அறிஞர் அண்ணாவின் கட்டுரைகள்


பகிரங்க விசாரணை வேண்டும்!

குன்றத்தூர் மக்கள் கோரிக்கை!
முதலமைச்சருக்குக் கடிதம்

குன்றத்தூரில் நடைபெற்ற கோரச் சம்பவம் குறித்து மேற்படி ஊர் கிராமப் பொது மக்கள், கையெழுத்திட்டுக் கீழ்க்கண்ட கோரி“க்கையொன்றை சென்னை மாகாண முதல் அமைச்சர் குமாரசாமி ராஜாவுக்கு 13.11.50ல் அனுப்பியுள்ளனர். மேற்படி மகஜரைப் பெற்றுக்கொண்டதற்கு முதலமைச்சர் சார்பில் பதிலும் கிடைத்திருக்கிறது. எனினும், இதுவரை, மேற்படி சம்பவம் குறித்து விசாரணை செய்வதற்கான நடவடிக்கைகள் எதுவும் ஆட்சியாளரால் மேற்கொள்ளப்பட்டதாகத் தெரியவில்லை.

மாகாணத்தின் பல பகுதிகளிலுமுள்ள நமது திராவிட முன்னேற்றக் கழகக் கிளைக் கழகங்களும், பொது விசாரணை நடத்தப்பட வேண்டுமென அரசியலாரைக் கோரி முந்நூற்றுக்கு மேற்பட்ட தந்திகளை அனுப்பியுள்ளன.

பல தனிப்பட்ட கழகங்களும், தொழிலாளர் சங்கங்களும், மேற்படி துப்பாக்கிப் பிரயோகம் குறித்து விசாரணை செய்ய வேண்டுமென, ஆளவந்தாருக்குத் தெரிவித்துக் கொண்டுள்ளன.

இக்கருத்தைப் பல பத்திரிகைகளும், வலியுறுத்தி யிருக்கின்றன. இருந்தும், இதுபற்றி ‘கேளாக் காதினராகவே’ அரசாங்கம் இருந்து வருகிறது.

கீழே, தடியடிக்கும் துப்பாக்கிக்கும் இலக்கான குன்றத்தூர் மக்கள் முதலமைச்சருக்கு அனுப்பிய கடிதத்தின் நகலைத் தந்துள்ளோம்.

அன்புமிக்க ஐயா,
இவ்வூர் திராவிட முன்னேற்றக் கழகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட ஒரு பொதுக்கூட்டத்திற்கு இவ்வூர் திரு.பாலகிருட்டினப்பிள்ளை அவர்கள் தூண்டுதலால் 144 தடையுத்தரவு பிறப்பித்ததின் காரணமாக, 26.10.50 ல் நிரபராதிகளான பொதுமக்கள், கோரமான தடியடியாலும், பயங்கரமான துப்பாக்கிப் பிரயோகத்தினாலும், ரிசர்வ் போலீசார் வீடுகளில் புகுந்து செய்த அட்டூழியத்தினாலும், பெண்பிள்ளைகள் அடைந்த அவமானப் பேச்சாலும், ஆட்களைக் குறிப்புக் காட்டி தடிகொண்டு அடிக்கப்பட்ட அச்சத்தாலும், ஊரடங்கு சட்டத்தால் ஏழைமக்கள் அவமானமும் பட்டினியும் எதிர்பாராது ஏற்கவேண்டியதாயிற்று. இந்த மகா பயங்கரமான கோரச் செயல் 10 நிமிடத்தில் புயல்வேகத்தில் ரிசர்வு போலீசாரால் நடத்தப்பட்டது. அந்த நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான மக்கள் அவமானமும் நூற்றுக்கணக்கான மக்கள் அவதியும், நூற்றுக்கணக்கான மக்கள் தடியடிபட்டும் 3 பேர் துப்பாக்கியினால் தாக்குண்டனர் என்பதையும் வருத்தத்தோடு தெரிவித்துக் கொள்கிறோம்.

குன்றத்தூர் விவசாயத்திற்கும், நெசவுத் தொழிலுக்கும் அடிப்படையானது. ஏழை மக்கள் ஒரு மாத காலமாக ரேஷனில் அரிசி கிடைக்காமலும், நெசவுக்கு நூல் கிடைக்காமலும் பட்டினிச் சாவை எதிர்பார்க்கும் நிலைமையிருக்க, அரசாங்கம் 144 தடையும், தடியடியும், துப்பாக்கிக் குண்டும், ஊரடங்குச் சட்டமும், பரிசாகத் தருவது நீதியா, நேர்மையா, நாகரீகமா என்பதை பணிவுடன் கேட்கிறோம்.

இவ்வூர் திராவிட முன்னேற்றக் கழகத்தினரால் எந்தக் காலத்திலும் சிறு கலகமோ அமைதியினமையோ ஏற்பட்டதில்லை. கழகத்தினரால் நடத்தப்பட்ட முதற் கூட்டம் இது ஒன்றுதான். இதற்குத் தடையுத்திரவு பிறப்பித்திருக்க வேண்டிய அவசியமமே இல்லை. மேலும், குன்றத்தூரில் ஒழுக்கமுள்ள செல்வந்தர்களும், பிரபல லுங்கி வியாபாரிகளும், மதிப்புள்ள நிலச்சுவான்தார்களும் பலர் உள்ளனர். அப்படியிருக்க, ஒரு தனிப்பட்ட மக்கள் செல்வாக்கற்ற திரு.பாலகிருஷ்ணன பிள்ளையின் கோரிக்கைக் கிணங்கி சர்க்கார் தடையுத்திரவு பிறப்பித்தது ஜனநாயகமாகாது. அதிகாரிகள் ஆரஅமர யோசித்து, மேற்படி பிரமுகர்களைக் கண்டு இவ்வூருக்கும் தி.மு.கழகத்திற்கும் 144 தடையுத்திரவு அவசியமா என்று கேட்டிருந்தால், இந்தக் கோரமானதும் அபாயகரமானது மான சம்பவம் நிகழ்ந்திருக்கா தென்பதை எடுத்துக் கூற ஆசைப்படுகிறோம்.

இச்சிற்றூருக்கு 48 மணி நேரம் ஊரடங்குச் சட்டம் அமுல் நடந்தது பரிதாபத்துக்குரிய சம்பவமாகும். அதை வாயினால் சொல்ல மனம் கூசுகிறது. ரிசர்வு போலீசார் மனித வேட்டை ஆடினர் என்றுதான் சொல்லவேண்டியிருக்கிறது. ஆகையால் இந்த விபரீதமான சம்பவத்திற்குக் காரணமாயிருந்தவரையும், அதன் சம்பந்தமாய் தடையுத்திரவு விதித்த அதிகாரிகளையும் துப்பாக்கிப் பிரயோகத்திற்குச் சம்பந்தமுள்ள அதிகாரிகளையும் பகிரங்க விசாரணை நடத்தி நீதி வாங்கவும், இச்சிற்றூருக்கு விதித்திருக்கும் தடையுத்திரவை நீக்கி மக்கள் சுயேச்சையாக வாழ்க்கை நடத்த, அகிம்சையை அடிப்படையாகக் கொண்ட காருண்ய மிக்க அரசாங்கம் ஆவன செய்யுமாறு மிகப் பணிவுடன் கேட்டுக் கொள்கிறோம்.

(திராவிடநாடு 3.12.50)