அறிஞர் அண்ணாவின் கட்டுரைகள்


அவர்கள் உள்ளம்
நாடு, அன்னியராட்சியில் சிக்கிவிடும்போது, தெளிவும் வீரஉணர்ச்சியும் கொண்ட யாரும், விடுதலைப்போர் தொடுக்க வேண்டுமென்பதிலே அக்கறை காட்டுவர் - அந்த அக்கறையின் பயனாகத் தமக்குள் உள்ள ஜாதிமத குலவேறுபாடுகளையும் மறப்பர் - சீறிப்போரிடுவர் எதிரிகளுடன் - வெற்றிக்காக உழைப்பர் - தியாகத்தீயில் குதிப்பர் - தாயகத்தின் தளைகள் பொடிபட வேண்டுமென்பர் - மற்ற விஷயங்கள் முக்கியமல்ல என்று கூறுவர்.

வெற்றி கிட்டியதும் - அதுவரை மூடிபோட்டு வைக்கப்பட்டிருந்த வேற்றுமைகள் - பேதங்கள் - தலைதூக்கத் தொடங்கும்.

நமக்குள் பேதமா! நமக்குள் வேற்றுமையா! . என்று உருக்கமாகப் பேசுவதால் மட்டும்- உபதேசம் செய்வதால் மட்டும் இந்த உணர்ச்சியை உருக்குலைத்துவிட முடியாது.

பேதங்கள் உள்ள வரையில், பேதங்களால் ஏற்படும் உணர்ச்சியும் இருந்தே தீரும்.

போர்க்காலத்து ஒற்றுமையை, வெற்றிக்குப் பிறகு காணமுடியாது - ஏனெனில், வெற்றியின் விளைவுகளை - நாட்டுக்கு ஏற்பட்ட புது வாழ்வின் சுவைகளை, அனைவரும் சமமாக அனுபவிக்க விரும்புவர் - அப்போது, ஜாதிபேதம் என்னும் பழைய முறையை ஆதாரமாகக் கொண்டு, உயர்ந்த வகுப்பினர், விடுதலை பெற்ற நாட்டிலே விசேஷ சலுகைகள் பெற்று வாழ்வு நடத்த விரும்பினால், மற்ற வகுப்பினரின் மனம் நோகாமலிருக்க முடியாது. எனவே, சமத்துவம் கோருவர்.

எங்ஙனம் ஒரு நாடு, மற்றோர் நாட்டினிடம் அடிமைப்படுவதால் நலிகிறதோ, அதே போலவே தான் அடிமைத்தனத்திலிருந்து விடுபட்ட பிறகு, அந்த நாட்டிலேயே, ஜாதி முறைகளினால் சிலர் ஆதிக்கக்காரர் ஆவதால், மற்றவர்களுக்கு வாழ்வில் நலிவு ஏற்படும்.

அன்னிய ஆதிக்கத்தை எதிர்த்தொழிக்க விடுதலைப்போர் நடத்தியது போலவே, உள்நாட்டிலேயும் ஜாதி உயர்வு பேசும் உலுத்தர்களின் ஆதிக்கத்தையும் எதிர்த்தொழிக்கும் விடுதலைப்போர் தேவைப்படுகிறது.

நம் நாட்டில், இன்று நடைபெறுவது, இந்தப் போர்தான். இந்தப் போர் - ஒரு தொடர்கதை. இந்திய பூபாகத்தில் பல்வேறு பகுதிகளில், உயர் ஜாதிக்காரர்கள், தமது ஆதிக்கத்தை அவ்வப்போது திணித்திருக்கிறார்கள் - ஒவ்வோரிடத்திலும், இந்த ஆதிக்கத்துக்கு எதிர்ப்பு ஏற்பட்டே இருக்கிறது.
மராட்டிய மண்டலம், மொகலாய அரசு முழுப்பொலிவுடன் வளர்ந்ததும், தேய்ந்து கிடந்தது.

மாவீரன் சிவாஜி கிளம்பினான் - முரசு கொட்டினான் - மாவீரர் படை திரண்டது - மாற்றார் கண்டு மருளும் அளவுக்கு.

அப்போது, அங்கு உயர்ஜாதிக்காரர்களின் உள்ளமும் செயலும், மற்றவர்களின் எண்ணத்துக்கு மாறுபட்டதாகவே இருந்தது.

போர்! போர்! தாயகத்தின் விடுதலைக்காகப் போர்! - என்று முழக்கமிட்டனர், இலட்சக்கணக்கான வீரர்கள்.

போராம், போர்! நாட்டிலே ஒரே ரகளை! கொலைக்களமாகிறது நாடு! - செல்வம் இப்படிப் பாழாகிறது - என்று சோகித்தனர் ‘உயர் ஜாதியினர்.’

குருடனும் நொண்டியும் கூட, “நாம் சாவதற்கு நேரமில்லை’ என்று கூறி, நாட்டு விடுதலைக்குப் பணிபுரிந்தனர் - தம்மால் முடிந்ததை - தமது கடைசி மூச்சு இருக்கும்வரை.

அப்போதும், யாகம், பிராயச்சித்தம், ஹோமம், ஜெபதபம், என்ற பழையனவற்றையே பிரமாதமானதாகக் கருதினர், உயர் ஜாதியினர்.

உயர் ஜாதி என்று கூறி உரிமை கொண்டாடிய பார்ப்பனரின் மதக் கோட்பாடுகளை மறுத்து, சமரச ஞானம் பேசினர், சாதுக்கள் மராட்டியத்தில். அவர்கள் மறுமலர்ச்சியின் தூதர்கள். அவர்களிடம், உயர் ஜாதியினருக்கு, மிகமிக அலட்சியம். விதண்டா வாதிகள்! குதர்க்க வாதிகள்! நிரீஸ்வர வாதிகள்! நாஸ்திகர்கள்! - என்றெல்லாம் சாதுக்களை நிந்தித்தனர்.

அந்த நாட்களிலே, ஒருபுறம் வீரர், விடுதலைப் போருக்காக உழைத்தனர்; மற்றொருபுறம் உயர் ஜாதிக்காரர், தங்கள் ஆதிக்கத்துக்காக வேலை செய்தனர். அந்த நிலைமையை விளக்கும் சில உரையாடல்களைக் கீழே தந்திருக்கிறோம்:-

காட்சி -1
இடம் மராட்டிய வீரன் விடுதி.

காலம் மாலை

பாத்திரங்கள்:-
குருடான வீரன், தோவாஜீ.
முடமான வீரன், லோகாஜி.

(கத்தி சாணை பிடிக்கும் இயந்திரம், கத்திகள் குவியலாக இருக்கின்றன, குருடன் இயந்திரக் கைப்பிடியைச் சுழற்றுகிறான், முடவன் கத்தியைக் கூர்தீட்டுகிறான், வீராவேசப் பாடலுடன், கத்தியைத் தீட்டிக்கொண்டே இடையிலே ஓய்ந்து)

லோகாஜி: தேவாஜீ! வேகமாகச் சுற்று! வீரத்தோடு சுற்று! கூர் தீட்டப்பட்ட வாட்களைக் குவிப்போம், மராட்டிய மணிகளின் கண்கணிலே வீரக்கனல் கக்குவது போலச் சாணைக் கல்லிலே இருந்துபொறிகள் பறக்கின்றன.

தேவாஜி:- (சுற்றுவதை நிறுத்திவிட்டு) லோகாஜி! மராட்டிய மண்டலத்திலே சுதந்தர தீபம் ஏற்றிவைக்கப்படும் நேரத்தில், ஆண்டவன் என் தீபங்களை அணைத்து விட்டான். நான் எப்படிக் காண்பேன் தியாகத் தீப்பொறிகளை? லோகாஜி! காலிழந்த நீ பாக்கியசாலி, கண்ணிழந்த நான், எதையும் காணமுடியாது. அந்த வாளைக்கண்டு, ஒளியைக் கண்டு, மகிழமுடியாது. போர்க்களத்திலிருந்து திரும்பும் நமது சோதரரைக் காண முடியாது! மராட்டிய நாட்டிலே, மலர்ச்சி இருப்பதைப் பார்க்கமுடியாது! லோகாஜி! நமது ஜெயவீரசிம்மம் சிவாஜியைக் காணமுடியாது, நான் ஏன் வாழ வேண்டும்? வீண்! வீண்!

லோகாஜி:- சேவாஜி! உனக்குமா சுயநல உணர்ச்சி! தியாக மூர்த்தியாகிய உனக்குத் தன்னலம் இருக்கலாமா? உன் கண்போனால் என்ன? நீ காட்சிகளைக் காணமுடியாது. அதுதானே உன் குறை.

தேவாஜி:-நான் காண வேண்டாமா? நம் நாட்டு விடுதலை வீரர்களின் முகவிலாசத்தைக் காணவேண்டாமா? நாம் யார்க்கும் குடியல்லோம், நமனை அஞ்சோம், மாற்றான் முன் மண்டி
யிடோம், மராட்டிய மண்டலத்திலே ஜெயக்கொடி நாட்டியே தீருவோம் என்று பரணி பாடும் வீரர்களைக் காணவேண்டாமா? லோகாஜி! பயிரிட்ட கழனியிலே விளையும் பணியை, வளர்த்த மரத்திலே குலுங்கும் பழத்தைப் பெற்றெடுத்த குழந்தை தவழ்ந்து விளையாடுவதைக் காண யார்தான் துடிக்க மாட்டார்கள்? களத்திலே ஊண் உறக்கம் மறந்து, உற்றார் பெற்றார் மறந்து, என் காதலியையும் மறந்து நான் உலாவிய போது எதை எதைக் காணவேண்டுமென்று நினைத்தேன் தெரியுமா? மராட்டிய வீடுகளிலே மகரதோரணங்களை! ஊருக்கு ஊர் வானளாவப் பறக்கும் வெற்றிக் கொடிகளை! அக்கொடிகளுக்கு வீரவணக்கம் செய்யும் ஆடவரை! அவர்களை வாழ்த்தி வரவேற்கும் ஆரணங்குகளை! அனைவரும் சென்று வணங்கும், அஞ்சாநெஞ்சன் சிவாஜி அரியாசனம் ஏறுவதை! இவற்றைக் காண எண் ணிணேன்.

லோகாஜி:- எண்ணினாய்! கண்ணை இழந்தாய், காணமுடியாது. ஆனால், கவலையைவிடு தேவாஜி! நீ காண வேண்டுமென்ற காட்சிகள், மராட்டிய மண்டலத்திலே அமைக்கப்பட்டு விட்டன. மகிழ்ச்சிதரும் செய்திகளைக் கேட்க உனக்குச் செவி இருக்கிறது. காட்சிகள் எப்படி இருக்குமென்று யூகித்துக்கொள்ளச் சிந்தை இருக்கிறது, உயிரை விடுவானேன் உத்தமனே! ஒப்பற்ற தியாக புருஷனாகிய உன்னைக் கண்டால் அன்றோ மராட்டிய மண்டலமே எழுச்சியுறும்! நீ இறக்கலாமா? இலட்சிய புருஷனாக வாழ்ந்திரு! மராட்டியப் புது யுகத்தின் தூதனாக இரு, நீ காண முடியாது காட்சிகளை; ஆனால், உன்னை மராட்டியர் காண முடியும், உன்னைக் கண்டால் அவர்கள் அவ்வளவு பெருமை அடைவர்! உன் உருவம், கோழையை வீரனாக்கும்; உன் வரலாறு பூனையைப் புலியாக்கும். மேலும், கண் இழந்த நீயும், கால் இழந்த நானும், உடல் உறுப்பு எது இழந்தவனும் இன்று மராட்டியத்துக்குத் தேவை! கருத்து இழந்தவன் தவிர மற்றவர்கள் யாவரும் தேவை! எல்லோருக்கும் வேலை இருக்கிறது! எல்லோரும் தேசப்பணி செய்ய முடியும், ஓர் உறுப்புப் போனால் மற்றொன்றால்! இது விடுதலைப் போர்க்காலம், விசாரத்துக்குக் காலமல்ல, நாம் சாவதற்கு நேரம் இல்லை, தேவாஜி! நாம் வாழ வேண்டும், நமது நாட்டை வாழவைக்க.
(மீண்டும் சாணை இயந்திரத்தைச் சுற்றுகிறார்கள்.)

களம் சென்று போரிட்டு, கண்ணையும் காலையும் நாய்நாட்டின் விடுதலைக்குக் காணிக்கையாகத் தந்தனர் இவ்வீரர்கள். இனிக் களம் செல்ல முடியாது - எனினும், களம் செல்வோருக்குப் பணி புரிவதும், நாட்டுப்பணிதான் என்பதை உணர்ந்து, வாட்களைக் கூர்தீட்டித் தருகிறார்கள். நாட்டுப்பற்று மிக்க இவர்களின் தொண்டு இவ்விதமிருக்க, மராட்டியத்திலே மற்றோர் பக்கம், உயர் ஜாதிக்காரர்களின் உள்ளம் என்ன செய்து கொண்டிருந்தது, என்பதைக் கவனிப்போம்.

(வேம்புவும் சாம்புவும் குளத்தங்கரையருகே, உட்கார்ந்து கொண்டு, ஜோதிட சாஸ்திர ஆராய்ச்சிப் பேச்சிலே ஈடுபட்ட வண்ணமிருக்கிறார்கள். மரத்தடியிலே ஒரு சாது உட்கார்ந்துகொண்டு, சிந்தனையில் ஆழ்ந்தவராயிருக்கிறார். தொலைவிலே சம்மட்டிச் சத்தம் கேட்டபடி இருக்கிறது)

சாம்:- ஓய்! நாலாமிடத்திலே கேதுவும் மூணாமிடத்திலே சனியும் இருந்தால் பலன் என்ன?
வேம்:- அப்படி இருக்கவே முடியாதே.

சா:- ஓய்! உமக்குச் சொல்லத் தெரியல்லேன்னா... (சத்தத்தைக் கேட்டு முகத்தைச் சுளித்தபடி) இது வேறு பிராணனை வாங்கிண்டிருக்கா, தட்டு தட்டுன்னு தட்டிண்டு - உமக்குத் தெரியலேன்னா, தெரியாதுன்னு சொல்லிவிடும் - உம்முடைய ஞான சூன்யத்தை மறைக்க, ஏதேனும் சாக்குப் போக்குப் பேசற வித்தையை இந்தச் சாம்புவிடம் காட்ட வேண்டாம் - சொன்னேன், தெரியறதா....

வே:- ஓய், பராசரர் உம்மிடம் பிச்சை கேட்கவேணும், அவ்வளவு பெரிய மேதாவின்னு உம்முடைய எண்ணம், தெரியறதே! ஆனா, அதை இந்த வேம்புவிடம் காட்ட வேண்டாம். (சத்தத்தால் வெறுப்படைந்து) அடாடாடா! கொஞ்ச நேரம் விச்ராந்தியாக இருக்கவிடமாட்டா போலிருக்கே - என்னத்தைப் போட்டுத் தட்டிண்டிருக்கா. (மரத்தடியிலே உட்கார்ந்திருக்கும் சாதுவைப் பார்த்து) ஏ! பண்டாரம்! காவி! காவி! (சாது சிந்தனையிலிருந்து கலைந்து அவர்கள் பக்கம் வருகிறார்) காது மந்தமோ?

சா:- இல்லையே... நான்...

சா:- ஏதோ கவலையோ! சரி, அதோ, எவனோ என்னத்தையோ போட்டுத் தட்டிண்டு இருக்கான் - கர்ண கடூரமா இருக்கு - போய்...

சா:- (உற்றுக் கேட்டு) ஆமாம் - தட்டுகிறார்கள்-

சா:- எதையோ, எதுக்கோ, எவனோ! இங்கே நாங்க கொஞ்சம் வேதாந்த விசாரணையிலே ஈடுபட்டிண்டிருக்கோம், அந்தச் சத்தத்தாலே, மனம் கலையறது - அதனாலே, போய், அந்தச் சத்தத்தை நிறுத்தச் சொல்லு, போ.

சா:- அந்தச் சத்தம் உங்கள் சித்தத்தைக் கலைக்கிறதா?

வே:- ஆமாம் - ஏண்டாப்பா, உனக்கு அதுவே சந்தேகமாயிடுத்தோ! ஏன், உன் காதிலே விழலியோ சத்தம்.

சா:- இப்போது விழுந்தது.

சா:- இப்போதா! இந்தச் சத்தம், ரொம்ப நேரமா இருக்கே... ஏன் ஓய், நாம் பரப்பிரம்மத்துக்கும் அண்டசராசரத்துக்கும் என்னவிதமான சம்பந்தம் என்கிற விஷயமா பேச ஆரம்பிச்சோமே, அப்போதிருந்தே இல்லையோ.

சா:- இருந்திருக்கலாம். ஆனால், என் காதிலே விழவில்லை - நான், ஏதோ சிந்தனையில் ஈடுபட்டிருந்தேன். சித்தத்தை ஓரிடத்திலோ, ஒரு விஷயத்திலோ செலுத்திவிட்டால், வேறு சத்தமா? என்னமோ புகாது!

வே:- ஓஹோ! “ஹா மேதாவியோ - சரி, சரி, நீ, போ.”

சா:- கோபம் ஏன் மறையவரே! அந்தச் சத்தத்தைச் சாமான்யமென்று எண்ணிவிட வேண்டாம். அது மராட்டிய மாதாவின் தளைகள் பொடிபட, வீரர்கள் போரிடும் ஆயுதக் கருவிகளைக் காய்ச்சி அடிக்கும் சத்தம். அந்தச் சத்தம் அதிகரித்தால் தான், வெற்றி முழக்கம் மராட்டியத்திலே!

வே:- அதிகப்பிரசங்கி!

சா:- வேத ஒலி, ஆலய மணி ஓசை, அர்ச்சனைச் சத்தம், இவை, எதிரிப்படைகளை ஓட்டவில்லையே....

ச:- நிரீஸ்வரவாதி ஓய் இவன், பச்சை நாத்திகன் - ஏ, பாவி! எங்களிடமா உன் பேச்சுப் பலிக்கும்!

ஓய்! வேம்பு! வீணாக இவனிடம் வார்த்தையாட வேண்டாம்.

வே:-ஓய்! இந்த மாதிரிப் பண்டாரக்கூட்டத்தார் சிலபேர், இப்போது இங்கே கிளம்பி இருக்கா -அவா, மராட்டியத்திலே, புதிய ஞானத்தைப் பரப்பப் போறாளாம் - பழைய ஐதிகத்தை ஒழிக்கப்போறாளாம்.

சா:- நாலு ஜாதி கிடையாதாம் ஓய் கிடையாதாம்! அந்தத் தர்மத்தை ஏற்படுத்திய நான்முகனும் கிடையாதாம்! சர்வம் சூன்யமயம் ஜகத்! என்று பேசுகிறா, இதுகளோடெ விஷயம் நன்னாத்தெரியும்.

வே:- சொப்பனம்! சொப்பனம்! பழைய ஐதீகத்தை, இவாளாலே அசைக்கக்கூட முடியாது....
சாது:- நிந்திக்கும் நண்பர்களே!

வே:- ஏய்! என்ன திமிரடா, உனக்கு! எங்களை நண்பர் என்று பேச................ நாக்கு அழுகிப்போகும்........... நாசமாகி..........

சா:- எல்லாம் சமம் - ஜாதிபேதம் கூடாது - பக்திதான் பிரதானமே ஒழியப் பிராசீன தர்மம் முக்கியமில்லே...... இதுதானே உங்க கூட்டம் இப்ப பேசிண்டிருக்கிறது.

சா:- ஆமாம். இவ்வளவேதான் - இதுவா நாத்திகம்?

வே:- எந்த ஈகமானா இருக்கட்டும் - இது சாத்தியமா? பிராசீன தர்மத்துக்காக, தவச்சிரேஷ்டாள், எவ்வளவு தர்ம சாஸ்திரங்கள், ஸ்மிருதிகள், ஏற்பாடு செய்திருக்கா - அடே, அஞ்ஞானி! அவாளெல்லாம் திரிகால ஞானிகளல்லவா! அவாளுடைய ஏற்பாட்டைக் கெடுக்க உன்னாலே ஆகும்?

சா:- அந்தத் திரிகால ஞானிகள் இப்படி ஒருகாலம் வரும், நமது ஜென்மபூமியில் மொகலாய ராஜாங்கம் ஏற்படும்னு, ஒரு வார்த்தை சொல்லவில்லையே, ஸ்வாமிகளே! அவ்வளவு வேதபுராண இதிகாசாதிகளிலும்.

வே:- முட்டாள்! வேதபுராணாதிகளெல்லாம், இந்த அல்பகாரியத்துக்காக அல்ல.

சா:- மோட்ச சாம்ராஜ்யத்துக்காகக் கூறப்பட்ட ஞானமார்க்கம்.

சா:- அதை நான் மறுக்க வரவில்லையே! நானும் மற்றவர்களும் ஜாதி கூடாது, பேதம் கூடாது, சமரசம் வேண்டும் என்று பேசுவது, மராட்டிய சாம்ராஜ்யத்துக்கு...... மனித சமாதானத்துக்கு.

வே:- வாரும் ஓய்! இவாளோடு, பேசுவதே பாவம்! ஆளைப்பாரும் ஆளை, எப்படி இருக்கான், போய்ப் பட்டாளத்திலே சேருவதுதானேடா....... படையிலே இருக்கவேண்டியவன், பண்டாரமாகத் திரிகிறாயே.....

சா:- நான் படையிலேதான் இருக்கிறேன் - அறிவுப்
படையில்.

வேம்புசாம்பு :- (கேலியாக) அறிவுப் படையில்.
(போகிறார்கள்)

(சாது மெள்ளச் சென்று பார்க்க, உலைக்களத்தருகே ஆயுதங்களைக் காய்ச்சி அடிக்கிறார்கள்.)
ஆயுதங்களைக் காய்ச்சி அடிக்கும் சத்தமே, சாம்பு வேம்புகளுக்குக் காதில் நாராசமாக இருக்கிறது! சாது கூறுகிறார், அந்தச் சத்தம் தானய்யா, நாட்டு விடுதலைக்கான சத்தம் என்று, ‘ஐயர்கள்’ - அதைக் கேட்டுக் கடுங்கோபம் கொள்கிறர்கள்!! அவர்கள் மனம் அவ்விதமிருக்கிறது!

11-7-1948