அறிஞர் அண்ணாவின் கட்டுரைகள்


தேவமொழி மக்களுக்கு ஏன்?

இப்போது சில காலமாக வட மொழியாகிய சமஸ்கிருத மொழியைத் தமிழ்நாட்டில் பரப்பும் முயற்சி நடைபெற்று வருகின்றது. அதிலும், ஆங்கிலேய ஆட்சி ஒழிந்து, சுதந்திரம் ஏற்பட்ட பின், இம்முயற்சி காற்று வேகத்தில் பரப்பப் படுகின்றது. பள்ளிக்கூடங்களில், மாணவர்கள் கற்க வேண்டுமென்று சொல்லப்படும் மூன்று கட்டாய மொழிகளில் சமஸ்கிருதமும் ஒன்றாக இடம் பெற்றுள்ளது. பேச்சு வழக்கொழிந்து, நூல் வடிவில் மட்டும் காணப்படும் சமஸ்கிருத மொழிக்கு இதுவரை இல்லாத இன்றியமையாமை இப்போது என்ன ஏற்பட்டுவிட்டது என்பது தெரியவில்லை. இந்தி மொழியை இந்நாட்டின் பொது மொழியாக்க வேண்டுமென்று கச்சை வரிந்து நிற்பவர்கள், அதற்குக் கூறும் போலிக் காரணங்களைப் போலவே, சமஸ்கிருதம் இத் தமிழ் நாட்டில் பரவ வேண்டுமென்று பாடுபடு பவர்களும் அதற்கு ஏதேதோ போலிக் காரணங் களைக் கூறுகின்றனர். அதாவது-

``சமஸ்கிருதம் தேவமொழி, இந்தியா வின் பழைய நாகரிகம் சமஸ்கிருதத் திலேயே அடங்கி இருக்கிறது. மதத்தின் அடிப்படை உண்மைகள் எல்லாம் சமஸ் கிருதத்தில் தான் உள்ளன. எனவே, சமஸ்கிருதத்தை அனைவரும் படிக்க வேண்டும்.''

என்ற காரணங்களைக்க் கூறுகின்றனர்.

எனவே, சமஸ்கிருதத்தைத் தேவ மொழி என நம்புகின்றவர்களும்- ஒப்புக் கொள்கின்ற வர்களும், `தேவ' இனத்தைச் சேராத மக் களினத்தைச் சேர்ந்தவர்கள் அதனைப் படிக்க வேண்டுமென்று சொல்வதன் காரணம் என்ன?

தேவ உலகத்தில் வாழ்வதாகச் சொல்லப் படும் தேவர்களால் பேசப்படும் தேவமொழியான சமஸ்கிருதம், இப்போது அவர்களாலும் பேசப் படாமல் கைவிடப்பட்டு, ``அகதி''யாக நம்மிடம் அடைக்கலம் புகுந்துவிட்டது- எனவே, அதனைக் காப்பாற்றுவது நம்முடைய கடமை என்ற முறையில் அதனை நாம் கற்று அதற்கு உயிர்ப் பிச்சை அளிக்க வேண்டுமென்பதற்காக இவ்விதம் கூறுகின்றார்களா? அங்ஙனமாயின், அந்த `அகதி'யை நாம் அனைவரும் ஒருங்கு சேர்ந்து கட்டாயமாகக் காப்பாற்றித் தீர வேண்டிய நெருக்கடி எதுவும் அதற்கு இப்போதும் திடீ ரென்று ஏற்பட்டுவிட்டதாகத் தெரியவில்லையே!

தேவமொழியாகிய சமஸ்கிருதம் இங் குள்ள `பூதேவர்'களால் நீண்ட காலமாகவே காப்பாற்றப்பட்டு வருகின்றது. `தேவர்'களால் பேசப்பட்டு வந்ததாகச் சொல்லப்படும் சமஸ்கிருதம், இங்குள்ள `பூதேவர்'களால் பேசப் படாவிட்டாலும், அது, தனக்கு மிஞ்சிய செல்வாக்கை உண்மையாகவே பெற்றிருக்கிறது. வீட்டு மொழி- நாட்டு மொழி என்றழைக்கப்படும் தகுதியை அது இழந்தபோதிலும், ஏட்டு மொழியாக நின்று, நாவினால் ஒலிக்கப்பட்டும், காதினாற் கேட்கப்பட்டும், கோயில்களிலும்- குளத்தங் கரைகளிலும் நல்ல செல்வாக்கோடு தான் திகழ்கிறது.
தமிழ்நாட்டிலுள்ள கோயில்களில் சமஸ் கிருதம் அடைந்திருக்கும் செல்வாக்கைக் கண்டு தமிழ் மொழி கூடத் தனக்கு இவ்வளவு செல்வாக்கு இல்லையே என்று வெட்கப்பட வேண்டிய அளவுக்கு அதன் நிலை உயர்ந்திருக் கிறது. தமிழ் நாட்டிலுள்ள கோயில்களில் குடி கொண்டிருப்பதாகச் சொல்லப்படும் கடவுள ருக்குக் கூடச் சமஸ்கிருதம் என்றால் ஒரு தனி விருப்பமும் பற்றுதலும், தமிழ் என்றால் அருவருப்பும் வெறுப்பும் ஏற்படுகின்றது. காரணம்- இன்று தமிழ் நாட்டிலுள்ள கோயில் களில் உறையும் கடவுளரெல்லாம் தமிழினத்தைச் சேராத தேவ இனத்தவரென்றும், தேவ உலகம் என்று சொல்லப்படும் கைலாயம்- வைகுந்தம் முதலான இடங்களில் இருந்து வந்தவர்கள் என்றும் சொல்லப்படுவதேயாகும். இந்த மறுக்க முடியாத உண்மையினை மெய்ப்பிக்கும் முறையிலேயே தமிழ்நாட்டிலுள்ள கடவுளரை யெல்லாம் தேவ இனத்தவரான `பூதேவரே' பூசை முதலான எல்லாக் காரியங்களையும் சமஸ்கிருத மொழியின் துணைகொண்டே செய்தும் வருகின்றனர்.

அன்றியும், தமிழ்நாட்டிலுள்ள சிவன் கோயில்களிலோ, திருமால் கோயில்களிலோ தமிழ் மக்கள் நுழைந்து அங்குள்ள கடவுள் வடிவங்களைத் தொடக்கூடாதென்னும் `தேவ கட்டளை' இன்றும் நடைமுறையில் இருக்கின்றது. அதோடு, இக்கடவுளரைப் போற்றியும்- புகழ்ந்தும்- வாழ்த்தியும் நாயன்மார்களாலும், ஆழ்வார்களாலும், தமிழில் பாடப் பெற்ற தேவார- திருவாசக- திருவாய் மொழிகளையும் இங்குள்ள `பூதேவர்'கள் ஒப்புக்கொண்டு, அப்பாடல்களால் அக்கடவுளருக்குரிய வழி பாட்டு நிகழ்ச்சிகளைச் செய்வதும் இல்லை. அங்ஙனம் செய்யாதது மட்டுமல்ல, அப்பாடல் களை எல்லாம் கடவுளர் முன்னிலையில் பாடக்கூடாத பண்டாரப் பாடல்கள் என்றும் ஒதுக்கி வைத்துள்ளனர்.

வடமொழி வழங்காத தமிழ் நாட்டிலுள்ள கோயில்களில் தமிழ் மக்களுக்கு விளங்காத தேவமொழி மந்திரங்களைக் கொண்டு, கடவுட் காரியங்களெல்லாம் நடைபெறுகின்றதென்றால், இக்கடவுளர் எல்லாரும் தேவமொழியாளர்க் குரிய கடவுளராவரே யன்றித் தமிழ் பேசும் தமிழ் மக்களுக்குரிய கடவுளர் ஆகார் என்ற காரணத் தால்தான் போலும். இங்குள்ள தமிழ் மக்கள் எவரும் இம்முறையினை இதுவரை எதிர்க்காம லும் இருக்கின்றனர்!

இவ்வாறு, தமிழ்நாட்டில், தமிழ் மக் களுக்குத் தேவைப்படாததும்- தமிழ் மக்களால் புரிந்து கொள்ள முடியாததுமான சமஸ்கிருத மொழிக்குத் தமிழ் மக்கள் இத்துணைச் சிறப்பும் செல்வாக்கும் அளித்து அதன் வளர்ச்சிக்குத் தடை செய்யாமல் இருப்பது அவர்களின் பெரும் குணத்தையே காட்டுகின்றதென்ற நினைப்போ, பிறமொழி எதனுடையவும் உதவியின்றித் தனித்தியங்கும் வாய்ப்பைப் பெற்றுள்ள, தமிழ் மொழி வழங்கும் நாட்டில், அவர்களுக்குத் தேவைப்படாத சமஸ்கிருத மொழி வழங்கப்படு வதற்கு இடம் அளித்தார்களே, அதற்கு நாம்ம் நன்றி செலுத்தக் கடமைப்பட்டுள்ளோம் என்ற எண்ணமோ, சமஸ்கிருதக் கலப்பால் தமிழின் இனிமையும், தூய்மையும் கெட்டுவிட்ட நிலை யிலும், தமிழ் மக்கள் அதனைப் பொருட்படுத் தாது, சமஸ்கிருதத்தைச் `தாய்மொழியாக' கொண்ட பூதேவர்கள் அதனைத் தங்கள் பேச்சு மொழியாகக் கொள்ள முடியாவிட்டாலும், அது, அவர்களின் பிழைப்பு மொழியாக, இருக் கின்றதே என்றெண்ணி, அதன் வழியில் குறுக் கிடாமல் இருப்பதையே இப்போது சமஸ் கிருதத்தை நாடெங்கும் பரப்ப வேண்டுமென்று படாத பாடுபடுகின்றவர்கள் ஒரு சிறிதும் எண்ணிப் பார்க்கவில்லையே என்று தான் வருத்தப்படுகின்றோம்.

சமஸ்கிருதத்தை எவ்வளவு முயன்று- பயின்றாலும், அது இப்போதுள்ள நிலையைப் பார்க்கிலும் ஒரு அணுவளவு கூட உயர் நிலையை அடைய முடியாது! ஏட்டு மொழியாய்ப் பாட்டு வடிவில் இருக்கும் நிலைக்கு மாறின சமஸ்கிருதம் இனி எந்தக் காலத்திலும் நாட்டு மொழியாய்ப் பேச்சு வடிவில் வரமுடியாதே! அது, உலக வழக்கழிந்தொழிந்த மொழியாயிற்றே! அதனை மீண்டும் உயிர்ப்பிக்கலாம் என்ற உருவற்ற காரியத்தில் இவர்கள் ஏன் இறங்க வேண்டும்? சமஸ்கிருதத்தைத் தங்கள் தாய் மொழியெனப் பேசிப் பெருமிதம் கொள்ளும் இவர்கள், தங்கள் தாய் தந்தையர், மனைவி, மக்கள் உற்றார் உறவினர் முதலியவர்களுடன் அம்மொழியிற் பேசி, அளவளாவி மகிழும் வாய்ப்பை ஏன் பெறமுடியவில்லை என்பதைக் கூட ஒரு சிறிதும் எண்ணிப் பார்ப்பதில்லை. சமஸ்கிருதத்தைப் பற்றி ஏதாவது பேச வேண்டு மென்றால், இவர்களுக்குத் தமிழோ ஆங் கிலமோ அன்றி வேறு மொழிகளோதான் தேவைப்படுகின்றதேயன்றி, அம்மொழியி லேயே அம்மொழியைப் பற்றிப் பேசவோ- விளக்கம் கூறவோ முடியாதே!

தமிழில் ஒரு பாட்டைப் பாடி அதற்கு விளக்கம் தமிழிலேயே கூறமுடிவதைப் போல், சமஸ்கிருதத்தில் ஒரு சுலோகத்தைக் கூறி அதற்கு விளக்கம் சமஸ்கிருதத்திலேயே கூற முடியாதே! ஒருகால் முயன்றாலும், அதற்கு இன்னொரு சமஸ்கிருதச் சுலேகாத்தைத்தான் தேடிப் பிடிக்க வேண்டுமேயன்றி, அதனை உரை நடை வாயிலாக விளக்கச் சமஸ்கிருதம் பயன் படாதே! இந்த இரங்கத்தக்க நிலையில் சமஸ்கிருதத்தை இந்நாட்டில் பரப்பும் பயனற்ற முயற்சியை ஏன் எடுத்துக்கொள்ள வேண்டும்.

இனிச் சமஸ்கிருதம் இந்நாட்டுக்குத் தேவையும்- பயனுமற்ற ஒரு மொழி என்பதற்கு நாம் கூறும் காரணங்களை ஒருவேளை நாம் அந்த மொழியின் மீது கொண்ட ஏதோ வெறுப்பின் காரணமாகக் கூறுகின்றோம் என்று சில குறை மதியினர் கருதக்கூடும். ஆகையால், சமஸ்கிருதம் இந்நாட்டுக்கு ஏற்புடைய ஒரு மொழியல்ல என்பதற்குரிய காரணங்களைக் காலஞ் சென்ற வடநாட்டுப் பேரறிஞரான இராஜாராம் மோகன்ராய் அவர்கள் கூறியுள்ளார். அவருடைய சிறந்த கருத்துக்களையாவது இன்று சமஸ்கிருதத்துக்கு உயிர்ப் பிச்சை அளிக்க முயல்வோர் உணர்ந்து பார்க்க வேண்டுகிறோம்.

1. சமஸ்கிருதத்திலுள்ள பழங்கால அறிவை இன்றைய மாணவர்களுக்குக் கற்பிப்ப தால் யாதொரு பயனும் ஏற்பட்டு விடாது.

2. இன்றைய சமஸ்கிருதப் பள்ளிக்கூடம், ஐரோப்பாவில் பேக்கன் பிரபு என்பவர் காலத் துக்கு முந்திய பள்ளிக்கூடத்தோடு ஒப்பிடக் கூடியதாகவே இருக்கும்.

3. சமஸ்கிருதப் படிப்பானது உலக வாழ்க்கைக்குப் பயனற்ற இலக்கணங்களையும், தத்துவ கூறுபாடுகளையும் இளைஞர்களுடைய மனத்தில் சுமத்தக் கூடியதாக இருக்கிறது.

4. சமஸ்கிருத மொழியில் ஒருவன் புலவனாக ஆகவேண்டுமானால், அவன் தன் வாழ்நாள் முழுவதும் படிக்க வேண்டிய அவ்வளவு கடின மொழியாக இருக்கிறது.

5. சமஸ்கிருதத்திலுள்ள இலக்கணப் பகுதிகளை மட்டும் ஒரு மாணவர் 12 ஆண்டு களுக்கு மேல் படித்ததால்தான் அதில் சிறிதளா வது திறமையுள்ளவனாக ஆகமுடியும்.

6. சமஸ்கிருதப் படிப்பு அறிவைப் பரப்புவதற்கு நீண்ட காலமாக ஒரு வருந்தத் தக்க தடையாய் இருக்கிறதென்பது நன்கு ஆராய்ந் தறியப்பட்ட உண்மையாகும்.

7. சமஸ்கிருத அறிவு திறக்க முடியாத ஒரு மூடாக்குக்குள் அடங்கி இருக்கிறது.

8. சமஸ்கிருத அறிவைப் பெறுவதற்கு நாம் எடுத்துக்கொள்ளும் முயற்சிக்குத் தக்க பயன் கிடையாது.

என்று, இன்றல்ல, நூற்றாண்டுகட்கு முன்னரே இராஜாராம் மோகன் ராய் அவர்கள் கூறியுள்ளார். எனவே, இப்போது சமஸ்கிருதம் நாட்டில் பரவ வேண்டும் என்ற முயற்சியில் ஈடுபட்டுள்ளவர்கள் இந்த அரிய கருத்துக்களை நன்றாக உணர்ந்து பார்க்க வேண்டுகிறோம்.

சமஸ்கிருதத்தில் ஒரு மாணவன் புலவ னாக வரவேண்டுமானால், அவன் தன் வாழ்நாள் முழுவதும் அதனையே படித்துக் கொண்டிருக்க வேண்டிய ஒரு கடினமான மொழியென்றும் மோகன்ராய் கூறுகின்றார். ஒரு மாணவன், தான் சமஸ்கிருதத்தில் புலவனாக வர விரும்பினால், அவன் தன்னுடைய வாழ்நாள் முழுவதையுமே சமஸ்கிருதம் கற்பதில் செலவு செய்வானானால், அவனுடைய வாழ்க்கை என்ன ஆகும் என்ப தனையும், சமஸ்கிருதப் படிப்புக்கே அவ னுடைய மற்றைய அறிவு விளக்கத்திற்கான புடிப்புகளையும், அவ்வறிவால் தனக்கும், பிறர்க் கும் பயன்படும் வாழ்க்கையையும் எப்படி- எப்போது நடத்த முடியும் என்பதனையும் எண்ணிப் பார்ப்பதோடு, சமஸ்கிருதத்தைப் பெயரளவுக்காவது படிக்க வேண்டுமென்பதற் காக ஒரு மாணவன் தன் வாழ்நாளில் ஒரு பகுதியை ஒதுக்கி அதனைப் படித்தாலும், அதனால் அவன் உலக வாழ்க்கைக்குப் பயன் படக்கூடிய நன்மையான அறிவு எதனையும் பெற முடியாதென்பதையும் சமஸ்கிருதத்துக்காகப் பரிந்து பேசுபவர்கள், இளமாணவர்களின் முன்னேற்றத்தை மனதில் கொண்டாவது இவ்வேண்டா முயற்சியைக் கைவிடக் கூடாதா?

இனி, ஒரு மாணவன் சமஸ்கிருத மொழிக் கென அமைந்திருக்கும் இலக்கண வரம்புகளைக் கண்டறிவதற்கே அவன் பன்னிரண்டு ஆண்டு களுக்கு மேல் அம்மொழியைப் படிக்க வேண்டுமென்று கூறப்படுவதை எண்ணும் எவர்களும், இந்தக் கடுமையும், கொடுமையும் நிறைந்த மொழியை மாணவர்கள் தலையில் சுமத்தவே மாட்டார்கள்.

இனிச் சமஸ்கிருத அறிவு திறக்க முடியாத ஒரு மூடாக்குக்குள் அடங்கியிருக்கிறதென்று இராஜாராம் அவர்கள் கூறிய கருத்து என்ன என்பதனை ஊன்றி நோக்கும்போது, `திறக்க முடியாதது' என்று கூறப்பட்டதும், உலக வழக்கழிந்தொழிந்து சிதைந்த மொழி' என்று மனோன்மணிய ஆசிரியர் சுந்தரம் பிள்ளை, அவர்களால் கூறப்பட்டதும், இறந்துபட்ட மொழி என்று மேல்நாட்டுப் பேரறிஞரான டாக்டர் கால்டுவெல் அவர்களால் கூறப்பட்டதும், வேறு வேறு சொற்களில் கூறப்பட்ட போதிலும், அடிப்படைக் கருத்து ஒன்றாகவே அமைத்துக் கூறப்பட்டதென்பதை அறிவுடைய எவரும் மறுக்கமாட்டார்கள்.

திறக்க முடியாதது- உலக
வழக் கழிந்தொழிந்தது-
இறந்துபட்டது

என்ற இம்மூன்று சொற்றொடர்களையும் ஒப்ப நோக்கிப் பார்ப்பவருக்குச் சொல் அமைப்பில் வேறுபாடு காணமுடியுமேயன்றில், கருத்தமைப்பில் தினைத்துணையும் வேறுபாடு காணவே முடியாது. எனவே, திறக்க முடியாமல்- உலக வழக்கழிந்தொழிந்து- இறந்துபட்ட சமஸ் கிருத மொழியை இளமாணவர்களின் மூளையைத் திறந்து அதற்குள் புகுத்தி அவர் களுடைய அறிவை அழித்து, அவர்களின் வாழ்க்கையை உலகிற்குப் பயன்படாது செய்யும் `இறப்பு' வேலைக்கு இன்றைய சர்க்கார் இட மளிக்கக் கூடாதென்பதே எமது விருப்பமாகும்.

சமஸ்கிருதத்தில் இருப்பதாகச் சொல்லப் படும் நாகரிகம், ஒருவேளை, தமிழ் நாகரிகத்தை விரும்பாதவர்களுக்குத் தேவைப்படலாம். தமிழ் மக்களுக்கென ஒரு தனிமொழியும், அம்மொழி யில் மிளிரும் ஒப்புயர்வற்ற நாகரிகமும் இருக் கும்போது, சமஸ்கிருத காலத்துக்கு முன்பிருந்தே நாகரிக வாழ்க்கையை மேற்கொண்டுள்ள தமிழ் மக்களுக்கு சமஸ்கிருத நாகரிகம் எதற்கு என்பதும், அதனை இப்போது நாட்டில் பரப்பும் முயற்சி ஏன் எடுத்துக் கொள்ளப்படுகின்றது என்பதும்தான் விளங்கவில்லை.

இனிச் சமஸ்கிருதம் `தேவமொழி' என்று கூறப்பட்டுவிட்டதால் அத்தேவமொழியில் காணப்படும் நாகரிகமும், தேவர்களுக்குரிய நாகரிகமாக இருக்கமுடியுமேயன்றி, அது, மக்களுக்குரிய நாகரிகமாக இருக்க முடியாது. எனவே, மக்களுக்குரிய நாகரிகம் மக்களால் பேசப்படும் மொழிகளிலேயே வேண்டிய அளவு இருக்கும்போது, மக்களால் பேசப்படும் வாய்ப்பை இழந்த தேவ மொழியினை- சமஸ் கிருத நாகரிகத்தை நாட்டில் ஏன் பரப்ப வேண்டும்? இனி, ஒருவேளை, தேவ மொழியான சமஸ்கிருதத்திலும்ம் சில நல்ல நாகரிகங்கள் இருக்கின்றன. அவற்றை மக்கள் தெரிந்து கொள்வது நல்லதுதான் என்று வைத்துக் கொண் டாலும், அது தமிழ் மக்களைப் பொறுத்த வரையில் தேவைப்படாத ஒன்றாகும். தமிழ் மக்களுடைய நாகரிகம், பிறமொழியாளர்கள் கண்டு பெருமைப்படக்கூடிய அளவிலும், அவர்களுக்கும் அந்த நாகரிகத்தைப் பின்பற்ற வேண்டுமென்ற ஆர்வத்தை உண்டாக்கக் கூடிய முறையிலும் அமைந்திருக்கும்போது, சமஸ் கிருதத்தில் காணப்படும் நாகரிகத்தைத் தமிழ் மக்களுக்கு நினைவூட்டுவதே நகைப்புக்கிடமான கேலிக்கூத்தாகும்.

(திராவிட நாடு - 25-7-1948)