அறிஞர் அண்ணாவின் கட்டுரைகள்


டில்லி சந்திப்பு!

வெற்றி! வெற்றி!! - என்கிறார்! கொத்தலாவா.

ஆமாம்! ஆமாம்! - என்கின்றனர், டில்லி வட்டாரத்தினர்.

ஆனால், இலங்கையில் தவிக்கும் ஏழு லட்சம் திராவிட மக்களும் – எதிர் காலம் எப்படியோ! - எனத் திகைக்கின்றனர்.

உலகத்தில் எங்கும் காணாத நிலை – அங்கே. நாடு எதுவும் இல்லாதவர்களாக இருக்கிறார்கள், மக்கள்! பொன் விளையும் பூமியிலிருந்தும் புசிக்க வழியற்றுச் சென்றோடிய மக்கள்.

இந்தப் பிரச்னை, பெருந்தீ, அதனை அணைத்திட முயல்வதாக டில்லி காட்டிக் கொள்கிறது! தாங்களும் ஆர்வமுடனிருப்பதாக இலங்கைக் காட்டிக் கொள்கிறது!!

கொத்தலாவலாவுக்கு இலங்கையில் நிலமை சரியில்லை. ஏதாவது செய்து தீர வேண்டிய கட்டம்! பண்டித நேருவுக்கும் இலங்கையுடன் ஒரு சமரசத்துக்கு வந்தாக வேண்டும். ஏனெனில், அவர் ஆசிய ஜோதி!

இதுதான், ‘டில்லி சந்திப்பின்‘ முக்கிய இரகசியம்.

இந்தச் சந்திப்பால், பலனுண்டா! எதிர்காலம்தான் கூற வேண்டும், எனத் தேசிய ஏடுகளே எழுதுகின்றன. எத்தனை ஆண்டுகள் ஆகுமோ!!

‘நாட்டற்றவர்கள்‘ என்றும் அவர்களை எந்த நாட்டுக்குக் குடிமக்களாக்குவது என்றும் அவர்களைப் பற்றி அனுதாபமும் சிரத்தையும் இல்லாதவர்களாக கூடிப்பேசி முடிவு காணமுடியும்?

இந்தப் பிரச்னையை, கவடுசூதின்றி கவனித்தால் ஒழிய, ஒரு முடிவு காண்பது சாத்யமல்ல, அந்த நல்லெண்ணம் உண்டா, இவருக்கும்? நம்முடைய, சந்தேகம் இது.

விளைவைப் பொறுத்துப் பார்ப்போம்.

திராவிட நாடு – 17-10-54