அறிஞர் அண்ணாவின் கட்டுரைகள்


அவருக்கு இவர் எழுதினால்!

அமெரிக்க நாட்டு தலைவர் மிஸ்டர் பிலிப்சுக்கு துருக்கி பத்திரிகைக் கோஷ்டித் தலைவர் ஆதே எழுதுவது:

அன்புள்ள மிஸ்டர் பிலிப்ஸ்!
நான் என் சகாக்களுடன் இந்தியா முழுதும் சுற்றிப்பார்த்து, அழகிய பூபாகத்திலே காணப்படும் பலவகை வளங்களையும், பலவகையான தட்ப வெட்ப நிலைமைகளையும், இயற்கை அழகையும், கண்டுகளித்ததுபோல் தாங்களும் களித்திருப்பீர்கள். பாரோர் புகழும் தாஜ் மஹாலும், பம்பாய்க் கடற் கோட்டையின் வாயற்படியும், லாகூர் மசூதிகளும், குதுப்மினாரும், கூடகோபுரங்கள் நிறைந்த பழையகாலப் பட்டிணங்களும், காசி, கயா, பிரயாக் முதலிய இந்து மத பீடங்களும், விந்தியமலையும் அதை அடுத்துள்ள திராவிட நாடும் அதன் வனப்பும், எங்கட்கு மகிழ்வு தந்தபடி தங்கட்கும் தந்திருக்கும்.

வெளி நாட்டிலிருந்து வருகிற எவரையும், புன்னகையாலோ, இன்மொழியாலோ பரவசப்படுத்தி, தமது கட்சியே நாட்டின் விமோசனத்துக்கு ஏற்ற கட்சி, மற்றவைகள், வெறும் சூட்சிச் சபைகள் என்று கூறிடும் சமர்த்தர்கள் பலர், அங்கு தலைவர்களாக, பத்திரிகாசிரியராக இருக்கின்றனர் என்பதை நான் கூறத் தேவையில்லை, தாங்களே நேரிலே அவர்களைக் கண்டீர்கள். நாம் ஏதாகிலும், கொஞ்சம் சபலத்தைக் காட்டினோமோ, தீர்ந்தது, நாம் அவர்களின் நாட்டியப் பொம்மைகளாகி விடுவோம். நாங்கள் இதிலே சர்வ ஜாக்ரதையுடன் நடந்து கொண்டோம். அவரவர்கள் சொல்லிக்கொண்டு வந்ததை எல்லாம் கேட்டுக்கொண்டு, தலையாட்டினோம், உங்கள் அபிப்பிராயம் என்ன என்று கேட்டபோதெல்லாம், இந்தியாவின் வனப்புகளைப் புகழ்ந்தோம், மற்ற உள்நாட்டுப் பிரச்னைகளிலே சிக்கிட மறுத்துவிட்டோம். துருக்கியின் நேசத்தைப்பெற, அச்சு நாட்டினரும், நேச நாட்டினரும், போட்டியிட்டுக்கொண்டு, புன்னகை காட்டி, கை குலுக்குவதைக் கடந்த நான்காண்டுகளாகக் கண்டு வருகிறோம், இதிலே எங்கள் நாடு, எந்த இராஜ தந்திரத்துக்கும் இறையாகாது, தப்பியே வருகிறது. துருக்கியின் இந்த மாண்பு, எங்களிடம் இருக்கிறதென்பதை, எமக்குத் “தூபதீப நைவைத்தியமிட்டு” வாழ்த்தியவர்கள் தெரிந்துக் கொண்டார்கள். தங்களிடம் மட்டுமென்ன! அவர்களின் ‘பாச்சா’ பலிக்குமா! எல்லாக் கட்சித் தலைவர்களையும், கட்சியில்லாத் தலைவர்களையும் கண்டு பேசினீர்கள். பார்த்தீர்களா, அங்கே இருக்கும் உள்நாட்டுப் பகையை! ஒன்பது, பத்து கோடிக்குமேல் உள்ள முஸ்லீம்கள் காந்தி இயக்கத்தைத் துளியும் ஆதரிக்கவில்லை; தங்கட்குத் தனிநாடு தேவை என்று கூறி வருகின்றனர். உண்மையிலேயே அந்த இலட்சியம் மிகச் சிறந்தது என்பதைத் தாங்கள் உணர்ந்திருப்பீர்கள். பொதுவாக, பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தின் மீது அமோகமான துவேஷத்தையோ, எதிர்ப்பையோ கிளப்பிவிட காந்தி இயக்கத்தால், முடியவில்லை. வண்டி வண்டியாகக் காகிதக் கணைகள் விடுகின்றனர். பயன் இல்லை. பட்டாளத்திலே இலட்சம் இலட்சமாக ஆட்கள் சேர்ந்து வருகின்றனர். எல்லைப்புறத்திலிருந்து கேரளம்வரையிலே, போர் ஆதரவுக்கான முயற்சிகள் பலமாக இருக்கிறது, தங்கள் கண்களிலே படாமலா இருக்கும்? செவியிலே விழும் சத்தத்தைக் கொஞ்சம் சட்டை செய்யாது, நமது கண்களிலே படும் காட்சிகள் கூறும் பாடத்தைக் கவனித்தால்,

1. காந்தி இயக்கத்தின் கனவு பலிக்கவில்லை.
2. பத்துகோடி முஸ்லீம்களின் “பாத்யதை”யைப் பற்றிப் பாராமுகமாக இருக்க முடியாது.
3. காந்தி இயக்கத்தால், போர் ஆதரவைக் கடுகளவும் போக்க முடியவில்லை என்று தெரிகிறது.

எது எப்படியிருப்பினும், இந்தியாவைச் சுற்றிப் பார்க்கும்போது, நம் போன்றவர்கள் காதுக்கு அதிக வேலை கொடுப்பதைவிட, கண்களுக்கு அதிக வேலை தந்தால், சரியான படம் பிடித்துப், பாடம் தெரிந்துகொள்ளலாம். நாங்கள் பிடித்த படத்தை இனி எமது பத்திரிகைகளிலே வெளியிடுவோம். உங்கள் படம் வெளிவரும் நாளை ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம்.

இப்படிக்கு,
ஆதே.

11.4.1943