அறிஞர் அண்ணாவின் கட்டுரைகள்


அவர் நல்லவர்!

தோழர் திரு.வி.க.வின் அறுபதாண்டு நிறைவு நாள் வருகிற 25-8-1943ல் நிகழ்கிறது. திரு.வி.க. அவர்கள் தமிழ் நாட்டவரால் நன்கு அறியப்பட்டவர். அரசியலிலும், மதவியலிலும் அவர் பெரிதும் ஈடுபட்டராதலால், அவரை அறியாதார் தமிழ்நாட்டில் சிலரே இருக்க முடியும். எனவே, அரைப்பற்றித் தெரிந்தவர்களில் நானும் ஒருவனாதலால், அவருடைய அறுபதாண்டு நிறைவுக் கொண்டாட்டத்தின் நினைவாக, இக்கட்டுரையை வரைய விரும்புகிறேன்.

திரு.வி.க. அவர்கள் நல்லவர். இது நான் மட்டும் சொல்வதன்று. அவரை அறிந்த எல்லோருமே பொதுவாக அவரை நல்லவர் என்றே கூறுவது வழக்கம். காரணம், அவரது வாழ்க்கையில் ஏற்படும். நிகழ்ச்சிகள் - அவர் பேசும் பொருள்கள் - அவர் எழுதும் எழுத்துகள் - அவர் செய்யும் செயல்கள் அனைத்துமே அவரை அங்ஙனம் சொல்லும்படி செய்துவிடுகிறது. “பொடிவைத்து நகை செய்வது” என்று சொல்வார்களே, அதுபோலவே இருக்கும், அவருடைய பேச்சு - எழுத்து - செயல் எல்லாம். நகை செய்பவர்கள், நகை செய்வதில் பலமுறைகளைக் கையாள்வது வழக்கம்; அவற்றுள் பொடிவைத்து நகை செய்வதென்பதொன்று. அதை எவரும் எளிதில் கண்டுபிடித்துவிட முடியாது. நகை செய்யக் கொடுத்தவன்; “இந்த ஆசாரி நல்லவன்; மற்றவர்களைப்போல் ஏமாற்றித் தங்கத்தைத் திருடுபவனல்லன் என்று பாராட்டும் முறையில்” அந்த ஆசாரி தங்கத்தில் பொடி வைத்துச் செய்யும் முறையை மிகவும் கெட்டித்தனமாகக் கையாண்டு நல்ல பேர் வாங்கிவிடுவான். தங்க நகையில் எவ்வளவு பொடி வைக்கப்படுகிறதோ, அந்த எடைக்குத் தங்கத்தை ஆசாரி எடுத்துக்கொண்டபோதிலும், பாதிக்குப்பாதி தங்கத்திலே செம்பையோ வேறு உலோகங்களையோ கலந்து நகைசெய்து ஏமாற்றுபவர்கள் போலன்றி, ஓரளவுக்கு நல்லபேர் வாங்கிவிடுவான்.

இதுபோலவே, நமது அன்பர் திரு.வி.க. அவர்களும் தம்முடைய நண்பர்களிடமிருந்து நல்ல பேர் வாங்கிவிடுவார். இருவேறு கருத்துக்களைக் கொண்ட அரசியல் கட்சியாரிடமும் அவர் நடந்து கொள்ளும் முறை அவ்விரு கட்சியாளரும் வரவேற்கக் கூடியதாகவே தம்முடைய கருத்துக்களை வெளியிடுவார். ஓரிடத்தில், ஒரு கட்சியைக் குறித்துக் குறை சொல்வார்; இன்னொரு இடத்தில் அக்கட்சியைப் பாராட்டுவார். ஒரு கட்சியைப் பற்றிக் குறை கூறிய பகுதி, அக்கட்சிக்கு எதிரிகளால் வரவேற்கப்பட்டு, அவரை அவர்களின் நண்பனாக்கிவிடும். அடுத்தபடியாக, அக்கட்சியைப் பாராட்டிய பகுதி, அக்கட்சியினராலேயே வரவேற்கப்பட்டு, அவர்களுக்கும் அவர் நண்பராய் விடுவார்.

அரசியலில் மட்டுமன்று, மத இயலிலும் அவர் கையாளும் முறை இது போலவேதான் இருக்கும். மதம் நல்லதென்று ஓரிடத்தில் கூறுவார்; இன்னொரு இடத்தில் மதமே கூடாதென்று விரிவுரை நிகழ்த்துவார். சைவத்தின் சமரசத்தை ஓரிடத்தில் எடுத்துரைப்பார்; புத்தரை இன்னோரிடத்தில் போற்றிப் பேசுவார்; வேறோரிடத்தில் நபிகள் நாயகத்தை நாவாரப் புகழ்வார்; பிறிதோரிடத்தில் இயேசுவைப் பற்றி இறும்பூதெய்திப் பேசுவார். சைவ வைணவப் போராட்டத்தில் கலந்துகொண்டு, அங்கு, சைவமே பெரிதென்று தனியுரை பேசுவார். அரி வேறு, அரன் வேறு என்று பிரித்துக் கூறுவது பிழைபட்டார் உரை என்று, இங்கு பொதுவுரை நிகழ்த்துவார். தேவாரத்தில் சில பாடல்களை எடுத்துப் பதவுரை செய்வார். நாலாயிரப்பிரபந்தத்தில் நாலாறு பாடல்களை எடுத்து நயம்பட உரை செய்து காட்டுவார். கம்பர் சொன்ன இராமனும், சேக்கிழார் பேசிய சிவனும் ஒன்றே என்பார். சீவகாருணியமே மக்கட்குச் சிறந்த பண்பென்பார். அதே மூச்சில், பெற்ற பிள்ளையைத் தந்தை கொன்று கறி சமைத்தது போலவுள்ள பல உயிர்வதை வரலாறுகளையே பேசும் பெரியபுராணமே உலகில் சிறந்த நூல் என்பார். சமயம் வாய்க்கும்போது, அத்தகைய நூலைக் கலை என்றும், சிறந்த இலக்கியம் என்றும் கூறத்தயங்கவும் மாட்டார்.

ஒன்றைப்பற்றி, இன்னொன்றைத் தொட்டு, வேறொன்றை இழுத்து, மற்றொன்றைத் தழுவிப், பிறிதொன்றை அவற்றுள் புகுத்திச் சமரசம் சன்மார்க்கம் பேசுவதில் திரு.வி.க. முதலிடம் வகிக்கக் கூடியவர். இந்த முறைகளைக் கையாள்வதால், திரு.வி.க. எல்லோராலும் நல்லவராகவே அழைக்கப்படக்கூடிய நிலைமையை அடைகிறார்.

இங்ஙனம் இவர் எல்லோராலும் நல்லவர் என்று அழைக்கப்படுவதற்கு முதன்மையான காரணம் என்னவென்றால், இயற்கையைப் பற்றியே பெரிதும் வற்புறுத்திப் பேசுவது இவருடைய கொள்கை. இத்தகைய அறிவுடைய எவரும் மறுப்பதில்லை. எனவே, திரு.வி.க.வின் இயல்பு இயற்கையை ஒட்டியதாகக் காணப்படுவதால், அவர் எல்லோருக்கும் நல்லவராகின்றார். ஆனால், நான் மேலே கூறியபடி, தங்கத்தில் ஏதாவதொரு பொடியை வைத்து நகை செய்து நல்லவனாவதுபோல், திரு.வி.க.வும் இயற்கையில், கடவுள் - மதம் ஆகிய செயற்கைகளைப் புகுத்தி அதனையும் இயற்கை என்று காண்பித்து நல்லவர் என்ற பெயர் வாங்கப் பெருமுயற்சி செய்பவர். அதில் வெற்றி கண்டாலும், காணாவிட்டாலும் தன்னளவிலாவது மனநிறைவு (திருப்தி) கொள்பவர்.

இனி, இயற்கையைப்பற்றி அவர் பேசும் போதும் எழுதும் போதும், இயற்கையின் தோற்றத்தையே கடவுளாகக்காட்ட முயல்வார். இப்படிப்பட்ட சமயங்கள் நேரும்போது புராணங்களை அடியோடு வெறுப்பதாகக் காட்டிக்கொள்வார். எடுத்துக்காட்டாக ஒரு நிகழ்ச்சியை மட்டு இங்குக் குறிப்பிடுகிறேன். ஒரு சமயம் அவர் இயற்கையைப்பற்றியும், இயற்கையின் தோற்றமே கடவுள் என்றும் தமது “நவசக்தி”ப் பத்திரிகையில் எழுதியிருந்தார். அப்போது அவர் குறிப்பிட்டவை :

1. புராணங்கள் குப்பைகள்.
2. புராணங்கள் ஆரியர்களால் புகுத்தப்பட்டவை.
3. புராணங்கள் சமய வெறியர்களால் பாடப்பட்டவை.
4. புராணங்கள் உலக மக்களின் ஒழுக்கங்களுக்குக் கேடு சூழ்பவை.

என்பதாக எழுதியுள்ளார். எனவே, புராணங்களால் மக்களுக்குக் கேடேயன்றி நன்மை எதுவும் இல்லை என்ற உண்மையை உணர்ந்த நிலையில் நின்ற ஒருவன் திரு.வி.க. அவர்களின் இந்நான்கு கருத்துக்களையும் படிப்பானானால் அவரை ஒருபோதும் கெட்டவர் என்று சொல்லவே மாட்டான். ஆனால், இப்படிச், சொல்லிவிட்டால் அவர், எல்லோருக்கும் நல்லவராக முடியுமா? முடியாது. எனவே அவர் எல்லாருக்கும் நல்லவராகும் முறையை உடனே அதே பத்திரிகையில் அதே நாளில் கையாண்டருக்கிறார். அது வருமாறு :

“பெரிய புராணம் ஒன்று தவிர, மற்றை எல்லாப் புராணங்களும் குப்பைகள்.” என்று எழுதியுள்ளார். இவ்வாறு எழுதியதால், திரு.வி.க. அவர்கள் சைவ உலகுக்கு நல்லவராகின்றார். ஆனால், பெரிய புராணம் தவிர மற்றை எல்லாப் புராணங்களும் குப்பைகள் என்றால், வைணவர்கள் திரு.வி.க. மீது சீற்றங்கொள்ள மாட்டார்களா? அவர்கள், அவரைக் கெட்டவன் என்று சொல்ல மாட்டார்களா? என்று கேட்பீர்கள். அதுதான் இல்லை. அவர்களுக்கு இந்தவிதமான எதிர்ப்பு வேலை செய்யும் பழக்கமோ வழக்கமோ பெரும்பாலும் இல்லை. எடுத்துக்காட்டாக ஒன்று கூறுகிறேன். வைணவ நூலான கம்ப இராமாயணத்தைக் கொளுத்த வேண்டுமென்று பகுத்தறிவாளர் இப்போது துவக்கியிருக்கும் கிளர்ச்சியைக் கூடச் சைவர்கள் எதிர்க்கிறார்களே தவிர, வைணவர்கள் எவரும் இதில் அதிக பங்கெடுத்துக்கொள்ளவில்லை. எனவே, வைணவர்கள் தம்மைக் ‘கெட்டவன்’ என்று சொல்ல மாட்டார்கள் என்பதை அறிந்தே திரு.வி.க. அவர்கள் பெரிய புராணம் தவிர, மற்றவை எல்லாம் குப்பைகள் என்று எழுதியுள்ளார்.

ஆனால், வைணவர்களையும் அவர் அடியோடு வெறுக்க வில்லை. அண்மையில், கம்ப இராமாயணத்தைப் பற்றி அவர் அளவு கடந்து புகழ்ந்து பேசிய செய்தியொன்றும் பத்திரிகைகளில் வெளிவந்துள்ளது. சர்ச்சிலும் டோஜோவும் சிந்தாதிரிப்பேட்டைக்கு வந்து கம்பனைக்காண வேண்டும் என்றும், கம்ப இராமாயணத்தைப் படித்து அவர்கள் அரசியலைக் கற்றுக்கொள்ள வேண்டுமென்றும் பேசியுள்ளார். இதனால், அவர் வைணவர்களாலும் நல்லவராகவே மதிக்கப்படுவதில் தடையிருக்க முடியாது.

இனி, அரசியலிலும் திரு.வி.க. அவர்கள் எல்லோராலும் நல்லவராகவே கருதப்படுவர் என்பதற்கும் ஒரு சான்று தருகிறேன். இந்தி எதிர்ப்பு நடந்த காலத்தில், அதைப்பற்றி ஒரு குறிப்பு அவருடைய “நவசக்தி” பத்திரிகையில் எழுதியிரந்தார். அக்குறிப்பு இந்தியை அவர் எதிர்ப்பதாகவும் கொள்ளமுடியாது; அதனை அவர் ஆதரிப்பதாகவும் கொள்ளமுடியாது. அப்படி எழுதியிருந்தார் அவர். இந்தி எதிர்ப்புக் கிளர்ச்சி வேகமாக நடைபெறுவதையும், அதனைத் தடுப்பதற்குத் தோழர் இராசகோபாலாச்சாரியார் கையாளும் முறைகளையும் கண்ட கலியாண சுந்தரனார், “அடக்குமுறையும் ஒழிய வேண்டும்; கிளர்ச்சியும் அடங்கவேண்டும்” என்பதாக எழுதினார். இந்தமாதிரி ஒருவர் எழுதினால், கிளர்ச்சி செய்பவர்களோ அல்லது அடக்கு முறையைக் கையாள்பவர்களோ அவரை ஒரு கெட்டவர் என்று சொல்லுவார்களா? கிளர்ச்சி செய்பவர்கள், அடக்கு முறை ஒழிய வேண்டுமென்று சொல்லுகிறார் என்பதாக நினைத்து அவரை நல்லவராகவும், அடக்கு முறையைக் கையாள்பவர்கள், கிளர்ச்சி அடங்க வேண்டுமென்று சொல்லுகிறார் என்பதால் நினைத்து அவரை நல்லவராகவுமன்றோ இருசாராரும் கொள்வர்.

ஆனால், இப்படி இருசாராருக்கும் நடுவில் நின்று அவர் பேசுவதும் எழுதுவதும் நல்லதா என்று நீங்கள் கேட்பீர்கள். அது அவருடைய சொந்த இயல்பு. அதற்குத் தீர்ப்புக் கூறும்படி என்னைக் கேட்பது முறையாகாது. அவர், நல்லது கெட்டது ஆகிய இரண்டிற்கும் பொதுவாக நிற்பது எதுவோ, அதனையே இயற்கை என்றும் கடவுள் என்றும் வர்ணிப்பவர். ஆகையால், எல்லார்க்கும் பொதுவில் நின்று நல்லவர் என்று பெயர் வாங்கவேண்டுமென்பதே அவரது குறிக்கோளாகும். அதனாலேயே அவர் எல்லோருக்கும் நல்லவராக நடந்து வருகிறார்.

அரசியல், மதஇயல் ஆகியவற்றில் மட்டும் அவர் நல்லவராக நடப்பதில்லை, இவை அல்லாத பிற துறைகளிலும் திரு.வி.க. அவர்கள் நல்லவராகவே நடப்பவர். தொழிலாளர் இயக்கத்திற்கும் அவர் தலைவர். தொழிலாளர்களின் பல பிரிவினைகள் உண்டு. சாதி - மதம் - கடவுள் ஆகியவற்றை ஆதரிப்பவர்கள்; அவற்றை ஆதரியாதவர்கள்; படித்தவர்கள்; படியாதவர்கள்; வெளிநாட்டவர் உள்நாட்டவர் என்ற பல்வேறு பிரிவுகள் அந்தத் தொழிலாளர்களிடையே இருக்கும். அவர்கள் எல்லாருக்கும் அவர் நல்லவராகவே நடப்பவர். ஆகவே, எந்தத் துறையில் பார்த்தாலும், நமது அன்பர் திரு.வி.க. அவர்கள் நல்லவராகவே காணப்படுகிறார். அவரைக் கெட்டவர் என்று யாராவது கூறுவார்களானால், அவருடைய இயல்பை அவர்கள் சரிவரத் தெரிந்து கொள்ளாமை யினாலேயே அங்ஙனம் கூறுகின்றார்கள் என்று நான் கருதுவேன்.

இனி, அவர் பேசுவது நமக்காகவா, நமது மாற்றாருக்காகவா என்று சஞ்சலப் படுபவர்களுங்கூட, திரு.வி.க. நிறைந்த படிப்பு, அதற்குத் தகுந்த ஒழுக்கம், எளிய வாழ்க்கை, குறைவற்ற செல்வாக்கு புகழ் விரும்பாமை ஆகிய நற்பண்புகள் அனைத்தும் ஒருங்கே வாய்க்கப் பெற்றவர் என்பதை உணர்ந்து இத்தகைய ஒரு தமிழ்ப் பெரியாரின் அறுபதாண்டு நிறைவு விழாவைத் தமிழ் மக்ககள் அனைவரும் கொண்டாடுதல் அவர்தம் கடனாம் என்று கூறிடுவர். இக்கட்டுரையின் வாயிலாக எனதருமை அன்பர் திரு.வி. கலியாணசுந்தரனார்க்கு நானும் பல்லாண்டு கூறுகின்றேன்.

22.8.1943