அறிஞர் அண்ணாவின் கட்டுரைகள்


அவருக்கு கோபமாம்!

அவர் மிகக் கோபத்தோடிருக்கிறார், ஆம், முன்னாள் முதலமைச்சர் ஆச்சாரியாரைத் தான் குறிப்பிடுகிறோம். வேத வேதாந்தங்களையும், மார்க்க அரீலியரின் மணிமொழிகளையும் கற்று, ஜனபரிபாலனம் முதல் சிசு பரிபாலனம்வரை தெரிந்த அந்தத் திருச்செங்கோட்டுத் தவசியார்தான், கோபத்தோடிருக்கிறார்.

“தெரியுமோ விஷயம்? நம்ம சத்யமூர்த்தி காலமாயிட்டார்” என்ற சோகச் செய்தியைக் கூற எவரேனும் சென்றால் கூட, “சரி, அந்த ஆசாமியும் இந்தச் சமயமாகப் பார்த்துத்தானா செத்துத் தொலைக்க வேண்டும்” என்று கோபித்துக் கொள்வார். ஆமாம், அவரே வாய்விட்டுக் கூறிவிட்டார், எனக்குக் கோபம் தாங்க முடியவில்லை” என்று. “இந்தி எதிர்ப்பின் போது, நாட்டிலே நடைபெற்ற கிளர்ச்சியைக்கண்டு கோபித்துக் கொண்டாரோ, அதை விட அதிகக் கோபமாகவா இருக்கிறார்” என்று கேட்டு அவருடைய கோபத்தை மேலும் கிளறி விடவேண்டாம், என்று, இந்தி எதிர்ப்பாளரைக் கேட்டுக் கொள்கிறோம்.

பால், சுண்டக்காய் வேண்டுமென்று, அடுப்பிலே தீயைக் கிளறிக்கிளறி விட்ட நேரத்தில், பால் கொதித்துப் பொங்கி வழிந்து கீழே போனால், இல்லாளுக்குக் கோபம் வரத்தானே செய்யும். கண்ணாடிப் பாத்திரத்தை மிகச் சுத்தமாக வைத்திருக்க வேண்டு மென்று, ஒருமுறைக்கு மும்முறை கழுவித் துடைத்துக் கொண்டிருக்கையிலே, தவறிக் கீழே விழ்ந்து தூளானால், யாருக்குத்தான் கோபம் வராது!

அந்தக் குதிரை
ஆச்சாரியாரே, சற்று நேரம் கீழே இறங்கி, சிரமபரிகாரம் செய்து கொண்டு, காலடியிலே சமையல் செய்து சாப்பிட்டானதும், மீண்டும் சவாரி செய்வோம் என்று நம்பித்தான் அந்தப் பதவிக் குதிரையை விட்டுக் கீழே இறங்கினார். கூப்பிட்டால் ஓடிவரும் என்றும் கூடச் சொன்னார். பாருங்கள் இப்போது கூப்பிட்டால் வரவில்லை, இழுத்துப் பிடித்து நிறுத்தினால், முரட்டுத்தனம் செய்து கொண்டு ஓடுகிறது, அவரைக் குப்புறக் கீழே விழச் செய்கிறது அந்தக் குதிரை! அவருக்குக் கோபம் வராமலிருக்குமா!!

“நானும் பொறுமையை இழக்காது, அலுக்காது சளைக்காது, சமரசத்துக்குப் பாடுபட்டுப் பார்க்கிறேன், முடியவில்லையே. இனி நான் என்ன செய்வது, எனக்குக் கோபம் குதிரையைப் பறிகொடுத்து நெடுநாட்களாகிவிட்டனவே, இப்போது கோபம் இவ்வளவு வரக்காரணம் என்ன என்று கேட்பர். நாட்கள் பல ஆயினவே தவிர, ஆசை நரைக்கவில்லை, முயற்சி நிற்கவில்லை. அன்றுமுதல் இன்றுவரை அவர் அந்தக் குதிரையைக் தேடிப் பிடிப்பதன்றி வேறொன்றும் அறியார் பராபரமே என்றே கூற வேண்டியிருக்கிறது.

எந்தக் காங்கிரசே என் உயிர் என்று கூறினாரோ அதைத் துறந்தும் பார்த்தார். பலன் பூஜ்யம்.

எந்தப் போர் முயற்சியை எதிர்த்துச் சிறை சென்றாரோ, அதற்குப் பிரசாரம் புரியலானார், பலன் மீண்டும் பூஜ்யம்.

எந்தச் சர்க்கார் மாளிகைகளைச் சுற்றுவது, கேவலம் என்று கூறி வந்தாரோ அதே மாளிகைகளைச் சுற்றினார். பலன், உடலுக்கு அலுப்பு, உள்ளத்துக்குச் சோர்வு.

எந்தக் காந்தியாரைக் கண்கண்ட கடவுள் என்று துதித்தாரோ, அவரையே எதிர்த்தார். பலன், பல இடங்களில் பலவிதமான குழப்பம். எந்தப் பாகிஸ்தானைப், பசுவை வெட்டுவது என்று கண்டித்தாரோ, அதற்கே ஆதரவாகப் பேசியும் பார்த்தார், பலன், ஜனாப் ஜின்னாவின் புன்னகை, சவர்க்காரின் சீற்றம். எந்தச் சப்ரூ கூட்டத்தைச் செல்லாக்காசு என்று கேலி செய்தாரோ, அதே கூட்டத்தோடு கலந்து காரியமாற்றிப் பார்த்தார். பலன், பூஜ்யமே!

மகஜர் அனுப்புவது மன்னார்சாமிகளின் காரியமல்லவோ என்று பேசினவரே, மகஜர் அனுப்பிப் பார்த்தார், பலன் மறுபடியும் பூஜ்யமே! இதனால் அவருக்குக் கோபம் வருவது சகசந்தானே! கோபம் வந்ததுகண்டு நாம் ஆச்சரியப்படவில்லை, இவ்வளவு தோல்விகளுக்குப் பிறகும், அவருடைய மனங் குழம்பாமலிருக் கிறதே, அதற்கே ஆச்சரியப்படுகிறோம்.

காந்தியாரின் உண்ணாவிரதத்தால் விளையக்கூடிய மகத்தான ஆபத்துக்களை விளக்கினார், தலைவர்களைத் திரட்டினார், தந்திகள் அனுப்பினார், ஆனால், ஆகாகான் அரண்மனை திறக்கப் படவில்லை.

ரசமான உவமை
இந்தச் சர்க்காரை என்னவென்று கூறிக்கண்டிப்பதய்யா! ஒரு மகாத்மாவின் ஆவி துடித்துக் கொண்டிருக்கும்போது, இந்தச் சர்க்கார், அலட்சியமாக இருந்தார்களே என்று கேட்டவர் பலர். அக்கூட்டத்திலே ஆச்சாரியார் இருந்து அலறினார், அறிவுறுத்துகிறேன் என்றார், பலன் காணாது திகைத்தார். டாக்டர் சி.ஆர். ரெட்டியார், சர்க்காரின் நிலைமையை விளக்கினார் அழகுற. இந்தி எதிர்ப்பின்போது ஸ்டாலின் ஜெகதீசன் என்பவனின் உண்ணா விரதத்தைப் பற்றி எப்படி ஆச்சாரியார் சர்க்கார் அலட்சியமாக இருந்தனரோ, அதைப்போலக், காந்தியாரின் உண்ணாவிரதத்தைப் பற்றி இந்திய சர்க்கார் கவலையற்று இருந்தனர், என்று கூறினார். ஆழமப்பா உன் கருத்து, மெய்தானப்பா அழகாக இருக்குதப்பா, என்று பாடிடவுந் தோணும், டாக்டர் ரெட்டியாரின் அந்த அழகிய விளக்க உரை படித்தோருக்கு. தொட்டது துலங்கவில்லையே என்ற துயரமின்றித், தொடாதது எது என்று தேடித்திரிய ஆச்சாரியார் தயங்கவில்லை. மீண்டும் ஒரு மகஜர், வைசிராய்க்கு. இவருடன் மற்றும் பல தலைவர்கள்! கட்சியில்லாத் தலைவர்கள்தானே என்று அன்பர்கள் கேலி செய்யக்கூடாது. சுதேசமித்திரனுக்கு அது சுரீல் எனப்படுகின்றது. மகாகனங்களையும் மாஜி மந்திரிகளையும், பிரதம பாதிரிகளையும், கோடீஸ்வரர்களையுமா இப்படிக் கூறுவது என்று மித்திரன் கேட்கிறது. காக்கைக்கும் தன் குஞ்சு பொன் குஞ்சு என்ற பழமொழியை மித்திரனுக்குப் பதிலுரையாகத் தரலாமா என்று அன்பர்கள் எண்ணுவர். வேண்டாம், வேறு ஏதேனும் காரியம் செய்வோம், சுபாவத்தின்படி அமையும் சொற்களுக்குப் பதிலுரைக்க வேண்டியது அவசியமுமல்ல, பலனுமிராது.

இம்முறையும் வழக்கமான தோல்வி ஆச்சாரியாரை வாரி அணைத்துக் கொண்டது. காந்தியாரைப் போய்க் கண்டு பேச அனுமதி வேண்டும், இதுவே மகஜரின் கருத்து. இதற்கும் அனுமதி கிடைக்காமற் போகவே, ஆச்சாரியாருக்குக் கோபம் மூண்டிருக்கிறது. இப்படிச் செய்து கொண்டே இருந்தால், பகிரங்க எதிர்ப்பு படுதா எதிர்ப்பாகிவிடும் என்று பயமுறுத்துகிறார். துணிவாகப் பகிரங்க எதிர்ப்பு நடத்தினார், அதை அடக்கவும் தயார், பயந்து பதுங்கித் தாக்கினால், அதை ஒடுக்கவும் தயார் - என்று கூறும் நிலையிலே சர்க்கார் இருக்கிறது. சண்டைக் கப்பலையும் அடக்க முடியும் என்பது போருக்கு மட்டுமன்று, ஆச்சாரியாரின் மிரட்டுக்கும், அது பதிலுரைதான்.
வேறு வழி கோபித்துப் பயனில்லை ஸ்வாமிகளே! அரசமரத்தைச் சுற்றி வந்தால் மட்டும் அடிவயறு கனக்காது. சர்க்காரிடம் சரசமாடியோ, விரசங்காட்டியோ, இருப்பது மட்டும் போதாது. டில்லிவரை போக வேண்டாம்! வேறு இடங்களிலே உள்ளவர்களைத் தேடுங்கள், அவர்களின் கிளர்ச்சிகளுக்குச் செவி சாயுங்கள், பிறகு பாருங்களேன் ஆகாகான் அரண்மனையின் கதவு மட்டுமன்று, அமெரியின் காரியாலயங்கூடத் திறக்கப்படுகிறதா, இல்லையா என்று! இதுவே ஆச்சாரியாருக்கு நாம் அனுப்பும் அன்புகலந்த யோசனை. அவர் கண்ணன் காட்டும் வழி செல்பவராக இருக்கலாம், நமது வழி பிடிக்காமலிருக்கக்கூடும்!

தரிசன நோக்கம்
உண்மையிலேய நாம் தெரிந்து கொள்ள விரும்புவது ஒன்றுண்டு. காந்தியாரை இப்போது போய்ப் பார்த்து ஆச்சாரியார் என்ன புதிய நிலைமையை விளக்கப்போகிறார்? எந்தப் புதிய சம்பவத்தை விவரிக்கப் போகிறார், என்ன புதுக் காரணங்கூறி காந்தியாரின் நிலையை மாற்றப் போகிறார். ஏன் இப்போது காந்தியாரைக் கண்டால் போதும் என்று கூறுகிறார்.

காந்தியார் சிறைபுகுமுன் இருந்த சிந்தனையும் நிலைமையும் இன்று எது மாறிவிட்டது. காந்தியாருக்கும் மே.த. வைசிராய் அவர்கட்கும் நடந்த கடிதப் போக்குவரத்தைவிட, இருசாராரின் நினைப்புகளையும் விளக்க வேறு என்ன தேவை? எதற்காக இப்போது ஆச்சாரியார் காண வேண்டாமோ! என்று பாடுகிறார் - இது நமக்கு விளங்கவில்லை!

சிக்கலைத் தீர்க்க இதுதானா வழி? வேறு இல்லையா? மீண்டும் மீண்டும் ஆச்சாரியார் இந்த துரைமார் தலத்துக்குப் போவதையே வேலையாக வைத்துக்கொள்ளாமல், சுதேசமருந்து உட்கொள்ள வேண்டுகிறோம். முதலிலே தமிழகத்தில் உள்ள பிரச்னையைக் கவனிக்கட்டும். பிறகு வடதிசை ஏகி வகையான முறையில் முயல்வோம், சர்க்கார் மாளிகைக்கெதிரில் நின்றன்று, ஜனாப் ஜின்னா, டாக்டர் அம்பேத்கார் ஆகிய இனத் தலைவர்களின் இல்லங்களில் வீற்றிருந்து.

வீரர் செயல்
மாரெத் அரணைத்துளைக்க, நேசநாட்டுப்படைகள் சென்றபோது, இந்தியாவினின்றும் சென்ற வீரர்கள், அஞ்சா நெஞ்சினராக முன் சென்று, எதிரியை முறியடித்தனர்.

மாயூநதிக்கரையிலும் வங்கத்தை அடுத்தும், பர்மா வரையிலும் உள்ள விண்முகட்டைத் தொட்டுக்கொண்டு, இந்திய விமானிகள் பறக்கின்றனர்.

கொந்தளிக்கும் கடலில், கொடிய சப்மெரைன் தொல்லை களைப் பொருட்படுத்தாது, இந்தியக் கடற்படையினர் வீர தீரச் செயலாற்றுகின்றனர் - எனும் இன்னோரன்ன காட்சிகள், உலகுக்கும், பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்துக்கும், இனி ஏகாதிபத்திய மெனும் நுகத்தடியில் இந்தியாவைக் கட்டி வைத்து, வெள்ளை வயலை உழச் செய்து வாழ முடியாது என்பதை விளக்குமேயன்றி கட்சி யில்லாத் தலைவர்களின் காகிதக் கணையோ, கதவு தட்டும் கண்ணியரின் கதறலோ, சாவி தேடும் வீரரின் விம்மலோ, சப்ரூ ஜெயகர்களின் ஜெபமாலையோ, ஆச்சாரியாரின் அம்மானைகளோ இந்த விழிப்பை பிரிட்டிஷாரிடை உண்டாக்காது என்று கூறுவோம்.

கொள்கையை வேம்பென்று கருதித் தீண்டாத ஜாதிபோல், பொது உடைமை ரஷியாவை, இன்றைய வல்லரசுகள் ஒதுக்கி வைத்திருந்தன. ஆனால், ரஷிய மக்கள் நாஜிகளை எதிர்த்துப் போரிடுகையிலே காட்டிய வீர தீரத்தைக்கண்டு, இனி ரஷியாவை ஒதுக்கி வைத்து விட்டு உலகப் புனரமைப்புச் செய்ய நினைப்பதே பைத்தியக்காரத்தனம் என்று, பிரிட்டிஷ், அமெரிக்க அரசியல் தலைவர்கள் பேசக் கேட்கிறோம்.

துறைமுகங்களிலெல்லாம் துரைமார் சர்க்காரும், உள் நாட்டிலெங்கும் உரத்த குரலோனின் ஆட்சியும், ஊரெங்கும் ரோகமும் சோகமுமாக இருந்த சீனாவிடம் இன்று, வல்லரசுகள் அன்பும் ஆதரவும், மதிப்பும் காட்டுவதன் காரணம், சீனா, ஜப்பானியத் தாக்குதலை இவ்வளவு கஷ்ட நஷ்டங்களுக்கிடையே, தீரமாகப் போரிட்டு வரும், வீரத்தைக் கண்டதால் உதித்த வியப்பேயாகும்.
கிப்லிங் கீதம்!

“மேனாடு மேனாடுதான்
கீழ்நாடு கீழ்நாடுதான்”

என்று ஏகாதிபத்திய எக்காளமிட்ட ஆங்கிலக் கவி ருடியர்ட் கிப்லிங்கூட, மேனாடு கீழ்நாட்டைவிட மேலான நாடு என்று ஆணவமாகக் கவி அமைத்தபோதிலும், அதே கவியிலே “ஆனால் இரு பலவான்கள் சந்திக்கையில், மேனாடுமில்லை, கீழ்நாடுமில்லை” என்று கூறினார். இன்று ஆளப்பிறந்த கூட்டம் என்று மனப்பால் குடித்துக்கொண்டு, கறுப்பர் நம் கால் பிடிப்பர் என்று கர்வமாகக் கருதிக்கொண்டிருந்த வெள்ளை வீரர்கள், எந்த விமானங்களிலே, மேகமண்டலத்தில் தாவிச் சென்று எதிரி விமானங்களைத் தடுத்துப் போரிடுகின்றனரோ, எத்தகைய கடற் போர்களில் ஈடுபடு கின்றனரோ, எவ்விதமான அரண்களைப் பிளக்கும் அரிய போரில் பங்கு கொள்கின்றனரோ, அதே காரியங்களில் “கறுப்பர்கள்” வெள்ளையர் பாடங்கற்க வேண்டிய விதத்திலே வீரப் பணியாற்றுவதைக் காணும்போது, மேனாடு மேலான நாடு, கீழ் நாடு கீழான நாடு என்று கீதம்பாட முடியுமா? மத்யத் தரைக்கடலிலே சைப்ரஸ் தீவெனும் கடற்கோட்டைக் காவலுக்கு இந்தியாவிலிருந்து சென்றுள்ள வீரர்கள் பொறுப்பேற்றுள்ளனர் என்ற செய்தி, நாட்டின் எதிர்காலத்திலே கவலைகொண்ட உள்ளத்தினருக்கு எவ்வளவு உணர்வு தருகிறது. சைப்ரஸ் தீவுக்குத் தலைமீது அச்சு நாடுகள், காற்புறத்திலே அச்ச படைகள், சுற்றிலும் சுழல், ஜெர்மன் சப்மெரைன், அதன்மீது கொயரிங்கின் கோரப்பறவைகள். இத்தகைய கடற்கோட்டைக் காவலுக்கு இவ்வளவு பயங்கரமான இந்த யுத்தத்தின்போது, எந்தப் பூபாகத்து மக்கள் அமர்த்தப் பட்டுள்ள னரோ, அவர்களிடம், சுயாட்சியை ஒப்படைத்தால் நாட்டுக்கு ஆபத்து என்று பொருளற்ற சுருதியை வாசிக்க இனி முடியுமென்று நாம் எண்ணவும் மறுக்கிறோம். எனவேதான், இந்தியாவினின்றும் சென்ற போர் வீரர்கள் புகழ்பெறும் போதெல்லாம் நாம் பூரிக்கிறோம்.

மகிழ்ச்சி!
அவர்கள் சிந்தும் இரத்தம், பேசுவதைவிட, உயர்தரமான சுயராச்ய முழக்கம் வேறு இருக்க முடியுமா! அவர்கள் இந்தியாவின் சுயமரியாதையைக் காப்பாற்றுவதைப்போல, வேறு யார் இன்று காப்பாற்றுகிறார்கள்! அவர்களைத்தான் அன்பர் ஆச்சாரியார், காங்கிரசில் இருந்த காலை, கூலிப்படை என்று கூசாது கூறினார். பொது மக்கள் உள்ளத்திலே, கேலியும் கிண்டலும் தாண்டவமாடும் விதத்திலே பேசினார். அந்தப் போர் வீரர்கள், சம்பளம் பெறுகிறார்கள். எனவே அவர்கள் கூலிப்படை என்று வாதாடிய ஆச்சாரியாருக்கு மாதம் ஐந்நூறு தராமலா, மந்திரி வேலை பார்க்கச் சொன்னார்கள், (அலவன்சுகளை தள்ளிவிட்டே பேசுவோம்.) என்று கேட்டால் என்ன பதில் உரைக்க முடியும்?

காய்ச்சல் நீங்கியதும், குளறல் அடங்கிற்று என்பது போல, ஆச்சாரியார், காங்கிரசை விட்டு வெளியே வந்ததும், இத்தகைய பேச்சை ஓரளவுக்கு நிறுத்திக் கொண்டார். கனல் கக்கியது மாறி இன்று அவருடைய விழிகள் புனல் சொரிகின்றன.

சக்தி இல்லை
ஆனால், காய்ச்சலால் மெலிந்த திரேகத்தில் திடமுண்டாகாத போது வேகமாக நடப்பின், கீழே களைத்து விழுவதுபோலக், காங்கிரசை விட்டு நீங்கிய பிறகு, அங்கு இருந்ததால், கெடுத்துக் கொண்ட அரசியல் ஆரோக்கியத்தைச், சரிப்படுத்திக் கொள்ளாமல், சமரச ஏணி தூக்கிக் கொண்டு, சர்க்கார் மாளிகைச் சுவரிலே சாத்தி விட்டு, மேலே ஏறுகிறார்; கால்வழுக்கிக் கீழே விழுகிறார்; யார் நான் வழுவுவதைப் பார்த்துச் சிரிப்பது என்று கேட்டுக் கோபித்துக் கொள்கிறார். “ஐயா! உமக்கு இருக்கும் சக்தி போதாது, அந்தச் சுவரைத் தாண்ட” என்று கூறினால், கோபித்துக் கொள்கிறார்

18.4.1943