அறிஞர் அண்ணாவின் கட்டுரைகள்


ஆகஸ்ட் பத்து!

ஆம்! ஆகஸ்ட் பத்து!!

சரித்திரத்தில் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய நாள்!

அருமை மொழியாம் தமிழனைக் காக்க அறப்போர் தொடுக்கும் நாள் தான் அது.

இந்தியை ஒழிக்க எடுத்துக் கொள்ளப்படும் நேரடி நடவடிக்கை ஆகஸ்ட் பத்தில் ஆரம்பிக் கப்பட்டதென்பதைக் குறிப்பிடும் நாள்தான் அது.

தமிழ் மக்களின் கலாச்சாரத்தைக் காக்கக் கடுஞ்சிறை புகுந்த நாள் என்பதைக் குறிப்பிடு வதுதான் ஆகஸ்ட் பத்து.

விடுதலை பெற்ற நாட்களில் தமிழ் மக்கள் விலங்கிடப்பட்டனர் என்பதைக் குறிப்பிடும் நாள்தான் ஆகஸ்ட் பத்து.

அந்நிய ஆங்கிலேயரை விரட்டி அடிமைத் தளையை அறுத்த விழாவினைக் கொண்டாடும் நாளில், நாட்டின் சொந்தக்காரராகிய தமிழ் மக்களையே அடிமைத்தளையால் பிணைத்து அவதிப்படுத்தினர் ஆணவக்காரர் என்பதனைக் குறிப்பிடும் நாள்தான் ஆகஸ்ட் பத்து.

இன்று அரசியலின் பேரால் செய்யப்படும் சீர்திருத்தங்களை யார் அடிகோலி, அவை, சட்டப் பூர்வமாகச் செய்யப்பட வேண்டுமென்று பாடுபட்டனரோ, அவர்களுக்கு நன்றி செலுத்து வதற்குப் பதிலாகச் செய்ந்நன்றி கொன்ற முறையில், அவர்களையே சிறையில் அடைக் கும் அடக்குமுறையை ஆளவந்தார்கள் கடைப் பிடித்தனர் என்ற கொடுமையைக் குறிப்பிடும் நாள்தான் ஆகஸ்ட் பத்து.

நாட்டுக்குக் கேடு தேடும் நயவஞ்சகர்கள், உலகம் போற்றும் உயிரனைய தமிழ் மொழியை உருக்குலைத்தனர் என்பதை உணர்த்தும் நாள்தான் ஆகஸ்ட் பத்து.

தமிழ் மக்களின் தன்மானமும், தமிழ் மொழி யின் தனித்தியங்கும் தகைமையும் காக்கப்பட்ட தென்பதைக் குறிப்பிடும் நாள்தான் ஆகஸ்ட் பத்து.

ஆளவந்தார்களின் அறியாமையையும், ஆணவ ஆட்சி முறையையும் அவனி அறியும் படி செய்யப்பட்டதென்பதைக் குறிப்பிடும் நாள்தான் ஆகஸ்ட் பத்து.

திராவிடத் தனி அரசு ஏன் கேட்கப்படு கின்றதென்ற உண்மையை உலகம் உணர்ந்து ஒப்புக்கொள்ளும்படி செய்ததென்பதைக் குறிப் பிடும் நாள்தான் ஆகஸ்ட் பத்து.
* * *

1947ல் ஆகஸ்ட் பதினைந்து! ஆம்! அது, இந்தியா என்றழைக்கப்படும் இவ்வுபகண்டம் ஆங்கிலேய ஏதேச்சதிகாரப் பிடியினின்றும் விடுபட்ட நாள்.

1948ல் ஆகஸ்ட் பத்து! ஆம்! இது, ஆங்கிலேயரின் ஆட்சிக் காலத்திலன்றி வேறெந்தக் காலத்திலும் இவ்வுபகண்டத்தோடு ஒன்றுபட்டு - ஒரு அரசியலின் கீழ் திராவிட நாடு இருந்ததில்லை- இனியும் இருக்க முடியாது- கூடாதென்பதை மொழிப் போராட்டத்தின் வாயிலாக விளக்கித் தமிழ் மொழியின் தூய்மை யையும், தமிழ் மக்களின் கலாச்சாரத்தையும் காப்பாற்றித் திராவிட மக்கள் விடுதலை பெறு வதற்காக அறப்போர் தொடுக்கும் நாள்.

ஆகஸ்ட் பதினைந்து, ஒரு ஆகஸ்ட் பத்தை உண்டாக்கி விட்டதென்பதைக் குறிப் பிடும் நாள்.

ஆகஸ்ட் பத்து, ஆகஸ்ட் பதினைந்தின் முதல் ஆண்டு விழாக் கொண்டாடும் சமயத்தி லேயே தமிழ் மக்களைச் சிறைக்குள் செல்ல வைத்ததென்பதை உணர்த்தும் நாள்.

எனவே, இந்தி எதிர்ப்புப் போர் மூண்டு விட்டது! இனி எவர் தடுத்தாலும் நிற்கப் போவதில்லை. தமிழ் மக்களின் உணர்ச்சி தடுக்க முடியாத அளவுக்கு வளர்ந்துவிட்டது. தமிழ் நாட்டின் நாலா பக்கங்களில் இருந்தும் அறப் போருக்குத் தயார் என நாள்தோறும் கடிதங்கள் வந்த வண்ணம் இருக்கின்றன. இந்த அறப்போர், ஒன்று வெற்றி அல்லது சாவு என்ற துணிச்சலோடு காரியமாற்றும் நிலைமைக்கு வந்துவிட்டோம். போர்க்களம் புகுந்தோர் புறமுதுகு காட்டுவது தமிழர் மரபல்ல. வெற்றி மாலை சூடுவது- அல்லது போர்க்களத்தில் மடிவது- இதுவே தமிழர் மரபு. எனவே கடைசி முறையாக ஒரு கை பார்த்துவிடுவது என்ற முடிந்த முடிவோடு, துணிந்து போர்க்களம் புகவேண்டும். இதுவே எமது வேண்டுகோளாகும்.

நாம் இந்த அறப்போரை, அரசியலாருக்கு அறிவிக்காமலேயே தொடங்கவில்லை. இந்திக் கட்டாயக் கல்வியினால் தமிழ் மக்களின் மொழி - கலை- நாகரிகம் முதலியன வளர்ச்சி குன்றிச் - சீர்குலைந்து - மறைந்து விடுமெனவும், அதனால் தமிழ் மக்களின் எதிர்கால முன்னேற்றம் தடைப்படுமெனவும், ஆகவே அந்நிய மொழி யாகிய இந்தியைத் தமிழ் மக்களின் விருப்பத் திற்கு மாறாக அவர்களிடம் கட்டாய முறையில் நுழைப்பது ஜனநாயக ஆட்சி முறையை நடத்துவ தாகச் சொல்லிக் கொள்ளும் அதிகார வர்க்கத் தாருக்கு அடாதெனவும் எத்தனையோ பொதுக் கூட்டங்களும், மாநாடுகளும் கூட்டிக் கண்டனத் தீர்மானங்கள் நிறைவேற்றி அவற்றைச் சர்க் காருக்கு அறிவித்த பின்னரே இப்போராட்டம் துவக்கப்படுகிறதென்பதையும் இங்குத் தெரி வித்துக் கொள்கிறோம்.

ஆனால், சர்க்கார் இந்தி எதிர்ப்புக் காரர்களை எல்லாம் `வகுப்புவாதிகள்' என்று வாய் கூசாது கூறுவதுமன்றித் தனக்கிருக்கும் அதிகார இறுமாப்பினால் தமிழ்நாட்டிலுள்ள பள்ளிக் கூடங்களில் எல்லாம் இந்தி மொழியைக் கட்டாயப் பாடமாக்கிவிட்டது.

இந்தி எதிர்ப்புப் போர் ஆகஸ்ட் பத்தில் ஆரம்பிக்கப்படும் என்று அறிவித்த பின்னரும், கல்வியமைச்சர், சொல்லிக் கொடுத்ததைச் சொல்லுமாம் கிளிப் பிள்ளை என்பது போல், இந்தி பற்றிய தம்முடைய கருத்தை, ஏதோ, அதில் மாறுதல் செய்து விட்டதாக மக்கள் நினைப்பார் கள் என்றும், அதனால் இந்தி எதிர்ப்பு அவசிய மற்ற காரியமென்று கருதி அதனை மக்கள் வெறுப்பர் என்றும் கருதி, நாள்தோறும் ஒருமுறை வெளியிட்ட அறிக்கையையே திரும்பத் திரும்ப வெளியிட்டுக் கொண்டிருக்கிறார். இது மட்டு மல்ல, இன்றைய சர்க்கார் இந்தி எதிர்ப்பை அடக்க ஒரு புது முறையையும் கண்டுபிடித் திருக்கிறது. அதாவது,

``சென்னை நகரத்தில் சிலர் இந்தி எதிர்ப்பு இயக்கம் சம்பந்தமாகச் சில செகண்டரி பள்ளிக் கூடங்கள் முன் மறியல் செய்வது சம்பந்தமான யோசனை ஒரு அதிகாரியின் கவனத்துக்குக் கொண்டு வரப்பட்டது. அதைச் சர்க்கார் உறுதியு டன் சமாளித்து உறுதியான நடவடிக்கை எடுக்கு மென்று அந்த அதிகாரி பதில் அளித்தார்.''

என்ற ஒரு செய்தி `தினமணி' என்ற பத்திரி கையில் காணப்படுகின்றது. எனவே, இந்தி எதிர்ப்பியக்கத்தை எதிர்த்து நடவடிக்கை எடுத்துச் சமாளிக்கும் ஆற்றல் சர்க்காருக்கு உண்டென்பதை ஒரு அதிகாரியின் (அந்த அதிகாரி எந்தத் துறைக்கு அதிகாரியோ தெரி யாது) வாயிலாகச் சர்க்கார் இந்தி எதிர்ப்பாளர் களை மிரட்டும் புதுமுறை. ஏற்கெனவே, முடிவு செய்யப்பட்ட இந்தி எதிர்ப்பு அமைப்பைக் குலைத்து விடாதென்பதை, வேறொருவரை விட்டு மிரட்டிப்பார்க்கும் சர்க்காரைப் போலன்றி, நாம் நேரடியாகவே கூறுகின்றோம்.

எனவே, இந்தி எதிர்ப்பில் ஈடுபட்டுப் பணிபுரியத் தயாராய் இருக்கும் தோழர்கள் ஆகஸ்ட் பத்தை நினைவில் வைத்துக் கொள் ளும்படியும், தலைவர்களின் ஆணை பிறந்தவு டன் கடமையைச் செய்ய முன்வரும்படியும் கேட்டுக்கொள்கிறோம்.

(திராவிட நாடு - 8.8.48)