அறிஞர் அண்ணாவின் கட்டுரைகள்


சென்னையில் கருப்புக்கொடி நாள்

பருந்துகள் பறந்தன!
‘கருப்பு மழை’ பெய்தது!
வெள்ளம் போல் வீரர் கூட்டம்

பருந்துகள் பறந்தன! பலூன்கள் வானத்தில் வட்டமிட்டன!!

கார்மேகங்கள், வானத்தினின்றும் வந்துவிட்டனவோ! கருநிறக் கடல்தான் வந்துவிட்டதோ! கருப்பு தன் பெயரில் பொருள் தெரிய புறப்பட்டு வந்ததோ! காணாத காட்சி இது. கனவோ, நனவோ! மேகங்களுக்கு மத்தியில்தான் நாம் சிக்கி விட்டோமோ? தோளசைத்து அங்கு, தூக்கும் கரங்கள் யாவும் கடலின் அலைகளே! அங்கிருந்து எழும்பும் கர்ச்சனை கார்மேகங்களின் இடி முழக்கம் தானோ! என்று கண்டோர் வியக்கும்படி காட்சி தந்தது 9.9.50 அன்று சென்னை மாநகர்.

“வடநாட்டு ஆதிக்கம் ஒழிக” என்ற இதயபேரிகை, போர்க்கோலம் பூண்டுவிட்டோம்! என்பது போல முழங்க, “திவாகரே திரும்பிப்போ” என்ற வீரமுழக்கம் விண்ணெல்லாம் நிறைய, “திராவிடநாடு திராவிடருக்கே” என்ற இதயகீதம் காற்றிலெல்லாம் கலந்தது!

காளைகள், மாண்ட பாண்டிய மன்னர்கள் மீண்டது போலக் கூடிக்கிடந்தனர். “பாசறை இது பாராய் ஈட்டி எமக்கு நேராய்” என்று கேட்பதுபோல, வரிசை வரிசையாக அவர்கள் அணிவகுத்து நின்ற காட்சி, கண்ணிரண்டும் போதவில்லையே, என்று கலங்கச் செய்தது! அரும்பு மீசை, துடிக்கும் இளமை, துயரஞ்சாப் பருவம், தூங்காப் புலிகளாம் மாணவமணிகள் மங்காப் புகழுறு தமிழ் வீரத்தின் விடிவெள்ளிகள் என்று அறிவிப்பது போலத் திரண்டிருந்தனர்!

“வேலும் வாளும் ஒருபோது எங்கள் கையில் விளையாடினவை தான் இன்று தோலும் எலும்புமாய்த் தோற்றமளிக்கின்றோம். கருப்புக்கொடி ஏன்? எங்களையே காட்டினால் போதுமே” என்று எச்சரிப்பது போல, எண“ணிலடங்காத் தொழிலாளர்கள் அங்கே அலைகடலைப்போல அசைந்து கொண்டிருந்தனர்! “களங்கண்டுத் துள்ளிக்குதிக்கும் வெற்றிச் செல்வங்களின் வீரத்தாய்மார்கள் நாங்கள் புறநானூற்றின் புகழ்ச்சித்தரங்கள்”! என்று வீரத்தை நாட்டுக்களிக்கும் வீராங்கனைகள் அங்கு தமிழின் சின்னங்களாகக் கூடிக்கிடந்தனர்!

வெள்ளுடை வேந்தன் தியாகர் திருநகர் 9.9.50 அன்று மாலை கேடுகெட்டுச் சீரழிந்து, சிதைந்து உருக்குலையும் திராவிட சமுதாயத்தின் நிலை இது பாரீர்! என்று எதிரொலிப்பதுபோல ‘கருப்பாக’க் காட்சி தந்தது.

எதுவும் செய்வோம்
பத்து நாட்கள் கூட ஆகவில்லை. வடநாட்டாதிபத்திய மந்திரிகளை பகிஷ்கரிப்பது என்ற தீர்மானத்தை திராவிட முன்னேற்றக் கழகச் செயற்குழு கோவில்பட்டியில் முடிவு செய்து கழகத்தின் கிளர்ச்சி முடிவு நாடெங்கும் பரவக்கூட வழியில்லை. நமக்கு இந்த இக்கட்டான நேரத்தில் திவாகர் ஒரு வடநாட்டு மந்திரி வருகிறாரே! கருப்புக்கொடிப் பிடிப்பது குறித்து மக்களுக்குத் தெரிவிக்க தினசரிகூட இல்லையே! எப்படி நமது திட்டங்களை அப்போதைக்கப்போது அறிவிக்க முடியும்? ஆகுமா இது? நியாயத்தை கையிலேந்தி நெஞ்சில் நேர்மையோடு புறப்பட்டாலும் வஞ்சகத்தால் நம்மை வீழ்ந்த நினைக்கும் பொல்லாதோர் மத்தியிலன்றோ, கிடக்கின்றோம்! ஒரு பத்திரிகை நமது செய்திகளை அறிவிக்க இல்லாது தவிக்கிறோமே! என்று கழக முன்னணி வீரர்கள் கலங்கியதையெல்லாம் கானல் நீராக்கிக் காட்டிற்று மக்கள் தியாகராய நகர் நோக்கித் திரள்திரளாக வந்து கூடிய காட்சி.

பகல் ஒரு மணிக்கெல்லாம், சென்னை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தெல்லாம் படை வீரர்கள் எதிரி முகாமை முற்றுகையிடச் செய்வது போல, மக்கள் தியாகராயநகர் தட்சணபாரத இந்திப் பிரச்சார சபையின“ முன் கூடிக்கொண்டே இருந்தனர்!

தினசரி இல்லாத குறையை நிர்வர்த்திப்பது போல, கருப்புக்கொடி காட்டப் போகிறோம் என்பதை, நகரெங்கும் விவிதமான சுவரொட்டிகள் மூலம் விளம்பரப்படுத்தியிருந்தனர். சென்னை மாவட்ட திராவிட முன்னேற்றக் கழகத்தார். பல்வேறு நிறங்களில் பல்வேறு வகைகளாக அச்சிட்டு ஆங்காங்கே ஒட்டியிருந்த சுவரொட்டிகள் மயிலாப்பூர், திருவல்லிக்கேணி முதலிய இடங்களில் உள்ள கழகத் தோழர்கள் கையால் எழுதி ஓட்டியிருந்த சுவரொட்டி இவைகள்தான். எனினும் பத்தாயிரக் கணக்கில் மத்தியதியாகராய நகரில் திரண்டிருந்தது. வடநாட்டு கட்சியின் மீது தென்னாட்டில் வளர்ந்து வரும் அதிருப்தியை காட்டியது.

பிற்பகல் 3.30 க்குள்ளாக பல ஆயிரக்கணக்கான மக்கள் இந்திப் பிரச்சார சபைக்கு முன்னர் குழுமிவிட்டனர்.

இந்திப் பிரச்சார சபையின் வாயிலுக்கு முன்னர் டாக்டர் தருமாம்பாள், அலமேலு அப்பாதுரை, மலர்முகத்தமையார், பாப்பம்மாள், இலட்சுமி அம்மையார், கண்ணத்தாயாரம்மாள், தமிழரசி, கோகிலாம்பாள், லோகநாயகி முதலிய வீராங்கனைகளும் தோழர்கள் பெத்தாம்பாளையும் பழனிச் சாமி, சேலம் சித்தைய்யன், கே.ஆர்.ராமசாமி, இரா. நெடுங்செழியன், கருணாநிதி அழகரடி முத்து, அருப்புக்கோட்டை எம்.எஸ்.இராமசாமி, என்.வி.நடராசன், ஈ.வி.கே.சம்பத் காஞ்சிமணி மொழியார், குறிஞ்சிப்பாடி, சாம்பசிவம், வி.லிங்கசாமி கே.ஏ.மதியழகன், கா.அப்பாதுரையார், கோவிந்தசாமி, டி.என்.ராமன், ஈழத்து அடிகள், எம்.நாராயணசாமி, சி.பஞ்சாட்சரம், சி.வி.எம். அண்ணாமலை, கா.சேது, கே.டி.எஸ்.மணி, கிருஷ்ணமூர்த்தி, சுப்ரமண்யம், சம்பந்தம், இராசாபாதர் காஞ்சி, கலியாணசுந்தரம், காஞ்சி கவுன்சிலர் சி.வி.ராசகோபால், இளஞ்செழியன், கல்லக்குறிச்சி தணிகாசலம், எஸ்.ரத்தின சேஷாசலம், வீரராகவன், சி.வி.ராசன், கண்ணபிரான், சிவஞானம், எ.கே.சாமி, கண்ணதாசன், வில்லாளன், இராம.அரங்கண்ணல் (வந்திருந்த நூற்றுக்கணக்கான முன்னணி வீரர்களின் பெயர்கள்தான் தரப்பட்டுள்ளன. பிறருடைய விபரம் கிடைத்தவுடன் வெளியிடப்படும்) முதலாய இயக்க வீரர்கள் அணிவகுத்து நின்று ‘வடநாட்டாதிபத்தியம் ஒழிக! திராவிடநாடு திராவிடருக்கே, ‘திவாகரே’ திரும்பிப்போ’ என்று வெற்றி முழக்கம் எழுப்பிய வண்ணம் இருந்தனர்.

கண்கொள்ளாக் காட்சி
வெள்ளம்போல் கூட்டம் எனினும், தியாகராய நகரில் நிலவிய கட்டுப்பாடும் ஒழுங்கும் குறிப்பிடத்தக்கவை. நடுவில், வடநாட்டு மந்திரி செல்ல வழிவிட்டு இருமருங்கும் வரிசையாக அவ்வளவு மக்களும் அணிவகுத்து நின்றகாட்சி, திராவிட சமுதாயத்தில் ஏற்பட்டிருக்கும் கடமையுணர்ச்சியைக் காட்டியது. வீண் கூச்சல்களோ, ஆத்திரமூட்டக்கூடிய சிறுசெயலோ எதுவும் இல்லாது, கொண்டுவந்து நிறுத்தப்பட்டிருந்த ஆயுதப் போலீசாருக்கு அல்லது போலீஸ் பட்டாளத்திற்கோ சிறிதுகூட தொந்திரவு இல்லாது அவ்வளவு ஆயிர மக்களும் நடந்து கொண்ட முறை போற்றத்தக்கது மட்டுமல்ல-திராவிட இயக்க வரலாற்றின் ஒரு பொன்னேட்டு அத்தியாசம் என்று கூடச் சொல்லலாம்.

களத்தில் பொதுச் செயலாளர்
மாலை 3.45 மணிக்கு திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளர் சி.என்.அண்ணாதுரை களத்திற்கு வந்து வீரர்களின் அணிவகுப்பைப் பார்வையிட வந்தார். அவரது வருகை, ஓய்ந்து ஓய்ந்து அடித்த சூறாவளியைப் பெரும் புயலாக்கிற்று! ஆர்வத்தோடு ‘வாழ்க திராவிட முன்னேற்றக் கழகம்!’ ‘ஒழிக வடநாட்டு ஆதிபத்தியம்’ என்ற பேரொலி எழுப்பினர். “கட்டளையை நிறைவேற்றுகிறோம். கட்டுப்பாட்டோடு, பொறுத்ததுபோதும் இனி எங்களை புறப்படச் செய்யுங்கள் ‘ஆதிபத்திய புரி நோக்கி!’ என்று வீர உறுதி தருவது போலிருந்தது. பொதுச்செயலாளரைக் கண்டு பூரித்த நின்ற வீரர்களின் ஆரவார அணிவகுப்பு.

பொதுச்செயலாளர், கூடிக்கிடந்த வீரப்பரம்பரையின் வெற்றிச் சித்திரங்களுக்கு புன் சிரிப்போடு தனது அன்பை, வணக்கத்தின் மூலம் தெரிவித்துக்கொண்டே, படைவரிசையைக் கடந்து இந்தி பிரச்சார சபையின் வாயிலுக்கு வந்தார்.

திராவிடப்போர் எழுச்சியில் உந்தப்பட்டு கூடியிருந்த மக்கள் கூட்டத்தால் தியாகராயநகர் பனகல்பார்க், பாண்டிபஜார், ராகவைய்யாரோடு, வெங்கடநாராயண ரோடு போன்ற பகுதிகளிலெல்லாம் போக்குவரத்து தேங்கித் தடைப்பட்டது.

போலீஸ்
கட்டுப்பாடு என்ற வாள் கடமையுணர்ச்சி என்ற கேடயம் ஆகியவைகளைத்தாங்கி அமைதியான முறையில் அறப்போர் நடத்திய அங்கு, காங்கிரஸ் ஆட்சியின் ‘தர்பாரை’ நிரூபிப்பது போல ஆயுதந்தாங்கிய போலீசார் லாலிகளில் கொண்டு வந்து நிறுத்தப்பட்டிருந்தனர்.
நகர போலீஸ் அதிகாரிகளும் வந்திருந்தாலும் அவர்கள் சிறிதுகூட சிரத்தை எடுத்துக்கொள்ளும் அவசியத்தை உண்டாக்காமல், கழக முன்னணி வீரர்கள் காரியங்களைக் கவனித்துக்கொண்டிருந்தனர்.

வந்தார்! திகைத்தார்!!
இரு பக்கத்திலும் திறந்த துப்பாக்கிகளோடு, ‘சுடு’வதற்குத் தயாரான முறையில் நீட்டிப் பிடித்துக்கொண்டிருந்த போலீஸ் ஜீப் முன்னே செல்ல பின்னே அதைத் தொடர்ந்து மலபார் விசேஷ போலீஸ் வர, நடுவே டெல்லி மந்திரி திவாகரின் கார் வந்தது. தோழர் திவாகருக்குப் பக்கத்தில் சென்னை மராமத்து இலாகா, விளம்பர இலாகா ஆகியவைகளை நிர்வகிக்கும் அமைச்சரான பக்தவத்சலம் அமர்ந்திருந்தார். அவர்கள் கார், பாண்டிபஜாரிலிருந்து இந்திப் பிரச்சார சபைக்குச் செல்லும் ரோட்டிடில் திரும்பியதுமே மக்கள் ஆர்ப்பாட்டம் ஆரம்பமாகிவிட்டது. கருப்புக்கொடிகள் தோன்றுவதைக் கண்டு திகைப்புடன் பார்த்த திவாகரின் கார், மக்கள் மத்தியில் வந்ததும் வேகமாகச் செல்லலாயிற்று!

பறந்தன பருந்துகள்!
கழுத்திலே கட்டப்பட்ட கருப்புக்கொடியுடன், கூட்டத்தின் மத்தியிலிருந்து வானை நோக்கி பருந்து ஒன்று பறந்தது! அதைத் தொடர்ந்து பல முனைகளிலிருந்தும் பருந்துகள் ‘விர்’ ரென்று கிளம்பின! சிறகடித்து எழும்பிச் சென்றபோது கட்டிவிடப்பட்ட கருப்புக்கொடி, காற்றிலே அடித்துக்கொண்ட காட்சி, ‘வடநாட்டு ஆதிபத்தியமே விரைவில், உள் கதியும் இதுதான்’ என்று எச்சரிப்பது போலிருந்தது. ‘திவாகர் வந்துவிட்டார்’ என்று தெரிந்ததும், கூட்டத்தினரிடையிலிருந்து கருப்பு நிற பலூன்களும் வானை நோக்கி எழும்பிச் சென்றன!
மக்களின் ஆதவாரமோ, எல்லையைக் கடந்துவிட்டது. வெற்றி முழக்கங்களை முழக்கிய வண்ணம், ஆவேசத்தோடு கருப்புக்கொடிகளைத் தூக்கிப் பிடித்து ‘திவாகரே திரும்பிப் போ’ என்று தமிழிலும் ‘எணி ஆச்ஞிடு ஈடிதீச்டுச்ணூ’ என்று ஆங்கிலத்திலும், தியாகராய நகரே அதிரும்படி பேரொலி எழுப்பினர்!

‘கருப்பு’ மழை!
உரிமைப் போரின் ஒத்திகையென்று எண்ணி ஆவேசத்தோடு கூடிநின்ற மக்கள் நடுவே டெல்லி மந்திரி சென“றபோது, ‘கருப்புமழை’ அவர்காரினுள் பெய்தது! இருமருங்கிலும் சென்ற மக்கள் கூட்டத்திலிருந்து ‘குபீரென்று’ சிறு சிறு கருப்புத்துண“டுகள் பொழியப்பட்டன! ‘மெகபோன்’ போல பெரிய காகிதச் சுருளைச் செய்து அதனுள் சிறு கருப்புக் காகிதத்துண்டுகளை நிரப்பி, டெல்லி மந்திரி வந்ததும், பொட்டலத்தின் ஒரு முனையை பிரித்து விட்டுக்கொண்டு இன்னொரு பக்கத்தை வாயால் ஊதியும், மழைத் துளிகளைப் போல ‘விர்’ ரென்று போய் விழுந்தன! இதனால், டெல்லி மந்திரி காரே நிறைந்திருக்கும் என்று கூடச் சொல்லலாம“!!
மக்களின் ஏகோபித்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தைக் கண்ட செல்லி மந்திரி, புன்சிரிப்போடு இருக்க முயன்றார். எனினும், அவர் இதயத்தில் எழும்பிய திகைப்பை சோடையிழந்த அவர் முகம் ‘காட்டிற்று!’

‘நான் அறிவேன்!’
டெல்லி மந்திரி கார்கூட்டச்சமுத்திரத்தைக் கடந்து பிரச்சார சபையின் வாயில் அருகில் வந்ததும் அவர் கையில் முன் வரிசையிலிருந்த வீராங்கனைகள் கருப்புக்கொடிகளைத் தந்தனர். அதே போல இயக்க, முன்னணி வீரர்களில் சிலரும் தந்தனர். அவர் அதைப் பெற்றுக்கொண்டு ஆங்கிலத்தில் “ஐ ஓணணிதீ ஞுணணிதஞ்ட” (உங்களைப்பற்றி வேண்டிய அளவு எனக்குத் தெரியும்) என்று கூறிக்கொண்டே சென்றார். கார் உள்ளே சென்றதும் பின் பக்கமாக அமைக்கப்பட்டிருந்த பந்தலுக்கு முன்பு ந‘ன்றுகொண்டிருந்த இந்தி பிரச்சார சபையின் நிர்வாகிகள் அவசரமாக, பரபரப்போடு அழைத்துச்சென்றனர்.

‘கொடி’ தூங்கிற்று!
இந்திப் பட்டமளிப்பு விழா துவக்கும் முன்னதாகக் கொடியேற்று விழா செய்வதற்காக பிரச்சார சபைக்கு முன்னால் ஒரு கம்பத்தில் தேசீயக் கொடி கட்டி ஏற்றுவதற்கான ஆயத்தங்களோடு வைத்திருந்தனர். ஆனால், கடைசிவரையில் கொடி டெல்லி மந்திரியால் ஏற்றிவைக்கப்படவில்லை அதோடு நிகழ்ச்சிகளும் கூட குறிப்பிட்ட நேரத்தில் துவக்கப்படவில்லை.

கண்ணியக் காளைகள்
இந்திப் பிரச்சார சபையினுள் நின்றுகொண்டு கருப்புக்கொடி ஆர்ப்பாட்டத்தை சிலர் பார்த்துக்கொண்டேயிருந்ததோடு, மக்களுக்கு ஆத்திரமூட்டும் வகையில் சில்லரைச் செயல்களைச் செய்துகொண்டிருந்தும் கழகக் காளைகள் சிறிதுகூட ஆத்திரமடையவில்லை அலட்சியத்தால் புத்தி போதித்தனர்.

இந்தி பட்டம் வாங்குவதற்காக பெண்களும், பிறரும் சென்றபோது சிறிதுகூட ஆரவாரம் செய்யாது. அமைதியோடு அவர்கள் செல்லுவதற்கு வசதியாக ஒதுங்கி நின்று வழிவிட்டு கண்ணியத்தோடு நடந்துகொண்டனர். ‘கருப்புக்கொடி காட்டுவதே நம் கடமை’ யென்று கருதி வேறு எந்தவித ஆர்ப்பாட்ங்களிலும் ஈடுபடாமல் நேரிய முறையில் நடந்துகொண்ட கழகத் தோழர்கள் மிக்கப் பாராட்டுத்தலுக்குரியவர்கள்.

‘பரம்பரை’ வாசனை!
டெல்லி மந்திரி திவாகர், மாலை 5 மணிக்கு வருவதாகவே பத்திரிகைகளில் அறிவிக்கப்பட்டிருந்தது. எனினும், நான்கு மணிக்கே அவர் அழைத்து வரப்பட்டார். முன்னதாகவே சென்றால் ‘ஏமாந்துவிடுவார்கள்’ என்ற எண்ணத்தின் பேரிலேயே இந்த ஏற்பாடு செய்யப்பட்டதாக விசாரித்ததில் தெரியவந்தது. ஆனால் மக்கள் 1 மணியிலிருந்தே வந்துகூடி, ‘புறமுதுகிட்டுப் பழக்கப்பட்ட’ தந்திரசாலிகளின் திட்டத்தைத் தவிடுபொடி யாக்கினர்!

ஆர்ப்பாட்டம் முடிந்ததும், பல்லாயிரக்கணக்கான மக்களும் ஊர்வலமாக மவுண்ட்ரோடு சர்க்கார் மாளிகை நோக்கிப் புறப்பட்டனர். வெற்றி முழக்கங்களோடு, கடல் எழுந்து வந்தது போலக் கிளம்பிய மக்கள் சமுத்திரத்தைத் தோக்கி கலைந்து போகும்படி தோழர் இரா.நெடுஞ்செழியன் வேண்டிக்கொண்டார். “அதையேற்று மக்கள் சிறு சிறு கூட்டத்தினராக மவுண்ட்ரோடு நோக்கிப் புறப்பட்டுச் சென்றனர்.

தியாகராயநகருக்கு கருப்புக்கொடி காட்டும் ஆர்வத்துடன் ஓடோடிச்சென்று அங்கு டெல்லி மந்திரி 5 மணிக்கு வருவதாகச் சொல்லி 4 மணிக்கே வந்ததால், ‘ஏமாந்தோமே’ என்ற வீராவேசத்துடன் திரும்பிய மாணவத் தீரர்களும் தொழிலாளித் தோழர்களும் பெருவாரியாக வந்து மவுண்ட்ரோடு ஆர்ப்பாட்டத்தில், கலந்துகொண்டனர்.

ஓரிடத்தில் மட்டுமல்ல! சர்க்கார் மாளிகைக்குச் செல்லும் சகலவழிகளிலும் கருப்புக்கொடி பிடித்தவண்ணம் காளைகள் நின்று கொண்டிருந்தார்கள்.

ஆறு மணிக்கெல்லாம் சர்க்கார் மாளிகையில் மறைந்த சி.என். முத்துரங்கம் அவர்கள் படத்திறப்பு விழாவை. டெல்லி மந்திரி, செய்யப்போவதாக நிகழ்ச்சியில் குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால் மணி 7 ஆகியும் அவர் வரவில்லை.

இந்திப் பிரசார சபையில் முன் கூட்டியே வந்தார்!

இங்கோ நேரங் கழித்தே வந்தார்!!

இருட்டினால் கூட்டம் கலைந்து விடும் என்ற அவர்களது எண்ணத்தில் செயல் வீரர்களான நமது இயக்கத்தவர்கள் மண் விழச் செய்தனர்.

‘டிக்கெட் பிளீஸ்!’
மறைந்த சி.என்.முத்துரங்கம் காங்கிரஸ் பிரமுகர். அவரது படத்தை சென்னை சட்டசபை காங்கிரஸ் கட்சியினர் திறந்து வைத்தனர். ஆனால், அது விழாவினைக்காண ‘டிக்கெட்’ வைத்திருந்தவர்கள் மட்டுமே அனுமதிக்கப் பட்டனராம்! வேறு எவரையும் உள்ளே விடவில்லையாம்!!

தியாராய நகரைவிட இங்கு மக்கள் கூட்டம் பல்லாயிரக் கணக்கில் அதிகமிருந்தது. அலுவலகங்கள், தொழிற்சாலைகள் ஆகிய இடங்களிலிருந்து ஏராளமான பேர் வந்து கலந்துகொண்ட வண்ணமாகவே இருந்தனர். சர்க்கார் மாளிகையிலிருந்து ‘ரவுண்ட் டாணா’ வரையில், மக்கள் கூட்டம் அசைந்து கொண்டேயிருந்ததால், போக்குவரத்துக்கள் சங்கத்தினூடே செல்ல வேண்டியதாயிற்று.

போலீஸ் லாரிகள்! ஆயுதம் தாங்கிய படையினர்! அதிகாரிகள்! எல்லாம் ஏராளமாக இருந்தாலும், அவர்களுக்குச் சிறிது கூட கஷ்டம் வைக்கவில்லை இயக்கத் தோழர்கள். திராவிட முன்னேற்றக்கழகப் பொதுச்செயலாளர் அருகிலிருந்து அப்போதைக்கப்போது ஆலோசனைகள் தர ஏனைய குழுச்செயலாளர்களும் பிரச்சாரகர்களும் செயற்குழு உறுப்பினர்களும், சென்னை மாவட்ட திராவிட முன்னேற்றக் கழகக் கிளைக் கழக நிர்வாகிகளும், வெளியூர் கழக முக்கியஸ்தர்களும் குழுமிக் கிடந்த மக்களிடையே நின்று கொண்டு, வேண்டிய ஏற்பாடுகளைச் செய்து கொண்டிருந்தனர்.

சென்னை மாவட்ட திராவிட முன்னேற்றக் கழகச் செயலாளர் தோழர். கே.கோவிந்த சாமி, மற்றும் தோழர்கள் நெடுஞ்செழியன் மதியழகன், என்.வி.நடராசன், மணிமொழியார், மு.கருணாநிதி, காஞ்சி கல்யாணசுந்தரம், சி.வி.ராசன், சி.பஞ்சாட்சரம், ஏ.கே.சாமி, சி.கணேசன், பெத்தாம்பாளையம் பழனிச்சாமி, ஈ.வி.கே.சம்பத், அழகரடி முத்து, கண்ணதாசன், அரங்கண்ணல் முதலாய பலர் முன் நின்று அமைதியைக் காத்து வீரர்களைக் கடமையிலாழ்த்தினர்.

இங்கும் தாய்மார்கள் வெற்றிக் களிப்போடு முன்வரிசையில் நின்றனர்.

“திராவிட நாடு திராவிடருக்கே!”, “வடநாட்டு ஆதிபத்யம் ஒழிக!” “திவாகரே திரும்பிப்போ!” என்ற முழக்கம், சர்க்கார் மாளிகையை தாக்கி மவுண்ட்ரோடு முழுமையும் எதிரொலித்துக் கொண்டிருந்தது. மக்கள் ஆரவாரத்தைக் கேட்டவண்ணம், தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் காமராஜ், உணவு மந்திரி ரோச் விக்டோரியா, கல்வி மந்திரி மாதவமேனன் ஆகியோர் முறையே ஒருவர் பின்னொருவராக, கார்களில் சென்றனர். அவர்களைக் கண்டபோது வடநாட்டு ஆதிபத்யத்தை ஒழிப்போம்’ என்ற சண்டமாருத முழக்கம் எழும்பி எழும்பி அடித்தது.

இரவு 7 மணிக்கு, துப்பாக்கித் தாங்கி ‘சுடும்’ ஆயுதத்தோடு நின்ற போலீஸ் பாதுகாப்போடு டெல்லி மந்திரி திவாகர், காரில் வந்ததும் மவுண்ட்ரோடு அதிர்ந்தது மக்களிடையிலிருந்து எழும்பிய பேரொலியால்!

திவாகரைக் கண்டதும், கருப்புக் கொடிகள் பல்லாயிரக் கணக்கில், வெற்றி முழக்கங்களோடு காட்டப்பட்டன. பக்கத்திலிருந்து விளக்குகளின் ஒளியால், காட்டப்பட்ட கருப்புக்கொடிகளைக் கண்டபோது பண்டைத் தமிழர்கள் பகைவரை வெல்ல பாய்ந்து போரிடும்போது காற்றினும் கடிது கழல்வார்களாமே அது நினைவுக்கு வந்தது! அவ்வளவு ஆவேசமும் ஆர்வமும் அங்கு நிறைந்து தளும்பி வழிந்தது! அந்த வெற்றிக் காட்சியைக் கண்டபோது.

“மண்ணிடை வாளையேந்திப்
பகைப்புலம் மாய்ப்பதற்கு
எண்ணிலாத் தமிழர் உள்ளார்
எனும்நிலை காண்பதென்றோ?”

என்ற புரட்சிக் கவிஞரின் ஆசை நனவாகிவிட்டது. இனி அச்சமில்லை! அடுக்கடுக்காக அல்லல்கள் வரினும் அவைகளைத் தூரவிலக்கி துள்ளிக் குதிக்கும் வேல்களாகிவிட்டார்கள் திராவிடக் காளைகள் என்ற காட்சி தென்பட்டது!

(திராவிட நாடு 12.9.50)