அறிஞர் அண்ணாவின் கட்டுரைகள்அவருக்கு அன்பளிப்பு
சாஸ்திரிகளுக்கும் சர்மாக்களுக்கும் சந்தியாவந்தன பீடமாக, இருந்து வந்த சர்வகலாசாலைகளில் சர்.கே.வி.ரெட்டிகளும் இரத்னசாமிகளும் நுழைந்தது. அக்ரகாரவாசிகளுக்கும் அதனிடம் இலயித்தவர்களுக்கும், அச்சத்தையூட்டி விட்டது ஆச்சரியப்படக் கூடியதல்ல நெடுநாளாக இருந்து வந்தபிடி தளர்வதைக் கண்டதும் திகில் உண்டாவது இயற்கைதான். ஆனால் ஓநாயின் ஓலத்திற்காக ஆட்டுக் குட்டிகளைப் பலியிடுபவன் அறிவுள்ளவனாக ஏற்றுக்கொள்ளப்பட மாட்டான்.

வடநாட்டு முதலாளியின் பிடியிலிருந்து விலகி தமிழ் நாட்டவருக்குத் தமிழிலேயே தமிழ்த் ததினசரி நடத்தும, ஆரித் திராவிடப் பேதத்தை யறியாத அன்பர் சொக்கலிங்கம் அண்ணாமலை சர்வ கலாசாலைப் பட்டமளிப்பு விழாவில் கான்பகதூர் கல்புல்லா ஆற்யி சொற்பொழிவைக் கண்டிப்பதன் மூலம் ஆரியரின் ஆசீர்வாதத்தைப் பெற ஆசைப்படுகிறார். ஜனாப் கலிபுல்லா அவர்களை ஏகாதிபத்திய தாசரென்று காங்கிரஸ் ஏடுகள் பலவாண்டுகளாகத் தூற்றி வந்தன. அந்தச் சமயங்களில் அஞ்சா நெஞ்சுபடைத்த ஜனாப் கலிபுல்லா அந்த அறிவிலிகளுக்கு ஆணித் தரமாகப் பதில் தந்திருக்கிறார் இன்று அவர் புதுக்கோட்டையில் உத்யோகத்திலிருப்பதால் இந்த உலுத்தர்களின் உளறலுக்குப் பதில் உரைத்திட முடியாத நிலையிருக்கிறார் என்ற தைரியத்தால், தினசரி தனது தீட்டுகோலை மடமை மையிலேயே தோய்த்து ஆரியருக்குத்தான் செய்ய வேண்டிய கடமை இது என்ற களிப்புடன் கலிபுல்லா பரவசம் என்ற தலைப்பிலே டிசம்பர் 12-ஆம் தேதி ஒரு தலையங்கம் தீட்டியிருக்கிறது. ஆரியம் ஆர்ப்பரித்துக் கொண்டிருந்து புதுக்கோட்டையில், சந்தர்ப் பணைக்கும் சமாராதனைக்கும் சௌகர்யமான இடங்கள் சமஸ்தானங்களே என்ற நிலையிலே சனாதனிகள் சொக்கியிருந்த நேரத்தில், கான்பகதூர் கலிபுல்லா புதுக்கோட்டையில் பதவி ஏற்றார். ஆரியம் அலறத் தொடங்கிற்று. பிறர் வசமிருந்த புதுக்கோட்டை வீரமரபிலுதித்த ஜானப் கலிபுல்லாவின் வசம் வந்தது அவருக்கு மட்டுமல்ல, திராவிடரனைவருக்குமே பரவசம் ஊட்டக் கூடியதுதான். கலிபுல்லா பரவசமடையக் காரணமிருக்கிறது, உரிமையுண்டு. வந்தேமாதரத் தொலையைத் தந்த வம்பர்கள் வாயடங்கியதைக் கண்டார், இந்தியை நுழைத்து இடர்விளைவித்தவர்கள் இருக்குமிடம் தெரியாமல் போனதைக் கண்டார், எட்டு மாதங்களிலே எங்கள் ஆட்சி, என்ற கொட்டுமுழக்குடன் கூவிக்கிடந்த கோணல் சேட்டைக்காரரின் கோல் சாயக்கண்டார், முஸ்லிம் லீகும் ஒரு ஸ்தாபனமா என்று முரட்டுவாதம் பேசியவர்கள் முடிச்சவிழ்த்து அகப்பட்டுக்கொண்டவன் உதைப்பட்டுப் பணிவதைப்போல லீகுக்குப் பணிந்தாக வேண்டுமென்ற நிலை கண்டார், எந்த ஜனாப் ஜின்னாவைத் துராத்மா வென்று தூற்றினார்களோ அவருடைய வாயிற்படியிலே மகாத்மா காத்துக கிடக்கக்கண்டார், பாக்ஸ்தானத்திற்குப் பகைவராகக் காட்சியளித்த ஆச்சாரியார் அதன் பரம பாகவதராகிவிட்டதைக் கண்டார், புலி பூனையாகி விட்டதைக் கண்ட ஜனாப் கலிபுல்லாவுக்கு ஏன் பரவசம் உண்டாகாது? அவருடைய பரவசத்தைக் கண்டு பிறர் வசத்திலே புத்தியை ஒப்படைத்தவர்கள் கண்ணைப் பிசைந்து கைகளை உதறிக் கொள்வதிலே என்ன பலன்? ஜனாப் கலிபுல்லா ஆனந்தமடைவதற்கு அர்த்தமுள்ள காரணங்கள் பல இருக்க அவைகளை மறந்தோ அல்லது மறைத்தோ தினசரி ஆசிரியர் கலிபுல்லாவின் பரவசத்திற்குக் காரணம் பிரிட்டிஷ் ஆட்சியிலே அவருக்குள்ள காதல் என்ற பொருள்படும்படி எழுதியிருப்பது சித்தத்தைப் பிறர் சொத்தாக்கியதன் காரணமாகயிருக்கலாம். ஜனாப் கலிபுல்லாவோ அல்லது எந்த இஸ்லாமியனோ, திராவிடனோ பிரிட்டிஷ் ஆட்சியிலே காதல் கொள்ளக் காரணமில்லை, நாடாண்ட அந்த இனத்தார் ஏடு தாங்கியவர்களைப் போல பேடி உள்ளம் படைத்தவர்களல்லர். கலிபுல்லாவுக்குத் தெரியும் இன்றைய வேவலின் முன்னோர்கள், முன்னால் முகலாய சக்ரவர்த்தியின் முன்பு மண்டிபோட்டுச் சலாமிட்டு அனுமதிச்சீட்டு வாங்கிக் கொண்டு இந்தியாவிற்கள் நுழைந்தவர்கள் என்பது, அவருக்கா பிரிட்டிஷ் ஆட்சியிலே பரவசம் பிறக்கும்? அவருக்கு மற்றொன்று தெரியும். கஜினீ முகம்மதுவின் காலத்திலே சோமநாதர் கோயிலுக்கெதிரிலே வேதியர் கூட்டம் நின்ற எதுவோ எப்படியோ ஆகட்டும எங்கள் உயிர் தப்பினால் போதும் என்ற வெட்கங்கெட்டு வேண்டிக்கொண்ட வரலாற்றை அவர் அறிவார். ஆங்கிலேயன் அரியின் அம்சமென்று ஆரியர் அர்ச்சித்ததையறிவார், காருண்ய மிக்க துரையே வருக என்று கனிவுடன் பேசிப் பூசுரர்கள் பூரண கும்பம் எடுத்த கதையையறிவார். இவ்வளவு தெரிந்த கலிபுல்லா அடிமை வாழ்விலே ஆனந்தம் கொள்ளமுடியுமா, கொள்வாரா என்பதை ஆரிய அடிவருடியே சிந்தித்துப் பார்க்கட்டும. காலரா பரவியிருக்கும் வேளையில் இனாக்குலேஷன் செய்து கொள்ளவிட்டால் உயிருக்கு ஆபத்து என்ற ஒருவர் உரைத்தால் அவர் இனக்குலேஷனுக்குத் தரகரென்று அர்த்தமல்ல. உலகப் போராட்டம் நடக்கும் இந்த நேரத்தில் பிரிட்டிஷ் பாதுகாப்பு இராமற் போறிருந்தால் இந்தியாவின் கதி என்னவாகியிருக்கும் என்று ஜனாப் கலிபுல்லா கேட்டார் சர்வ கலாசாலையிலே, சர்மா கலாசாலையிலே பயின்ற சொக்கலிங்கனாருக்கு இது கலிபுல்லாவின் அடிமை மனப்பான்மையைக் காட்டுவதாகத் தோன்றுகிறதாம். குயிலைப் பழிக்குமாம் ஆந்தை. கோணல் சேட்டை செய்யுமாம் குரங்கு, காரணமின்றிக் குலைக்குமாம் குக்கல், கானமென்று கருதிக் கொண்டு கத்துமாம் கர்த்தபம்!

ஜனாப் கலிபுல்லா தம்முடைய பிரசங்கத்தில் 1. தற்கால யுத்த நிலைமை. 2. பிரிட்டிஷ் பாதுகாப்பின் அவசியம். 3. நெருக்கடியான இந்த நேரத்தில் கலவரஞ் செய்வதால் வரும் பிரீதம், 4 நம் நாட்டு நிலைமை, 5. எதிர்கால வாழ்வு என்ற முக்கிய விஷயங்களை வகுத்துத் தொகுத்துப் பேசியிருக்கிறார். மாணவர்களிடத்திலே யுத்தப் பிரசாரம் செய்கிறார் ஜனாப் கலிபுல்லா, இதை ஒரு மகத்தான காரியமாகக் கருதுகிறார் என்ற ஏளனமாக எழுதுகிறது தினசரி எனும் ஏடு. உலக நெருக்கடியையும் அதனால் நம் நாட்டுக்கு நேரிடக் கூடிய கேடுகளையும் மறந்த விந்தை மனத்தினர் மாணவர்களிடையே விபரீத வித்துக்களை முன்பு தூவினார்கள். அதன் விளைவாகப் பள்ளிகள் களங்களாயின, மாணவர் பாழாயினர். தீய வழியிலே, தீயர்களால் அழைத்துச் செல்லப்பட்ட மாணவர்களைப் பகுத்தறிவுப் பாதைக்கத் திருப்பியழைத்துவரும பணி அறிவோடு கலந்த அவசியம் என்பதை அறிவு அவசியமில்லை என்ற எண்ணுகிறவர்கள் தவிர மற்றவர்கள் ஏற்றுக்கொள்வார்கள். தினசரி இதை ஏற்றுக்கொள்ள மறுக்கிறது. பரிதாபமான நிலைமை!

ஜப்பானிய சாம்ராஜ்யக் கனவு அழிந்தாலொழிய இந்தியாவுக்கு இடர் நீங்காது என்று கலிபுல்லா பேசினார். அது உண்மைதான். ஆனால் இதனை எம் தலைவர்கள் முன்னமேயே உணர்ந்து பேசியிருக்கிறார்கள் என்று தினசரி கூறுகிறது. உணர்ந்துமிருக்கலாம் உரைத்துமிருக்கலாம், ஊரறிய உரத்த குரலிலே பேசியுமிருக்கலாம். ஆனால் அந்த ஆபத்தைத் தடுக்க அந்த அசகாய சூரர்கள் அகிம்சையையும் ராட்டினம் தக்ளியையும் நம்பிக் கொண்டிருந்தார்களே தவிர ஜனாப் கலிபுல்லாவும் அவர் போன்றாரும் இலட்சக்கணக்கிலே படையிலே சேர்ந்து போர்வீரராகுங்கள்! நாட்டுச் சுதந்திரத்தைக் காப்பாற்றுவதற்கு நவீன யுத்தமுறைகளைக் கற்றுக்கொள்ளுங்கள்! இந்தப் பெரும் போரையே ஒருவாய்ப்பாகக் கருதி மேனாட்டுப் போர் முறைகளைக் கற்றுக்கொள்ளுங்கள்! என்ற நல்லுரையை வழங்கிய நேரத்தில் தினசரியின் தலைவர்கள் பட்டாளத்தில் சேராதே என்ற பைத்யக்கார சிந்து பாடிக் காலங்க கழித்தார்கள். இந்தியப் போரிலேயே பெரிய மாறுதல் உண்டானதற்குக் காரணம் இந்தியப் போர்வீரர்களின் வரம் என்ற இன்று எழுகிறது தினசர், ஆனால், அந்தப் போர் வீரர்களின் அணிவகுப்பு அறிவு படைத்த கலிபுல்லா போன்றவர்கள் அமைக்கப்ட்ட நேரத்தில் இந்த அகிம்சாவாதிகள் அந்த முயற்சியை இழித்தும் பழித்தும் பேசினார்கள் விண்ணிலே, மண்ணிலே, கடலிலே, இந்திய வீரர்கள் இரத்தத்தைச் சிந்திய நேரத்தில் இங்கே தினசரிக் கூட்டத்தார் அந்த வீரர்களைக் கூலிகளென்று கேலி பேசினார். இந்திய வீரர்களின் மகத்தான சேவையினால் உலக யுத்தப் போக்கிலேயே ஓர் மாறுதல் ஏற்பட்டது என்று இன்று மார்த்தட்டும தினசரிக் கூட்டத்தார் அன்று மடமையின் முன் மண்டியிட்டுக் கிடந்தனர் மகாத்மாவின் கட்டளைக்கிணங்க. இந்திய வீரர்களாள்ல எவ்வளவு சாதிக்கமுடியும் என்பதை முன்கூட்டியேயறிந்த அதற்கு அன்று தலைவிளைவித்தத் தினசரிக் கூட்டம் இன்று திருப்பல்லாண்டு பாடுகிறது. நேரங்கழித்து வந்த இந்த மதியாவது தேயாது நிலைத்து நிற்கட்டும்.
எதிரியைப் பிரிட்டிஷாரின் தயவின்றி ஓட்ட முடியாத நிலையிலே இந்தியா இருப்பதற்கக் காரணம் 150 வருஷமாக வெள்ளையர் இந்த நாட்டடை யாள்வதுதான் என்று தினசரி கூறுகிறது. இதிலே சொஞ்சம் உண்மை ஊசலாடுகிறது என்றாலும் வீர மனப்பான்மையை நமது மக்கள் அடியோடு இழந்துவிட்டதற்குப் பெருங்காரணம் வார்தாவே தவிர லண்டனல்ல. வீரத்தை இன்று புகழும் இந்த வீணர்கள் விவேகத்தோடு வீரர்களுக்கு அழைப்பு அனுப்பிய கலிபுல்லாக்களைக் கண்டு வெட்கத்தால் தலைகுனிய வேண்டும். மனச்சாட்சியை மதிப்பவர்களானால், கலிபுல்லாவின் சர்வ கலாசாலைப் பிரசங்கத்திலே வீரர்களின் அவசியத்தையும் வீரத்தின் மேன்மையையும் விளக்க அவர் அளித்துள்ள அருமையான பகுதியத் தினசரி ஆசிரியருக்கு அன்பளிப்பாகத் தருவது அவசியமாகிறது. ஜனாப் கலிபுல்லா அன்ற சொன்னால், நாட்டுச் சரித்திரத்தை யுண்டாக்கியவர்கள் அசோகர் அக்பர், சிவாஜி போன்ற வீரபுருஷர்களேயன்றி விசுவாமித்திரர், பாரத்துவாசர் போன்றவர்களல்லர் என்று. இதன் பொருள் வீர வழிபாடு அவசியமே தவிர ஆரிய முனிவர்களின் அடிதொழுவது அல்ல என்பதுதானே. இந்த ஒரு வாசகம் ஆரியத்தின் சீற்றத்திற்கு அடிப்படையான காரணம். ஆண்மையைப் போற்றினர். ஆரியத்தைப் பரிகசித்தார் என்பது வைதிகரின் வயிற்றெரிச்சலுக்குக் காரணம். வைதிகத்திற்கு வால்பிடிக்கும் வம்பர் கூட்டம் கலிபுல்லாவைத் தூற்றுவதற்குக் காரணம் ஆரிய ஆலிங்கனத்தால் அவர்கள் தமது அறிவை இழந்திருப்பதுதான்.

(திராவிடநாடு - 17.12.44)