அறிஞர் அண்ணாவின் கட்டுரைகள்


அதையும் பார் - இதையும் பார்

பாழடைந்த அஸ்தினாபுரத்திற்கு ஐந்துமைல் தொலைவில், கங்காகாதர் எனும் சமவெளி இருக்கிறது. பல நூற்றாண்டுகளாக அந்தமண், மக்கள் பரிசத்தையே கண்டதில்லை. இன்று அதற்குப் புதுவாழ்வு கிடைத்திருக்கிறது. பெரியபெரிய இயந்திரக் கலப்பைகள் அந்தப்பகுதியைப் பண்படுத்தும் பணியில் ஈடுபடுத்தப் பட்டுள்ளன. இந்திய அரசாங்கத்தின் பொருளைத் துணைகொண்டு ஐக்கிய மாகாணம், வெட்டவெளியை பயிர் விளையும் வயல்களாக மாற்றும் வேலையை மேற்கொண்டுள்ளது.

மொத்தம் 20,000 ஏக்கர் நிலங்கள் சாகுபடிக்குத் தகுதியானதாக ஆக்கப்பெறும். அடுத்த ஆண்டு மே மாத்திற்குள், அங்கு, குடியிருக்கத்தகுந்த முறையில் திருத்தி அமைக்கப்படும். 500 ஏக்கர் கொண்ட கிராமங்களாக, அப்பகுதி பிரிக்கப்படும். பத்து ஏக்கர்களுக்கும் குறையாமலும் இருபது ஏக்கர்களுக்கு அதிகம் போகாமலும் தனி நபர்களுக்குக் கொடுக்கப்படும். சிறு சிறு துண்டாக்குவது கண்டிப்பாகத் தடுக்கப்படும்.

முதல்முதலாக அங்கு உரமாக உபயோகமாககப்படும் உயர்ந்த தழைப்பயிர் செய்யப்படும். பின்னர் கோதுமை பயிரிடப்படும். மேலும் ஓராண்டிற்குள், இப்பொழுது ஐக்கிய மாகாணத்தில் உற்பத்தியாகும். உணவுப் பொருளைக் காட்டிலும் 18000-டன் கோதுமை கூடுதலாகும் என நம்பப்படுகிறத. இது போன்ற இன்னும் சில திட்டங்களை ஐக்கிய மாகாணசர்க்கார் பின்னர் மேற்கொள்ள இருக்கிறது. மக்கள் பசியாற உட்கொள்வதற்கு உணவுப் பொருள் கிடைக்காமல் திண்டாடிக் கொண்டிருக்கும் நேரத்தில், பண்படுத்தினால் நன்செய் புன்செய் பயிர்கள். தேவையான அளவிற்கு அதிகமாகக் கிடைக்கும் மண்ணை மறந்து வாழ்வது, மதிகெட்ட செயல் - மன்னிக்க முடியாத குற்றம். இந்திய அரசாங்கத்தின் உதவியை நாடி, உருவான காரியத்தைச் செய்ய முனைந்த ஐக்கிய மாகாணத்தின் முயற்சிபோற்றுதலுக்குரியது மட்டுமல்ல, மற்ற மாகாணத்தவரும் பின்பற்றக் கூடியநல்ல முறையுமாகும்.

தென்னாட்டில் இத்தகைய முயற்சி மேற்கொள்ளப் படுமா? இங்கு எவ்வளவோ நிலப்பரப்பு கவனிப்பாரற்ற, வெறும் கள்ளியும் முள்ளியும் படர்ந்த காடாகக் கிடக்கிறது. பயிர் செய்யப்படும் நிலங்களுக்கும், நாட்டில் பலபகுதிகளில் நல்ல நீர் தேக்கங்கள் இல்லாத குறையால் ஒருபோகம் பயிராவதும் குதிரைக் கொம்பாக இருக்கிறது. இக்குறைபடடால் காலாகாலத்தில் பெய்யும் மழையும் கடலோடு கலக்கவும், பருவமழையை நம்பிப் பயிர்வைத்துவிடும் உழவன், பருவம் தவறிவிடின் மாடுபோல் உழைத்தும் குறைந்த பலனையே பெறவேண்டியவனாகவும் இருக்கிறான்.
இத்துறையில் ஏதாவது மந்திரிகள் செய்ய முற்படினும், இந்திய அரசாங்கம் எந்த அளவிற்கு உதவி செய்யும் என்பது முதல் முதலாகத் தீர்மானிக்க வேண்டிய விஷயம் வடநாட்டிலுள்ள பகுதிகளுக்குக் காட்டப்படும் அக்கரை, தென்னாட்டிற்குக் காட்டப்படுமா? இன்றுள்ள இந்திய அரசாங்கத்தின் போக்கு இம்முறையில் நம்பிக்கையூட்டுவதாக இல்லை.

சிலநாளைக்கு முன் சென்னைக், இந்திய அரசாங்கத்தில் மின்சாரம் சுரங்கம் முதலிய இலாக்காக்களின் மந்திரியாக இருக்கும் ண.தி. காட்கில் வந்தார். அவருக்கு, சென்னை அரசாங்க மாளிகையில் விருந்துபசாரம் நடந்தது. பிரதமர், மராமத்து இலாக்கா மந்திரி பக்தவத்ஸலம் உள்பட சில அமைச்சர்களும் கலந்துகொண்டனர். விருந்துக்குப் பின்னர், டில்லியிலிருந்து வந்துள்ள பெரிய அமைச்சரைத் தென்னாட்டின் பல பகுதிகளிலிருந்தும்பல முக்கியஸ்தர்கள் பேட்டி கண்டனர். இராயலசீமா பகுதியினர், தங்கள் பகுதியில் பூமிக்கடியில் பற்பல உலோகங்கள் மறைந்து கிடப்பதாக முன்னரே இந்திய அரசாங்கம் ஆராய்ச்சி செய்து அறிக்கை வெளியிட்டிருப்ப
தாகவும், அதனைப் பயன்படுத்தும் முறையில் சில சாதனங்களை அமைத்துக் தரவேண்டுமென மனு ஒன்றை அமைச்சர் கையில் அளித்தனர்.

வடக்கு விசாப்பட்டினம் ஜில்லாவின்சார்பில், “உத்திர ஆந்திரா” பத்திரிகையின் ஆசிரியரான இராமமூர்த்தி என்பவர், வாம்ஷதாரா - லாங்குலையா திட்டங்களை நிறைவேற்ற, சென்னை அரசாங்கத்திற்குக் கடனாகவாவது அல்லது இனாமாகவாவது பணம் கொடுத்து உதவவேண்டுமெனக் கேட்டுக் கொண்டார்.

கிருஷ்ணா - பெண்ணாறு திட்டத்தை நிறைவேற்ற, சென்னை அரசாங்கத்திற்குப் பொருள் உதவி செய்யவேண்டு மெனத் திருமுகம் சமர்ப்பிக்கப்பட்டது.

சீடெட் ஜில்லாக்களின் செல்வ வளர்ச்சிக்கான வகையில் உதவவேண்டுமென வேண்டுகோள் சமர்ப்பிக்கப்பட்டது.

செங்கல்பட்டு ஜில்லாவின் சார்பில் சி.என். முத்துரங்க முதலியார், அடையாறு - ஆரணி திட்டங்களை நிறைவேற்றவும், மின்சாரக் கருவிகளைச் செய்யும் தொழிற்சாலை வசதிக்கும் ஆவனசெய்யவேண்டுமெனக் கேட்டுக் கொண்டார்.

இந்தமனுக்களும், வேண்டுகோள்களும் என்னவாயின, தெரியுமா? ஒன்றுக்கு இல்லையாயினும், மற்றொன்றிற்காவது அமைச்சரிடமிருந்து நல்லவாக்குக் கிடைத்தாகக் கருதுகிறீர்களா? பொறுப்புள்ள அமைச்சராயிற்றே, அந்தத் தவறை எல்லாம் செய்து விடுவாரா? வெட்டு ஒன்று துண்டு இரண்டாகவே பேசினார்!

‘இவ்வளவு மாகாணப்பற்று உதவாது. நாம் அனைவரும் ஒரு தாயின் சேய்கள். சென்னையின் திறமை டில்லியில் பிரகாசிக்கிறது. இந்தியாவின் மொத்த நலத்தையே நீங்கள் கருத்தில் கொள்ளவேண்டும். நமது உள்ளங்களில் மாகாணப் பற்றுக்கு இனி அறவே இடமளித்தல் கூடாது. இந்தியா எனும் பெரு நோக்கு நமக்கு வேண்டும’ என்றெல்லாம் கூறிவிட்டு, இத்திட்டங்கள் அனைத்தும் நிறைவேற மேலும் பத்து ஆண்டுகள் பிடித்தாலும் பிடிக்கலாம் என முடித்துவிட்டார்.
வானம் பெய்யும் மழை, கடல் நீரோடு கலந்து வீணாகிறதென்றும், நல்ல தேக்கங்கள் காண்பதின் மூலம் மின்சார உற்பத்தியை அதிகரித்து, வீட்டிற்கு வீடு ரேடியோவும், கிராமத்திற்கு கிராமம் மின்சார விளக்குகளும் ஏற்படுத்தலாம் என்றும், தொழில் வளத்தைப் பெருக்கி எல்லா மக்களுக்கும் வேலை தரலாம் என்றும், இயற்கையில் மறைந்து கிடக்கும் சக்தியை எந்தெந்த வகையில் பயன்படுத்தலாம் என்றும், வாய்ப்பந்தல் போட்டார். இந்தப் பேச்சினால், மனு சமர்ப்பித்தவர்களுக்க எரிச்சல் ஏற்படடிருக்காதாயினும், மனமகிழ்ச்சி பிறந்திருக்காது. அமைச்சரின் போக்கு, அவர் விரும்புகிறபடி, ‘அகண்ட இந்தியா’ எனும் எண்ணத்தைத் தூண்டுவதற்கு பதில், மாகாணப்பற்றுதலில் அதிக ஆக்கம் பிறப்பதற்கே வழி உண்டாகும்.

ஏற்கனவே தொழில்வளம் நிறைந்துள்ளது ஐக்கிய மாகாணம். உணவுப் பொருள் உற்பத்தியிலும், அம்மாகணத் தேவைக்கும் அதிகமாகப் பயிராகிறது. அங்கு இனியும் உணவுப் பொருள் உற்பத்தியைப் பெருக்க, ஊக்கம் காட்டப்படுகிறது. இந்திய அரசாங்கமும் அதற்குத்துணை செய்கிறது. ஆனால் பற்றாக்குறை மாகாமாயுள்ள தென்னாட்டிற்கு, உதவி இன்றியமையாததாகவேண்டப்படும் தென்னாட்டிற்கு தொழில் வளமே இல்லாத தென்னாட்டிற்கு, பத்தாண்டு காத்திருங்கள் - இந்தியா எனும் பரந்த நோக்கம் கொள்ளுங்கள் - எனும் விரும்பத்தகாத பொருத்தமற்ற உபதேசம் செய்யப்படுகிறது.

இங்கு நமதுமக்கள் வேலையின்றித் திண்டாடவும், உண்பதற்குப் போதுமான அளவு கிடைக்கப் பெறாமல் வேதனைப்படவும், இயற்கை வளமிருந்தும், அதனைப் பக்கவப்படுத்தும் வகையின்றித்துக்கப்படவும், பரிகாரம் தேட முற்பட்டால் ‘மாகாணப்ற்று அதிகம்’ எனும் பழிச்சொல்லுக்கு ஆளாகவும் ஆனநிலை இருக்கிறதே - இந்த நிலை மாற வேண்டாமா - இதற்கு நமது முயற்சி இருக்க வேண்டாமா - எனும் எண்ணங்கள், திருமுகம் தந்த தோழர்களின் உள்ளத்தில் ஊசலாடாமலா இருக்கும். இன்று அது வெளிக்கு விளக்கமாகத் தெரியவில்லையேயன்றி, நாள் செல்லச் செல்ல அந்த எண்ணம் வலுவடையத்தான் போகிறது.
ஏதோ நாம் துவேஷ புத்தி கொண்டு பேசுவதாக நம்மீது பழிகூறித் திரியும் தோழர்கள், ஐக்யமாகாணத்தில் நடைபெறுவதையும், தென்னாடு புறக்கணிக்கப்படும் தன்மையையும் கருத்தோடு கவனிக்குமாறு கேட்டுக் கொள்ளுகிறோம்.

(திராவிட நாடு - 28-12-47)