அறிஞர் அண்ணாவின் கட்டுரைகள்


செக்கோஸ்லோவேகியா
பதினைந்தாம் நூற்றாண்டின் இறுதிக் காலத்திலே, செக்கோ நாடு மிக உன்னதமான நிலைமையில் இருந்துவந்தது. அந்த நாட்டிலே வாழ்ந்து வந்த செக் ஜாதியினர் ரோஜமுள்ளவர். நாட்டப் பற்றம் மொழிப்பற்றும் மிகுதியும் கொண்டவர்கள். தங்களுடைய தேசிய உரிமைகளை இழக்க ஒரு சிறிதும் ஒப்பாதவர். அவர்களுடைய போராடும் திறத்தையும், கொள்கைக்காக விட்டுக் கொடுக்காது கிளர்ச்சி செய்யும் மனப் பான்மையையும் வளர்த்த தலைவர்கள் பலர். அவர்களிலே மிக முக்கியமானவர் ஜான்ஹஸ் என்பராவார். ஜான்ஹஸ் என்பவர் மத சீர்திருத்தவாதி. கத்தோலிக்க குருமார்களின் கொதிப்பையும் எதிர்ப்பையும் பொருட்படுத்தாமல், போப்பாண்டவரின் விரோதத்தையும் ஒரு பொருட்டாக எண்ணாது, மதத் துறையிலே, சீர்திருத்ததைத் துவக்கிய, பிராடஸ்டாண்டு பிரிவை, உற்பத்தி செய்த, மார்ட்டின் லூதர் எனும் சீர்திருத்தவாதியைப் போன்றவர் ஜான்ஹஸ். மார்ட்டின் லூதர், எப்படி மக்ளின் மனதைக்கவர்ந்தாரோ அதைப் போன்றே ஜான்ஹஸ் மக்களின் அன்பைப் பெற்றார். அவர் பெறும், மத சீர்திருத்தக்காரர் மட்டுமல்ல. நாட்டுப் பற்று அவர் உள்ளத்தில் ததும்பிற்று. மொழிப் பற்றும் அப்படியே. மேலும் அவர் ஒரு ஜனநாயக வாதி. மத சீர்திருத்தமும், நாட்டுப்பற்று, மொழிப்பற்று, ஜனநாகத்தில் ஆர்வம் இவ்வளவும் ஒருங்கு அமையப் பெற்ற ஜான்ஹஸ், ஐரோப்பிய அமைதிக்கே ஒரு வெடிகுண்டு போலக் காணப்பட்டார். ‘தர்பார்’ ஆட்சிக்காரர், எங்கு பொதுமக்கள், ஜான்ஹஸ் பேச்சைக் கேட்டுக்கொண்டு, ஜனநாயக ஆட்சி நிறுவவேண்டுமென்று கிளர்ச்சி செய்ய ஆரம்பித்துவிடுவார்களோவென அஞ்சினர்.

“எல்லோரும் இந்நாட்டு மன்னர்” என்ற பேச்சின் சக்தி செக்கோ மக்களை, எதற்கு மஞ்சாப்போர் வீரர்களாக்கி விட்டது. ஜான்ஹஸ் செய்து வந்த சண்டமாருதப் பிரசாரம் உருவான பலனைத்தர ஆரம்பித்தது. உடனே, எதிரிகள் தங்கள் படைகளைத் திரட்டினர். போப்பாண்டவருக்குச் சேதி எட்டிற்று. ஜெர்மன் அதிகாரிகளும், ஆஸ்ட்ரிய நாட்டுச் சீமான்களும், கத்தோலிக்க குருமார்களும், ஒன்று கூடி,ஜான்ஹஸை ஒழிக்கத் தீர்மானித்தனர். இதன் பயனாக, இருதரப்பினரும் கைகலக்கவேண்டி வந்தது. ஜான்ஹஸின் சீடர்கள் எதற்கும் தயாராகவே இருந்தனர். போப்பாண்டவர், அந்தக் காலத்தில் விற்றுவந்த ‘பாவ மன்னிப்புச் சிட்டு’களைப் பற்றி ஜன்ஹஸ் இயக்கத்தார் மக்களிடம் கூறிப் பெருத்த எதிர்ப்பை உண்டு பண்ணினர். இளைஞர்கள் ‘பாப மன்னிப்புச் சீட்டு’ விற்றுவந்த தரகர்களைத் தொல்லைப் படுத்தியும், சீட்டுகளைப் பிடுங்கிக் கொளுத்துவதுமாகவும் இருந்தனர். போப்பின் பிரதிநிதிகள் பாடு வெகு திண்டாட்டமாகிவிட்டது. “ஏதேது ஆபத்து வளருகிறது. இதை ஆரம்பத்திலேயே ஒழிக்க வேண்டும்” என எண்ணி ‘பாவ மன்னிப்புச் சீட்டு’ விற்றவரைத் தடுக்க மூன்று இளைஞர்களைப் பிடித்துப் பலரறியக் கொன்றனர். அந்த மூன்று இளைஞர்களின் கோரமுடிவு செக் மக்களின் இரத்தத்தைக் கொதிக்க வைத்தது. சிங்கமெனச் சீறினர் செக் மக்கள். கொடுமை களைக் களைந்தே தீருவோம் என முழக்கினர். எதற்கும் அஞ்சோம் என எழுந்தனர். அடக்குமறை அதிகரித்தது. கூடவே கிளர்ச்சியும் பலப்பட்டது. அதிகாரிகள் அட்டகாசம் செய்தனர். கிளர்ச்சிக்காரர் ஆர்ப்பாட்டம் செய்தனர். கொல்லப்பட்ட மூன்று இளைஞர் மணிகளைப் புதைக்கக் கிறிஸ்தவ ஆலயத்திற்கு, ஊர்வலமாக எடுத்துச் சென்றனர். இந்த ஊர்வலத்தைப் பிராக் நகர மாணர்களே நடத்தலாயினர்.

போப்பாண்டவர் கோபங் கொண்டார். தனது ஏவலரைத் துன்புறுத்தியமூவர், கொல்லப்பட்டது நியாயமென்பது அவரது எண்ணம். உயிர் அவ்வளவு பெரிதல்ல, அதிகாரமே பெரிது என்பது அவரது எண்ணம் போலும்!

உடனே அவர் ஜான்ஹஸ்ஸை ஜாதிப் பிரஷ்டம் செய்துவிட்டார். மூவரைப் புதைக்க ஏற்பாடாகி இருந்த ஆலயத்தை இடித்துத் தரை மட்டமாக்கும்படி “தாக்கீது” அனுப்பினார். போப்பின் உத்தரவை, ஈட்டி முனைகொண்டு நிறைவேற்ற, ஜெர்மன் படையொன்று வந்தது. ஆனால், ஜான்ஹஸின் ஆட்கள், ஜெர்மனியரை ஓட ஓட அடித்துத் துரத்தினர்.

பார்த்தனர் எதிரிகள்! வாலைநறுக்கிப் பயனில்லை, தலையை அறுப்போம் என முடிவு செய்தனர். பாபம்! கிளர்ச்சியின் ஜீவசக்தியை அவர்கள் உணரவில்லை. அதிகார வர்க்கம் என்றும் இந்தத் தவறையே செய்கிறது. கிளர்ச்சி என்றால், ‘எடுதண்டத்தை” என்பதே அதிகாரவர்க்கத்தின் மந்திரமாக இருந்து வந்திருக்கிறது. ஆனால் அந்த மந்திரம் ஒரு போதும் பயனறிப்பதேயில்லை ஜான்ஹஸ், இருக்கும்வரை, இயக்கம் இருக்கும் - கிளர்ச்சி நடக்கும், தங்கள் ஆதிக்கம் கெடும் என எண்ணிய எதிரிகள் சூதாக அவரை வரவழைத்து 1415 ஆண்டு, அவரை நாஸ்திகர் - மதவிரோதி என்று குற்றம் சாட்டி. கொளுத்திக் கொன்றனர்.

ஆம்! சீர்திருத்தம் பேசிய - ஜனநாயக ஆட்சிவேண்டு மெனக் கிளர்ச்சி செய்த, ஜான்ஹஸ் கொளுத்தப்பட்டார். அந்தத் தீ என்ன செய்தது! செக்நாட்டின் நிரந்தர ஜோதியாக மாறிவிட்டது.

கட்டி வைத்துக் கொளுத்தப்பட்ட ஜான்ஹஸ் செக் சச்டின் நிரத்தர ஜோதியாக மாறிவிட்டார். அதிகாரத் திமிர் கொண்டனர்கள் இனி நிம்மதியாக வாழலாம் என மனப்பால் குடித்தனர். இனி யார் இருக்கிறார்கள் செக் மக்களைத் தட்டிக் கொடுத்துக் கிளப்பிவிட என்று எண்ணினார்கள். ஜான்ஹஸ் போன்ற தலைவருக்கே இந்தக்கதி ஏற்பட்டதென்றால், சாதாரண மக்களாகிய நாம் அதிகார வர்க்கத்தை எதிர்த்தால் ஒருநொடியில் நசுக்கிப் பொசுக்கப்படுவோம் என்று மக்கள் அச்சத்தால் பீடிக்கப்படுவர் என்பது அதிகாரிகளின் பித்துக்கொள்ளி எண்ணம். அச்சமே தைரியத்தையும் எதுவரினும் வருக என்று எதிர்த்திடும் குணத்தையும் கொடுக்கும் என்பதை அவர் அறியார்.

அஞ்சி, அஞ்சி, வாழுபவரே, கடைசியில், இனி நாம் அஞ்சவேண்டுவதே வேறொன்றுமில்லை, என்ற முடிவுக்கு வந்துவிடுகின்றன. அது காலை அவர்களுக்கு, என்றுமில்லாத யாருக்குமில்லாத தீரம் வருவதுண்டு.

உலக சரித்திரமே இதற்குச் சான்று; மக்கள் எழுச்சியின் மர்மமும் இதுவே. பெரிய பெரிய ராணுவ பலம் படைத்த சர்க்கார் முறியடிக்கப்பட்டதன் இரகசியமும் இதுவே. பிரஞ்சுப் புரட்சி, ரஷியப் புரட்சி, யாரால் செய்யப்பட்டது? போர் வீரர்களால்? வீரதீர பராக்கிரமவான்கள் என்று பெயர் வாங்கி கியவர்களாலா? அல்ல! அல்ல! சாதாரண மக்களால்! ஆயுதங்களை முதன் முதலாக எடுத்த மக்களால்!

அன்று புரட்சி செய்து, மாடமாளிகைகளைத் தூளாக்கி மன்னரையும் அவரது பரிவாரத்தையும் சின்னாபின்னப்படுத்தி, சிறைக் கோட்டத்தைத் தகர்த்தெறிந்து, முடி அரசை ஒரு நொடியில் கவிழ்த்த, பிரஞ்சு மக்கள், அந்தப் புரட்சி வருவதற்கு முன்பு அதிகாரியைக் கண்டால், அரசரின் வேவுகாரரைக் கண்டால், பணக்காரரைப் பார்த்தால், பயந்து, பதுங்கி, ஒதுங்கி, வாழ்ந்து வந்தவர்களே. எதைக்கண்டாலும் அச்சம்! யாரைக் கண்டாலும் அச்சம்! என்ன நேரிடுமோ என்ற அச்சம்!

அவ்வளவு அச்சமும், இனி வேற வழியில்லை, எதுவுரினும் வருக என்ற எண்ணம் உதித்த உடனே, கதிரோன் ஒளி முன்கரையும் கட்டிப்பனியெனக் கரைந்துருகிப போயிற்று! கோழைகளும் வீரராயினர், கொற்றவனே கோழையானான்!

ஜார் மன்னனைக் கண்டால் குப்புற விழுவர் ரஷியமக்கள்! அவன் பெயரைக் கேட்டால் கலங்குவர்! அதிகாரிகள் குரல் கேடடால் கதறுவர்! ஆøபோல் பதுங்குவர்! ஆடுபோல் மந்தை மந்தையாக அதிகாரிகள் அழைத்துச் செல்லும் வழிசெல்வர். அச்சம்! அச்சம்! அவர் தம் வாழ்வு பூராவும் அச்சமே குடி கொண்டிருந்தது. அப்படிப்பட்ட ரஷியர்கள் தான், உலகம் கண்டு திடுக்கிடும் விதத்திலே பொதுஉடைமைப் புரட்சியைச் செய்தனர். அதிகாரியின் நிழலைக்கண்டாலும்நடுக்குற்ற அம்மக்கள், புரட்சி நடத்திய காலத்தில் இரத்த வெள்ளத்தில், நீந்தினர். எங்கிருந்து வந்தது இந்தத் தீரம்! எங்கு போயிற்று அச்சம்! அச்சத்தின் முடிவைத் தாண்டி விட்டனர் அம்மக்கள்! ஆகவே தீரர்களாயினர்!

செக்மக்கள் மட்டும் இந்த உலக இயல்புக்கு மாறுபட்டவரா? ஜான்ஹஸ் இறந்தது, முதலில் அச்சத்தைக் கொடுத்த தென்றாலும், பிறகு தீரத்தையே தந்தது.

கண்களிரண்டிருந்த ஜான்ஹர் இறந்துபட்டான்! ஆனால் கண்கள் இரண்டுமில்லாத ஒருபெட்டையன் கிளம்பினான், செக் மக்களைத் தலைமை தாங்கிப் போர் நடத்த. குருட்டுத்தலைவன் அவன்; ஆனால் அவன் உண்டாக்கிய கொந்தளிப்புச் சொல்லும் தரத்ததன்ற.

ஜிஜ்க்கா என்பத அவனுடைய பெயர்! அந்தக்காலத்தில் கிளம்பிய போர்த்தலைவர்களுள் ஜிஜ்காவே முதன்மையானவன் என்ற பேரைப் பெற்றான். அவன் எந்தப் போர்க் கூடத்தில் பழகி, இந்நிலை பெற்றான்! “அவசியம்” என்ற போர்க்கூடத்திலேயே அவன் உழன்றான். யாரைக் கொண்டு படைதிரட்டினன்? பாட்டாளி மக்கள்! உழவர்கள்! இவர்களே அவனுக்குக் கிடைத்தனர்! அவர்களின் ஆயுதங்கள் யாவை? வெடிகுண்டா? விஷப்புகையா? பீரங்கியா? துப்பாக்கியா?

அல்ல! அல்ல!! உழவர்களிடம் ஏது இந்த ஆயுதங்கள்! கட்டை, மட்டை, அரிவாள், சம்மட்பு கோடரி, கொம்பு, இவைகளே அவர்களிடமிருந்து ஆயுதங்கள். இந்தப் படையை திருத்தியமைத்தார் ஜிஜ்க்கா! இது மிகத் தீரமானபடையாக அவருடைய தலைமையில் மாறிவிட்டது. எங்கும் இந்தப் போர் வீரரின் முழக்கமே கேட்கலாயிற்று இவர்களைக் கண்டால் எதிரிகள் ஓடலாயினர் புறமுதுகிட்டு. ஓடவே, எதிரிகளுக்குக் குதிரைகள் உதவின. ஐரோப்பிய நாட்டரசர்கள் ஆச்சரியப்பட்டனர். இந்தக் குருட்டுக் கண்ணனின் சேனை அவர்களைக் கலக்க வைத்தது.

ஜெர்மன் நாட்டுச் சிற்றரசர்கள் சீறி எழுந்தனர். எனினும் ஜிஜ்க்யா முன்னம சுருண்டு விழுந்தனர். டேனிஷ்நாட்டுப் படைத் தலைவர்களும், ஆங்கில நாட்டவரும் ஜீஜ்காவின் சூறாவளிச் சேனை முன் தலைகாட்ட முடியவில்லை.

ஜெர்மனியின் தெற்குப் பாகம் பூராவும், இவர்களின் முழக்கமே ஒலித்தது. அந்தப் பிரதேச மன்னர்கள், ஜிஜ்க்காவிற்குப் பயந்து தக்கமது நகரங்களில், கோட்டையே தளங்களை எழுப்பினர்.

ஆனால், ஜான்ஹஸ் விடுத்த சொல் அம்புகளும் ஜிஜ்க்கா விடுத்த போர்ப் பொறிகளும், மறைந்து போகவில்லை. செக் மக்களுக்கு அடுத்தொரு தலைவன் தோன்றியிருந்தால், அந்த நாட்டுச் சரித்திரமே வேறுவிதமாக மாறி இருக்கும். மாற்றார்கள் மனம் குளிர, செக் நாட்டில் உள்நாட்டுக் குழப்பம் உண்டாயாற்று. செக்நாட்டுச் செல்வவான்கள், சதிசெய்யலாயினர். பாமர மக்களை அடக்கி ஒழிக்கலாயினர். இதனால் ஒற்றுமை மாண்டது. ஒற்றுமை போகவே, செக்நாடு நிலைகலங்கி நின்றது. ஜெர்மானியர் தலைதூக்கலாயினர். பழையவிரோகதிகளின் சலசலப்புப் பலப்பட்டது. நாதியற்ற கூட்டமாயினர் செக்மக்கள். 1520ல் ஆஸ்டிரிய நாட்டு ஆப்ஸ்பர்க் பரம்பரையினர், செக் நாட்டு மன்னராயினர். செக் நாட்டவருக்கு, இன்னல் மேல் இன்னல் வந்தது. வீரம் பேசிய செக் மக்கள் விரட்டப்பட்டனர்! தலைவர்கள் நாடு கடத்தப்பட்டனர். ஜான்ஹஸ் செக்மொழியில் மொழி பெயர்த்த கைபில், கொளுத்தப் பட்டது. செக் செல்வ வான்களும் அழிக்கப்பட்டனர். செக் மொழியைப் பேசலாகாது எனக் கடும் சட்டம் ஏற்படடது, நாடு போயிற்று! மொழி போயிற்ற! செல்வம் அழிந்தது! சீர் குலைந்தது! சுதந்திரம் பறிபோகவே, சுகம் மாய்ந்தது! செக் மக்கள் அடிமைகளாயினர். ஆஸ்ட்டிரிய நாட்டினர், ஆதிக்கம் வளர்ந்தது.அது முதல் மூன்று நூற்றாண்டுகள் வரையில் செக்கோ நாடு, வலுவிழந்து, பொலிவிழந்து, செத்த வாழ்வு வாழ்ந்து வந்தது.
***

ஜான்ஹஸ், புரட்சிக்காரன்! வேதநிந்தகன! மார்க்க கட்டளையை மீறிய மாபாவி! சம்பிரதாய வைரி! சனாதன கிருஸ்தவ மார்க்கத்தைக் குலைத்து, மதத் தலைவரின் சட்ட திட்டங்களைச் சின்னாபின்னமாக்கி, விவரமறியாத, விளக்கமறியாத மக்களிடம் விதண்டாவாதம் பேசிப், பாபப்படு குழியிலே அவர்களைத் தள்ளும் தூர்தகன்! - என்றே பலரும் பழி சுமத்தினர். ஜான்ஹஸ் மீது விரோதம் கொண்டோர் இது போலக் கூறினர். அவருடைய அறவுரையைக் கேட்டு அகமகிழ்ந்த ஆதரவாளர்கள், ஜான்ஹஸ், மார்க்கத்தின் மாசுதுடைக்கும் மகா பண்டிதன், புண்யமார்க்கத்திலே புகுந்து விட்டகேடுகளைக் களைந்தெரியும் கர்மவீரன், தூய்மைக்காகப் போரிடும் மாவீரன், கிருத்தவ மார்க்கத்தை, அறிவுக்குப் பொருத்தமான அறநெறியாக்கி, மதப் போர்வைக்குள் புகுந்து கொண்டு, மக்களின் மந்த மதியைப் பயன்படுத்திக் கொண்டு, மதோன்மத்தர்களாக வாழும் எத்தர்களின் பிடியிலிருந்து, ஏசுவின் விசுவாச மார்க்கத்தை மீட்ட பெரியோன், என்று பாராட்டினர்
கண்டித்தவர்கள், பாராட்டினவர்கள் ஆகிய இருவசாரருக்கும், மார்க்கத் துறையிலே பணிபுரிந்த ஜான்ஹஸ் மட்டுமே தெரிந்தது - ஆனால் அவர், ஆற்றிய அரும்பணி, மார்க்கத் துறையுடன் நின்றுவிடவில்லை. தாயத்திலே, தனிப்பண்பும், தன் மானமும் தழைக்க வேண்டும் என்பதைக் குறிக்கோளாகக் கொண்டு, அவர் மக்களின் வாழ்வுடன் தொடர்பு கொண்ட எல்லாத்துறைகளிலும் பணியாற்றினார் - அந்தப் பெரும் பணியாற்றினார் - அந்தப் பெரும் பணியின், ஒரு பிரிவு, ஒரு பகுதிதான், அவர் மார்க்கத்துறையிலே கிளப்பிய புயல்! அந்தப் புயலின் வேகமும் கடுமையும் கண்டவர்கள், ஜான்ஹஸ், அந்த ஒரு காரியத்தை மட்டுமே செய்தவர், என்று எண்ணினார். அவரைக் கொளுத்திய கொடியவர்களும், அவருடைய அணிவகுப்பிலே நின்றஆதரவாளர்களும், ஜான்ஹஸ், ஆற்றிய பணியின் முழு உருவைக் காணவில்லை.

ஜன்ஹஸ், செக்நாட்டின் மக்களின், வாழ்வே, போலிமயமாக இருக்கக் கண்டார். சூதும் சூழ்ச்சியும், சகல மூளைகளிலும் நின்ற, தன் நாட்டு மக்களைத் தாக்கக் கண்டார். அரசியல், சமூக இயல் மத இயல், கலைத்துறை, எனும் எத்திக்கு நோக்கினாலும், செக்நாட்டு மக்களை, செக்கிழுக்கம் மாடுகாளாக்கும் நிலையே இருக்கக் கண்டார். ஜெபமாலை மூலம் ஆதிக்கம் செலுத்தினர், அன்னியர். துப்பாக்கிக் கொண்டும் அவர்கள் ஆதிக்கம் செலுத்தினர்! ஏடுகளைக் கொண்டும் அன்னியர் ஆதிக்கம் செலுத்தினர். படைவீரர், பாதிரிமார்கள், புலவர்கள் - எனும் மூன்று வகைச் சேனைகளும் சேர்ந்தே செகநாட்டைச் சிதைத் திடக் கண்டார். வழிபாட்டு முறையிலே, அறிவுக்குப் பொருந்தாத பல கேடுகள் புகுந்துவிட்டதை மட்டுமல்ல, செக்கோ நாட்டு மக்களின் வாழ்க்கை முழுவதிலுமே, நஞ்சு கலக்கப்பட்டிருப்பதைக் கண்டு கலங்கினார்.

நாட்டு வரலாறோ அஞ்சம் நெஞ்சர்களைப் படைவீரர்களாகக் கொண்டு, வெற்றி பல கண்டு, வீரவேந்தர்கள் பலர், வாழ்ந்துவந்தனர், ஓர் காலத்தில், என்பதைக் காட்டிற்று. ஆனால் நாட்டின் வீதிகளிலோ, ஜெர்மானியர்கள், ஆணவத்துடன், ராணுவ உடையுடன், உலவியும், உரத்த குரலில் பேசியும் இருந்திடக் கண்டார்! ஏடுகள் தன் தாய் நாட்டின் பழம் சிறப்பைக் காட்டி, என்ன பயன்! நாடு, சீர்குலைந்து கிடந்தது.

தாயகத்தின் தனிச் சிறப்பு தீட்டப்பட்டிருந்த, ஏடுகளைப் படிக்கும் போதும், கல்லூரியிலே, பேராசிரியராக இருந்ததால் பழம் வரலாறு பற்றி மாணவர்களுக்கு எடுத்துக் கூறும்போதும், ஜானஹஸ், பூரிப்படைவார் - ஆனால், தன் நாட்களிலே, நாடு இருந்த நிலையைக் காணும்போதோ, கண்கசியும்! பெயரே, மாறிவிட்டது! செக்கோ நாடு! தாயகம், தனிச் சிறப்புடன் இருந்த காலத்தில், தனிப் பெயரே இருந்தது - பொகீமியா என்று அழைக்கப்பட்ட நாடு, அன்னியரின் வேட்டைக்காடு ஆவதற்கு முன்பு, தனிப்பண்புடன் விளங்கிற்று, என்பற்கு, ஆதாரங்கள் ஏராளமாகக் கிடைத்தன, ஜான்ஹஸ், பேராசிரியராக இருந்த காலை. - ஏறத்தாழ, நம் நாட்களிலே, நாம், திராவிடநாடு எனும் தனிப்பெயருடன், தனிப்பண்புடன், தனிஅரசு செலுத்திய காலம் ஒன்று இருந்தது என்பதை, இன்று உணருகிறோமே, அதே நிலை!

பொகீமீயா! தாயகம்! அடிமைத்தளைகள் இல்லத நிலை! வீரர் வாழ்ந்த காலம்! சீரழிவு ஏற்படாத வேளை! ஐரோப்பிய உபகண்டத்திலே, அந்தப் பொகீமியாவுக்குத் தனியான ஓர் மதிப்பு, இருந்தது! தனிஅரசு தழைத்திருந்தது! அந்தப் பொகீமீயா, வரலாற்று. ஏடுகளிலே புதைந்து கிடந்தது - கண்ணெதிரே கிடந்ததோ, நலிவுற்ற, நிலைகுலைந்த நாடு - செக்கோ நாடு! - ஏறத்தாழ, இன்றை திராவிடத்தின் நிலையே தான்.

ஏடுகளிலே காணப்பட்ட தாயகத்தின் எழிலை, ஜான்ஹஸ், எடுத்துச் சொன்னபோது, யார் நம்பினர்? யார் மதிப்பளித்தனர்? பிதற்றல், என்றனர் சிலர்! வீண்பேச்சு என்றனர் பலர்! ஆமாம், அதனாலென்ன, என்று அலட்சியமாகப் பேசினர் பலர், அவர்கொண்ட ஆர்வம், மற்றவர்களுக்கும் ஏற்படச் செய்வது எளிதான காரியமல்ல. புதைபொருளைக் கண்டெடுக்கும் ஆராய்ச்சியாளர்கள், எங்ஙனம், ஒரு பாண்டத்தின் துண்டு, பழங்கருவியின் சிறுபகுதி, தகடுகளிலே, கீறல்போல் காணப்
படும் வரிவடிவம் ஆகியவற்றினைக் கொண்டு, ‘அன்றோர் நாள்’ இங்ஙனம் இருந்திருக்க வேண்டும் என்று தீர்மானிக்கிறார்களோ, அது போலத்தானே நெடுங்காலமாக நிலைகுலைந்து போன ஒரு நாட்டின், பழம் பெருமையைக் கண்டறிய முடியும். ஆராய்ச்சியாளர்களின் முடிவுகளைப் பாமரர், உடனடியாக நம்புவரோ! நம்பும் அளவுக்குப் பாமரருக்கு மனவளம் இருக்கமுடியாதல்லவா? அதுபோலத் தான், பொகீமீயாவின் பூர்வீகத்தை, நாடு உருமாறி, பெயர்மாறி, நிலைமாறி நலிந்து போயிருந்தபோது, யார் எடுத்துக் கூறினாலும், சுலபத்திலே நம்பவோ ஆர்வம் காட்டவோ, அந்த உன்னத நிலையை ஏன் மீண்டும் பெறலாகாது என்று எண்ணம் கொள்ளவோ எப்படிப் பாமரரால் முடியும்? பாமரர் மட்டுமென்ன! படித்தவரென்போர்களிலே, மிகப் பெரும் பாலோர் கூடத்தான்! பிணத்தை வைத்துக் கொண்டு மாரடிக்கும் பித்தன், என்பர்! பழங்கதையைக் கிளறி, புதிய விரோதத்தை வளர்க்கிறான் பையன், என்பா! நமது நாட்களிலே, நாம் நிந்திக்கப் படுகிறான் வாபன், என்பா! நமது நாட்களிலே, நாம் நிந்திக்கப் படுகிறோமல்லவா, திராவிடநாடு ஆரிய வேட்டைக் காடாகா முன்னம், வாழ்ந்த வகையை எடுத்துக்கூறும் போது! அதே நிலைதான், அந்நாளில், தன் நாட்டிலே, ஜான்ஹஸ், கண்டது. ஒரு நாட்டு மக்களில் பெரும்பான்மையினர் மறந்து போன, மதிப்புத்தர மறுக்கும் உண்மையை, நிலைநாட்டுவது, செங்குத் தான மலைமீது ஏறுவது போன்ற சிரமமான, காரியம் மட்டுமல்ல, செங்குத்தான் மலைமீது, வழவழப்பான மிதியடி போட்டுக்கொண்டு, சிறு தூறல் பெய்து கொண்டிருக்கும் வேலையில், ஏறுவது போன்ற, ஆபத்தான வேலையாகும்.

கண்டுபிடித்து விட்டானய்யா, யாருக்கும் தெரியாத மகாரகசியத்தை! -என்று ஏளனம் செய்வோர் ஒருபுறம்! சகலகலாவலலவன், வேறுயாருக்கும் புலப்படாதிருந்த சரித்திர உண்மையைக் கண்டு பிடித்து விட்டானப்பா, என்று, கேலி செய்வர்! மூளைக்குழப்பம், மனப்பிராந்தி! - என்று பேசுவர். வேறுவேலை இல்லை, சுடுகாட்டிலே சென்று, எலும்புகளைத் தோண்டி எடுத்து வந்து, விற்கப் பார்க்கிறான், விசித்திர வியாபாரி, என்பர் - வேறு பலப் பல கூறுகர்! எதுவரையில்? சொல்லுபவருக்குச் சலிப்பும் கோபமும் ஏற்படாமல், எதிர்ப்பையும் ஏளனத்தையும், பொருட்படுத்தாமல், அறிவைப் பரப்பும் பணியில் இடைவிடாது ஈடுபட்டு, மக்களின் அலட்சியப் போக்குக்கு, அதிர்ச்சி ஏற்படும்படி செய்து, உண்மை அவர்கள் உள்ளத்திலே, புகுவதற்கு வழி செய்யும் வரையில், கண்டவர்களும் கண்டனச் சொற்களை வீசியபடி தான் இருப்பர் - ஏமாளிகளை ஏவிவிட்டபடிதான் இருப்பர் - எதிர்ப்பைக் காட்டியவண்ணமே இருப்பர் - விரோதம் எனும் விஷத்தைக் கக்கியபடிதான் இருப்பர்! உண்மை எவ்வளவுக் கெவ்வளவு அதிக ஆழமாகப் புதைக்கப்பட்டுப் போயிருக்கிறதோ, அவ்வளவுக் கவ்வளவு, பாடு அதிகம் படவேண்டும், மக்கள் மன்றத்துக்கு, உண்மையைக் கொண்டுவந்து காட்ட. பலப்பல நூற்றாண்டுகளுக்கு முன்பு இருந்து, கபடரால் மறைக்கப்பட்டுப் போன உண்மையை, கயவரின் மொழி கேட்டுக் கேட்டுக் கருத்துத் தெளிவை இழந்துபோன மக்களிடம, கூறுவது, என்றால், சுலபமான காரியமா! உள்ள உரம் எவ்வளவு வேண்டும்? தன்னல மறுப்பு எவ்வளவு வேண்டும்! ஜான்ஹஸ், இந்த மகத்தான காரியத்தைச் சாதித்தார்! தாயகத்தின் பெருமையை, மக்களின் மனதிலே, மீண்டும் குடிஏறச் செய்தார்! மணி, மாசு படிந்திருக்கிறது - என்று மக்கள் உணரும்படி செய்தார்! தனி அரசும் தனிப் பண்பும் பெற்றிருந்த தாயகம், ஏன தாழ்நிலை பெற்றது, தளை பல கொண்டது என்பது பற்றிச் சிந்தித்தபோது ஒரு பெரும் உண்மை அவர்களுக்குக் கிடைத்தது. தாயகம் தாழ்நிலை அடைந்ததற்கு முக்கியமான காரணம், மூல காரணம், களத்திலே ஏற்பட்ட தோல்வி அல்ல - வீரம் குன்றிய தால் அல்ல - என்று அறிந்தனர்! தாயகம் தாழ்நிலை அடைந்த தற்குக் காரணம், தாய்மொழி அழிக்கப்பட்டதுதான் - என்பதை உணர்ந்தனர். மொழியை இழந்தோம், வாழ்க்கை வழியை இழந்தோம் என்று உணர்ந்தனர்.

பொகீமியா நாட்டு மன்னர்களும், கொலு மண்டபக் கோமான்களும், தாயத்தின் வீழ்ச்சிக்கத் தங்களையும் அறியாமலேயே, காரணமாக இருந்தனர்.

பொகீமீயர், வளமுள்ள, வீரக் கோட்டமாக விளங்கியபோது, அந்த வாழ்வும் வளமும் வீரமும் வெற்றியும், மக்களின் மன நிலையிலேயிருந்து பூத்திடுவன, என்பதை அறியாமல், தமது களிப்பு கேளிக்கையும், மட்டுமே, முக்கியமெனக் கருதிய, முடிதாங்கிகள், தாய் மொழி அழிக்கப்படுவதைக் கண்டும் காணாதாராக இருந்தனர். மொழி அழிந்தது, நாடும் அழிந்தது.

பொகீமீய அரச குடும்பத்தினர், ஜெர்மன் இளவரசிகளை மணம் செய்து கொள்ளலாயினர் - காதலர், நாட்டு எல்லையைக் கடந்தது!! ஜெர்மன் இளவரசிகளின் எழில், பொகீமீயா நாட்டு அரண்மனைகளிலே, பிரகாசித்தது. பூரித்தனர் பிரபுக்கள்! எனவே, அவர்களும், ஜெர்மன் நாட்டுச் சீமாட்டிகளைத் தேடிப் பெற்றனர். சின்னாட்களிலே மேட்டுக் குடியினருக்கு, நாகரீக சின்னமாகி விட்டது, ஜெர்மன் நாட்டு நாரீணிகளை பணம் செய்து கொள்ளம் முறை! இந்தக் களிப்பும், மதிப்பும், கட்டுக்கு அடங்கியதாக இருக்கவேண்டுமே என்பதிலே பெகீமீயச் சீமானக......... செலுத்தவில்லை. புள்ளிமான் துள்ளி விளையாடுவதைக் காணக் காணக் காட்சிதான்! அதற்கேற்ற அழகிய தோட்டம் அமைத்து, மான் ஓடி ஆடக் கண்டால், ஆனந்தமாகத்தான் இருக்கும். ஆனால் மான் ஆடுவதைக் காண்பதை மட்டுமே மனதிலே கொண்டு, மற்றதை மறந்து, தன் சிறு மதலையை, மான் தன் கொம்பினால் குத்திக் குடலை வெளியே கொண்டுவருவதை யமா கண்டு சகிக்க முடியும்! பொகீமீயச்சீமான்கள், அதையும் சகித்துக் கொண்டனர்!! ஜெர்மன் நாட்டு உல்லாசிகளின், கீதமும் நடனமும், கேளிக்கையும் மாளிகைகளிலே புதுவிருந்தாக அமைந்தது பூரித்தனர் பூமான்கள் ஆனால் அந்த அழகிகள், அழிக்கும் கருவிகளையும் உடன் கொண்டு வந்தனர் - அதனை அறியவில்லை, சீமான்கள்.

மணப்பெண்கள், தமது அழகை மட்டுமல்ல, பரிவாரமும் கொண்டு வந்தனர், தம்முடன். மாளிகையிலே, ஜெர்மன் மாது புகுவாள், பொகிமீயச் சீமாணின் மனைவியாக. அவளுடன் தோழிகள், பணியாட்கள், நண்பர்கள், இசைவாணன், நாட்டிய ஆசிரியன், கதை கூறுவோன், ஓவியம் தீட்டுவோன், எனும் பல்வேறு வகையிலே, பலப்பல ஜெர்மனியர் நுழைவர்! ஒவ்வொரு மாளிகையும் இது போலாயிற். பொகிமீயச் சீமான்களை மணம் செய்துகொண்ட ஜெர்மன் சீமாட்டிகள், தாம் குடிபுகுந்த இடத்திலே, ‘ஜெர்மன் மணம்’ கமழவேண்டும் என்றனர் - வேறோர் நாட்டில், வேறோர் இனத்தவர் உள்ள இடத்திலே, குடிபுகுந்தது விளங்கும் படி, சகலமும் பொகீமீய மயமாக இருந்துவிட்டால், உல்லாசிகளின் உள்ளம் உருகிவிடும் - எனவே பொகீமீய மாளிகைகளிலே. சகலமும் ஜெர்மன் மயமாக்கிக் கொண்டனர்.

பொகீமீயச் சீமான், தன் மாளிகையிலே, ஜெர்மன் சீமாட்டியை மட்டுமல்ல, ஜெர்மன் பாட்டு, ஜெர்மன் சித்திரம், ஜெர்மன் சமயல், ஜெர்மன் ஆசிரியர் என்ற முறையிலே, ஜெர்மன் வாடை வீசிடக் கண்டான்.

நாடு முழுவதுமா மாளிகைகள் இருக்கும்! மாளிகைகளிலே மட்டுந்தானே, இந்நிலை ஏற்பட முடியும்! பொகீமீய நாட்டு சாமான்யர்கள், ஜெர்மன் முலாம் பெறமுடியும்! அவசியமும் இல்லை - செலவும் அதிகம்!! ஆகவே சில காலத்துக்குள், பொகீமியாவி÷லே இருவேறு வாழ்க்கை வழிகள் - சூழ்நிலைகள் அமைந்துவிட்டன - மேட்டுக் குடியினர், ஜெர்மன் முலாம் பூசிக் கொண்டனர். - சாதாரண மக்கள், பொகீமியப் பண்புடன் இருந்தனர் - வேற வேறாகத் தெரியலாயிற்ற பேதம் - பேதத்தை முதலில் கவனிக்கவில்லை - பிறகு கவனிக்கவும் அதுபற்றிப் பேசவுமாயினர். என்னென்ன நடைபெற்றிருக்கக் கூடும் அந்நாட்களில், பொகீமிய மாளிகையிலே, என்பதைச் சிரமமின்றி யூகித்தறிய முடியும். அரசமன்றத்திலிருந்து திரும்புகிறான் பொகீமியச் சீமான்! அவனைத் தன் புன்கையால் வரவேற்கிறாள் ஜெர்மன் மாது. பிறகு. விழுந்து விழுந்து சிரிக்கிறாள் - சிரித்துவிட்டு, காரணம் கேடட கணவனிடம் கூறுகிறாள், “நாதா இன்றுதான் நான் உங்கள் நாட்டு நாட்டியத்தைப் பார்த்தேன் - அசல் குரங்கு குதிப்பதுபோலவே இருந்தது” என்று கூறுகிறாள். சீமானிடம் வேறு யாரும் அவ்விதம் கூறமுடியாது - கூறினால் கோபங் கொண்டு, “உங்கள் நாட்டு நாட்டியம் ஒழுங்கானதே! எருமை சேற்றிலே இறக்கியது போலிருக்கிறது” கன்று கண்டித்திருப்பான். ஆனால், கூறுபவள், தன்கோமளம்! அவளுடைய மொழியிலேயும் விழிலேயும் அவன் ஆனந்தத்தைக் காண்கிறான் - ஆமடி! தங்கம்! அதுகளின் ஆட்டம் அப்படித்தான் - குரங்காட்டம் தான்!-என்று கூறுகிறான், அவளை அணைத்தபடி! எங்கள் நாட்டியம் எப்படி? என்று கேட்கிறான், எழிலரசி, முதல்தரமானது! என்று கூறுகிறான் காதலால் ஏவலனானோன் - “நாதா! எங்கள் நாட்டு நாட்டியத்தை ஏன் தாங்கள் கற்றுக்கொள்ளலாகாது” என்று கெஞ்சுகிறாள் - அவன் ஆடக்கற்றுக்கொடுக்கிறாள் - அவன் ஆடக்கற்றுக் கொடுக்கிறாள் பொகீமிய மாளிகைளிலே, ஜெர்மன் கீதம், ஜெர்மன் நாட்டியம்! பொகீமியக் குடியானவன் இக்காட்சியைக் கண்டுவிட்டு, மெல்லியகுரலில் கூறிக்கொள்கிறான் “ஆட்டிப்படைக்கிறாளே!!” என்று. நாளாகவாக, ஜெர்மனி பொகீமியாவை, ஆட்டிப் படைக்கலாயிற்று - ஜெர்மன் மொழிதான் உயர்ந்தது - அதைப் பேசுவதுதான் உயர்ந்தது - அதைப் பேசுவதுதான் நாகரிகம் அம்மொழி பேகவோர்தான் மதிப்புக்குரியவர்கள் - ஜெர்மன்கலைதான் சிறந்தது, அதனை அறியாதார் ஏதும் அறியாதாரே! - பொகீமியாவிலே, இப்படிக்கருத்துப் பரவிவிட்டது! தாய்மொழி, தாயகத்தின் பழைய முறைகள் யாவும் பரிச்சிக்கப்பட்டன - அவை, பாமரரின் போக்கு என்று எள்ளிநகையாடப் படடன. இப்படியும் நடைபெற்றிருக்க முடியுமா என்று எண்ணுவர் எவரும்! பொகீமியாவில் மட்டு மல்ல, தாய் மொழியைத் தாழ்நிலைக்குக் கொண்டு வரவிடும் எங்கும் ஏற்படும், இந்த இழிநிலை! ஜெர்மன் மொழிதான், படித்தவர், பண்புடையோர், பேசும் மொழி, என்று பொகீமியாவிலே, கருத்துப் பரவிற்று. சோறுபோடு! சாறு கொண்டுவா! தண்ணீர் கொடு! - இது இன்றும் தாழ்ந்த தமிழகத்திலே, நாகரிகமறியாதார் பேச்சு என்றுதானே, சாதம் போடு - ரசம் கொண்டுவா - ஜலம் கொடு - என்று கேட்கும், ரசிகர்கள் கூறுகின்றனர்!
***

பூந்தோட்டம் காண எண்ணம் கொண்டு, வெறும் பொட்டலில், மலர்களை நித்த நித்தம் கொண்டு வந்து கொட்டி அக்காட்சியைக் கண்டு மகிழ்வது, பயனுடைய செயலாகுமா! அது போலவே, மணம் தரும் மல்லிகைத் தோட்டத்தை உடையவன், அங்கு அல்லியும் வேண்டும் என்று எண்ணி, அல்லி பூத்திடுவதற்கு ஏற்ற முறையிலே, தோட்டத்தைத் திருத்திட முற்பட்டு, அத்திருத்தம், ஏற்கனவே உள்ள மல்லியை அழிக்கும் விதமாவது கண்டும் கவலைப்படாமல் அல்லி கிடைத்திடும் - அகமகிழ்ந்திடலாம் என்று மட்டுமே கருதினால், அவனைக் கருத்தில் தெளிவுடையோனாகக் கொள்ள முடியுமா! மொழி, மக்களின் வாழ்க்கையிலே பூத்திடுவது - வாழ்க்கை வளம் பெறவும் உதவுவது. அத்தகைய மொழி, வளமற்ற நிலையில் இருப்பின், அம்மொழியை வளமாக்க, வளம்பெற்ற வேறு மொழிகளிலிருந்து சொற்களை எடுத்துக் கொள்வதும், அதன்மூலம், தமது மொழிக்குப் புதிய பொலிவும் வலியும் தேடுவதும் அவசியம்தான் - ஆனால் அதற்கு ஓர் அளவும் உண்டு அல்லவா? மொழி, வளமான இருக்கும் போது, வாழ்க்கையை வளமாக்குதற்கு வேண்டிய அளவு, அம்மொழிக்கு உரமும் திறமும் இருக்கும்போது, வேறுபல மொழிகளும் உலவுகின்றன, உரசுகின்றன, உறவு கொண்டாடுகின்றன, உறுமுகின்றன, என்ற காரணத்துக்காக, அம்மொழிகளிலே உள்ள சொற்களை எடுத்து, உள்ள மொழியிலே கலந்து தமது மொழியை உருமாறச் செய் வது, கருத்தற்ற செயல் மட்டுமல்ல, கேடுதரும் செயலுமாகும். இந்தக் கேட்டினைச் செய்வதுடன் மட்டுமின்றி, இது ஏதோ ஓர் திருத்தொண்டு என்றும் பேசுவோர் உள்ளனர் நமது திருநாட்டில் பல்வேறு மொழிகளும் கலந்து விளையாடும் மேடையாக வேண்டுமாம் தமிழகம்! அதற்காகவே, வடமொழிச் சொற்களை, வரவேற்று உபசரிக்க வேண்டுமாம்! அகதிகளுக்கு ஆவடி அம்பத்தூரும், தமிழருக்குச் சிலோன் பர்மா, தேயிலைக்காடும் தந்துவரும் நீதி போலவே தான் இதுவும்!! இந்தக் கேட்டினை நாõட்டுமொழிக்குச் செய்திடும் சீலர்கள், உலக வரலாற்றிலே, மொழியை இழந்ததால், இகழ்ந்ததால், அழிய விட்டதால், நாடு பல சீர்பேடு அடைந்ததைப் படித்து உணரலாம்.

ஜான்ஹஸ் காலத்துக்கு முன்பு, செக்கோ நாட்டிலே, இத்தகைய சீலர்கள் ஏராளமாக இருந்தனர். எனவே அவர்கள், தாய்மொழி, தோட்டக்காரனிடமும் வண்டியோட்டி‘டமும் அடைக்கலம் புகும் அளவுக்கு, ஜெர்மன் மொழி, மாளிகைகளிலும் அலுவலகங்களிலும் கொலுவிருக்கத் தொடங்கியதைக் கண்டு கலங்கவில்லை - மாறாக மகிழ்ந்தனர். தொட்டிலிலே, தாதியின் குழந்தை தூங்க, வீட்டு விளக்கு, வீதியிலே விம்மும் நிலை! எனினும், ‘சீமான்கள்’ இன்று இங்கு சில சீலர்கள் பேசுவது போலவே தான் பேசினர் - மொழி பல நுழைவது நல்லதுதானே! - என்று. முதலில் இவ்விதம், பிறகு, செக்நாட்டுச் சீமான்களின் செவிக்கு, ஜெர்மன் மொழிதான் இசைபோல் இனித்தது - தாய் மொழி, அவ்வளவு இனிப்பாக இல்லை! பிறகு ஜெர்மன் மொழி பேசத் தெரிந்தவன் என்றால் தான் பெருமை - தாய் மொழி மட்டுமே தெரியும் என்றால், இழிவு - எனும் கேடான நிலை பிறந்தது. மொழி அழிய வழி ஏற்பட்டது, பிறகு நாடு அழிந்தது - அன்னியரிடம் சிக்கிற்று. ஜெர்மானியர், வெளியார், என்றல்ல, தம்மிலும் மேம்பட்டவர்கள், தங்களுக்குப் புதிய அழகிய மொழியையும் அதன் மூலம் புதிய பண்பாட்டையும் கற்றுக்கொடுத்த கண்ணியர்கள் என்று கருதப்பட்டனர். அன்னியருக்கு இதைவிட உயர்ந்த நிலைவேறு என்ன இருக்கமுடியும்! ஆண்வம் அவர்களுக்கு எப்படி ஏற்படாமலிருக்க முடியும்? ஆதிக்கம் வளராமலிருக்குமா! வளர்ந்தது! செக்கோ நாட்டு மக்களைச் சீரழிக்கும் அளவுக்கு ஜெர்மன் ஆதிக்கம் ஓங்கலாயிற்ற. ஒரு தலை முறைக்குள், பெரியதோர் மாற்றம் - மக்களின் மனப்பான்மையில், தோற்றத்தில்! உடையில், உணவில், ஊர்ப் பெயர்களில், எல்லாவற்றிலும், மாறுதல் ஏற்பட்டுவிட்டது. செக் நாட்டு மொழி வழி அமைந்த ஊர்ப்பெயர்கள், கேவலமாகக் கருதப்பட்டன. இப்போது, தமிழகத்தில் சோற்றுக் கடை - என்று சொன்னால் அதனை பட்டிக்காட்டானின் பக்குவமற்ற பேச்சாகத் தானே கருதுகிறார்கள், ஒட்டலுக்கும் - சுபேய்க்கும் - லாட்ஜுக்கும் போகிறவர்கள்! அதே போல!! முதுகுன்றத்துக்குப் போக முடியாதே இப்போது - விருத்தாசலத்துக்குத்தானே போகத் தெரியும் நமது மக்களுக்கு! மறைமலை, வேதாசலம் என்று மாறினதுதானே, நமது வளர்ச்சி என்று பேசுகின்றனர், சீலர்கள்! திருமறைக்காடு, என்பது தாம் வாழும் வேதாரண்யம் என்று சர்தார் வேதரத்தினத்துக்கே தெரியாதே! இதேபோல, அங்கு, மொழியை இழக்கலாயினர், செக்மக்கள்.

தம்பி! என்ன புத்தகம் படித்துக் கொண்டிருக்கிறாய்? - என்று கேட்டால், என்ன பதில் கிடைக்கும் தமிழ்நாட்டில், இன்று! கலித்தொகை என்றா? பரிபாடல் என்றா? ஐங்குறு நூறு என்றா? அகம் என்றா புறம் என்றா? அல்ல - அல்ல! அல்லி அரசாணி மாலையாக இருக்கும், பழமை விரும்பியாக இருந்தால், அல்லது அலிபாபா கதையாக இருக்கம் புதுமை விரும்பியாக இருந்தால்! செக்கோ நாட்டுக்கும் அன்று இதே நிலை ஏற்பட்டது. அந்த மக்களுக்கு, ஜெர்மன் நாட்டுச் சிறப்பு, வரலாறு, அந்நாட்டு வீரா பெருமை, கவிதைச் சிறப்பு, தெரிந்திருந்த அளவுக்கு, தாய்நாட்டைப் பற்றித் தெரியாது. குலோத்துங்கன், கரிகாலன், வில்லவன் கோதை இங்கு எவ்வளவு மக்களுக்குத் தெரியும்! அதுபோலத்தான்! சீரழிவு ஏற்பட்ட நிலை.

நாடு கேடுற்றதன் காரணம், மொழியை வேண்டுமென்றே கெட விட்டதுதான் என்பதை உணரச் செய்து, மீண்டும் தாய் மொழிப் பற்று வளரும் வகை கண்டார், ஜான்ஹஸ். நாட்டுக்கு உண்மையான விடுதலை கிடைக்க வேண்டுமானால், மொழிக்கு விடுதலைவேண்டும் என்ற அடிப்படை உண்மையை உணர்ந்து உரைத்தார். தாய் மொழி தனிச்சிறப்புடன் இருக்க, அதனைத் தலைமுறை தலைமுறையாக நம்மவர் போற்றி வளர்த்துப் பயன் பெற்றிருக்க, எதற்காக வெளிநாட்டவரின் மொழி இங்கு அரசாள வேண்டும் - என் அந்த மொழிக்கு புலவரும் புவியாள்வோரும் அடி பணியவேண்டும் - நமது முன்னோர்கள் முழு வாழ்வு வாழ்ந்தனரே தாய் மொழியின் துணை கொண்டு - நாம் ஏன் அதனைப் புறக்கணித்துவிட்டு, புதிய மொழியிடம் சிக்கிச் சீரழிய வேண்டும்? நமது நாட்டிலே, தாய்மொழி போற்றி வளர்க்கப்பட்டபோது, நாடு இருந்த நன்னிலையுடன், இன்றையச் சீரழிவை ஒப்பிட்டுப் பாருங்கள். அன்று, என்ன செயலைச் செய்து முடிக்காமலிருந்தனர் - தாய் மொழி அவர்களை எவ்வகையிலே தவிக்கவிட்டது - இன்று, அன்னிய மொழியின் அடி வருடியதால், என்ன பயனை, பெருமையைக் கண்டுவிட்டோம்! செக்நாட்டு மக்களே! செக் மொழியில் பேசுங்கள் - எழுதுங்கள்! பாடல்கள் செக்மொழியிலே இருக்க வேண்டும! பணி மனைகளிலே, செக்மொழியிலேயே பெயர் களைப் பொறித்திடுங்கள்! செக்மொழியிலேயே, ஊர்ப் பெயர்கள் இருக்கவேண்டும்! அவசியமற்ற அன்னிய மொழிகளை, சொற்களை, பழக்க வழக்கங்களை, பண்பாட்டை, அகற்றுங்கள் - என்று, மொழி முனையிலே தான், உரிமைப் போரின் முதற் கட்டத்தைத் துவக்கினர். வெற்றி விரைவிலே கிடைத்தது. தமிழில் பேசு! தமிழில் எழுது! தமிழ் இசை வேண்டும்! தமிழ்ப் பெயர்களைச் சூட்டுங்கள்! - என்று நாம் துவக்கியது போலவே, அங்கு! இங்கு, இன்று ஓரளவுக்கு வெற்றி கிடைத்திருக்கிறது - அங்கு அன்ற, இதைவிடப் பெரிய அளவிலே, வெற்றி கிடைத்தது. இங்கு, நாராயணசாமி நெடுஞ் செழியனாகி, சீனுவாசன் செழியனாகி, சோமசுந்தரம் மதியழகனாகி, மாணிக்கவாசகம், மணி மொழியாராகி, கலியாணசுந்தரம் மணவழகனாகி, ராஜாமணி அரசியல் மணியாகி, இமயவரம்பன், எழிலரசன், இளஞ்சேரன், கூத்தரசன், நெடுமாறன், என்று தமிழ் தழைத்திடும் புதுநிலை காண்கிறோம் - களிப்புடன். இது, செக்கோ நாட்டிலே, அந்நாளில், மிக மிக அதிகமான அளவு வெற்றியுடன் நடைபெற்றது.

“அக்ராசனாதிபதி அவர்களே! மகா ஜனங்களே! இன்று அடியேன் இராமாநுஜ தாசன், உபன்யாசம் செய்ய உத்தேசித்திருக்கும் விஷயம் என்னவென்றால், ஹரிஹரப் பிரம்மாதியர்களும், வந்த நாரத மகரிஷியைச் சகல சமயங்களிலும் நாடிவந்தனரோ அப்பேர்க்கொத்த நாரதப் பிரம்மத்தின் லீலா விநோதங்களைப் பற்றியாகும்” - என்று யாராவது பேசக் கேட்டால், இப்போது தமிழகம் கைகொட்டிச் சிரிக்கும் நிலைபிறந்துவருகிறது. ஊர்ப்பெயர்கள் மட்டுமல்ல, திருத்தலங்களிலே உள்ள ‘சாமிகளின்’ பெயர்களும் கூடா, தமிழ்ப் பெயர்களாக்கப்பட்டு வரும் நிலையைக் காண்கிறோம், கூட்டங்களில் தலைவர், வீற்றிருக்கிறார், அக்சாசனர்கள், மிக மிகச் சொற்பம்! சொற்பொழிவுகள் - சொற்பெருக்கு - பேருரை, இவைகள், தமிழகத்திலே, கேட்கின்றன. உபன்யாசம் - பிரசங்கம் - குறைந்துவிட்டன! விவாக சுப முசுர்த்தம் மிக மிகக் குறைந்த அளவாகி, திருமணம், வாழ்க்கைத் துணை ஒப்பந்தம், ஆகியவைகள் பரவியுள்ள நாட்களில் நாம் வாழ்கிறோம். தர்ம யுத்தம் அல்ல, அறப்போர்! சேனாதிபதி கரியப்பா, அல்ல, தளபதி கரியப்பா! காந்தியார் ஜென்ம நட்சத்திரம் அல்ல, பிறந்தாள்! - இப்படி, தமிழாக்கம் எங்கும் நடைபெறக் காண்கிறோம் - களிக்கிறோம். இடையே சில ....இருக்கத்தான் செய்கிறார்கள். தேடித் தேடிக் கண்டுபிடித்து, அன்னிய மொழியைப் புகுத்துபவர்கள எனினும், நாடு நாடுவது, தாய் மொழியை என்பது நன்கு விளங்கிவிட்டது.

செக்கோ நாட்டிலேயும், இதே போலத்தான், மொழிப் பற்றினை முன்னணி கொண்டுவந்து நிறுத்தி பணி புரிந்து வெற்றி பெற்றனர். செக் நாட்டவர், ஜெர்மன் மொழியிலே பேசிடக் கேட்டால், பேசலாயினர்! பணி மனைகளிலே ஜெர்மன் பொழியிலே, பெயர் பொறித்திருந்தால், கேலி செய்த தாய் மொழியில் பெயர் சூட்கேஸ்கள், தீட்டுங்கள், என்று கூறுவது இந்த விழிப்பும் எழுச்சியும், செக் நாட்டிலே ஏற்பட்டு, ஜெர்மன் மொழியிடம் இருந்த மோகத்தைப் பயத்தையும், ஓட்டலாயிற்று, இங்கு நாம், முனிசியாலிடிகளை நகராட்சிகளாக்க வேண்டும், கமிஷனர்களை ஆணையாளர்களாக்க வேண்டும் ஆபீசுகளை அலுவலகங்களாக்க வேண்டும், அப்பீஸ் கபே, மாடன் லாட்ஜ், மெரினா ஓட்டல், மகாலட்சுமி பவன், ராயல் ரெஸ்டாரெண்டு, என்பவைகளை எல்லாம் தமிழாக்க வேண்டும். செக்கோ நாட்டவர், இந்தத் துறையிலே. வெற்றி பெற்றனர், ஜான்ஹஸ் முக்கிய, பணியின் பயனாக. வீறு கொண்டெழுந்த ஜிஸ்காவின், யினர், இந்தத் துறையிலே, மிக அதிகமாக வெற்றி பெற்றனர். இறைவனின் வீரர்கள் என்ற பெயருடன் விளங்கி, ஜிஸ்காவின் தோழர்கள், மிகத் தீவிரமாகப் பணி புரிந்து, செக்மொழியை வளமுள்ளதாக்கினர். புதிய புதிய கவிதைகள் இயற்றினர்! கல்லூரிகள் புதிது புதிதாக, எங்கு செக்மொழிக்கே உயர்வு! அம்மட்டுமா! இந்த எழுச்சி, உச்சநிலை அடைந்து, 1500ம் ஆண்டு, பில்சென் என்ற நகரில், செக்மொழி பேசாதவர்களுக்கு, ஊர்வாசி என்ற உரிமை தர முடியாது என்ற உரிமை தர முடியாது என்று தனிச் சட்டமே இயற்றினர்! இந்த எழுச்சியைக் கண்ட பிறகுதான், இனி, செக்நாட்டு மக்களை அடக்கி ஆளமுடியாது என்று ஜெர்மானியர் உணர்ந்தனர். தாய்மொழியைச் சிதைத்துவிட்டோம், எனவே தாய்நாடு என்ற எண்ணமே அழிந்துபோயிருக்கும், நமது ஆதிக்கம் இனிக் குன்றாது என்று எண்ணியிருந்தனர் எத்தார்கள். மீண்டும் தாய்மொழி தலைதூக்கவே, இனி நமது ஆதிக்கம் நிலைக்காது என்பதை அறிந்து கொண்டனர். செக்கோ நாட்டிலே எத்திக்கு நோக்கினாலும் தாய்மொழி மணம் வீசிடக் கண்டனர். செக்மொழி பேசுவோரே பெரும்பான்மையினர், அவர்களிடையே உலவி ஜெர்மன் மொழிபேசும் தாங்கள் அன்னியர் என்பது விளக்கமாகி விட்டது. இரண்டறக் கலந்துவிட்டது நமது பண்பாடு, செக்கோ நாட்டின் கனிப்பண்பு இருக்குமிடம் தெரியாமல் மங்கி மடிந்துவிட்டது, என்று மனப்பால் குடித்தனர் - ஆனால் தாய் மொழிப்பற்றுத் தலைநிமிர்ந்து நின்றிடக் கண்டனர், இனி நமது ஆட்சி நிலைக்காது என்பதை அறிந்தனர் - அஞ்சலாயினர். இதே நிலையில் தான், ஜிஸ்காவின் வீரப்படையும் தாக்கலாயிற்று! விழிப்புற்ற மக்கள், வீறுகொண்ட மக்கள், நடத்திய தாக்குதல், ஜெர்மன் ஏகாதிபத்திய வெறியர்களை விரட்ட மட்டுமல்ல, ஐரோப்பிய நாடுகள் பலவற்றிலும் உள்ளவர்கள் வியந்துபோக் கூடிய விதமாக வெற்றி தந்தது. ஜிஸ்கர், குருடன் தான் - ஆனால் அவன் பக்கம் திரண்டெழுந்த மக்கள், புத்தொளி வீசிடும் கண்ணினர் - தாய்மொழி காத்திடும் வீரர்கள்! எனவேதான், வெற்றிமேல் வெற்றி கிடைத்தது, அந்த வீரப்படையினருக்கு - விடுதலை கிடைத்தது தாயகத்துக்கு.

தாய்மொழிக்கு ஏற்பட்ட தாழ்நிலையைப் போக்கி, மொழிப் பற்றின் மூலம் நாட்டுப் பற்று பெற்று,தாயகத்தைத் தருக்கரின் ஆதிக்கத்திலிருந்து விடுவித்து, மீண்டும் நாட்டுக்கு நல்லநிலை ஏற்படச் செய்தனர், செக்கோ நாட்டு விடுதலை வீர்கள்.

ஒரு நாட்டு மக்களின் உள்ளத்தை உருக்குலைக்க, அவர்களின் வாழ்க்கை முறையைக் கெடுக்க, அவர்களின் மொழியைச் சிதைத்தால் போதும் என்று ஆதிக்கக்காரர்கள் எண்ணி, திட்டமிட்டு வேலை செய்து வெற்றி கண்டனர். அந்தச் சூட்சமத்தை அறிந்து கொண்ட ஜான்ஹ போன்றார், தாய்மொழியை அரியாசனத்திருக்கச் செய்வதன் மூலம் தாயகத்தை விடுவிக்க முடியும் என்று திட்டமிட்டு வேலை செய்து வெற்றி பெற்றனர்.

மொழி அழிந்தது, வாழ்வும் குலைந்தது - மொழி தழைத்தது வாழ்வும் வளம் பெற்றது.

மொழி முனையிலேயே போராட்டம்! மொழி மூலமே வெற்றி தோல்வி, வாழ்வு தாழ்வு, தன்னாட்சி, வீழ்ச்சி என்று அமைந்த அற்புதமான வரலாறு, செக்கோ நாட்டுடையது. வீறு கொண்டெழுந்து விடுதலை பெற்ற செக்மக்களின் வெற்றியின் காரணத்தை அறிந்துகொண்ட வஞ்சக நினைப்பினர், மீண்டு ஓரசந்தர்ப்பத்தை எதிர்பார்த்தவண்ணமிருந்தனர், செக்கோ நாட்டைச் சிதைக்க. அந்தச் சந்தர்ப்பமும் கிடைத்தது.

ஜான்ஹஸ், நாட்டுக்குப் புதிய நிலையை உண்டாக்கியவர் - எல்லாத் துறைகளிலும், அவருடைய முயற்சியினால் ஓர் மறுமலர்ச்சி ஏற்பட்டது என்பதைக் குறிப்பிட்டிருந்தோம். இதிலே அவருடைய உயிருக்கு உலைவைத்தது, மார்க்கத் துறையிலே அவர் மூட்டிய புரட்சி. கத்தோலிக்க எதிரிமார்களின் போக்கை, ஆதிக்கத்தை, அவர் கண்டித்தார் அந்த மதக் குருமார்கள், கத்தோலிக்கர்கள் மட்டுமல்ல, ஜெர்மானியருமாவர்! எனவே ஜான்ஹஸ், அவர்களை எதிர்த்தபோது, அவர் ஒரே சமயத்தில். ஒரே தாக்குதலின் மூலம், இரு எதிரிகளை, இரு கேடுகளை ஒழிக்கும் ஒப்பற்ற காரியத்தைச் சந்தித்தார்.

பாருங்கள்! மதகுருமார்களை! ஜெர்மன் ஆதிக்கக்காரர் களை! அவர்களின் ஊழல் நெளியும் வாழ்க்கையை, ஆதிக்க வெறியைக் கவனியுங்கள். அவர்கள் உங்களை ஆட்டிப் படைக்க ஏன் அனுமதிக் கிறீர்கள! உங்கள் ஆத்மாவை அவர்களிடம் ஒப்படைக்கிறீர்களே - ஆண்டவனுக்கே சகிக்காதே இது - என்று ஜான்ஹஸ் பேசியபோது, மக்கள், மதக் குருமார்களின் மமதையையும் அதேபோது, ஜெர்மானிய ஆதிக்க வெறியையும், வெறுக்கவும், எதிர்க்கவும் முன்வந்தனர். ஜெர்மன் ஆதிக்கம் ஒழிந்தது- மதத்தின் கொடுமையும் ஒழிந்தது. அந்த நாட்களிலே, ஜானஹஸ் கூட்டத்தார் நடத்திய பிரசாரம் ஏறத்தாழ, இன்று சுயமரியாதைக் கட்சியினராகிய நாம் நடத்தும், பிரசாரம் போன்ற தானே இருந்திருக்க வேண்டும்.

நாம் “ஆரிய ஆதிக்கம் ஒழிய வேண்டும்! பார்ப்பன ஆதிக்கம் ஒழிய வேண்டும்.” என்று பேசும் போது, அயலாரின் ஆதிக்கத்தை ஒழிக்கும் வேலையையும் மதத்தைக் கருவியாக்கிக் கொடுமையையும் எதிர்க்கிறோம் என்றுதானே பொருள்.

பார்ப்பனர் இன்று பிறவிக் குருமார்களாகி, புரோகித வகுப்பாராகி இருப்பது போலன்றி, வேறோர் வகுப்பார், இதே நிலையிலிருந்து கொண்டு, இதே காரியம் செய்து வந்தால், நாம் எதிர்க்காமல் இருந்து விடுவோமா? ஒருக்காலும் இல்லை! பார்ப்பன வகுப்பினர், புரோகித வகுப்பினராக இருந்து கொண்டு ஆதிக்கம் செலுத்துவதால், புரோகிதம் ஆட்சிமுறை பொதுமக்களைச் சுறண்டும் முறையாகையால், அந்த முறையை ஒழிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள நாம், பார்ப்பன ஆதிக்கம் ஒழிக என்ற குறிச் சொல்லைக் கூறுகிறோம். இதே நிலையில் பண்டார வகுப்பார் இருந்தால், பண்டார ஆதிக்கம் ஒழிக என்று இருக்கும் நமது போர்முழக்கம் - பார்சிகள் இதே காரியத்தைச் செய்ய முற்பட்டால், பார்ப்பன ஆதிக்கம் ஒழிக என்று கூறுவதற்குப் பதிலாக பார்சி ஆதிக்கம் ஒழிக! என்று முழக்கமிட்டிருப்போம்.

பகை, ஒரு வகுப்பாரிடம், துவேஷம் ஒரு ஜாதியாரிடம் என்பதா இதன் பொருள்! எப்படியோ, ஒரு ஜாதியார், ஒரு வகுப்பார், நமக்குப் பிடிக்காததும்,நல்லறிவாளர்களால் கண்டிக்கப்படுவதும் மக்களின் அறிவையும் பொருளையும் நாசமாக்குவதுமான, புரோகித ஆட்சியை நடத்திக் கொடுக்கும் நிலையில் உள்ளனர் - எனவே தான், நாம் அந்தப் புரோகித ஆதீகசுகத்தை எதிர்க்கும். போது, அந்த எதிர்ப்பு, பார்ப்பன எதிர்ப்புப்போல, பார்ப்பனத் துவேஷம் போலத் தெரிகிறது.

ஏழைகளை, அதிக வட்டி வாங்கிக் கொடுமைச் செய்யும் முறையை எதிர்க்கும்போது, யார், அந்த முறையை அதிகமாக முன்னின்று நடத்துகிறார்களோ, அவர்களைத் தானே குறிப்பிட்டுப் பேசத் தோன்றும். மார்வாடி ஆதிக்கம் ஒழிக! காபூலின் ஆதிக்கம் ஒழிக! - என்று தானே முழக்கம் எழும். இதனால் காபூலின் மீதும், மார்வாரி மீதும் துவேஷத்தைக் கிளப்புவதிலே நாம் ஏதோ சுவை காண்கிறோம் என்றா பொருள்! காபூலி காபூலிலும், மார்வாரி மார்வாரிலும் இருந்து கொண்டிருக்கும் நிலையில் நாம், சுதாவது எதிர்த்திருக்கிறோம்! அவர்கள் இங்கு புகுந்து - புகுந்ததுடன் நில்லாமல், - நமது மக்களின் வாழ்வை நாசமாக்கும், அனியாய வட்டித் தொழிலை நடத்துவது கண்டுதான், அந்த முறையை எதிர்க்கும் பணியில் ஈடுபட நேரிடுகிறது.

இந்த விளக்கம் தரவோ, பெறவோ, ஏற்ற சூழ்நிலை அமையாத காரணத்தால், நாம் இன்று பார்ப்பனத் துவேஷி என்று கூறப்படுகிறோமே, அதேபோலத்தான், ஜான்ஹஸ் கூட்டத்தார் மீது பழியும் குற்றச்சாட்டும் சுமத்தப்பட்டது.

சமயம் பார்த்துக் கொண்டிருந்தனர் ஜெர்மானியர், செக்கோ மக்களைச் சிறைக்க.
***

அந்த நாட்களிலே, இருந்து வந்த அரசியல் அமைப்பின் படி, ஆஸ்திரிய நாட்டு மன்னன், இரண்டாம் பொடினாண்டு, செக்கோ நாட்டுக்கும் மன்னனாக வேண்டிய நிலை வந்தது. பொடினாண்டு, ஹாப்ஸ்பர்க் வம்சம் - ஜெர்மன் ஆதிக்கக் காரரின் தலைவன் - கத்தோலிக்க மார்க்கத்தின் காவலன்! எனவே அவன், மன்னனாவதை, செக்கோ நாட்டுமக்கள் எதிர்த்தனர். போர் மூண்டது - பெர்டினாண்டுக்கும் செக் மக்களுக்கும். 1620-ம் ஆண்டு, மக்கள் தோற்ற விட்டனர். - பெர்டினாண்டு பெருவெற்றி பெற்றான் - செக் மக்களை ஆளத்தொடங்கினான் - ஆளவா! - மாளச் செய்யலானான்.

வெள்ளை மாலைப் போர் என்று குறிக்கப்படும் இப்போர் செக்கோ நாட்டுமக்களை, அடிமைப் படுகுழியில் வீழ்த்தும் சம்பவமாயிற்று, வெற்றி, வெறியைக் கிளப்பிற்று! வீழ்ச்சியுற்ற மக்களை உருத் தெரியாமல் ஒழிக்கும் முயற்சியில் ஈடுபடலானான்.

“என்னையா எதிர்த்தீர்கள்! என் ஆட்சியையா, கூடாது என்று கூறினீர்கள். இதோ வாகைசூடிவந்திருக்கிறேன், காட்டுகிறேன், எனக்குள்ள பலத்தை” என்று மட்டும் கூறி, யாரார், தன்னை எதிர்க்கும் ராணுவ நடவடிக்கையிலே முன்நின்றனரோ, அவர்களைச் சிறையிலிட்டோ கொன்றோ, கோபத்தைத் தீர்த்துக்கொள்வது தான், கொடுங்கோலனுக்கும், வழக்கமாக இருந்துவந்தது.

பெர்டினாண்டு இந்த அளவுடன் நின்றுவிடவில்லை. செக் மக்கள் தன்னைமட்டுமல்ல, ஜெர்மன் ஆதிக்கத்தை, அதை மட்டுமல்ல, கத்தோலிக்க ஆட்சிமுறையை, எதிர்த்தனர் - தாய்மொழி - தன்னாட்டுக் கலை - என்று இறுமாப்புடன் பேசினர் - அன்னிய நாகரிகம், மொழி ஆகாது என்று ஆர்ப்பரித்தனர் - எனவே, இவ்வளவுக்கும் சேர்த்துப் பழிவாங்கியாக வேண்டும் என்று வெறி கொண்டான். திட்டமிட்டுப் பழிவாங்கலானான்.

செக்நாட்டுப் பெரும் பண்ணைகளைப் பறிமுதல் செய்தான் - ஏழைகளுக்குப் பங்கிட்டுக்கொடுக்கவா? அல்ல! - தன் படைவீரர்களுக்குக் கொடுத்தான்! செக்மாளிகைகளிலே, ஆஸ்திரியச் சீமான்கள் செருக்குடன் உலவலாயினர்! மாதா கோயில்களில் இருந்த புராடெஸ் டெண்டு பாதிரிகளை விரட்டினான் - கத்தோலிக்கக் குருமார்களைக் கொலுவீற்றிருக்கச் செய்தான் - யார் இவன்? செக்மொழியின் மேன்மையைப் பேசித் திரிந்தவனா? பிடி! அடி! சுடு! - என்று உத்தரவு பிறந்தது.

செக்மக்களுக்கு, தாய் மொழியிலே இசை இருக்கவேண்டுமென்று புதிய பாடல்கள் இயற்றியவனா இவன்! போடு சிறையில்! என்று உத்தரவு பிறந்தது.

இதென்ன குவியல்? ஓஹோ! செக்மொழியிலே உள்ள ஏடுகளா! எடு தீப்பந்தத்தை! கொளுத்து இவைகளை!! - என்று உத்தரவு கிளம்பிற்ற.

செக்மொழி ஆராய்ச்சி நிலையம்! - பெயரைப்பார்! இடி, கட்டிடத்தை!

இதுபோன்ற பல கொடுமைகள் செய்யப்பட்டு, செக் நாட்டுமக்களின், தனிப்பண்பு அழிக்கப்பட்டது - நாச வேலை நடத்தப்பட்டது.

மீண்டும் தாய்மொழிக்குத் தாழ்நிலை வந்தது. செக்நாட்டு மொழி, சீரழிவானது என்று பேசப்பட்டது, செக்நாட்டிலேயே!

ஜெர்மானிய மொழியே உயர்ந்தது, உயர்ந்தோர் பேசும் மொழி என்று கூறப்பட்டது.

தேவ பாஷையல்லவா, சமஸ்கிருதம், இப்போதும், மயிலை அன்பர்களின் கருத்துப்படி!

நமஸ்காரமும் - ஆசீர்வாதமும் தானே, உத்கிருஷ்டமான வாசகங்கள் அவர்களின் கருத்தின்படி.

செக்கோ நாட்டிலே பெர்டினாண்டு பெற்ற வெற்றி செக்மொழியை அழிக்கும் காரியத்தைச் செய்யலாயிற்று, வேகமாக, பயங்கரமான முறையிலே!

செக்மக்கள், ஏதும் அறியார்! மொழி, வளமற்றது! இலக்கியம், அவர்களுக்குக் கிடையாது! பண்பு, தெரியாது! அடிமைகள்! மூடமதியினர்! அவர்களின் மொழி காட்டு பாண்டிக்காலத்தது - கவர்ச்சியற்றாது என்று, ஆணவமாகப் பேசினர்.

இன்று, இங்கு, கூறவில்லையா தமிழகனுக்கென்று ஒரு தனிக்கலை இல்லை, தமிழ்ப் பண்பாட்டு விளக்கமாக ஒரு இலக்கியமில்லை, உள்ளது அவ்வளவும், தேவபாஷையின் தழுவுதலால் கிடைத்தவை, என்று!

எத்தர் அதுபோல் கூறினாலும் பரவாயில்லை, கோபமும், பிறகு விழிப்பும் ஏற்படும்! ஏமாளிகள் இதனை ஏற்றுக் கொண்டு பேசுகிறார்களே!!

திருக்குறள் கூடத் தமிழனின் பண்பு விளக்கத்துக்கான தனிச் சிறப்புள்ள நூல், என்று கூறமன மற்று, திருக்குறள், வடமொழியிலுள்ள சுக்ர நீதியின் மொழி பெயர்ப்பு - வழி நூல் - முதல் நூலல்ல என்று பேசும் சீலர்கள், தமிழ் இனத்திலேயே உள்ளனர் அல்லவா? இது போன்ற இழிநிலையை; பெர்டினாண்டு, செக்கோ நாட்டிலே ஏற்படுத்திவிட்டான்! தாயகம் அடிமை நாடாயிற்று! தாய்மொழி மீண்டும் தோட்டம் வயல், காடுமேடு களனி ஆகிய இடங்களுக்குச் சென்று பதுங்கி வாழலாயிற்று! அடிமைகள் - கூலி மக்கள் பேசும் மொழியாகிவிட்டது, மொழி. ஆட்சி அலுவலுகங்கனிலே, பல்கலைக்கழகங்களிலே, ஜெர்மன் மொழி ஆதிக்கம் செலுத்தலாயிற்று. வீழ்ச்சி மீண்டும்! தாய்மொழியை அழித்து, அதன்மூலம், நாட்டை நிலைகுலையச் செய்யும் திட்டம் மீண்டும்! இந்தக் கொடுமையான நிலையிலே, செக்கோ நாடு, மூன்று நூற்றாண்டுகள் இருக்க நேரிட்டது - மொழி இழந்து - வாழ்க்கை வழி இழந்தது.
***

தாய்மொழி இகழப்பட்டு, தருக்கரின் மொழி, துரைத்தன மொழியாக்கப்பட்ட காரணத்தால், செக்கோ நாடு, சீரழிவுபட்டது. மீண்டும் ஜெர்மன் ஆதிக்கம் தலைதூக்கிற்று.

கருத்துக் குழம்பிய சிலர், உண்மையிலே÷ ய தமது தாய் மொழியை விட, ஜெர்மன் மொழி வளமானது, உயர்ந்தது என்று நம்பவுமாயினர். நுண்ணறிவினருக்குத் தெரியும், செக்மொழி, எந்த வகையிலும், பிறமொழிக்குத் தாழ்ந்ததல்ல, என்பது.

உயர்ந்த மொழியோ, உருக்குலைந்த மொழியோ, அது என் சொந்தமொழி என்று ஆர்வமிக்கவர்கள் கருதினர். ஆயினும் ஆதிக்காரர், மிக மிகக் கொடுமையாகச், செக்மொழியை அழிக்கலாயினர்.

ஒரு மொழி துரைத்தனத்திலே இடம்பெற்றுத் தரக் கூடயதல்ல என்ற நிலைபெற்றுவிட்டால், பிறகு, அம்மொழிக்கு எங்ஙனம், செல்வாக்கு இருக்கும்? சட்டம், தாய் மொழியில் இல்லை - கடவுள் சன்னிதானத்திலே தாய்மொழி இல்லை, மருத்துவ மனைகளில் தாய்மொழி இல்லை, மருத்துவமனைகளில் தாய்மொழி இல்லை, என்றால், மக்கள், தாய்மொழியில் புறக்கணிக்கத்தானே செய்வார்கள். ஒரு நாட்டின் நாணயமறையை, அந்நாட்டுக்கு ஏற்படும் முரைத்தனம் திடீரென ஏற்க மறுத்துவிட்டால், பிறகு, அந்த நாணயத்திலே, வெள்ளியும் தங்கமும் இருப்பினும் கூட மட்டமாகத் தானே மக்களால் கருதப்படும். அது போன்றே, இலக்கிய வளம் நிரம்பியதாக இருப்பினும், மூதாதையர் போற்றி வளர்த்ததாக இருப்பினும், துரைத்தனத்தார், அந்தமொழியை ஏற்க மறுத்துவிட்டால், செல்லாக் காசின் நிலைதானே பெறும்! பெரும்பாலான மக்களின் கண்களுக்கு, உயர் நிலையிலிருப் போராகக் காணப்படுபவர்கள், உத்தியோக மண்டலங்களிலே உள்ளவர்கள், அரச மன்றத்திலிருப்போர், அறிவு பரப்பும் கல்வி நிலையங்களிலிருப்போர், எம்மொழியைப் போற்றி வருகிறார்களோ, அந்த மொழியைத் தானே மேலானது என்று பாமரர் கருத நேரிட்டுவிடும்.

மகன் பேசும் ஆங்கிலத்தைக் கேட்டு வியப்படையும் தந்தை, மேலதிகாரி பேசும் ஆங்கிலத்தைக் கேட்டு ஆச்சரியப்படும் ஊழியர், நம் தமிழகத்திலே அதிகரித்ததும், தானாகவே, தாய்மொழிக்கு ஒரு தாழ்நிலை ஏற்பட்டதை நாம் கண்கூடாகக் காணவில்லையா!

‘நாலு கோணை எழுத்து’ கற்றுக் கொண்டால்தானே பிழைக்கலாம் - என்ற பேச்ச பட்டிதொட்டிகளிலும் பரவிற்றே.

நிகண்டு தெரியும் - நீதிநெறி விளக்கம் தெரியும், என்று கூறினால், இங்கிலீஷ் தெரியாமல் இதெல்லாம் தெரிந்து என்ன பலன்? என்று கேட்டனரே, பலர் நம் நாட்களிலே.

ஐயர்மார் பேசும் மொழி ஆலயங்களிலும், துரைமார்கள் பேசும்மொழி ஆட்சி அலுவலகங்களிலும், இருக்கும் நிலை வந்ததும், தாய்மொழிக்கு இடம், தொட்டில், கட்டில், சமயலிடம், தோட்டம், கழனி என்றாகிவிட்டதல்லவா!

தமிழ்ப் பேரறிஞர்களே தமது மொழித் திறத்தைப் பயனற்ற தெனக் கருதும் அளவுக்கு ஓர் சூழ்நிலை அமைந்து விட்டதே - அது போல ஏற்பட்டது, செக்கோ நாட்டிலே.

இந்தச் சூழ்நிலையை மாற்றி அமைத்து, மீண்டும் செக்மக்களிடை தாய்மொழிப் பற்றை உண்டாக்கிய மாவீரர்தான், மாசுரீக். அவருடைய, அருந்திறன், செக்கோநாட்டு மக்களை இந்த இன்பத்தை மீண்டும் பெற உதவிற்று. அவருடைய அறிவுரையை, முதலிலே மக்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. மொழி வெறி கொண்டவர் என்று இகழப்பட்டார். முடியாதக் காரியத்தில் ஈடுபடும் முரட்டுப் பிடிவாதக்காரர் என்று பரிகசிக்கப்பட்டார். ஆனால் மாசரிக், சலிக்கவில்லை - ஓயாது உழைத்தார் - தம்நாட்டு மக்களின் கண்முன், மொழிவளம், அதன் மூலம் நாட்டு வளம், ஆகியவற்றை நிறுத்திக் காட்டினார். மீண்டும் ஓர் விழிப்புணர்ச்சி, ஓர் எழுச்சி, மொழிப் பற்றுத் தோன்றிற்று. பழைய ஏடுகளைத் தேடித் தேடிப்பிடித்தனர் - செக் மொழியின் சிறப்பினை ஆராய்ந்தறிந்து மகிழ்ந்தனர். இலக்கியச் செறிவுள்ள மொழி, என்று பெருமிதத் துடன் பேசலாயினர். தாய் மொழியை, வேற்று மொழியாளர், சதி புரிந்து சிதைத்தனர், என்பதை அறிந்தனர். - புதியதோர் ஆர்வம் பிறந்தது. இந்த ஆர்வத்தை அடிப்படையாகக் கொண்டே, அரசியல் கிளர்ச்சி ஆரம்பிக்கப்பட்டது - விடுதலைப் போர் துவக்கப்பட்டது. தாமஸ் மாசரிக், தாய் மொழி ஆர்வத்தைத் தட்டி எழுப்பி, அதன் மூலமாகவே தாய் நாட்டையும் விடுவித்தார் - 1918 -ல், செக்கோ நாட்டை, தனி அரசு நாடாக்கினார்.

தாய்மொழியை இழந்தால் ஏற்படக்கூடிய இழிநிலையும், தாய்மொழி தழைத்தால், நாட்டுக்கு ஏற்படும் உயர்நிலையும் தெளிவாகத் தெரியும் விதமாக அமைந்திருப்பது, செக்கோ நாட்டு வரலாறு. மொழிப் போராட்டமே, மக்களின் விடுதலைக்கு வெற்றி பெற்றுத் தந்தது, என்பதற்குச் சிறந்ததோர் எடுத்துக்காட்டாக விளங்குவது, செக்கோ நாட்டு வரலாறு.

மொழியைப் பற்றிப் பிரமாதப் படுத்துவானேன், வேற்றுமொழி புகுந்தால் என்ன, அதற்காக ஏன் ஆர்ப்பரிக்கிறாய், என்று பேசும் ‘மேதைகள்’ செக்கோ நாட்டு வரலாறு காட்டும் பாடத்தைக் கவனிக்க வேண்டுகிறோம். மொழி, வாழ்க்கையின் வழி - அதனை இகழ்வதும், எம்மொழி இருப்பின் என்ன என்று அலட்சியப் படுத்துவதும், தாய் மொழியைப் புறக்கணித்துவிட்டு, வேற்று மொழிக்கு உயர்வு தருவதும், மொழியை மட்டுமல்ல, அந்த நாட்டு வாழ்வையே இழந்து விடுவதாகும். எனவேதான், திராவிட கழகத்தார், தமிழ் இருக்க, வட மொழிக்கு ஏன் இங்கு முடி சூட்டு விழா என்று கேட்கின்றனர்! தாய் தவிக்க, தாதிக்குப் பட்டாடை தருவது ஏன் என்று கேட்கின்றனர். மொழிப் பிரச்னை, மிக மிகச் சாதாரணமானது என்று பேசும் நண்பர்கள், செக்கோ நாட்டு வரலாற்றினைப் பார்த்தாகிலும், தமது போக்கைத் திருத்திக்கொள்ள முன் வரலாகாதா என்று கேட்கிறோம். செக்கோ நாட்டிலே, அன்று தாமஸ் மாசரியும் அவர் தம் தோழர்களும், எத்தகைய அரும்பணி யாற்றி, சீர்குலைந்து போயிருந்த தாய்நாட்டை மீட்டனரோ, அதேவிதமான, அரும் பணிதான், ஆற்றுகின்றனர் திராவிட கழகத்தார். தெளிவுள்ளோர், இதனை உணர்வர் - அடுத்துக் கெடுப்போர் இதனை இகழ்வர். நாட்டு மக்களிலே, நல்லறிவாளர்கள், குறிப்பாக இளைஞர்கள், தாய் மொழிப் பற்று, ஓர் உயிர்ப் பிரச்னை என்பதை உணர்ந்தால், உண்மையிலேயே, தாயகம் விடுதலை பெறும், வீறு கொண்டெழும், புதிய பொலிவும் வலிவும் பெறும். அதற்கான அரும்பணியாற்ற அனைவரும் முன்வர வேண்டுகிறோம்.
திராவிடநாடு

6-2-1949, 13-2-1949, 20-2-1949, 27-2-1949, 6-3-1949, 20-3-1949

(திராவிட நாடு - 20-3-1949)