அறிஞர் அண்ணாவின் கட்டுரைகள்


அற்பத்தனம்

வேவல் திட்டத்தை ஏற்றுக் கொள்வார்களோ என்று சர். ஏ. இராமசாமி முதலியார் திகிலடைகிறார் என்றும், மேற்படி திட்டம் ஏற்றுக்கொள்ளப்பட்டால், அவர் இதுபோது பெற்றுள்ள பதவியை இழக்க நேரிடுமானதால் இந்தத் திகில் இருப்பதாகவும், ஒரு நிருபர் நையாண்டி செய்து எழுதியதாக அறிகிறோம். அந்த ஆசாமி, “மாதுர் பூமி” போன்ற இதழிலே உடனே வேலை தேடிக்கொள்வது பொருத்தமாக இருக்கும் என்று சம்பந்தப்பட்டவர்களுக்கு யோசனை கூறுகிறோம்.

சர். ஏ. இராமசாமி முதலியாரின் அறிவும் ஆற்றலும் இன்று அவனி முழுதும் கண்டு கொண்டாடத் தக்கதாகி விட்டது. இதை உணர முடியாத அரசியல் ஆந்தைகள் இருட்டில் கிடப்பதோடன்றி இழிநினைப்புக் கொண்டு ஏதேதோ பேசுகின்றன. சான் பிரான்சிஸ்கோ மாநாட்டுக்கு வந்திருந்த சர்வதேச பிரதிநிதிகள் பலரும் கண்டு மெச்சம்படியான மேதாவியாகத் திகழ்ந்து, எப்பொருள் பற்றிப் பேசுவதாயினும் ஐயந் திரிபறப் பேசிடும் ஆற்றல் பெற்றவர் என்று அனைவராலும் பாராட்டப்பட்டு, உலக நிபுணர்களிலே முன்னணியின் நின்று காட்சி தந்து திராவிட இனத்தின் திறனுக்கோர் எடுத்துக்காட்டாக விளங்கும், சர். இராமசாமியின் புகழொளி கண்டு, வஞ்சகரின் விழி மங்கிடுவது நமக்கு ஆச்சரியமூட்டவில்லை. அவர்களின் கெடுமதியும் சுடுமொழியும், அவரைத் தீண்டமுடியாத உச்சநிலையை அடைந்துள்ளார் நமது இனமணி. ஆரியபுரிக்கு அச்சமும் அசூயையும் ஏற்பட்டிருக்கிறது, காரணத்துடன். கடந்த சண்டைக்குப் பிறகு இந்தியாவின் சார்பாகப் பேசவும், பவனிவரவும் “பட்டா” பெற்றவர் மகாகனம் சாஸ்திரியார். “வார் சேல்ஸ் ஒப்பந்தத்திலே நம்ம மகா கையெழுத்திருக்கு, தெரியுமோ! சர்வதேசமும் வியாபகமாகி இருக்கு அவாளுடைய கீர்த்தி” என்று பூரிப்போடு பேசிய பூசுரரின் செவியிலே, விழுவதென்றால் ஒரு கால் நூற்றாண்டுக்குள், கனபாடிகளின் ஏகபோக மிராசாக இருந்துவந்த துறைகளில், திராவிடத் தலைவர்கள் நுழைந்து, தமது அறிவாற்றலால் பெரும்புகழ் பெறுவது சகிக்கமுடியாததாகத்தான் இருக்கும்! ஆனால் விழிப்புற்ற, எழுச்சியுற்ற இனம், தனக்குரிய இடத்தை, உரிமையை அடையும்போது, நிந்திப்பவன் வெறும் உளறுவாயன், ஏளனம் செய்பவன், கேவலம் அற்பன், எதிர்ப்பவன் முழு மூடன், எதிரிகளுடன் கூடிக்கொள்பவன் துரோகி, என்றே உலகு உரைக்கும். சர். இராமசாமிக்குப் பதவி போய்விடுமோ என்ற பயம் இருப்பதாகக்கூறும், அற்பத்தனத்தை நாம் வன்மையாகக் கண்டிக்கிறோம். அவருடைய அறிவாற்றலால் பிறர் பயன்பட்ட அளவுக்குப் பதவியினால் அவர் பயன்பட்டாரா என்பது அறிஞர் ஆராயவேண்டிய விஷயம். இன்று அவர் அடைந்துள்ள நிலை உலக வரலாற்று இதழிலேயே ஓரிடம் பெறக்கூடிய அளவு முக்யத்துவம் வாய்ந்திருக்கிறது. அதுகேட்டுப் பெருமை அடைகிறோம், கேட்கப் பொறாத புல்லர்கள், வாய்மூடிக் கிடப்பதைவிட்டு, அற்பத்தனமாகப் பேசுவது, அவர்களின் அறியாமையுடன் ஆத்திரமும் சேர்ந்து அற்பன் என்ற துஷ்டப்பிள்ளையைப் பெற்றெடுத்திருக்கிறது என்பதையே காட்டுகிறது.

24.6.1945