அறிஞர் அண்ணாவின் கட்டுரைகள்


பலி பீடம்!

காந்தீயப் பலிபீடம், வழக்கம்போல் இவ்வாண்டும், குருதியில் குளிப்பாட்டுங்கள், ஊன் உணவு ஊட்டுங்கள் என்று கூவிற்று. இவ்வாண்டு, பிரதம பூசாரியையே பிடித்திழுத்ப பலியிட, உடுக்கை கொட்டுவோர் தமக்குள் தீர்மானித்துக் கொண்டனர். ஆனால் பலிபீடத்திலே தலை உருளும் முன்னம், பிரதம பூரியாகிய அன்பர் ஆச்சாரியார், கோயிலைவிட்டு வெளிஏறிவிட்டார்! காங்கிரஸ் பதவியை விட்டு, விலகிவிட்டார்!! காமராஜரின் காகிதக்கத்தி வீசப்பட்டதும், ஆச்சாரியார் அங்கு இருந்தால்தானே ஒழுங்கு நடவடிக்கை என்று கருதி உங்கள் உறவே வேண்டாம் என்று கூறிவிட்டு வெளியேறிவிடத் தீர்மானித்து விட்டார். காலைச்சுற்றிப் பின்னிக்கொண்டிருந்த கொடியை அறத்தெறிந்துவிட்டார். தாமே தேடிக்கொண்ட சிறையைவிட்டு வெளியேறி, வெளியே உலவக் கிளம்பிவிட்டார்.

காந்தீயப் பலிபீடத்திலே, 1938-ல் தோழர் சரிமன் 1939-ல் டாக்டர் கரே. 1940-ல் சுபாஷ் சந்திரபோஸ், 1941-ல் தோழர் எம்.என்ராய் ஆகியோர் சாய்ந்தனர். தோழர் எம்.என்.ராய் மட்டுமே தைரியமாகக் காங்கிரசை எதிர்க்கத் தொடங்கி, தனிக்கட்சி அமைத்துக் கொண்டார். தேசீய ஜனநாயகக் கட்சி எனும் அந்த கழகத்தில் நமது பெரியார் உபதுணைத் தலைவர். இதன் அடிப்படைக் கொள்கை காந்தியத்தை கருவறுப்பதேயாகும்.

பெரியார் அவர்கள் கூட காங்கிரசைவிட்டு வெளியேறியது காங்கிரசின் மூலம் நாட்டுக்கு நற்காரியம் செய்யமுடியாது என்பதைக் கண்டுகொண்ட பிறகுதான். அவர் விலகும்போது, இன்று ஆச்சாரியார், காங்கிரசில் எத்தகைய உயர்தரமான, செல்வாக்குள்ள பதவிகளை வகித்துவந்தாரோ, அதுபேன்றே ஒருந்தவர். இன்றைய காங்கிரஸ் தலைவர்களிலே பலர் அன்ற வெறும் கொடிதாங்கிகள்!

ஏன்? ஏன்? வேண்டாம், போகாதீர்! போய்விட்டால் நாங்கள் என்ன செய்வது? என்று பலர் கேட்டுக்கொண்டு இருக்கும்போது, பலர் கலங்க, சிலரின் கண்களில் நீர் குலுங்க இருக்கும்போது, பெரியார் காஞ்சிபுரத்திலே காங்ரிசின் கட்டை உடைத்தெறிந்துவிட்டு வெளியேறினர். முகிலைக் கிழித்து வெளிவரும் முழுமதிபோல் வெளியே வந்தார். தமிழர் வாழ்ந்தனர்.

இன்று விலகும் ஆச்ச்ரியாரும் 30 ஆண்டுகள் உழைத்து அலுத்தவர். முடிசூடா மன்னராக இருந்தவர். மூலவரின் சுலோகங்களுக்கு வியாக்யான கர்த்தாவாக இருந்தவர். மூளைபலத்தை வடநாட்டுத் தலைவர்களுக்குத் தந்துதவியவர். தமிழரின் விரோதத்தையிம் பொருட்படுத்தாது வடநாட்டவரின் வாத்சல்யமே போதும் என்ற நம்பினவர். மோகனதாசகரம்சந்த் காந்தியை மகாத்மா காந்தியாக்கினவர். ஆகாத திட்டங்களை ஆஸ்ரமவாசி வெளியிட்ட போதெல்லாம், இவர் அவைகளுக்கத் தமது அறிவுமுலாம் பூசிப் பிரச்சாரம் செய்தவர். தென்னாட்டுக் காங்கிரசின் ஜீவசக்தி, விசை, ஆச்சாரியார் என்றால் அது மிகையாகாதது. ஆம்! அவ்வளவு அபாரமாக உழைத்திருக்கிறார் காங்கிரசுக்கு. ஆனால் காங்கிரசின் பாசீசம் அவரைச் சிதைக்கத் துணிந்தது. அதனிடமிருந்து தப்பினார், விலகிவிட்டார்.

விலகியவர், இனி என்ன செய்வார் என்பதைப் பொறுத்திருக்கிறது, விலகுவதால் உண்டாகும் பலன். ஆச்சாரியார் அயரமாட்டார் என்றே நாம் நம்புகிறோம்.

வயதேறி வருகிறது. ஆசைகளெல்லாம் அடங்கிவிட்டன என்று, மித்திரன் எழுதுகிறது ஆச்சாரியாரிப்பற்றி. உண்மை! ஆரியவர்த்தத்தின் ஆதரவைக் கொண்டு ஆச்சாரியார் எவ்வளவோ சாதிக்க முடியும் என்று நம்பினார். ஆவலாக இருந்தார். ஆசை அவலமாயிற்று. எனினும் அவர் மனம் உடைய மாட்டார் என்று நம்புகிறோம்.

நாட்டிலே காந்தீயத்தின் முன்பு தலைவணங்க மறுத்து, அந்தப் பலிபீடத்திலே கடா க்களாக இணங்காது. காந்தீயத்தின் கேடுகளைக் களைந்தெறிய வேண்டுமென்ப தற்காகவே மாபெறும் வீரர்கள், தியாகிகள், எத்தகைய கஷ்டநஷ்டத்துக்கும் கலங்கா உள்ளம் படைத்தவர்கள் தூவெனக் காரியுமிழ்ந்துவிட்டுக் காங்கிரசைவிட்டு வெளியேறிவிட்டனர். காங்கிரஸ் டயர்களின் ஜாலியன் வாலாக்களிலே சிறுண்ட தலைவர்களின் தலைகள் அனந்தம். காவியம் கற்ற கலியாணசுந்தரனால் கந்தரனுபூதி படித்துக் காலங்கழிக்கிறார். வைத்தியநாதரோ வாட்டம் தீர கங்கையில் மூழ்குகிறார். மற்றம் எத்தனையோ தலைவர்கள் தமது தலைதெறித்துவிடக் கண்டனர். இறுதிக் காலத்திலே உத்தம தேசபக்தர் வி.ஓ.சிதம்பரம்பிள்ளை அவர்களின் மனம் குமுறியதை யாரே அறியார்! சீர்குலைந்த வாழ்வு, வறுமைப்பிணி முதமைப் பருவத்திலே! யார் அவரை ஆதரித்தனர்! திருநெல்வேலிச் சீமையிலே தியாகத் தீயைமூட்டி அதிலே குளித்துக் குளித்தெழுந்த, குன்றான உள்ளம் படைத்த கோமான், மங்கி சுருண்டு, மறைந்தார். காந்தீயம் அவரை அங்ஙனமாக்கியது. மயிலை அய்யங்காரை மூலையில் மடக்கிற்று. காந்தீயக் கொடுநோய் சூறையாடிய செய்தி, சித்தத்தை நோகச் செய்யும் கேட்டால், செங்குருதியில் கொதிப்பேறும் சொன்னால்! ஆச்சாரியார், இவைகளை அறிவார். ஆனால் தமக்கு இது நேராதென்று கருதினார். உனக்கும் பெப்பே என்று வர்த்தா கூறிவிட்டது. உடனே ஆச்சாரியார், இனி உனது கூட்டுறவே வேண்டாம் என்று கூறிவிட்டு, வெளியேறிவிட்டார். பட்டதெல்லாம் போதும் பராபரமே என்ற நிலைக்கு வந்துள்ளார் ஆச்சாரியார். இனி, அவர் செய்யப்போவது என்ன?

1. காங்கிரசுக்கம் லீகுக்கும் சமரகம் உண்டாக்குவது.
2. நாட்டிலே தேசிய சர்க்கார் அமைப்பது
3. அச்சு அபாயத்தினின்றும் நாட்டைக் காப்பது எனும் இம்மூன்று காரியங்களைச் சுதந்திரத்தோடு செய்யவே, ஆச்சாரியார், காங்கிரசின் தொடர்பை அறுத்துக்கொண்டார். அவரது நோக்கத்திலே முதலாவது, இனி அவர் செய்யக் கூடிய காரியமல்ல! அவர் காங்கிரசை விட்டுப்பிரிந்த பிறகு, அதற்கும் லீகுக்கும் சமரசத்தை உண்டாக்குவதெப்படி சாயும்! காங்கிரசின் பிடிவாதத்தைப் பிளந்தெறிய, கபோதிக் கொள்கையைக் கண்டிக்க அவர் முனைய வேண்டும். விட்டகுறை தொட்டகுறை வேதாந்தம் இனிப்பலன் தராது. அவசியமும் இல்லை என்போம். ஆச்சாரியார் இல்லாக் காங்கிரஸ் நரம்பில்லா வீணை, கூலில்லாக் கத்தி, கவசமில்லா வீரன், அகழியில்லாக் கோட்டை இனி அந்த அலியின் அழகில் யார் சொக்கினால் சொக்கட்டும என்று கவலையுற்று. அழகில் யார் சொக்கினால் சொக்கட்டும் என்று கவலையுற்று, ஆச்சாரியார், நாட்டவரை உள் நாட்டு நாசீசத்தினின்றம் விலகிவிடும்படி செய்ய வேண்டும். அங்ஙனம் செய்து, காங்கிரசின் செல்வாக்கு பூஜ்யமாயிற்றென்பதை விளக்கிவிட்டார். பிரிட்டிஷ் சர்க்கார், காங்கிரசின் பேச்சை ஒரு புறத்தே ஒதுக்கி வைத்துவிட்டு, பிற கட்சிகளைக் கலந்து பேசி, காரியத்தை நடத்த முன் வருவர்.

ஆச்சாரியாரே! இனி உமக்கோர் அரிய சந்தர்ப்பம் இருக்கிறது என்பதை அறிமின். தமிழ் நாட்டின் தீவிரவாதிகள் தங்களை இனி ஆதரிக்கத் தயார் என்பதைத் தெரிந்து கொள்மின். சமத்ர்மிகள், சுயமரியாதைக்காரர்கள், ஜஸ்டிஸ் யுவர்கள் ஆகியோர் காந்தீயத்தை அடியோடு வெறுக்கின்றனர். காந்தீயம் முதலாளித்துவத்தின் மழலை என்று அவர்கள் கருதுகின்றனர். அவர்கள் இதுவரைக் காங்கிரசைவிடடு வெளியே இருந்ததற்குக் காரணம், சிறைச்சாலைக்குப் பயந்தல்ல. அவர்கள் சிறைச்சாலையை மாங்குயில் கூவிடும் பூஞ்சோலை எனக்கொளளும் மனப்பான்மையினர், பதவிப் பித்துக் கொண்டல்ல, பதவியை அவர்கள் மதிப்பதில்லை. பணக்காரரிடம் பாசம் கொண்டல்ல, பல வேலைகளிலே அவர்கள் பணக்காரரின் சீற்றத்தையும் சுடுசொல்லையுமே பரிசாகக் கொண்டு மகிந்தவர். அவர்கள் காந்தீயத்தை வளரவிடுவதனால், நாட்டிலே நாஜிசத்தை நடமாட வைக்கிறோம் என்று கட்டுகொண்டே காங்கிரசை எதிர்த்து வந்தனர். எவ்வளவு பலமான தாக்குதலையும் அவர்கள் சமாளிக்கும் சக்தியினர் என்பது தங்கட்கே தெரியும், அனுபவபூர்வமாக! எனவே அத்தகைய பட்டாளம் நாட்டிலே இருப்பதைக் கண்டு காந்தீயர்களின் தடபுடலுக்கு அஞ்சாது கலங்காது காந்தீயத்தை எதிர்த்துப் போரிட இன்றே புறப்படும் என்று ஆச்சாரியாருக்குக் கூறுகிறோம். பலிபீடத்தைவிட்டு விலகியவரை மகிழ்ச்சியே மேற்கொண்டு அவர் செய்யப் போவதென்ன என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.

(திராவிட நாடு - 12.07.1942)