அறிஞர் அண்ணாவின் கட்டுரைகள்


தலால் தர்பார்!

கண்ணீர் விடுகிறானா? கருணை காட்டாதே! பசி- பட்டினி என்று பேசுகிறானா? வெறும் பசப்பு- பரிகாரம் தேடுவதாகக் கூறாதே! எதிர்த்தால்- அடக்கு- சுட்டுத் தள்ளு- சமரசம் பேசாதே- சாந்த போதனை செய்யாதே!

கூலி போதவில்லை- படிச் செலவு அதிகம் வேண்டும் என்று கேட்ட வண்ணந்தான் இருப்பான் பாட்டாளி, அவன் பேச்சுக்கு மதிப்பளிக்காதே!

கெஞ்சுவான்- மனம் இளகாதே! மிஞ்சு வான் மனம் மருளாதே! உறுதிக்கொள்! உரத்த குரலில் பேசு!

ஆர்ப்பரித்தால், அடக்க முடியும் என்பதைக் காட்டு.

கிளர்ச்சி செய்தால், நசுக்கு.

போலீஸ் இல்லையா! ராணுவம் இல்லையா? இவை எதற்காக உள்ளன?

பாட்டாளிகளிடம், யாரும் சென்று பேச, உறவாட, சங்கம் வைக்க அனுமதிக்காதே.

அரசியல் கட்சிக்காரனுக்கு அங்கென்ன வேலை என்று கேள். அதட்டிப் பேசு.

தொழிலாளர் சங்கத்தைத் தொழிலாளரே நடத்த வேண்டும் என்று கூறிவிடு.

வேலை நிறுத்தம் செய்வது, பொதுஜன விரோதமான காரியம் என்று திட்டமாகக் கூறு.

பலவான் என்பதைக் காட்டு! பசப்புக்கு மயங்காதே! பயத்தால் பதைக்காதே! பாட்டாளி யின் கடமை பாடுபட வேண்டியது என்ற நீதியை நிலைநாட்டு.

உன் கரம் வலுவாக இருக்கட்டும்- கண்களிலே உறுதி ஒளிவிடட்டும்- குரலிலே, முடுக்கு இருக்கட்டும். இரக்கம்- இன்மொழி பேசுவது- இதோ செய்கிறேன், நாளை செய்கிறேன் என்று நல்வாக்குக் கொடுபப்து- இவைகளை மறந்துவிடு.

ஆளவந்தோர்களே! சுருக்கமாகக் கூறு கிறேன், இருதயத்தை எடுத்து எறிந்து விடுங்கள் வெளியே!
இல்லாதவனிடம் இரக்கம் காட்டுவது இயற்கை நீதியல்லவா என்று ஏட்டுக்கரை, நாட்டை ஆளும் உங்களுக்குக் கூடாது.

அவன் கரத்திலே சம்மட்டி! உங்கள் கரத்திலே, துப்பாக்கி!
* * *

இந்நாட்டு, முதலாளிகள் சார்பிலே, சர். ஆர்தீஷிர் தலால், இதுபோலச் சர்க்காருக்குப் புத்தி கூறுகிறார். இதே சொற்கள் கொண்டல்ல, இந்தக் கருத்துப்படப் பேசியிருக்கிறார் நவம்பர் 20ந் தேதி- பம்பாயில்.

சர். தலால், இந்நாட்டை இன்று ஆட்டிப் படைக்கும் ஒரு பத்துக் கோடீஸ்வரர்களிலே ஒருவர்.
டாடா, பிர்லா, பஜாஜ், தலால் சிங்கானியா, எனும் சில குடும்பத்தாரே இன்று இந்திய துணைக் கண்டத்தின், பொருளாதாரப் பூபதிகள் என்பதை அனைவரும் அறிவர். அவர்களின் சக்தியும், சாகசமும் சர்க்கார்களை முறையே முறிக்கவும், மயக்கவும் கூடியவை. அவர்களின் தொடர்பு உலகிலே உள்ள மற்ற நாட்டு முதலாளிகளுடன்- குறிப்பாக, அமெரிக்க முதலாளிகளுடன் அவர் களின் கரம் படாத தொழில் இல்லை- அவர்களின் சிரம் அசைந்தால், சர்க்காரின் போக்கே மாறி விடக் கூடும்- அவ்வளவு பண பலம் படைத்தவர்கள்.
* * *

நேரு, பட்டேல், பிரசாத், போஸ் போன்ற விடுதலைப் போர் வீரர்களின் புகழ் பரவியுள்ள அளவுக்கு, இந்த டாட்டா பிர்லாக்களின் புகழ் நாட்டு மக்களிடையே பரவியதில்லை. மகா ராஜாக்கள், ராஜாக்கள், ஜெமீன்தார்கள் என்போர், கடன்பட்டாவது `கதம்பப் பொடி' தூவிக்கொண்டு, கோலாகலமாக வாழ்ந்துகொண்டு, யானை குதிரை பரிவாரங்களுடனும், பாட்டு ஆட்டம் பாவையருடனும், படாடோபமாகக் காட்சித் தந்தால், பாமர மக்களுக்கு, அவர்களிடம் துவக்கத்திலே அச்சமும், பிறகு அருவருப்பும் அலட்சியமும் தோன்றியது. ஆனால் இப்படிப் பட்ட மகாராஜாக்களைக் கடன்காரர்கள் ஜாப்தா வில் குறித்து வைத்த இந்த டாட்டா பிர்லாக்கள், மக்கள் கண்களிலேயே அதிகம் படுவதில்லை- அவர்களின் ஆடம்பரத்தைக் கண்டு அரு வருப்புக் கொள்ளக்கூடிய சந்தர்ப்பம் சாதாரண மக்களுக்கு எற்பட்டதில்லை. மக்களின் கண் களுக்கு, மகாராஜாக்களும், தேசபக்தர்களும், தெளிவாகத் தெரிந்தனர். இம்மூன்று சாராரையும், அதாவது, பொதுமக்கள், சுகபோகிகள், விடுதலை வீரர்கள் ஆகிய மூவரையும் மிஞ்சக்கூடிய அளவு பணபலம் பெறுவதிலேயே கண்ணுங் கருத்துமாக இருந்துவந்ததுடன், இலாப வேட்டை யைத் திறம்பட நடத்தி, இங்கிலாந்தையே, கடன்கார நாடாக்கிக் காட்டினர். டாட்டா பிர்லாக் களோ, ஒரு துளியும் விடுதலைப் போருக்காகக் கஷ்டப்பட்டதில்லை- துரைமார்களின் சீற்றம் அவர்களைச் சுட்டதில்லை- போராட்டங்களிலே அவர்கள் ஈடுபட்டு, பொன்னையும், பொருளை யும், இழந்ததில்லை- எனினும், நாடாளும் நேருவுக்கு நாடாளும் வாய்ப்பும் வலிவும் கிடைப்பதற்கு நெடுநாட்களுக்கு முன்பிருந்தே, இந்த டாட்டா பிர்லாக்களுக்கு அந்தச் செல்வாக்கு இருந்தது.
வேவலாட்சியின் போதும் இவர்களின், ஏவலர் பலர், சர்க்காரிலே இருந்தனர்! லின்லிதோ பிரபு ஆட்சி செய்தார். இவர்களுக்கு அப்போதும் செல்வாக்குத்தான். மவுண்ட் பேட்டன் பிரபுவிடம் இவர்கள் கொஞ்சியபடிதான் இருந்தனர். நேரு சர்க்காரிலேயும் இவர்களுக்கு பழைய இடம்- பழைய செல்வாக்கு இருக்கத்தான் செய்கிறது.

முன்பு, புன்சிரிப்புடன் பேசுபவர் இந்தப் பணந்தேடிகள்! இப்போது புருவத்தையும் நெரிக் கிறார்கள்.
முன்பு வெள்ளையர் ஆட்சியின்போது- ஜாடை மாடையாகப் பேசுவர்- இப்போது- நேரு சர்க்காரின் போது- கண்டிப்பாகவே பேசு கிறார்கள்.

வெள்ளையர் ஆட்சியின் கடைசி நாட்களுக்கும், நேரு சர்க்காரின் துவக்க நாட்களுக்கும் இடையே, இந்த டாட்டா பிர்லாக்கள், இரண்டு, மூன்று தலைமுறைகள், பாடுபட்டால் மட்டுமே பெறக்கூடிய அளவு, இலாபம் பெற்று தொழிற் சாலைகளை அல்ல. பல நாடுகளையே விலைக்கு வாங்கக்கூடிய அளவு, பணபலம் பெற்று விட்டனர். பணபலம் என்றால், அவர் களிடம் ரொக்கமாக உள்ளது. பாங்குகளில் உள்ளது. ஆபரணக்குவியல் ஆகிய இவற்றை மட்டுமல்ல, நாம் குறிப்பிடுவது- இவை, மரத்திலிருந்து பறிக்கப்பட்ட, உதிர்ந்த, பழங்கள்- நாம் குறிப்பிடுவது பழந்தரும் மரத்தை!- மரத்தினை மட்டுமல்ல, மரம் பயிரிடுவதற்கான, விதைகளை! பண உற்பத்திச் சாதனம், அவர் களிடம் மிக அதிகமான அளவு குவிந்துவிட்டது. பொதுமக்கள், அன்னியர் பிடியிலே சிக்கிச் சீரழிகிறோமே என்ற சோகத்தில் மூழ்கிக் கிடந்தனர்- பொறுப்புணர்ச்சியுடையோர் அன்னிய ஆட்சியை ஒழிக்கப் போரிட்டபடி இருந்தனர்- அதேபோது, இவர்கள், பணபலத்தை பண உற்பத்திச் சாதனத்தை, மிக மிகத் திறமை யுடன், தயாரித்துக் கொண்டுவிட்டனர். இன்று, ஒரு பெரிய துணைக்கண்டத்தை அவர்கள் தயாரித்துக் கொண்டுவிட்டனர். இன்று, ஒரு பெரிய துணைக் கண்டத்தை அவர்கள் விரும்பு கிறபடி ஆட்டிப்படைக்க முடியும் என்று நிலைமை வந்துவிட்டது.
* * *

கலியாணத்தன்று இரவு காலட்சேபம்- ருக்மிணி கலியாணக் கதை அரைத் தூக்கமாக இருந்தபோதிலும் ருக்மிணியைக் கிருஷ்ணன் நேரிலே தூக்கிக் கொண்டு போகிற கட்டத்தைப் பெருந்திரளான மக்கள், கேட்டு ரசித்துக் கொண்டிருக்கின்றனர்- அதேபோது, கைகாரக் கள்ளன், கல்யாண வீட்டாரின் இரும்புப் பெட்டிக்குக் கள்ளச்சாவி போடுகிறான்- களவாடு கிறான்- ஓடியும் விடுகிறான். திறமையாகத் தானே செய்தான் என்று அவன் செயலை மற்றக் கள்ளர்கள் கூடப் பாராட்டுவர். அவ்வளவு `சுத்தமாக'க் களவாடுகிறான். கதை முடிந்து காலை மலர்ந்த பிறகுதான் கா கூ எனக் கூச்சல் கேட்கிறது- கள்ளன் அதற்குள் சீமானாகி விட்டான்.
* * *

நாட்டு விடுதலைப் போர் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது மக்களின் மனமும், மக்கள் மனதைத் தம் வயப்படுத்தி வைத்திருந்தவர்களின் கவனமும், வெள்ளையரின் வெள்ளை பற்றிப் பதிந்திருந்தது- அப்ப்போது டாட்டா பிர்லாக்கள், இலாபக் கோட்டைகளைக் கட்டிக் கொண்டனர். வெள்ளையரை விரட்டி அவர்கள் காலத்தில் சிறைக் கூடமாக இருந்த செங்கோட்டையைக் கைப்பற்ற முடிந்தது விடுதலை விரும்பிகளால். ஆனால், இந்த இலாபக் கோட்டைகள், சரிய வில்லை! சர்க்காரைச் சவாலுக்கு அழைக்கிறார் கள். சமதர்மப் பேச்சுப் பாணம், சமயாசமயத்திலே பேசப்படும் காரசாரமான பேச்சுப் பணம், இவைகள் யாவும் அந்தக் கோட்டையின் வெளிப்புறச் சுவரைக் கூடத் துளைக்க முடியாது, பொடிப் பொடியாகின்றன! உள்ளே இருந்து கொண்டு, அவர்கள் - `பணந்தேடிகள்- கொக்கரிக் கின்றனர்!
* * *

பிரிட்டிஷ் ஏகாதிபத்யம், துவக்கத்திலே, இந்த துணைக் கண்டத்தை, நேரடியாகவே சுரண்டிக் கொண்டு வந்தது- சுரண்டும் முறை களையும் சுரண்டுவதற்கான கருவிகளையும் தயாரிக்கவும், தயாரித்த கருவிகளைப் பயன் படுத்தும் பக்குவம் தெரிந்தவர்களுக்குப் பயிற்சி தரவும், சில பல வருஷங்கள் பிடித்தன- ஒரு நூற்றாண்டு காலம், ஏகபோகமாகவே, பிரிட்டிஷ் ஏகாதிபத்யம், இந்தச் சுரண்டலை நடத்தி வந்ந்தது- டாட்டா- பிர்லா - பஜாஜ் கூட்டம், இல்லை- தேவைப்படவில்லை.

நேரடியாகவே சுரண்டலை நடத்திக் கொள்ளக்கூடிய விதத்திலே, சமூக நிலை ஒரு நூற்றாண்டுக்காலம் வரை இருந்து வந்தது. மக்களுக்கு விழிப்புணர்ச்சியே இல்லாத நிலை- மாயாப் பிரபஞ்ச மனப்பான்மையும், ஆங்கிலே யனை இங்கு ஆளும்படி ஆண்டவனேதான் அனுப்பிவைத்தான் என்ற நம்பிக்கையும்- வெள்ளைக்காரன் விஷ்ணு அம்சம் என்ற வெட்டிப் பேச்சும்- பரவி இருந்த காலம். கொக்குக்சுட உபயோகமாகும் துப்பாக்கியைக் காட்டியே கோட்டைகளைப் பிடித்துவிடக்கூடிய சூழ்நிலை இருந்த காலம். கட்டப் பொம்முக் களைக் காட்டிக்கொடுக்கக் காட்டு ராஜாக்கள் முன்வந்த காலம். காப்பியும், தேயிலையும், மலையிலும் காட்டிலும் பயிரிடலாம். கோலாரில் தங்கம் எடுக்கலாம் என்ற விஷயங்களை மக்கள் அறியாத காலம். ரயில் அதிகம் ஓடாத காலம்! வெள்ளையர் இந்தச் சூழ்நிலையிலே, தங்கள் சுரண்டல் காரியத்தைத் துவக்கினர்- ஒரு நூற்றாண்டு வரையிலே, சிரமம் இல்லை- கூட்டுத் தோழர் தேவைப்படவில்லை- புள்ளிமான்கள் ஏராளம், புலிக்குக் கொண்டாட்டம்.
* * *

ஒரு நூற்றாண்டுக்குள், மக்களிடம் விழிப் புணர்ச்சி முளைத்து, எதிர்ப்புணர்ச்சியாக மாறி விட்டது. வெள்ளைக்காரன் இங்கு கொண்டு வந்து விற்கும் விதவிதமான சாமான்கள், இங்கிருந்து மலைமலையாகக் கொண்டுபோகும் மூலப் பொருள்களைக் கொண்டு செய்யப்படுவதுதான்- என்ற உண்மைகள் தெரியலாயின. அதுவரை பஞ்சாங்கத்தை மட்டுமே பார்த்துவந்த கண் களுக்கு, அட்லாஸ் தெரியலாயிற்று. அட்லாசைப் பார்த்தபிறகு, விடுதலை ஆர்வம் எப்படித் தோன்றாமலிருக்க முடியும்! இந்திய துணைக் கண்டத்தின் படத்தின் அளவையும், அதனை ஆட்டிப் படைக்கும் பிரிட்டன் படத்தின் அளவையும், அதனை ஆட்டிப் படைக்கும் பிரிட்டன் படத்தின் அளவையும் பார்த்துவிட்டு வெட்கப்படாதவர்கள் இருக்க முடியுமா? எனவே, விழிப்புணர்ச்சி வீறு கொண்டெழுந்தது. வெள்ளையர், சரி, இனி, நமது சுரண்டல் முறையை மாற்றிக்கொள்ள வேண்டும் என்று தீர்மானித்தனர். - சுரண்டல் முறைக்கு, `சுதேசி களைத்' தரகர்களாக்கிக் கொண்டனர். அப்படிக் கிளம்பியவர்கள், சுரண்டலில் சிறுசிறு பாகம் தமது பங்காகப் பெறலாயினர்- சிங்கம் தின்றது போகக் கீழே சிதறியதைச் சிறுநரிகள் தின்று கொழுப்பது போல! மக்களிடம் விழிப்புணர்ச்சி யும் எதிர்ப்புணர்ச்சியும் பலப்படப் பலப்பட, சுதேசி சுரண்டல்காரர்களின் தொகையும் பலமும், வளருவதற்கு, வௌளை ஏகாதிபத்யமே, அனுமதித்தது, உதவியும் செய்தது. ஏகாதிபத் யத்தின் செல்லப் பிள்ளைகளாகி, சட்டம் ஒழுங்கு ஆகியவைகளைப் பற்றிப் போதனை புரிபவர் களாகவும், ஆகி, இலட்சாதிகாரிகளாகி, கோடீஸ் வரர்களாகவுமாகி விட்டனர். பணம் திரட்டியது கூட அல்ல, அவ்வளவு முக்கியமான விஷயம்! பணம், குட்டையில் உள்ள நீர் போன்றது- எடுத்து உபயோகித்தாலும் குட்டை வெளியாகும்- உபயோகிக்காமலேயே இருந்தாலும், தேங்கிச் சேறாகி, காலத்தால் உலர்ந்தே போகும். பணம் திரட்டியது அல்ல, முக்கிய பணம் திரட்டும் வழியை, முறையை, அறிந்து கொண்டனர். அமெரிக்காவிடமிருந்து ஒரு அணுகுண்டை விலைக்கு வாங்கி வைத்துக் கொள்வதைவிட, அணுகுண்டு தயாரிக்கும் முறையையும் அதற் கான சாதனத்தையும் பெறுவதுதானே, அதிகமான உண்மையான ஆபத்து அதுபோலவே, பணத்தை மட்டும் இவர்கள் மூட்டை கட்டி வைத்துக் கொண்டார்கள் என்றால் கூட ஆபத்து அதிகம் இல்லை, பணத்தை உற்பத்தி செய்வ தற்குரிய கருவியை அமைக்கக் கற்றுக் கொண்டனர். எனவேதான் இவர்களால், இன்று, இருமாப்புடன் பேசமுடிகிறது.

பஞ்சத்தை அவர்கள் கோபம் உண்டாக் கும். அவர்கள் மனம் வைத்தால், பசி போகும்! அவர்களால், வேதனையை வேலையில்லாத் திண்டாட்டத்தை உண்டாக்க முடிகிறது! அவர்களே மனம் வைத்தால், வேலையும் வாழ்க்கையும் தர முடிகிறது! அவர்களின் கண்ணோட்டம் காடுகளைப் பட்டணமாக்குகிறது. அவர்களின் கடும் பார்வை, பட்டணங்களைக் காடுமாக்கி விடுகிறது.

மார்க்கட்டுகளில், திடீரெனப் பண்டங்கள் குவிவதும், `மாயமாக' மறைவதும், விலைகள் படு பாதாளம் போவதும் திடீரென உயர்வதுமாக பல சித்துகள் நடைபெறும். இந்தச் சீமான்கள் விரும்பினால், டெலிபோன் அருகே உட்கார்ந்த படி அவர்களால், மக்களை அல்லோலகல் லோலப்படுத்த முடியும்! வங்கப் பஞ்சம் வருவதும், வர்க்கப் போராட்டம் எழுவதும், அவர்களின் திருவிளையாடல் திறமையினாலே தான்.
* * *

``ஹலோ! ஹலோ! பேசுவது யார்?''

``நமஸ்தே! நமஸ்தே!

``ராம்! ராம்! ரவிசந்த்! மார்க்கட் எப்படி இன்று?''

``எந்த மார்க்கட்?''

``பொதுவாகத்தான், ரவி.''

``பொதுவாகவா? விசேஷம் ஒன்றும் இல்லை.''

``விசேஷம் இல்லையா? ஏன், சரி, மெட்ராஸ் மார்க்கெட்டிலே, சோப்பார்ஸ், சஸ்தாவா?''

``சஸ்தாத்தான்! கேட்போரே கிடையாது.''

``விலை ரொம்ப இறக்கமோ?''

``ஆமாம்!'' படிக்குப் பாதி கூட இல்லை.''

``அரே ராம், அரே ராம்! அப்படியா ஆகிவிட்டது. சரி, ரவிசந்த்! மார்க்கட்டிலே, இப்பவே புகுந்து, சோப் பூராவும்- ஸ்டாக் பூராவும் வாங்கிவிடு- உடனே.''

``அரே, விஷயம் தெரியாமே பேசறிங்க! ஒரு வாரத்திலே அமெரிக்கா சோப், ஒரு கப்பல் வரப் போகுது- மார்க்கட் நியூஸ் அதனாலேதான், கடைக்காரரெல்லாம்...''

``சோப்பை தள்ளி விற்கிறானுங்களா? நல்லது ரவிசந்த்! வாங்கிவிடு மொத்தமும் - உடனே.''

``நஷ்ட வியாபாரத்திலே ஏன் சேட் இவ்வளவு இஷ்டம்?''

``அரே, நம்பள் கஷ்டம் கண்டு ராம்ஜி உதவி செய்யாமல் போக மாட்டார். சோப் பூரா வாங்கி, கிடங்கிலே ஸ்டாக் செய்துவிடு, யார் கேட்டாலும், `இல்லை'ன்னு சொல்லணும்.''

``சரி''

``நமஸ்தே.''
* * *

சோப்பு சுந்துவாரற்றுக் கிடந்தது. டெலிபோன் பேச்சு முடிந்ததும் மார்க்கட்டிலே இருந்த சோப் முழுவதும், சேட்ஜியின் கிடங் குக்குப் போய்விட்டது. மறுநாள் மார்க்கெட்டில் சோப் கிடையாது. மலிவாகக் கிடைத்து வந்த சோப் `மாயமாக' மறைந்தது,ஏன் என்பது மக்களுக்குத் தெரியாது. அமெரிக்கா சோப் வந்துதான், இனி வியாபாரம் என்று கடைவீதி யிலே பேச்சு, மாலை பத்திரிகையிலே ஒரு சிறு குறிப்பு வெளிவருகிறது, மார்க்கட்டிலே மருட்சி ஏற்படுகிறவிதமாக.
* * *

வெளிநாட்டுச் சோப்புகளை இறக்குமதி செய்வதைத் தடுக்கலாம் என்ற யோசனை, சர்க்காரில் இருப்பதாக, டில்லி வட்டாரத்திலே நம்பிக்கையான இடத்திலிருந்து செய்தி கிடைத்திருக்கிறது. இந்தியாவுக்கும், அமெரிக் காவும் உள்ள உறவை, இந்தப் போக்குப் பாதிக்குமா, என்பது பற்றி, இந்திய சர்க்காரின் வெளிநாட்டு இலாகா தீவிரமாக யோசித்து வருகிறது.
* * *

இந்தச் செய்தி வெளிவருகிறது, மார்க்கெட் மருளுகிறது- அமெரிக்கா சோப் கிடைக்காது என்ற கவலை பிறக்கிறது. உள்ளூர் சோப் கம்பெனிகள் மார்க்கெட் மந்தமாக இருந்த காரணத்தால், உற்பத்தியைத் தற்காலிகமாக நிறுத்தி வைத்திருந்தன. எனவே மார்க்கெட்டில் சோப்புப் பஞ்சம்! ஏற்படுகிறது.
* * *

மீண்டும் டெலிபோன்! இம்முறை வெற்றிச் சிரிப்ப்ஸபடன்.

``ரவிசந்த்! மார்க்கெட் எப்படி?''

``சோப் பஞ்சம் சேட்ஜி. பார் விலை ஒன்றுக்கு மூன்றாகிவிட்டது.''

``ப்ளாக்கில் எப்படி?''

``நாலு- சிலசமயம் ஆறுகூட.''

``தள்ளிவிடு- பாதி இப்படி, பாதி அப்படி!''

``சேட்ஜி! அமெரிக்கா சோப் வரப் போவதில்லையாம்- மார்க்கெட் தத்தளிக்கிறது- ஒரு வாரம் போனால் நல்லது, விலை இன்னும் ஏறும்.''
``அரே, ஏறுவதும், இறங்குவதும் அதனி டமா, ரவி இருக்கு. இரண்டே நாளில் ஸ்டாக் பூராவையும் தள்ளிவிடு, ரவி! மனசிலே போட்டு வை. அமெரிக்கா சோப் பூராவும் நாம்பள்தான் வாங்கி இருக்கான்.''

``ராம்! ராம்! நம்பள்கீ அந்த யோசனை தோணல்லே, சேட்.''

``ராம்கீ ஜேய்!''
* * *

பார் ஆறணா வீதம் வாங்கிய சோப், இரண்டு ரூபா வீதம், மளமளவென்று விற்று விடுகிறது. இனி, வெளியே இருந்து வரவே போவதில்லையாம், அதனாலே, முன் ஜாக்ரதை யாக ஒன்றுக்கு ஒன்றாகச் சோப்புக் கட்டிகள் வாங்கி வைத்துக் கொள்வது நல்லது என்று சரோஜா சொல்ல, சீனுவாசன், சக்ரபாணி செட்டியார் கடைக்குச் சென்று, ஐயா, அப்பா என்று கெஞ்சி, இரண்டு சோப் கட்டிகள் வாங்கிக் கொண்டு வந்து கொடுத்துவிட்டு, சரோஜாவின் புன்சிரிப்பைப் பரிசாகப் பெறுகிறான். டெலிபோன் மூலம், சேட்ஜி, நடத்திய சிறு சித்து அவருக்கு நாற்பதாயிரம் தந்தது. இவ்வளவுக்கும் இவர், சோப் வியாபாரி அல்ல! அவர் ஜவுளி உற்பத்தி யாளர்தான்! இந்த வியாபாரம் வெறும் நிலாச் சோறு!
* * *

இலாப வேட்டையை, எப்படி நடத்து கிறார்கள்- மார்க்கெட்டை அவர்களால் என்ன பாடுபடுத்தி வைக்க முடிகிறது என்பதற்கு ஓர் எடுத்துக்காட்டு இது. இது கட்டெறும்பு அளவு, டாட்டா பிர்லாக்கள் விளையாடும் `சித்துகள்' காட்டெருமை அளவிருக்கும்! இவ்வளவும் மக்களை மாய்க்கும் மார்கம் என்று தலைவர் கள் பேசத்தான் செய்கிறார்கள். இது மக்களைக் கெடுக்கும் ஈன காரியம் என்று ஆசிரியர்கள் தீப் பொறி பறக்கத் தீட்டித்தான் காட்டுகிறார்கள். தேவைகளைக் குறைத்துக் கொண்டால் திருட்டு வியாபாரம், தானாக ஒழிந்து போகும் என்று உபதேசம் செய்துதான் பார்க்கிறார்கள் ஊர்ப் பெரியவர்கள்! ஆனால், ஒவ்வொரு சந்தர்ப் பத்தையும் இலாபத்துக்குப் பயன்படுத்தும் விதத்தையும், சந்தர்ப்பங்களை உண்டாக்கிக் கொள்ளும் வித்தையும், பணந்தேடிகளுக்குத் தெரியும்!
* * *

உற்பத்தி தேவையான அளவு இருந்தால், விலைவாசி, கட்டுக்குள் அடங்கி இருக்கும்- வாழ்க்கைச் செலவு, சராசரி மக்களால் தாங்கிக் கொள்ளக் கூடிய அளவு இருக்கும். இது அரிச்சுவடி. ஆனால் இதனையே, டாட்டா பிர்லாக்களால், புரியமுடியாத சிக்கலாகவுமாக்கி விட முடிகிறது- மிக சமர்த்தாகச் செய்கிறார்கள் இந்தக் காரியத்தை. உற்பத்தி பெருக்க வேண்டும் என்று உயர்ந்த கோட்பாட்டை வலியுறுத்துவர்- பொதுமக்களின் சார்பில் சர்க்காரும், சம்மதிக்கும்- தொழிலாளருக்கு உபதேசிக்கப்படும் - உற்பத்தி யும் பெருகும்- ஆனால் எப்படிப்பட்ட பண்டங் கள்? பொதுமக்களுக்கு அவசியமாகவும், அவசரமாகவும், அன்றாடம் தேவைப்படும் பொருளா? அதுதான் இல்லை- இலாபந் தரக் கூடிய பொருளின் உற்பத்திதான் பெருகும்! ஆப்ரிக்க மார்க்கெட்டிலே, ஒரு தினுசு ஆடைக்குக் கிராக்கி அதிகரித்திருக்கிறது. இலாபம் ஏரளாமாக வரும் என்றால் அந்த ரக ஆடைகள்தான் மலையெனக் குவியும்- உள் நாட்டுத் துணிப் பஞ்சத்தைப் போக்கக்கூடிய விதமாக அல்ல. உற்பத்திப் பெருக்கம், இலாப வளர்ச்சி தருவதாக இருந்தாலொழிய, அவர்கள் உற்பத்தியைப் பெருக்குவதில்லை. ஊருக்கு உபதேசி, ஓயாமல் கூறுவார். நாட்டிலே பண்டங் கள் மேலும் மேலும் உற்பத்தியாக வேண்டும் அப்போதுதான், தேவைக்கு ஏற்ற அளவு பொருள் மார்க்கெட்டுக்கு வந்து சேரும்- உடனே விலை, கட்டுக்கு அடங்கும் என்று கூறுவார்- அரிச்சுவடியை நம்பிக்கொண்டு- பணந்தேடிகளி டம் தயாராக இருக்கும் அக்ரமச் சுவடியை மறந்து.
* * *

பொருள் உற்பத்தி, தேவையான அளவு இல்லை. எனவேதான் இவ்வளவு தொல்லை என்று பேசும்போது, நியாயமாகவே தோன்றும்- ஆனால், சற்று ஆர அமர யோசித்தால், மற்றோர் உண்மையும் தெரியவரும். உற்பத்தி அதிகமாகி, மக்கள் பொருளை வாங்கும் சக்தியை இழந்து போய், மார்க்கெட் மந்தமாகி, தொழில்கள் தூங்கி, வேலையில்லாக் கொடுமை தலைவிரித்தாடிய தும் உண்டு- கருத்துக்கு எட்டாத காலத்தில் நடந்ததல்ல. நமது நாட்களிலேயே, பார்த்திருக்கி றோம். வெளிநாடுகளிலே, அதிகமாகப் பண்டம் உற்பத்தியாகிவிட்டதால் அவ்வளவும் மார்க் கெட்டுக்குச் சென்றால் விலை, படுத்துவிடும் என்பதற்காக, கணக்குப் பார்த்து, பண்டத்தில் ஒரு அளவை, பாழக்கியும் இருக்கிறார்கள். பிரேசில் நாட்டில் காப்பிக் கொட்டை மிக அதிகமாகி விட்டதால், காப்பிக் கொட்டையின் விலை விழுந்துவிடும் என்று பயந்த, அந்நாட்டு பிர்லாக்கள், சதியாலோசனை செய்து, காப்பிக் கொட்டையைக் கொளுத்திப் பாழாக்கினர் என்பது பாட்டிக்கதை அல்ல- உலகு அறிந்த உண்மை. உற்பத்தி பெருக வேண்டும் என்பது உலக மக்களின் நலனுக்காக என்று பேசுகிறார் களே, அது உண்மையானால், காப்பிக் கொட்டையைக் கரியாக்குவாரகளா! எவ்வளவு ஏழையாக இருந்தாலும், காப்பிக் கொட்டையைப் பெறக் கூடிய அளவு, பண்டம் உற்பத்தியாகி விட்டது என்று மகிழ்ந்து, வாரி வழங்கியிருக்க மாட்டார்களா? உற்பத்தி பெருக வேண்டும் என்று உள்ளத்தில் கள்ளமில்லாதவர்கள் கூறுவதையே, சிலந்தி மனம் கொண்ட சீமான்கள், இலாப வேட்டைக்குப் பயன்படுத்திக் கொள்கின்றனர். கள்ளன் நள்ளிரவில், விளக்கைத் தூண்டிவிடு வது படுத்துறங்குவோர் மீது பரிவு கொண்டா?
* * *

உற்பத்தி குறைவது- பெருகுவது, இரண்டும் இலாப நோக்கத்துக்காக அவர்கள் போடும் திட்டமேயாகும். இந்தச் சூட்சுமத்தைப் பல சந்தர்ப்பங்கள்நன்கு வெளிப்படுத்தியிருக் கின்றன- சர்க்காரும் அறிவர்- அறிந்து என்ன செய்ய முடிகிறது. சீறினால், அவர்கள் சிரிக் கிறார்கள்! வேண்டிக்கொண்டால், அவர்கள் கையை விரிக்கிறார்கள். எச்சரிக்கை செய்தால் அவர்கள் புருவத்தை நெரிக்கிறார்கள். பொது மக்களின் கண்களுக்குத் தெரியவில்லை- ஆனால் ஒரு போர், நடந்த வண்ணம் இருக்கிறது- இன்றைய ஆட்சியாளர்களுக்கும், முதலாளி களுக்குமிடையே- ஒவ்வொரு போர்ச் சம்பவ மும், முதலாளிததுவத்துக்கு வெற்றி தந்து வந்த படிதான் இருக்கிறது.
* * *

உற்பத்தி பெருக வேண்டும் என்ற காரணத்தை, அவர்கள் மிகத் தந்திரமாகத் தமது சுயநலனுக்குப் பயன்படுத்திக் கொள்கிறார்கள். அது மட்டுமா? உற்பத்தி பெருகத்தானே வேண்டும்? என்று சர்க்காரைக் கேட்கிறார்கள்- ஆம்- என்று கூறுகிறது சர்க்கார்- அப்படியா னால், உற்பத்தி குறைவதற்கு என்ன காரணங்கள் என்பது பற்றி யோசித்தீரா? என்று இரண்டாவது கேள்வியைப் பூட்டி, அதற்குப் பதிலளிக்கும் முறையிலே பாட்டாளிகளின் மீது பாயும்படி சர்க்காருக்கு யோசனை கூறுகிறது.

எப்படி உற்பத்தி பெருகும்? தொழில் வளர மார்க்கம் இல்லையே? தொழிலில் நாங்கள் படும் தொல்லையைக் கவனிப்பாரில்லையே! எவ் வளவுதான் கூலியை உயர்த்தினாலும், பாட்டாளி, திருப்திப்பட முடியாது என்கிறான்- கூலியை உயர்த்து என்கிறான்- போனஸ் கொடு என்கி றான்- என் உழைப்பாலல்லவா என்று பேசுகிறான்- சங்கமாம் ஸ்ட்ரைக்காம்- அவன் எங்களைப் படுத்துகிற பாடு, இவ்வளவு அவ்வளவு அல்ல, தொழிலாளரின் போக்கு மாறினால் ஒழிய- மாற்றப்பட்டால் ஒழிய- உற்பத்தி பெருகாது- என்று கூறுகிறார்கள். பம்பாயில் தலால் பேசியதன் கருத்து இதுதான். யந்திரங்கள் எப்படி வேலை செய்கின்றனவோ, அது போலப் பாட்டாளிகள் வேலை செய்ய வேண்டும்- அவர்களை நடத்திச் செல்லும் பொறுப்பை சர்க்கார் ஏற்றுக் கொண்டால் உற்பத்திப் பெருகும்- என்று கூறுகிறார். அதாவது, சர்க்காரை, பாசீச முறைக்குத் தயாராகும்படி கூறுகிறார். இது செய்யாவிட்டால், `பொது உடைமைப் பூதம்' எல்லோரையும் சேர்த்து விழுங்கிவிடும்- என்று பயம் காட்டுகிறார்.

ஆகவே பாட்டாளியை அடக்கு- கம் யூனிஸ்டுகளை ஒடுக்கு- தொழிலாளர் சம்பந்த மாகத் தலையிடுபவன் யாராக இருந்தாலும்- காங்கிரசைத் சார்ந்த நாராயணசாமிகளாக இருந்தால்கூட விடாதே, பிடித்து அடை சிறை யில், என்று தலால் கூறுகிறார்- தன் நன்மைக்காக! இலாபத்துக்காக என்று கூறுகிறாரா இல்லை, இல்லை. நாட்டு நன்மைக்காக! என்று பேசுகிறார்!
உற்பத்தி பெருக வேண்டும், ஆகவே ஊராள்வோரே, உரிமைப் பேச்சை ஒழித்துக் கட்டுங்கள், என்று கூசாமல் கூறுகிறார், தலால்.
* * *

புதிதாகப் பீடம் ஏறியுள்ளவர்களுக்கு தங்கள் நாட்களிலே, மக்களுக்கு புதிய வாழ்வு பிறக்க வேண்டும்- பஞ்சமற்ற பிணியற்ற அதிர்ப்தியற்ற வாழ்க்கை இருக்க வேண்டும் என்ற எண்ணம் இருக்கிறது- நெடு நாட்களாக ஆயிரமாயிரம் மேடைகளிலே, பேசியிருக் கிறார்கள். வாக்களித்திருக்கிறார்கள்- சூளுரைத் திருக்கிறார்கள். மக்களோ என்றுமில்லாத அளவு கஷ்டம், எங்குமில்லாத அளவு கஷ்டப்படு கிறார்கள். எவ்வளவு பெரிய கதர்ச் சால்வை கொண்டு மூடினாலும், நிலைமை, மறைய வில்லை. எங்கும், இல்லை- இல்லை- என்ற பேச்சுத்தான்! என் செய்வர்?

மக்கள், கேட்கிறார்கள், ``ஏன் மனச் சோர்வு, கொள்கிறீர்கள்? எம்மை ஈடேற்றும் வழி தெரி யாது திகைக்கக் காரணம், என்ன? நீங்களே கூறியிருக்கிறீர்களே! தொழில்களை, இலாப வேட்டைக்காடு ஆக்கினதால் தான் நாட்டிலே மிருக உள்ளம் படைத்த மனிதர்கள் தோன்றி விட்டனர்- இனி மக்களுக்காகத்தான் தொழில்கள் இலாபத்துக்காக அல்ல, மக்களின் நன்மைக்காக! என்றெல்லாம் கூறினீர்களே, திட்டம் தீட்டிக் காட்டினீர்களே - பொதுமக்களின் நலன் ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டு தொழில் களை எல்லாம் சர்க்காரே ஏற்று நடத்தும், என்று சூள் உரைத்தீர்களே! இந்தத் திட்டத்தை யார் எதிர்த்தாலும் அடக்கியே தீருவோம் என் கிறீர்களே! நன்றாகக் கவனமிருக்கிறதே. வெண்கல நாதத்தில், தனி ஒருவனுக்கு உண வில்லை எனில் இந்த ஜெகத்தினை அழித்திடு வோம், என்று நீங்கள் பாடிய பாரதி கீதம். ஆற்றல் மிக்கோரே! எமது அன்பிற்குரியவர்களே! எம்மை ஆளவந்தாரே! ஏன் தயக்கம், தடுமாற் றம்? திட்டத்தை நிறைவேற்றுங்கள். தொழில் களைப் பொதுவாக்குங்கள்! சர்க்கார் உடைமை யாக்குங்கள்! ஜாரைக் கருவியிலேயே அழியுங் கள்! என்று கூறுகின்றனர். மக்களின் குரலிலே, வேதனையும், ஆத்திரமும் சம எடையிலிருக் கிறது.

``மகாஜனங்களே! கொஞ்சம் பொறுமை காட்டுங்கள். தொழில்களைத் தேசீய மயமாக்கும் திட்டத்தை நாங்கள் விட்டுவிடப் போவதில்லை. ஆனால் அவசரம் ஆகுமா? சர்க்காருக்கு, இந்தத் தொழில்களை எல்லாம் ஏற்று நடத்தும் சக்தி வரவேண்டும், காலம் வரவேண்டும். ஒரு பத்து வருஷம் பல்லைக் கடித்துக்கொண்டு இருந்து விடுங்கள். பிறகு, திட்டத்தை நிறைவேற்றலாம். இடையிலே, உற்பத்தியைப் பெருக்குங்கள்- ஓய்ந்து விடாதீர்கள்- காய்ந்து கிடக்கும் வயல் களைப் பசுமையுறச் செய்யுங்கள்- தூங்கிக் கிடக்கும் புதை பொருள்களை எழுப்பி வெளியே கொண்டு வாருங்கள்- கட்டுக்கடங்கா ஆறுகளை, ஆற்றல் தரும் வழிகளாக்குங்கள்- உற்பத்தியைப் பெருக்குங்கள்- என்று சர்க்கார் கூறுகிறது.

பாட்டாளி சிரித்துக்கொண்டே அழுகிறான்!

நான் வயிறார உணவில்லை, என்று கூறி, எனக்கு வாழ்வு அளிக்கச் சொல்கிறேன்- நீயாகவே, முன்பு வாக்களித்தாயே என்பதால்- நீ என்னைக் காய்ந்த வயிறைப் பிறகு பார்த்துக் கொள், உற்பத்தியைப் பெருக்கு என்று கூறு கிறாயே, அப்பனே! ஆளவந்தானே! உற்பத்தி என்றால் என்ன, உத்தியோக உத்தரவு போலவா, எழுதிவிட! உயிரைப் பணயம் வைத்து உழைத்து, உருக்குலைந்து அல்லவா, உற்பத்தியைப் பெருக்க வேண்டும். அணுவணுவாக எங்களை உழைப்புச் சிதைக்கிறது, மாடி மாடியாக முதலாளிக் கோட்டை உயருகிறது. நீ மேலும் உழைக்கச் சொல்கிறாய்! செய்யலாம் என்றாலும், சக்தி இல்லையே! உழைத்து அலுத்துக் கிடக்கும் எங்களிடம், அதிகரித்து உழைப்பை எதிர் பார்க்கிறாயே! குமுறும் நெஞ்சினராகிவிட்ட எங்களை, குப்புற விழாதே குப்பா! எழுந்திடு வேலை செய், என்று கட்டளையிடுகிறாயே! எப்படியப்பா எங்களால் முடியும்? சத்தி வேண் டுமே உழைக்க! சாந்தி வேண்டுமே மனதில்! அதற்கு என்ன வழி!- என்று பாட்டாளிகள் கேட்கின்றனர்- இவ்வளவு தெளிவாக அல்ல- தங்கள் கண்ணீராலும் பெருமூச்சாலும்!

கண்ணீர் விடுகிறானா! கருணைக் காட் டாதே! என்று சர்க்காருக்குக் கூறுகிறார். சர். தலால்! எவ்வளவு நெஞ்சழுத்தம் இருக்க வேண்டும்?

பாட்டாளிகளை அடக்கும்படி சர்க் காருக்குக் கூறுவது மட்டுமா? சர்க்காரே எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்பதற்கும், தலால் ஓர் நல்வழி(!?) கூறுகிறார்.

தொழில்களை சர்க்காரே ஏற்று நடத்தப் போவதாகக் கூறுகின்றனர், பத்தாண்டுகளுக்குப் பிறகு, முதலாளித்வ முறை முறியடிக்கப்படும் என்றும், பொறுபபுள்ள தலைவர்கள் நாடாள் வோர் கூறுகின்றனர். பத்து வருஷங்களுக்குப் பிறகு இழந்துவிடத்தானே போகிறோம், இதற்காக நாம் ஏன் பாடுபட்டு, நமது திறமையைச் செல விட்டு, முதல் போட்டுத் தொழில் நடத்த வேண்டும்? என்று எண்ணி, முதலாளிகள், அக்கறையற்றுள்ளனர்.

தொழிலில் கிடைக்கும் இலாபத்தின் மீது சர்க்கார் போடும் வரி, அதிகமாக இருக்கிறது- ஆகவே, சாமர்த்தியமாக வேலை செய்து இலாபம் சேர்த்து அதைச் சர்க்காருக்குக் கொட்டி கொடுக்க வேண்டுமா, என்று யோசிக்கும் போது, தொழில்களை அக்கறையுடன் கவனிக்க, முதலாளிக்கு மனம் வருவதில்லை.

இதனால், புதிய தொழில்களைத் துவக்கி, அதில் பெருந்தொகை `முதல்' போட, முதலாளி கள் முன்வருவதில்லை.

தலால், பேசுகிறார். இதுபோல, பணம் போட மாட்டோம் தொழிலில்! உற்பத்தி பெருக வேண்டும் என்பதிலே, அக்கறை காட்ட மாட்டோம்! எங்கள் இலாப வேட்டைக்குத் தங்கு தடை விதிப்பதனால், நாங்கள் வேலை நிறுத்தம் செய்துவிடுவோம்! பணம் பதுங்கிக் கொள்ளும்- வெளியே வராது! தொழிற்சாலைகள் புதிதாக ஏற்படமாட்டா! பொருள் குவியாது! என்று எச்சரிக்கைச் செய்கிறார்.

தொழில்ல்களைத் தனி உடைமையாகவே விட்டுவிட வேண்டும். இலாபத்திலே சர்க்கார் வரி என்ற பெயரால் குறிப்பிடக்கூடிய பங்கு பெறுவதோடு, பாடுபட்டவர்கள் என்ற பாத்யதை கொண்டாடித் தொழிலாளர்கள் பங்கு கேட்பதோ கூடாது.

இதற்குச் சம்மதித்தால், நாங்கள், எங்களி டம் உள்ள `முதலை' வெளியே விடுவோம்- இல்லையேல், `புதைத்து வைப்போம்' என்று கூறுகிறார்.
கூறுவது, வெறும் மிரட்டல் அல்ல. இப்போதே, வேலை நிறுத்தம் நடந்து கொண்டு தான் இருக்கிறது.

பத்து ஆண்டுகளுக்கு, தொழில்களைத் தேசியமயமாக்கும் திட்டம் பற்றி யோசிக்க மாட்டோம் என்று நேரு சர்க்கார் கூறிப் பார்த்தது.

பொது உடைமைக் கட்சியினரை வேட்டை யாடிப் பிடித்துச் சிறையில் தள்ளிக் காட்டிற்று.

தொழிலாளர்கள் சில வருஷ காலம், சமரச மனப்பான்மையுடன் இருக்க வேண்டும்- வேலை நிறுத்தங்களில் ஈடுபடக் கூடாது- உற்பத்தி பெருக உழைக்க வேண்டும் என்று கூறி பாட்டாளிகளின் உணர்ச்சியை ஒடுங்கிக் காட்டிற்று.

துணிந்து வேலை நிறுத்தங்கள் செய்த வர்களிடம் பேச, துப்பாக்கியை அனுப்பிக் காட்டிற்று.

முதலாளிகளைக் குறை கூறியும் கண்டித் தும் பேசுவது கூடாது என்று இலட்சியவாதி களுக்குக் கூட உபதேசம் செய்து காட்டிற்று.

முதலாளித்துவத்துக்கு மரியாதையும், உத்தரவாதமும் தந்து பார்த்தது.

வேலை நிறுத்தத்தில் தொழிலாளரை இழுத்துவிடக் கிளம்பும் சங்கங்களை முறி யடிக்கப் போட்டிச் சங்கங்களை அமைத்துக் காட்டிற்று.

முதலாளித்துவக்கு மரியாதையும், உத்தர வாதமும் தந்து பார்த்தது.

வேலை நிறுத்தத்தில் தொழிலாளரை இழுத்துவிடக் கிளம்பும் சங்கங்களை முறி யடிக்கப் போட்டிச் சங்கங்களை அமைத்துக் காட்டிற்று.

இங்ஙனம், முதலாளித்வ முறைக்கு, மாலை யிட்டு உபசரித்து மரியாதை தந்து மனமகிழச் செய்து பார்த்தும், தலால் ``இது போதாது! தொழில் களைத் தேசிய மயமாக்கத்தான் போகிறோம், சில வருஷங்கள் கழித்து- பத்தாண்டுக்குப் பிறகு யோசிக்கப் போகிறோம் என்று பேசுவதே கூடாது. அந்த எண்ணத்தையே விட்டுவிட வேண்டும். அப்படி, அந்தத் திட்டத்தைக் கைவிட்டு விட்டால், வேறு அரசியல் கட்சிகள், எதிர்ப்பிரசாரம் செய்யுமே என்று அஞ்சவும் கூடாது. முதலாளித்துவமுறைக்குச் சாகாவரம் வேண்டும்- தீண்டுவதில்லை அதனை என்று உறுதி கூறவேண்டும்- அப்படிச் செய்தாலொழிய நாட்டிலே புதிய தொழில்கள் அமைக்க, நாங்கள் பணம் போட முன்வரமாட்டோம் என்று கூறிவிட்டார் தலால்.

கூலி போதாவில்லை, என்று குடிசையில் இருக்கும் குப்பன் கூப்பாடு போட்டால், புரட்சி செய்கிறான், பொதுஉடைமை பேசுகிறான், மாஸ்கோவாகிறான், என்று பேச, ஏசக் கிளம்பும் கண்ணியர்கள் ஏராளம். பாட்டாளி, பட்டினியைப் போக்கிக் கொள்ள, கூலியை உயர்த்திக் கொள்ள வேலை நிறுத்தம் செய்தால், தடியடி, சிறை, தூக்கு மேடை, துப்பாக்கிக் குண்டு!

இலாப வேட்டை எங்கள் உரிமை இதிலே தலையிட எண்ணினால், தடைகள் விதித்தால், தர்மோபதேசம் செய்தால், நாங்கள் வேலை நிறுத்தம் செய்வோம்- என்று மாளிகையிலே வீற்றிருக்கும் தலால்கள் மமதையுடன் பேசுகின்ற னர்- சர்க்கார், என்ன செய்கிறது! சர்தார் படேல் அதே தினம். வேறோர் இடத்திலே பேசுகிறார், ``தாங்க முடியாத வரிப் பளுவினால் முதலாளிகள் தத்தளிக்கிறார்கள்'' என்று.

குடிசையில், குமுறுபவர்களுக்குக் குண் டாந்தடியடி! மாளிகை மதோன்மத்தருக்கு இந்த உபசாரமொழி!

பம்பாயில் சர். தலால், பேசியது போல, முதலாளித்துவத்தின் மீது கை வைக்கக் கூடாது- பாட்டாளியை அடக்கியே தீரவேண்டும்- இலாபத்திலே பங்கு கேட்கக் கூடாது என்று நேரு சர்க்கார் ஏற்படாத முன்பு, தலாலே பேசியிருந்தால் நேரு எவ்வளவு சீறியிருப்பார் - நேரு கட்சியினர் எவ்வளவு கொதித்திருப்பர்!

இப்போது? தலால் துணிவுடன் பேசுகிறார்! அவரைத் தட்டிக்கேட்கும் துணிவு, எவருக்குமே காணோம். படேல் உபசாரமொழி பேசுகிறார். மற்றவர்கள் திகைத்துப் போயுள்ளனர்.

புதிய தொழில்களை அமைக்கும் சக்தி எம்மிடம் இருக்கிறது. ஆனால் அதனை உபயோகிக்க மாட்டோம் என்று பச்சையாகப் பேசுகிறார் தலால்.

ஏகாதிபத்தியத்துக்குக் கூட இல்லாத முடுக்கு, தலாலுக்கு இருக்கிறது. நேரு சர்க்காரை நேராகவே போருக்கு அழைக்கிறார்.

நாட்டு விடுதலை என்றால், மக்களின் விடுதலை என்றும், ஏகாதிபத்ய ஒழிப்பு ஏன் என்றால் சுரண்டிப் பிழைக்கும் சூது மதியினர் எல்லாருடைய ஒழிப்புமாகும் என்றும் எண்ணி காங்கிரசில் பணியாற்றிய வீர இளைஞர்கள், என்ன சொல்கிறார்கள் இதற்கு?

முதலாளிமார்களுக்கு வீண் தொல்லை தராமல், பொது உடைமைக்காரர்களின், ஏசலுக்கு அவர்கள் ஆளாகாதபடி பார்த்துக்கொண்டு அவர்களின் மனிதாபிமானத்துக்கும் நாட்டுப் பற்றுக்கும், மனுச் செய்து கொண்டால், அவர்களே மனம் மாறி, தொழிலையும் வளமாக்கி, தொழிலாளரையும் வாழவைத்து, நாட்டிலே புதிய பொலிவு உண்டாகச் செய்வர் என்று நம்பியே, இதோபதேசம் செய்துவ ருகிறது நேரு சர்க்கார் என்று பேசித் திருப்திப்படும் அன்பர்கள், தலாலின் பேச்சுக்குப் பிறகுமா இந்த `தட்டிக் கொடுக்கும்' போக்கிலே நம்பிக்கை கொள்ளப் போகிறார்கள்?

புலியின் கழுத்திலே பூமாலை சூட்டினால், பூரிப்படைந்து இனிப் புல்லைத் தின்பேன், புள்ளிமானின் இறைச்சியை வேண்டேன் என்று கூறும். என நம்பின கதைபோல, முதலாளிகளின் மனம் நோகாதபடி முகம் கோணாதபடி நடந்து கொண்டால், அவர்களே பெரிய மனது வைத்து நாட்டை வளமாக்குவார்கள் என்று கூறி வந்தனரே, சமதர்ம நாவினர் அவர்கள் தலாவின் பேச்சைக் கேட்ட பிறகு, என்ன எண்ணுகிறார் கள்? எப்படி, தலாவின் திமிரான போக்கை அடக்கப்போகிறார்கள்? திட்டம் என்ன?

பாட்டாளி படும் துயரம் எமக்குத் தெரியும். அவன் நிலை உயர வேண்டும், உரிமை காக்கப் பட வேண்டும் என்பதும் எமக்குத் தெரியும். தொழில்கள் பொதுமக்களுக்குச் சொந்தமாக வேண்டும் என்பதும் எமக்குத் தெரியும். இந்த இலட்சியங்களை நாங்கள் மறந்துவிடவில்லை. இந்த இலட்சியங்களுக்காகவே நாங்கள் பாடு படுகிறோம். இந்த இலட்சிய சித்திக்காக, மாஸ்கோ தயவு தேவையில்லை, மார்க்சின் ஏடும் தேவை யில்லை. கம்யூனிசம் வேண்டாம், எந்த இசமும் வேண்டாம். நாம் நமது பண்பாட்டுக்கு ஏற்ற விதமாக, சமதர்மத்தை அமைத்துக் காட்டுகி றோம். - அஞ்சற்க- ஆனால் சில காலத்துக்கு இது பற்றிப் பேசற்க! உற்பத்தி பெருக வேண்டும் என்பதே முதல் வேலை- இதற்காகத் தான் இப்போது முதலாளி- தொழிலாளி சச்சரவு, வேலை நிறுத்தக் கிளர்ச்சிகள் கூடாது என்று கூறுகிறோம். சந்தேகிக்க வேண்டாம்- முதலாளித் துவ ஒத்துழைப்பு வேண்டும். அதற்காகவே இப்போது, இலட்சியத்தை கூட மறந்தது போல் இருக்கிறோம்- என்று பேசிவரும் நேரு சர்க்கார், இப்போது என்ன சொல்லப் போகிறார்கள்- எந்த உற்பத்தி பெருக்க நோக்கத்துக்காக, முதலாளி களின் ஆதரவைக் கோருகிறார்களோ, அந்தக் காரியத்தை ஆதரிக்க முடியாது- இலாப வேட்டைக்குத் தங்கு தடையற்ற உரிமையும், நிரந்தர உயிரும் இருக்க வேண்டும், இல்லை யானால் உற்பத்தி பெருகாது- புதிய தொழில் களும் உருவாகாது என்று உறுமிவிட்டாரே, தலால், இனி என்ன செய்யப் போகிறது, நேரு சர்க்கார்!

உற்பத்தியும் பெருகாது! புதிய தொழிலும் உண்டாகாது! தொழிலாளி துயரும் நீங்காது! பொருள் கிடைக்காத தொல்லையும் ஒழியாது! வாழ்க்கைத் தரமும் உயராது! இதுதானே நிலைமை, தலால் கூறுகிறபடி முதலாளிகளின் வேலை நிறுத்தம் வெற்றி பெற்றால்!

பாட்டாளியும் பணிய வேண்டும்- சர்க் காரும் பணிய வேண்டும்- தலால் கூறுகிறார்!

கண்ணீர் விடுகிறானா? கருணை காட்டாதே! என்று சர்க்காருக்குக் கட்டளையிடுகிறார்.

டில்லியை நோக்கி மாஸ்கோ சிரிக்காமல் என்ன செய்யும்!

ஏழை பங்காளர்கள்- தலால் தர்பாருக் காகவா, தடியடிபட்டோம், என்பதை, காங்கிரஸ் உண்மை ஊழியர்கள் - ஊராள்வோர் அல்ல- எண்ணிப் பார்க்க வேண்டும்.

``இச்சபையின் அபிப்பிராயத்தில், பாரத மக்களின் கொடிய தரித்திரமும், துன்பமும், வெளிநாட்டார் சுரண்டுதலால் மாத்திரம் ஏற்பட்டவைகளல்ல, சமூகத்தின் பொருளாதார அமைப்பும் அதற்குக் காரண மாய் இருக்கிறது. நம் சுரண்டுதல் அதிக காலத்துக்கு நடக்கும் பொருட்டு அன்னிய அதிபர்கள் இந்நாட்டுப் பொருளாதார அமைப்பைக் காப்பாற்றுகிறார்கள். ஆகை யால், இந்திய மக்களின் தரித்திரத்தையும், துன்பத்தையும் நீக்குவதற்காகவும், ``அவர் களின் நிலைமையைத் திருத்துவதற்காகவும் மிகவும் மோசமான உயர்வு தாழ்வுகளை ஒழிப்பதற்காகவும் தற்காலத்திய பொருளா தார சமூக அமைப்பில் புரட்சிகரமான மாறுதல்கள் ஏற்படுத்த வேண்டியது மிகவும் அவசியம்.''
* * *

மிகவும் அவசியம்! வெறும் அவசியம் கூட அல்ல! இந்தத் தீர்மானம் அகில இந்தியா காங்கிரஸ் கமிட்டியில் நிறைவேற்றப்பட்டது. பம்பாயில் 1929ம் ஆண்டு 19 ஆண்டுகளுக்குப் பிறகு நேரு சர்க்காரின் நாட்களிலே அதே பம்பாயில், தலால் தர்பார் நடத்துகிறார்! நியாயமா?

(திராவிட நாடு - 12.12.1948)