அறிஞர் அண்ணாவின் கட்டுரைகள்


பிஸ்மார்க் வருகிறார்!
``அடித் தொண்டையைப் பிடுங்கிக் கொண்டும், கனைத்தும், உரப்பியும், சுடுமூச்சு விடுத்தும், நெடுமூச்சு விடுத்தும், உதட்டை நெளித்தும், மூக்கை உதறியும் பேசப்படும் மொழி கள் போலன்றி, யாதொரு வருத்தமுமில்லாமல், இமிழென இசைக்கும் தேன் மொழி நம் தமிழ் மொழியாகும். கேட்கக் கேட்கத் தெவிட்டா விருந்தாய், செவியும் உள்ளமும் குளிர்விக்கும் தகையது. பொருள் தெரியாதோரையும் செந்தமிழ் தன் இன்னிசை கொண்டு சித்தம் திறை கொள்ளும். தெலுங்கு, கன்னடம், மலையாளம், துளுவம் முதலிய தென்னிந்திய மொழிகளுக்குத் தாய் மொழியாக உள்ளது. இத்தகைய அன்பு மொழியாம் அருந்தமிழ் மொழியின் இன்ப வளத்தின் அருமை பெருமையினைச் சாற்றிட, நினைத்திட, மதித்திட, அறிந்திடச் சார்கின்ற தோறும் வாயெல்லாம் தித்திக்கும், மனமெலாம் தித்திக்கும். மதியெலாம் தித்திக்கும், மன்னிய மெய்யறிவெலாம் தித்திக்கும், என்னில் இதனால் உண்டாகும் இன்பப் பெருக்கு இயம்பற் கரிய தென்பது மிகையேயன்றோ!''
* * *

தேன்மொழி- தென்னாட்டு மொழிகட் கெல்லாம் தாய் மொழி- அதன் அருமை பெருமையை, தொன்மை இனிமையை நினைத் தாலே மனமெலாம் தித்திக்கும், என்று கூறப்படு கிறது- அதன் இனிமையும் தொன்மையும் வளமும் இருக்கட்டும்- அதன் இன்றைய நிலை யையும், அதற்குள்ள எதிர்காலத்தையும் எண்ணினால், அச்சமும் துக்கமும் பிறக்க வில்லையா, என்று கேட்கிறோம். தமிழ் மொழி யின் சிறப்பினை விளக்கிடும், மேலே உள்ள குறிப்பு- இன்று- இந்தி - எதிர்ப்பாளர்கள் கூறுவதுமல்ல- தமிழ்ப் பேராசிரியர் ஜி.சுப்பிர மணியப் பிள்ளை என்பவர் தீட்டிய கட்டுரை யிலே, காணப்படுவதாகும். அவர் ஈரோடு வழி செல்பவரல்லர்- அரசாட்சியைக் கவிழ்க்கவோ, கைப்பற்றவோ, எண்ணிடும் அரசியல் சூழ்ச்சிக் காரரல்லர்- ஆசிரியர்- அவர் கூறுகிறார். தமிழ் மொழியின் சிறப்பினை- அவர் போன்றார் இதுபோல் கூறிடும்போது நமக்கு, தமிழின் எதிர் காலத்தைப் பற்றிய எண்ணம், எப்படி எழா மலிருக்கும்? தமிழுக்கு வந்து கொண்டிருக்கும் பேராபத்தைப் பற்றி எப்படி எண்ணாமலிருக்க முடியும்- எண்ணும்போது, எப்படி அச்சம் புகாதிருக்க முடியும்.
* * *

தமிழ் வளமுள்ள மொழி
இந்தி வளமற்ற மொழி
***

தமிழில் இலக்கியம் ஏராளம்
இந்தியில் இலக்கியம் இல்லை
* * *

தமிழ் தொன்மை வாய்ந்தது
இந்தி நேற்றுப் பிறந்தது

என்று, இந்தி ஆதரிப்பாளரே கூறுகின்றார்- கூறிவிட்டு- இந்தி படித்தாக வேண்டும் என்று பேசுகின்றனர்- காரணம் காட்டி!

இந்தி படித்தால்தான் மத்திய சர்க்காரிலே உத்யோகம் கிடைக்கும்.

இந்தி, இந்தியாவின் பொது மொழியாக, தேசிய மொழியாக, துரைத்தன மொழியாக, ஆகப் போகிறது. ஆகவே இந்தியைப் படித்தாக வேண்டும் என்று கூறுகின்றனர்.

இந்திக்கு, துரைத்தன மொழி என்ற நிலை கிடைத்துவிட்டால், பிறகு, வளமுள்ள, இனிமை யுள்ள தமிழ் பற்றி, தமிழாசிரியர்கள், எவ்வளவு கூறினாலும், ஏற்றம் எங்ஙனம் கிடைக்கும்?

அவன் அழகு- ஆற்றல்- அறிவு- எல்லாம் வாய்ந்தவன். அவன் அரசனாக வீற்றிருக்க வேண்டியவன், என்பதை எடுத்துக் காட்டுகின் றன- ஆன்றோர் பலரும் அதுபோன்றே கூறுகின்றனர். ஆனால் அவலட்சணம் படைத்த ஒரு அறிவிலி அரியாசனத்து அமர்த்தப் படுகிறான் என்றால், எப்படி இருக்கும் நிலைமை? அதுபோல், தமிழ் மொழியின் தொன்மையையும், இனிமையையும் அறிந்தோர் கூறக் கேட்டு, ஆமென்று கூறிவிட்டு, எனினும் இந்தியே பொது மொழியாக, துரைத்தன மொழியாகப் போகிறது என்றும் கூறுகிறார்களே, அவர்களின் போக்கை, என்னவென்பது!
* * *

தமிழின் இனிமையை- பெருமையை அறிந்த தமிழறிஞர் ``சென்னைக்கு வடக்கே தமிழ் தலையெடுக்க முடியவில்லை. தமிழன் யார், தமிழ் யாது என வடநாட்டார்க்குத் தெரியாது'' என்று கூறிவிட்டு ``வெளிநாட்டோர் அதை வணக்கம் செய்தல் வேண்டும்'' என்று கூறுகிறார்.
அவ்வளவு ஆற்றலுள்ள செயலைச் செய்யாதிருக்கும் நிலையையும் மறந்துவிடு வோம்- பொறுத்துக் கொள்வோம்- கங்கைக் கரையிலும் இமயச் சாரலிலும் தமிழ் தவழச் செய்ய வேண்டும். என்று சூளுரைத்துச் செயலாற்றுங்கள் என்றுகூடக் கூறவில்லை- இந்நாளில் செங்குட்டுவர்கள் இல்லை என்பதால்- ஆனால், காலத்தின் தாக்குதலாலும் கபடரின் செயலாலும் சுருங்கிய நிலையே பெற்றுள்ள தமிழுக்கு, இனியேனும் ஆபத்து நேரிடாதபடி பாதுகாக்கும் காரியத்தையாவது செய்ய வேண்டாமா, என்றுதான் கேட்கிறோம்.
* * *

ஏன் தம்பீ! பதறுகிறாய்? என்ன பயம் உனக்கு? தமிழுக்கு என்ன ஆபத்து? என்று கேட்கும் நல்லவர்கள் நாட்டிலே சிலர் உள்ளனர். எந்த மொழியும், ஏற்றம் பெற்று வாழ வேண்டு மானால், மக்களின் மதிப்பைப் பெற்று வாழ வேண்டுமானால், அம்மொழி, அரசாங்க, அலுவல் மொழியாகவும் அமைதல் வேண்டும் என்பது அரிச்சுவடி! தமிழ் இவ்வளவு வளம் பெற்றதாகத் திகழ்வதற்குக் காரணம், முன்னாளில், முடியுடை மூவேந்தர்களும் தமிழையே துரைத்தனமொழி யாகக் கொண்டிருந்தனர்- அதனால், புலவர் கூடிடும் மன்றங்களிலும், பூவையர் ஆடிடும் பூம் பொழிலிலும், போர்க்களத்திலும், உழவர் மனை யிலும், தமிழே முதலிடம் பெற்றிருந்தது. யவனத் துக்கும், பிறநாட்டுக்கும் தமிழர்கள் வாணிபம் செய்யச் சென்றனராமே கலங்களில்- அந்தக் கலங்களிலே, தமிழ் பேசியன்றோ சென்றனர்! அந்தத் தமிழுக்கு, ஆட்சியாளரின் மொழி என்ற உரிமை நிலை, இருந்ததால்தான், உயர் நிலை கிடைத்தது. ஊராள்வோருக்கு உரிய மொழி வேறு, மக்களுக்குள்ள மொழி வேறு, என்ற நிலை இருப்பின் எம்மொழி சிறக்கும்- எம்மொழி உயரும்! இன்று, இந்தியைப் படித்தாக வேண்டும் என்று கூறுவோர், அது, நாளை துரைத்தன மொழியாகப் போகிறது. அது கற்றால்தான் ஆட்சிப் பணிமனையில் இடம் கிடைக்கும் என்று கூசாது கூறுகின்றனரே,அந்நாள் வரும்போது, மக்கள் எத்தனைவிரும்பிக் கற்பர், எம்மொழி யினை நாடுவர், தேடுவர், இனிமையும் தொன்மை யும் வாய்ந்ததுதான் எம் தமிழ், எனினும், அது போதாதாமே அலுவலகம் புக, எனவே அலுவலகம் புக நுழைவுச் சீட்டுப் பெற்று இந்தி படிப்போம், என்றுதானே எண்ணுவர்- எண்ணிட எண்ணிட இயற்கையாக ஏற்றம், எந்த மொழிக்கு ஏற்படும் என்பதை எம்மையும் எமது கிளர்ச்சி யையும் மறந்தேனும், நண்பர்கள் எண்ணிப் பார்த்திட வேண்டுகிறோம். சொந்த மொழிகற்றுப் பயனில்லை, வந்தமொழி படித்தால்தான் வாழ முடியும் என்று ஒரு ஏற்பாடு செய்துவிட்டால், பிறகு, வந்த மொழியைத்தானே, சொந்த மொழி யாக்கிக் கொள்வர்! நிலையை விளக்கிடப் பலப்பல கூறவேண்டுவதுமில்லை- ஆங்கிலத் துக்கு அரசாங்க மொழி எனும் நிலையை ஆங்கிலர் இங்கு ஏற்படுத்தியதன் பலனை, நாம் நமது தலைமுறையில் தெரிந்து கொண்டிருக் கிறோமே! சிலப்பதிகாரம் தெரியும், சிந்தாமணி தெரியும், குறள் தெரியும், தொல்காப்பியம் தெரியும் என்று கூறினால், மடத்திலே இடமுண்டு என்றனரேயன்றி, அரசாங்க அலுவலகத்தில் இடம் கிடைக்கவில்லையே! இரண்டு `கோணை' எழுத்துத் தெரிந்தால்தான் பிழைக்கலாம்- என்ற எண்ணம் குக்கிராமத்திலும் பரவி விட்டதே! ஆங்கிலம் படித்திடத்தான் துடித்தனரேயன்றி, தமிழ் பயில எவர் முன் வந்தனர்- பயின்ற சிலருக்கும் மதிப்பளிக்கவாவது முனைந்தனரா?

ஆங்கிலம் ஆட்சி மன்ற மொழி என்ற நிலை பிறந்ததும், தமிழ், தாழ்நிலை அடைந்ததை எவர் மறுக்க முடியும்! கல்வி நிலையங்களிலேயே கண்டோமே, `தமிழ் ஐயா'வுக்கும், இங்கிலீஷ் வாத்தியாருக்கும், எல்லா வகையாலும் வேற்று மைகள் கிளம்பியதை! தமிழ் ஆசிரியருக்குச் சம்பளம் என்ன? ஆங்கில ஆசிரியருக்கு என்ன?

தமிழ் மொழியில் பேசினால், மதிப்பில்லை, என்று ஆங்கிலம் பேசுவதையன்றோ அறிவு டைமை என்று கொண்டனர்.

கிராமத்து மக்கள் வாய் பிளந்து கேட்டனரே நம் பிள்ளைகள், பட்டணம் சென்று கற்றுக் கொண்டு வந்த ஆங்கிலச் சொற்களை!

ஆங்கிலத்தின் இடத்துக்கு இந்தி, என்று தெளிவாகத் தெரிவிக்கிறார்கள்- அங்ஙனமாயின் தமிழின் நிலை என்ன? இந்திக்கு ஆங்கிலப் பதவி, தமிழுக்கு என்ன நிலை! இதைத்தான் எதிர்கால ஆபத்து என்கிறோம். இதனை எண்ணியே, இன்றே இந்தியை எதிர்த்தாக வேண்டும் என்று கூறுகிறோம்.
* * *
இந்தி இரண்டெழுத்து படித்துக் கொண்டால் போதும். அந்த மொழி இந்தியாவில் மிகப் பெரும்பாலோர் பேசும் மொழியாக இருக்கிறது. வடநாடு போகவா, இந்தி மொழி தேவை என்று இப்படி எல்லாம் பேசிப் பேசி, இப்போது, அழுத்தந் திருத்தமாக, தாய் மொழியைப் புறக்கடைக்குத் துரத்துகிறோம் என்ற எண்ணமுமின்றிக் கண்டிப்புடன், கூறு கிறார்கள். இந்தி, துரைத்தன மொழியாகப் போகிறது என்று! இதைக் கேட்டு, சீற்றமோ சோகமோ கொள்ளாதவர்களிடம் சிலப்பதிகாரச் செந்தேனைக் கொட்டி என்ன பயன், குறளைக் கூறி என்ன பலன்? எங்கே இருக்கும், குறளும், சிலப்பதிகாரமும்? யாரிடம் இருக்கும்?
* * *

இந்தியால் தமிழுக்கு ஆபத்து இல்லை, என்று கூறுவது எவ்வளவு நெஞ்சறிந்த பொய் என்பதை எண்ணிப் பார்க்க வேண்டுகிறோம். இந்திக்கு ஆங்கிலப் பதவி கிடைத்துவிட்டால், தமிழ் தாழ்வுறாது இருக்க முடியுமா? இந்தியை அரியாசனத்தில் அமர்த்திவிட்டு, தமிழின் அருமை பெருமையைப் பேசிப் பயன் என்ன?

இந்தி படித்தால் நல்லது- இந்தி படித்தால் தான் நல்லது- இந்தி படித்தாக வேண்டும்- இந்தியில்லாமல் என்ன செய்வது- இந்திதான் படிக்க வேண்டும் என்று. படிப்படியாக ஏறிக் கொண்டுவரும், பேச்சினூடே வளரும் ஆபத்தை அறிய வேண்டுகிறோம். இந்தியை நுழைத்து விட தந்திரக்காரர்கள், சாகசமான முறையைக் கையாளும் இதேபோது சற்றுக் கண்டிப்பானவர் கள்- நேர்மையாக நெஞ்சில் உள்ளதைச் சொல்லு பவர்கள் - வெளிப்படையாகவே இப்போதே பேசுகிறார்கள், மாகாண மொழிப் பற்று- ஒவ் வொரு மாகாணத்துக்கும் ஒவ்வொரு மொழியும், அந்தந்த மாகாண மக்கள் அந்தந்த மொழியினி டம் பற்றும் கொண்டிருப்பது, இந்திய ஐக்யத்துக்கு ஆபத்து, அந்தப் பற்றுக் கூடாது, இப்போதே, அதனை ஒழித்தாக வேண்டும் என்று கூறுகிறார் கள். தமிழ்தான் நமது மொழி- சொந்த மொழி- இந்தி, வந்தமொழி, நமது வசதிக்காகப் படிக்க வேண்டிய மொழி என்று பேசினர் முதலில! இப்போது, துணிவுடன், சொந்த மொழி, தாய் மொழி என்று கூறுவதும் கொண்டாடுவதும், கூடாது என்று கூறிவிட்டனர்.

இந்தியை ஆதரிக்கும் சர்தார்கள் இன்றும் கூறுகின்றனர். தமிழ் சிறந்து விளங்கப் போகிறது. அதற்குத் தாழ்நிலை வராது. ஆபத்து நேரிடாது, இந்தி தமிழை அழிக்காது என்று- ஆனால் முன்ஷிகள் கூறுகின்றனர். தமிழ் என்று தமிழனும், வங்காளம் என்று வங்காளியும், மராட்டி என்று மராட்டியனும் இப்படி ஒவ்வொரு மாகாணத் தாரும் ஒவ்வொரு தாய்மொழியைப் போற்றிப் புகழ்ந்து கொண்டும், பற்றுக் காட்டிக் கொண்டும் இருந்தால், இந்தியா என்ற ஒருமை உணர்ச்சியும் கட்டுப்பாடும் இராது. ஆகவே மாகாண மொழிப் பற்றினை விட்டுவிட வேண்டும், இந்தியை ஏற்றுக் கொள்ள வேண்டும். ஒரு நாடு ஒரு மொழி என்றாக வேண்டும் என்று பேசுகிறார்கள்- பேசுகிறார்கள் என்று மட்டும் குறிப்பிடுவது போதாது- ஏசுகிறார்கள் என்றுரைக்க வேண்டும்- நிலைமை அவ்வளவு வளர்ந்திருக்கிறது.

முன்ஷி, ``பொது உடைமைய எப்படி ஒழித்தாக வேண்டுமோ, அதுபோல, மொழி மோகத்தையும் ஒழித்தாக வேண்டும் என்று கூறுகிறார். லிங்கிசம் மொழி மோகம் கூடாது என்று பேசுகிறார். முன்ஷி, மூல தேவதைகளில் ஒருவர் ஆட்சிப் பீடத்தில் முக்கியமானவர். அவர் வேண்டுமானால், சற்று அவசரப்பட்டுக் கூறிவிட்டார் என்று கூறலாமே தவிர, அவர் கூறியதுதான் எதிர்காலத்தில் போக்காக மாற்ற வடநாட்டுத் தலைவர்கள் தீட்டி இருக்கிறார்கள் என்பதை மறுக்க முடியாது.

இந்தி, இதமாக, முதலில்! இந்தி, இலாப நோக்கத்துடன் பிறகு! இந்தி, இறுமாப்புடன் இறுதியில்!

தமிழ் இந்தி- முதலில்! இந்தி- தமிழ்! பிறகு! இந்தி மட்டும்! இறுதியில்! இதுதான், மேலிடத்தின் வேலைத்திட்டம்.

இங்கு, இந்தி ஆதரிப்புப் பிரசாரம் புரிபவர் கள் இந்தச் சூதினை உணர்ந்திருக்கிறார்களோ இல்லையோ, நாமறிவோம், காங்கிரஸ்காரர் களிலேயே பலர், வடநாடு சென்று திரும்புவார் கள், அங்கு இந்தி மொழியை வடநாட்டு ஏகாதி பத்தியக் கருவியாக்கி, மற்ற மொழிகளை அழித்தொழிக்கும் திட்டம், பலருக்கு இருப் பதைத் தெரிந்து திகைக்கிறார்கள்.

கொண்டா வெங்கடப்பய்யா கதறுகிறார்!

சத்திய நாராயணா என்பவர் சோகிக்கிறார்.

``இந்தி மொழி ஏகாதிபத்தியம் கூடாது- இது உமது நோக்கமானால், நான் சகிக்க முடியாது என்று தோழர் டி.டி.கிருஷ்ணமாச்சாரியார் முழக்கமிட்டார், அரசியல் நிர்ணய சபையில்.

வேண்டுகோள், எச்சரிக்கை எதனையும் பொருட்படுத்தவில்லை, இந்திதான் அரசாங்க மொழி என்று பிடிவாதம் பேசுவோர், வெற்றி பெற்று விட்டனர்- எதிர்த்தோர் எள்ளி நகை யாடப்பட்டனர். எழுந்து போமய்யா வெளியே! இந்தி தெரியாத உமக்கு இங்கு என்ன வேலை- என்று கொஞ்சம் துடுக்குக் குணம் உடைய வடநாட்டார், அரசியல் நிர்ணய சபையில், தென்னாட்டுப் பிரதிநிதிகளைப் பார்த்துக் கேலியே செய்தார். இப்போது முன்ஷி, ஒரு நாடு ஒரு மொழி என்று வெளிப்படையாகவே பேசுகிறார். இவ்வளவுக்குப் பிறகும், இந்தியை ஆதரிக்கிறார்கள்- இளித்தவாயர்களா அவர்கள்? அல்ல, அல்ல வடநாட்டு ஏகாதிபத்தியத்தை வலிய வலிய வரவழைக்கும், ``பரந்த உள்ளம் படைத்தோர்.''

அரசியல் திட்டமோ, மாகாணங்களை ஆட்டிப் படைக்கும் அதிகாரத்தை மத்திய சர்க்கார் பெறுகிற விதமாகத் தீட்டப்பட்டிருக்கிறது.

மத்திய சர்க்காரிலே உத்யோகம் பெறு வதற்கோ, இந்தி மொழி தேவை என்று கூறி விட்டனர்.
மத்திய சர்க்காரின் காரியங்களோ, இந்தி மொழி மூலம் நடைபெறுமாம்.

இந்திக்கு இந்த இடம் கொடுத்தான பிறகு, தமிழ் எதைக் கொண்டு வாழும், என்று இந்தி ஆதரிப்பாளர்கள் கூறுகிறார்கள்!

மாகாண மொழிகளை `மட்டரகம்' ஆக்கினது மட்டும் போதாது. உருக்குலைத்தே தீர வேண்டும் என்ற `ஆசை' திட்டமாக மாறிக் கொண்டு வருகிறது.

மொழிக்கு உள்ள வரிவடிவம், எழுத்து, அதனையே கூட அழித்து விடவும் திட்டமிட்டி ருக்கிறார்கள்.

இந்தியா பூராவுக்கும், எல்லா மொழிகளுக் கும், ஒரே லிபி- எழுத்து- இருந்தால்தான் நல்லது, வசதி என்று பிரச்சாரம் நடைபெறுகிறது. பலமாக. இந்தியைப் படி, மத்ய சர்க்காரில் இடம் பெற- உன் தாய் மொழியையும் படிக்கத்தான் வேண்டும் என்று பிடிவாதம் செய்தால் (முன்ஷியின் பேச்சைக் கேட்க மறுத்து) படிக்கும் தாய் மொழியை தமிழை, தமிழ் எழுத்தினாலே படிப்பதை விட, தேவநாகரி- லிபி கொண்டு படித்துக்கொள், தமிழுக்கு மட்டுமல்ல! வங்கம், துளுவம், மலையாளம், மராட்டியம், எம்மொழி யாக இருப்பினும், ஒரே லிபி போதும்- அது தேவ நாகரியாக இருக்கட்டும்!- என்று கூறுகின்றனர்.

இந்தப் பேச்சு எந்த நிலையிலும் அளவிலும் இருக்கிறது என்று எண்ணுகிறீர்கள்?

திராவிடர் கழகம் என்றாலே தீப்பொறி பறக்கும் கண்ணினராக உள்ளவர். வடமொழி மீது விnhதம் கொள்வது கூடாது என்ற தாராள நோக்க முடையவர், பெரிய இடத்துப் பிள்ளை என்ற கவசத்தோடு காட்சி தரும் காங்கிரஸ் இளைஞர். அமைச்சர் பக்தவத்சலத்தின் நெருங்கிய உறவினர் அழகேசன் எனும் பெயரினர். அவர் ஆத்திரத்துடன், அரசியல் நிர்ணய சபையிலே, தேவநாகரி லிபியைத் திணித்து மாகாண மொழிகளின் வடிவத்தை அழித்துவிடும், ஆதிக்க வெறி கூடாது- இதனால், ஒற்றுமை வளராது, வேற்றுமையும் விரோதமும் வளரும் என்று கண்டித்துப் பேச வேண்டிய அளவுக்கு நிலைமை `மோசமாகி' இருக்கிறது.

நண்பர் வரலாறு படித்தவர்- எவ்வளவு தான் `வாத்சல்யம்' வேறிடத்தில் இருந்த போதிலும், நாட்டுப் பற்று இராமலிருக்க முடியாது அவருக்கு - மொழிப் பற்றை ஒழித்து நாட்டுப் பற்றை அழிக்கும் ஆதிக்கத் தந்திரம் பல்வேறு இடங்களிலே நடைபெற்றிருப்பதை அவர் அறியாமலிருக்க முடியாது- அறிந்தவர்களின் முன்னிலையிலேதான் அவர் அது பற்றிப் பேசியுமிருக்கிறார். தமது கண்டனத்தின் போது அவர் பயன்படுத்திய ஒரு சொல்லின், பொருள், கேட்டோருக்கு உறுத்தியே இருக்க வேண்டும்- சரித்திரத்திலே, இழிவாகவும், ஆபத்தானதாகவும் கூறப்படும். சொல்லை, வீசினார், அவர்கள் முன்னிலையில் ஊhயரஎinளைஅ என்பது அச்சொல்! ஒரு அக்ரம சரித்திர சம்பவத்தின் சுருக்கம், அந்தச் சொல்!

ஜெர்மன் நாட்டிலே, கெய்சர் ஆட்சி செய்த போது ஜெர்மனியை அடுத்துள்ள நாடுகளை அடிமைப்படுத்தி, ஐரோப்பிய சாம்ராஜ்யத்தை அமைத்து, பிறகு, உலகை ஆளவேண்டும் என்று திட்டம் இருந்தது. ஜெர்மன் வெறியர்களுக்கு அடுத்த நாடுகளைப் பிடிக்கப் படைகளை ஏவுவது மட்டுமல்ல, அவர்கள் கையாண்ட முறை- கலாச்சாரப் படை எடுப்பு நடத்தினர்- அந்த நாட்டு மொழி, மக்களின் வாழ்க்கை வழி, ஆகியவற்றை அழித்தனர்- எங்ஙனம்? ஜெர்மன் மொழியே சிறந்தது. ஜெர்மன் வாழ்க்கை வழியே மேலானது. அதற்கு ஈடும் எதிர்ப்பும் இல்லை என்று வெறி கிளப்பி! நாடுகளிலே சிறந்தது ஜெர்மன் நாடு! மொழிகளிலே சிறந்தது, ஜெர்மன் மொழி! ஆற்றலிலே சிறந்தவர்கள், ஜெர்மானியர்! அரசர்களிலே சிறந்தவர் ஜெர்மன் கெய்சர்! இப்படி வெறிப் பிரச்சாரம் நடத்தப்பட்டது. பல நாடுகளிலே சென்று தங்கியிருந்த ஜெர்மனி யருக்கு இந்த வெறி ஊட்டப்பட்டது! எதிர்ப்பு அழிக்கப்பட்டது! ஏகாதிபத்தியம் அழிக்கப் பட்டது! ஆதிக்கம், சகல துறைகளிலும் புகுத்தப் பட்டது! வளர்ந்தது வளர்ந்தது, அழிவு நேரிடும் வரையில் வளர்ந்தது!

இந்த வெறிச் செயல்களைத் திட்டமிட்டுத் திறம்பட நடத்தியவர் பிஸ்மார்க். அவருடைய போக்கைத்தான், அன்பர் அழகேசன் குறிப்பிட்ட பெயரால், சாவினிசம் என்று அழைத்தனர்! அது, இங்கே குடிபுகுந்திருப்பது கண்டு, மனம் குமுறி, உடையை, கட்சியை, இருக்கும் இடத்தை எல்லாம் மறந்து இந்த வெறிச் செயல்கூடாது என்று கூறினார்! இளைஞர்- தமிழ்- இயல்பு அடியோடு எப்படிப் போய்விடும்!

தேவநாகரி லிபியை, நாடெங்கும் புகுத்தி, தனித்தனி மொழிகளுக்கு உள்ள `உருவத்தை' குலைத்துவிடத் திட்டம் இருப்பதும், அது பற்றிப் பேசுவதும், கண்டும் கேட்டும், அவர் உள்ளம் துடித்திருக்க வேண்டும்- ஏன் ஆதிக்க வெறி கொண்டு இவர்கள் அலறுகிறார்கள் என்று எண்ணினார். அவர் மனக்கண் முன், பிஸ்மார்க் கின் கல்லறை தெரிந்தது- துணிந்து சொல்லியே விட்டார், பிஸ்மார்க்குக்கு இருந்த பித்தம் உங் களுக்கும் இருக்கிறது- இதை நான் கண்டிக்கிறேன் என்று!

அவர்கள் அவர் உரையிலே உள்ள எச்சரிக்கையை, எந்த அளவுக்கு மதித்தார்களோ நாமறியோம். எடுத்துரைத்தாரே, அந்த வகை யிலே நாம் மகிழ்கிறோம்- அவர் படித்த வரலாறு இதைவிட வேறு அருமையான காரியத்துக்குப் பயன்பட்டிருக்க முடியாது! ச்சாவினிசம்- பிஸ் மார்க்கின் வெறித்திட்டம்! ஆம்- அன்பர் அழகேசன் சொன்னது போல, திட்டம் அதுதான்- தெளிவாகத் தெரிகிறது- அதைவிடத் தெளிவாக, அந்தத் திட்டத்தின் கர்த்தாவின் கல்லறை மட்டுமல்ல- அந்த வம்சத்தவன் என்று கொக்கரித்த ஹிட்லரின் கோட்டை தூளானதும் தெரிகிறது- எனினும் சர்தார்கள் இருக்கிறார்கள் நமக்குச் சேவை செய்ய, என்ற எண்ணம் தைரியத்தைத் தருகிறது!

ச்சாவினிசம், பிஸ்மார்க் கையாண்ட வெறித் திட்டம். ஆனால், அந்த வெறி, முதலிலே மிக மிகக் களங்கமற்ற மன எழுச்சி அளவாகவே இருந்தது. அச்சொல்லுக்கு ஒரு சரிதம் இருக்கிறது.

சாவின் என்றோர் வீரன் இருந்தான்- நெப்போலியன் காலத்தில். அச்சமயம் எங்குப் பார்த்தாலும் நெப்போலியன் வெற்றி முரசு கேட்ட படி இருந்தது- நெப்போலியன் நெல்சனைச் சந்திக்காத காலம்- தோல்வியை அறியாத காலம். அப்போது, நெப்போலியனைக் கண்கண்ட தெய்வமாகக் கருதி, கொண்டாடி வந்தவன், இந்தச் சாவின்! கண்மூடிப் பக்தன்! நெப்போலியனைப் போல வீரன், தீரன், கெம்பீரன், உதாரன், குணா ளன், உலகிலே யாரும் கிடையாது! நெப்போலி யனின் சொல்லே, சட்டம்! அவர் குழியில் விழச் சொன்னால் கண்ணை மூடிக் கொண்டு விழுவேன்- என்று எண்ணியவன், இந்த ஏமாளி சாவின் இந்தக் குருட்டுப் போக்குக் கொண்ட சாவின் போல, மக்களை ஆக்கி, ஆதிக்கத்தைப் புகுத்துவத சாவினிசம் என்னும் பிஸ்மார்க் திட்டம்.

இப்போது இங்குச் சாவின்கள் உள்ளனர் என்ற தைரியத்தால்தான் சாவினிசம், நடத்தலாம் என்ற திட்டத்தைத் தீட்டுகிறார்கள். பிஸ்மார்க் பிறந்திருக்கிறார்- ஆதிக்கம், அரசியல், பொருளி யல், என்பதோடு மட்டுமல்ல, மொழியில் புகுந்து, மொழிக்கு உள்ள எழுத்துக்கும் வருகிறது! இதைத்தான் நண்பர் அழகேசன் கண்டித்தார், ஆற்றோரத்தில் அல்ல, அனுமார் கோயில் மைதானத்தில் அல்ல, அரசியல் நிர்ணய சபையில்!

அரசியல் நிர்ணய சபையினர், மாகாண மொழிகளைப் பாதுகாத்துக் கொள்ள உரிமையை வழங்குவதாக ஒரு தீர்மானம் நிறைவேற்றினர்.

தேவநாகரி லிபியைத் திணிக்க இது சமயமல்ல, இன்னும் கொஞ்சம் மயக்கம், உறக்கம் வரட்டும். பிறகு செய்துவிடுவோம் என்ற தைரியத்தில், இப்போது மிக மிக நியாயமாகவும், பெருந்தன்மையுடனும் நடந்து கொள்வது போல, பாவனை காட்டி, மாகாண மொழிகளைப் பாதுகாத்துக் கொள்ளும் உரிமையை வழங்குவதாகக் கூறுகின்றனர்.

இதிலே உள்ள உட்பொருளை எண்ணி னாலே வேதனை கிளம்பும்! மாகாண மொழிகள் அழிந்துவிடும் என்ற அச்சம் எங்கும் கிளம்பி விட்டதும், அழிக்கும் பிரச்சாரத் திட்டமும், அதைத் தொடர்ந்து அழிப்பு அமலும் கிளம்பும் என்ற கிலி எங்கும் பரவி வருவதும், தெரிந் திருப்பதால் தானே, மாகாண மொழி பாதுகாத்துக் கொள்ள உரிமை வழங்க வேண்டிய நிலை பிறந்திருக்கும்.

இந்திக்குத்தான் துரைத்தன மொழி என்ற நிலை, அதைத்தான் படிக்க வேண்டும்- வேண்டு மானால்- முடிந்தால்- உங்கள் மாகாண மொழி யைப் பாதுகாத்துக் கொள்ளுங்கள்- உங்களை யார் தடுக்கிறார்கள்? என்று கூறுகிறார்கள். பிஸ்மார்க் வழிவந்தோர்! கேலி அல்லவா அது! ஏழையிடம் சீமான் பேசும் பேச்சுப் போன்றதல் லவா அது? ``உன் பொருள் எனக்கேனடா முட்டாளே! கடனை, வட்டியுடன் திருப்பிக் கொடுத்துவிட்டு, உன் வீட்டைத் தாராளமாக நீயே எடுத்துக்கொள்- எனக்கேன் உன் வீடு- என்று பேசுவது போலல்லவா இருக்கிறது, இந்தியை அரச பீடத்தில் அமர்த்திவிட்டு, இந்தி படித்தாக வேண்டும் என்று கட்டளை பிறப்பித்து விட்டு உங்கள் மொழியைப் பாதுகாத்துக் கொள்ளுங் கள்- உங்களுக்கு அந்த உரிமை உண்டு என்று கூறுவது!
மாகாண மொழி, எப்படிப் பாது காக்கப்படும்?

பழங்காலத்தில் இருந்த தோதவர்கள், இன்று நீலகிரியில் பாதுகாக்கப்படுகிறார்களல் லவா? அதுபோல!

சர்க்கார், பணம் கூடச் செலவிடுகிறார்கள், பழங்கால மனிதர்கள் பூண்டு அழிந்துபோகா திருக்க, பழங்கால மிருகங்களின் எலும்புக் கூடுகள் தகர்ந்து போகாதிருக்க, பழங்காலக் கோட்டைகள் அடியோடு மண் மேடு ஆகாதிருக்க- அதுபோல, தமிழறிஞர் கூறினாரே, தொன்மைமொழி, எமது இனிமைத் தமிழ் மொழி என்று! அந்த மொழியும் பாதுகாக்கப்படும்- பழங்காலச் சிறப்பின் இக்கால நிலை இதுவென்று எடுத்துக்காட்ட! நாடாண்ட மன்னனை, சதியால் வீழ்த்தி முடிதரித்துக் கொண்ட தூர்த்தன், மன்ன னுக்கு அரண்மனையில் எங்கும் உலவும் உரிமை தருகிறேன் என்று கூறி, தன் `அடைப்பம்' தாங்கும் ஆளாக்கிக் கொண்ட கதையைப் படித்திருக்கிறோம். இதோ கண்ணியவான்கள் அதே முறையில், பேசக் கேட்கிறோம்.

ஏன் எதிர்க்கிறார்கள் இந்தியை- என்று உண்மையாகவே விளக்கம் பெறாததால், சந்தேகிக்கும் நண்பர்கள், எவ்வளவு கேடான, சூழ்ச்சியான மொழி ஏகாதிபத்தியம், நம்மை நசுக்கக் கிளம்பி இருக்கிறது என்பதை உணர்ந் தால், மொழிப் போர் நடாத்தும் உரிமையை, நம்மிடமிருந்து பறித்துக்கொண்டு தாங்களே நடத்த முன்வருவர்!

பிஸ்மார்க் வருகிறார்! சாமான்யமான ஆபத்தல்ல! கூறுபவரும் நாமல்ல- காங்கிரஸ் காரரரே கூறுகிறார்.

தமிழ், புறக்கடைக்குத் துரத்தப்படுகிறது- இந்தி அரசபீடம் ஏறுகிறது!

தாய் மொழி, தாய்மொழி என்று பேசி, தனி உணர்ச்சியை வளர்க்க இடந்தராதீர், இடித்துத் தரை மட்டமாக்குங்கள், மொழி அன்பை என்று முழக்கமிடுகிறார் முன்ஷி!

தனித்தனி மொழிகள் இருப்பது மட்டுமல்ல, தனித்தனி வரி வடிவம், எழுத்து இருப்பதே தவறு- தேவநாகரி லிபியிலேயே எவரும், எதையும், எங்கும், எழுதட்டும் என்று கூறுகிறார்கள், ஏகாதிபத்தியப் போக்கினர்.

இந்த `ஆபத்தை' எதிர்த்து நடத்தப்படு வதே அறப்போர்!

ஆனால் இதற்கு அழகேசர்கள் எதிர்ப்பு! வேதனை தரும் விசித்திரம் - ஆனால் உண்மை!

(திராவிட நாடு - 19.12.48)