அறிஞர் அண்ணாவின் கட்டுரைகள்


தர்மசங்கடம்!
நாஸ்தீகன்! நெற்றியிலே நீறு இருந்தால் மட்டும் போதுமா? நெஞ்சிலே வஞ்சகம் இருக்கிறது! மடாலயங்களை ஒழிகக் அல்ல, அவைகளிலே உள்ள மாசுதுடைக்கவே, மசோதா கொண்டு வருகிறாராம்! இவர், யார், பூர்வ பெருமை வாய்ந்தனவும், நமது மத பாதுகாப்புக்கு ஜீவனாகவும் உள்ள, மடாலயங்களைப் பற்றிக் குறை கூற! எவ்வளவுதுணிவு இருக்க வேண்டும் இவ்விதம் பேச! இந்த இலக்கணத்தில், விரதமாம், பூஜையாம், ரமண ரிஷியிடம் பக்தியாம்! வெறும் பசப்பு! இந்து மதத்தை நாசமாக்கும் மசோதாவைக் கொண்டு வருகிறார், தன்னை இந்து என்றும், பக்திமான் என்றும் கூறிக் கொள்கிறார். சுயமரியாதைக்காரன் இதையேதானே கூறுகிறான் - மடம், கோயில், ஆகிய இடங்களிலே, தர்மம் தலைகாடடுவதில்லை, வீணுக்கு அவைகள் உள்ளன, என்று பேசுகிறான். அவனைக் கண்டிக்கிறோம் - இந்த ஆசாமியும் சேர்ந்து கண்டிக்கிறார் - பெரிய ஆஸ்திகர்போல! இப்போது, இவரே பேசுகிறார் - பேசுகிறாரா! - ஏசுகிறார், மடாலங்கள் பாபிகளின் பதுங்குமிடங்களாகி விட்டன என்று. இந்த அழகுக்கு, இவர் தம்மை, ழைமையில் பற்றுக் கொண்டவர், பக்திசிகாமணி என்றும் கூறிக்கொள்கிறார். பக்தர்கள், காணிக்கை தருவர், மானியம் விடுவர், மடாலயங்களுக்கு - இந்தப் பக்தரோ, அந்த நாட்களிலே, வைதீகப் பற்றுள்ள ராஜாதி ராஜாக்கள், மடாலயங்களுக்கு அளித்த மானியங்களைப் பறிக்கப் பார்க்கிறார். இதற்காகவா, இவர் வந்தார் அரசளா, இவரை நம்பினோம் நமது ரட்சகர் என்று! செச்சே! இப்படியும் ஒரு காலம் பிறக்கவேண்டுமா? உசா! சிவகாமி நேசா! உன் விசுவாசியின் போக்கா இப்படி இருப்பது. தேவார திருவாசகம் படித்துக் கொண்டு, திருவாய்மொழியும் பாடிக்கொண்டு, தில்லை நடேசனையும் திருமாலை அப்பனையும் மொழி மேன்மையையும் வைதீகக் கோட்பாடுகளையும் பாராட்டிக் கொண்டிருக்கும், ஓமந்தூரார், மடலாயங்களைக் கடடுப்படுத்தும் மசோதா கொண்டு வருகிறார் - கேட்டால், மதம் க்ஷீணிக்கக்கூடாது, ஆஸ்தீகம் அழியக் கூடாது என்ற நல்லெண்ணத்தினாலேயே இதைக் கொண்டு வருகிறேன் - நாட்டின் நிலையையும், காலத்தின் நிலையையும் கவனித்துப் பாருங்கள் என்று நமக்குப் புத்தி கூறுகிறார் - மிரட்டவே செய்கிறார். இவர் இவ்வளவு பேசினால், இவருக்கு ஆதரவு காட்டும், இளைஞர்கள், பேசுவதைக் கேட்கவா வேண்டும். சேலம் சுப்ரமணியம் சீறுகிறார் - கோசலராம் கொதிக்கிறார் - கன்னியப்பன் கண்டிக்கிறார் - தேவநாயகய்யா தாக்குகிறார் - மதத்தின் பேரால் நடக்கும் அக்ரமம் தெரியுமாம் அவர்களுக்கு! நெருப்பைக் கக்குகிறார்கள்! கேட்டால், நாங்கள் சூனமானாôக்களல்ல - இதோ பார், கதர்ச்சட்டை, கருப்புச் சட்டையல்ல என்று கூறுகிறார்கள். இந்த மசோதாவை, கருப்புச் சட்டைக்காரர் கொண்டு வந்தால், நமக்குத் தொல்லை இல்லையே - கடவுள் நம்பிக்கையற்ற கயவர் கூட்டம், ஆஸ்தீகத்தை அழிக்கிறது - மதத்துக்கு ஆபத்து என்று ஒரு கூச்சல் கிளப்பினால் போதும் - மசோதாவை மடியச் செய்துவிடலாம். இந்த ஓமந்தூரார், அவ்விதம் இல்லையே - வேதம், உபநிஷத், பகவத் கீதை, என்றெல்லாம் பேசுகிறார், தனக்கு மத பக்தி உண்டு என்பதற்காக மாதத்துக்குகொருமுறை மௌனவிரதமிருக்கிறார், விபூதி பூசப்பட்ட நெற்றியுடன் காட்சியளிக்கிறார். அவரைப் பார்த்தால், நடைநொடி பாவனையைக் கவனித்தால், யாரும் அவரை, சாது, பக்திமான், என்று கூறுவர். அவரல்லவா நமக்கு ஆபத்து தேடுகிறார், ஆஸ்திகத்தின் பெயரைக் கூறிக்கொண்டே! நாம் ஒரே அடியாக அவரை நாஸ்தீகர் என்று கண்டித்துப் பேச முடியவில்லையே! தர்மசங்கடமாக அல்லவா இருக்கிறது!”
மடாலய மசோதாவை எதிர்க்கும் வைத்தியநாதய்யர் கோஷ்டி, இவ்விதம் எண்ணியும் பேசியும் வருகிறது.

எவ்வளவு படித்துப் பட்டம் பெற்று இருந்தாலும், தேச சேவை, பொதுஜன சேவை என்று என்னதான் பேசுபவராக இருந்தாலும், மேனாட்டுப் படிப்பும் வாதாடும் தொழிலும் பெற்று இருந்தாலும் பார்ப்பனஜாதி என்றால், உடனே, வைதீகப் பித்தும், மதத்தின் மூலம் ஆதிக்கம் செலுத்தும் நோக்கமும் சமயம் பார்த்துக் தலைதூக்கி விடுகிறதே! பிரபலமான வக்கீல்! தேசத் தொண்டு செய்யப்போட்டி போட்டுக் கொண்டு முன் வந்தவர். எல்லோரும் ஓர்குலம் என்று சமரசம் பேசியவர் - அப்படிப்பட்ட, வைத்தியநாத ஐயர் சாதாரணக் குளத்தங்கரை ஐயர்மார்களின் போக்கிலே கிளம்புகிறாரே, மசோதாவை, எதிர்க்க, மதத்தைக் காப்பாற்றுகிறாராம்! இவருக்குத்தானா அந்த உரிமையும் திறமையும்!! ஏராளமான சொத்துக்களைக் கொடுத்து, சுகபோகத்திலே, புரளும்படி, சிலரை வைத்திருக்கும் மடாலய முறைதான், மதமாம்! இவர் கற்றிருந்த நூற்களெல்லாம் இந்த அளவுதானா இவருக்கு நல்லறிவைக் கொடுத்திருக்கின்றன! எவ்வளவு அவசியமான சீர்திருத்தம் செய்ய முற்பட்டாலும், மதம் போச்சு, கடவுள் போச்சு என்று கூவக்குரலைக் கிளப்பி, முன்னேற்றத்துக்கு முட்டுக்கட்டை போடுபவர், இந்த வைதீகர்கள், என்று சுயமரியாதைக்காரன் சொல்வதிலே, தப்பு இல்லையே! அவன் வாய்க்குச் சர்க்கரை போடவேண்டும்! எனக்கு இல்லாத கடவுள்ந ம்பிக்கையும், மதபக்தியுமா, இவர்களுக்கு! மதத்தின் மாசுபோக்கவேண்டும், சுயமரியாதைக்காரர்கள் கண்டிக்கும் அளவுக்கு, மத ஸ்தாபனங்களிலே கேடுகள் முளைத்துவிட்டன. இப்போதே அவைகளைக் களையாவிட்டால், புராதன மதமே அழிந்துவிடுடம் என்ற நன்னோக்கம் கொண்டு, இந்த மசோதாவைக் கொண்டுவரும் என்னையே, ஏன் ஜெபதபம், நேமநிஷ்டை, விரதம் வைராக்கியம், பக்திவிசுவாசம் ஆகியவற்றை அறிந்திருந்தும், என்னையே நாஸ்தீகன் என்ற கூறத்துணிகிறார்கள் இவர்கள்! நல்லது செய்ய முற்பட்டால், இந்தப் பட்டம் பெற்றாக வேண்டும் போலிருக்கிறதே! இவர்களிடம் நான் இதமாகப் பேசுகிறேன் - ஐசவில்லை - மதத்தின் சார்பிலே ஆதரவாக நிற்கிறேன். இந்நிலையில் இவர்கள் என்னை நிந்திக்கிறார்கள். செச்சே! இவர்களை, அந்தச் சுயமரியாதைக்காரர்களின் ஆட்சியலே விட்டுவிட்டால்தான் சுகப்படும். அவர்கள் தான் சரி, இவர்களுக்கு, அவர்கள் சூடு கொடுத்தால்தான் இவர்களுக்கு நிலைமை புரியும். அவர்கள், இப்படியா, என்னைப்போல, ஊப்புச்சப்பற்ற முறையிலே, மசோதா கொண்டுவருவார்கள், மடாலயங்களுக்குள்ளே புகுந்து, கணக்கெடுத்து, கணக்கு வேலை முடிந்ததும், அந்தச் சொத்தை அந்தந்த வட்டாரத்து மக்களின் உடைமையாக அல்லவா மாற்றுவார்கள்! சர்க்கார், நிர்வாகம் செய்து, நிலைமையைச் சீராக்கட்டும் என்று மட்டுமே நான் கூறுகிறேன் - இவர்கள் கொக்கரிக்கிறார்கள். சுயமரியாதைக்காரர்கள், நிர்வாகம் மட்டுமா கேட்டார்கள்? எதற்காக இவ்வளவு சொத்து ஒரு இடத்திலே முடங்கிக் கிடக்கிறது என்று இணி வேரை அல்லவா கில்லி ஏடுப்பார்கள்! ஆமாம். அவர்கள் முறை தான் சரி. இவர்களிடம் இதோபதேசம் பேசும என்னை இந்தப் பாடுபடுத்துகிறார்களே, அவர்களிடம் ஆட்சி போகட்டும், அப்போது பெட்டிப் பாம்பாகி விடுகிறார்கள் பார்! மதம் போச்சாம், மதம்! மடம் இருந்தால்தான் மதம் இருக்குமோ! என்ன பேதைமை!! இவர்கள் போக்குக் பார்க்கும்போது, பேசாமல் சுயமரியாதைக்காரரே ஆட்சிக்கு வரட்டும் என்று இருந்துவிடலாமா என்றுகூடத் தோன்றுகிறது. இந்த எதிர்ப்புக் கூச்சலிடுபவர்கள் வேறு கட்சியாக இரந்தால், காரசாரமாகத் கண்டித்துப் பேசி, தேசத்துரோகிகள், மடாதிபதிகளிடம் இலஞ்சம் வாங்கிக் கொண்டவர்கள் என்று வெளுத்து வாங்கலாம். எதிர்க்கும் பேர்வழிகளே, கதர் கட்டிக் கொண்டு, காங்கிரசில் தங்கிக் கொண்டு, ஏன் கட்சி என்று கூறிக்கொண்டும் இருக்கிறார்கள், தர்ம சங்கடமாக அல்லவா இருக்கிறது!

நிலைமை தர்ம சங்கடமாக இருப்பதாகவே கருதியும் பேசியும் வருகிறார். முதலமைச்சர் ஓமந்தூரார். அவருடைய துணைவர்களின் உள்ளமும் இதே நிலையில் இருக்கிறது.

இதென்ன தொல்லையாகிவிட்டது! ரெட்டியார் சொல்வத நியாயமாக இருக்கிறது! காங்கிரஸ் கட்சிதான் அவரும். ஐயர், கோபமாகப் பேசுகிறார் - ரெட்டியாரைக் குறை கூறி, ஐயர் சொல்கிறார், செட்டியார் செய்கை, நாஸ்தீகம் என்று ரெட்டியார் சொல்கிறார் நான் செய்யும் காரியம்தான் ஆஸ்தீகம் - இதைச் செய்யாவிட்டால்தான், நாஸ்தீகம் பரவும் என்கிறார். இருவரும் நம்ம கட்சி - காங்கிரஸ் கட்சி.

காங்கிரஸ் கட்சியின் கொள்கைதான் இது, என்று ரெட்டியார் சொல்கிறார்.

காங்கிரஸ் கட்சிக் கொள்கைக்கு இது விரோதமானசெயல் என்று ஐயர் சொல்கிறார்.

நாம், யார் சொல்வதை நம்பித் தொலைப்பது?

மசோதாவை ஆதரித்துப் பிரசாரம் செய்து முற்பட்டாலோ இன்று மதம் சீர்கெட்டு இருக்கும் நிலை, அதன் காரணம், மடாலயங்களின் நிலைமை அவைகளால் சமுதாயம் பயன்பெறாத தன்மைஆகியவைகளை எடுத்துக் கூறவேண்டும் - ஏறத்தாழ சுயமரியாதைப் பிரசாரமாகி விடுகிறது - இதே பிரசாரம் புரியம் சுயமரியாதைக்காரர்களை நாம் கண்டித்து வந்தோம் - இன்னமும் அவர்களை ஐனோ பகைவர்கள் பட்டியிலில் வைத்தே பேசுகிறோம். யாரார் மசோதாவை எதிர்ப்பவர்கள் என்று பார்த்தாலோ, பெரும்பாலும் பார்ப்பனராகவே உள்ளனர். இதை எடுத்துக் கூறவேண்டி நேரிடும், பேசமுனைந்தால், இதைச் சொன்னாலோ, பார்ப்பனத் துவேஷி, வகுப்புவாதி, என்று கூறிவிடுவர், நம்மை நாம் அவ்விதம் மக்களைப் பழக்கிவிட்டோம்! என்ன செய்வது! தர்ம சங்கடமாக இருக்கிறது.

மசோதாவை எதிர்த்துப் பேசுவது என்றாலோ, நமது கட்சியினரில், யாராரை, தலைவர்கள், தியாகிகள், விவேகிகள், வீரர்கள் என்று பாராட்டி வந்தோமா, அவர்களை எல்லாம், மதத் துரோகிகள், சுயமரியாதைக்காரர்கள், நாஸ்தீர்கள் என்று கண்டித்துப் பேசவேண்டும். எப்படி அது முடியும்? நாடு எப்படி ஏற்கும்? மனசாட்சியும் இதற்கு இடந்தராதே! மந்திரி டாக்டர் ராஜன் எனும் ஒரே ஒரு பார்ப்பனப் பிரமுகர் மட்டும்தான் மசோதாவை ஆதரிக்கிறார் - அவர் மந்திரி, எனவே கடமைப்பட்டவர், மற்ற பார்ப்பனத் தலைவர்கள் எல்லாம், பார்ப்பனப் பத்திரிகைகள் எல்லாம் எதிர்க்கின்றனவே, இதைப் பார்க்கும்போது, காங்கிரசிலேயே, பார்ப்பனர் - ஆல்லாதார் எனும் இருகட்சிகள் தானாகத் தோன்றி விடுகிறதே, நாம் எதிலே இருப்பது! தர்மசங்கடமாக இருக்கிறதே!
காங்கிரஸ் கட்சியிலே, சீர்திருத்த நோக்கமுடையவர்கள், இதுபோலப் பேசிச் சங்கடப்படுகின்றனர்.
கொடி கொடுத்தோம் - நன்கொடை கொடுத்தோம் - செங்கோல் கொடுத்தோம் சிவப்பிரசாதம் கொடுத்தோம் - நிதி தந்தோம் - காந்தியார் நினைவுக்குக் கூட்டம் நடத்தினோம் - எல்லாம் செய்தோம், எனினும், உசா! எம்மை இவ்வளவும் பெற்றுக் கொண்டவர்கள், கணக்கு ஏடு! என்று கேட்கின்றனரே.

நாட்டை ஆளும் கட்சி காங்கிரஸ் - இதன் நேசம் கிடைத்துவிட்டால், நமது ஆதிக்கம் கெடாது என்று எண்ணி, அந்தத் துரைத்தனத்தைத் தூபதீப நைவேத்தியமிட்டு வரவேற்றோம் - பாராட்டினோம் - புகழ்பாடினோம். இவ்வளவும் செய்தான பிறகு, மடாலயங்களைச் சர்க்காரின் நிர்வாகத்துக்குத் தரவேண்டும் என்று சட்டம் கொண்டு வருகின்றனரே இரக்கமின்றி!

மதத்தின் மாண்பு கெடாதிருக்க வேண்டுமானால், ஆஸ்தீகம் அழியாதிருக்க வேண்டுமானால், நாஸ்தீக நாற்றம் நாட்டிலே கிளம்பாதிருக்க வேண்டுமானால், காங்கிரஸ் கட்சிதான் நாடாள வேண்டும் என்று நாவராக் கூறினோம். இப்போது நமது அடிமடியில் கை வைக்கிறதே அதே கட்சி! இப்போது, அதனைக் கண்டித்தால், மகாஜனங்கள் நமது வார்த்தையை ஏற்கமாட்டார்களே! நாமே அல்லவா, நமது பக்தகோடிகளுக்கும் பாமராளுக்கும் காங்கிரஸ் கட்சியின் சிலாக்கியத்தைப் பற்றி, உபதேசம் செய்தோம், இப்போது நாமே அந்தக் கட்சியைத் தூற்றினால், யார் ஏற்றுக் கொள்வர்! தர்ம சங்கடமாக இருக்கிறதே!!
****

காங்கிரசாட்சியின்மூலம், தங்களுக்கு ஒரு குறையும் நேரிடாது, அந்தக் கட்சி, காலப்போக்கையும் மீறி நிற்கும் சக்தி கேடயத்தைத் தங்களுக்கு அளிக்கும் என்று நம்பியிருந்த மடாதிபதிகள், இதுபோல எண்ணி ஐக்கமடைகிறார்கள். தர்ம சங்கடமாக இருக்கிறதே என்ற தத்தளிக்கிறார்கள்.
மசோதாவின் நோக்கம், ஒன்றும் புரட்சிகரமானதல்ல - அதன் அமைப்பும், புரட்சித் திட்டமல்ல. ஐதோ ஓர் வகை ஆரம்ப முயற்சி! பழைய முறையில் பழுதுபார்த்து, இன்னும் சில காலத்துக்கு நிலைநிறுத்த முடியுமா என்ற ஆசையின் விளைவு! இதற்கே, இவ்வளவு எதிர்ப்புக் கிளம்பி விட்டது. இந்து சுதேசமித்திரன் மூலம்! உண்மையாகவே சமதர்ம மணம் கொண்ட சட்டமானால், சட்டசபையிலே, பேச்சோடு இராது போலிருக்கிறது! இந்த ரப்பர் பாம்புக்கே இவ்வளவு அமளி நடக்கிறது! ஒழியட்டும் கட்சி காங்கிரஸ் என்றபோதிலும், அதிலேயே, இரு பிரிவுகள் இருப்பது, நன்றாக நாட்டுக்குத் தெரிகிறது - அதிலே, பெருவாரியானவர்கள், சீர்திருத்தப்பாதையினர் - மிகச் சிலரே, பழைய பசலிகள், எனவே மசோதா வெற்றி பெறும் - பெற்று, என்ன பலன்? இனாம்தாரர் விஷயமாக இங்கு, மெஜாரடி பலம் இருந்தும், இதே வைத்தியநாத ஐயர் கோஷ்டி, டில்லி தேவதையிடம் வரம் பெற்று, வெற்றி பெற்றதல்லவா? அதுபோலவே, மடாதிபதிகள் விஷயமாகவும் டில்லி ùச்னறு, வைத்தியநாதர்கள், தங்கள் சிறுபான்மைக் கட்சிக்கு வெற்றி தேடிக்கொள்ள முடியுமே! அவ்விதம் நேரிட்டுவிட்டால், என்ன செய்வது என்று நாம் கேட்டாலேயே, ரெட்டியாருக்கும் அவர் போன்ற நல்லவர்களுக்குக் கூட, மூக்குச் சிவந்து விடுகிறது டில்லி என்றும சென்னை என்றும் பிரித்துப் பேசாதே என்று நம்மை ஏசுகிறார்கள். டில்லிக்கு இன்றுள்ள அதிகாரம் அவ்விதம் இருக்கிறது ரெட்டியாரே! நியாயமான, சத்தியத்துக்கு உகந்ததான முயற்சிகளைக் கூட, முறியடித்துவிட முடியும், டில்லியின் தயவைப் பெற்றவர்களால். இங்குள்ள வைதீகர்கள் இந்த டில்லி தயவைப் பெற்றுவிடுவார்கள் - ஆகவேதான், நாங்கள் சொல்லுகிறோம், ஆட்சி மூலம், கோரிய பலனை அடையவேண்டுமானால், சென்னை மாகாணத்துக்கு உண்மையான அதிகாரம் வேண்டும் என்கிறோம். டில்லியாவது இதிலே தலையிடுவதாவது - சென்னை சர்க்கார் சும்மா இருக்காது - என்றெல்லாம் கூறுகிறாரக்ள் காங்கிரசிலுள்ள சீர்திருத்தப்பிரிவினர். தலையிட்டால் என்ன செய்வீர் - என்ன வழி - என்று கேட்டாலோ, தலையைச் சொறிகிறார்கள். வழி இருக்கிறது நண்பர்களே! திராவிட நாடு திராவிடருக்கே என்பதுதான், அது என்று நாம் சொன்னாலோ, சீறி செச்சே! நாட்டைப் பிளக்கிறாயே, வடநாடு தென்னா பேதமா என்று வசைமாரி பொழிகிறார்கள். சிக்கலில் மாட்டிக் கொள்கிறார்கள் - சிக்குபோக வழி சொன்னாலோ, நம்மீதே சீறுகிறார்கள் - தர்ம சங்கடமாக இருக்கிறது.

சட்டசபையிலே, இந்துமத பரிபாலன போர்டிடம் இருக்கும் நிர்வாகத்தை ஒழித்துவிட்டு, மடாலயங்களைச் சர்க்காரே நிர்வகிக்க வேண்டும் என்ற சாதாரண மசோதா கிளப்பி விட்டிருக்கும் சஞ்சலத்தையும் எதிர்ப்பையும், சிக்கலையும் சினத்தையும் கண்டு நாம் இதுபோல எண்ணுகிறோம்.

இவ்வளவு தர்ம சங்கடமான நிலை ஏற்படுகிறது. மடாலய ஒழிப்பு அல்ல, மடலாயக் கண்காணிப்புக்குச் சர்க்கார் ஒரு திட்டம் வகுக்கும்போது, மகாராஜாக்கள், ராஜாக்கள், நவாபுகள், காட்டின இடத்தில் கையொப்பமிடக் கண்டனர் மக்கள். ஜெமீன்தாரர்கள், கொடுத்ததைக் கொடுங்கள் என்று கேட்டுப்பெற்றுக் கொள்ள, பந்தயம் போட்டுக் கொண்டு ஓடிவந்ததைக் கண்டனர் மக்கள். ஜøனகாத் நவாபு ஓடியதையும், நிஜாமின் சரணாகதியையும், புதுக்கோட்டையின் கதியையும் மக்கள் கண்டனர். மாவீரன் சிவாஜி கண்ட சாம்ராஜ்யத்தின் கடைசி சின்னமாக இருந்த கோலாப்பூர் சமஸ்தான மன்னராட்சி, இந்தக் கிழமை முடிவுற்று, மராட்டிய அரச வம்சம் என்பதே பழங்கதையாகி விடுவதைப் பார்க்கிறோம். இவ்வளவும் முடிந்ததும் - முயற்சி குறைவு - எதிர்ப்பு ஐளனத்துக்குரிய அளவுகள் இருந்திடக் கண்டோம்.

மன்னரும் சீமான்களும், கிளப்ப முடியாத புயலை, ஜடா முடிதாரிகளின் சார்பிலே கிளப்ப முடிகிறது! மன்னரும் ஜெமீன்தாரும் கூடாது என்று கூறின உடனே, மக்கள் இம் என்றனர் அதுதான் ஜனநாயகமென்றனர், ஏன் இந்த உழைப்புறிஞ்சிகள் உல்லாச புருஷர்களாக இருக்கவேண்டும் என்று கேட்டனர்! மடாதிபதிகளின் ஒழிக்கப்படவில்லை - அவர்களிடம் உள்ள சொத்து, பொதுவுடைமையாக்கப்படவில்லை - மக்காளட்சிக் காலமான இந்நாளில், மதத்தின் பெயர் கூறி மக்களை அடக்கும் முறை கூடாது என்று கூறவில்லை - நிர்வாகத்தைச் சர்க்கார், மேற்கொள்வது என்ற சாமான்யமான முயற்சிதான் நடைபெறுகிறது. ஆனால், மக்களின் மனம் மருட்சி அடையும் விதமாகவும், நிலைமை இருக்கிறது. வாளுக்கும் இரும்புப் பெட்டிக்கும் இல்லாத வலிவு, எதிர்ப்புச் சக்தி, புல்லுக்கு இருக்கிறது - நம் நாட்களில் - வானில் விமானமும், வீடுகளில் ரேடியோக்களும் உள்ள காலத்தில் - வரம் தரும் காலம் அல்ல - வச்சிராயுதம் வீசும் காலமல்ல -!

இந்த நாட்களாக நாம் எடுத்துக் கூறி வந்தோம் - பழைமை ஆதிக்கம் செலுத்துகிறது - வைதீகம் ஆட்சி செய்கிறது - அதன் சர்வாதிபத்யம் மற்ற ஏகாதிபத்யங்களை எல்லாம் விடப்பலம் பொருந்தியது - அதைத் தாக்கித் தகர்த்தாலொழிய, தன்னாட்சி பெற்றாலும், மக்களாட்சி, நல்லாட்சி ஏற்படாது என்று.

புல்லுக்கு என்ன இவ்வளவு பேச்சு! என்றனர்! சடடசபையிலே, சண்டமாருதத்தைக் கிளப்புகிறது, அந்தப் பழைய, பயங்கர, ஆயுதம், அரசு பலவற்றை அழித்த ஆயுதம்! இந்தச் சட்ட சபையின், வெற்றி தோல்வியுடன், இருந்துவிடாது - டில்லி நோக்கிச் செல்லும் - ஆம்! அதன் சக்தியின் முன்பு, தடியடியால் தழும்பேறிய காங்கிரஸ் வீரரின் சக்தியும், திக்குமுக்காட வேண்டிவருகிறது! இந்த உண்மையைக் காங்கிரஸ் நண்பர்கள் உணருகிறார்கள் - உள்ம் நொந்து பேசுகிறார்கள் - தர்ம சங்கடத்தில் சிக்கிகொண்டோமே என்று சஞ்சலப்படுகிறார்கள். தர்மசங்கடம் ஒழிய வழி இல்லாமற் போகவில்லை. நமது கூட்டுறவுதான், அந்த வழி. நாம் பிரிந்திருக்கக் காரணம் இல்லை - சமுதாயத்துக்கு அதனால் இலாபம் இல்லை! இடுக்கித் தாக்குதல், நல்லதுதான் ஓரளவுக்கு - உள்ளிருந்து புல்லர்களைத் தாக்கும் காங்கிரஸ் படையும், வெளியே இருந்து தாக்கும் திராவிடர் கழகப்படையும் உள்ளன. ஆனால், சில குறிப்பிட்ட சமயங்களிலே தவிர, இந்த நிலை நமக்குப் புரியாமல் பேவாதால், சூதுக்காரர் வெற்றி பெற்று விடுகிறார்கள் - நாம் ஒருவரை ஒருவரே தாக்கிக் கொள்ளுகிறோம் - ஒருவரை ஒருவர் இழித்தும் பழித்தும் பேசிக் கொள்வதன் மூலம்! இருபடைகளின் பலமும் சிதறும் - இருவருக்கும் மூலநோக்கமாக உள்ள நல்லாட்சிக்குக் குந்தகம் விளையும்.

மடாலயங்களின் கண்காணிப்பு சம்பந்தமாகவே, இவ்வளவு சங்கடம் என்றால், மட ஒழிப்புக்கு - மட இலயங்களை மட்டுமல்ல நாம் குறிப்பிடுவது, பன்னெடுங்காலமாக அடிமைத்தனத்தில் உழன்றதால், மடமை மிகுந்துவிட்ட மக்களின் மனசு மாசு முழுவதையும் குறிப்பிடுகிறோம் - அந்த மகத்தான் பணிபுரியக் கிளம்பும் போ, எவ்வளவு எதிர்ப்பு இருக்கும் என்பதைக் காங்கிரஸ் நண்பர்கள் எண்ணிப் பார்க்க வேண்டுகிறோம். பிரிந்திருக்கிறோம் - ஒருவரை ஒருவர் பகைத்துக்கொண்டு வாழ்கிறோம் - எனினும், எமது தலைவர், நீறு பூசா நாத்திகர் - உமதுதலைவர், நமது முதலமைச்சர் நீறு பூசிய நாத்திகர், என்றுதான் நிந்திக்கப்படுகின்றனர்! இந்தச் சூட்சமத்தைத் தெரிந்துகொள்ள, இந்தச் சம்பவம் உதவினால் போதும், உதவும், நம்புகிறோம்.
(திராவிடநாடு - 13.2.49)