அறிஞர் அண்ணாவின் கட்டுரைகள்


பிரிட்டிஷ் பதுமை!

வீரத்தின் விளைவா? இல்லை. அன்பின் அமைப்பா? அதுவும் கிடையாது. மானங் காத்த பெருமையால் பிறந்ததா? வரலாறே வேறுவிதம்.

படையெடுத்து வந்தவர் அனைவர் முன்பும் அடி பணிந்து, அவருக்கு இச்சகம் பேசி, எடுபிடியாக ஏவல் புரிந்து, அதட்டினால் அடங்கி, அன்பு காட்டினால் ஆர்பாட்டஞ் செய்து, தன்நிலையைக் காப்பாற்றிக் கொண்ட பெருமை, இந்த இந்திய உபகண்டத்தில், மணிமுடி தாங்கிய மன்னாதி மன்னர்கள் அனைவருக்கும் பொதுவானதாகும். ஹைதராபாத் நைஜாமும் இந்தப் பொதுவிதிக்கு விலக்கல்ல.

ஹைதராபாத் அரச பரம்பரை அமைப்பே ஓர் அலாதி 1713-ல் தான் நைஜாமின் பரம்பரை தோன்றியது. மொகலாய அரசர் அவுரங்கஜீப்பு அரண்மனையில் அலுவல்பார்த்த அஸப்ஜாதான் இதன் மூலகர்த்தா. தாம் செய்த சேவைக் கீடாக, தக்காணத்தைக் காணிக்கையாகப் பெற்றார் அஸப்ஜா. மொகலாய சாம்ராஜ்யம், அவுரங்கஜீப்புக்குப் பின்னர், சரிந்துவரும் நிலையிலும், அஸப்ஜா டில்லிக்குத் தண்டனிடும் நிலையை விட்டுவிடவில்லை. இருந்தாலும் அது உண்மையானது என்றும் சொல்வதற்கில்லை. தண்டணிட்டாரே யன்றி, கப்பங்கட்டுவதை நிறுத்திவிட்டார். தமது தரணியின் வருவாய் அனைத்தும், மராட்டிய வீரர்களிடமிருந்து தம்மைக் காப்பாற்றிக் கொள்வதற்கே சரியாகிவிடுகிறது எனும் காரணத்தையும் காட்டிவிட்டார்.

என்றும் சுதந்திர தரணியாக நைஜாம் இருந்ததில்லை. டில்லியில் ஆணைக்கு, அடிபணியும் அந்தஸ்தே அதற்கு இருந்தது. 1829-ல் முடிபுனைந்து கொண்ட நாசீர்ருத்தௌலாவும், தமது பட்டமேற்பை அனுமதிக்குமாறு, டில்லிக்கு விண்ணப்பித்துக் கொண்டபொழுது, நூறு பொற்காசுகளும் ஒரு வைரமாலையும் கப்பமாக அனுப்பினார். மொகலாய சாம்ராஜ்யாதிபதிக்கு அட்க்கமானதுதான் நைஜாம் என்பதை, 1858 - வரை வெளியிடப்பட்ட நாணயங்கள் அனைத்திலும் குறிக்கப்பட்டுள்ளன. மொகலாய சாம்ராஜ்யம் சிதைந்தது. அந்த இடத்தைப் பிரிட்டிஷ் படைபலம் நிரப்பியது. பிரட்டிஷ் அதிகாரிகளுக்கச் சாடி சொல்லி, ஆட்சி உரிமையைக் காப்பாற்றிக் கொள்ளும் சிறந்த பணியை மேற்கொண்டது நைஜாம்.

அண்டையிலுள்ள மராட்டியர்களோடு தொல்லைப்பட வேண்டிதாகவே இருந்தது நைஜாமுக்கு. மராட்டியார்களின் சொல்லுக்கு செல்வாக்கு வளர்ந்தது டெல்லியில், இதன் பலனாக, தக்காணத்தின் வருமானத்தில் நான்கில் ஒரு பகுதியை மராட்டியர்களுக்குக் கொடுத்துவர வேண்டுமென, டில்லி கட்டளை பிறப்பித்திருந்தது.

1749 அஸப்ஜா இறந்தார். அவருடைய இரு பிள்ளைகளிடையே சச்சரவு தோன்றியது, எவர் பட்டத்திற்கு வருவது என்று. ஒருவருக்கு அடித்தது யோகம். இந்த வேளையில், தென்னாட்டில் ஆதிக்கம் பெற்றிருந்த பிரெஞ்சுக்காரர்களின் ஆதரவு ஒருவருக்குக் கிடைத்தது. பிரெஞ்சுத் தளபதி தூய்ப்ளேவின் படைபலத்தால், சலாபத்ஜா ஆட்சி பீடம் ஏறினார்; தூய்ப்ளே கொடுத்த பிச்சை அது.

ஆங்கிலேயாரா? பிரெஞ்சுக்காரரா? எவர் ஆதிக்கம் தென்னாட்டில்நிலைப்பது எனும் பிச்னை தீர்க்கப்பட வேண்டியதாக இருந்தது. இருநாட்டினரிடையேயும் போர் மூண்டுவிட்டது. பிரெஞ்சுப் படைவீரர்கள், தளபதி புஸ்ஸியின் தலைமையில் வெற்றிமேல் வெற்றி பெற்றனர், ஆங்கிலேயருக்கு எதிராக. மராட்டிய எதிர்ப்பிலிருந்து தம்தலை யைக்காப்பாற்றிக் கொள்ள நைஜாமுக்கு இது ஒரு நல்ல வாய்ப்பாக அமைந்தது. நைஜாமிடமிருந்து நான்கு ஜில்லாக்களை பரிசாகப் பெற்றுக்கொண்டு, பிரெஞ்சுத் தளபதி தமது படை பலத்துடன் நைஜாம் தலைநகரில் தங்கிவிட்டார். இந்த உறவு அதிககாலம் நீடிக்கவில்லை.

பின்னர் ஏற்பட்ட போரில் ஆங்கிலேயர் பிரெஞ்சக்காரரைத் களத்தில் தோற்கடித்தனர். பிரெஞ்சுக்காரருக்கு நைஜாம் அளித்த நான்கு ஜில்லாக்களையும், ஆங்கிலேயர்கள் தமதாக்கிக் கொண்டனர். பிரெஞ்சுக்காரர்கள் தயவால் அரியாசனம் ஏறி இருந்த தனது சகோதரரான ஜாவைத் தொலைத்துவிட்டு பட்ட மேற்ற நிஜாம் அலி, ஆங்கிலேயருக்கு எதிராகக் கர்நாடகத்தின் மீது படை எடுத்தார் - கிடைத்தது தோல்வி. இது சமயம் செய்து கொண்ட ஒப்பந்தப்படி, ஆங்கிலேயரின் படை பாதுகாப்பாக அமைந்தது நைஜாமுக்கு.

மைசூரில் பலம் பெற்றிருந்த ஐதர்அலியின் ஆக்ரமிப்பிலிருந்தும், மராட்டியர்களின் படையெடுப்பு பயத்திலிருந்தும் நைஜாம் காப்பாற்றப்பட்டார்.

ஆங்கிலேயர் கண் காணிப்பால், நைஜாமின் ஏதேச்சாதிகார ஆட்சிக்கு இடமில்லாமல் இருந்தது. இந்த நிலையை நைஜாம் விரும்பவில்லை. பக்கத்திலிரு“த ஐதர் அலியோடு சேர்ந்து கொண்டு, ஆங்கிலேயர் படை பலத்தை, களத்தில் பரிசோதித்தார். கிட்டியது தோல்வி. மசுலிப்பட்டினம் ஒப்பந்தந் தான் முடிவு. இதன்படி, நைஜாமின் தலைநகரில் அதிகப்படியாக ஆங்கிலத் துருப்புகள் அமர்த்தப்படன. இந்நிலையிலும் நைஜாம், தாம் எதேச்சாதிக்கார ஆட்சிக்கு வழி காண்பதிலேயே கவனம் செலுத்திவந்தார். மராட்டியத் தலைவர்களையும், ஐதர் ஆலியையும் ஒன்றுகூட்டி, ஆங்கிலேயர்மீது படையெடுக்கத் திட்டமிட்டார். இத்திட்டம் உருவாகுமுன்பே ஆங்கிலேயர்களால் மேலும் பலத்த கண் காணிப்புப் போடப்பட்டுவிட்டது.

சில ஆண்டுகள் கழித்து மராட்டியர்கள், தாங்கள் முன்னாள் பெற்றுவந்த, தக்காணப்பிரதேசத்தின் வருமானத்தில் ஒரு பகுதியை மீண்டும்நைஜாம், தங்களுகுத் தரவேண்டுமெனக் கேட்டனர் மராட்டிய பீஷ்வாக்களிடம் செய்துகொண்டிருந்த ஒப்பந்தபடி, இந்த விவகாரத்தில் தாங்கள் குறுக்கிட முடியாது என ஆங்கிலஅதிகாரிகள் கூறிவிட்டனர். எனவே மராட்டியர்களுக்கு ஜைõமுக்கும் போர் மூண்டது. குர்துலா என்னும் இடத்தில் நைஜாம் படைமுறியடிக்கப்பட்டது. இந்தத் தோல்வியின் பலனாக, பேராரும் அதனைச் சுற்றியுள்ள நிலப்பரப்பில் பெரும் பகுதியும், நைஜாமால் மராட்டியர்களுக்குச் சொந்தமாமக்கப்பட்டது.போர்ச் செலவிற்காகப் பெருந்தொகையும், பல ஆண்டுகளாகக் கொடுக்கப்படாமல் இருந்த நைசாமின் வருமானத்தின் ஒருபகுதியும், நைசாம் மராட்டியர்களுக்குக் கொடுக்க வேண்டியதாயிற்று.

ஆங்கிலேயர்களின் போக்குத் தமக்குச் சாதகமாக இல்லாததைத் தெரிந்துகொண்ட நைஜாமுக்கு, ஏற்கெனவே ஆங்கிலேயர்கள்மீது இருந்த ஆந்திரம் பெருகியது. ஆங்கிலர்க்கு எதிராகப் பிரெஞ்சுக்காரர்களின் ஒத்துழைப்பை வ÷ண்டி நின்றார். பிரெஞ்சுத் துருப்புகளுக்கும் ஏராளமாகப் பொருளைக் கொடுத்துக் காப்பாற்றிவந்தார். இந்தச் சூதைத் தெரிந்த அன்றைய வைசிராய் வெல்லெஸ்லி - 1798-ல் முடிவாக என்றென்றும் நைஜாமைத் தலையெடுக்க விடாமல் செய்துவிட்டார். ஹைதராபாத்தில் வைக்கப்பட்டிருந்த ஆங்கிலத் துரப்புகளின் எண்ணிக்கையும் பெருக்கப்பட்டது. ஓராண்டு கழித்து ஐதர் அலியின் மகனான திப்புசுல்தானின் வீர உணர்ச்சியும் மங்கியது. அவர் ஆட்சிக்குட்பட்ட நிலப்பரப்பும் துண்டாடப்பட்டுவிட்டது ஆங்கிலர்களால். அதில் ஒரு பகுதியை, தங்கள் நல்லெண்ணத்தின் அறிகுறியாக ஆங்கிலேயர்கள் நைஜாமுக்குக் கொடுத்தனர்.

செழுமையாக இருந்த அந்தப் பிரதேசம், நைஜாமின் ஆட்சிக்கு உட்பட்டதும் சிறுகச் சிறுகச் சீரழிந்து போய்விட்டது.

கைமாறினவுடன் இன்னின்னார் இந்த இந்த அளவு வரிதர வேண்டுமெனக் கட்டளை இடப்பட்டு விட்டனர். வரி வசூலிப்பதில் வேற்றுமை காட்டப்படவில்லை செல்வர் வறியர் அனைவரும் கொடுமை செய்யப்பட்டனர். ஆண் பெண் என்ற வித்தியாசத்தைக் கூட வரி வசூலிக்கும் அதிகாரிகள் பொருள் படுத்துவதில்லை. மார்பிலே கல் ஏற்றுவது, பழுக்கக் காய்ச்சின குறட்டினால் விரல்களை நசுக்குவது போன் கொடுஞ் செயல்கள் மேற்கொள்ளப் பட்டன. இந்நிலையில் வரி கொடுக்கத் தங்களால் இயலாமையை எடுத்துக்கூறி அலறுவது, மனித உள்ளம் படைத்த எவரையும் நடுக்குறச் செய்யும் என, இவைகளை நேரில் கண்ட ஆங்கிலேயர் ஒருவர் குறித்துள்ளார்.

பிரிட்டிஷ் ஆயுத பலத்தால் பிடித்துக்கொண்ட மைசூர் அரசுக்குச் சொந்தமான பிரதேசங்களை, திரும்பவும் ஆங்கிலர்க்கே சொந்தமாக்கி விட்டார் நைசாம். இதற்குப் பிரதிபலனாக முன்னிலும் அதிகப்படியான ஆங்கிலேயர்களின் இராணுவ பாதுகாப்பைப் பெற்றுக் கொண்டார்.

1803-ல் நிஜாம்அலி இறந்தார். அவர் மகன் öகுந்தர் ஜா அரியாசனத்திலமர்ந்தார். இந்த ஆண்டில் ஆங்கிலேயருக்கும் மராட்டியருக்கும் போர் மூண்டது. ஆங்கிலேயருடன் செய்து கொண்டிருந்த ஒப்பந்தப்படி நடந்துகொள்ளாமல், ஆங்கிலேயருக்கு எதிராக சதி செய்ய முற்பட்டார் ஜா. நைஜாமின் கோட்டைக்குள்ளாகவே ஆங்கிலத் துருப்புகள் வைக்கப்பட்டன. இவ்வளவு துரோகத்தின் பின்னரும் ஆங்கிலர் தயவால் முன்னர் குதுர்லா போரில் இழந்துவிட்ட பேரார், பிரதேசத்தில் பெரும் பகுதி நைசாமுக்குக் கிடைத்தது.

“பிரிட்டிஷ் தொடர்பினால் தான் நைஜாம், ஒர்தனிநாடாக நிலைத்திருக்கிறது. 1800-வது ஆண்டிலும் அஸப் குடும்பம் மக்கள் நல்லெண்ணத்தைப் பெறவில்லை. அதாவது அன்னியர்கள் எனும் நிலையில் மாற்றம் ஏற்படவில்லை. பிரிட்டிஷ் துணை இல்லையானால் சமஸ்தானத்திலுள்ள சில முஸ்லிம்கள் ஆதரவைத்தான் நைஜாம் ஆட்சி நம்பிவாழ வேண்டும். மராட்டிய எழுச்சிக்கு முன் இது வீண நம்பிகையாகும். சுயேச்சையாகச் செயலாற்றவிடப்பட்டால், நைஜாம் தமது ஆட்சியை எவ்வளவு காலம காப்பாற்றிக் கொள்வார் என்பது ஐயப்பாட்டிற்குரியதாகும். மராட்டியர், கன்டர், ஆந்திரர் ஆகியமூன்று மொழியினரும் ஐதராபத்மீது கருத்துச் செலுத்தி யுள்ளனர். ஏற்கெனவே இருந்ததுபோல் இந்நிலப்பரப்பு மொழி வழி அமைந்துவிடவேண்டுமென்பதுதான் இவர்கள் கிளர்ச்சியின் முக்கிய நோக்கம் இது நிறைவேறுமானால் ஹைதராபாத் மறைந்தொழியும்.... கட்டுப்பாடு இல்லாமல் சுயேச்சையாக, தாம் கனவு கண்டு கொண்டிருக்கிறபடி அனுமதித்தால், நைஜாம் தமது குடிகளின் நலனை ஒரு சிறிதும் கருதமாட்டார்.”

இவ்வாறு நைஜாமின் உண்மை நிலையை அன்று வைசியராக இருந்த வெல்லெஸ்லிபிரபு இங்கிலாந்திலுள்ள மந்திரிக்கு எழுதியுள்ளார்.

ஆங்கிலர்களின் ஆசீர்வாதமும், அவர்கள் இராணுவத்தின் பாதுகாப்பும், கிடைத்திருக்காமல் இருந்தால், ஹைதராபாத் எனும் பெயரும், அப்பெயர் தாங்கியுள்ள நிலப்பரப்பை ஆடசி செய்வதற்கு ஒரு திருக்கூட்டமும் இந்திருக்கவே முடியாது. அந்நிலப்பரப்பில் வாழ்ந்த மக்களின் நல்வாழ்வில் நாட்டமுடை யவர்களாக ஆங்கிலர்கள் இரந்திருந்தாபால், நைஜாமுக்கு ஆதரவும், அவர் தங்களுக்கு எதிராகச் சதி செய்த ஒவ்வொரு நேரத்திலும் மேலும் சில இடங்களைப் பரிசாக வழங்கியும் இருக்கத்தேவை இல்லை. ஆனால் வந்தவர்களுக்கு அந்த நோக்கமில்லையே! சொந்தவாழ்வை சொகுசாக்கிக் கொள்வதுதானே அவர்கள் முக்கியநோக்கம். நேரடியான ஆங்கில ஆட்சியின் கீழ் இருந்திருந்தாலாவது சிறு அளவிலாவது கைஜாம் மக்கள் நன்மை சில பெற்றிருப்பர். இந்த இருநூறு ஆண்டுகளில் எத்தனையோ முறை பற்பல காரணங்களுக்காக ஆங்கில அதிகாரிகள் ஆணையிட்டும், வேண்டிக்கொண்டும், நைஜாமுக்குச் சுயேச்சையாக ஆளும் உரிமை இல்லை என்பதைக் காட்டிக்கொண்டுள்ளனர். பிரிட்டிஷார் பிடித்துவைத்த வெறும் உயிருள்ள பதுமையே நைஜாம். எவ்வளவு விரைவில் அந்த ஆட்சிக்கு முடிவு காணப்படுகிறதோ, அவ்வளவும் அங்கு வதியும் மக்களுக்கு நன்மையேயாகும்.

(திராவிட நாடு - 19-9-1948)