அறிஞர் அண்ணாவின் கட்டுரைகள்


அவசியந்தான்!

“உலகம் எனக்கு வெறுத்துப் போய்விட்டது. எனக்கு உற்சாகம் ஊட்டக் கூடிய எதுவும் இங்கு இல்லை. என்னை ஒருவரும் விரும்பவில்லை. உலகத்தைவிட்டுப் பிரிந்தால் நிற வேற்றுமையிலிருந்து தப்புவேன்”

இந்த வாக்கியங்களைக் கொண்ட ஒரு கடிதம், இப்போது நேச நாட்டினரின் வெற்றிக்கு இலக்கான பெரும்போரில் ஈடுபட்டுப் பணி செய்யச்சென்ற நம் நாட்டுப் போர் வீரர்களில் ஒருவரான நாயுடு என்பவர், நிற வேற்றுமை காரணமாக ஏற்பட்ட கொடுமையைத் தாங்கமுடியாமல் மேடான் கடலில் குதித்துத் தற்கொலை செய்து கொள்வதற்கு முன் எழுதி வைக்கப்பட்டதாகும். நிறத்துவேஷம் காரணமாக ஒருவர் தற்கொலை செய்து கொள்ளக்கூடிய அளவுக்கு நிறத்திமிர் பிடித்தவர்களால் நன்றி கொட்ட முறையில் கொடுமைகள் இழைக்கப்படுவதை அறிவு படைத்த எவனும் சகித்தக் கொண்டு இருக்க மாட்டான் என்றபோதிலும், தற்கொலை செய்து கொண்ட தோழர், தம்மைக் கொடுமைப்படுத்திய நிறத்திமிர் பிடித்தவர்கள் ..................கிழமாடு பட்டியிலிருந்து வீர ................... வறுமைக்..............வதே முறை என்ற யோசனையைத் தற்கொலை செய்து கொள்ள வேண்டுமென்ற யோசனைக்குப் பதிலாகச் செய்திருந்தாரானால், இந்த வெறுக்கத் தகுந்த நிறத் துவேஷப் பேய் விரைவில் ஒழிவதற்கு வழி உண்டாகியிருக்கும் என்றே நாம் கருதுகிறோம்.

இந்தச் சம்பவம் நிகழ்ந்த அதே நாளில்தான், சர். இலட்சுமணசாமி அவர்கள் சென்னையில் ஒரு கூட்டத்தில் பேசுகையில், நிறவேற்றுமையை ஒழித்துக் கட்டவேண்டிய அவசியத்தை வற்புறுத்தியுள்ளார். வெள்ளையர்களிடையே பதிந்துள்ள இந்த நிறத்திமிர் மனப்பான்மையை ஒழிப்பது உடனடியாகச் செய்யப்படவேண்டிய காரியமென்பதை நாம் வரவேற்கிறோம். இது பல காலமாகவே பரவிவரும் ஒரு தொற்று நோயாகவே இருந்து வருகிறதென்பதையும் நாம் அறிவோம். ஆனால், இத்தகைய கொடுமைகளை ஒழிக்கக் கூடிய அந்தஸ்தை நாம் பெறவேண்டுமானால், நம்மவர்களிடையே காட்டப்பட்டுவரும் – தேவை என்று கருதப்பட்டு வரும் சமூகக் கொடுமைகளும் வேற்றுமைகளும் சாதித்திமிரும் முதலில் ஒழிக்கப்பட்டு நம்மவரிடையே உரமும் ஒற்றுமையும் உண்டாகும்படி செய்வதையே உடனடியாகக் கையாளப்பட வேண்டிய மிக முக்கியமான காரியமென்பதை நாம் வற்புறுத்திக் கூறுகின்றோம்.

நம்மவரிடையே உள்ள இவ்வேற்றுமைகளை ஒழித்து உரம்பெற்ற ஒற்றுமையோடு உலகை நோக்கி நிறத்திமிரை ஒழியுங்கள் என்று கூறும் வலிமையை நாம் பெறாத வரையில், இத்தகைய கொடுமைகளை ஒழிக்க முடியுமா என்பதை நம்மவர்கள் நன்கு சிந்தித்து ஆவன பசய்வாரக்ள் என்று நம்புகிறோம்.

(திராவிட நாடு - 9.9.1945)