அறிஞர் அண்ணாவின் கட்டுரைகள்


அவர் காட்டிய வழியில்!
ஓமந்தூரார் மந்திரிசபை மறைந்து, இராஜபாளையத்தார் மந்திரிசபை மலர்ந்துள்ளது. இந்த மாற்றத்தைக் காணக் கண்ணிலும், கருத்திலும் கடும்விஷம் ஏந்தி, காங்கிரஸ் தோட்டத்திலே பலர் சுற்றி வந்தனர் - பலநாள் சுற்றிவந்தனர்! மாற்றத்திற்குப் பல வழிகளிலும் பாடுபட்டனர். மாற்றம் அவர்களுக்கு மகிழ்ச்சியையூட்டி நிற்கிறதா என்றால், இல்லை! மாறாக மருட்சியையே கொடுத்துள்ளது!

பிரதமர் பீடம் காலியானதும், அதில் பூக்கும் புதுமலர் தங்களுக்குக் களிப்பூட்டும் வகையில் புது மணத்தைக் கமழச் செய்யும் என்று எண்ணினார் போலும்! ஆனால் பூத்த புதுமலர் பழைய மணத்தையே வீசக்கண்டு ஓலமிட்டு நிற்கின்றனர். காங்கிரஸ் தோட்டத்தின் வேலிக்கு அப்பால் நின்று கொண்டு காட்சியைக்காணும் நமக்கு மலர் பூத்தது தெரிகிறது. அதைச் சுற்றி நின்ற ஓலமிடுவோரின் ஒலியும் கேட்கிறது.

தோழர் பி.எஸ். குமாரசாமி ராஜா தற்பொது அமைத்திருக்கும் மந்திரிசபையில் இருவர் தவிர்த்து ஏனையோர் முன்பிருந்தவர்களாகவே இடம் பெற்றுள்ளனர். எதிர்பார்த்த மாற்றம் மந்திரி சபையில் ஏற்படாததுகண்டு, இது “புதுப்பிக்கப்பட்ட பழைய மந்திரிசபையே” என்று மாற்றங்காண விரும்பிய பத்திரிகைகள் பலவும் ஓலமிடுகின்றன.

அவைகளுக்கு ஏற்பட்டிருக்கும் மருட்சியை, உறுதிப்படுத்தும் வகையில், புதிய பிரதமரின் வானொலிப் பேச்சும் அமைந்திருக்கிறது.

“கட்சித் தலைவரிலோ அல்லது மந்திரி சபையில் இரண்டொரு அங்கத்தினரிலோ மாறுதல் ஏற்பட்டு விட்டதால், இதற்கு முன் இருந்த சர்க்காரின் கொள்கைகளுக்கும், எங்கள் கொள்கைக்கும் மாறுதல் இருக்க வேண்டுமென்று அவசியமில்லை. என்று பிரதமர் பதவியேற்ற அன்று இரவு பேசிய வானொலிப் பேச்சில் தோழர் குமாரசாமி ராஜா குறிப்பிட்டுள்ளார். ஓமந்தூரார் போட்டு வைத்த பாதையை ராஜாபாளையத்தார் வேறு திக்கிற்குத் திருப்ப மாட்டார் என்று எண்ணுவதற்கு மேற்குறித்துள்ள பேச்சு இடமளிப்பதாக அமைந்துள்ளது. அப்படி உண்மையாகவே அமையுமானால் காங்கிரஸ் வேலிக்கு அப்பால் நிற்கும் நமக்கும், நாட்டின் பெருங்குடி மக்களுக்கும், முழுவதுமில்லாவிட்டாலும் ஓரளவுக்காவது மகிழச்ச்யூட்டும் நிகழ்ச்சியாக அது கொள்ளப்படும்.

ஓமந்தூராரிடத்திலே நேர்மை, நாணயம், உண்மையுணர்வு ஆகிய மணங்கள் கமழக் கண்டோம். மாற்றுக் கட்சியினர்க்கு மதிப்பளித்தல், அன்னவரின் கொள்கைகள் நாட்டில் நடமாட இடமளித்தல் எண்ண - எழுத - எடுத்துக் கூற உரிமை வழங்குதல், பொதுவுரிமையைக் பறிக்காதிருத்தல் போன்ற மணங்கள் இராமசாமியார் ஆட்சியிலேயே கமழாதிருக்கும்போது குமாரசாமியார் ஆட்சியில் கமழுமா என்பது ஐயப்பாட்டின்பாற்பட்டதாகவே இருக்கின்றது!

நெஞ்சிலே கடுந் தீயை ஏந்தி ஓமந்தூரார் ஆட்சிக்கு ஊலை வைக்க எண்ணியவர்கள், அந்தச் செயலை மேற்கொள்ளக் கொண்ட காரணங்கள் இரண்டு ஆகும். ஒன்று வகுப்புவாரி விரதிநிதித்வக் கொள்கைக்கு ஆதரவளிக்க முனைந்தது. இரண்டாவது இந்துமத அறநிலையப் பாதுகாப்புச் சட்டத்தைத் திருத்த முற்பட்டது. இத்தகைய வன்னெஞ்சினரின் கருத்துக்கள் ஆதரவளிக்க, சுயநலக்காரணங்கள் பலவற்றால் தாக்குண்ட வர்கள் ஓடியாடினர். அதன் விளைவாக ஓமந்தூரார் பிரதமர் பீடத்தினின்றும் இறக்கப்பட்டார்.

சுயநலவேட்டைக்கார்களுக்கு வெற்றியா தோல்வியா என்பது குமாரசாமியார் செல்ல இருக்கும் வழியைப் பொறுத்திருக்கிறது. வீழ்ந்துபட்ட பெருங்குடி மக்களுக்குச் சமசந்தர்ப்பங்கள் அளித்து, ஒத்த உயர் நிலைக்கு அனைவரையும் கொண்டுவருவதற்கு ஏற்ற சாதனமாக இருந்து வரும் ஒருபெருங் கொள்கையான வகுப்புவாரிப் பிரதிநிதித்வ முறையைத் தொடர்ந்து கையாண்டு வருவதினாம் பொதுமக்களின் பேரால் கோயில்களிலும், மடங்களிலும், அறநிலையங் களிலும் வீணர்க்கு மட்டுமே பயன்படுமளவில் முடங்கிக் கிடக்கும் பெரும்பொருளை பொதுமக்களின் நலனுக்குப் பயன்படும்வகையில் ஓரளவுக்குத் திருப்ப முயற்சி செய்யும் அறநிலையப்பாதுகாப்புத் திருத்த மசோதாவைச் சட்டமாக்கிக் காட்டுவதன் மூலமும் தான், தோழர் குமாரசாமி ராஜா ஓமந்தூரார் இராமசாமியின் ஆட்சியைப் பின்பற்றிக் கொள்கையைத் தொடர்ந்து உடேற்றி வைத்ததாகக் கொள்ளமுடியும், கொள்ளவேண்டும்.

ஓமந்தூரார் நின்ற இடத்தில் இப்பொழுது தோழர் குமாரசாமி ராஜா ஏற்றப்பட்டிருக்கிறாராதலால், பொதுமக்கள் இனி நடக்கும் ஆட்சி முறையை இதுவரையில் நடந்து வந்த முறையோடு ஒப்பிட்டுப் பார்ப்பார்கள் என்பது உறுதி. ஓமந்தூரார் தனிப்பட்டவர்களின் முகதாட்சண்யங்களுக்குக் கட்டப்படாமல், தனக்குச்சரி எனப்பட்டதிலே கண்ணுங் கருத்துமாக இருந்து, தொண்டாற்றி நிர்வாகத்திலே ஒருவித பிடிவாத முறையைக் காட்டி வந்துள்ளார். கள்ள மார்க்கட்காரர்களையும், லஞ்சம் வாங்குவோரையும் தயை தரட்சண்யமின்றித் தண்டிக்க முற்பட்டார் என்ற எண்ணம் பொதுமக்களின் உள்ளத்திலே ஊசலாடி அவரது ஆட்சிக்கு நல்லபெயரை வாங்கித் தந்துள்ளது. காங்கிரஸில் செல்வாக்குப் படைத்தோரும், பெரும் பதவி வகிப்போரும், காங்கிரசின் மூலம் சட்டமன்றம் புகுந்தோரும் அன்றாட அரசாங்க நிர்வாகத்தில் தலையிடும்போது ஓரளவுக்கு அம்மாதிரியான முயற்சிக்கு எதிராக இருந்து குறைமதியினரின் போக்குக்குத் தடையாக இருந்திருக்கிறார். நாணயமானவர் - லஞ்சம் வாங்காதவர் - நேர்மைக்கு மதிப்பு கொடுப்பவர் - பதவி மோகங் கொள்ளாதவர் - சில்லரைகளின் கெடுமொழி கேளாதவர் என்ற இத்தகைய பண்புகள்தாம் ஓமந்தூராரைப் பதவியில் இருத்தி வைக்கவேண்டும் என்ற உணர்வைப் பொது மக்களிடத்திலே எழச் செய்தன. நாட்டின் நாலா பாகங்களிலிலும், எல்லாத் துறைகளிலும் ஊழல்கள் மலிந்து காணப்படும் இதுபோன்ற நாட்களில் ஓமந்தூராரின் தலைமை நாட்டின் நிர்வாகத் துறையில் இருப்பது நலம் என்று காங்கிரசின் போக்குக்கு வேறுபட்ட நோக்கங் கொண்ட வேறு பல இயக்கத்தினருங்கூட கருதி வரலாயினர். இப்படிப்பட்ட சூழ்நிலை வளர்ந்து வந்த நிலையில்தான் ஓமந்தூரார் பதவியை விட்டு விலகியுள்ளார்.

இந்தச் சூழ்நிலையை மனதில் கொண்டு, தோழர் குமாரசாமி ராஜா ஆட்சிப்பீடத்தில் அமருவாரானால், அவருடைய ஆட்சி, பொதுமக்களால் இலாபக்காரரும், சுயநலங் கொண்டோரும், சூழ்ச்சி பலசெய்வோரும், லஞ்ச மோப்பம் பிடித்தோரும், பொதுநலத்தில் நஞ்சு கலப்போரும் ஆகிய பண்பினரைப் பதவியிலேற்றப் பணிபுரிவோரும், பக்கம் நின்றுபராக்கு கூறுவோரும் குமாரசாமியாரைச் சுற்றி வல்லூறென வட்டமிடத் தொடங்குவார்கள். அத்தகைய வல்லூறுகளுக்கு இடமளிக்காமல் நிற்பாரோயானால் பதவி பறிபோனாலும் பண்பாவது காப்பாற்றப்படும்.

குமாரசாமியார் ஓமந்தூரார் காட்டிய நேரிய வழியில் செல்கிறாரா அல்லது வைத்தியநாத ஆய்யர் காட்டும் வளைந்தவழியில் செல்லுகிறரா? என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.

(திராவிடநாடு - 10.4.49)