அறிஞர் அண்ணாவின் கட்டுரைகள்


பயங்கரப் பாதை
ரோம், பிரிட்டனை ஜெயித்தது - அடிமைப்பட்ட பிரிட்டனிலே, ரோம் நாட்டவர், தூக்குமரங்களை அதிகமாக அமைக்கவில்லை - ஆனால், ரோம் நாட்டிலே ரோம் நாட்டவர், தங்களிடம் வேலை செய்து வந்த ஏழைகளை, அவர்கள், “எஜமானர்களை எதிர்க்கத் துணிந்தனர்” என்ற ஒரே காரணத்துக்காகப் படுகொலை செய்திருக்கிறார்கள் - சமரிட்டு அழித்தனர் ஏராளமான அடிமைகளை - அவர்கள் போக - சரணடைந்த, பிடிபட்டவர்களை, பாதை நெடுகத் தூக்குமரங்களை அமைத்து, அவர்களைத் தூக்கிலிட்டுக் கொன்றனர் - ஒரு நூறு, ஓர் ஆயிரம் அல்ல - ஆறு ஆயிரம் ஏழைகள் !

ரோம் கலையை வளர்க்கத் தவறவில்லை இந்தப் படுகொலை செய்த காலத்திலேயும்! அந்த நாட்டிலே நளினிகளுக்குக் கீதம் பயிலுவிக்கும் இசைவாணர்கள் இருந்தனர். சிற்றிடையாளின் சேல்விழி பேசுகிறது பாரீர் என்று வியந்துகூறி, ஒரு சீமான் மற்றொரு சீமானிடம் காட்டி மகிழும்விதமான ஓவியம் தீட்டித்தர ஓவியர்கள் இருந்தனர். எல்லாம் இருந்தன - ஏழைக்கு மட்டும், உழைக்க வேண்டிய நிலைமையும், உரத்த குரலிலே இது அக்கிரமமல்லவா? என்று கேட்டால், தொங்குவதற்குத் தூக்குமரமும் இருந்தது. எதிர்க்கத் துணிந்தவர்கள் 6000 பேர், பாதை ஓரத்திலே, தூக்கு மரத்திலே தொங்கினர். கண்முன் கொண்டுவந்து பாருங்கள்! பயங்கரக் காட்சியல்லவா!

பயங்கரப்பாதைதான், பாட்டாளி விடுதலை விரும்பினால், உரிமைக்காகப் போரிட்டால், காண வேண்டும். அந்தப் பாதையைக் கண்டு கலங்கா நெஞ்சம் ஏற்பட்டாலொழிய, விடுதலை கிட்டாது.
நாம் கூறும் இந்த ஆறு ஆயிரம் அடிமைகளின் பிணங்கள் பாதையிலே தொங்கிய சம்பவம், கதையல்ல – காவியமல்ல - வரலாறு. நிழல்தரப் பாதை ஓரத்திலே நல்ல மரங்களை வைத்து வளர்க்கிறார்கள் இன்று - அன்று கூடத்தான். ஆனால், ரோம் நாட்டவர், ஆறு ஆயிரம் தூக்குமரம் அமைத்தனர், பாதை ஓரத்தில். பரந்த சாம்ராஜ்யம் - சட்டத்துக்குப் பிறப்பிடம் - கிரேக்கக் கலாச்சாரத்தை மெருகிட்டு வழங்கிய இடம்

இந்த ரோம்; ஆனால், பாட்டாளிக்குக் கிடைத்தது தூக்குமரந்தான்.

போரிலே தோற்றுவிட்டவர்கள், பிழைப்புக்காகத் திண்டாடுபவர்கள் ஆகியவர்களை ரோம் நாட்டு ஜமீன்தாரர்கள் - பண்ணை முதலாளிகள் - வேலைக்கு அமர்த்திக் கொண்டனர் - இவர்கள் ‘அடிமைகள்” வேலை செய்ததால் மட்டுமல்ல, அந்தப் பெயர் - சட்டத்திலேயே அவர்களுக்குத் தரப்பட்ட அந்தஸ்து அவ்வளவுதான்.

தொழிலாளி - கூலிக்காரன் - அடிமை; மூன்றுவிதமான பெயரும், ஏழைதான் பெற முடியும்; மூன்றுவிதமானவர்களும் ஏழைகள் - உழைத்தே பிழைக்க வேண்டியவர்கள் - ஆனால், மூவருக்கும் நிலைமை வேறு வேறு. தொழிலாளி - தனக்கு விருப்பமில்லாவிட்டால் வேலைக்குவர மறுக்கும் நிலைமையையும், தன்னைக் காரணமின்றி வேலையிலிருந்து நீக்கினால், ஏன் என்று கேட்கும் நிலைமையையும், கேட்கும் உரிமையையும், உழைப்புக்கேற்ற ஊதியம் தந்தாக வேண்டும் என்றும் கிளர்ச்சி செய்யவும் சட்டப்படி உரிமை பெற்ற நிலை பெற்றுள்ளவன்.

கூலிக்காரன், இதற்கு ஒரு படி மட்டம் - கிளர்ச்சிக்கு வழி வசதி கிடையாது - ஆனால், இவனையும் வேலை செய்தாக வேண்டும் என்று கட்டாயப்படுத்த முடியாது. தேவையானால் கூலிக்காரனை உடைமைக்காரன் ஏதோ வேலை செய்யச் சொல்வான் - இஷ்டமிருந்தால் கூலியாள் வேலை செய்வான் தொடர்பு அவ்வளவுதான்.
அடிமைநிலை அதுவல்ல - அவன் வேலை செய்தே ஆக வேண்டும் - ஏன் என்று கேட்க முடியாது - எவ்வளவு அளவு வேலை என்று கேட்கமுடியாது - என்ன பணம் தருகிறாய் என்று கேட்கக் கூடாது - அவனை எஜமானன் அடிப்பான், சட்டம் குறுக்கிடாது - அவனைப் பட்டினி போட்டுச் சாகடிப்பான், சகஜம் என்று சர்க்கார் சும்மா இருந்துவிடும் - உண்மையில் அவன் கால்களில் சங்கிலியும் உண்டு.

இத்தகைய அடிமைகள், கேவலம் வயிற்றுச் சோற்றுக்காக, மாடென உழைக்க வயல்கள் செழிக்க, அதன் பயனை உறிஞ்சிடும் ரோம் நாட்டுப் பண்ணை முதலாளி கொழுத்து வந்தான்.

இந்த அடிமைகளுக்கு அதிருப்தி, நெடுங்காலமாக - ஆனால், வெளிக்குக் காட்டும் வழிவகை கிடையாது. இவர்கள் எதுவும் எதிர்த்துச் செய்ய முடியாதவர்கள் என்ற எண்ணம் வலுப்பட்டுவிட்டது முதலாளிக்கு! எனவே, காடுகளிலே சென்று தம் கால்நடைகளை மேய்த்துக் கொண்டு வருவதற்காக இந்த “அடிமைகளை” அனுப்பும்போது கையில் ஆயுதம்கூடக் கொடுத்தனுப்புவர் - துஷ்ட மிருகங்களைக் கொல்வதற்கு.

குமுறும் மனம்! கையிலே, வெடிமருந்து ஆயுதம்!!

இந்த நிலையிலும் அவர்கள் எதிர்ப்புச் செய்யவில்லை.

ஜூலியஸ் சீசர் எனும் மாவீரன் காலத்துக்குக் கொஞ்சம் முந்தைய காலம். ரோம் நாட்டு ரணகளச் சூரர்களாக, மாரயஸ், சல்லா என்பவர்கள் விளங்கிப் பல நாடுகளிலே ஜெயக்கொடி நாட்டிய காலம். அவர்களில், சல்லாவுக்கு நண்பன் ஒருவன் கிராஷஸ் என்பவன் ரோம் நாட்டு முதல் கோடீஸ்வரன் இந்த கிராஷ் - இன்றைய ராக்பெல்லர் - மார்கன் - பிர்லா போல வியாபாரத்தால் பொருள் திரட்டி ரோம் நாட்டிலே ஏராளமான ஜமீன்களை வாங்கிக் கோடீஸ்வரனானவன். இவன், சல்லாவுக்குச் செல்வாக்கு ஏற்படும்படி தன் பணத்தைக் கொண்டு வேலை செய்தான் - சல்லாவுக்கு அப்படியே அதிகாரம் கிடைத்தது. அதிலே கிராஷஸ், தன் பங்கு பெற்றான். அதாவது இவனும் அரசாங்கத்தினாலே ஒரு செல்வாக்குள்ள மனிதனானான்.

பாடுபட்டுப் பாதி உயிரினராகப் பல்லாயிரம் அடிமைகள் ஒரு புறம். பணத்தைக் காட்டி அரசியலில் செல்வாக்குத் தேடிக் கொண்ட கிராஷல்ஸ் ஒருபுறம்.

கொடுமைக்காளாகி குமுறிக் கொண்டிருந்த அடிமைகளுக்கு ஒரு தலைவன் கிடைத்தான் - அவன் சீமான்களின் பொழுதுபோக்குக்காக குத்து குஸ்தி முதலிய வித்தைகளைக் காட்டி வாழ்ந்து வந்தவன் - அவனும் அடிமைதான் - எப்படியோ எஜமானிடமிருந்து தப்பித்துக் கொண்டான் - அவன் தன் இனத்தவரை - அதாவது அடிமைகளை விடுதலைக்கான கிளர்ச்சி தொடக்கும்படி தூண்டினான். குமுறல், வெடிக்கத் தொடங்கிற்று.

மாரயஸ், சல்லா போன்ற வீரர்கள், வெளிநாடுகளை வென்று மாவீரர்கள் என்று புகழப்பட்டவர்களல்லவா - கிராஷசும் அத்தகைய கீர்த்தி பெற விரும்பினான் - அரசாங்கத்திலேயோ செல்வாக்கு அவனுக்கு - எனவே, அவன் படைத் தலைவனாக்கப்பட்டான். ஒரு பித்தியேகப்படை - நாற்பதாயிரம் வீரர்கள் கொண்டது - வேற்று நாட்டின் மீது பாய அல்ல - உணவு கேட்ட, உரிமை கேட்ட ஏழைகளின்மீது பாய ஒரு படை, அதற்கு இந்தக் கோடீஸ்வரன் தலைவன்.

பயங்கரமான சண்டை-படுகொலை-கிளர்ச்சி அழிக்கப்பட்டது - களத்திலே மாண்டவர் போக - சிக்கியவர்கள், சரண் புகுந்தவர்கள் - ஆகியவர்கள் ஆராயிரம் மக்கள் - அவர்களைத் தான் பாதைநெடுகத் தூக்குமரம் நாட்டித் தொங்கவிட்டான் - பாதகன் - பாதகனா! சே!! கோடீஸ்வரன்!!!

பயங்கரப்பாதை! அடிமைகள் விடுதலைபெற - தொழிலாளர்கள் உரிமைபெற – ஏழைகள் ஈடேற - இருக்கும் பாதை, சமான்யமான சங்கடம் நிறைந்ததன்று - பயங்கரமான விளைவுகள் கொண்ட பாதை - இன்று நேற்று அல்ல இந்த நிலைமை, ஏசு பிறப்பதற்கு நூறு ஆண்டுகளுக்கு முன்பு நேரிட்ட நிலையைக் கூறினோம். ஏசு வந்தார்; சுவிசேஷம் உரைத்தார் - ஆலயபூஜை மாறித் தொழுகை மண்டபம் எழும்பிற்று - ஆனால், இன்றும், உரிமைக்காகப் போரிடப் பாட்டாளி கிளம்பினால் பயங்கரப்பாதைதான் - அதிலே மாற்றம் இல்லை - தூக்குமேடைக்குப் பதிலாகச் சுழல் துப்பாக்கி வந்தது - மாறுதல் இந்த வகையில்தான்!

இப்படி, விடுதலைக்கு மார்க்கம், பயங்கரமானதாக இருக்கும் என்பதைத் தெரிந்தும் ஒரு மாவீரனின் சொல்லால் மன உரம் பெற்ற மக்கள் நடத்திய மாபெரும் புரட்சியே நவம்பர் புரட்சி. அந்தப் புரட்சி, வெற்றியையும் தந்தது - வெற்றி நிலைத்தும் விட்டது - வளர்ந்தும் வருகிறது - பயங்கரப் பாதையிலே போகவேண்டிய அவசியமுமின்றிப் பல்வேறு நாட்டுப் பாட்டாளி மக்கள் உரிமைபெறும் சூழ்நிலைகூட, அந்தப் புரட்சி உண்டாக்கி வைத்திருக்கிறது.

(திராவிடநாடு - 17.11.1946)