அறிஞர் அண்ணாவின் கட்டுரைகள்


டெல்லியில் சர்ச்சில் - ஸ்டாலின் சந்திப்பு

டெஹரான்! யால்ட்டா! இப்போது டெல்லி! ஏகாதிபத்யத் தலைவர் சர்ச்சிலும், பொது உடமை ஆட்சித் தலைவர் ஸ்டாலினும், போர் சம்பந்தமாக ஒத்துழைக்கும் திட்டம் வகுத்தனர், டெஹரான், யால்ட்டானும் இடங்களில் நடந்த மாநாடுகளில்!

இப்போது, சர்ச்சிலும், ஸ்டாலினும் டெல்லியில் சந்தித்துள்ளனர்! இரு தலைவர் களின் உருவங்கள் அங்கு உலவவில்லையே தவிர, எந்த இருவகையான இலட்சியங்களின் தலைவர்களாக அவ்விருவரும் உள்ளனரோ, அந்த இலட்சியங்கள், கைகுலுக்கிக் கொள்கின் றன! ஏகாதிபத்திய நோக்கம் கொண்ட பிரிட்டிஷ் அரசு, பாட்டாளிகளின் பாதுகாவலாக உள்ள சம தர்மத் திட்டத்தின் இருப்பிடமான பொது உடமை சர்க்காருடன், ஒத்துழைக்க இசைந்திருக்கிறது. இலண்டனும், மாஸ்கோவும், ஒருங்கு சேர்ந்து டில்லியில் காட்சி அளிக்கின்றன!

ஆச்சரியம், ஆனால் உண்மை! பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்திலே ஒரு அங்கமாக உள்ள இந்தத் தங்கம் விளையும் நாட்டிலே, உழைப்பாளி யின் வியர்வைக்கு உரிய மதிப்பளிக்கும் கடிதமே இலட்சியத்துக்கு இடமளிக்க, டெல்லியில் ஏற்பாடு நடைபெறுகிறது. போருக்குப் பிறகு, இங்கு ஏற்பட இருக்கும் தொழில் வளர்ச்சித் திட்டத்தை சர்க்கார் வெளியிட்டுள்ளனர்.

அதன் அடிப்படைத் தத்துவத்தை ஒரே வாசகத்தில் கூற வேண்டுமானால், ``மூலாதாரத் தொழில்களிலே முதலாளித்தனம் கூடாது’’ என்பதாகும். நம் மக்கள் எளிதில் புரிந்து கொள்ளக்கூடிய மொழியிலே, கூறுவதானால், ``பிர்லாஸ்தானுக்குப் பிணக்குழி தயார்!’’ என்பது தான், சர்க்காரின் திட்டத்தின் சுருக்கம் என்று கூற லாம்!! போருக்குப் பிறகு, பண அரசு ஆளுவதா, பரங்கி அரசு நீடிப்பதா அன்றி இன அரசு ஏற்படுவதா என்பதே பிரச்னையின் உயிர் நாடி!

கடிவாளமின்றி, சீமான்களின் போக்கு இருக்க வேண்டுமென்று, பிர்லா, பஜாஜ், தால்மியா, டாடா போன்ற கோடீஸ்வரர்கள் கருதுகின்றனர். ருசி கண்ட பூனைகள், உரியை உயர அமைத்தால், புலி போலப் பாய்ந்து பார்க்குமல்லவா? அதுபோல, போர் முடியட்டும், இந்தியாவிலே எல்லாவகையான தொழிற்சாலை யும் ஏற்படுத்தி, அவைகள் மூலம் கிடைக்கும் இலாபத்தைத் திரட்டித் தங்கக் கோட்டைகளை அமைத்துக்கொண்டு, தரணி ஆள்வோரையும் தடுத்தாட் கொள்ளும் தகுதி பெறலாம் என்று முதலாளிகள் எண்ணிக் கிடந்தனர்- கிடக்கின்ற னர்! நாட்டு வளம் பெருக வேண்டும்! நமது செல்வம் பிற நாட்டானால் சூறையாடப் பட விடலாகாது! தொழில் வளத்தை அதிகரிக்கச் செய்ய வேண்டும்!- என்று விளம்பர வார்த்தை களைக் கூறிக்கொண்டு, அமெரிக்காவிடம் பேரம் பேசும் அளவுக்கு வடநாட்டு முதலாளிகள் பனியாக்கள் தீவிரப் போர் துவக்கி விட்டனர். நாட்டு இயற்கை வளமும், மூலப் பொருள்களைப் பயன்படுத்தும் முறையும், இங்கு மிக மிக மோசமான நிலையிலேதான் இருக்கிறது. மக்களின் வறுமையும், வாழ்க்கைத் தரம் மிக மட்டமாக இருப்பதும், இந்நிலையின் விளைவே. எனவே இங்கு தொழில் வளர்ச்சித் திட்டம் அவசரமாகத் தேவை.

இரும்பு, எஃகு, பருத்தி, கம்பளி, சிமெண்ட், சர்க்கரை, நிலக்கரி, மின்சாரம் போன்ற சுமார் 20 தொழிற்சாலை அமைப்பு, ஆதிக்கம், சர்க் காருடையதாகி விடும். இவை, தனிப்பட்ட முதலாளிகளின் இலாபத்துக்காக, வேட்டைக் காடாக இராமல், சர்க்காரின் மேற்பார்வையிலே கொண்டு வரப்படுவதன் மூலம் மேற்படி தொழில்கள் மூலம் பெருகும் செல்வமும் கிடைக்கும், இலாபமும், நாட்டு மக்களுடையதாக வழி ஏற்படுகிறது. இத் தொழில்களுக்கு, பெருந் தொகையான மூலதனம், விஞ்ஞானத்தின் பலனாக ஏற்பட்டுள்ள யந்திரங்கள், தேவைப்படு கின்றன. இஃதேயன்றி, இத்தொழில்களுக்கு இலட்சக்கணக்கானவர்கள் தேவை. இந்தப் பெரிய தொழில் அமைப்பின் மூலம் ஏராளமான இலாபம் பெற, தனிப்பட்ட முதலாளிகளுக்கு வழி ஏற்படுகிறது. கோடீஸ்வரர்கள், இத்தகைய பெரிய தொழிற்சாலைகள் மூலமே உற்பத்தியாகின்றனர். டாடாக்களும், பிர்லாக்களும், பஜாஜ்களும், தால்மியாக்களும், இந்த பெருத்த இலாபந் தரும் தொழிற்சாலைகளை நடத்துவதனாலேதான் உண்டாகின்றனர். முதலாளித்வம், இந்த முறையினாலே உண்டாகிறது. தொழிலாளியாகி வளருவதற்கு இதுவே காரணம்.

எனவே, பெருத்த இலாபந் தரக்கூடியதும், நாட்டு மக்களின் இன்றியமையாத பொருள்களை உற்பத்தி செய்யக் கூடியதும் பெரிய தொகை யான முதலும், பல இலட்சக்கணக்கான தொழி லாளர்களின் வாழ்வைப் பெருக்க இருக்கும் இந்த மூலாதாரமான தொழில்களைத் தனிப்பட்டவர் களின் உரிமைகளாக விட்டால், அதன் மூலம் முதலாளித்தனம் வளர்ந்து, பொருளாதார பேதம் மிகுந்து போகும் நிலைக்கு வந்து விடுமாகையால், இவைகளைச் சர்க்காரே நடத்துவது சாலச் சிறந்ததேயாகும். இதில் பெருலாபம் கிடைக்கக் கூடிய வருமானம் மக்களுக்கே வந்து சேரும் வாழ்க்கை தரம் உயரும்.

வடநாட்டு வணிகரே இரும்பு, எஃகு, பருத்தி, முதலிய பொருள்களைக் கொண்டு நடத்தப்படும் ஆலை அரசர்களாகி நம்மவர் களை ஆட்டுவிக்கும் ஆற்றல் பெற்றுவிட்டனர். தேசிய இயக்கம் அவர்களின் இயக்கமாகி விட்டது. காந்தியாரின் முகாமே பிர்லா மாளிகை. இந்த காரியத்துக்கு பெரும்பணம் உதவியே அரசர்களிடமிருந்து கிடைக்கிறது. முதலாளித் துவமும் தேசியமும் ஒன்றாக இணைந்திருக்கிறது. இத்துடன் மதமும் இணைந்து கிடக்கிறது. இந்த முக்கூட்டு பயங்கர விளைவுகளுக்கு ஏற்றதானதால்தான் இதனை அழிக்க உண்மையான விடுதலை உணர்ச்சி உள்ளவர்கள் துடிக்கிறார்கள்.

போருக்குப் பிறகு, தொழிற்சாலைகள், ``தேசியமயமாக வேண்டும்’’ என்பதை வணிகரும், தேசியத் தலைவர்களும் வற்புறுத்தி வருகிறார்கள். தொழில் வளரச் சலுகைகள் கேட்கின்றனர். போட்டி ஆபத்து வராதிருக்கப், பாதுகாப்பு தேடுகின்றனர். வெளிநாட்டு முதலாளி களுக்கு இந்நாடு வேட்டைக் காடாகக் கூடாது என்று கூறுகின்றனர். இவை இயல்பாகவே, பொது மக்களின் ஆதரவைப் பெறக்கூடிய யோசனை களே! எனவே, நாட்டு மக்களும், இந்த ஏற்பாடே தேவை என்று கூறுகின்றனர். இந்தத் தேசியத் திரைக்குப் பின்னால், பத்து அல்லது பனிரெண்டு பணியாமுதலாளிகள் அமர்ந்துள்ளனர். தொழிற் சாலைகள் தேசியமயமாவது என்றால் அவர்கள் அகராதியிலே முதலாளி மயமாவது என்று தான் பொருள். தேசியத்தை எடுத்துக்காட்டக் கதர் அணிவோம். காந்தி உண்டியலுக்குப் பணம் தருவோம், பாரத மாதா பூஜையும் செய்வோம். அவை போதாவோ! என்று கேட்கின்றனர். இந்த உதவிக்கு, கைங்கரியத்துக்குப் பிரதிபலன் என்ன? கோடிகோடியாகப் பணம்! மார்க்கட் மன்னர்களாகின்றனர்! நாட்டு வளம், இயற்கைச் சக்தி, பாட்டாளி உழைப்பு, யாவும் சேர்ந்து, இந்த முதலாளிகளுக்கு பெருவாரியான இலாபத்தைத் தருகின்றன. கோடீஸ்வரர்களாக ஒரு டஜன் குடும்பம் கோலாகலமாக வாழும், தரித்திர நாராயணர்கள் கோடிக்கணக்கிலே, ஆலை களிலே, தொழிற்சாலைகளிலே கால்களும், கைகளும் முறியப் பாடுபட்டுக் கிடப்பர், ஒருபுறத்திலே மலை போல வறுமை இருக்கும். இந்த வடநாட்டு வணிகரின் வாழ்வு, வளம் பெறும், உலக மார்கட்டுகளிலே போட்டியிடும் அளவு இவர்கள் உரம் பெறுவர். சர்க்காரைத் தங்களிடம் சரண் புகச் செய்வர்! சுயராஜ்யத்தைத் தங்கள் சூத்திரக் கயிற்றினால் ஆட்டிப் படைப்பர்! அத்தகைய முதலாளித்தனத்தை,, பிர்லாஸ்தான் என்று கூறலாம். இதுபோது, சர்க்கார், மூலாதாரத் தொழில்களிலே முதலாளித்துவம் கூடாது என்று கூறுவதும், அவை மத்ய சர்க்காரின் பொறுப்பிலே இருக்குமென்றுரைப்பதும், பிர்லாஸ்தானுக்குப் பிணக் குழி தயராகிறது என்று கூறுவதற்குச் சமானமாகும்.

இந்த நோக்கத்துடன் சர்க்காரின் திட்டம் தீட்டப்பட்டிருக்கிறதோ அன்றி, இங்கு தொழில் வளர்ச்சியின் போக்கினால், பிரிட்டிஷ் சரக்கு களுக்கு மார்க்கெட் போய் விடுமே என்ற ஏக்கத்தின் விளைவா? என்பதும், கூண்டுக் கிளிக்குக் கொவ்வைக் கனி தருவது போல இந்தத் திட்டத்தைக் காட்டித் தங்கள் பொறியிலே நாடு இருக்கும்படி செய்ய இது ஒரு முறையா என்பதும் ஆழ்ந்து யோசிக்கப்பட வேண்டிய பிரச்னைகள் என்பதில் ஐயமில்லை. சர்க்காரின் ஆதிக்கத்திலே தொழில்கள் இருக்குமென்ற .... சர்க்காரினால் நியாமிக்கப்பட்ட கம்பெனிகளிடம், ஆதிக்கத்தைவிட்டு விடுமோ என்ற சந்தேகம் தோன்றுவதிலும், பிரிட்டிஷ் சரக்குகளைக் கொண்டு வந்து குவிக்கும் விதத்திலே முறைகள் அமைக்கப்படுமே தவிர, உண்மையான தொழில் வளர்ச்சிக்கான முறைகளைச் சர்க்கார் ஏற்படுத் தாது என்று பயப்படுவதிலும், ஆச்சரியப்படு வதற்கில்லை. ஆனால், இந்தப் பயத்தை மட்டுமே பிரமாதப்படுத்தினால், பிர்லாஸ்தானல்லவா ஏற்படும், அது பேராபத்தாக முடியுமே என்று எண்ண வேண்டி இருக்கிறது.

இத்தகைய தீவிரமான திட்டங்கள் செய்ய தேசீய சர்க்கார் உரிமை பெற்றதே தவிர, அன்னிய நாட்டினருக்கு அருகதை இல்லை என்று முதலாளிகள் கூறுவது, சாகசமன்றி வேறில்லை. தேசீய சர்க்கார் ஏற்பட்டால், தங்கள் பிடி பலப்படும் என்ற நம்பிக்கை முதலாளி களுக்குப் பரிபூரணமாக இருப்பதால்தான், தேசீய சர்க்கார் ஏற்பட்ட பிறகு இந்தத் திட்டம் வரவேண்டும் என்று கூறுகின்றனர். இந்த வாதத்திலே சுயநலம் இருக்குமளவு, உண்மை இல்லை என்று உறுதியாகக் கூறலாம்.

சர்க்கார் இந்தத் திட்டத்தைக் கொண்டு வருவதற்குச் சமதர்ம நோக்கம் தங்களுக்கு இருப்பதாகக் காட்டிக் கொள்வதன் மூலம், பிரிட்டிஷ்- சோவியத் நட்பைப் பலப்படுத்த வேண்டுமென்பதும் ஒரு காரணமாக இருக்கக் கூடும். அதன்றி வேறோர் முக்கியமான கருத்தும் அவர்களுக்கு இருக்கக் கூடும். வடநாட்டு வணிகர்கள் இப்போது அமெரிக்காவிடம், அதிகமாகக் காதல் கொண்டு விட்டனர். இவ்வணி கரின் தரகர்கள் அமெரிக்கா சென்று, பிரிட்டனி டம் இந்தியா கொண்டுள்ள வெறுப்பையும், அமெரிக்காவிடம் கொண்டுள்ள பற்றையும் எடுத்துக் கூறுவதும், இந்தியாவிலே தொழில் வளர்ச்சிக்கு வழிகள் பல உள என்று தூண்டு வதும், அமெரிக்கா `முதல்’ போட்டால் இந்தியா விலே ஏராளமான இலாபம் கிடைக்கும் என்று ஆசை காட்டுவதுமாக உள்ளனர். அமெரிக்க முதலாளிகளுக்கும் இதனால் ஆசை உண்டாகித் தான் இருக்கும். ஆட்சி தங்களிடம் இருக்கும் போது, பொருளாதாரப் பிடி அமெரிக்காவிடம் சென்று விடுவதை பிரிட்டன் சகித்துக் கொள்ளுமா? எனவே அமெரிக்காவின் ஆசை யிலே மண் அள்ளிப் போட விரும்புவதும் இயற்கையே, மூலதாரத் தொழிலிலே முதலாளித் தனம் கூடாது என்ற மூல மந்திரத்தை ஜெபிப் பதன் மூலம், அமெரிக்காவைத் தடுக்க முடியும் என்று பலர் கருதுகின்றனர்.

பிரிட்டன் இந்தியாவுக்குச் சேர வேண்டிய கடனைத் திருப்பித் தர இந்தத் திட்டம் வழி காட்டும் என்றும் சிலர் கூறுகின்றனர்.

பண அரசு ஒழிக்கப்பட வேண்டும், ஆனால் அதன் பேரால், இந்தியாவிலே இன்று கேட்கப்படும் இன அரசுகள் தடுக்கப்பட்டால், கேடு அதிகமாகும். சர்க்கார் தீட்டும் இந்தத் திட்டம் இந்தியாவை ஒரு நாடு என்று கருதி, மத்திய சர்க்கார் வசம் நாட்டு உயிர் நாடிகளை ஒப்படைக்கிறது. இது பாகிஸ்தான், திராவிட நாடு எனும் இன அரசு கோரிக்கைகளைக் கருவி லேயே அழிக்கும் கிருமியைப் படைத்து விடும். எனவே, சர்க்காரின் ஆதிக்கத்திலே மூலாதாரத் தொழிற்சாலைகள் வரவேண்டும். தனிப்பட்ட முதலாளிகளின் இலாபத்துக்காக அவை இருக்கக் கூடாது என்ற திட்டம், நாம் வரவேற்கக் கூடியது. ஆனால், இந்தத் தொழிற்சாலைகளின் அமைப்பு ஆதிக்கம் யாவும், அந்தந்த மாகாண சர்க்காருக்கு ஒப்படைக்கப்பட வேண்டும். இன அரசு அமைப்புக்கு இணங்கா முன்னம், இந்தத் திட்டம், மீண்டும் பிடியை, மத்திய சர்க்காரிடம் ஒப்படைப் பதன் மூலம், பாகிஸ்தானுக்குப் பாதகமும், திராவிட நாட்டுக்குத் தீங்கும் தேடுவதாக முடியும். மூலாதாரத் தொழில்கள் யாவும் தனிப்பட்ட முதலாளியிடம் விடப்படக் கூடாது. சர்க்காரே நடத்த வேண்டும் என்பது, பெரியார் திட்டத்திலே, அதாவது நீதிக் கட்சியில் அவரால் புகுத்தப்பட்ட திட்டத்திலேயே காணப்படுவதுதான். எனவே அந்தக் கொள்கையை அடிப்படையாகக் கொண்டு சர்க்கார் திட்டம் வகுத்திருப்பது கண்டு மகிழ்கிறோம். பண அரசு ஒழியட்டும்! ஆனால், இன அரசு வாழ வழி இருக்கவேண்டும்! இன அரசுக்கு ஊறுவாராத விதமாக இத்திட்டம் திருத்தி அமைக்கப்பட வேண்டும் என்று விரும்புகிறோம். நிற்க, டில்லியிலே மாஸ்கோ மணம் பரவுவது கண்டு மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறோம், மலர்க சமதர்மம்! வாழ்க மக்கள்!

(திராவிட நாடு - 29-4-1945)