அறிஞர் அண்ணாவின் கட்டுரைகள்


அவர்களே கூறுகிறார்கள்!

அறிவு வளராமல், ஆற்றல் பெருகாமல், நாகரிகம் நனி சிறக்காமல், குகைகளே இல்லாமல், சமைக்காத காயும் கனியும் கிழங்குமே உணவாய், மரப்பட்டையும் இலையுமே நல்லாடை யாய் மேற்கொண்டு வாழ்ந்து வந்த நமது முன்னோர்களுக்கு, தக்ளியும், இராட்டையும், புரட்சிகரமான நூல் நூற்கும் சாதனங்களாக ஏற்பட்டன. அவைகள் கண்டுபிடிக்கப்பட்ட காலத்தில், நூல் நூற்பதற்கு அதனைக் காட்டிலும் வேறு கருவிகள் கிடைக்காததால், பல காலம் அந்த இரண்டையுமே நம்பி வாழ்ந்தனர் மக்கள். அத்துறையில் ஆர்வமும் காட்டினர். அவர்கள் இருந்த காலத்தில் நாம் இருக்கவில்லை. நூல் நூற்கும் துறையில் எவ்வளவோ முற்போக்கான இயந்திரங்கள் வந்துவிட்டன. இன்று மக்களுக்கு வேண்டிய ஆடைகளுக்குத் தேவையான நூல்களை, இந்தத் தக்ளியாலும், இராட்டையாலும் நூற்றுத் தர முடியாது. நாம் ஒவ்வொருவரும் நூற்பதென்று கண்டிப்பாக மேற்கொண்டாலும், போதிய ஆடைக்கான நூலைக் காண முடியாது. உறுதியான நீடித்த நாள் உழைக்கக் கூடிய ஆடையும் அதனால் உருவாகாது. இதற்காக எடுத்துக்கொள்ளும் முயற்சியும், செலவு செய் யப்படும் நேரமும், உபயோகப்படுத்தப்படும் பஞ்சம், ஓட்டைத் தோண்டியால் நீர் மொண்டு நிலத்துக்குப் பாய்ச்சு முனைந்தால் கிடைக்கும் பலனதான் இதற்கும் சம்பவிக்கும்.

எந்தத் தத்துவத்தின்படி, பார்த்தாலும், கதர்த் திட்டம் உருப்படாது என்று நாம் பல காலமாகவே கூறி வந்திருக்கிறோம். பயிரிடு வதற்குச் செலவாகும் காலம் போக மீதமுள்ள காலத்தில், வேறு தொழில் கிடைக்காத மக் களுக்கு இந்நூற்கும் திட்டம், வாழ்க்கைக்கு வசதி செய்கிறது என்று வாய்வலிக்கப் பேசினார்கள் சிலர். நாளெல்லாம் வேறு வேலையைக் கவனிக் காமல், புகையிலைக் காம்பிற்காகும் செலவைக் கூடச் சரிக்கட்ட முடியாத, நூற்கும் தொழிலை மேற்கொள்ள மக்களைத் தூண்டுவது மக்களின் உழைக்கும் ஆற்றலைப் பாழ்படுத்துவதாகும் என்றும் அறிவித்தோம்.

தேச பக்தியின் காரணமாக, மக்களிடம் நன்கொடையாகப் பெற்ற பல கோடி ரூபாயைக் கொட்டி அழுத பின்னரும், தலைவர் முதல் தொண்டர்கள் ஈறாகத் கதர் கதர் என்று கதறிப் பார்த்த பின்னரும், நாட்டிலுள்ள ஏடுகள் பலவும் நாள் தவறாமல் கதரின் பெருமையைக் குறித்து அளவுக்கு மீறிப் பத்தி பத்தியாக எழுதிய பின்னரும், ஆலை அரசுகள் கதர்த் திட்டத்தைப் பணம் கொடுத்தும் பிரசாரம் புரிந்த பின்னரும், ஆளுவோரும், திட்டத்தைத் தீவிரமாக நடைமுறையில் கொண்டுவர லட்சக்கணக்கில் பணத்தைப் பாழ்பண்ணிய பின்னரும், மக்களிடத் தில் அதற்கு ஆதரவு கிடைக்கவில்லை.

அன்று ஆர்வம் காட்டிய மக்களுக்கும் இன்று அலுப்புத் தட்டி விட்டதாம். உற்சாகம் ஒரு துளியும் இல்லையாம். தமக்குத் தலைவலியை உண்டாக்குவதற்கான காரணங்களிலே அதுவும் ஒன்றாகும். கிராம முன்னேற்றத்திற்கெனப் புதிதாக வந்திருக்கிறாரே, அவர்தான் டாக்டர் குருபாதம், குறிப்பிடுகிறார். கதர் பற்றி சட்ட சபையில் எழுந்த கேள்விக்குப் பதில் கூறும்பொழுது,

தமக்குத் தலைவலியை உண்டாக்கும் காரணங்களிலே, இந்தக் கதரும் ஒன்று!

குறிப்பிட்ட ஒரு இடத்தில் மட்டுமல்ல, நாடெங்கும், சென்றவிடமெல்லாம், மக்களின் ஆர்வம் மங்கிப் போய்விட்டது. கதர் விஷயத்தில் என்று அவர் கூறுகிறார். அத்துடன் திருப்திபட்டு விடவில்லை. ஒரு அங்கதினர் மேலும் கேட்டார். உற்பத்தி செய்கிறவர்களிடத்திலும் கதர் வாங்கு கிறவர்களிடத்திலும் மட்டுமா இந்த ஊக்கக் குறைவு என்று இதற்கு மந்திரியார் கூறினார். இரு சாராருக்குந்தான் என்பது மட்டுமல்ல, நாட்டு மக்கள் அனைவருக்குந்தான் கதர் விஷயத்தில் ஆர்வம் இல்லை என்று.

டாக்டர் குருபாதம் நாடாளும் பந்திரியா வார். கதரறின்றி வேறு அணிவதில்லை என்றும், விரதம் பூண்டு ஒழுகுபவராம். அவர் சொந்தத்தில் நூல் நூற்று, நூற்ற நூலைக் கொடுத்துத்தான் கதர் வாங்கி அணிகிறாரோ என்னவோ நமக்குத் தெரியாது! ஆனால் அவருக்கும், கதரில் இருந்த ஊக்கம் குறைந்து போய்தான் இருக்க வேண்டு மென்று, அவர் வாயுரையிலிருந்தே அறிந்து கொள்ளுகிறோம்.

அவர் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர். அவரே கூறுகிறார், கதர்த் திட்டத்திற்கு நாட்டில் நல்ல மதிப்பில்லை என்று இதனை நாம் அன்றே கூறினோம்! இவ்வளவு ஆண்டுகள் பிடித்தது, அவர்களே கதரின் பயனற்ற தன்மையை எடுத்துக் கூற!

``சிறை' செல்வது,
இராட்டையில் நூல் நூற்பது,
இந்தி கற்பது

முதலியன அடிமை இந்தியாவில் ஒருவேளை தேச சேவையாக இருந்திருக்கலாம். ஆனால் இன்று, சுதந்திர இந்தியாவில், நாட்டைச் செல்வச் சிறப்புடையதாகவும் பலம் பொருந்திய தாகவும் ஆக்குவதற்கு செய்யப்படும் செயல்கள் தான் நாணயமான பணியாகும்.''

இவ்வாறு ஈரோட்டில் நிகழ்ந்த கூட்ட மொன்றில், கனம் கோபால் ரெட்டியார் குறிப் பிட்டுள்ளார்.
இராட்டையில் நூல் நூற்பது நாணயமற்றது!

இந்தி கற்பது நாணயமற்றது!

இராட்டையில் நூல் நூற்பது, நாட்டின் செல்வத்தைப் பெருக்காது; நாட்டையும் பலம் பொருந்தியதாக ஆக்காது. இது நாம் சொல்வது அல்ல, மந்திரி கோபால் ரெட்டியார் கூறுவது.
இந்தி கற்பது நாணயமற்றது என்றும் கூறும் கனம் கோபால் ரெட்டியாருக்கு, இந்தியைப் பள்ளிகளில் கட்டாயப்படுத்தும் கல்வி மந்திரி யாரின் திட்டம் தெரியாமல் இருப்பதற்கில்லை. தெரிந்திருந்தும் பேசுகிறார். இந்தி கற்பது நாணயமற்றது என்று!

எது எப்படியானாலும் ஒரு மந்திரியாருக்கு, கதர்த் திட்டம் தலைவலியைக் கொடுக்கிறது. மற்றொரு மந்திரியாருக்கு இந்தி கற்பதும், நூல் நூற்பதும் நாட்டுக்கு நலஞ் செய்யாத நாணயமற்ற செயலாகத் தோற்றமளிக்கிறது.

நாம் பல காலமாகக் கூறினதை இன்று அவர்களே கூறுகிறார்கள் என்பதை, அதுவும் பொறுப்புள்ளவர்கள் சொல்லுகிறார்கள் என் பதைக் கண்டு மகிழ்கிறோம்.

(திராவிட நாடு- 26.9.48)