அறிஞர் அண்ணாவின் கட்டுரைகள்


அறிவும் அழிவும்

‘பாமர மக்கள் பாராளும் காலம் இது!’ என்று பாடினார் கவி இகபால். புலி வேடம் போட்டோர் முன் எலிபோதும் முயல் போலும் அடங்கிக் கிடந்த மக்கள், விழித்தெழுந்தால், இந்நிலை நிச்சயம் ஏற்பட்டே தீரும். அதிலும், மகத்தான போர்களுக்குப் பிறகு மறுமலர்ச்சி தோன்றுவது வரலாற்றுண்மை. இம்முறை நடந்து வரும் போரோ, மனிதனின் சிந்தனா சக்தியைத் திணறடிக்கக் கூடியதாக இருக்கிறது. அணுவைப் பிளந்தெடுத்து அண்டத்தை அதிரச் செய்யும் அழிவுக்குண்டு தயாரிக்கும் காலம் இது! ஒரு குண்டு, சிறார்கள், விளையாடும் சிறுபந்து அளவுள்ளது. அதன்விளைவு, ஆறு சதுர மைல் பரப்புள்ள இடத்திலே உள்ள கட்டங்களும் உயிர் வாழ்வனவும், சிதறிக் கருகி அழிந்துபடுகின்றன. அணுப்பிளவின் மூலம், அழிவை அரை நொடியிலே பரவச் செய்யும் நிலையை அடைந்துள்ள இந்நாளிலேதான், முன்னாளிலே காட்டியதைவிட அதிகரித்த அக்கரையைப் பாமர மக்கள் தமது ஆட்சி விஷயத்திலே நாட்ட வேண்டும்! இல்லையேல் அவர்களின் எதிர் கால வாழ்வு இருண்டுவிடும். ஒரு இலட்சம் விஞ்ஞானிகள் பத்து வருஷங்களாக ஆராய்ச்சித் துறையிலே ஈடுபட்டு வந்ததன் விளைவு இந்த விபரீதக் குண்டு. 585 கோடி ரூபாய் செலவாம் இதற்கு! இந்தப் பயங்கரமான நாசக் கருவியை இனி எப்படிக் கட்டுப்படுத்துவது என்பது பற்றி இன்றே உலகு, அச்சத்துடன் யோசிக்கிறது. இவ்விதமான அணுகுண்டு இருமுறை வீசப்பட்டும், ஜப்பான் சரணடையவில்லை. அந்த அளவுபித்த முதிர்ச்சி இருக்கிறது! அதனை நீக்கச் சம்மட்டி அடிதர, சோவியத் இப்போது ஜப்பானுடன் போர் துவக்கிவிட்டது. புதன்கிழமை நள்ளிரவிலிருந்து தாக்குதல் தொடங்கிவிட்டது. விபரீதக்குண்டு விழ, வீர ரஷியரும் கிளம்ப, நேச நாட்டுப் படைகள் நாலு புறமும் சுற்றி வளைக்க, நடுவே சிக்கியுள்ள ஜப்பான், சரணடைய வேண்டும், மிக மிக விரைவில், சோவியத், கீழ்க் கொடி போரில் இறங்கிவிட்டதால், இந்தப் போர் முடிந்து புது அமைப்பு ஏற்படுகிறபோது, ஐரோப்பிய பகுதியிலே, நடந்தது போலவே இங்கும் சோவியத்தின் சொல்லுக்கு வல்லரசுகள் செவி சாய்ந்துத்தீர வேண்டும். ஐரோப்பியப் பகுதியிலே, சோவியத்துக்கும் சோவியத் கோட்பாடுகளுக்கும், கிடைத்துள்ள செல்வாக்கு, உலக முதலாளிக் கூட்டத்தின் உள்ளத்தையே உலுக்குவதாக இருக்கிறது. உலகெங்கும் பொது உடைமைப் புரட்சி பாவ வேண்டும் சோவியத் எண்ணம் இன்று புரட்சியின்றியே நிறைவேறி வருகிறது.

ஐரோப்பிய நாடுகளை இன்று கவனித்தால் இந்த உண்மை விளங்கும். எங்கும் சோவியத் மணம் கமழ்கிறது! எந்த நாட்டிலும் பழைமையின் சின்னம் அழிந்துபட்டு, வலியோரின் வஞ்சக நினைப்பு நசித்து, பாட்டாளி மக்கள் பாராளும் மன்றங்களிலே வீற்றிருக்கும் காட்சியே காண்கிறோம்! இந்நிலைக்குக் காரணம், சோவியத் பெற்றுள்ள வீரவெற்றியின் பயனாக, ஏற்பட்ட செல்வாக்கு என்ற போதிலும், இன்றைய சுற்றுச்சார்பும் இதற்குப் பெரிதும் துணை புரிகிறது. போர் நின்றதும், நாடெங்கும், புயல் ஓய்ந்த பின்னர் பூந்தோட்டம் உள்ள நிலையைத் தான் காண முடியும். அழிந்த வயல்கள், தூளான கட்டிடங்கள், பிளவுபட்ட பாதைகள், பஞ்சமும் பிணியும் தாக்கினதால் தேய்ந்து போன உருவங்கள், எங்கும் ஏழ்மை, கொடுமை, கூக்குரல்! இந்நிலையிலே எவருக்கும், எப்படியேனும், மக்களை வாழ வைக்கும் திட்டம் தேவை, ஏழையை ஈடேற்றும் அரசு தேவை, குறை நீக்கும் முறை தேவை, என்ற எண்ணம் எழுவதும், அந்த எண்ணம் கொண்டதும், மாஸ்கோ மார்க்கத்தைப் பற்றிய நினைப்பு வருவதும் இயற்கை. தவிர்க்க முடியாதது, உலக வீரன் என்று பட்டம் பெற்ற சர்ச்சில், வெற்றிப் பதக்கங்களைக் காட்டி ஓட்டு கேட்டுங் கூட, இடிந்து போன கட்டிடங்களிலே வாழும் ஒடிந்த மனதினர், ஈரமுள்ள நெஞ்சினர் வேண்டும், ஏழைக்கு ஏற்ற அரசு வேண்டும் என்று கூறி விட்டனர். பிரிட்டனிலே தொழிற்கட்சியின் வெற்றி, உலகத்தில் இதுபோது தோன்றியுள்ள புது எழுச்சியின் ஒரு பகுதியேயாகும். பாமர மக்கள் பிரிட்டனிலே மட்டுமல்ல, பல்வேறு நாடகளிலே கிளம்பி விட்டனர், வலியோர் சிலர் எளியோர் தமைவதையே புரிகுவதா? மகராசர்கள் உலகாளுதல் சதமாம் எனும் நினைவா? என்ற பரணி பாடிக் கொண்டு. பிரான்சிலே தீவிரவாதிகள், தெகோலைத் திணற வைக்கிறார்கள்! ஸ்பெயினிலே பிராங்கோவின் பிடி தளர்ந்து வருகிறது, சுமை தாங்கி வேலைக்கு யாராவது மன்னர் கிடைப்பாரா என்று தேடித் திரிகிறார்! இத்தாலியிலே சமதர்மிகள், எமதே ஆட்சி என்கின்றனர்! ருமேனியாவிலே மார்ஷல் டிட்டோ, பிற்போக்காளரின் பிழைகளை இனிப்பொறுக்க மாட்டோம் என்று கூறுவிட்டார். சைனாவிலே, சியாங் கட்சிக்குப் பொது உடமைப் பட்டாளத்தின் எதிர்ப்பு பலமாகிக் கொண்டு வருகிறது. போர்ச்சுகலிலே சமதர்மகீதம்! தென்அமெரிக்க நாடான அர்ஜெண்டினாவிலே அபேதவாதக் கட்சிக்கு இருந்த தடை நீக்கப்பட்டுவிட்டது! ஜெர்மனியிலேயே, பொது உடைமைக் கட்சி புதிப்பிக்கப்பட்டுவிட்டது. நார்வே நாட்டிலே, செல்வத்தை அனைவரும் பல்கிட்டு அனுபவிப்போம் என்ற கித்தாந்தம் பேசப்படுகிறது. ஸ்வீடனிலே, மன்னர், கூட்டு மந்திரிசபை கலைக்கப்பட்டு விட்டது சமதர்மசர்க்கார் அமைந்திருக்கிறது என்று அறிவித்துவிட்டார். பல்கேரியாவிலே பாட்டாளிக்குச் சுகந்தேடப்படுகிறது. ஆஸ்திரேலியாவிலேயும் நியுஜிலாந்திலும் தொழிலரசே நடைபெறுகிறது. போலந்திலே பொதுஉடைமை, புரட்சியின்றி பூத்துவிட்டது. 11,000000 ஏக்கர் விஸ்தீரணமுள்ள நிலைத்தைப் பரம்பரையாக அனுபவித்து வந்தனர் சில பண்ணை முதலாளிகள், போலந்திலே கால் பாகம், இது போலக் காட்டரசர்களிடம் சிறைப்பட்டுக் கிடந்தது. போலந்திலே ஏற்பட்ட புதிய சர்க்கார். “நில முறையிலே சீர்திருத்தம்” செய்தனர். என்ன திருத்தம்? புதுக்கணக்குப் போட்டு விட்டனர்! பண்ணையார்களுக்கு நஷ்டஈடும் தரவில்லை. நிலம் பறிமுதல்! ஏழைகளுக்குப் பங்கிட்டுத் தந்தது புதுசர்க்கார், ஒரு குடும்பம் நிம்மதியாக வாழக் குறைந்தது 12 ஏக்கர் நிலமாவது வேண்டும். அதற்கேற்ற முறையிலே புது அமைப்பு செய்வோம் என்று கூறுவிட்டது போலந்து சர்க்கார் பிணத்தின் மீது நடக்க வேண்டி இருந்தது லெனினுக்கு, இதைக் கூற, செய்ய, சட்டம் போலந்திலே, பொது உடைமையை மாலையிட்டு வரவேற்று உபசரித்து விட்டது. ஆம்! இது பாமர மக்கள் பாராளும் காலம், சந்தேகமில்லை!! அணுக்குண்டு, கண்டு உலகம் அதிசயிக்கிறது. ஆனால் அச்சமுடைகிறது, அதன் அழிவுச் சக்தி என்னென்ன கேடு தருமோ என்று, ஆனால் அதே விஞ்ஞான அற்புதத்தை நன்னெறியிலே பயன்படுத்தினால் பலன் ஏராளம் என்று கூறுகின்றனர். சந்திர மண்டலம் சென்று வரலாம்! என்றார் ஓர் விஞாஞானி. விஞ்ஞானம், அறிவின் விளைவு, அறிவு ஆக்க வேலை, அழிவு வேலை இரண்டுக்கும் பயன்படும். பொது நலம், சுயநலத்தை அழித்தொழித்தால், அறிவும் அதன் கூறான விஞ்ஞானமும், அதன்விளைவுகளான புதிய புதிய கருவிகளும், அழிவு தராமல், நன்மை பொழியும். பொது நலம், பாட்டாளி ஆட்சியிலேதான் மலர முடியும். அந்த ஆட்சியின் வெற்றியினால் மட்டுமே, உழைப்பு ஊரழிக்கும் காரியமாகாது தடுக்கவும், விஞ்ஞானம் விபரீதத்தைப் பொழியாது நன்மைகள் பயக்கக் கூடியதாக அமையவும் வழி பிறக்கும். அணுகுண்டு கண்டு அஞ்சும் உலகு இன்று, அதே சமயத்தில் பல்வேறு இடங்களிலே, அறிவுக்குண்டு வீசப்பட்டு, கொடுமையும் மடைமையும் ஆணவமும் அறியாமையும் அழிந்துபடுவது கண்டு மகிழ்கிறது. அணுக்குண்டின் அட்டகாசத்தைத் கண்டு மனித அறிவு அழிவுக்காக பயன்பட வேண்டும் என்று வெறுப்படையும் அன்பர்களுக்கு இது கூறுவோம், அறிவினால், அறிவான ஆட்சிமுறையினால், தன்னலமற்ற ஆட்சிமுறையினால் அழிவுக் குண்டுகளையும் அடக்க முடியும். அறிவினால் ஆகாதது ஒன்றுமில்லை.

(திராவிடநாடு - 19.8.1945)