அறிஞர் அண்ணாவின் கட்டுரைகள்


தர்பார் இராகம்!

``பார்த்தீர்களா, பவநகர் மகாராஜாவை! சாதாரணப் பிரஜையாக்கிவிட்டேன்- போ, சென்னைக்குக் கவர்னராக! மக்களுக்குச் சேவை செய் என்று கூறி அனுப்பிவிட்டேன். பார்த்தீர் களா, என் சமர்த்தை''- என்று சர்தார் படேல் கூறுகிறார்- பூரிப்புடன்.

``பார்த்தீரா, என்னமோ பயந்தீரே, சுயராஜ்ய சர்க்கார் வந்து விட்டால் ராஜாக்களுக்குச் சனி திசை பிறக்கும். சுக்கிரன் போய்விடுவான் என்றெல்லாம் கூறினீரே, என்ன நடந்திருக்கிறது பாரும்! என்னை முன்பின் தெரியாது. அந்த நாட்டுக்காரர் என்றும் கூறுவதற்கில்லை. இருந்தும், இப்போது, நாமே சென்னைக்குக் கவர்னர்! கிடைத்ததா இல்லையா? கீர்த்தி போய் விடும் என்று அழுதீரே ஐயா! போகுமா? போயிற்றா? பவநகர் மட்டுமே முன்பு நம்மை அறியும்! இப்பாது? பாரும் கீர்த்தி வளருவதை! மகாராஜா மட்டுமா நான் கவர்னரும் ஆகிவிட்டேன். எச்.எச். பட்டம் மட்டுமல்ல, எச்.ஈ. பட்டமும் இப்போது. பட்டமும் பதவியும், பவனியும் பாராட்டுதலும், குறையும் என்று குளறினீர்- இப்போது ஒத்தைக்கு இரட்டை யாயிற்று. தெரிந்து கொள்ளும் சமயம் தெரிந்து நடந்தால் புலியிடம் கூடப் பால் கறக்கலாமய்யா. சர்தார் படேலின் மூலம். என்னென்னமோ தொல்லைகள் வரும். சமஸ்தானாதிபதிகளுக்கு என்று சொன்னீர்! தொல்லையா வந்தது! பாரும் நம்மை- நாம் மகாராஜா மட்டுமல்ல- ஒரு மாகாணக் கவர்னர்!'- என்று பூரிப்புடன் பவநகர் மகாராஜா எண்ணாமலிருக்க முடியுமா- நிலக்கண்ணாடி முன் நிற்கும்போது,
இரண்டிலே, எது சரி என்று பொதுமக்கள் ஏங்குகிறார்கள்.
* * *

பவநகர் ராஜாவைக் கவர்னராக்கியது. ஏதேச்சாதிகார அந்தஸ்த்தில் இருந்தவரை, ஜனநாயக சேவைக்குத் திருப்பி விட்டிருக்கும் சிலாக்கியமான காரியம், என்று சர்தார் எண்ணு கிறார். ஆனால் பவநகர் சென்னைக் கவர்னராக இருக்கிறார் என்றால், மகாராஜா என்ற பதவியை யோ, அந்தப் பதவியினால் உண்டாகும் பலன் களையோ, தியாகம் செய்துவிட்டு அல்ல, அது அப்படியே இருக்கிறது. புதிதாகவும் ஒரு அந்தஸ்து, பதவி, கிடைத்திருக்கிறது. இது சமஸ்தானபதிகளுக்கு மேலும் அந்தஸ்தும், வாய்ப்பும் அதிகரிக்கிறது என்பதைக் காட்டுவதே ஒழிய அவர்களின் ஜனநாயக சேவை என்று, எதைக் கொண்டு கூறுவது?

``பவநகர் மகாராஜாவே! பரம்பரை பரம் பரையாக நீர் அனுபவித்து வரும், மகாராஜாப் பட்டத்தையும் பதவியையும் ஏன் சுமந்து கொண்டிருக்க வேண்டும், இந்த ஜனநாயக காலத்தில், மக்களுக்குச் சேவை செய்து மாண்பு பெற வேண்டாமா? அதற்கொரு வழி செய்கிகிறேன். கேளும்- இந்தப் பவநகர் சமஸ்தானாதிபதி என்ற பதவியும், பட்டமும் வேண்டாம்- துறந்துவிடும்'' என்று பட்டேல் சர்தார், கூறி, ``ஆமாம் படேல்ஜி! அதுதான் சரி'' என்று பவநகர் கூறிவிட்டு, துறவுகொண்ட பிறகா, கவர்னராக்கப்பட்டார்!- இல்லையே! அப்படி இருக்க நான், பவநகர் மகாராஜாவை ஜனநாயக சேவை செய்யச் சொல்லிவிட்டேன், என்று பேசுவதிலே, பொருள் உண்டா என்று அறிய விரும்புகின்றனர் மக்கள்.

ஒரு மகாராஜா, தமது ராஜ்யாதிகாரத்தை யும் இழக்காமல், ராஜகோலத்தையும் இழக்காமல், ஒரு மாகாணத்தின் கவர்னராகக் கொலு வீற்றுக் கொண்டு, இருப்பது ஜனநாயக சேவை என்று கூறுகிறாரே சர்தார். முன்பு, இந்த மாகாணத்தில் ஜனங்களிடம் `ஓட்டு' வாங்கிக் கொண்டு, சட்ட சபைக்குள் நுழைந்து, ஒரு பனகல் ராஜாவும் பொப்லி ராஜாவும் மந்திரியாக இருந்தபோது, சர்தாரின் சகாக்கள் என்ன சொன்னார்கள் தெரியுமோ! ஜனநாயக காலத்திலே, ஜரிகைக் குல்லாய்க்காரர்களுக்கு, பட்டமா, பதவியா! இது அடுக்குமா? என்று ஆயிரமாயிரம் மேடைகளில் முழக்கமிட்டனர்.

இப்போது, வாயை மூடிக் கொண்டுள்ளனர். எங்கோ பவநகரில் உள்ள ஒரு மகாராஜா, இங்கு கவர்னரானதை- ஒட்டுப்பெற்றல்ல- சர்தாரின் ஆசி பெற்றுக் கவர்னரானதைக் கண்டும்!
அன்று ராஜாக்களுக்கு ஜனநாயகத்திலே இடம் ஏது- என்று சொன்னோமே, இன்று இப்படி நடக்கிறதே என்று வாய் திறக்கவில்லை.

மன்னிக்க வேண்டும்- வாயை மூடிக் கொண்டுள்ளனர் என்று தவறாகக் கூறிவிட்டேன்- சும்மா இல்லை. ஜனநாயகக் காப்பாளர்கள், சுருதி இலயம் கெடாதபடி தர்பார் இராகத்தைப் பாடி,

அரசே! வருக!!
அண்ணலே வருக!
வருக! வருக! வள்ளல் வருக!
பெருகிடும் அன்பினோய்
உருகினோம், வருக!

என்று வரவேற்பும் பாடுகிறார்கள்! இவர்கள், ஜனநாயகக் காப்பாளர்கள்! அகராதி தலைகீழாக்கப்படுகிறது.

நைஜாமில்
சென்னை ஆபீசர்கள்

ராஜக்கர் அட்டூழியங்களிலிருந்து விடு விக்கப் பெற்ற ஐதராபாத்தை நிர்வகிப்பதற்கு நமது சென்னை மாகாணத்திலிருந்து 2500 ஆபீசர்கள் நியமிக்கப்பட்டிருக்கிறார்கள். இவர்களை 8 பிரிவாகப் பிரிக்கப்பட்டிருக்கிறது. அமைதி காப்பதே இவர்களுக்கிருக்கும் முக்கிய பணி. சென்னை மாகாணத்திலுள்ள பெல்லாரி, கர்நூல், குண்டூர், கிருஷ்ணா கிழக்கு- மேற்கு கோதாவரி ஜில்லாக்களை ஒட்டியுள்ள நைஜாமைச் சேர்ந்த தெலுங்கானா மாகாணத் திலுள்ள எட்டு ஜில்லாக்களில்மேற்பார்வை பார்க்க நியமிக்கப்பட்டிருக்கிறார்கள்.

நைஜாமின் போலீஸ் இலாக்கா முழுதிற் கும் இன்ஸ்பெக்டர் ஜெனரலாகத் தோழர் எ.வி.பாத்ரோ அவர்கள் நியமிக்கப்பட்டிருக்கிறார்.

(திராவிட நாடு - 10.10.1948)