அறிஞர் அண்ணாவின் கட்டுரைகள்


அவருக்கு இவர் எழுதினால்!

திருவிதாங்கூர் திவான் சர். சி.பி. இராமசாமி ஐயருக்கு, ஜகத்குரு சங்கராச்சாரியார்,

பத்மனாபபரிவாக, ஸ்ரீகடாட்ச சம்பூர்ண, பரப்பிரம்மகுல ரட்சக சர். சி.பி. அவர்களுக்கு, ஜகத்குரு சங்கராச்சாரி சுவாமிகள், சர்வமங்களானீபவந்து கூறிச் சாய்க்கும் ஸ்ரீமுகம் என்னையோ வெனில், அகிலாண்ட கோடி பிரமாண்ட நாயகனார் ஆதிபகவான் தமது முகத்திலிருந்து, பிராமண குலத்தை உற்பத்தி செய்த காலந்தொட்டு, கலியுகாதி சந்தேகாதிகளும் சஞ்சல சங்கடாதிகளும் சம்பவிக்கும் இந்தக் காலத்திலும், சனாதன சம்ரட்சணார்த்தமாகத், தங்களைப் போன்ற அபூர்வ மனுஷ்யாள் அவதரிக்கிறார்கள்.

மத்தக் குலத்தவாளைப் போல, நீச பாஷையாம் இங்கிலீஷ் பாஷையைப் படித்த மாத்திரத்தாலே, மன மாற்றம் அடையாமல், ஜீவனார்த்த உபயோகமாக அந்தப் பாஷையை வைத்துக்கொண்டு, இதர, சத்காரியாதிகளுக்கு, நமது புண்டரீகாதிகள் புவியில் தோற்றுவித்த புராதன முறைகளைக் கெடாமல் காப்பாற்றும் சேவையிலே, நமது பிரம்ம குலம் ஈடுபட்டிருக்கிறது. இல்லையானால், மனு முதல்வாதிகள் மகாசிரமப்பட்டு, ஏற்படுத்தி வைத்த வர்ணாஸ்ர தர்மம் நசித்துப்போய் சர்வம் ஜெகன்னாதமாகி, நமது குல மேன்மை கெட்டுப் போய் விட்டிருக்கும். ஹரி ஹரமாயா விநோத காலமுதல், இன்றுவரை, நமது குலம், சரீரப்பிரயாசை யின்றி, சேவகத் தொழிலின்றி, சூத்ராளைப் போல, உழவு, அடிமை என்னும் காரியங்கள் செய்யாது, சுகஜீவிகளாய், மேனியில் அழுக்கேறாது, சொர்ணகாந்த சொரூபிகளாய் வாழ்ந்து வரக் காரணம், எந்தத் தேசத்தார் எவ்வளவு மாறினாலும், என்னென்ன அபூர்வ நிலை பெற்றாலும், இங்கு ஆதி நாட்களில் ஏற்பட்ட ஆச்சார அனுஷ்டானாதிகள் நிலைத்திருக்க, பிராமண குலம், சேவை செய்வதேதான்.

இதுகாண, எம்மனோருக்குப் பரம சந்துஷ்டி ஏற்படுகிறது. ஒரு தன வைசியர், ஸ்தாபித்த, சர்வ கலாசாலைக்கு, நீர் திவானாக இருக்கும் திருவாங்கூர் ராஜ்யாதிபதி ஒரு இலட்சம் சம்பாவனை செய்ததாகக் கேள்விப்பட்டோம், பிரம்மகுல திவான், க்ஷத்திரிய குல மன்னனின் பணம், ஒரு வைசிய குலத்தாரின் பாடசாலைக்குப் போகவும், அதன் மூலமாக சூத்ரர்களுக்குப் பயன்படும் படியுமான, காரியம் நடக்கிறதைக் கண்டு சும்மா இருப்பதோ என்றெண்ணிச் சோகித்தோம். ஆனால், இப்போது, முழு உண்மை தெரிந்து மகா சந்தோஷமானோம்.

மேற்படி இலட்ச ரூபாயை நிதியாகக் கொண்டு, கிடைக்கும் வட்டித் தொகையில், தேவ பாஷையாம் நமது சமஸ்கிருத மொழியிலே பாண்டித்யம் பெற்றவாளுக்கு, வேதாந்த சிரோன் மணிக்கு வெகுமதி அளிக்க வேண்டுமென்று, தங்களிடமிருந்து அண்ணாமலை சர்வ கலாசாலையாருக்கு உத்தரவு சென்ற செய்தி கேட்டுப், பரமேஸ்வரனைத் துதித்து, உமது பிரம்மகுல பக்திக்காக மெச்சி இந்த ஸ்ரீமுகம் அனுப்பினார்.

கற்றது நீசபாஷை, ஆனால் தேவபாஷையிடம் அத்யந்த பிரியம் இருப்பதும்; செல்வமும்; சுகசம்பத்தும், சுந்தர சொகுசும் தங்கு தடையின்றிக் கிடைத்து, சுகானுபவராய் இருந்தும், வேதாந்
தத்திடம் வாஞ்சையும் கொண்ட வேதிய சிகாமணிகள் உள்ளவரை, நமது பிராமண குலத்தை யாராலும் ஏதும் செய்ய முடியாது, என்ற திட சங்கல்பம் சுலபத்திலே எழும். இந்தச் சூத்ராளின் விழிப்பும், மறுப்பும், இத்தகைய புருஷாள் இருக்கு மட்டும், நமது குலத்தை என்ன செய்ய முடியும்?

சம்பூர்ண சுகானுபவரசிகராய் ஸ்ரீகடாட்ச பூஷிதராய், வாழ்ந்து, பிராமண குலதர்மத்தை ரட்சிக்கக்கடவீர்.

ஸ்ரீசங்கராச்சாரியார்,
ஜெகத்குரு.

(திராவிடநாடு - 25.04.1943)