அறிஞர் அண்ணாவின் கட்டுரைகள்


சௌ - சௌ!

இதிலே கொஞ்சம் அதிலே கொஞ்சம், இனிப்புக் கொஞ்சம் காரம் கொஞ்சம், பட்டாணி பயிறு கடலையுடன் பாதாம் பருப்பும் கலந்து சீனி சிறிதளவு தூவிப் பலவற்றைக் கொட்டிக் கலக்கித் தருகின்றனரே, பண்டம், சௌ-சௌ(சவ்-சவ்) அதுபோல அதுபோல இந்தியாவெனும் பூபாகத்திலே, ஒரு கூட்டம், நடமாடும் சௌ-சௌவாக இருக்கிறது. ஒரே இரவில் குலேபகாபலியில் ஒரு பாகம், சதாரத்திலே ஒரு சம்பவம், தூக்குத்தூக்கியிலே ஒரு பகுதி, என்று பலவற்றை ஒன்றன்பின் ஒன்றாக நடித்துககாட்டுவது நாடகத்துறையிலே சௌ-சௌ என்று பெயரிடப்பட்டிருக்கிறது.

டாக்டர் அம்பேத்கார், கொதுவாழ்விலே ஈடுபட்டுள்ள சௌ-சௌகளை நாட்டுக்கு அறிமுகப்படுத்தி இருக்கிறார்!

சென்ற கிழமை, டில்லி சட்டசபையிலே, பேசிய ஒரு அங்கத்தினர், தொழிலாளர்களின் தலைவர்களைச் சர்க்கார் சிறையிலிருந்து ஏன் விடுதலை செய்யக்கூடாது? என்று கேள்வி கேட்டார். அப்போது டாக்டர் அம்பேத்கார், அந்தத் தொழிலாளர் தலைவர்களின் நிலைமையை, நகைச்சுவைத் ததும்ப எடுததுரைத்தார். இந்தத் தொழிலாளர் தலைவர்கள், சில சமயம் தொழிலாளர் தலைவர்களாகக் காட்சி அளிக்கின்றனர். சில வேளைகளிலே பொது உடைமைப் புலிகளெனக் காட்சி தருகின்றனர், மற்றும் சில சமயங்களிலே தேசியத் தலைவர்களென்று நடமாடுகின்றனர், காங்கிரஸ்காரர்காரராகக் காட்சி தருவது ஒரு சமயம், இந்து மகாசபைக்காரராக ஒரு வேளை காட்சி தருகின்றனர், இப்படிச் சௌ-சௌ தலைவர்களாக இருக்கிறார்களே, இந்தத் தோழரகள், இவர்களின் எந்த வேடத்தின்போது நடத்தப்பட்ட குற்றத்துக்காக இவர்களைச் சிறையிலிட்டனர் என்பதை ஆராய்ந்தறிவதே கஷ்டமாக இருக்கிறது என்று, கூறிவிட்டு, இந்தத் தொழிலாளர் தலைவர்கள் தொழிலாளர்களின் விஷயம்ததில் அக்கரை காட்டுவதோடு நின்றால், தொழிலாளர் உலகு சீர்படும் என்ற புத்தமதியும் கூறினார்.

உண்மையிலேயே, தொழிலாளர் தலைவர்களென நடமாடும் தோழர்கள், பஜனைக் கூடத்து மணியடிக்கும் திருப்பணியையும் செய்வர். காந்தீயத்துக்கம் சமதர்மத்துக்கும் பாம்புக்கும் கீரிக்கும் போன்ற தொடர்பு என்று பேசும் தத்துவ விளக்க போதகராகவுமிருப்பர், காந்தீயத்துககுக் காவடி தூக்கும் பக்தராகவும் உலவுவர், தேசியத்துக்கும் சமதர்மத்துக்கும் முரண்பாடு உண்டு என மொழிவர், போலித் தேசியவாதிகளைக் கண்டிப்பவர்களையும் காய்வர். தேர்தலின்போது காங்கிரசுக்கு முன்னோடும் பிள்ளைகளாவர், பதவியிலே காங்கிரஸ் அமர்ந்தால், அதன் பில்லைச் சேவகத்துககு மனுச்செய்வர், அவர்கள் பேசாத கொள்கையில்லை. பிடிக்காத பிரச்சினை இல்லை, பலவேஷர்களாக இருந்து, நாடக மாடி ஒன்றே செய்க இன்றே செய்க என்று அறிவு புகட்டியுமிருக்கிறார். ஆனால் இந்தச் சௌ-சௌ பேர்வழிகள், திருந்துவர், என்று யாரும் நம்பிவிடாதீர்கள், இப்படிப் பல நாடகமாடுவதால் அவர்களுக்கு இலாபம் இருக்கிறது, அதை எப்படி அவர்கள் விட்டு விட முடியும்!

(திராவிடநாடு - 26.03.44)