அறிஞர் அண்ணாவின் கட்டுரைகள்


அதோ, நமது லட்சிய பூமி!

நமது உழைப்பு மிகமிகக் குறைவு நமது இலட்சிய வெற்றிக்கு, ஒரே மொழியின் மூலமாக வந்து சிதறிக் கிடக்கும் பலரின் ஒத்துழைப்பையும் பெற நாம் தவறிவிட்டோம். அந்த வகையில், நமது முயற்சி ஒரு துளியும் இல்லை. இருந்தாலும், நமது கோரிக்கைக்கு இருக்கும் மறுக்க முடியாத காரணங்களையும், அதற்குள்ள அழிக்க முடியாத சக்தியினையும் நாம் நன்கு உணர்ந்திருப்பதுபோல், மற்றவர்களுக்கும் உணர்த்தும் ஆற்றல், நமது பலக் குறைவால் - எதிர்ப்புச் சக்தியால் - கட்டுப் படுத்தப்படுகிறதே என்று நாம் கவன்றது உண்டு. ஆனால், அந்தக் கவலையைத் துடைத்து, நமக்குப் புதிய பலத்தைத் தேடிக் கொடுத்து, இலட்சிய வெற்றிக்கான கால அளவை சிறிதாக்கும், நற் பணியில், நாடாள வந்துள்ள டில்லி விடுதலை வீரர்கள், வெகு தீவிரமாகப் பாடுபடுகிறார்கள். தங்கள் நடவடிக்கைகளால், எதனை ஒழித்துக் கட்டிவிடலாம் என்று தீர்மானித்திருக்கிறார்களோ, அதே அடக்குமுறைகள், தங்கள் நோக்கத்திற்குப் படுதோல்வியைத் தரும் - தந்திருக்கின்றன என்பதைச் சொந்த அனுபவத்தின் மூலம் உணர்ந்திருந்தும்கூட, தங்கள் விருப்பத்தை நிறைவேற்ற அடக்கு முறைகளைத் தேடுவது விந்தையாகத்தான் இருக்கிறது. அடக்கு முறை வீசிய ஆதிக்கம் அழிக்கப்பட்டதும், அதற்கு ஆளான இலட்சியம் நசித்துவிடாமல், அடக்கு முறைகள் அதிகரிக்க அதிகரிக்க, அந்த இலட்சியம் மேலும் மேலும் பலம் பெறவும், முடிவில் அடக்கு முறை வீசியவர்கள் வெளியேறவும், அதற்கு ஆளானவர்கள் அதிகாரத்தில் அமரவும், இலட்சியம் வெற்றி பெறவுமான நிகழ்ச்சிகள் பலவற்றை ஏடுகள் தாங்கிக் கொண்டிருந்தும், இவர்கள் அதனை மறந்து விட்டு நடப்பது வேதனை கலந்த வேடிக்கையாகத்தான் இருக்கிறது!

வெள்ளையர்கள் ஆண்ட நேரத்தில், விடுதலை வேட்கை நாட்டில் அதிவேகமாகப் பரவுவதைக் கண்ட பொழுதெல்லாம், அந்த வேகத்தைத் தணிக்க, ஏதாவது புதிய அரசியல் சலுகைகள் தரவேண்டியது தங்கள் நீங்காகக் கடமை என்று பரப்பி, தக்கது செய்ய, இருக்கும் தகுதியைத் தெரிந்துகொள்வது முக்கியம் என்று கூறி, அதற்கான ஏதாவது ஒரு கமிட்டி - மாநாடு - கூட்டுவர். காலத்தைக் கடத்த, ஏகாதிபத்தியம் கையாண்ட சிறந்த முறை இது. இவ்வாறு, நாடு சுற்றி, பல சாட்சியங்கள் பெற்று, குழுவினர் வீடு திரும்பினதும், வெளியிடுவர் நீண்டதோர் அறிக்கை. அந்த அறிக்கையில் மூலக் கோரிக்கை - விடுதலை விருப்பம் - மறைக்கப்பட்டிருக்கும்.. அதற்காக இருப்பதாகச் சொல்லப்படும் முட்டுக் கட்டைகளின் சக்தி பெரிதாக்கிக் காட்டப்பட்டிருக்கும். பின்னர் இரண்டொரு சலுகைகள் - தங்கள் ஆதிக்கத்திற்கு ஆபத்து வராத நிலையில் - அளிப்பர். இது அமலுக்கு வருவதும் அவ்வளவு சுலபத்தில் இருப்பதில்லை. எவர் எதிர்ப்பையாவது காரணங்காட்டி, அமல் நடத்துவதைத் தள்ளிப் போடுவர். இதற்குள் பல ஆண்டுகள் சென்றுவிடும். புதிய பிரச்னைகள் பல தோன்ற ஆரம்பித்துவிடும். இப்படியே - மக்களின் விருப்பம் நிறைவேற விடாமல் - பார்த்துக்கொண்டு வந்தனர் வெள்ளையர். முடிவில் வெளியேறினர்!
* * *

வெள்ளையர்கள் ஆண்ட நேரத்தில், விடுதலை வேட்கை நாட்டில் அதிவேகமாகப் பரவுவதைக் கண்ட பொழுதெல்லாம், அந்த வேகத்தைத் தணிக்க, ஏதாவது புதிய அரசியல் சலுகைகள் தரவேண்டியது தங்கள் நீங்காக் கடமை என்று பரப்பி, தக்கது செய்ய, இருக்கும் தகுதியைத் தெரிந்துகொள்வது முக்கியம் என்று கூறி, அதற்கான ஏதாவது ஒரு கமிட்டி - மாநாடு - கூட்டுவர். காலத்தைக் கடத்த, ஏகாதிபத்தியம் கையாண்ட சிறந்த முறை இது. இவ்வாறு, நாடு சுற்றி, பல சாட்சியங்கள் பெற்று, குழுவினர் வீடு திரும்பினதும், வெளியிடுவர் நீண்டதோர் அறிக்கை. அந்த அறிக்கையில் மூலக் கோரிக்கை - விடுதலை விருப்பம் - மறைக்கப்பட்டிருக்கும். அதற்காக இருப்பதாகச் சொல்லப்படும் முட்டுக் கட்டைகளின் சக்தி பெரிதாக்கிக் காட்டப்பட்டிருக்கும். பின்னர் இரண்டொரு சலுகைகள் - தங்கள் ஆதிக்கத்திற்கு ஆபத்து வராத நிலையில் - அளிப்பர். இது அமலுக்கு வருவதும் அவ்வளவு சுபலத்தில் இருப்பதில்லை. எவர் எதிர்ப்பையாவது காரணங்காட்டி, அமல் நடத்துவதைத் தள்ளிப் போடுவர். இதற்குள் பல ஆண்டுகள் சென்றுவிடும். புதிய பிரச்னைகள் பல தோன்ற ஆரம்பித்துவிடும். இப்படியே - மக்களின் விருப்பம் நிறைவேற விடாமல் - பார்த்துக் கொண்டு வந்தனர் வெள்ளையர். முடிவில் வெளியேறினர்!
* * *

இதே முறையை - பிரச்னையை தள்ளிப் போடுவதின் மூலம் கோரிக்கையைக் கொன்றுவிடலாம் என்னும் கோணல் முறையை - வெள்ளையர்கள் விட்டுப்போன அதிகார பீடத்தில் அமர்ந்து கொண்டு, விடுதலை வீரர்கள் என்று மக்கள் நம்பிக்கையோடு அளித்த விருதுகளைப் பெற்றுக்கொண்டு, டில்லியிலே ஆட்சி புரியும் காங்கிரஸ் மேலிடம், மேற் கொண்டிருக்கிறது. எந்தக் கோரிக்கை யையும், கோரிக்கை எவ்வளவு நியாயமானதாக இருந்தபோதிலும், கோருவோர்கள் மீது துவேஷம் கற்பித்து, கோரிக்கையைச் சாதாரணமானதாக ஆக்கி விடலாம் என்ற தீர்மானத்தோடு செயலாற்றுகிறது.

மொழிவழியாக மாகாணம் அமைவது அவசியமானது என்ற கருத்தை மக்களுக்கு ஊட்டியதும் காங்கிரஸ் தான்; இன்று அதனை மறுப்பதும் காங்கிரஸ்தான் என்று முன்கூறினோம். மொழிவழி மாகாணம் வேண்டுமென்று, இன்று, கூறுபவர்களும் ஆத்திரத்தோடு கோபிப்பவர்களும் காங்கிரஸ் தியாகிகள்தான்; அதனை மும் முரமாக எதிர்ப்பவர்களும் காங்கிரஸ் தலைவர்கள்தான் என்றும் முன்னர் விளக்கி இருந்தோம். காங்கிரஸ் மேலிடம் என்னும் அமைப்பையே தங்கள் உள்ளங்கைகளில் மூடிவைத்திருக்கும் இரண்டொரு மேலிடத்தாருக்குத் தாங்கள் முன்கூறியபடியே மொழி வழியாக மாகாணங்களைத் திருத்தி அமைப்பது பிடிக்கவில்லை. ஆனால், தாங்கள் முன்னாள் சிருஷ்டித்த சித்திரங்கள் இன்று உயிர் பெற்றுப் பேசுவதை, கண்களை உருட்டித் தங்களை உற்று நோக்குவதை, கைகளை இறுக மூடிக்கொண்டு ஓங்குவதை, இந்த மேலிடத்துச் சூத்திரதாரிகளால் பார்த்துக்கொண்டு வேறு வேலையை கவனிக்க முடியவில்லை. முடியாது என்று சொல்லவோ - கூறியபடி நிறைவேற்றவோ - இவர்களுக்குத் துணிவு ஏற்பட வில்லை. வெள்ளையர் வழியைப் பின்பற்றத் தொடங்கினர். கமிட்டி ஒன்றை நியமித்தனர். மத்திய மாகாணத்தைச் சேர்ந்த அலகாபாத் உயர்நீதி மன்றத்திலிருந்து ஓய்வு பெற்றுள்ள நீதிபதி தோழர் எஸ்.கே. தார் அவர்களைத் தலைவராகக் கொண்டும், ஐக்கிய மாகாணத்தைச் சேர்ந்த டாக்டர் பன்னாலால், பீகார் மாகாணத்தைச் சேர்ந்த ஜகத் நாராயண்லால், மற்றொருவரையும் அங்கத்தினர்களாகக் கொண்டு ஒரு விசாரணைக்குழுவை நியமித்தனர். அந்தக் குழுவினர் விசாரணை செய்து கொண்டிருக்கும் பொழுதே, பட்டேல் - இயல்புப்படி - கொஞ்சம் காரசாரமாகவும், பண்டிதர் நாகரிகமாக வும், முன்ஷி விஸ்வாமித்ரபோக்கிலும், மொழிவழி மாகாணக் கோரிக்கையைக் கண்டித்துப் பேசினர். எரியும் தீயில் எண்ணெயைப் பெய்ததுபோல் ஆயிற்று. குழுவினரில் உள்ள முக்கியமான மூவரும், அரிய கலாசாரத்தை, பண்பாட்டை - இந்தத் துணைக்கண்டம் முழுவதிலும் புகுத்த வேண்டும் என்னும் நோக்கமுடைய மாகாண வாசிகள். ஹிந்தி மொழியின் நடமாடும் உருவங்கள். இவர்களை நியமித்தவர்களும் அதே கருத்தினர். பிரச்னையைத் தீர்த்து வைப்பது அல்ல முக்கியம், கோரிக்கை யாளர்களின் கண்களைத் துடைப்பது தான் முக்கியமானது என்பது, குழுவைத் தோற்றுவித்தவர்களின் முழு நோக்கம். அவர்கள் நம்பிக்கையை இழந்துவிடவில்லை, இக் குழுவினர். அதற்கேற்றாப் போல் அறிக்கையும் வெளியிட்டுள்ளனர்.
* * *

‘இந்தியாவை ஒரு பலம் பொருந்திய ‘நேஷன்’ ஆக்க வேண்டும்!’ இந்த ஒரே அளவு கோலைக் கொண்டுதான், மொழிவழி மாகாணக் கோரிக்கையை, இந்தக் குழுவினர் அளக்க முனைந்தனர். மொழிவழி மாகாணத்தின் முக்கியத்தையோ, நன்மை தீமைகளையோ, அந்தந்த மாகாணத்தில் மொழி வளர்ச்சியையோ, இவர்கள் மனதில் கொண்டு ஆராய்ந்து பார்க்கவில்லை. இந்தியாவைப் பலமான ஒரே நேஷனாக ஆக்குவது என்பதுதான் இவர்களின் நீண்ட நாள் தீர்மானம். மொழி தொலைந்து, வாழ்க்கையின் வழி தொலைந்து, மக்கள் எவ்வாறு கெட்டாலும், இந்தக் குழுவினருக்கும் கவலை இல்லை. இவர்களுடைய கவலை எல்லாம், மற்றவர்களிடத்தில் அச்சமூட்டக் கூடிய அளவிற்கு இந்தியா ஒரு நேஷனாக வேண்டும் என்பதுதான்!

இந்த முடிவுகாண - முன்னரே தீர்மானித்துக் கொண்டிருக்கிற முடிவைக் கூற - நாடு சுற்றிப் பொதுமக்கள் பணத்தைப் பாழ் செய்திருக்க வேண்டியதில்லை. வெள்ளை ஏகாதிபத்ய வாதிகளையும் தோற்கடித்து விட்டனர், இந்தத் தேசிய வாதிகள்!

மொழி வழி மாகாணக் கோரிக்கையைத் தீர்மானிப்பதற்கு, இந்த ‘நேஷன்’ அளவுகோலை உபயோகித்துப் பார்த்தார்களாம். பிரச்னை அளவுகோலுக்கு அடங்குவதாக இல்லையாம்.

“இந்தப் பிரிவினைக் கோரிக்கை ஏற்றுக் கொள்ளப் பட்டால், இறுதியில் முழுத் தேசமும் துண்டாடப்படுவதில் வந்து முடியும்” என்று குறிப்பிட்டிருக்கிறார்கள்.

“மொழிவழி மாகாணக் கோரிக்கையின் அடிப்படையில் துணைத் தேசிய உணர்வு இருக்கும். அது, இந்தியா என்னும் ஒரே தேசிய உணர்வு கொள்வதைக் கெடுத்து விடும். பல துணைத் தேசியங்கள் இந்தியாவில் தோன்றவேண்டும் என்று விருப்பமிருக்குமானால், அதற்கு மொழிவழி மாகாணம் ஏற்படுத்துவதைக் காட்டிலும் வேறு நல்ல வழி கிடையாது.”

இவ்வளவோடு அவர்கள் நிற்கவில்லை.
“மொழிவழி மாகாண எண்ணத்திலிருந்து தோன்றும் துணைத் தேசிய உணர்வினால் உண்டாகும் ஆவேசம், தேசிய உணர்வால் ஏற்படும் ஆவேசத்தைக் காட்டினும் சக்தி வாய்ந்ததாக இருக்கும். தேசிய உணர்வும் துணைத் தேசிய உணர்வும், ஒன்றை ஒன்று அடக்க முயலுவதின் மூலம் உருவாகும் இரு ஆவேச அனுபவமாகும். மொழி வழி மாகாணத் துணைத்தேசிய உணர்வு சிறந்ததோர் சக்தியாக விளங்குவதோடு, அதிக அளவில் ஆவேசமூட்டக்கூடியதாகவும் இருக்கும். இந்த நிலையில், இரு தேசியத்திற்கும் மோதுதல் ஏற்படுமானால், புதிதாகக் கிளம்பியுள்ள (இந்திய) தேசியம் கண்டிப்பாகச் சீர்குலைந்துவிடும்; முடிவில் மறைந்தொழியும்.”

இவ்வாறு கூறுவதின் மூலம், அந்தக் குழு மொழிவழி மாகாணப் பிரச்னையை மறுத்துவிட்டது. அத்துடன் நிற்கவில்லை. இந்திய தேசியம் வளரவும், தேசபக்தி பெருகவும், இதுவரையில் காங்கிரஸ் கொண்டிருந்த பலநாள் கொள்கையைத் தியாகம் செய்துவிட வேண்டுமென்றும் கூறுகிறது. வாக்குறுதி - நேர்மை - சத்தியம் - அவ்வளவு உயர்ந்த பண்புகளையும், புறக்கணித்து விடுமாறு கூறுகிறது. ஹிட்லர் கொண்ட அரசியல் முறையாகும் இது. வியாசர் விருந்து உண்டு பழகியவர்களுக்கு, தாரின் விருந்து வேம்பாகவா இருக்கப் போகிறது?

மாகாணங்களின்மீது குதிரை ஏறும் அளவிற்கு டில்லிக்கு அதிகாரம் வேண்டும்; கடிவாளம் போட்ட மாதிரியாக மிச்ச அதிகாரமும் டில்லிக்கு இருக்கவேண்டும். இது குழுவின் கோரிக்கை. இவ்வளவும் எதற்கு? புதிய மாகாணங்களை உருவாக்க - இந்திய தேசியத்தை வளர்க்க!

இந்தப் புதிய மாகாண ஏற்பாடும், மொழிவழி அன்று. டில்லியின் ஆதிக்க வெறியை நிறைவேற்றுவதற்கு ஏற்றாப்போல் அமைக்கப் பெற வேண்டுமாம். வெள்ளையர்களின் பிரதிநிதிகள் போல் பேசுகிறார்கள்!

அதே நேரத்தில், குழு, மற்றொன்றையும் குறிப்பிடத் தவற வில்லை. மலையாளிகளும் கன்னடர்களும் தங்கள் தேவைகள் வேண்டிய அளவிற்குப் பூர்த்தி அடையாமல் அவதிப்படுவதாகவும், அவர்கள் தலைநகரங்களான பம்பாயும் சென்னையும், வெகு தொலைவில் இருப்பதே அதற்குக் காரணம் என்றும் சொல்லுகிறது. இதற்குப் பரிகாரம் என்ன தெரியுமா? மலையாளிகளுக்கும் கன்னடர்களுக்கும் ஆவன செய்ய வேண்டுமென்று, அவர்களுக்கு அண்டை வீடு என்று எண்ணிக்கொண்டு - டில்லிக்கு வேண்டுகோள் விடுக்கிறது குழு!
* * *

இந்திய தேசியமும் - துணைத் தேசியமும் மோதுகிறது! மோதிக்கொள்ளும் அளவிற்கு அவைகளில் என்ன இருக்கிறது? இந்திய தேசியத்தின் முடிந்த இலட்சியமென்ன? துணைத் தேசியத்தின் இலட்சியம், அதற்கு முரண்பட்டிருக்கக் காரணமென்ன? ஒன்றையொன்று பகைத்துக் கொண்டு வளர்ச்சி அடைய வேண்டியதுதான் அதனதன் இயல்பா? இதனை, மனித முயற்சியால் மாற்ற முடியாதா? அதிகப்படியான அதிகாரத்தைத் தேசியத்திடம் ஒப்படைப்பதின் மூலந்தான் துணைத்தேசிய உணர்வை அழிக்க முடியுமா? மனமறிந்து துணைத் தேசியம், தேசியத்திடம் சரணடைவதுதான், தேசிய வளர்ச்சிக்கு இருக்கும் ஒரே சிறந்த வழியா? இந்திய தேசியம் பலமடைவதால் பயன் பெறப்போகிறவர்கள் யார் யார்? துணைத் தேசியம் வலுவடைவதால், வாழ்வு பெறப்போகிறவர்கள் எவர் எவர்? ஒரே மக்கள்தானா? அப்படித்தான் என்றால், துணைத் தேசிய உணர்வைக்கொன்று, ஒரே தேசிய உணர்வைப் பெருக்க வேண்டிய அவசியமென்ன? இந்திய தேசிய உணர்வில் சிலரின் நன்மைகள் மறைந்திருக்கின்றன! துணைத்தேசிய உணர்வில், அவர்களை நீங்கிய - வேறு புதிய சிலரின் நலபலன்கள் மறைந்திருக்கின்றன! முன்னையது நன்கு வளர்ந்திருப்பது; பின்னையது வளர்ச்சியடைய வேண்டிய நிலையில் உள்ளது. எனவே, இரு தேசிய உணர்வுக்குள்ளும் மோதுதல் ஏற்படும் என்று அஞ்சப்படுகிறது. இந்த அச்சத்தின் விளைவுதான், தார் அறிக்கை.

ஆகவே, இருசாராருக்கும், உள்ளமும் உதடும் வெவ்வேறு பேசிக்கொண்டு இருக்கின்றன. மக்கள் முன்னேற்றந்தான், மக்களுக்கு வாழ்வு தேடுவதுதான், ஒரு ஆட்சியின் - எவர் அதிகாரத்தில் இருந்தாலும் - அடிப்படை நோக்கமாக இருக்க வேண்டும் என்ற தூய எண்ணம் இருவருக்கும் இருக்குமானால், உள்ளத்தைத் திறந்து காட்டிப் பரிகாரம் தேடும் முயற்சியை மேற்கொண்டு இருக்க மாட்டார்களா? முன்னாள்தான் வெள்ளையர் இருந்து, இங்கு மக்களிடை வேற்றுமையை வளர்த்து வந்தனர். இப்பொழுது அவர்களுந்தான் போய்விட்டார்களே! இன்னும் ஏன், இவர்களிடை பிளவும் பிணக்கும் தாண்டவ மாட வேண்டும்?

இருவரிடத்திலும் நேர்மை இல்லை. இருவர் மனத்திலும் மாசு இருக்கிறது. வெவ்வேறு எண்ணங்கள் - ஒன்றோடொன்று ஒத்துப் போகக்கூடாததான - இவர்கள் உள்ளங்களில் குடி புகுந்து இருக்கின்றன. எனவே ஒரே பொருளை, இருவரும், ஒரே கோணத்தில் இருந்து பார்த்த போதிலும், வெவ்வோறு இருப்பதைக் காண்கிறார்கள். ‘அச்சமில்லை, அச்சமில்லை’ என்று ஆர்ப்பரித்தவர்கள், உள்ளங்களிலே இன்று அச்சம் நிறைந்து போய் வழிகிறது. ஆத்ம சக்தியின் எல்லையை அளந்து பார்த்துவிட்டதாகக் கூறியவர்கள், ஆத்திர சக்திக்கு, அவநம்பிக்கை சக்தி, ஆதிக்க சக்திக்கு ஆளாகிப்போய் இருக்கிறார்கள்!

இந்த நிலையை மாற்ற, முளைவிடும் பருவத்தில் உள்ள இந்திய தேசீயத்தைக் காப்பாற்ற, துணைத் தேசீய உணர்வுகளைப் பலம் பொருந்திய மத்திய சர்க்காரின் அடக்கு முறைகளால் அழித்துவிடலாம் என்று, முன்னாள் நீதிபதி கூறுகிறாரே, முன்பின் யோசியாமல், அது நடக்கக்கூடிய காரியந்தானா? நீதிபதி நிலையில் இருந்தவர், அதிகாரத்தை இவ்வளவு சிறப்பித்துக் கூறுவது, சிந்தனையைத் தூண்டக்கூடிய விஷயமாகும். நல்ல காலம், அவர் ஓய்வு பெற்ற நீதிபதி என்பது மிக்க மகிழ்ச்சிக்குரியதாகும்!

இந்திய தேசீயம், முளைவிட்டிருக்கிறது; ஆனால் இன்னும் துளிர்விடவில்லை, இவ்வாறு கூறுகிறது குழு. செடியாகி, மரமாகி, பூத்துப் பிஞ்சுவிட்டுக் காய்த்துக் கனிதரும் பக்குவத்தை அடைந்தால், மக்கள் அனைவருக்கும் - உயர்வு தாழ்வு பாராமல் - அக்கனிககள் பயன் தருமா? அல்லது அது சிலருக்கு விருந்தாகவும் பலருக்கு விஷமாகவும் இருக்குமா? நாணயமாகச் சுட்டிக் காட்டவில்லை இதனை. விளைவு, அனைவருக்கும் சுகந்தரும் வாய்ப்புடையதாக இருக்குமானால், அதனை வெளிப்படையாகக் கூறத் தயக்கங் காட்ட வேண்டியதில்லை என்பதோடு, சொற்களிலே ஜாலவித்தை செய்யவேண்டிய தேவையும் இருக்காது. ஆனால் வார்த்தைகளிலே வேடிக்கை காட்டப்படுவதைப் பார்க்கிறோம். இவ்வாறு வார்த்தைகள் துணைகொண்டு, மக்களின் வாழ்வோடு விளையாடுபவர்களைக் கண்டதும், மற்றவர்களுக்குச் சந்தேகம் வலுக்கிறது. சொல்லையும் செயலையும் நுணுகி ஆராய்வதிலே மற்றவர்களுக்குச் சிந்தனை செல்லுகிறது. இன்று சிறிய அளவு உள்ள இந்தச் சந்தேகத்தை, மனத்துள் மறைத்து வைத்திருக்கும் எண்ணங்களை, தார் குழுவின் அறிக்கை வெளிக்குக் காட்டி இருப்பதோடு, அதனை எதிர்ப்பதற்கான காரணத்தையும் கூறாமல் கூறி இருக்கிறது. மயக்க வார்த்தைகளுக்குள் மறைந்து கிடக்கும் உண்மைகளை என்றாவது மக்கள் புரிந்து கொள்ளத்தான் போகிறார்கள்! அன்று முகமூடி கிழித்தெழிறிப்பட்டு, முழு உருவமும் அவர்களின் கண்களுக்குப் படத்தான் போகிறது!

குழுவின் கோரிக்கையிலே உள்ள மரத்தன்மை, அச்சத்தை மூட்டி இருக்கிறது அதற்கு எனவேதான் ‘அதிகாரம், அதிகாரம்; அதுவும் டில்லிக்கு அதிகாரம்’ என்று அங்கலாய்க்கிறது. இதே அச்சந்தான் மற்றவர்களையும் பிடித்து ஆட்டுகிறது! மக்கள் சீரழிகிறார்கள். சிலர் என்றும்போல் கொழுக்கிறார்கள்.

மொழி வழி மாகாணம் கேட்போர் வெளிப்படையாகக் கூறுகின்ற பொழுது, மக்களிடம் பரிவு கொண்டுதான் அவ்வாறு பேசுவது போல் தோன்றுகிறது. ஏதோ நன்மைகள் பல, நாட்டுக்கு ஏற்படுத்த முடியும் என்றும் குறிப்பிடுகிறார்கள். எடுத்துக்காட்டாக தோழர் எஸ்.வி. இராமமூர்த்தி (ஐ.சி.எஸ்.) கூறுவதைப் படியுங்கள்.

ஆந்திர மாகாணத்தின் செல்வ வளத்தைக் குறிப்பிடும் பொழுது, கோதாவரியும் கிருஷ்ணாவும், துங்கபத்திரையும், பெண்ணாறும் பாயும் நிலப்பரப்பே, பூகோள அமைப்புப்படி ஆந்திர நாடாகும் என்றும், துங்கபத்திரா அணைக்கட்டும், இராமபாதசாகர் தேக்கமும் நிறைவேறி விடுமானால், பாய்ச்சலுக்கும் - மின்சார உற்பத்திக்கும் - தொழில் வளர்ச்சிக்கும் - விவசாய முன்னேற்றத் திற்கும் - வழி ஏற்பட்டுவிடும் என்றும், இவ்வளவையும் செயலில் கொண்டு வருவதற்கு ஒரு நல்ல நிர்வாக அமைப்பு இருக்கவேண்டியது அவசியமென்றும் குறிப்பிட்டுள்ளார். மேலும் அவர், கிடைக்கும் மின்சாரத்தின் உதவியால் கனிப் பொருட்களையும், காட்டுச் செல்வத்தையும் பெருக்கிக் கொள்ள முடியுமென்றும் பேசி இருக்கிறார்.

செல்வச் சிறப்புற்று, வறுமையற்ற நாடாக ஆந்திரம் இருக்கக்கூடாது என்று எண்ணும் தமிழர்கள் எவரும் இங்கில்லை. தமிழர் பகுதியிலும் மண்ணில் மறைந்து கிடக்கும் செல்வத்தை, மக்கள் கண்முன் கொண்டுவந்து கொட்டினவர்கள் இதுவரை எவரும் இல்லை. செல்வச் சிறப்பிழந்து, சீர்குலைந்து ஆந்திரர் அவதிப்பட்டுக் கொண்டிருப்பது போலத்தான், தமிழரும் சொந்த நாட்டில் பிறருக்கு அடிமையாகி, கடல்கடந்து சென்ற நாட்டிலும் நலிவடைந்து, துக்கத்தைத் துடைக்க வகையறியாது விழித்துக் கொண்டு இருக்கிறார்கள். ஏமாற்றமும் - எரிச்சலும் - இல்லாமையும் - பொதுவாக இருக்கிறது இருசாராருக்கும். எந்த மொழி பேசினாலும் திராவிடர் அனைவரின் நிலையும் இதுதான் இன்று.

இராமபாத சாகர் தேக்கத்திற்கு, டில்லிக்குக் காவடி தூக்கிச் சென்றுவிட்டு வந்த பின்னரும், ஆந்திரம் தனியானால், அதிகாரம் இல்லாத அரசு அமைத்து விட்டால், ஏதேதோ நன்மைகள் நிரம்பிய நாடாக ஆந்திரம் ஆகிவிடும் என்று, இராம மூர்த்தியார் பேசுவது, சிரிப்புக்கிடமானதாக இருக்கிறது!

கோவையிலே கிளம்பும் ஆலைகளின் புகை, ஆந்திரர் சிலரின் கண்களைக் கரிக்கச் செய்கிறது. மேட்டூர் அணைக்கட்டு சிலருக்கு மிரட்சியை உண்டு பண்ணுகிறது. சென்னை நகரிலுள்ள மருத்துவக் கல்லூரி சிலருக்குக் கோபத்தைக் கிளறுகிறது. ஆந்திரர் தந்த வரிப்பணத்தால் தமிழர் பெற்ற வாழ்வு இவை என்று எண்ணி ஆத்திரம் கொள்ளுகிறார்கள் அவர்கள். பிரிந்து சென்றால், இவ்வளவும் ஆந்திரத்தில் ஏற்படுத்தலாமே என்ற அவர்களின் ஆசை தனி மாகாணக் கோரிக்கையாக உருவாகி இருக்கிறது.

பனகல் அரசருக்குப் பிரதமர் பட்டம் சூட்டினோம், பகை போகவில்லை. முனிசாமி நாயுடுவிற்கு முடி புனைந்தோம், மூண்ட கோபம் தணியவில்லை. முடிவில் பொப்பிலி அரசருக்குப் பதவி தந்தோம், பயனேற்படவில்லை. காங்கிரசிலே பிரகாசம் பந்துலு பிரதமராகியும் ‘பிரிவினை’ பேச்சு முடியவில்லை. கலியுக ஜனகர் - ரமணரின் சீடர் முடியைச் சுமந்து கொண்டிருக்கு இதுகாலையும், தீ அணையாது முன்னிலும் அதிகமாக மூண்டு விட்டிருக்கிறது!

பலம் பொருந்திய மத்திய சர்க்கார் டில்லியில் விஸ்வரூபக் காட்சி அளித்துக் கொண்டிருக்கும் பொழுது, திறமையான நிர்வாகத்தை ஏற்படுத்தத் தனி மாகாணம் வேண்டுமென்று பேசுவது வேடிக்கையாகத்தான் இருக்கிறது. திறமையாகத்தான் இருக்கிறது. திறமையாக நிர்வகிக்க வேண்டிய, கொழுத்த வரம் தரும் இனங்கள் பலவற்றையும் டில்லியில் குவித்துவிட்டு, விஜயவாடாவிலோ வேறு இடத்திலோ பெயரவளவிற்கு ஓர் அரசாங்கத்தை அமைத்து விடுவதால் மட்டும் விளையப்போகும் நன்மைதான் என்னவோ?
* * *

உலகத்திலுள்ள தலைசிறந்த இரும்புத் தொழிற்சாலைகளில் சிறந்த ஒன்றை சொந்தமாகக் கொண்டுள்ள டாடா, செருப்பணி முதல் புகைவண்டி வரையில் உற்பத்திச் செய்யும் ஆற்றல் பெற்றுள்ள டாடா, ஆந்திரத்தில் மட்டுமன்று - நாட்டின் வேறு எந்தப் பகுதியிலாவது, போட்டி கிளம்புவதைப் பார்க்கச் சகிப்பாரா? முளையிலேயே கிள்ளி எறிய முயற்சி எடுத்துக் கொள்ளமாட்டாரா?

நெசவாலை அரசர் பிர்லா, அனைவருக்கும் துணி வேண்டிய அளவு - அனைவரும் வாங்கிக் கட்டக்கூடிய விலையில் கிடைக்கவில்லை என்று புலம்பிக்கொண்டு இருக்கும்பொழுதே, அதிக உற்பத்தியாகிவிட்டது, சரக்கு விற்காமல் தேங்கிக் கிடக்கிறது, வெளி நாட்டில் சந்தை தேட வேண்டும்; என்று பிரபல பித்துக் கொண்டு இருக்கும்பொழுது, நாட்டின் பிற பகுதிகளிலே புதிய ஆலைகள் கிளம்பி, மேலும் போட்டியிட்டு, விலையிலே வீழ்ச்சி ஏற்பட்டு, வருவாயிலே மண் விழுவதை விரும்புவாரா? அவர் எதிர்ப்பையும் மீறிப் புதிய ஆலைகள் ஏற்படுத்தி வளத்தைப் பெருக்குவதாக இருந்தாலும், பிர்லாவின் போட்டியைப் புதிய தொழிற்சாலைகளால் தாங்கமுடியுமா? அந்நிலையில், போட்ட முதலுக்கும் குறைவாக, ஆலைகளைப் பிர்லாவிற்கு விற்றாலன்றி, வந்த வேதனையைப் போக்கிக் கொள்ள வழி ஏற்படாதே!

19.2.1948