அறிஞர் அண்ணாவின் கட்டுரைகள்


அதுவல்ல, நமது பாதை

ஆசிரியர் அலறினார்! அரசாங்க மாளிகைக்குச் செய்தி அனுப்பினார். ‘அவசரம் உடனே செல்க’ என்று விசேட நிருபருக்கு உத்திரவு பிறப்பித்துவிட்டு ஓடினார். ‘ஒரு செய்தி தெரியுமோ? துணைப்பிரதமரைத் தூக்கிச் செல்லப்போகிறார்களாம்! இப்போதுதான் செய்தி வந்தது” என்று மந்திரிமார்களைக் கூப்பிட்டுப் பேசினார் டெலிபோன் மூலம்.

அதிகாரிகள் பறந்தனர். போலீஸ் படைகள் விரைந்தன-பாதுகாப்பு, தற்காப்பு என்று கூறிக்கொண்டு பல மேலதிகாரிகள் உத்திரவுமேல் உத்திரவுகள் இட்டுக் கொண்டிருந்தனர்.

பிரதம மந்திரிக்கு ஒரே கலக்கம். பத்திரிகாசிரியரை அழைத்தார் பேசினார்.

“டெலிபோனில் கூப்பிட்டான். யாரோ என்று போனேன். துணைப் பிரதமர் விஜயம் செய்யப் போகிறாராமே என்று கேட்டான். ‘ஆமாம்’ என்றேன். ‘அப்படியானால் தயாராயிருங்கள் உங்களுக்கு ஒரு நல்ல செய்தி கிடைக்கும்’ என்று பதில் சொன்னான்!

“பேசியது யார் என்று தெரிந்ததோ?”

‘கேட்டேன்-அவன் சொல்லவில்லை. ஆனால் விஷயத்தை மட்டும் விவரித்தான். ஆசிரியரே! துணைப் பிரதமரை நாங்கள் தூக்கிச் செல்லப் போகிறோம்-அதற்கான ஏற்பாடுகள் செய்து விட்டோம்’ என்று சொன்னான்!!

“அப்படியா?”

“அதோடு நிறுத்தவில்லை! துணைப்பிரதமரைக் கொண்டு போய் ஏதாவது செய்து விடுவோமோ என்று எண்ணவேண்டாம். எதுவும் செய்து விடமாட்டோம். சர்வ ஜாக்கிரதையோடு, அவருக்கான மரியாதைகளோடு நடத்துவோம் எங்களுக்கு அவர் இங்கு வருவது பிடிக்கவில்லை! அதைத் தடுக்கவே நாங்கள் அப்படிச் செய்ய முடிவு செய்துள்ளோம் என்றும் சொன்னான்”

“சர்வ ஜாக்கிரதையாக நடத்துவார்களாமா?”

“ஆமாம்-அப்படித்தான் சொன்னான்.

துணைப்பிரதமர் இங்கு வருவது; பிடிக்கவில்லை. ஆகவே, அவரை பகிஷ்கரிக்க முடிவு செய்துவிட்டோம். அவர், இங்கு வந்து எந்த விழாவிலும் பங்கேற்பது எங்களுக்குப் பிடிக்கவில்லை. ஆகவே, அவரைத் தடுத்து தூக்கிச் செல்லப் போகிறேன், என்று துணிவோடு சொன்னான்.

தகவல் தந்தது ஒரு தனி மனிதனே ஒழிய, அவன் தந்தது ஒரு இயக்கத்தின் சார்பில்.

அதுவும் வலிமையும் ஆதரவும் மிகுந்த ஒரு இயக்கத்தின் சார்பில். எப்படி மந்திரியை அவர்கள் தூக்கிச் செல்ல முடியும் என்று அலட்சியமாக இருக்கவும் முடியாது. ஏனெனில் அவர்கள் நினைத்ததைச் செய்து காட்டியவர்கள்-தீரர்கள்!

எனவே, ஆசிரியர் மருண்டார்! அமைச்சர்கள் திகைத்தனர்! போலீசார் விரைந்தனர்! எங்கும் ஒரே பரபரப்பு!

வரும் மந்திரி எங்களை கட்டி ஆள்பவர்.

அவருடைய கட்டுப்பாட்டில் எங்களது நாடு கிடப்பதை நாங்கள் விரும்பவில்லை.

அவரை நாங்கள் பகிஷ்கரிக்கிறோம்.

ஆகவே, அவர் விஜயம் செய்யும் போது தூக்கிச் செல்லப் போகிறோம்.

துணிவோடு, இத்தகைய திட்டம் தீட்டி, அதை முன்னறிவிப்பாக பத்திரிகாலயத்துக்கும் அறிவித்தனர்.

உதவிப் பிரதம மந்திரிக்கு இத்தகைய “வரவேற்பை” வழங்கப் போவதாகத் திட்டம் தீட்டியது. நாமல்ல, வடநாட்டு மந்திரிகளைப் பகிஷ்கரிக்கும் நமது கழகத்தார், செய்த முடிவல்ல இது.

பிரிட்டனில் கடந்த 27-ந் தேதி, லண்டனையே கலக்கி விட்ட சம்பவமாகும் நாம் கூறுவது.

இங்கு ஆச்சாரியார்-டில்லி துணைப் பிரதமர் பவனி வந்த அதே தினம், பிரிட்டிஷ் துணைப் பிரதமர் ஹெர்பர்ட் மாரிசனுக்கு இத்தகைய வரவேற்பு தரப்போவதாக, ஸ்காட்லாந்து விடுதலை இயக்கத்தினர் வெளியிட்டனர்.

லண்டனில் பத்திரமான இடத்தில் பாதுகாவலோடு இருந்த சிம்மாசனக் கல்லை, அண்மையில் இந்த இயக்கத்தினர், களவாடிச் சென்ற சம்பவமும் தெரியும் மக்களுக்கு.

மேற்படி இயக்கத்தினர்-தங்களது ஸ்காட்லாந்திற்கு ‘விஜயம்’ செய்ய விருந்த துணைப் பிரதமர் மாரிசனை, தூக்கிச் சென்று, அவர் கலந்து கொள்ள விருந்த விழா முடிந்ததும், திருப்பியனுப் புவதாகத் தகவல் தந்தனர் ‘சண்டேபிக்டொரியல்’ என்ற செய்தித் தாளுக்கு.

இத்தகவலை அந்த அலுவலகத்துக்கு அறிவித்தபோது, “மாரிசனை சகல மரியாதைகளுடன் நடத்துவோம். ஆனால் அவர் எங்கள் நாட்டுக்கும் வருவது தேவையில்லை. எனவே அவரை கடத்திச் செல்லப் போகிறோம்.

இது, எங்கள் விடுதலைக்கிளர்ச்சியில்-சிம்மாசனக் கல்லை கொண்டு சென்றது போல-நாங்கள் வகுத்துள்ள பல திட்டங்களில் ஒன்றாகும்” என்று விபரமாக அறிவித்திருந“தனர்.

மாரீசன்-ஸ்காட்லாந்திலுள்ள எடின்பரோ நகரில் நடைபெற்ற கால்பந்து விளையாட்டு விழாவைக் காணவே சென்றார். இங்கு இந்தியத் துணைப் பிரதமர் திருவையாறு சங்கீத விழாவுக்கு டில்லியிலிருந்து வந்தது போல!

அங்கு, அவரை “வரவேற்க” ஸ்காட்மக்கள் மேற்படி திட்டம் தீட்டியிருந்தனர். துணைப் பிரதமரைத் தூக்கிச் சென்றுவிடாமல் காப்பாற்றி இலண்டன் சேர்க்க போலீசார் எடுத்துக் கொண்ட நடவடிக்கைகளும்! ஏற்பாடுகளும் மிகமிக அதிகமாம்.

மாரீசனைச் சுற்றிய வண்ணம் போலீசார் இருந்தனராம். எனவே ஸ்காட் விடுதலைக் கிளர்ச்சியினர். போட்ட திட்டம் பலிக்கவில்லை என்பதாகக் கடைசியிலே வந்த செய்தியொன்று கூறுகிறது.

விடுதலைக் கிளர்ச்சியினர் போட்டிருந்த திட்டம் பலிக்கவில்லை. ஆனால், அவர்கள் எதிர்பார்த்ததை விட அதிகமான அளவு அரசாங்கம் கலங்கிவிட்டது ஒரு நாளில்.

அந்த அளவுக்கு ஸ்காட்லாந்தைத் தனிநாடாக்க வேண்டும் என்று முழக்கமிடும் இயக்கத்தினர் ஆளவந்தாருக்குப் பீதியையும், என்ன நேருமோ? என்ற கவலையையும் கலக்கத்தையும் தந்து கொண்டேயுள்ளனர்.

தனி நாடாக வேண்டும் என்ற நமது கோரிக்கையைப் போன்றது தான் அவர்களுடையதும்.

நாம் டில்லி மந்திரிகளைப் பகிஷ்கரிப்பது போலவே-அவர்களும் இலண்டனிலிருந்து தங்களை ஆளும் மந்திரிகளை விரும்பவில்லை.

பல்லாண்டுகளாக பிரிவினை கீதம் எழுப்பி வரும் நமது பாதையோ, ஸ்காத் வீரர்கள் செல்லும் பாதையல்ல.

நாம், பீதியும் குழப்பமும் ஏற்படாத வகையில் நமது கோரிக்கையை வயியுறுத்த விரும்புகிறோம்.

நமது எண்ணம் நேர்மையானது. நமது இதயம் களங்கமில்லாதது நமது பாதை, பிறருக்குத் தீங்கு விளைவிக்காதது.

ஆனால், நாம், நடத்தப்படும் முறையோ மிக மிக மோசம். ஜனநாயகத்துக்கு உட்பட்ட கருப்புக்கொடி காட்டும் திட்டத்தை நாம் தொட்டது முதல் நம்மை இந்த சர்க்கார் நடத்தும் முறை கேவலம் நிரம்பியதுமட்டுமல்ல கோரமானதுகூட.

தடியடி! துப்பாக்கி! கைது! சிறைவாசம்! வழக்கு! தண்டனை! இது போல விரிந்து கொண்டேயிருக்கிறது.

திருச்சி, மதுரை தமிழகத்தின் முக்கிய இடங்கள் அங்கு கறுப்புக் கொடி நாள் நடைபெற்றபோது நமது தோழர்கள் நடத்தப்பட்ட முறை நினைத்தாலே நெஞ்சங் கொதிக்கக்கூடியாகும்.
கடந்த வாரம் திருவையாற்றுக்கு வந்திருந்த இந்திய துணைப் பிரதமர் ஆச்சாரியாருக்குக் கருப்புக்கொடி காட்டினோம்!

தஞ்சைக்கருகில், வெண்ணாற்றங் கரையில் ஆயிரக்கணக்கான வீரர்கள் கருங்கொடி தாங்கி, கழகத்தின் திட்டத்தை, வெற்றியாக்கிக் காட்டினர்.

அமைதியாக வரிசையாக அவர்கள் நின்ற காட்சியும் ‘ஆச்சாரியாரே திருப்பிப்போம்’ என்று அங்கு எழுப்பிய பேரொலியும் நமது உரிமைக் கிளர்ச்சியின் உருவத்தைக் காட்டின.

திராவிடத்தின் சிங்க இளைஞர், தன் எழுச்சி முரசால் இளமை யுள்ளங்களைக் கவர்ந்துவரும் கட்டிளங்காளை திருவாரூர் மு.கருணாநிதியும், புலவர் பட்டம் பெற்று தமிழாசிரியராகப் பணி புரிந்தபோது, ஆளவந்தாரின் அடக்குமுறைக்கு ஆளாக நேரவே தனது பதவியை உதறிவிட்டு ஊருக்குழைக்கப் புறப்பட்ட இலட்சியக் காளை தஞ்சை ஏ.கே.வேலனும், அன்று அங்கு தலைமை தாங்கி நடத்திய காட்சி, பெருமிதமாக இருந்தது.

மேற்படி கருப்புக்கொடி நாளுக்கு தலைமை தாங்கி நடத்த மூன்று தோழர்கள் முன்வந்திருந்தனர்.

மூவரில் இருவர் மட்டுமே, களத்தில் நின்றனர்! இன்னொருவரான, இலட்சியக் காளை அதிராம்பட்டினம் என்.எஸ்.இளங்கோவை, தஞ்சைவந்து கொண்டிருந்தபோதே வழியில் மடக்கி சிறைக்கு இழுத்துச் சென்றுவிட்டது. காங்கிரஸ் சர்க்கார்.

அன்று, அங்கு ஆச்சாரியாரை ‘வரவேற்க’ அலைகடலே திரண்டது போல, கொடிகள் அசைந்து கொண்டிருந்தன! கருமேகங்கள் திரண்டது போல காட்சி தந்தது-வெண்ணாற்றங் கரை! இந்த வெற்றியின் பெருமைக்கு, தஞ்சை மாவட்டத்தின் செயலாளர் கே.கே.நீலமேகம், மாயவரம், பழனிச்சாமி, மன்னார்குடி நாராயணசாமி, திருத்துறைப் பூண்டி ஹாஜாபீர், அன்பில் தர்மலிங்கம், குடந்தை பராங்குசம், தஞ்சை நடராசன், பதி, மணி, சோமு, கோவிந்தராசன், தாமரைச் செல்வன், அரங்கண்ணல் முதலான முன்னணி வீரர்கள்தான் காரணமாகும்.

ஆச்சாரியாரே மருளும்படியான அளவில் கருப்புக்கொடிகள் பறந்தன! தொண்டர்கள் ஆயிரமாயிரமாகக் கூடியிருந்தும், மாவட்ட போலீஸ் தலைமை அதிகாரி தனது தர்பார் மிரட்டலை அடிக்கடி காட்டிக்கொண்டிருந்தும், நமது மாவீரர்கள் அமைதியின் சின்னங்களாக இருந்தனரே தவிர சிறிதுகூட அமைதிக்குப் பங்கம் விளைவிக்கவில்லை.

இந“த அருமையான காட்சி ஆச்சாரியார் உள்ளத்தையே திறக்க வைத்திருக்கிறது.

அவர் கூறுகிறார்.

அவர்கள் தங்கள் அபிப்பிராயத்தை மிக்க அமைதியான முறையில் தெரிவித்ததற்காகச் சந்தோஷப்படுகிறேன்.

ஆச்சாரியார், இந்தியாவின் போலீஸ் மந்திரி! முன்பு, அவர் இலாகா இல்லாத மந்திரியாக வந்தபோது கருப்புக்கொடி காட்டிய போது நமது இரத்தம் சென்னை வீதிகளிலே சிந்தும்படி செய்யப்பட்டது! நம்மீது பலமுறை, அடக்குமுறை பாணங்களை வீசிய ‘அருந் தியாகி’ அவர்!

மிக்க அமைதியான முறை இதுதான். நாம் நடக்கும் பாதை. இந்த வழியில்தான் நாம் நடக்க விரும்புகிறோம்.

ஆனாலும், அமைதியான முறையில் நடக்கும் நம்மீதுதான் 144 பாய்கிறது-நமது ‘கண்மணிகளை சிறையிலே பூட்டுகின்றனர்!’

நமது தாய்மார்களை வீதியிலே வீழ்த்துகின்றனர்! உதைக்கின்றனர்! சுடுகின்றனர்! கொடுமைப்படுத்துகின்றனர்!

நீதிப் பாதையில் நடப்போர் நாம்.

பலாத்காரம் விரும்பிகள் அல்ல நாம். நாண்யமாக, நேர்மையான முறையில், அமைதி கெடாத வகையில் நமது இலட்சிய வாழ்வைப் பெற நாம் பாடுபடுகிறோம்.

நாம் யார் என்பதை, தஞ்சை நிகழ்ச்சி காட்டி விட்டது.

இதை, அடக்குமுறைப் பாதையில் உருண்டு கொண்டிருக்கும் மந்திரிமார்கள், உணரவேண்டும். நாணயமற்ற, கேவலமான பாதையல்ல நம்முடையது.

(திராவிடநாடு 4.2.51)