அறிஞர் அண்ணாவின் கட்டுரைகள்


அவர் காட்டிய வழி!
தன்நலங் கருதாது பொதுத் தொண்டு புரிந்ததன் காரணமாக உலக உத்தமர் என்ற உயரிய நிலையைப் பெற்ற காந்தியார் மறைந்து ஓர் ஆண்டு நிறைந்து, அவருடைய நினைவின் அறி குறியாக நாடெங்கும், ஏன், உலகமெங்குமே அவருடைய உழைப்புக்கும் தியாகத்திற்கும் நன்றி செலுத்தும் முறையில் அனைவரும் அவருக்கு வணக்கமும் மரியாதையையும் செலுத்தினார். காந்தியார் மறைந்தாலும் அவர் வகுத்த கொள்கைகளும் திட்டங்களும் நம்முன் இருக்கின்றன என்றும், ஆவற்றை நடைமுறையில் கொண்டு வருவதே நம்முடைய நீங்காக் கடமையாக இருத்தல் வேண்டும் என்றும், அப்போதுதான் நாம் அவரை உண்மையாகவே மதித்து அவர் விருப்பப்படி நடக்கிறோம் என்பதாகப் பொருள் கொள்ள முடியுமென்றும் பேசினர், அவருடைய நினைவுநாட் கூட்டத்தில் கலந்து கொண்ட ஒவ்வொரு தலைவரும் இதனை நன்கு வலியுறுத்திப் பேசியுள்ளனர்.

ஒவ்வொருவரும் தத்தம் மனப்போக்கிற்கேற்றபடி அவருடைய ஒப்பற்ற சேவையைப் பாராட்டி, அவர் காட்டியவழி நடக்கவேண்டுமென்பதை விளக்கிப் பேசினர்.
சத்தியத்தை கைக்கொள்ள வேண்டும்.
ஆகிம்சையைக் கடைப்பிடிக்க வேண்டும்.
வெறுப்பவரையும் நேசிக்கவேண்டும்.
பொய்க்குப் பதில் மெய்யே பேசவேண்டும்
கதர் நூல் நூற்கவேண்டும்.
எளிய வாழ்க்கையை மேற்கொள்ள வேண்டும்.
என்றெல்லாம் அவருடைய கருத்துகளையும் கொள்கைகளையும் விளக்கிப் பேசினர். நமது மாகாண முதலமைச்சர் அவரை ஒரு அவதார புருஷர் என்று புகழ்ந்து பேசினார். ஆனால் இந்த விதமான புகழ்மாலையைக் காந்தியார் ஒருபோதும் விரும்பியவரல்ல என்பதை நமது முதலமைச்சர் மறந்து, மற்றவர்களை விடத்தாம் காந்தியாரிடத்தில் அதிக அன்பும் மதிப்பும் கொண்டிருப்பதாகக் காட்டிக் கொள்வதற்காக ஒருவேளை இவ்விதம் பேசியிருக்கலாம். என்றாலும், அவர் காட்டிய வழி நடப்பவர்கள், அவருடைய வழியை விட்டுத் தவறி நடக்கக்கூடாது என்பதே நமது கருத்தும், மற்றும் அவரைப் பின்பற்றி அவர்வழி நடப்பவர்களின் கருத்துமாகும். ஏனென்றால், காந்தியார், தம்மை அளவு கடந்து புகழ்வதை எப்போதுமே விரும்பியதில்லை.

“என்னிடத்தில் சிறப்பான தெய்வத்தன்மை என்பது ஒன்றும் இல்லை. நான் தீர்க்கதரிசி அல்ல. நான் உண்மையைத் தேடி அலைகிற ஓர் தொண்டனேயாவேன்.”

என்று காந்தியார் தம்மைப்பற்றிப் பலதடவை கூறியுள்ளார். எனவே, காந்தியார் விரும்பாத ஒன்றை அவர் மீது சுமத்தி, அதனால் அவருடைய புகழை உயர்த்துவதாக நினைப்பது, அவர் காட்டிய வழி நடக்கிறோம் என்று கூறுவதற்கு முற்றிலும் புறம்பான தற்புகழ்ச்சியாகும். காந்தியார் உலகில்ஓர் சிறந்த அறிவாளி. அரசியலில் அற்புதமான புரட்சியைச் செய்தவர். ஆயுதமின்றியே ஆயுதபலம் படைத்த ஆங்கிலேயரை விரட்டியடித்தவர். அவருடைய இடத்துக்கு இனி ஒருவர் வர முடியாது என்ற இன்னபிற புகழ்ச்சிசொற்களையே, ஆவரில்லாத காலத்தில் அவருக்குக் காட்டும் மரியாதைச் சொற்களாகக் கொள்ளவேண்டும். அங்ஙனமின்றி அவரை ஒரு அவதார புருஷராக்கிக் காட்டுவதை அறிவுடைய உலகம் ஒருபோதும் ஒப்புக் கொள்ளாது - விரும்பாது. இதுவரை, அவதார புருஷர்கள் என்று கருதப்பட்டவர்கள் எவரும் உலகுக்குத் தேவையான - அறிவுள்ள எந்தக்காரியத்தையும் செய்தேயில்லை. அவதார புருஷ மகிமை எல்லாம் பூஜை அறைக்கப் பயன்பட்டதேயொழியப் புத்துலக அமைப்புக்குப் பயன்படவே இல்லை. மூடநம்பிக்கைக்கு வழிகோலலியதேயன்றி முற்போக்குக்கு வழிகோலவில்லை. ஒழுக்கக் கேட்டிற்கு வழிகாட்டிற்றேயன்றி ஒழுக்கத்தின் உயர்வுக்கு அது பயன்படவில்லை. பொய்யை மெய்யாக்க உதவிற்றேயன்றி, வாய்மைக்கு வழிகோலவில்லை. சுருங்கச் சொல்லவேண்டு மானால், உலக வாழ்க்கைக்குப் பயன்படாதது எதுவோ, அதுவே அவதார புருஷர்களால் செய்யப்பட்டு வந்திருக்கிறது. ஆனால், காந்தியாரின் ஒவ்வொரு செயலும் உலக வாழ்க்கைக்கு இன்றியமையாதனவாகவே இருந்தன. அப்படிப்பட்ட ஒரு உத்தமரை இமை வராக அவதாரப் பட்டியில் சேர்த்துப் பேசுவது அறிவுடையாகாது - அவர் காட்டிய வழி நடப்பதாகவும் இகாது.

காந்தியார் காட்டிய வழிகளில் நடப்பதாக அவருடைய நினைவு நாட் கொண்டாட்டத்தில் கலந்து சூள் உரைத்தவர்கள், அவருடைய உள்ளத்தில் உறுத்திக் கொண்டிருந்த ஒரு முக்கியமான திட்டத்தைக் கடைப்பிடித்து நடப்பார்களானால், அதுவே அவருக்குக் காட்டும் அன்பும் மரியாதையும் கடமையுமாகும். என்ன அந்தத் திட்டம்?

“பிறரைச் சுரண்டிச் செல்வம் சேர்க்கும் பணக்காரன் பிறர் வீட்டில் புகுந்து திருடுபவனை விட எந்தவிதத்திலும் குறைந்த குற்றத்தைச் செய்தவனல்ல. இதில் ஒரே ஒரு வித்தியாசம் - பணக்காரன் கௌரவமான போர்வையில், சட்டத்தின் பிடியிலிருந்து தப்பித்துக் கொள்ளுகிறான். ஒருவனுடைய நியாயமான தேவைக்கு மேல் செல்வத்தைக் குவித்து வைத்திருப்பது திருட்டேயாகும்.”

என்பது காந்தியாரின் கொள்கைகளில் ஒன்றாகும். அவருடைய இந்த விருப்பத்தை நிறைவேற்றி வைப்போம் என்று அவர் காட்டிய வழி நடப்பதாக அவருடைய நினைவு நாளில் உறுதி கூறிய எந்தத் தலைவரும் கூறக்காணோம் ஏன்? ஒரு வேளை இது அவர்களுக்கு அவ்வளவு முக்கியமானதாக - உடனடியாகக் கவனிக்கப்படவேண்டிய விஷயமாகத் தோன்றவில்லைப் போலும்! அல்லது பண்டிதநேரு அவர்கள் காந்தியார் நினைவு நாளில்,
“மகாத்மா காந்தி காட்டிய வழியை நாம் கிடைப்பிடிப்பதா? அல்லது மற்றொரு வழியைக் கடைப்பிடிப்பதா? மகாத்மா காந்தி காட்டிய வழியை நாம் எவ்வளவு தூரம் பின்பற்ற முடியும் என்பதையும், இன்றைய சூழ்நிலையில் அந்த வழியை மாற்ற வேண்டியது அவசியந்தானா என்பதையும் நாம் கண்டுபிடிக்க வேண்டியிருக்கிறது. இது ஒரு முக்கியமான விஷயமாகும்.”
என்று கூடியபடி, காந்தியார் காட்டிய வழி நடப்பதில் தடையாக இருக்கும் பலவற்றுள் ஒன்றாக நாம் மேலே குறிப்பிட்ட விஷயமும் சேர்க்கப்பட்டு, அது, பண்டிதநேரு அவர்களால் கண்டு பிடிக்கப்பட வேண்டிய பிரச்சனையாக இருப்பதால்தான், இதைப்பற்றி அவர் நினைவு நாளில் யாரும் பேசவில்லை போலும்!

இத்துணைக் கண்டத்தின் முதல்வராக விளங்கும் பண்டித நேரு அவர்கள், காந்தியார் காட்டிய வழி நடப்பதா அல்லது வேறு வழியைக் கண்டுபிடிப்பதா என்ற ஐயப்பாட்டினைக் காந்தியாரின் நினைவு நாளில் வெளியிட்டிருக்கிறார். ஆனால், அதேபோது, பலர், காந்தியார் காட்டிய வழி நடப்பதே முறை என்று சூளுரைத்துள்ளனர். இந்த இரண்டில் எது நடைமுறைக்கு வருமென்பது இனிப் பொறுத்திருந்து பார்க்க வேண்டிய விஷயமாகும். என்றபோதிலும், நாம் எதிர்பாராத ஒரு பெரிய காரியத்தை நமக்குத் தம்முடைய பெருமுயற்சியால் சாதித்துத் தந்த காந்தியாரின் திட்டங்களில் முக்கியமானவற்றையாவது கடைப்பிடித்து, ஆவற்றை வெற்றி பெறச் செய்து நடைமுறையில் கொண்டு வருவருதான், நாம் அவர் காட்டிய வழி நடக்கிறோம் என்பதற்கும், நாம் அவருடைய அரிய சேவையை மறக்கவில்லை என்பதற்கும் அறிகுறியாகும் - நன்றி செலுத்தும் முறையாகும். அங்ஙனமின்றி, அவருடைய திட்டங்களையும், கொள்கைகளையும் காற்றில் பறக்கவிட்டு, அவரை அஞ்சலி செய்வதோ - அவதார புருஷராக்குதோ அறிவுடைமையாகாது.

காந்தியார் பல திட்டங்களை நம் முன் வைத்துவிட்டுச் சென்றுள்ளார். அவைகளில் முக்கியமானது நாம் மேலே குறிப்பிட்டிருப்பது. அவருடைய திட்டங்களில் இன்னொன்று :
“கருத்து வேற்றுமை அல்லது மாறுபாடுகள் இருப்தற்காகப் பகைமை உணர்ச்சி ஏற்படக் கூடாது.”
என்பதாகும் இதனை, அவர் பெற்றுத் தந்த சுயராச்சியத்தை ஆளும் பொறுப்பை ஏற்றுக் கொண்டுள்ளவர்கள் மிகவும் முக்கியமாகக் கவனிக்க வேண்டும். இதனையும் இனிக் கண்டுபிடிக்க வேண்டிய பிரச்னைகளில் ஒன்றாகக் கருதிவிடக்கூடாது. ஒருவருடைய கருத்து இன்னொருவருடைய கருத்துக்கு மாறுபடுகிறதென்ற காரணத்துக்காக அவரை வதைபுரியும் கொடுமையை இளவந்தார்கள் கடைப்பிடிக்கத் கூடாதென்பதே காந்தியரின் வாசகத்தில் அடங்கியிருக்கும் உண்மையாகும். இதனை, இளவந்தார்கள் காந்தியார் மறைந்தவுடனேயே மறந்துவிட்டனர். எங்கே கருத்து மாறுபாடு தோன்றினாலும், அங்கே இளவந்தார்கள் படையெடுத்து அடக்கி விடுவதையே தங்கள் ஆளும் உரிமையாக்கிக் கொண்டுள்ளனர். எடுத்துக்காட்டாக இராவண காவியம் என்ற ஒரு நூலை எழுதுவதன் வாயிலாக அதன் ஆசிரியர், இராமாயணத்தைப் பற்றிய தம்முடைய கருத்தை வெளியிட்டார். இது, காந்தியார் வழி நடக்கும் இளவந்தார்களுக்குப் பிடிக்கவில்லை. உடனே அந்த நூலைத் தடை ùச்யது பறிமுதல் செய்துவிடடனர். கருத்து மாறுபடுகிறது என்பதற்காக எவரையும் பகைத்துக் கொள்ளக்கூடாதென்று காந்தியார் கூறிய உபதேசம் காற்றில் பறக்கவிடப்பட்டது. ஆனால், காந்தியாரை அவதார புருஷரென்றும், அவர் காட்டிய வழி நடப்பதே நம்முடைய கடமையென்றும் கூறுவதில் மட்டும் நமது மாகாண அமைச்சர்களிடம் மற்றவர்கள் பிச்சை வாங்கவேண்டிய அளவுக்கு மேலே போய்விடுகின்றனர்! இதுதான் அவர் காட்டிய வழி நடப்பதாகச் சொல்லிக் கொள்வதற்கு நற்சாட்சிப் பத்திரமா என்று இளவந்தார்களைக் கேட்கிறோம்.

கருத்து வேறுபாடு காரணமாக ஒருவரோடொருவர் பகைமை கொள்ளக் கூடாதென்பதை மேலும் வலியுறுத்தும் முறையில்,
“கருத்து மாறுபாடு இல்லாமல் இருந்த இரண்டு தன மனிதர்கள் உலகில் இருந்தார்கள் என்பது எனக்குத் தெரியாது.”

என்று காந்தியார் கூறியுள்ளார். எனவே ஒருவருடைய கருத்து இன்னொருவருடைய கருத்தோடு மாறுபடுகிறதே என்ற காரணத்துக்காக, அடக்கி ஆளும் அதிகாரம் தங்கள் கையில் இருக்கிறது - எதை வேண்டுமானாலும் செய்யலாம் - யார் கேட்பது - என்ற போக்கில் ஆளும் முறையை இக்கிக் கொள்வது அறிவுடைமையா? அல்லது அவர் காட்டிய வழி நடக்கும் நெறியா? என்று கேட்கிறோம். கருத்து வேறுபாடுகளைக் காட்டி விவாதித்து ஒரு முடிவுக்கு வர முடியாதவர்களன்றி, மற்றெவரும் கருத்து மாற்றங்களைக் கண்டு கலங்கித் தங்களைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டுமென்று சட்டத்தின் துணையை நாட மாட்டார்கள். ஒருவர் தம்முடைய கருத்தை - இராச்சியால் கண்ட உண்மையை வெளியிடுகிறார் என்பதற்காக அவருடைய கருத்துக்குக் கதவடைப்புச் செய்வது, நாசிசம், பாசிசம், ஏதேச்சதிகாரம் என்று சொல்லப்படும் கொடுங்கோலாட்சியின் கீழ்ப்பட்ட நாடுகளில் கூடக் காண்பதரிதாகும். ஆனால் இங்கு அன்பு, ஒற்றுமை, சத்தியம், ஆகிம்சை என்ற உணர்ந்த பண்புகளோடு நாட்டை ஆள்வதாகச் சொல்லிக் கொள்ளும் நல்லவர்கள் தாரளமாகவும் தங்கு தடையின்றியும் அந்தக் காரியத்தைக் காந்தியார் கூறிச்சென்ற கருத்துக்களின் நிழலில் நின்று கொண்டே செய்கிறார்கள்.
காந்தியாரின் நினைவு நாளின்போது இந்நாட்டில் நடைபெற்ற நிகழ்ச்சிகளையும், காந்தியார் மறைந்த ஓராண்டுக்குள் நடைபெற்ற ஒவ்வொரு நிகழ்ச்சிகளையும் ஒப்பு நோக்கிப் பார்க்கும் சந்தர்ப்பம் காந்தியாருக்குக் கிடைத்தால், “இந்தக் கொடுமைகளைக் காணவா சுயராச்சியத்தைப் பெற்றது? இவர்களை விட அவர்கள் எவ்வளவோ மேல்” என்று எண்ணி வருந்தாமல் இருக்கமுடியாது.

காந்தியார், தம்முடைய கொள்கைகளும் திட்டங்களும் எங்கே கைவிடப்பட்டுவிடுமோ என்று அஞ்சியதாலேயே அவர் தம்முடைய நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோளையும் விடுத்துச் சென்றுள்ளார்.

“ஏன் நண்பர்கள் ஏன்போர் எனக்குக் கொடுக்கும் உயர்ந்த சிறப்பு, அவர்கள் வாழ்க்கையில், நான் கடைப்பிடித்த கொள்கைகளை நிறைவேற்ற முயலுதலேயாகும்.” என்று கூறியுள்ளார். ஆனால் அவருடைய நண்பர்கள் என்று தங்களைக் கருதிக்கொள்பவர்கள் என்ன செய்கிறார்கள்? அவருடைய கொள்கைகளைப் பின்பற்றி நடக்கிறார்களா? இல்லையா என்பது ஒருபுறம் இருக்கட்டும். காந்தியாரின் நினைவுநாளில் மிக மிக முக்கியமாகவும் துன்மையாகவும் நினைத்து - வருந்தி - இனியும் அவ்விதம் ஏற்படாதபடி எச்சரிக்கையாக இருக்கவேண்டிய ஒன்றைப்பற்றியாவது யாராவது நினைத்தார்களா? நினைத்தாலே நெஞ்சு பதறும் ஆச்செய்தியை, அவரை அவதார புருஷராக்கும் அளவுக்குத் தங்கள் அறிவை விசாலப்படுத்திக் கொண்டவர்கள் சிறிதளவாவது சிந்தித்து அதற்காக வருத்தப்பட்டதாகவோ இனியும் அவ்விதமான கோரநிகழ்ச்சிகள் நாட்டில் நடைபெறாதிருப்பதற்கான வழிவகைகளை வகுத்துக் கொள்ளவேண்டு மென்பதற்காகவோ எவரும் எண்ணியதாகக்கூடத் தெரியவில்லையே!

ஆனால், தோழர் இராசேந்திர பிரசாத் அவர்கள் மட்டும், காந்தியாரின் நினைவு குறித்து, அரிஜன் பத்திரிகையில், “ஏற்று அனுஷ்டிக்க வேண்டியது” என்ற தலைப்பில் எழுதிய கட்டுரையில் ஒரு குறிப்பை வெளியிட்டிருக்கிறார், அதாவது :
“கடைசியில் ஒரு இந்துவின் கைதான் அவருடைய உடலில் குண்டுகளைப் பாய்ச்சியது. இன்னும் அந்த இந்து தான் செய்தது சரியென்று தத்துவம் பேசுகிறான்.”

என்று வேதனையுடன் எழுதியிருக்கிறார். இந்த வாசகத்தில் காணப்படும் ஒவ்வொரு சொல்லும் படிப்பவர் கேட்பவர்களின் உள்ளத்தையும் உடலையும் உலுக்குவதாகவே இருக்கிறது. உலக ஒற்றுமைக்காகப் பாடுபட்ட ஒரு உத்தமரைக் கொன்றவன் யார்? என்று கேள்வியைக் கேட்டு, அதற்குப் பதில் கூறுவது போன்றதே.

“கடைசியில் ஒரு இந்துவின் கைதான் அவருடைய உடலில் குண்டுகளைப் பாய்ச்சியது”

என்று டாக்டர் இராஜேந்திர பிரசாத் கூறுவது. கூறி, மேலும் கேட்கிறார், இதற்கென்ன பரிகாரம் தேடினீர்கள் என்று.

“இன்னும் அந்த இந்து, தான் செய்தது, சரியென்று தத்துவம் பேசுகிறான்”

என்று எழுதுவதன் வாயிலாக, நாட்டுமக்கள் அனைவரையும் நோக்கிக் கேட்பதுபோல் இவ்வாசகத்தை அமைத்திருக்கிறார் கேட்பதோடு மட்டும் அவர் நிற்கவில்லை.

“இந்தக் குற்றம் மகாபாதகமானதென்றும், மிகமிகத் துக்ககரமானதென்றும் உணர்வதை உலகம் விரைவில் அறியப்போகிறது.”

என்றும் கூறியுள்ளார். இவ்வாசகத்திலுள்ள, “உணர்வதை உலகம் விரைவில் அறியப் போகிறது” என்பதன் பொருள் என்ன? உணர்வது யார்? இதற்கு விடை இந்த வாசகத்தின் கடைசியிலேயே உள்ளது. “உலகம் விரைவில் அறியப்போகிறது” என்பதுதான் அதற்கு விடையாகும். காந்தியாரின் படுகொலை பாதகமானது என்பதை இந்நாட்டிலுள்ளவர்கள் இன்னும் உணரவில்லை என்றும், இனிமேல்தான் உணர்வார்கள் என்றும், அப்போது உலகம் அதனை அறியும் என்றும் டாக்டர் இராசேந்திரபிரசாத் கூறுகிறார். இந்தக் கொடுமையை இந்நாட்டிலுள்ளவர்கள் இன்னும் உணரவில்லையே என்று வேதனையுடன் கூறுகிறார். உணர்ந்திருந்தால் - அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருந்தால், அல்லது எடுக்கப்படவேண்டுமென்ற சைகையாவது இளவந்தார்களால் காட்டப்பட்டிருந்தால அந்தக் கட்டுரை இந்தவிதமான வாசகங்களோடு அமைந்திருக்காது - அதன் தலைப்பும் “ஏற்று அனுஷ்டிக்க வேண்டியது” என்று அமைக்கப் பட்டிருக்காது.

எனவே, அவர் காட்டிய வழியில் நாட்டை ஆள்வதாகச் சொல்லிக் கொள்ளும் தலைவர்கள் இன்னுமொரு முறை இராசேந்திரபிரசாத் எழுதிய கட்டுரையைக் கருத்தோடு படித்து, அதன்படி, தங்கள் ஆட்சிமுறைகளை மறா;றிக்கொள்வார்களா அல்லது இனியும் இந்தவிதமான கொலை பாதங்களே நாட்டில நடைபெறுவதற்கான வழிவகைகளை உண்டாக்கும் முறையில் தங்கள் ஆட்சி முறையை அமைத்துக் கொள்வார்களா என்பது பொறுத்திருந்து பார்க்கக்கூடிய ஒன்றல்ல - உடனடியாக மேற்கொள்ள வேண்டிய மிக மிக முக்கியமும் அவசியமுமான ஒன்றாகும் என்பதனை நாம் இளவந்தார்களுக்கு ஞாபகப்படுத்துவதோடு, காந்தியார் காட்டிய அன்புவழியில் இனியாவது நடக்கமுயல வேண்டுமென்றும் கேட்டுக் கொள்ளுகிறோம். ஏனென்றால், அன்புக்கு, உண்டாக்கும் ஆற்றல் உண்டென்றும், பகைமைக்கு அழிக்கும் ஆற்றலே உண்டென்றும் அவர் போதித்திருக்கிறார்.

காந்தியாரின் கொள்கைகளில் சில நமக்கு, ஏன், அவருடைய நெருங்கய நண்பர்களுக்கே கூட உடன்பாடல்லாதனவாக இருந்து வந்திருக்கிறது. என்றபோதிலும், அவருடைய ஒழுக்கத்தையும் யர்ந்த பண்புகளையும் ஏவமே குறை கூறியது கிடையாது. எனவேதான் அவர் உலக உத்தமர் என எல்லோராலுமே போற்றப்படுகிறார். எனவே, அன்பையும், உண்மையையும், பிறருக்குத் தன்னாலான உதவி செய்யும் சிறந்த பண்பையும் பெற்று, பகைமை, பொறாமை ஆகிய தீய முறைகளைக் கைவிட்டு, நம்மையும் நாட்டையும் பாதுகாத்துக் கொள்வதுதான், அவர் காட்டிய வழி நடப்பதற்கும், ஆட்சிமுறை ஆலங்கோலமாகாமல் இருப்பதற்கும், அறிகுறியாகும். உலகம் வெறுக்கும் கொடுமையான கொலைபாதகங்களைச் செய்வோருக்கு இனி நாட்டின் புகலிடம் இல்லையென்பதை அவர் காட்டிய வழி நாட்டை ஆள்பவர்கள் நடைமுறையில் செய்து காட்டவேண்டுமென்பதே நமது விருப்பமும் வேண்டுகோளுமாகும்.

(திராவிடநாடு - 6.2.49)