தூற்றுவதன் மூலம், புதுஇடத்திலே புன்னகையைப் பெற விரும்புகிறார்கள் போலும்! புது இடங்ககளில் இப்படிப் பெரியாரைச் சிலர் தூற்றுவதுகேட்டு, இது தமிழ் இசையை விட இனிமையாக இருக்றிது என்ற எண்ணப்படுகிறது போலும்! நிந்தனையைச் சிந்து என்ற ஏற்றுக் கொள்ளும் செவியினரை, நேர்மையாளர்கள் என்று கூற அறிவாளர் மறுப்பர்!

எத்தகையத் தலைவர்களை ஏத்தி ஏத்தித் தொழுவோம் யாமே - என்று இன்று பாடுகிறார்களோ, அதே தலைரவர்களிடம், ஜஸ்டிஸ் கட்சி ஒப்படைக்கப்ட்டிருந்தது ஒரு காலத்தில், அதனால் பயன்பெற்ற பூமான்களும் சீமான்களும், கட்சியை மறந்து கெள்கையை இகழ்ந்து வாழ்வு ஒன்றையே பெரிதென மதித்துத, தொண்டர்கள் துயருறப் பொதுமக்கள் திகைக்க, எதிர்க்கட்சியினர் ஏளனம் செய்ய, இவ எதுவும் எம்மை ஏதும் செய்யாது என்ற இறுமாந்து கூறிக்கொண்டிருநதனர் முன்னாளில். அந்த நேரத்திலே, பெரியாரும அவருடைய தொழர்களும் (அந்தத் தோழர்கள் கூட்டத்திலே இருந்தவர்கள்தான், இன்றைய ஜுடாஸ்கள்) - கரைந்துபோதும் கட்சிக்குக் காப்பளிக்க முன் வந்தனர். அந்தத் தொடர்பு, பிறகு தலைமைப் பதவியைப் பெரியாருக்கு அளித்தது. அந்தத் தொடர்பு, பிறகு தலைமைப் பதவியைப் பெரியாருக்கு அளித்தது. இது நடந்தது. ஆனால், பெரியார், பொப்பிலியிடம் தவங்கிடந்து தலைமைப் பதவியைப் பெற்றதாகவும், பெற்ற பிறகு அதனைத் தமது பிடியிலே இறத்திப் பிறருக்கு இடமின்றிச் செய்து கெடுத்ததாகவும், இனி அவரை ஒழித்துப் பிறருக்கு இடமின்றிச் செய்து கெடுத்ததாகவும், இனி அவரை ஒழித்துப புதுத்தலைவரைப் பிடித்து அவர் மூலம் கட்சியின் கொடியை வான் முகடுவரை உயர்த்தப் போவதாகவும் கூறுகிறார்கள். இதிலே பிரதான புருஷராக, பிரதிஷ்டா மூர்த்தியாக, புனருத்தாரண கர்த்தாவாக, சர்.சண்முகத்தை இருக்கச் செய்யப் போகிறார்களாம். எந்தச் சண்முகத்தை?

இதோ ஓர் படத்திறப்பு விழா! பெரியாரால் அழுக்காக்கப்பட்ட பீடத்தைத், தமது சேவை எனும் அபிஷேகத்தால் பரிசுத்தப் படுததப் போவதாகப் பிரகடனப் படுததப்பட்டுள்ள சர்.சண்முகத்தை, மக்கள் காண வேண்டாமா, அதற்காக இந்தப் படத்திறப்பு விழா!!

இப்போது கொச்சி திவானாக இருக்கிறாரே சர்.சண்முகம் செட்டியார், அவரை எடுத்துக் கொள்ளுங்கள் (ஏன் விழிக்கிறீர்கள்? அவர் விஷயத்தில் கூடக் குற்றம் கண்டுபிடிக்க வந்துவிட்டேனே என்பதுதானே உங்கள் முகமபாற்றத்தின் காரணம்?) பாவம், அவர்மீது தப்பு இல்லைதான் பொதுவாழ்க்கையில் ஈடுபட்டதிலிருந்து அவரது சொந்தப் பெட்டியிலிருந்து சல்லிக்காசு கூட எடுத்துச செலவு செய்து பழக்கமில்லை. மாகாண சட்டசபை மெம்பர், மந்திரிக்குக் காரியதரிசி, ஒந்திய சட்டசபை மெம்பர், சட்டசபை மெம்பர், மந்திரிக்குக் காரியதரிசி, இந்திய சட்டசபை மெம்பர், இந்திய சட்டசபை டிப்டி பிரசி டெண்ட், இந்திய சட்டசபைத் தலைவர், ஆஸ்திரேலியா பிரயாணம், ஜினிவா பிரயாணம், ஒட்டவா பிரயாணம்! அப்புறம் வேறு என்ன வேண்டும்? இவ்வளவுக்கும் படிச் செலவு சர்க்கார் மூலம் பொதுக்காசு! இப்படி இருநதவர், ஒரு வருமானமுமில்லாமல் கையைக் கட்டிக் கொண்டு குடம்பச் சொத்தைத் தின்ற கொண்டிருக்க மனம் வருமா? அதனால்தான் அவரது அதிர்ஷ்ட தேவைதை அதெம்பிளி எலக்ஷனில் தோல்வியை உட்க்கிக், கொச்சி திவானாகத் தூக்கி வைத்து விட்டது.

இப்படி இவர் திவானாகப் போனதுதான் கட்சி விஷயத்தில் மகாமோசமாகப் போய்விட்டது. கூட்டல், பெருக்கல், கழித்தல் வாய்பாடு கணக்குப் போட்டுப் பார்த்ததில் சர்.சண்முகம் செட்டியார், கொச்சி சமஸ்தான திவான் பதவியிலிருப்பது, நம்முடைய மனுஷாளும் ஒரு உயர்ந்த பதவியிலிருக்கிறார் என்று பெருமையடித்துக் கொள்ள சந்தர்ப்பங்கிடைத்தரைத் தவிர அவர் அந்த உத்தியோகத்துக்குப் போனது கட்சிக்குப் பெரிய நஷ்டமாகும். நம்மைப் போன்றவர்கள் இப்படிப்பட்டவர்களுக்கெல்லாம் உத்தியோகம் கிடைக்காதபடி விஷமக் கிளர்ச்சி செய்தால்தான் இனிக் கட்சிக்கு ஷேமமுண்டாகுமென்பதைச் சர்.சண்முகம் நிரூபித்து விட்டார்

தலைவராக்கப்பட வேண்டிய சர்.சண்முகத்தின் உருவப்படத்திறப்பு விழா நடந்தேறிவிட்டது. பணத்திலே அக்கரை, பதவிமேல் பதவி பெறும் வழக்கம், பதவி பெற்றதும் கட்சியை மறக்கும் பண்பு, இத்தகைய அலங்கார பூஷிதர், அருமைத் தலைவர் சர்.சண்முகம்.
சரி, உருவப்படத்தைத் தீட்டியது யார் பரதா! என்று கேட்கிறீர்கள்? நான் தீட்டுவேனா! நம்மைச் சண்முகம் மறந்தாலும் துறந்தாலும் நாம் சண்முகத்தைப் பழிப்பதைத் தீட்டியவன். நகரதூதன் பத்திரிகையிலே கேசரி என்ற புனைபெயருடையார், பேனா சர்த்தனம் என்ற தலைப்பிலே 19.04.36 லே, தீட்டிய உருவப்படம் இது. எந்த நகரதூதன், எந்தக் கேசரி இப்போது, பெரியாரைப் ழுடை என்ற கருதி எழுதும் நகரதூதனா, குடி அரசு நிருபரின் ஈனத்தனம் என்ற கண்டித்து எழுதும் கேசரியா என்றா கேட்கிறீர்கள். சாஷாத் அதே கேசரிதான், அதே தூதன் தான்! அன்று சுயமரியாதைத் தூதனாக இருந்தது போய், இன்று சுகமரியாதை தேடுவோரின் தூதனாக வந்திருக்கிறார், என்னால் அண்ணனென்று அன்புடன் அழைக்கப்பட வேண்டிய இடத்திலே இருந்த கேசரி!
எந்தக் கேசரிக்கு எந்தச் சண்முகம் ஒர் சுயநலக்காரராகத் தோன்றினாரோ, அ கேசரிக்கு, அதே சண்முகம், துஷ்ட் நிக்ரஹ சிஷ்டபரிபாலனார்த்தம் ஜஸ்டிஸ் கட்சித் தலைவர் எனும் புதிய அவதாரமெடுக்கப் போகும் புண்ணிய மூர்த்தியாகக் காணப்படுகிறார். நாம் அன்றும் சர். சண்முகத்தைக் கண்டித்ததில்லை. இன்றும் அவரைப் புனருததாரணத் தலைவராக அவதரிக்கக் கூறவில்லை. சர்.சண்முகத்தைத் தலைவராக்கு முன்னம், கேசரி, எந்தச் சண்முகத்தைத் தலைவராக்குகிறோம் என்பதைத் தெரிந்து கெள்வதும, சர். சண்முகம் தலைவராவதற்கு முன்பு எந்தவிதமான தோழர்களின் முயற்சியால் தலைமையைப் பெறுகிறோம் என்பதை உணருவதும், இருசாராருக்கும் நல்லது. எனவேதான் நாம் சர் சண்முகத்துக்குக் கேசரியை அறிமுகப்படுத்தி வைக்கிறோம்!

நகரதூதன் ஆசிரியர் நண்பர் அழுகுமலை அண்ணன் (திருமலைசாமி) பீபிள்ஸ் பார்ட்டி என்னும் ஜனநாயகக் கட்சியிலே இருந்தாரே, அந்த நேரத்திலே, ஜஸ்டிஸ் கட்சியைக் கண்டிக்க வேண்டிய நிர்ப்பந்தத்துககு ஆளாகி, ஒரு வேளை இதுபோலச் சண்முகத்தைச் சாடினாரோ என்ற சந்தேகிக்கிறீர்களா? அந்தச் சந்தேகம் அவண்டாம். இது நகர தூதன் ஜஸ்டிஸ் கட்சியின் ஆதரவாளனாக இருந்து கொண்டிருக்கையிலே ஜஸ்டிஸ் கட்சி உருப்படுமா என்ற தலைவிலே, கேசரி தீட்டியக் காரசாரமான கட்டுரையிலே காணக் கிடப்பதுதான் என் கைச் சரக்கல்ல. அவ்வளவு களை பிடித்தல்ல என்கரம்!
கேசரிக்கு ஏதோ கோபம் போலும் சர்.சண்முகத்தின் மீது தனிப்பட்ட முளையில், அதனால்தான் உருவப்படத்தை இப்படித் தீட்டினார் என்று சமாதானப்படுததிக் கள்வதற்கில்லை. சர்.சண்முகத்தை மட்டுமல்ல. பேனா நர்த்தன மேடையிலே நாம் காண்பது. ஜஸ்டிஸ் கட்சித் தலைவர்கள் சகலரும் இழுத்து வந்து நிறுத்தி வைக்கப்படுகிறார்கள், நண்பர் கேசரியால், இதோ (இன்றுசர்) திவான் பகதூர் இராமசாமி முதலியார், காணுங்கள்!

திவான் பகதூர் ஏ.இராமசாமி முதலியாரோ, மகா சுயநலக்காரப் பேர்வழி,ட கட்சியின் அஸ்திவாரம் தான் என்பது அவரது நினைப்பு, பிராமணரல்லாதார் சமூகத்தில் தன்னைவிடப் பேச்சிலும் எழுத்திலும கெட்டிக்காரர்கள் இருக்கப்படாது என்பது அவரது கவலை. அப்படி இருப்பவர்களையும் அழுத்தி வைப்பதிலே அப்படிப்பட்டவர்களுக்கு ஜஸ்டிஸ் விளம்பரம் அளிக்கப்படாமல் பாதுகாப்பதிலும் ரொம்ப திருஷ்டி! இது ஏன்? வேறு ஒன்றுக்குமல்ல.ங அப்படிப்பட்டவர்கள் மீது ஊரார் கண் திருஷ்டி விழுந்து விடக்கூடாது என்கிற கவலைதான்! வெளியூரிலிருந்து வருகிற கட்சித் தலைவர்களுடனும் அபிமானிகளுடனும் அளவளாவிப் பேசுவதற்கு அவருக்கு லேசில் மனம் வராது. காரணம், வெட்கம் என்றோ கூச்சம் என்றோ நினைக்காதீர்கள். அவரது கர்வம் அது.
இப்படிப்பட்ட மண்டைக் கர்பிகளும் ஜஸ்டிஸ் கட்சித் தலைவர் ஜாப்தாவில் சேர்ந்தவர்களென்றால், கட்சி உருப்படுமா? உருக்குலையுமா? என்ற கேட்கிறேன்.
இந்தப் படத்திறப்புவிழாவை அன்ற நடத்திய கேசரி யின் துணைகொண்டுதான் பெரியாரை ஒழித்து, புதுத் தலைவரை அமர்த்துவிக்கும் புனித கைங்கரியத்துக் க வரவேற்புக் கழகத் தலைவராக இருகக திருவாளர். ஏ.துரைவாமி முதலியார் இசைந்திருக்கிறாராம். சுயநலக்காரர் மண்டைக் கர்வம் பிடித்த பிறரை அழுத்திவைக்கும் இராமசாமியின் மூத்தவர்தான் துரைசாமியார், அண்ணான் தம்பி சண்டையுமில்லை. ஆனாலும், இந்தக் கேசரியின் காரியத்துக்கு இதே துரைசாமியார் உடந்தை! எப்படி இருக்கிறது கூட்டு வாழ்க்கை! கேசரியை நான் துரைசாமி முதலியாருக்கு அறிமுகம் செய்துவப்பது தவறா!

இவ்வளவோடு நிற்கவில்லை ஜஸ்டிஸ் தலைவர்களைப் பற்றிய கேசரியின் குறிப்புகள் இதோ வருகிறார் சர்.பி.டி.ராஜன் அவரையும் பாருங்கள்.

மற்றொரு தலைவரான கனம் பி.டி.இராஜன் அவர்களைப் பற்றியோ சொல்ல வேண்டியதில்லை. இவரைச் சிலர் சாமியார் என்று கூடச் சொல்ல முன்வந்துவிட்டார்கள். காலையில் 10, 11 மணி வரையில் நித்திராதேவி கனம் இராஜன் அவர்களை வெளியில் போக அனுமதிப்பதில்லை. பகல் 1 மணிக்குக் கூட பேட்டி நடக்கும். அப்படியிருநதால் வந்தவர்களின் வயிறு என்னவாகும்? இரண்டாவது மந்திரியும் தமிழ்நாட்த தலைவராயும் இருப்பவர் இப்படிப் பகலையிரவாகவும் இரவைப் பகலாகவும் உபயோகித்து வருகிறார். கட்சி விஷயமாகவும், உத்தியோக தோரணையிலும் கனம் மந்திரியைப் பார்த்துப பேச வருகிறவர்கள் சர்வஜாக்கிரதையாக முன் கூட்டியே லீவ் எடுத்துக் கண்டுவந்தால்தான் பேட்டி தித்திக்கும். இதனால் எத்தனையோ பேர் மனமுடைய நேருகிறதென்பதை அவரால் அறிந்து கொள்ள முடியவில்லை.

இப்படி இராஜனைத் தீட்டிய கேசரி கோஷ்டியார்தான். அதே சர்.பி.டி.இராஜன தங்களோடு இருக்கிறாரென்று பூரிக்கிறார்கள் கோகலே ஹாலில் நடைபெற்ற புனரமைப்புக் கூட்டத்திலே சர்.பி.டி.இராஜன் பிரசன்னமாக இருந்தாரென்று பெருமை பேசிக் கொள்கிறார்கள். சர்.பி.டி.இராஜன், சேகர் பாஷையில் கூற வேண்டுமானால் காலை 11 மணிவரை நித்ராதேவியோடு இருப்பவர், பெரியாராவ்ல பெடுத்துவிடப்பட்ட கட்சியைச் சீராக்க முடியுமென்று அன்று சீறி எழுதிய கேசரி செப்புகிறாரா. அன்று தன்னை இவ்வளவு அலங்கோலப்படுததிக் காட்டிய கேசரிக் கூட்டத்தின் கூட்டுறவு தமக்குப் பெருமையளிக்கக் கூடிய தென்று சர்.பி.டி.இராஜன் கருதுகிறாரா என்பதை அறிந்து கொள்ளத்தான், இவர்களை அறிமுகப்படுத்தி வைக்கிறேன். இனி மற்றோரு தலைவர் (மறைந்துபோன) குமாரசாமி ரெட்டியார் கொலு வீற்றிருக்கும் காட்சியைக் கேசரி கூறக் கேளுங்கள்.

மூன்றாவது மந்திரியான திவான்பகதூர் குமாரசாமி ரெட்டியார் பேட்டி அவ்வளவு கெடுபிடியாகவும் பிரயோஜனகரமாயும் இராதென்பது அனுபவித்தவர்களால் சொல்லப்படும் வார்த்ததை. இவரது வாசஸ்தலமே ஒரு சிறு விவசாய கழனி ஓய்ந்த நேரத்தைப் பேட்டிக்கு பிருதாவாகச் செலவிடுவதை டொமேட்டோ, முள்ளங்கி, கீரை, நூல்கோல் முதலிய இங்கிலீஷ் வெஜிட்டபில்ஸ்களைப் பயிர் செய்வதில் கழிக்கிறாராம் தவிர, எந்தத் தொழிற்சாலையில் இரும்புப் பெட்டிகள் கெட்டியாகவும் விலை குறைவாகவும் தயாரிக்கப்படுகிறதென்ற புள்ளிபோட்டுப் பார்ப்பதிலும் இவரது ஓய்வு நேரம் பயன்படுத்துப்படுகிறதாம். வருஷா வருஷம் தமது சொந்தப் பட்ஜட் தயாரித்துக கொண்டு அதற்குமேல் நிகரவருமானம் போட்டுப் பார்க்கத் தவறுவதிலையாம் இவைகள்தான் இவரது பிரதான வேலை மற்ற கட்சியிருந்தாலென்ன அழிந்தாலென்ன

இப்படிப்பட்டத் தலைவர்களிடமிருந்து ஜஸ்டிஸ் கட்சியை விடுவித்த தீய செயலுக்காகத்தான் பெரியார் மீது கேசரியின் தீப்பொறி கக்கப்படுகிறது. இது என்ன வெட்கக்கேடு! சாதாரணத் தலைவர்கள்தான். இப்படியிருந்து வந்தார்கள் என்று கேசரி எழுதிற்று போலும், கட்சியின் தலைவரை விட்டு விட்டது போலும், என்று கருதவேண்டாம். இதோ, பவனி வருகிறார் பொப்பிலி ராஜாசாகேப்.

இன்று முதல் மந்திரிஸ்தானத்தை வகிப்பவர் கனம் பொப்பிலிராஜா. ஜஸ்டிஸ் வாதிகளம் கட்சி அபிமானிகளம் இவரைப் பார்ப்பதென்றால் குதிரைக் கொம்புதான். இப்பவே ஸ்டாலின் மாதிரியும் ஹிட்லர் மாதிரியும் நடக்க வேண்டுமென்ற ஆசைப்பட்டு விட்டரோ என்னவோ. சாதாரணமாக இந்த மகானுபாவனின் பேட்டியே சித்திப்பதில்லை. பேட்டிக்கு மனுபோட்டு பதிலுக்கும் காத்திருக்க வேண்டும். அப்படிக் காத்திருந்து பேட்டி கொடுப்பதாகச் சம்மதித்தால் தேதியும் நேரமும் அறிவிக்கப்படும். அவ்வாறு அறிவித்த பின்னர் அந்த குறிப்பிட்ட தினத்தில் சுட்டிக்காட்டிய நேரத்தில்தான் ராஜாதிராஜன் ராஜ மார்த்தாண்டன் பொப்பிலிராஜா சாகேபை பேட்டி காணவேண்டும். டெமாக்ரட் அதாவது குடிமக்கள் கட்சி எனச் சொல்லப்படும் தலைவரே குடி தழுவி நடக்கம் யோக்யதை எப்படியிருக்றிது பார்த்தீர்களா?

பார்த்தோம் கேசரியாரே! பதைத்தோம் உம்மைப் போலவே, அதனால் நான் சத்திரத்திலே சாப்பிட்டு ரயில்வே ஸ்டேஷனிலே படுதது கிராமப் புரற்திலே திரிந்து தம்ப் பேட்டி காண மக்கள் வருகிறார்களா என்ற காத்திராமல் தாமாகவே மக்களிடை உலவி ஜஸ்டிஸ் கட்சியை மக்களுக்குத் தெரியச் செய்த பெரியாரின் தலைமைப் பதவியை நாங்கள் போற்றுகிறோம். உமக்கு ஏன் அன்று இருந்த நினைப்பு தலைகீழாக மாறிவிட்டது? சொந்த விவகாரத்திலே தலையிட வேண்டாமென்று எச்சரித்தால் நான் சும்மாயிருந்து விடுகிறேன். நகைப்புக்கிடமான உம்முடைய போக்கைக் கண்டு நாடு சும்மாயிரதே நான் என்ன செய்யட்டும்? கேசரியாரின் கோபம் மந்திரிமார்களோடு நின்றுவிடவில்லை. மலை ஏரிச் சென்று பாண்டியனாரையும் கூடத் தாக்கலாயிற்று, கேளுங்கள் கேசரியின் பேச்சை.

சுயமரியாதைக் கட்சித் தலைவராகவும் ஜஸ்டிஸ் கட்சித் தலைவராகவும் பாண்டிய நாட்டுப் பிரதேசத்தில் இருக்கிறாதே தோழர் சௌந்தரபாண்டிய நாடார், அவருக்கு மட்டும் இதில் பங்கில்லை என்ற நினைக்கிறீர்களா? சுயநலம் சுயஜாதி, என்கிற அசட்டுத்தனமான அழுக்கு இவரது தேகத்தில் ஒட்டவில்லையானாலும் நமக்கு மட்டும் என்ன, தலை எழுத்தா? என்கிற ஒற்றைப்படை சலிப்பு இவருக்கு ஜாஸ்தி. இவர் மட்டும கொஞ்சம் மனசு வைத்தால் தென்ஜிலலாக்கள் பூராவிலும் எதிரிகளை என்ன தேதி என்று கேட்டுவிடலாம். எல்லோரும் சம்பாதனையைப் பெரிதாக எண்ணும்போது நான் மட்டும் சோடையா என்று கருதிக் கொண்டு ஏலக்காய் தோட்டத்தைக் காப்பாற்றப் போய்பிட்டதால்தான் தொல்லை அதிகப் பட்டுவிட்டது.

மலையை வளப்படுத்திக் கொண்டிருந்த அதே நேரத்தில் மக்கள் மனத்தை வளமாக்கும் பணியிலும் பாண்டியனார் ஈடுபட்டிருந்தாரென்பதையும் மதிக்க மறத்தவர்தான் நண்பர் கேசரியார். இப்படி அவர் கண்டிக்காத தலைவரில்லை, காணாத குறையில்லை. கேட்காத கேள்வியில்லை, இதிலும், விசித்திரம் என்னவென்றால் எந்தத் தலைவர்களின் போக்கை எந்தப் பாண்டியனால் கண்டித்தாரோ அதே பாண்டியனாரையும் அந்தத் தலைவர்கள் பட்டியிலேயே சேர்த்துத திட்டியதுதான். பாண்டியனாரைப் பற்றி கேசரி கூறியிருப்பது நாட்டு மக்களுக்குக் கோபம் ஊட்டக் கூடியது என்ற போதிலும் மற்ற தலைவர்களைப் பற்றி மக்கள் மனத்திலே கொதித்துக கொண்டிருந்த அதிருப்தி ஆலாபனத்தோடு இதையும் சேர்த்துத தந்ததால் மக்கள் கேசரியை அந்தக் காலத்திலே மன்னித்து விட்டனர்.

பொதுவாக ஜஸ்டிஸ் கட்சி அந்தக் காலத்தில் எந்த நிலைமையிலிருந்தது என்பதை கேசரியின் வாசக மூலமே கேளுங்கள்.

கட்சியின் பேரால் யாரார் உயர்ந்த அந்தஸ்தில் இருக்கிறார்களோ, யாரார் அந்தப் பெயரை உபபோகித்துச் சொந்த விஷயங்களைச் சாதகப் படுத்திக் கொள்கிறார்களோ, யாரார் ஜஸ்டிஸ் கட்சி அடிக்கரும்பின் ருசியை அனுபவிக்கிறார்களோ அவர்களுக்கும் இந்தப் பிசகில் பங்குண்டு, சம்பளம வாங்கிக் கொடுப்பதற்கும், அந்தஸ்தைத் தேடிக் கொடுப்பதற்கும், கவுரவத்தைப் பெருக்கிக் கொடுப்பதற்கும் கட்சிப் பெயரை பயன்படுத்திக் கொள்ளும் பேர்வழிகள் இந்தக் கட்சியை அந்த அளவோடு விட்டு விடுகின்றனர். கட்சியை உருக்குலையாது காப்பாற்ற வேண்டுமே என்ற சிரத்தை அவர்களுக் இருப்பதாகவே காணோம். மாநாடுகள் கூட்டுவிக்கும் சந்தர்ப்பங்களைத் தவிர - எதிர்ப்புக் கட்சியால் தாக்கப்படுகிற நாள்களைத் தவிர்த்து - இதர நாள்களில் ஜஸ்டிஸ் கட்சி என்பதாகவும் ஒரு கட்சியிருக்கிறதா என்கிற நினைப்பூட்டும் வழி துறை எதுவுமிருப்பதாகத் தெரியவில்லை. எதிர்ப்புக் கட்சிப் பத்திரிகைகள்தான் ஜஸ்டிஸ் கட்சிக்கு உயிர் கொடுத்து வருவதாகச் சொல்ல வேண்டியதேற்படுகிறது.

பேருக்கு ஜஸ்டிஸ் பத்திரிகையும் வாரம் இருமுறை பிடுதலையும் வெளியிட்டுக் கொண்டுதானிருக்கிறார்கள். ஆனால் அதன் பயன் என்ன? ஜஸ்டிஸ் பத்திரிகையை எத்தனைபேர் படிக்கிறார்கள்? இது நாளுக்கு நாள் வளர்கிறதா? குன்றுகிறதா? பிராமணரல்லாதார் சமூகத்துககாக உழைக்கும் இப்பத்திரிகையை எல்லா பிராமணரல்லாதாருமே ஆதரிக்கவில்லை என்றும் பழிச்சொல் இருக்கட்டும். ஜஸ்டிஸ் கட்சியால் உயர்வுக்கு வந்தவன், ஜஸ்டிஸ் கட்சியால் பேரும் பெருமையும் அடைந்தவன், ஜஸ்டிஸ் கட்சியால் காசுக்காரனாகவும் கவுரவஸ்தனாகவும் ஆனவன் எத்தனை பேர் இதைப் படிக்கிறான்? எத்தனைபேர் அதற்கு உழுங்காக சந்தா கொடுக்கிறான்? எத்தனை பேர் ஆங்காங்கே பரப்பி விருத்திக்கக் கொண்டு வரப் பிரயாசைபடுகிறான்? விரல்விட்டு எண்ணிவிடலாமே! வருடக்கணக்காகப் பணம் பொடுக்காமலும் ஆரம்ப முதல் சந்தாவே அனுப்பிப் பழக்கமில்லாமலும் கவுரவ வாசகர்களாக இருந்து வரும் பேர்வழிகளுக்காகப் பத்திரிகையும் ஒரு கேடா?

லாமெம்பர், இடைமந்திரி, கடைமந்திரி, தேவஸ்தான கமிட்டி பிரஸிடெண்டு, கமிஷனர், பப்ளிக்பிராஸிகியூட்டர், ஜில்லாஜட்ஜ், ஜில்லா முனசுப், சட்டசபை மெம்பர் என்பதாகப் பெரிய பெரிய ஸ்தானத்தை வகித்திருப்போர் மலிந்து கிடக்கிறார்களே இவர்களெல்லாம் ஆளுக்குக் கொஞ்சம் பணம் போட்டால் அவர்கள் இன்ஸால்வெண்ட் ஆகிவிடுவார்களா?

ஆகமாட்டார்கள் ஆனால், அவர்களுக்குக் கட்சியினிடத்திலே அக்கரையிருந்தால்தானே கேசரியின் கோரிக்கைக்கு இணங்குவார்கள். மற்றொறு புனருத்தாரணத் தலைவரை கேசரி திட்டியுள்ளபடி காட்டுகிறோம்.

சர். பரசுராமதாஸ் பாத்ரோ இருககிறாரே அவர் எப்போதும் ஒரு புல்லுருவியாகவே இருந்து வந்திருக்கிறார். ஜஸ்டிஸ் கட்சியின் பேரால் இவர் பார்த்த ஆறு வருஷ மத்திரி வேலையை ஒரு சுத்த பிராமணர் பார்த்திருந்தாலாவது அந்தப் பிராமணருக்க்குக் கொஞ்சம் கட்சி விசுவாசமிருக்கும். அது கூட சர். பாத்ரோவுக்கு இல்லை

சர். தியாகராஜ செட்டியார் மரணத்திற்குப் பின் கட்சியின் நிர்வாக அமைபே புது தினுசாயிற்று. மந்திரிகளே கட்சித் தலைவர்கள் என்ற எல்லைக்கு வந்து சேர்ந்தது. மந்திரிகள்தான் தலைவர்கள் என்பதில் எனக்குச் சிறிதும் ஆட்சேபமில்லை. ஆனால் தாங்கள் எந்த இத்தில் நிற்கிறோம் என்பதை அவர்கள் அடியோடு மறந்து போனார்களே என்பதை நினைத்தால்தான் எனக்கு ஆத்திரம் வருகிறது பிராமணரல்லாதார் சமூகமே தங்களுக்காகத்தான் சிருஷ்டிக்கப் பட்டிருக்கிறதேயன்றி பிராமணரல்லாதார் சமூகத்திற்குகாக உழைப்பதற்காகத்தான் ஜனங்கள் தங்களைத் தலைவர்களாக்கினார்கள் என்கிற எண்ணம் அவர்களை விட்டு அடியோடு போய்விட்டது. இந்தக் குற்றத்திற்க எல்லா மந்திரிகளும் ஆளானவர்கள்., கனகால் ராஜா சிறந்த ராஜதந்திரிதான். அவரைப் போன்ற ராஜீய நிபுணராக வேறு ஒருவரையும் சென்னை மாகாணம், இதுவரை உற்பத்தி செய்யவில்லை என்பதும் வாஸ்தவம். ஆனாலும் அவர்கூட நான் மேலே படித்த குற்றப் பத்திரிகைக்குக் கட்டுபபட்டவர்தான். மந்திரிகள், பிராமணரல்லாதார் கட்சியின் சார்பாக அந்தப் பாக்கியம் பெற்றவர்கள் ஜேழப்நிறைய சம்பளம் வாங்கினார்கள். ஆனால் அவர்களில் இரண்டொருவர் கட்சிப் பத்திரிகைக்காக ஏதோ கொஞ்சம் கொடுத்து வந்ததைத் தவிர பாக்கிப்பணம் பூராவும் அவர்களின் இருப்புப் பெட்டியிருக்கும் எதாஸ்தானத்தையே தேடிச் சென்றது. பிரசாரம் வேண்டும். பிரசாரத்தால்தான் தங்களது யோக்யதாம்ஸம் நிலைத்து நிற்கும் என்கிற யோசனைப் பலமே அவர்களுக்கு ஏற்படவில்லை. இப்படியிருந்தாலா கட்சி உருப்படும்?

உருப்படாது என்ற தேரிந்துதான் அத்தகைய தலைவர்களிடமிருந்து ஜஸ்டிஸ் கட்சியை மீட்டு பிரசார யந்திரம் பலமாக இருக்கும், ஸ்தாபனத்தாரின் மேற்பாரிவையின் கீழ் கொண்டுவரப்பட்டது. அது எங்களுக்கெல்லாம் இனிப்பைத் தரும்போது எங்களுக்கு அந்த எண்ணத்தைக் கற்றுக் கொடுதத தங்களுக்குக் கசப்பானேன்? இது கேள்வியல்ல, என் சிந்தனை. நீங்கள்தான் இப்பொழுது கேள்விக்குப் பதில் சொல்லாத குணாளர்களுடன் குலவிக் காலங் கழிக்கத் தீர்மானித்துவிட்டீர்களே உங்களைக் கேள்வி கேட்டு என்ன பயன்? கேசரியாரே! ஓய்வு உறக்கமின்றி உழைத்து உழைத்து உடல் நைந்து போயுள்ள தமது தள்ளாத வயதில் ஈ.வெ.ரா. அவர்களைக் குறை கூறுவது வீரர் தன்மையின் தர்மநியாயத்துக்க உடன்பாடான காரியமல்லவென்பதையும் தெரிவிக்க விரும்புகிறேன் என்று நகரதூன். ஆரியர் 29.03.36 ல் கூறிய நன்மதியைத் தாங்கள் ஏற்றுக்கொள்ளாத காரணம் என்ன? அவர் அன்று சொல்லியிருக்கிறார் சுயமரியாதை இயக்கமும் ஜஸ்டிஸ் கட்சியும் இன்று ஒன்று சேர்ந்திருப்பதால்தான் நெய்க்கு தொன்னை ஆதாரமாகவும் தொன்னைக்கு நெய் ஆதாரமாகவும் இருபபது போல நிலைமை ஒருவாறு இருந்து வருகிறது. இந்த ஸ்திதியில் ஒன்றைவிட்டு மற்றொன்று பிரிந்து விடுமானால் அதன் பிறகு வேங்கையைக் கூட்டுறவு கொண்டு எதிர்த்த பசுக்கள் தனித்தனியாகப் பிரிந்த கதை மாதிரிதான் என்று பட்டம் பதவிகளை விட்டுவிடுவது என்பது பணத்தால் பதவியைப் பெறமுடியும் என்ற மனப்பான்மை கொண்டு, பார்ப்பனரல்லாதார் பெயரைக் கூறி அரசியல் சூதாட்டத்தை நடத்தி, அந்தஸ்தைப் பெற்று, ஆரியத்தை அப்பு அழுக்கின்றி ஆதரித்து அரசியல் வாழ்வை நடத்த விரும்பும் பூர்ஷுவாக்களின் பிடியிலிருந்து ஜஸ்டிஸ் கட்சியை மீட்பதற்காகச் செய்யப்பட்ட புரட்சி. புரட்சி முடிந்தவின் ரஷ்யச் சீமான்கள் நெடுநாள் வரையிலே தமது மாளிகைகளையும் மனோகரியகளையும் மதுக்கிண்ணங்களையும் மந்தகாச வாழ்வையும் எண்ணி எண்ணி ஏங்கி சமதர்ம ஆட்சியைச் சாய்த்து விடுவதற்காகச் சதிபல செய்து தமது நிதியைக் கொண்டு பிறரின் மதியை விலைக்க வாங்க முடியுமேன்ற மனப்பால் குடித்து கடைசியில் போனது திரும்பாது என்ற முடிவுக்கு வந்தனர். ஜஸ்டிஸ் கட்சியில் இருந்து வந்த ஜெமீன் செல்லப் பிள்ளைகளும், பதவி தாசர்களும், தொண்டர்களின் துயரத்தைச் சிரித்த முகத்துடன் கண்டு தெருக்கதவை மூடிக்கொண்டவர்களும், தேர்கர் காலத்திலே தேடிப்பிடித்து தேனே, பாலே, அமுதே என்று பேசி தேர்தல் முடிந்ததும திருமுகத்தைக் காட்டாது திரிந்த திருவாளர்களையும் நாடு இனி ஏற்காது என்பதைத்தான் சேலம் எடுத்துக் கூறிற்று. இந்தப் புரட்சியால் மருட்சி அடைந்தோர் ஆரம்பிக்கும் அதிர்ப்புரட்சி (Counter Revolution) க்குத் தெரிந்தோ தெரியாமலோ தாங்கள் எடுபிடியாகிறீர்கள், ஏன் இந்த வீழ்ச்சி!!

(திராவிடநாடு - 31.12.44)