அறிஞர் அண்ணாவின் கட்டுரைகள்


அவர்களும் வாழ......!

“பெரிய மண்குடிசையொன்றுக்கு அழைத்துச் செல்லப்பட்டேன். அதுதான் கிராமப்பள்ளிக் கூடமாம்! ஜன்னல் வழியாக எட்டிப் பார்த்தேன். நூறு குழந்தைகள் தரையிலே உட்கார்ந்து கிடந்தன. குரும்பலகையில், வாலிப வயதுள்ள ஒரு ஆசாமி ஏதோ, கன்னட வார்த்தைகளை எழுதிக் கொண்டிருந்தார். இருளடர்ந்த முகங்கள்! பனிபோன்ற கண்கள்! - கருப்புத்துணியில் பளிங்கு கற்கள் உருண்டு கொண்டிருப்பது போலிருந்தது, அந்தக் குழந்தைகளின் கண்கள் அங்குமிங்கும் அசைந்த காட்சி. ஜன்னலைவிட்டு கட்டிடத்தின் ஒரு மூலைக்கு வந்தேன். பன்னிரெண்டு சிறுவர்கள், பயத்தால் நடுங்குவோர்போல, தனியாக உட்கார்ந்து கிடந்தனர்.

இவர்கள் இங்கே என்ன செய்கிறார்கள்? ஏதாவது தண்டனை தரப்பட்டிருக்கிறதா! என்று கேட்டேன்.

என்கூட வந்த இந்துமத வாலிபன் அலட்சியத்தோடு சொன்னான். “அவர்கள் எல்லாம் தாழ்த்தப்பட்டோர்“ என்று.

நான், அந்தச் சின்னஞ்சிறுவர்களை, வைத்த கண் வாங்காது, பார்த்தேன். இளைத்து, இடுப்பில் எதுவுமில்லாது, கிட்டத்தட்ட நிர்வணமான நிலையில் இருந்தனர். ஒருவராவது சுத்தமாக இல்லை!

ஏதோ எப்படியோ அவர்களுக்கு இந்தப் பள்ளிக்கூடத்துக்குச் செல்ல அனுமதி கிடைத்திருக்கிறது. அவர்களும் இந்த நாட்டில் ‘வாழ‘ ஏராளமாக சட்டங்களைப் பெற்றிருக்கிறார்களாம்!

இளம் இந்தியா கல்வி பெறுகிறது!

இவ்வளவு வேதனையோடு. இங்கிலாந்திலிருந்து இங்கே வந்து சென்ற பீவர்லி நிகோலஸ் எனும் எழுத்தாளன், 1944ல் தான் கண்ட காட்சியைச் சித்திரித்தான். ‘VERDICT ON INDIA’ என்றிக நூலில் சீறினர், தேசீயவாதிகள்! பத்திரிகைகளெல்லாம் பக்கம் பக்கமாக எழுதிக் குவித்தன! அவனுக்கு மறுப்பு தருவதுபோல ‘VERDICT ON ENGLAND’ என்றொரு நூலும் எழுதப்பட்டது. அவவ்ளவு சீற்றம் அவன்மீது எழும்பியதற்குக் காரணம், அவன் இங்குள்ள உண்மைகளை எடுத்துச் சொன்னான் என்பதுதான். அழகாக – ஆனால் ரத்னச் சுருக்கமாக – அவன் குறிப்பிட்டான். “கல்வியில்லாமல் திரியும் மக்களின் பரிதாபத்தை பிராமணர்களின் பிடியிலே உள்ள காங்கிரஸ், மாற்றும் கருத்தில் இல்லை‘ என்பதாக. எனவேதான், சீறினர் அவன்மீது! ஆயிரம் உண்டிங்கு ஜாதி – இதை அந்நியன் எடுத்துப் புகலென்ன நீதி? என்ற கூடப்பாடினார் – கோபத்தோடு!

இது 1944ல்! எட்டு ஆண்டுகள் ஓடிவிட்டன. 1952 இது இப்போது என்ன நிலைமையைக் காண்கிறோம்? தாழ்த்தப்பட்ட மக்களின் கல்வி நிலையில் மட்டுமல்ல! பொதுவாக மக்களுடைய கல்வி வளர்ச்சிக்கு, நன்மைகள், மலர்ந்துள்ளனவா, இவர்தம் ஆட்சியில் காட்ட முடியுமா? குடிசைகளாக நிற்கும் வீதிப்பள்ளிகளின் நிலைமை களில் ஏதாவது மாற்றம் ஏற்பட்டிருக்கிறதா! கிராமங்களில் மலர்ச்சி மணம், புதிதாகப் பரவியிருக்கிறதா! தாழ்த்தப்பட்ட மக்களின் வாழ்வில் ‘துளியாவது‘ புதுமை அருவித்துளி விழுந்திருக்கிறதா!

தமது உத்திரவுகளையும், சட்டங்களையும் ஒப்பிக்கலாம் – ஆட்சியிலிருப்போர். ‘ஹரிஜன முன்னேற்ற அபிவிருத்தி இலாகா‘வைச் சுட்டிக்காட்டலாம் – அதை நிர்வகித்த அமைச்சர் ஒரு ஆதிதிராவிடர்தான், தெரியுமா – என்று பதில் தரலாம், தனித்தொகுதி மூலம் சட்டசபைக்கு வந்திருப்போரைக் கூறலாம். ஆச்சாரியார் கவர்னர் ஜனரலாக இருக்கும்போது அவரது பாதுகாவலராகப் பதவி வகித்தவர் ஒரு ஹரிஜன்‘ என்று விளக்க முன்வரலாம் – இது கஷ்டமான காரியமல்ல, மறுக்கும் நோக்கமுமல்ல நம்முடையது. ஆனால் பொது வாழ்வில் என்ன பலாபலன் கிடைத்திருக்கிறது, அந்தச் சமூகத்துக்கு. இந்திய பூமியில் கிராமத்தில் வாழ்வோர் தொகை சுமார் 82% என்று கூறப்படுகிறது. இந்தக் கிராமங்களில் வாழும் ஆதிதிராவிட மக்களின் நிலை என்ன? தேளும் பாம்பும், நட்டுவாக்களியும் நண்டும் உலவும் குப்பை மேடுகளிலே உள்ள குடிசைகள், அவர்தம் இருப்பிடம், மாடும் ஆடும் அவர்தம் குழந்தைகளின் ‘பேனாவும் புத்தகமும்!‘ தோப்பும் துறவுமே அவர்தம் பள்ளிக் கூடங்கள்! இதை ‘இல்லை‘யென்று எவராவது கூறமுடியுமா? கேவலமாக இருக்கிறார்கள் – ஆதிதிராவிட மக்கள். அவர்கள் வாழ்க்கையைக் கப்பிக்கிடக்கும் இருளை ஒழிக்க – சட்டம் இருப்பதாக மாத்ட்டலாம், மகாத்மாவின் சீடர்கள். ஆனால் மார்க்கம் காணப்பட்டிருக்கிறதா, அவர்தம் மடமை நீங்க! பரச்சேரிகள் அவர்களுக்கு. அதுவும் சொந்தமல்ல, ஆண்டையின் மனை இது. இவ்வளவு அநாகரிகத்தில் அவர்கள் அல்லாடுகிறார்கள். ‘ஜாதி மதம் தீது. பொருளியல் வாதமே பெரிது‘ என்று பேசும் தோழர்கள் பார்வையில் வைக்கிறோம். கிராமங்களில் ‘சாதி‘ படுத்தும்பாட்டை மக்கள் இச்‘சாதிக்‘ கொடுமையால் படும்பாடு கொஞ்சநஞ்சமல்ல உழைப்போர் அவர்தாம்! ஆனால் உணவும், இடமும், அவர்களுக்கு எஜமான் இட்டால்தான் உண்டு! படிக்க வசதியில்லாதது மட்டுமல்ல ‘தமது‘ என்று சொல்லிக் கொள்ளக்கூட அவர்களுக்கு ஒரு இடம் கிடையாது.

இந்தக் குறையைப்பற்றி, ஓமந்தூர் மந்திரிசபையின் காலத்தில் நாம் அடிக்கடி வலியுறத்தி வந்தோம்.

பலபல இடங்களில் மிராசுதாரர்களுக்கும் ஆதிதிராவிட விவசாயப் பெருங்குடி மக்களுக்குமிடையே ‘மனை விஷயமாக‘ ஒரு ஏற்பாடு நடைபெறலாம் என்று செய்தி ஒலிகள், எழும்பின. ஆனால் அவையாவும் பனித்துளிகள் போலாகிவிட்டன.

ஆதித்திராவிட பெருங்குடி மக்கள், உழைப்பால் உலகை உய்விக்கும் மனித ‘தெய்வங்கள்‘. ஆனால் அவர்களை நாயினும் கீழாக நினைக்கிறது நிலப்பிரத்துவமும், அதை நிலைநாட்டும், மத, சமூக, பாகுபாடுகளும் உரிமையும் கிடையாது! உடையும் கிடையாது! இந்தக் கேட்டுக்கு ஆளாகியிருக்கும், அவர்கள் உள்ளம், உலர்ந்த சருகு போலாகியிருப்பதால்தான், ‘முன்னேற்றம்‘ என்கிற தீப்ாபறி விழுந்ததும், பெருந்தீ தோன்றுகிறது! இந்தத் தீச்சுழல், தஞ்சை போன்ற இடங்களில் சுழன்று அடித்த ‘வேகத்தை‘ எவரும் மறந்துவிட முடியாது. உழைத்து உழைத்து உடல் கருப்பானவர்கள் அவர்கள், ஆனால் உள்ளமோ பாலையும் மிஞ்சும் தூய்மை கொண்டது. அந்தத் ‘தும்பை‘ மலர்களைத் துவைக்கிறது மதமும் பணமும்! இந்தப் படுநாசத்துக்குப் படுகுழி வெட்டாவிடில், நிச்சயம் எதிர்காலம், இடர்மிகுந்ததாகவே இருக்கும். “ஏதோ, அவாளவாள் தலைவிதி, ஈசன் அவனை நீசனாகப் பிறப்பித்துவிட்டான். அவன் கர்மபலன்‘ என்கிற பாவபுண்ய பரிசீலனை இனிப் பயன்தர முடியாது‘. ‘கடவுளை வணங்குவீர். காளிக்கும் மரத்தடி பிசாசுக்கும், சுக்குமாந் தடிக்கும் ஒதியமரத்துக்கும் பூஜை செய்வீர் ஹரிசன மக்களே!‘ எனும் பக்திப் போதனையும் பலிக்காது. அவர்கள் வாழ்க்கையின் ஒளியை அறியத் துடிக்கிறார்கள் – அறிவின் கதிரைக் காண விரும்புகிறார்கள் மண்ணும் கீற்றும் ஆக்கித் தரும் குடிசைகளைப் பார்க்கும் அவர்தம் கண்கள் மாளிகை களையும் மதோன்மதத்த நிலையிலிருக்கும் மடாலயங்களையும் பாரக்கத் துவங்கிவிட்டன சாதாரணமாக அல்ல – ஆத்திரத்தோடு வயலில் கதிர்வரக் காணும் அவர்கள் இதயம் வயிற்றுப்பசியை அடக்க ‘எஜமானின் கையை‘ இனியும் எதிர்பார்க்கும் என்று கூற முடியாது. அவர்கள் ஆத்திர உருவங்களாகி வருகிறார்கள். ‘எங்கே கூறு? என்று விபரப் பட்டியல் கேட்கலாம். எங்கெங்கு ‘தாழ்த்தப்பட்டோர்களாக‘ அவர்களிருக்கிறார்களோ அங்கெல்லாம் சென்று அவர்கள் இதயங்களின் அருகே, காதுகளை வைத்துக் கேட்டால் ‘கேள்வியும் கோபமுமாக‘ அங்கு துடிப்புகள் இருப்பதைக் காணலாம். இந்தத் துடிப்புகள் எரிமலை வெடிப்பதின் அறிகுறியாகும். இதை ஆளவந்தாரும், அவர்தமை ஆட்டிப்படைக்கும் பிரபுக்களும், விரைவாக உணர்தல் நலம்.

கிராமப் பகுதிகளிலிருக்கும் தாழ்த்தப்பட்ட மக்களின் நல்வாழ்வுக்கான திட்டங்களை வகுத்து, அவர்களும் சமூகத்தில் ‘மனிதராக‘ வாழும் வழிவகைகளைக் காணும் முயற்சியில் எல்லோரும் ஈடுபட வேண்டும்.

சமுதாயத்தில் சிறப்புற்று வாழ்வதற்கு வழிகாட்டியாக இருக்கும் கல்வி விளக்கு, அவர்தம் குழந்தைகளுக்கு கிடைக்கும்படிச் செய்ய வேண்டும்.

ஒவ்வொரு கிராமப் பள்ளியிலும் ஆதித்திராவிட மாணவர்கள் இருக்க வேண்டுமென்று ஒரு உத்திரவு இருப்பதை நாம் அறிவோம்.

இன்ஸ்பெக்டர்‘ வரும் நேரத்தில் மட்டும் ‘ஏழெட்டு‘ ஆதித்திராவிடப் பிள்ளைகளை அழைத்து வந்து காட்டும் நிகழ்ச்சிகள் நடப்பதையும் அறிவோம்.

ஏனைய நாட்களில் அவர்கள், மாட்டையும் ஆட்டையும், காக்க வேண்டியவர்களாக ஆவதையும் அறிவோம்.

இவை இல்லாமல் செய்யப்படவேண்டும்! எல்லாக் குழந்தைகளுக்கும் கட்டாயக்கல்வி போதனை கிடைக்குமாறு, வழி செய்ய வேண்டும்.

பள்ளி திறக்கும் ‘காலம்‘ இது – எனவே, இதை மிகமிக வலியுறுத்துகிறோம்.

கட்டாயக் கல்வி! இருக்க இடம் – போதிய கூலி – நியாயமாக ‘வாழ‘ இந்தத் தேவைகளை ஆதித்திராவிடப் பெருங்குடி மக்களுக்குக் கிடைக்கும் ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும்.

‘தும்பை மலர் இதயத்தவர்‘ அவர்கள் – துணிந்தால் ‘எரிமலை‘யாகி விடுவர்.

இதை எண்ணியாவது இவைகளைச் செய்யுமா. இந்த சர்க்கார்.

திராவிட நாடு 8-6-52