அறிஞர் அண்ணாவின் கட்டுரைகள்


போதை தெளியட்டும்!

அடக்குமுறைகள் அளவை மீறுகின்றன! வரம்பைத் தாண்டுகின்றன.

அவைகளை ஏவிவிடும் ஆட்சியாளர்கள் மமதை கொண்ட எதேச்சாரிகளின் பரம்பரையினரல்ல மக்கள் மத்தியிலே உலவியவர்கள்!

மக்களின் உரிமைகளைப் புரிந்தவர்கள்! அவர்களின் உள்ளத்தின் உணர்ச்சி வெள்ளத்தைத் தெரிந்தவர்கள்!

அவர்களும், மக்கள் சர்க்காரென்றே பேசுகின்றனர்! ஆனால் மக்கள் உரிமைகளை மதியாது, அடிப்படை உரிமைகளையே தூசுகளென ஏசுகின்றனர்!

அவர்கள், இந்தப் பீடமேறுமுன் பேச்சுகளை மறந்துவிட்டனர்! இன்று நம்மைத் தூற்றித் திரிவதே தொழிலாகக் கொண்டுள்ளனர்!

மக்கள் உரிமை பேசி, மன்றம் அமைத்த அவர்கள், மண்டைவீங்கி, மமதையாளர் போல ஆடத் தொடங்கினால், ஆபத்து அணைக்கும், அழிவுதழுவும் அவர்களை!

இதனை அவர்கள் அறியாது ஆர்ப்பாட்டம் நடத்துகிறார்கள் தோள்தட்டி ஆர்ப்பரிக்கிறார்கள்!

ஆளவந்துவிட்டதாலேயே, அடக்குமுறை ஆயுதங்களை ஏவிவிடு வதே வேலையெனத் திரிகின்றனர்!

பேச்சு சுதந்திரத்தைப் பறித்திட சட்டமிடுகின்றனர்! தடை விதிக்கின்றனர்!

ஆனால், இதே பேச்சு சுதந்திரத்தைப் பற்றி அவர்கள், ஆளும் ஆளாகாதவர்களாக இருந்த நேரத்தில் என்னென்ன கூறியிருக்கிறார்கள்!

அந்தப் பழைய ஏட்டைப் புரட்டிப் பார்த்தால் புதிய பாடம் கிடைக்கும் ஆனால் அவர்கள் அதைச் செய்யவில்லை.

நாம் கூட்டம் போட்டால் 144 தடையுத்திரவுகளை தயங்காது, தளராது வீசுகிறார்கள்!

கூட்டம் நடத்துவோரை எச்சரிக்கிறார்கள்! பேசப் போவோரை மிரட்டுகிறார்கள்! கேட்கக் கூடுவோரை விரட்டுகிறார்கள்!

இந்த சுதந்திர வீரர்கள் ஆட்சியில், பேச்சு சுதந்திரம் படும்பாடு இது!

இவர்கள் இது குறித்து வெள்ளையர் காலத்தில் வாய் கிழியக் கூவினர்! தொண்டை வரள வரள சரமாரியாகப் பேசினர்! ஏசினர்!

144-இது நம்மை மாய்க்க வந்த பேய்.

144-நம்மை அடிமையாக்கி, அடித்து மிரட்டும் அரக்கன்.

144-சட்டமல்ல, நம்மைக் கொட்டிடும் தேள், கடித்திடும் பாம்பு.

144 தடையல்ல, வாள்-அது நம் நாக்கை அறுக்கிறது. இது நாக்கறுப்புச் சட்டம்.

144 தடை போடுவது, மனித உரிமையைப் பறிப்பது. மீறுவோம், தடுத்தால் சீறுவோம்.

இப்படி அவர்கள் பேசியதை, மக்கள் மறக்கவில்லை ஆனால் அவர்கள் மறந்துவிட்டார்கள்!

சகுந்தலையை மறந“துவிட்டானாம் துஷ்யந்தன். இதற்குத் துர்வாசர் இட்ட சாபம் காரணமாம்!

இந்தத் துஷ்யந்தர்களின் மறதிக்குக் காரணம், சாபமல்ல, பானம் அதுவும் மயக்கந் தரும் மதுபானம்!

ஆட்சியாளர்கள் மதுவருந்தியுள்ளனர்! ஆகவே மயங்கிக் கிடக்கின்றனர்!

ஆகவேதான், வெறியர்களாகிவிட்டார்கள்!

போதை தலைக்கேறிவிட்டது! ஆகவே, நினைவிழந்து, நிலை தடுமாறி, அலை மோதுகிறார்கள்!

மது விலக்கு செய்தவர்களாயிற்றே நம்மாள்வார்கள்! அவர்களா போதையிலே, உருளுகிறார்கள்?

ஆம், அதிகாரமும் ஒரு மதுதான்! அந்த மது தரும் போதை, மற்ற மதுபானங்களால் ஏற்படும் மயக்கத்தைவிட மகத்தானது-தீர்க்கமுடியாதது!

ஆகவே, ஆட்சியாளர்கள் அதிகார மதுவருந்தி, ஆணவ போதை யேறி அடக்குமுறை ஆட்டம் ஆடுகிறார்கள்!

சொன்னதை மறந்துவிட்டார்கள்! ‘பாட்டில்’ பாஷையிலே பேசி ‘பீப்பாய்’ நடை நடக்கிறார்கள்!

அதிகார போதை, அவர்களை ஆட்டி வைக்கிறது!

இந்த வாரம் இரண்டு இடங்களிலே, இந்த போதையால் விளைந்த வேதனைகளைக் கண்டோம்.
சித்தையன்கோட்டை, தென்தாமரைக்குளம் என்ற இரண்டு இடங்களில், அதிகார போதையேறிக் கிடக்கும், ஆட்சியாளர்கள், தங்கள் அடக்குமுறை நாட்டியமாடிவிட்டார்கள்.

இரண்டு ஊர்களிலும், நம் கழகக் கூட்டங்கள் கூடக்கூடாதென தடை விதித்துவிட்டனர்.

கழகம் பிறப்பித்த கட்டளைப்படி தடையை மீறத் தீர்மானித்தனர் தோழர்கள்.

சித்தையன் கோட்டையில் பேசச் சென்றவர் காஞ்சி கல்யாண சுந்தரம். இயக்கம் நாட்டுக்களித்த பரிசுகளில் அவர் ஒரு நல்முத்து! அவர் இன்று, நேற்று பேசுபவரல்ல. பல ஆண்டுகளாக புண்பட்டுப்போன சமூகத்தின் கோணல்களை சிக்கல்களை எடுத்துக்காட்டிடும் அறப்பணி புரிபவர். அவர் பேச்சு, நாட்டுக்கு நல் மருந்து! இருந்தும், அவர் பேசக்கூடாதெனத் தடுத்துவிட்டனர்.

அவர் பேச்சிலே, எழுத்திலே, மட்டும், ‘சூடு’ அதிகம் உள்ளவரல்ல செயலிலும் அப்படித்தான் என்பது, மதுரையில் கருப்புக்கொடி நிகழ்ச்சியில் சிறை புகுந்தபொழுது, நாடு கண்டது வாயார வாழ்த்தியது! அச்சூடு தாங்கிடாது, சர்க்கார் ஆடியதைக் கண்டு நாடு சிரித்தது, நாமும் சிரித்தோம்!
அவர் தடையை மீறத் திட்டமிட்டார் அவரைப்பன்பற்றி தோழர்கள், எஸ்.எஸ்.நடராசன், கே.எல்.காமராஜன், எஸ்.வெங்கடாசலம், எம்.எஸ்.எஸ்.மணி, அப்துல்காதர், சாகுல் அமீது, காளிநாதன், ரத்தினசாமி, காமாட்சி ஆகியோர் உடன்வர உடன்பட்டனர். ஆனால், ஆட்சியாளர்களோ, அவர்களை வட்டமிட்டனர், சட்டம் பேசினர், கடைசியில் சிறையிலும் வைத்துப் பூட்டினர்!

இனி தோழர்களை வழக்கு மன்றத்தில் நிறுத்திடுவர் ‘குற்றஞ்’ சாட்டுவர்.

சட்டமும், சமாதானமும் நிலைக்க வேண்டும் என்பதிலே அதிக கவலையும், அக்கறையும் கொண்டவர்கள் நாம்.

அவர்கள் சட்டத்தை மீறி, சமாதானத்தைக் கீறியெடுத்து, ஆகஸ்ட்டாட்டம் போட்ட பொழுதெல்லாம் சட்டத்தின் அவசியத்தைக் காட்டியவர்கள். சமாதான விரோதிகள் ஆகி, நம் மக்களை நாமே அழித்திடும் பெரும் பழிக்காளாகக் கூடாது என்று கூறியவர்கள் நாம்.
தண்டவாளத்தைப் பெயர்த்தார்கள்!

தபால் நிலையங்களில் இலங்கா தகனம் நடத்தினார்கள்!

தந்திக் கம்பிகளை யறுத்தார்கள் சர்க்கார் நிலையங்களை இடித்தார்கள்!

அழிவு வேலைகளில் அவர்கள் ஈடுபட்டனர்!

சட்டத்தை தட்டி நடத்தனர்-சமாதானத்தை எட்டியுதைத்தனர்!

அவர்கள் அதற்கு சுதந்திரதாகம், சுயேச்சை வேகம் என்று காரணங்காட்டினர்.

ஆனால், அவர்களே தான் இன்று நமக்கு, தடைமேல் தடை போட்டு, தங்கள் ஆத்திரத்தைத் தீர்த்துக்கொள்கிறார்கள்!

சட்டமும், சமாதானமும் நமக்குத் தெரியும். ஆனாலும், அந்த சட்டம் அர்த்தமற்ற முறையில் அவசியமற்ற நேரத்தில், அனாவசியமான இடத்தில் பிரயோகிக்கப்படும் பொழுது, எப்படி பொறுத்திருக்க முடியும்?

சட்டத்தின் கடங்கியவர்கள் என்பதாலேயே, நம்மை சட்டத்தைக் காட்டி மிரட்டி விட முடியுமா?

சமாதானம் விரும்பிகள் நாம் என்பதையறிந்து, அந்த மூலமந்திரத்தை ஓதியே நம்மை மூலையில் உட்காரவைத்து விட முடியுமா?

அவர்கள் செய்திடும் அக்கிரமங்கள் கோப்பை நிறைந்து வழிகிறது. ஆகவேதான் மீறிடத “தீர்மானித்தோம், தோழர்களும் மீறினார்கள்.

ஜனநாயகம் வேண்டும் என்று பேசாதாரில்லை!

ஜனநாயக ஆட்சியிலே தொடர்ந்து நாம் தொல்லைகள் அனுபவித்து வருகிறோம்.

நம் புத்தகங்களை சட்ட விரோதமானவை என்றனர். ஆசிரியர்களை சிறைக்கனுப்பினர்! அபராதம் வாங்கினர்!

நாடகங்களைத் தடுத்தனர்! நடித்தவர்களை பிடித்தடைத்தனர்!

தாங்கிக்கொள்கிறோம். அத்தகைய உரம் உள்ள நெஞ்சிருக்கிற காரணத்தால்.

சித்தையன் கோட்டையில், நடந்தது. இந்த ஆட்சியாளர்களின் போதை தெளிவிக்கும் சவுக்கடி!
தென்தாமரைக் குளத்திலே, பூத்திட்ட புத்துணர்ச்சி மலர், இவர்களின் அதிகார மது தரும் மயக்கம் தீர்க்கும் சக்தி படைத்தது!

தோழர்கள் தடையை மீறினார்கள்! காரணம், சட்டம் என்ற பெயரால் அதிகார மதுவெறியர்கள் அடைந்துள்ள மயக்கம் தெளிந்திட!

144 தடை உடைபட்டது. ஏன்? அதிகார போதையின் புலம்பல் ஓய, வெறிக்கூத்து சாய!

இதற்குத் தலைமை தாங்கிய, காஞ்சி தந்த காளை, கல்யாண சுந்தரத்தையும், அவர் வழி நின்ற திராவிடத் தீரர்கள் அனைவரையும் பாராட்டுகிறது நாடு-அந“தப் பாராட்டிலே நாமும் கலந்து மகிழ்வோம்!

(திராவிடநாடு 9.9.51)