அறிஞர் அண்ணாவின் கட்டுரைகள்


காலக்கண்ணாடி - பிரும்மதேஜஸ்!

என்னதான் சொல்லுங்கோ! நம்ம அரியக்குடியின் பிடியே பிடி! வைர ஜொலிப்பன்னோ! கமகம், அடாடா, அபூர்வம்! கிருதி என்ன பிகுவு, எவ்வளவு பாடாந்திரம். பக்க வாத்தியக்காரர் திணறின்னா போறா. அரியக்குடின்னா அரியக்குடிதான்.

எது எதுகளோ பாடறுதகளே, என்ன பிரயோஜனமென்னேன். போன வாரம் பாடினார் பாருங்கோ, பந்துவராளியிலே ஒரு பதம், ஆளை அப்படியே உருக்கிவிட்டுது ஒய்!

ஆமாம்!
கேட்டீரோ, பந்துவராளி பதத்தை.

கேக்கலே! நீர் சொல்றதே போதாதோ? அவர் பாட்டு சிலாக்கியமுன்னு சொல்ல வேண்டுமோ. பாடும்போது, முகம் எப்படிப் பிரகாசிக்கிறது தெரியுமோ?

பிரும்ம தேஜஸ், எங்கே போகும்?

மருங்காபுரி மகாதேவ ஐயருக்கும், பரமக்குடி பஞ்சநாத சாஸ்திரிகளுக்குமோ, அல்லது வேறு எந்த இரண்டு ஐயர்கள் சந்தித்துப் பேசினாலும், மேலே தீட்டிய உரையாடல்தான் நடைபெறும். ஒருவர் புகழ்வார். என்பர்மற்றவர் ஆம் என்பார். இன அன்பு, இராகபாவ தாளத்துடன், சதா நடைபெறும் அக்கிரகாரத்திலே, அக்ரகார விளம்பரத்துக்கு.

சித்தூர் பாட்டாமே, ரேடியோவிலே, சிட்டி! வாயேன் போய்க் கேட்போம்.

சித்தூர் சுப்பிரமணிய பிள்ளை பாட்டா, கட்டை சாரீரமப்பா, எனக்குப் பிடிக்காது. என்னமோ சரிகமரிகமப என்று சங்கீதம் பாடுவார். எனக்குப் பிடிக்காது.

உனக்கென்னடா தெரியும், அதன் சிலாக்கியம். காஞ்சிபுரம் நாயனாப் பிள்ளைக்கப் பிறகு, அபூர்வ கீர்த்தனங்கள், கனராகங்கள், தாளத் திறமையுள்ள ஜதிகள், வேறு யாரிடமிருக்கிறது. கர்நாடக சங்கீதம், வேறே யாருக்குத் தெரியும்?

அது என்னமோப்பா எனக்கப் பிடிக்காது. நான் வரவில்லை. இன்று, காமாட்சி கோயிலிலே ஒரு சிநேகிதனை வரச் சொன்னேன். போகணும்.

ஓஹோ! அப்படியா சங்கதி! நானுந்தான் வருகிறேன், வா, போவோம்.

சிட்டி, சதாசிவம், இருவரும் தமிழ் வாலிபர்கள். திராவிடத் தோழர் சித்தூர் சுப்பிரமணிய பிள்ளையின் சங்கீதத் திறமை பற்றி ணருவர் புகழ்வார். மற்றவர் மறுத்துப் பேசுவார். பிறகு இருவரும் வேறு ஏதேனும் காரியத்துக்கச் சென்றுவிடுவர். சித்தூரார் பாட்டை மறந்துவிடுவர்.
ஆரியர் உயர்வது ஏன்? தமிழர் தாழ்வது ஏன்? என்பதற்குத் தர்க்கம் வேண்டுமா? இந்தச் சம்பவம் போதாதா? அரியக்குடி என்றதும் ஆரியக் கூட்டம் ஒரே அடியாக ஆதர்க்கும். தமிழர், தராசு போட்டு நிறுத்து, தகதி திறமை பற்றி விவாதித்து, விவாதத்தில் விரோதத்தை வளர்த்து, முடிவில், தமிழரைக் கைவிடுவர்! இது என்று மாறும்?

(திராவிடநாடு - 03.01.1943)