அறிஞர் அண்ணாவின் கட்டுரைகள்


காங்கிரஸ் கோலாகலம்

பூந்தமல்லியில் சிறைவாசம் அனுபவித்துக் கொண்டிருக்கும் ‘திராவிடன்’ ஆசிரியரும், கழக அமைப்புக்குழுச் செயலாளருமான தோழர் என்.வி.நடராசன். குன்றத்தூர் கழகவீரரும் 26.10.50 ல் பேச்சுரிமைப்போரில் பங்குகொள்ள இருந்தவருமான தோழர் பாலசுந்தரம் ஆகியோரைக்காணச் சென்னையிலிருந்து 29.10.50 அன்று தோழர்கள் எஸ்.வி.லிங்கம், கே.கோவிந்தசாமி, டி.எம்.பார்த்தசாரதி ஆகியோர் சென்றிருந்தார்கள்.

தோழர்களைக் காணவிரும்புவதாகவும், அதற்கு அனுமதி தருமாறும் பூந்தமல்லி மாஜிஸ்திரேட் முன்னர் காலை 101/2 மணிக்கெல்லாம், காணச்சென்ற தோழர்கள் விண்ணப்பம் செய்து கொண்டனர்.

காலை 101/2 க்கு விண்ணப்பம்! நண்பகல் 3 மணி ஆகியும் பதிலே கிடைக்கவில்லை.

ஒரு பெரிய ஆலோசனை நிரம்பிய சட்ட சிக்கல் நிறைந்த விஷயமல்ல எனினும் நண்பகல் 3 மணி ஆயிற்று. பதில்தர!!

காவலில் இருக்கும் கைதிகளுக்கு வெளியிலிருந்து சாப்பிடுவதற்கான பழம் முதலியவைகள் அனுமதிக்கப்பட்ட வையாகும். அதை யொட்டி சென்னையிலிருந்து சென்ற தோழர்கள் கழகத்தின் முக்கியஸ்தர்கள் பழங்களை வாங்கிச் சென்றிருக்கின்றனர்.

அதைக்கொடுக்க வேண்டும் என்று அனுமதி கோரியபோது காங்கிரஸ் ஆட்சியின் ‘அதிகார அம்பு’ உடனே அனுமதிக்கவில்லை.

‘ஏ! அப்பா இவ்வளவு பழமா? இவ்வளவும் செரிக்குமா?’ என்று தோழர்களை நோக்கிக் கிண்டல் செய்திருக்கிறார்.

சைதாப்பேட்டை சப்ஜெயிலில் பொறுப்புள்ள பதவியில் ‘அவர்கள்’ கூட்டத்தார் ஒருவர் இருக்கிறார். அவரது வேலை தினசரிகைதாகி அங்கு கொண்டுபோய் அடைக்கப்பட்டிருந்த நமது கழக வீரர்கள் உள்ளம் புண்படும்படி ஏதாவது சொல்லுவதுதானாம்! நமது தோழர்களில் ஒருவரை ‘என்ன ஜாதி’ என்று கேட்டாராம். ‘நான் ஓர் திராவிடன்’ என்று பதில் தந்திருக்கிறார். தோழர் அந்த ஆசாமி வேண்டுமென்றே, திராவிடன் என்று கூறியதை ஆதித் திராவிடர் என்று திரித்து எழுதிக்கொண்டு சென்றிருக்கிறார்.

பூந்தமல்லி சிறையில் காங்கிரசின் சுய உருவம், தினசரி தோழர்களுக்கு உணவு தரப்படும் பொழுதெல்லாம், காட்சி, தருகிறதாம்! காங்கிரஸ் ஆட்சி இன்று எவ்வளவு அலங்கோலமாக இருக்கிறதோ அத்தனையும் அந்த உணவில் தென்படுகிறதாம்! அரசியல் கைதிகளை, எந்த ஜனநாயக சர்க்காரும் பொறுப்போடு நடத்தும். ‘பொறுப்பு’ என்ற வார்த்தைக்குத்தான் மதிப்பே கிடையாதே இந்த ஆட்சியில்!

குன்றத்தூரில் 26 கொடுமை நடை பெற்றதல்லவா? அப்போது ஒரு பொறுப்புள்ள அதிகாரி கூர்த்தவத் தாண்டவமாடினாராம்! பாய்ந்து பாய்ந்து கண்ணில் கண்டோரையெல்லாம் தாக்கியிருக்கிறார்.

‘ஏய்! என்னடா நினைத்தீர்கள். நான் உங்களை ஒழிக்கத்தாண்டா இங்கே வந்திருக்கிறேன். என்ன நடக்கிறது பார்த்தாயா? சுட்டுப் போசுக்கிடுவோம்’ என்று கூறிக்கொண்டே பொறுப்புள்ள நமது தோழர்களின் முகத்திலும், மார்பிலும் கையாலே குத்தியிருக்கிறார்! அவர் ஆடிய கூத்துக்களைக் கேட்டாலே கல்லும் கசிந்துருகும்!! அந்த பொறுப்புள்ள ‘ஸ்பெஷல் அதிகாரி’யின் பெயருக்குப்பின்னால் ‘சர்மா’ என்ற வால் ஒட்டிக்கொண்டிருக்கிறது.

குன்றத்தூர் ஒரு சிறு ஊர். எனினும் அங்கு நமது கழகக் கூட்டம் நடந்தால் அமைதி கெட்டுவிடும் என்று கருதி ‘எட்டுமுறை சுட்டுப் பொசுக்கி’ இப்போது சட்டத்தை நிலைநாட்டியிருக்கிறார்களலல்லவா. காங்கிரஸ் சர்க்கார்!

இவ்வளவு விளைவுகளுக்கும் தூண்டுகோலாயிருந்து துணைபுரிந்து ஒரு ‘மூர்த்தி ‘யாம்!’ அவர்கள்’ கூட்டத்து ஆசாமியாம்!!

அவரே கழகக் கூட்டம், நடைபெறப்போவது அறிந்ததும் 144 வீசச்செய்ய அரும்பாடுபட்டவராம். பொறுப்பு அளிக்கப்பட்டிருக்கும் குன்றத்தூர் போலீஸ் அதிகாரி அவர்! எனவே, தமது ‘திருக்கைங்கரியம்’ முழுவதையும் செய்திருக்கிறார்!!

(திராவிடநாடு 12.11.50)