அறிஞர் அண்ணாவின் கட்டுரைகள்


அறிவுக் கோயில்!

``யாரோ புண்யாத்மாவின் கைங்கரியம்! அவன் நீடுழிவாழ வேண்டும்!’’

``எவனோ தெரியவில்லை, பெரிய சொத்துக்காரன் போலிருக்கிறது, பணத்தை அள்ளி வீசி இருக்கிறான்.’’

``அடித்ததப்பா சரியான யோகம். பேல் ஒன்றுக்கு 1000 வீதம் தினம் ஓர் பேல் தள்ளினான். இந்த நாலு வருஷத்திலே சரியான அடி அடித்ததிலே ஆளுக்கு கொஞ்சம் என்பது போல, இங்கே சொஞ்சம் கொடுத்திருக்கிறான். எனக்குக் கூடத்தான், உனக்குங்கூடத்தான் நாலு வருஷத்திலே நாலு கோடி இலாபம் கிடைத்தால், நாமும் செய்வோம் இதுபோல, இதற்கு மேலே கூட!’’

```பாரப்பா ஆர்ப்பாட்டத்தை! பகல் போல் விட்டான் இரவை! பார்க்கிற பாமர மக்கள், அதுக்காகச் செலவு செய்தவனைப் புண்யாத்மா என்று பூஜிக்கப் போகிறார்கள், தர்மாவன் என்று புகழ்வார்கள். அருகே சென்று விசாரித்தால் தானே அவன் செய்த அக்ரமம் அம்பலமாகும். அவ்வளவும் மறைக்கப் பார்க்கிறான் இந்த அலங்காரத்தினால்.’’
* * *

இரவைப் பகலாக்கிக் காட்டும் விளக் கொளி! ஆடம்பரமான அலங்காரங்கள், அதிர் வேட்டுகள்! பல்லாக்குச் சேவை பிரமாதம். இந்தத் திருவிழாவுக்குப் பணம் தந்த `தர்ம தாதா’ ராஜ நடை நடக்கிறார். அவர் பக்கத்திலேயே பராக்குக் கூறிக் கொண்டு செல்கின்றனர், பங்கு பெற்றவர், தொலைவில் நின்று தொழுகின்றனர், பேழைப் பிரியர்கள். வாய் பிளந்து நிற்கின்றனர் வகையற்ற வர். வனிதையர் வாழ்த்த, பக்தர்கள் பாராட்ட, பாவணர் புகழ் பாட, தர்மவான், தயாபரனைப் பல்லக்கில் அமர்த்தி, அழகான உற்சவத்தைப் பல ஆயிரம் ரூபாய் செலவிலே நடத்தி சேவா வீரரே! என்று கூறி மேனகை கைலாகு கொடுக்க, திலோத்தமை ஆராத்தி எடுக்க, ரம்பை பாட, ஊர்வசி ஆட, சுவர்க்கப்பிரவேசம் தனக்குக் கிடைக்கு மென்றும் அந்தச் சீமான் எண்ணுவார். அவர் மட்டும், அதே நேரத்தில் யாருமறியா வண்ணம், திருவிழா கண்டு களிக்கும் கூட்டத்துக்குள் நுழைந்து என்னென்ன விதமான பேச்சு நடக் கிறது என்று கூர்ந்து நோக்கினால், மேலே நாம் தீட்டியுள்ள உரையாடல் நடந்திடக் கேட்கலாம். சுயநலமற்ற காரியமென்றோ, நியாயப்படி திரட்டிய பொருளைக் கொண்டு நடத்தப்படுவ தென்றோ, இன்று மக்கள் இத்தகைய திருவிழா போன்ற காரியாதிகளைக் கருதுவதில்லை. அது ஒரு காலமிருந்தது, `தர்மவான்களை’ மக்கள் தம் அறிவுத் தராசிலே ஏற்றி எடை பார்க்காத காலம். இது வேறு காலம்! உள்ளம், உரைகல் ஆக்கப் பட்ட காலம்! இந்தக் காலத்திலே, பணம், கருவி என்பதை மக்கள் தெரிந்துகொண்டுள்ளனர், எனவே அதனைப் பயன்படுத்தும் முறையைப் பரிசீலனை செய்கின்றனர். அந்தத் தராசிலே நிறுத்துப் பார்த்தால், பெரும்பாலான தனவந்தரின் செயல், வீண் விளம்பரம், விரயம் என்று ஏற்படுமே தவிர, நாட்டை உய்விக்கும் நற்செயல் என்று ஏற்படாது.

ஆனால் இன்னமும் இங்குள்ள செல்லா வான்கள், பழைய முறையிலேதான் நடந்து கொள்கின்றனர். கும்பாபிஷேகம், கோயில் திருப்பணி, மடம் அமைத்தல் முதலியவற்றையே அறம் என்று எண்ணுகின்றனர்.

இந்தப் பாலைவனத்திலே ஓர் நீரோடை நண்பர் ஜி.டி. நாயுடு அவர்கள். அரசன் மகன் இளவரசனாகிறான். ஆற்றலிருந்தாலும் இல்லா மற் போனாலும்! அம்முறையிலே அவர் கோடிஸ்வரரின் மகன் கோடிஸ்வரன் என்று கொலுவீற்றிருப்பவரல்ல. இன்று கவர்னரின் கைகளைக் குலுக்கும் அவருடைய கரம், அவருடைய இளம் பிரயத்திலே, மோட்டார் பஸ் ஓட்டுவதிலே ஈடுபட்டிருந்தது! சொந்த முயற்சி யால் சோர்விலா உழைப்பால், பல இலட்சம் பொருள் ஈட்டினார். விரும்பியிருந்தால் அவர், சில ஜெமீன்களை வாங்கி அனுபவித்திருக்க லாம். கோலாகலத்திலே புரளலாம், மனமிருந்தால்.

ஆடையும், சுறுசுறுப்பான மூளையின் அறிவிப்புகளாக விளங்கும் குறுகுறுப்பான பார்வையும், தோன்ற `சாமான்யராகவே’ காட்சி தருகிறார். பழனியாண்டவருக்குப் பத்தரை மாற்றுத் தங்கத்தால் வேலும், வெள்ளியால் விமானமும், படிக்கட்டும் பணியும் தர்மம் செய்த சீமான்கள், அவருடைய சினேகர்கள்! அவரோ, அந்த முறைக்கு முற்றிலும் மாறுபட்டவர். அறம் எத்தன்மையாக இருக்க வேண்டுமென்பது பற்றி, அழகாக விரிவுரை ஆற்றிக் கொண்டிருப்பவரு மல்ல. செயலிலே ஈடுபடுபவர், அன்னாரின் அரிய முயற்சியால், உதவியால், கோவையில் சென்ற கிழமை, ``புதியதோர் கோயில்’’ தீர்மானிக்கப்பட்டது. சம்மட்டியும், அரமும், மின்சார விசையும் இன்ன பிற ஆயுதங்களுமே அங்கு பூஜை சாமான்கள்! பக்தர்களோ கசிந்து கண்ணீர் மல்கிக் கொண்டிரார், விழித்திருந்து விவேகம் பெறும் வேளையில் ஈடுபடுபவர். ஆம்! அன்பரின் முயற்சியால் அங்கு அறிவுக் கோயில் கட்டப்பட்டிருக்கிறது. அதற்குத் தோழர் இரத்தினசபாபதி முதலியாரும் 2 இலட்சம் காணிக்கை செலுத்தினார்.

அறிவுக் கோயிலிலும், வெறும் கலை பயில் கழகங்களை அமைப்பதே நோக்கமாகக் கொண்டுள்ளனர். ஷெல்லியின் சுவை மிக்க கவிதையோ, காளிதாசனின் களிரசக் கற் பனையே, கம்பரசமோ, போதிக்கப்படும் கல்லூரி கள், அமைப்பது மட்டும் போதாது, ஆங்கு கலை பயிலச் செல்பவர் பின்னர் நிலைக்கேற்ப வேலைத் தேடிச் சாலை சுற்றுபவராக விடுகின்ற னர், கல்லூரிகள், குமரன் தாக்களைப் பெரக்கி வைக்கின்றன, எனவே, அறிவுக் கோயிலில், தொழில் ஆற்றலைக் குறிக் கோளாக அமைக்க வேண்டும் என்ற அரிய கருத்தைக் கொண்டு அன்பர் இதுபோது, கோவையில் என்ஜினியரிங் கல்லூரிக்கு ஏற்பாடு செய்து, அதற்கு ஆரம்ப காலத்துக்குகென இரண்டு இலட்சம் நன்கொடைத் தந்ததுடன், போர் காரணமாகப் புதுக் கட்டட வசதி இல்லாததால், தம்முடைய சொந்தக் கட்டடத்தையே தந்து வியுமிருக்கிறார். சென்ற கிழமை துவக்கி வைக்கையில் நண்பர் ஜி.டி. நாயுடு அவர்களின் நுண்ணிய திறனைக் கொண்டு களிக்காமலிருக்க முடியுமா!

எதிர்காலம், தொழிற்காலம்! உலக முன்னிலையில் உரமுள்ளதாக நம் நாடு விளங்க வேண்டுமானால், பணியாளாக்கி, உழைப்பின் தோழமை கொண்டு, நாட்டின் பொருளாதாரத்தை வளமுறச் செய்தாக வேண்டும். இதற்கு முதலாளி கேபிட்டல, தொழிலாளி லேபர் இருந்து விடுவது மட்டும் போதாது. நுண்ணறிவாளர் தேவை. இதற்காகத் தனி இயல்புடைய அறிவு தேவை. நாட்டுப் பொருளாதாரத்தை வளமுறச் செய்வதற்கேற்ற தொழில் துறையிலே நுண்ணறிவு பெறுவதற்குக் கோவையிலே நிறுவப்பட்டுள்ள என்ஜினியரிங் கல்லூரி மிக மிக உதவி செய்யும். இத்தகைய கல்லூரிகள் மேலும் பல தேவை. இந்தத் துறையிலே நாட்டுக்கு நல்லதோர் வழிகாட்டியாக இருக்கும் நண்பர் நாயுடு அவர்களை நாம் பாராட்டுகிறோம். அவர் செவிக்குப் பாராட்டுதலைவிட, இயந்திரங்களின் சுழல் சத்தமே கீதமாக இருக்கும் என்பதை அறிந்தும் பாராட்டுகிறோம், அவர் செல்லும் வழியிலே மேலும் பலர் செல்ல வேண்டும் என்ற அவாவினால்.

(திராவிட நாடு - 15-7-1945)