அறிஞர் அண்ணாவின் கட்டுரைகள்


அதுதான் சரி!

“நீங்கள் ஒரு சமரசத்துக்கு வந்தாலும் சரி, வராவிட்டாலும் சரி, நாங்கள் வெளியேப் போவது நிச்சயம் என்று அறிவித்துவிடுவதே சிறந்த வழி”

என்று பிரிட்டிஷ் பத்திரிகை ஒன்று எழுதியிருக்கிறதாம். சிலாக்கியமான யோசனை, அதனைச் சீக்கிரத்திலே பிரிட்டிஷ் சர்க்கார் ஆமுலுக்குக் கொண்டு வருவது நல்லது என்று நாம் கூறுகிறோம் வெளி ஏற வேண்டியவர்களுக்கு.

மூன்றாவது கட்சி ஒன்று இருக்கிறது, அதனாலேயே இங்கு வர்க்கப் போர், வகுப்புப் பூசல், ஜாதிச் சண்டை முதலியன மூண்டு, சமரசமோ, முன்னேற்றமோ ஏற்பட மார்க்கமில்லாமல் போய்விட்டது. என்று, காங்கிரஸ் கட்சி அடிக்கடி சொல்லி வருகிறது. உயிர்ப்பிரச்னைகள் பலவற்றைப் பழங்காலத்தில் போட்டுப் பரணைமீது வைத்துவிட்டு, எல்லாம் இந்த வெள்ளைக்காரர்கள் வெளி ஏறின பிறகு கவனித்தும் கொள்ளலாம் என்று காங்கிரஸ் கூறிவருகிறது. நாளாகநாளாக பிரிட்டிஷ் ஏகாதிபத்யத்தினால் ஒருபுறம் நாட்டுக்குக் கஷ்டநஷ்டம் ஏற்படுவதுடன், சீர்கெட்ட சமுதாயத்தின் நிலைமை மேலும் மேலும் அதிகரித்து, அழுகி வருகிறது. சமூகக் கொடுமைகளும் ஆநீதிகளும், உரம் பெறுகின்றன. இவைகளை ஒழித்துப் புது உருக்காக்கும் உண்மையான நோக்கம், காங்கிரசுக்கு இருக்கிறதா அல்லது சமுதாயத்தின் சீர்கேடுகளை விட்டுவைத்து, அதிலே சிலருக்குச் சுகாதார ஆதிகாரி வேலை கொடுத்துவைக்க விரும்புகிறதா, என்பதைப் பரீட்சித்துப் பார்க்க, சந்தர்ப்பம் இல்லை - அது ஏற்படவேண்டும் - விரைவாக. ஆகவே நாம், பிரிட்டிஷார் வெளிஏற வேண்டும் என்ற யோசனையைச் சொல்லளவிலே நிறுத்திவிடாமல் செயலிலே காட்டும்படி கூறுகிறோம்.

பரந்த சாம்ராஜ்யத்தை ஒரு காலத்தில் இளமுடிந்தது பிரிட்டனால் கடலிலே கலம்விட்டும், இங்காங்கு இருந்த கலகலத்தப் போன சமுதாயங்களை, அதே நிலையில் விட்டு வைக்கும் தந்திரத்தாலும் இன்று, அந்த முறையைக் கண்டிக்காதவர்கள் கிடையாது.

பிரிட்டிஷார், மதவிஷயத்தில் தலையிடு வதில்லை என்ற வாக்குறுதி கொடுத்ததை, அவர்களுடைய பெருங்குணம் என்றனர் சிலர், இங்குள்ளோர் நல்லாட்சியின் நற்பண்பு என்றனர்.

நாம், அந்தப் போக்கைப் பலமாகப் பலகாலமாகக் கண்டித்து வந்திருக்கிறோம். மத விஷயத்திலே நடுநிலைமை வகிப்பதாகக் கூறிக் கொண்டு, சமுதாயத்திலே சுரண்டி வாழ்பவர்கள், சுகபோகிகள் ஆகியவர்கள் கொழுக்கவும், பாடுபடுபவன், நாடாண்டவன் நலியவுமான நிலைமை வளருவதைக் கண்டும், அந்த நிலைமை மதத்தின் பெயராலேயே, காப்பாற்றப்பட்டு வருவதைத் தெரிந்தும், “நாங்கள் என்ன செய்வோம்! அவர்களின் மதம் அப்படிப்பட்டது! நாங்கள் மதவிஷயத்திலே தலையிடுவதில்லை” என்று கூறி, வெளி உலகு இங்குள்ள நிலைகண்டு கேலி செய்யும், மேயோக்கள் நையாண்டி செய்யவும், பார்லிமெண்டுகளிலே பரிகாசப் பேச்சுப் பேசவும் சந்தர்ப்பம் உண்டாக்கித் தந்ததுதான், பிரிட்டிஷ் கொள்கையினால் ஏற்பட்ட விளைவு, இந்தப் போக்கை நாங்கள் கண்டிக்கிறோம், என்ற தீர்மானத்தை, திருச்சியில் நடைபெற்ற திராவிடர்கழக மாகாண மாநாட்டிலே நாம் நிறைவேற்றி இருக்கிறோம்.

அறிஞர் ராதாகிருஷணன், அமெரிக்காவில்.

“ஜனங்களின் மதசம்பந்தமான சம்பிரதாய விஷயங்களிலே தலையிடுவதில்லை என்ற கொள்கையைப் பிரிட்டிஷார் அனுஷ்டித்து வருவதால், வெகு காலத்துக்கு முன்பே மறைத்து ஒழிந்து போயிருக்க வேண்டிய பல கழகக் குரோதங்களுக்கு, தங்களை அறியாமலே பிரிட்டிஷார் நல்ல பாதுகாப்பை அளித்து அவை நீடித்திருக்க உயிர் கொடுத்துவிட்டார்கள்” என்று பேசியிருக்கிறார். உண்மை! அப்படி உயிர் கொடுத்து விட்டதிலே முக்கியமானது பார்ப்பனியம் - உலகிலே வேறெங்கும் இல்லாத அக்ரமம்! உலகிலே வேறு எங்கும் தீண்டாமை இல்லை. இங்கு இருக்கிறது. இதற்காக வெட்கப்படுவோர் இல்லை.

உலகிலே வேறு எங்கும் சமுதாயம் இத்தனை ஜாதிகளாகப் பிளக்கப்பட்டு இல்லை. இங்கு இருக்கிறது, அது போகவேண்டு மென்பவர்கள், நாத்திகராக்கப்படுகின்றனர்.

அர்த்தமற்ற, இபாசமான, ஆநாச்சாரமான கோட்பாடுகள் உலகிலே இன்று எங்கும் இல்லை, அவை அத்தனையும் இங்கே பூத்துக் காய்த்துக் கிடக்கின்றன.

போப்பாண்டவர் பாவ மன்னிப்புச் சீட்டு விற்பதில்லை, புரோகிதக் கூட்டம், இங்கே அந்த வேலையை விடவில்லை.

கிருஸ்துவ மடாலயங்கள், அறிவாலயங் களான பள்ளிக்கூடங்களையும், ஆன்பாலயங் களான இஸ்பத்திரிகளையும் அமைக்கின்றன. இங்குள்ள மடாலயங்கள் கண்கவர் பூஷணங்கள அணிந்தே கட்டிலறை நோக்கிப் பெண்கள் பல பேர்கள் குலவிப் பின்வர முன் நடந்தார் என்று நிலையிலே உள்ளன.

சேறான அகழிகள், கலனான கோட்டைகள், பிளவுபட்ட பாறைகள், இடிந்து கிடக்கும் ஆரண்மனைகள், இருண்ட இடங்கள், சமுதாயம் இந்நிலையில் இருக்கிறது. பிரிட்டிஷ் ஆட்சியோ, இவைகளைத் திருத்தவில்லை, திருத்தாது, திருமுகம் மதத்திலே தலையிடுவதில்லை என்று தந்தாகிவிட்டது. இவைகளுக்கு இடையே, விஞ்ஞானம் உலவ விடப்பட்டிருக்கிறது. விதவைக்குத் தரப்படும் வெள்ளைச் சேலை போல! இந்த நிலைமாற வேண்டும் என்றால், வெள்ளையன் போக வேண்டும் என்று கூறுகிறார்கள். போய் விடுங்கள், பிறகு அது நடக்கிறதா இல்லையா என்று நாங்கள் பார்த்துக்கொள்கிறோம், இடையே நீ நின்று கொண்டிராதே. என்று பிரிட்டிஷ் ஏகாதிபத்யத்துக்குக் கூறுகிறோம். உடனடியாக அமைவது சனாதன ஆட்சியாக இருக்கும், ஆனால் கவலை இல்லை, அப்போதுதான், நமது மக்கள், யார் நண்பர்கள், யார் நரி உள்ளமும் மனித உருவமும் பெற்றவர்கள் என்பதைச் சுலபத்திலே புரிந்து கொள்ள முடியும். “அவனும் போய்த தொலைந்தானே! ஈன்னமும் இந்த அக்ரமம் இருப்பது அழகா?” என்று மக்கள் அத்திரத்துடன் கேட்கத் தொடங்குவார்கள், சமூக அக்ரமங்களைக் காணும் போதெல்லாம் அந்த மகத்தான புரட்சி ஏற்படவேண்டும், அதற்காகவே, பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம், வெளியேற வேண்டுமென்று விரும்புகிறோம்.

சலிப்பினாலோ அல்லது கேலிக்காவோ, அந்த பிரிட்டிஷ் பத்திரிகை எதற்காக அவ்விதம் எழுதியிருந்தாலும் சரி, அதைப்பற்றிக் கவலையில்லை. பிரிட்டிஷார் வெளிஏறப் போவதாக ஊடனே அறிவித்துவிட வேண்டியது தான். அதான்சரி.

(திராவிடநாடு - 14.4.46)