அறிஞர் அண்ணாவின் கட்டுரைகள்


அருணோதயம்

நாட்டுப் பற்றுக்கான போரில் ஈடுபட்டாக வேண்டும் என்ற எண்ணத்தால் இழுக்கப்பட்டுச் சூறாவளிக்குப் பலியானவர்கள் எண்ணற்றவர்கள் - புயலில் எதிர்த்து நின்று புன்னகை புரிந்தவர்கள் சிலர். தோழியர் அருணா ஆசப்ஆலி, அத்தகைய புயலில் சிக்கிய பூவை - புன்னகையை இழக்காதவர். நட்டுப் பற்றிலே நாட்டமும்ட, அதற்கான பணியிலே ஈடுபட, எதற்கும் தயாராக இருக்கும் துணிவும் பெற, வீரர்கள் தோன்றியாக வேண்டும் என்பது, நமக்குப் பிடிக்காத கருத்துமல்ல நாட்டுப் பற்றுக்குப் போராடுகிறோம் என்ற நம்பிக்கையிலே கஷ்டநஷ்டமேற்க முன் வருவோரைப் பாராட்டக்கூடிய பண்பற்ற உள்ளமுமல்ல நமக்கிருப்பது. நமது நோக்கமெல்லாம் வீரம் விழலுக்கிறைத்த நீராகக் கூடாது, வீணர் கொழுத்து வாழவழி வகுப்பதாக இருக்கக்கூடாது, கூண்டிலே தேன்ஆடை கட்டிக் கொடுத்துவிட்டு, பிடிபட்டு. நசுக்கப்படும் தேனீக்களாக, அல்லது மகாராணிகளின் மகிழ்வுக்காக, முள்வேலியிடப்பட்ட தோட்டத்துக் குள்ளே துள்ளிவிளையாட விடப்படும் புள்ளிமானாக, பண்ணையாரின் களஞ்சியத்திலே “அறுவடை” யைக் கொட்டிவிட்டு, இண்டையிடம் ஆறுகலம் நெல் கேட்கும் உழவராக, இந்நாட்டு விடுதலைப் போருக்கு உழைத்தவர்களின் நிலை ஆகக்கூடாது என்பதுதான். அதாவது பாவபுண்ணியம் பேசிப் பணத்தைச் சுரண்டும் கொடுமையைப் போலவே, தேசபக்தி பேசி, வாலிபர்களின் உழைப்பை உறிஞ்சி ஒருசிறு கூட்டம் வாழ்ந்து வரும் சூது நடைபெறக்கூடாது என்று கூறுகிறோம்.

எனவேதான், நாட்டு விடுதலைப்போர் நடக்கிறது என்று நம்பி, தீயில் குளிக்கும் தீரர்கள் என, அதிலே தாவிச்செல்லும் தோழர்களைக் காணும்போது, நமது மனத்திலே பாராட்டுதலும், அத்துடன் ஈணைந்து பரிதாபமும் பிறக்கிறது - வீரர்கள், ஆனால் வீணருக்காக அல்லவா உழைக்கிறார்கள், தீரர்கள், ஆனால் தில்லு முல்லுக்காரரின் தர்பாருக்கல்லவா தாளம் போடுகின்றனர். என்று பரிதாபப்படுகிறோம். காங்கிரஸ் இயக்கம் என்பது சனாதனச் சூத்ரதாரியின் கயிற்றுக்கேற்றபடி ஆடுவதைக் கண்டே, நாம் ஆயாசப்படுகிறோம். வீர தீரத்துடன் ஆற்றப்படும் பணியின் மூலம், அடிமைப்பிணி போவதற்குப் பதில், புதிய முறிச்சீட்டிலே கையொப்பம் வாங்கப்படும் காரியமன்றோ நடக்கிறது என்று கவலைப்படுகிறோம்.

அருணா! எவ்வளவு தீரத்துக்கு, ஆச்சரியத்துக்கு இடமளிக்கக் கூடிய பெயர்! திடுக்கிடும் சம்பவங்கள் நிறைந்த கதைப் புத்தகத்திலே வரும், கதாநாயகிபோல் தோழியர் அருணா, சூரியனே அஸ்தமிக்காத சாம் ராஜ்யாதிபதியின், சூக்ஷமசக்திகள் அவ்வளவும் உயிருடன் இருக்கும் இந்நாளிலே, நாற்பத்தொரு மாதங்கள் தலைமறைந்திருந்தார்! சர்க்கார், அவர்மீது வாரண்டு இல்லை என்று தெரிவித்த பிறகு, “அருணாவின் விஜயம் - முழக்கம்” என்று பத்திரிகைகளிலே செய்தி வெளிவந்தது. ஜனவரி 30-ந் தேதி கல்கத்தாவிலே அக்காரிகை, பேசியிருக்கிறார், மறைந்திருந்ததற்குக் காரணம் காட்டி அல்ல, பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் இனி மறைந்தாக வேண்டும் என்ற உறுதியை விளக்கி! இத்தகைய தகவல் திடுக்கிடும் செயல்கள் - தீப்பொறி உரைகள், விடுதலை வேட்கைகொண்ட ஏவருக்கும் முக்கனிக்கு நிகர் ஆனால் இவைஎல்லாம் தெகிடுதத்தக்காரர் நடத்தும் தேசிய வியாபாரத்துக்கு கைமுதல் ஆகின்றனவே என்று எண்ணும்போதுதான், “அற்புதம் நிறைந்த அருணா அம்மையே! வணக்கம்! அதோபார். ஒரு சிறுகூட்டம் ஏன் ஆற்றலையும் உழைப்பையும், பெற்று, இந்த உபகண்டத்தில் சுரண்டிவாழ வழி வகுத்துக் கொண்டிருப்பதை! வீரவாழ்வின் அறிகுறியே, வீணருக்கு வாழ்வளிக்கும் பொறியிலே இருக் கிறாயே! எச்சரிக்கை!! என்று கூறவேண்டியிருக்கிறது. மணமளிக்கக்கூடிய சந்தனத்தை, மதியிழந்த வரைவிட்டு வெட்டி வரச்செய்து, ஓமகுண்டத்தி லிடுவதுபோல, உணவுக் குரிய நெய்யை ஊரார் உண்ணத் தராமல் தீயிலிட்டுத் திருப்தி பெறுவது போல், அருணாக்கள், இருக்கும் ஆட்சியை நிறுவ நடத்தப்படும், நய வஞ்சகத் தீயிலே தள்ளப்படுகிறார்கள் என்று எண்ணும்போது உண்மையில் வருத்தமும் கோபமம் கலந்து வரத்தானே செய்யும். மாதவி மனமகிழ்ச்சிக்காகக் கோவலன் கண்ணகியைக் கானம் பாடச் சொல்லவில்லை! இந்நாள்களிலோ, இந்திய உபகண்டத்திலே, முதலாளிக் கூட்டம் அதாவது பனியாக்கூட்டம், தேசபக்தி எனும் ஆர்வத்தைத் தூண்டிவிட்டு ஆரணாக்களை, ஆபத்துக்களைப் பொருட்படுத்தாது உழைக்கச் செய்கிறது, தனது சுயநல ஆட்சியைச் சமைக்க எவ்வளவு பரிதாபகரமான நிலைமை! எங்கு, நாட்டுப்பற்றுக் கான இயல்பு இருப்பதாக, அருணாக்கள் எண்ணிக் செல்கின்றனரோ அங்கு, உண்மையிலே, நயவஞ்சகம் குடிகொண்டிருக்கிறது, அவர்கள் நம்பி மோசம் போகிறார்கள் அமெரிக்காவிலே ஒருவகைப் பட்சி! அழகான பெயர், மலர்க் கொண்டைப் பறவை என்று, இனிமையாகப் பாடும், மரக்கிளைகளிலே அமர்ந்து, கீதம்பயிலும், அப்பறவைக்கு, மலர் போன்ற கொண்டை நீலங்கலந்த வெண்மைநிறங் கொண்ட அக்கொண்டை, காட்சிக்கினிய மலர்போலிருக்கு மாம்! அந்தக் காட்சிக்கினிய கொண்டையையே, அப்பறவை, நயவஞ்சகத்துக்குப் பயன்படுத்துவது! மரத்திலே ஆலைகளுக்கிடையே மறைந்து இருக்குமாம், கொண்டை மட்டும வெளியே தெரியும்படிக் காட்டி! கொண்டை, மலரெனத் தோற்றமளிக்கும், மலரிலே தேனைமொண்டு உண்டு களிக்கலாம் என்று வண்டுகள் மொய்த்திட வரும் பறவை, கொண்டைடயைக் காட்டி மயங்கி இழுத்த அந்த வண்டுகளைக் கொன்று தின்று விட்டுப் பிறகு குதூகலத்துடன் பாடும் இங்கு, இப்பறவைக் கூட்டம மனித உருவிலே உண்டு. úதிசய ஆர்வம் போலத் தோன்றும் மலர்க் கொண்டையைக் காட்டி மயக்கி, அருணாக்களை அருகே வரச் செய்து, பிறகு தமது இட்கொல்லிச் செயலை ஆரம்பிக்கும்! பனியாக் கூட்டம், úதிசயம் பேசுவதும், தேசபக்தையைப் பூஜிப்பதும், úதிசய இயக்கத்தை நடத்த முன்வருவதும், பசப்பும் பறவை மலர்க்கொண்டையை மட்டும் காட்டித் தன்னை ஆலைகளால் மறைத்துக் கொண்டிருப்பதற் கொப்பான காரியமேயாகும். அப்பறவைக்கு ஈயைôகும் வண்டுகள் போல, அருணாக்களின் சேலைகள், பனியாக் கூட்டத்திற்கே உரமும் உற்சாகமும் எட்டுகின்றன. இந்த நிலைமை கண்டு நொந்த உள்ளத்திலிருந்து கிளம்பும் நமது சொல்லைத் தள்ளிவிடுவதும் அதிசயத் திருப்பணியிலே ஒன்று - மிக முக்கியமானது என்று கருதுவாருண்டு. தோழியர் அருணா அப்படிப் பட்டவரல்லர் என்று நாம் நம்புகிறோம். ஏனெனில் அவர் கல்கத்தாவிலே ஆற்றிய சொற்பொழிவிலே, ஏகாதிபத்திய ஒழிப்புப் பற்றியும் காங்கிரஸ் சக்தி பற்றியும் மட்டும் பேசிவிடவில்லை.

“இந்திய முதலாளி வர்க்கத்தினர் கையில் அதிகாரம் சிக்கிவிட நாம் இடம் கொடுக்கக்கூடாது” என்று பேசியிருக்கிறார். ஏன் அந்தக் கருத்து ஏழவேண்டிய அவசியம் ஏற்பட்டது! முதலாளித்துவம், தேசியப் போராட்டத்தை நடத்துவதாகக் கூறிக்கொண்டு, தன் கரத்தை வலுவாக்கிக் கொள்வதை அம்மை அறிந்திருக்-கிறார், அது இகாது என்று எண்ணுகிறார், நாம் பலகாலமாகக் கூறிவருவது, அருணா போன்றவர்களின் வாயிலிருந்தும் வெளிப்படுவது காண மகிழ்கிறோம். இதனை அருணோதயம் என்றும் கொள்கிறோம், உண்மை ஒளி, பரவட்டும், மேலும் மேலும் விரைவாக, இன்னும் சற்றுத் தெளிவாக!

(திராவிடநாடு - 3-2-46)