அறிஞர் அண்ணாவின் கட்டுரைகள்


ஐயன் சிங்காரங்களைப் பாரும்!

செருப்புகள் பறந்தன! கற்கள் கடுவேகமாகச் சுழன்றன! கூச்சலோ சொல்லி முடியாது! ஒழிக, ஒழிக, ஒழிக, என்ற கூச்சல்! ஓடு, ஓடு, விடு, விடு, பிடிபிடி, என்ற கூக்குரல். கையை ஒருவர் பிடித்திழுக்க, காலை ஒருவர் தட்டிவிட, கழுத்தை மற்றொருவர் தட்ட, தலைமீது மண்விழ, தத்தளித்தார் தலைவர்! சட்டையைச் சுக்குநாறாகக் கிழித்தெறிந்தனர் ஆத்திரங்கொண்ட மக்கள். கேள்விக்குப் பதில் சொல்! ஓடி ஒளியாதே நில்! நாட்டைக் கெடுக்காதே. நயவஞ்சகம் பேசாதே! குட்டிக்கதைகளைக் கொட்டாதே. குதர்க்கம் பேசாதே. பதவிவேட்டை ஆடாதே. பார்ப்பன புத்தியைக் காட்டாதே! கேள்விக்குப் பதில் கூறாமல், ஏன் ஓடுகிறாய் என்று ஆளுக்கோர் பேச்சு, எங்கும் அலங்கோலமாச்சு!

எங்கே? யாருக்கு நேரிட்டது இந்தக் கண்றாவி? மதுரையம் பதியிலே, மாபெருந்தலைவர், ராஜகோபாலாச்சாரியாருக்கு! ஏன் நடந்தது? பட்டினத்தடிகள் கூறினார், தன்வினை தன்னைச்சுடும், ஓட்டப்பம் வீட்டைச் சுடும் என்று. அதுபோல், ஆச்சாரியார் இரண்டு ஆண்டுகளாக, சீடர்களை, சீறிவிழுந்து பாரதமாதாவை வெட்டுவதைத் தடுமின், பசுவைக் கொல்லப் பார்த்துக் கொண்டிராதீர்கள் என்று கூறிவைத்தார். இப்போது அவர் பாகிஸ்தானை ஆதரிக்கிறார், அவரிடம் பாடங்கேட்ட “பக்த கோடிகள்” கொதித்து இத்தகைய கோலத்தைக் காட்டினர்.

ஐயன் சிங்காரத்தைப் பாரும்! அவரடைந்த அலங்கோலமதை நீர்கேளும்! பொதுமக்களை எப்படி வேண்டுமானாலும், வளைய வைக்கலாம் என்ற எண்ணங் கொண்டுள்ள தலைவர்கள், இக்கதிக்கே ஆளாகின்றனர். ஆச்சாரியாருக்கோ, யாருக்கும் இதுவரை ஏற்பட்டிராத கௌரவம், கிடைத்திருக்கிறது! எந்தத் தலைவருக்குத்தான், அவரது சொந்தக்கட்சியிலே இத்தகைய சோடசோபசாரங்கள் நடந்தன! தலைவரின் போக்கு தொண்டர்களைத் துடிக்கச்செய்கிறது, தொண்டர்களின் ஆத்திரம் தலைவரைத் திணற வைக்கிறது. இத்தகைய தலைவரையும் தொண்டரையும் கொண்ட கட்சிதான் பரிசுத்தமான கட்சியாம்! இவ்வளவு தத்தளிக்கும்! தலைவர்தான், தேசிய முன்னணியை அமைக்க தேசீய சர்க்கார் ஏற்படுத்த வேண்டுமென்று தேசபக்தி மேலிட்டு தெருவிற் திறிகிறாராம்! மதுரைக் கூட்டத்திலே நடந்த மரியாதையைக் கேள்விப்பட்டபிறகு, ஆச்சாரியாருக்கிருக்கும் செல்வாக்கு இவ்வளவுதானா, என்று கண்டு ஜனாப் ஜின்னா கைக்கொட்டி நகைப்பார்!

24.5.1942