அறிஞர் அண்ணாவின் கட்டுரைகள்


பலி பீடத்திலே!
இருட்டறையிலே இருந்துழலு வோர்முன் விளக்கொளி காட்டுவது, விவேகமா, தீதா! நோய் கொண்டோருக்கு, மருந்தூட்டுவது முறையா, தவறா? சாந்ததால் உலகம் தழைக்கவேண்டு மென்றுரைப்பது அழகா, அநீதியா! மதஏடுகளிலே காணப்படும் ஆபாசங்களை எடுத்து விளக்கி, மணியின் மாசுபோகத் துடைப்பது போல், மார்க்க சம்பந்தமாக உள்ள மாசுகளை அறிவுக்கோல் கொண்டு துடைப்பது தானே கடமை? என்றெல்லாம் இன்று கேட்டால், “ஆம்! தடை என்ன? செய்யத்தான் வேண்டும். வைரம் ஜொலிக்க வேண்டுமானால் சாணை பிடிக்கத்தான் வேண்டும் வெட்டி எடுத்துச் சுத்தம் செய்து கனலிலிட்டுக் காய்ச்சி அடித்து எடுத்தால் மட்டுமே, தங்கம் தகதகவெனப் பிரகாசிக்கும்” என்று பலர், பதில் கூறுகூர், மனமாறக் கூறாவிடினும், வாயாற வாகிலும் கூறிடுவர். இந்த அளவு கேட்கும் உரிமையை உலகம் பெற்றது, வாயில்லாப் பூச்கிளாக பெரும் பான்மையினர் இருந்தபோது, வந்தது வரட்டும் என்று துணிந்து தண்டனைகளைக் கண்டு திடுக்கிடாது, தீயில் குதித்தேனும் தீட்டுவென் திருப்பாதை என்று தீரமாகப் புகன்றதாலேயே யாகும்.

ஆமாம், ஆபாசந்தான், அறிவுக்கு ஏற்றதாகவும் இல்லை வாதத்திற்கு நிற்காது, இருந்தாலும், ஆதிநாளிலே ஏற்பட்ட தாயிற்றே. பலப்பல காலமாக உண்மை என்று மக்கள் நம்புகின்றனரே அந்தக் கொள்கைகளைக் காப்பாற்றக் கட்டுப்பட்டுள்ள கோட்டைகள் பல உள்ளனவே அந்தக் கோட்டைகளைச் சுற்றிக்காவல் புரிவோர் அனேகர் உள்ளனரே அவர்களுக்குக் கேடயமாக அதிகாரம் இருக்கிறதே நாம் என்ன செய்ய முடியும்? என்று வாதிட்டு, சமாதானம் பெற்று, ஆமைகளாக இன்றும் பலர் இருப்பது போல, எல்லோருமே இருந்து விட்டிருந்தால், கருத்து வளர்ச்சி காட்டு மிராண்டிக் காலத்திலேயே இருந்திருக்குமன்றோ! மனதில் உண்மையெனக் கொண்ட கைக் கூறிடுவோம், அதைத்தடுக்க எத்தனை பட்டாளங்கள் கூட்டி வரப்பட்டாலும் பயங்கொள்ளோம், என்றுரைத்த வீரர்கள், அறிவுத்துறையிலே அவ்வப்போது கிளம்பியதால் மட்டுமே, அறிவு வளர்ச்சி இவ்வளவு கிடைத்தது! ஏர் உழுத பிறகுதானே விதை தூவமுடியும்! ஏர்உழுத ஏறுகள், பட்டகஷ்டம் கொஞ்சநஞ்சமல்ல!

நாத்தீகம் பேசினாலும், “அவன் தண்டிக்கட்டும்” என்று விட்டு விடும் அளவு, மதவாதிகள் இதுகாலை தமது இருதியை இறக்கிக்கொண்டனர். ஆனால் ஆரம்பத்திலே, அவர்களின், உக்கிரம், இவ்வளவு அவ்வளவு என்று அளவிட முடியாததாகவே இருந்தது. ஆண்டவனைப் பற்றியோ, அவனடியார்களைப் பற்றியோ, கூறப்பட்டுள் பல அற்புத நிகழ்ச்சிகளைப் பற்றி, இன்று அறிவாளிகள், தத்துவார்த்தமே கூறுகன்றனர். இத்தகைய தத்துவார்த்த விளக்கமும், கண்டிக்கப்பட வேண்டிய குற்றமாக பிரிட்டிஷ் நீதி மனன்றத்திலே கருதப் பட்டகாலம் உண்டு! நினைப்பிற்கெட்டாத காலத்திலல்ல! 1728-ல் நடந்தது இந்த சத்ய சம்பவம்.

தாமஸ் உல்ஸ்டன் என்பவர், ஆத்தீகர், கிருத்தவர், அறிவாளி, பாதிரி அவர் நூலொன்று எழுதினார் 1726-ல். அதிலே அவர் ஏசுநாதர் செய்து காட்டியதாகக் கூறப்படும் அற்புதங்களைப் பற்றி ஆராய்ச்சி செய்து காட்டி, அலைகளைத் தத்துவார்த்த மாகக் கொள்ள வேண்டுமே தவிற, அப்படியே நடந்தனவென்று கொள்ளக் கூடாது, அவ்விதங்கொள்வது பகுத்தறிவாகாது, அறிஞர் எள்ளி நகையாடுவர், என்று விளக்கினார். வேதத்திற்கு விவேக விளக்கமுரைத்தார்! இதுதான் அவர் செய்த பெரும் பிழை!

அந்த நாலுக்கு மக்கள் பெருத்த ஆதரவளித்தனர். 30,000 பிரதிகள் விற்றன! பாதிரிகளின் உலகம் பதைத்தது! இவனோர் நாத்தீகன்! ஆண்டவனின் விலைகளைப் பற்றிக் கேலி கூறியவன். இழித்துப் பழித்து எழுதி மக்கள் உள்ளங்களைப் பாழ்படுத்துகிறான். ஆத்தீக்கத்தை அழிக்கிறான். அறிவு எனும் சம்மட்டி கொண்டு, மதக்கோட்டையை இடிக்கத் துணிகிறான். இவனை ஒழித்தாகவேண்டும், என்று மத ஆதீக்கக் காரர்கள், மாரடித்துக் கொண்டனர்! மதவாதியின் மதிவழியே மன்னர்கள் செல்வது முறையன்றோ! எனவே, உல்ஸ்டன், மீது வழக்குத் தொடரப்பட்டது. நீதிபதி “ஆம்! இவன் தேவ நிந்தனனையே செய்தான். தண்டனைக்கு உரியவனே!” என்று தீர்ப்பளித்தார். 1729-ம் ஆண்டு மார்ச்சுமாதம், தத்துவார்த்த விளக்கம் எழுதிய குற்றத்திற்காக தாமஸ் உம்ஸ்ட்டன், ஓராண்டு சிறைத்தண்டனையும், 100 பவுன் அபராதமும் தரப்பட்டதுடன், 2000 பவுன் சொந்த ஜாமீனும், 1000 பவுனுக்கு இருவரும், 500 பவுன் வீதம் நால்வரும் ஜாமீன் கொடுத்து, நன்னடக்கைக்கு உத்திரவாதமளிக்கவேண்டும் என்றும் இல்லையேல். ஆயுள்வரை சிறையிலே இருக்கவேண்டு மென்றும் தீர்ப்பு அளிக்கப்பட்டது! ஜாமீன் கட்டப் படவில்லை. ஆயுள்வரை சிறையிலே இருக்கவேண்டு மென்றும் தீர்ப்பு அளிக்கப்பட்டது! ஜாமீன் கட்டப்படவில்லை. ஆயுள்வரை சிறை கிடைத்தது, சிலத்தைப் புகுத்த, சொந்த அறிவுடன், அற்வுதங்களுக்குத் தத்துவார்த்த உரை எழுதிய அறிவாளிக்கு. நாலு ஆண்டுகள் சிறையில் கிடந்து, சிறையிலேயே மாண்டார். ஏசுவைச் சிலுவையில் அறைந்தனர் ரோம் நாட்டு அதிகாரிகள்! ஏசுவின் விசுவாசிகள், செய்தது என்ன? அறிவுக் கண் கொண்டோரை, சிறையில் இடத்தயங்கினரோ! இல்லை!

1945-ம் ஆண்டிலே ஒரு யூதர் எலிசாடி பாஜ் என்பவர், தமது உயிலின்படி, 12000 பவுன் தர்மத் தொகையாக வைத்து, யூதர்களின் மார்க்கக் கொள்கையைப் பற்றிய படிப்பகம் ஏற்படுத்த வழி செய்தார், நாத்தீக போதனைக்கல்ல! ஆனால், கிருஸ்தவ மார்க்கமே அரச மார்க்கம். யூதமார்க்க போதனை அடுக்காது என்றாராம் ஹார்விக் பிரபு! 1200 பவுன் பறி முதல் செய்யப்பட்டதாம்! கிருத்தவமார்க்கத்தைக் காப்பாற்றுவதிலும், அதன் மீது அறிவுக்கணைகள் பாய்வதைத் தடுப்பதிலும் மட்டுமல்ல, வேறுமார்க்க போதனை புரிவதைத் தடுப்பதிலும் கூட அவ்வளவு அக்கரை இருந்தது! எவ்வளவு முள்வேலி, எத்தனை சுற்றுசுவர், எவ்வளவு அகழிகள், அந்தமதக்கேரட்டையைச் சுற்றி! ஏன் அவ்வளவு அச்சம்!!

புத்தகம் ஏழுதுவது வெளியிடுவது மட்டுமல்ல, விற்பதற்கும் தண்டனை! தாமஸ் பெயின் எனும் தீவிரவாதி எழுதிய மனீதனின் உரிமைகள் என்ற புத்தகத்தின் இரண்டாம் பாகத்தில் ஒரே ஒரு பிரதி விற்ற ஒரு ஏழைபுத்தக வியாபாரி மீது சட்டம் பாய்ந்தது! 1797இ ஜூன் மாதம், தாமஸ் வில்லியம்ஸ் என்ற கிழவன் மீது கடுங்கோபங் கொண்டனர், “சூகடுகளையும் கழகம்” என்ற சங்கத்தினர். புத்தக வியாபாரி மீது வழக்குத் தொடுத்தனர். கழகத்தின் சார்பாக, தாமஸ் எர்ஸ்க்கைன், எனும் வழக்கறிஞர் ஆஜராகி, வாதம் புரிந்தார். கென்யான் பிரபு, நீதிபதி. அவர், இத்தகைய நிர்தனைக்காரனின் நீசப்புத்தகத்தை விற்றவனைத் தண்டிப்பதே முறை என்று கருதினார். தீர்ப்புக் கூறுவதற்குச் சின்னாட்களுக்கு முன்பு, வழக்கறிஞர் எர்ஸ்க்கைன், உலவச் செல்கையிலே, ஒரு மூதாட்டி, அவரை இழுத்துக்கொண்டு போய், நோய் வாய்ப்பட்டு நொந்து கிடந்த தாமஸ் வில்லியம்ஸ் என்ற புத்தக வயாபாரியையும், அம்மை நோயால் தாக்குண்டு தவித்துக்கிடந்த அவனது மக்களையம் காட்டினாள். எர்ஸ்க் கைனின் மனம் இளகி, கேடுகளையும் கழகத்தாருக்கு, வழக்கை வாபீஸ் வாங்கிக் கொளள வேண்டுமென்றும், இத்தகைய ஏழையினிடம் இரக்கங் காட்டுவதே கிருஸ்தவ மார்க்கமாகும்மென்றும் ஒர கடிதம் எழுதினார். கருணை! கிருஸ்தவ மார்க்கத்தின் மூலத்தை முறியடிக்கும் ஏட்டை விற்றவனுக்கா இரக்கங்காட்டுவது, முடியாது-என்று கழகத்தார் கூறி விட்டனர். அங்கனமாயின், வழக்கை நடதத நான்வாரேன்.” என்றார் வழக்கறிஞர். வழக்கு நிற்கவில்லை! நீதிச்சக்கரம் அந்த நோயாளி, நொந்த உள்ளத்தான் மீது ஓடாமலுமில்லை. ஓராண்டு சிறைத் தண்டனை தரப்ட்டது. நன்னடக்கைக்காக ஓராயிரம் பவுன் சொந்த ஜாமீன் கேட்கப்பட்டது. அந்த ஏழை ஓராயிரம் பவனைக் கண்டதுமில்லை ஒடிந்த உள்ளத்துடன் சிறையிலே வாடிக்கிடந்தான்.

தாமஸ் பெயின் என்பவர் எழுதிய மனித உரிமைகள் என்ற புத்தகத்தை விற்றதற்காக, 1871-ல் சார்லைல், என்ற புத்தக வியாபாரி, அவர் மனைவி, அவர் குடும்பத்தினர், பிறகு அவரது நண்பர்கள், பன்னர் அவரது ஆதரவாளர்கள், ஆகியோர், 150 பேர்கள் தண்டிக்கப்பட்டனர், கடுமையாக மார்க்க சம்பந்தமாக இவ்வளவு கட்டுதிட்டத்தைத் காத்துரட்சித்த பிரிட்டன், வீரர்கள் வீவேகத்தால் பெருகிய இரத்த ஆறுபாய்ச்சப் பட்ட, பிறகு சுதந்திர மலர் பூக்கும் பண்ணையாயிற்று! இதை மன்னன் மணவினை இன்ன விதமாகத்தான் இருக்க வேண்டும் என்று கூறிடும் உரிமை அந்நாட்டு மக்கள் பெற்று உள்ளனர்.

அரசாள்வோன் ஆண்டவனின் பிம்பம். அவனைத் திருத்துவது, தண்டிப்பது, ஆண்டவனின் உரிமை, மக்கள் குறுக்கிடுவது கூடாது, என்ற தத்துவத்தைப் பேசினதற்காக, முதலால் சார்லஸ் மன்னனுக்கு தூக்கு மேடைக்கு இழுத்த பிரிட்டன், இரண்டாம் ஜேம்ஸ் அரசரை, நாட்டைவிட்டே ஓடச்செய்த பிரிட்டன், முதலில், மார்க்கத்துறையிலே, சுதந்திரமாகக் கருதிடும் உரிமை கோரியோருக்கு குறிக்கோல் காட்டிற்று. அதைப் பொறுத்துக் கொண்ட வீரர்களே இன்று, அறிவு உலகில், கீர்த்தி நிறப்பப் பெற்றவர்கள் என்று போற்றப்படுகின்றன.

(திராவிடநாடு - 20.9.42)