அறிஞர் அண்ணாவின் கட்டுரைகள்


டாக்டருக்கு, ஒரு டோஸ்

“காம்போதியா, பாடுகிறான்? காதிலே கேட்க முடியவில்லையே! இராகமா இது? இந்தக் கிருதியைப் பாடுகிற பாணி இப்படியா? தாளம் உண்டா? சுருதியிலே சேருகிறதா? கர்மம், கர்மம்! இவனெல்லாம் சங்கீத வித்தாவன்களென்று சொல்லிக் கொண்டு சபைக்கு வந்து விடுகிறார்கள்” என்று குறை கூறுகிறார், சில காலம் சங்கீதம் பாடிப்பிழைத்துப்பிறகு, அது கட்டாததால் சத்திர மானேஜராக வேலைக்கு அமர்ந்த, சாஸ்திரியார்! சபையிலே அவர் செய்த ‘ரகளை’யைக் கேட்டுக்கொண்டிருந்த பலருக்குச் சிரிப்பு. சாஸ்திரிகள் சங்கீதம் பாடிக் கொண்டிருந்த காலத்திலே, கழுதை கெட்டவன் பழுது எடுத்து ஓடிவராதது ஒன்றுதான் பாக்கி, அவ்வளவு அபத்தமான பாட்டு அவருடையது. அபசுரக்குடுக்கை, ஆபாசக்களஞ்சியம், அவர். மற்றொருவரின் பாட்டுக்கு அவர் குறை கூறினால், கேட்பவருக்குச் சிரிப்பு வராதா!

செவிட்டுச் சுப்பன், மந்தக் காதுள்ள மாரியைக் குறை கூறுவதும், குருட்டுக் கந்தன், பார்வை பழுதான பக்கிரியைப் பழித்துப் பேசுவதும், முடமான முனுசாமி கால் இழுத்துக் கொண்ட கண்ணனைக் கேலி செய்வதும், பொருத்தமாகுமா! இராப்பட்டினி, பகல் பட்டினியைப் பரிகாசம் செய்வதுபோல, ஒரு வேடிக்கை நடக்கக் காண்கிறோம்.

பிரிட்டிஷ் தொழிற்கட்சியினரான, மாரிசன் என்பவரைக் குமாரமங்கலம் குறுநில மன்னரும், குல்லுகபட்டரின் நண்பரும், ஆரிய அணங்கினைப் பெற்று அகமகிழ்பவரும், மாஜி மந்திரியாருமான, டாக்டர் சுப்பராயன், கேலி செய்கிறார், கண்டிக்கிறார். தொழிற்கட்சிப்பிரமுகர், ஆளும் கூட்டமாகிய கன்சர்வெடிவ் கட்சியுடன் கலந்து உறவாடுவதால், பழைய பண்பினை இழந்து, ஏகாதிபத்திய வெறிகொண்டு அலைகிறார், என்பது, டாக்டர் சுப்பராயன் அவர்களின் குற்றச்சாட்டு!

பிரிட்டனிலே உள்ள அரசியல் கட்சிகளிலே மூன்று, முக்கிய மானவை, கன்சர்வேடிவ், லிபரல், தொழிற்கட்சி என்பனவாகும். கடுகடுத்த முகம், படபடத்த பேச்சு, பொறி கிளம்பும் கண்கள், கன்சர்வேடிவ் கட்சியினருக்கு, பரந்த மனப்பான்மை, பாகுமொழி, சிறந்த பேச்சுவன்மை, லிபரல் கட்சியினருக்கு. தொழிற்கட்சியி னருக்கு, சமதர்ம நோக்கம் ஆனால் பொதுஉடைமைக் கட்சியிடம் பகை, தீவிரமான திட்டம் அதை எடுத்துரைப்பதில் இஷ்டம், ஆனால் காரியத்திலே கொண்டு வருவதோ கஷ்டம்! இங்ஙனமாக உள்ள இம்மூன்று கட்சிகளுள் கன்சர்வெடிவ் கட்சிக்கு, இந்தியா என்றென்றும், ஏகாதிபத்தியத்துக்கு ஏவல் புரியவேண்டுமென்ற எண்ணமும், லிபரல் கட்சிக்கு, இந்தியா, பிரிட்டனின் தோழனாக இருக்க வேண்டுமென்ற கருத்தும், தொழிற்கட்சிக்கு, இந்தியா, சுயேச்சை நாடாக விளங்க வேண்டுமென்ற இலட்சியமும், உண்டென்று, இங்குள்ளோர் கூறுவர். பிரிட்டனிலே தொழிற்கட்சி ஆளுமானால், இந்தியாவுக்குச் சுயாட்சி சுலபத்திலே கிடைத்து விடுமென்று, இங்குக் காங்கிரசார் கூறுவதுண்டு. அவர்களின் இந்த மனமயக்கத்தை நாம் கண்டிக்கத் தவறியதே இல்லை. பிரிட்டனி லுள்ள எக்கட்சியாக இருப்பினும், காலவேகத்தைத் தடுத்து நிறுத்தவும் முடியாது, கதிர்முற்றாமுன்னம் அறுவடைக்குச் செல்லவும் முடியாது. எந்தக் கட்சிக்கு ஆட்சிப் பீடம் கிடைத்தாலும் இந்தியாவின் எதிர்காலத்தைப் பொறுத்தவரையிலே, சில அடிப் படையான விஷயங்களை ஆரஅமரக் கவனியாமல் அவசரக் கோலத்தை அள்ளித் தெளிக்க முடியாது என்ற உண்மையை உணர வேண்டுகிறோம். கன்சர்வெடிவ் கட்சிக்குத்தான் ஏகாதிபத்தியத் திமிர், தொழிற் கட்சிக்கு ஏகாதிபத்தியம் என்ற பேச்சே எட்டி, என்று கருதுவது மடைமை. இன்று இல்லை - என்று கூறுவதற்கும், நாளை பார்ப்போம் - என்று சொல்லுவதற்கும், சொல்வகையிலே மாறுபாடு உண்டேயன்றி, மனப்பான்மையிலே மாறுபாடு இல்லை.

நாட்டிலே ஒன்றுபட்டீர்களா? சுயாட்சியைச் செம்மையாக நிர்வகிக்கும் திறன் உண்டா? இனத்தகராறு தீர வழி கண்டாகி விட்டதா? என்ற அடிப்படையான கேள்விகளைக் கேட்காமல், பிரிட்டனிலே எந்தக் கட்சியும் “இந்தா, விபீஷணா! இலங்காபுரி ராஜ்யம்” என்று இராமன்போல் கூறிட முடியாது. நாட்டு ஒற்றுமைபற்றியும் இன பேதங் குறித்தும், பிரிட்டிஷ் பிரமுகர்கள் பேசுவது, அவர்களின் மனச்சுத்தத்தையோ, நல்லெண்ணத்தையோ காட்டுகிறது என்று கூறவோ அவர்களுக்கு வக்காலத்து வாங்கவோ நாம் இங்ஙனம் கூறவில்லை. பிரிட்டிஷார், தங்கள் பிடியைத் தளரவிடக்கூடாது என்பதற்காகத் தந்திரமாக இதுபோல் பேசுகின்றனர் என்று கூறினாலுஞ் சரியே, சுயநலத்தையே பெரிதென்று கருதும் பேச்சு என்றுரைத்தாலுஞ் சரியே, இன்றுவரை, பிரிட்டிஷாரின் இந்தப் பேச்சுக்கு இடமில்லாதபடி செய்ய, இங்கு நமது நாட்டுக்கட்சியினர் முன் வராதது, ராஜதந்திர சூன்யத்தையே காட்டுகிறதென்று கூறுவோம். எனவே இங்குள்ள குறையினை அவர்கள் எடுத்துக் காட்டுவதுகேட்டு கையை நொடித்துக் கொள்வதிலும் பயனில்லை, எரிகிற கொள்ளியிலே எந்தக் கொள்ளி நல்லது என்று ஆராய்வதிலும் பயனில்லை, தொழிற் கட்சியுமா, கன்சர்வெடிவ் கட்சியின் “பாஷை”யிலேயே பேசுவது என்று மாரடித்துக்கொள்வதிலும் பயனில்லை. பிரிட்டனிலே இப்பேச்சு, இங்குள்ள பிரச்னைகளின் எதிரொலிதான் என்பதனை உணர்ந்து, இங்கே பிரச்னையைத் தீர்க்க முனையவேண்டும். இந்தப் பணியிலே டாக்டர் சுப்பராயன் ஈடுபடுவாரானால், அவருக்கு மாரிசனின் மாயா வாதத்தைப்பற்றிய மன எரிச்சல் எழ நேரமே இராது!

தொழிற் கட்சித் தலைவர்களுள் ஒருவரான மாரிசன் என்பார், கன்செர்வெடிவ் கட்சியினருடன் கூடிக்கொண்டார், டோரி மனப்பான்மை அவருக்கும் பிறந்துவிட்டது என்று டாக்டர் குற்றம் சாட்டுகிறார். பதவிப்பாசமே, மாரிசனின் மனமாறுதலுக்குக் காரணம் என்று டாக்டர் கருதுகிறார். டோரி கட்சியின் வாரிசாக உள்ள கன்செர்வெடிவ் கட்சியுடன்கூடி தொழிற்கட்சியினரான மாரிசன் ஏகாதிபத்ய பூசாரியாகிவிட்டார், என்று டாக்டர் குறை கூறுவதுதான் வேடிக்கையாக இருக்கிறது. புதிய வித்வானுடைய காம்போதிக்குக் குறைகூறிய சாஸ்திரிகளின் சாவேரி, சகானாவாகவும், சகானா, சங்கராபரணமாகவும், அடாணா முகாரியாகவும் மாறிய சமயம் அனந்தம்! அனுபல்லவி பாடாது சரணம் பாடிய சந்தர்ப்பங்களும், ரூபக்காளத்திலே தொடங்கி திரிபுடையில் முடித்ததும், பல சமயம்! இவ்வளவு ஆபாசமாகப் பாடிய சாஸ்திரி, வேறொருவர் சாகரப் பிரியா பாடும்போது, அவர் பாடுவது காம்போதி என்று கருதிக்கொண்டு இராகம் பேதப்படுகிறதே என்று குறைகூறுகூது, கேலிக்கூத்து அல்லவா? அது போலவே, டாக்டர் சுப்பராயன், தேச பக்தராகப் பதவியிலே அமரச் சென்று பதவிபக்தராக, பார்ப்பனீய பக்தராக மாறிய கூட்டத்தவராயிற்றே, இவரா, மாரிசனின் மனப்பான்மை மாறிவிட்டதென்று குறைகூறுவது! மாரிசன் பதவி கிடைத்ததும் தமது பழைய பண்பினை இழந்துவிட்டார் என்று குற்றஞ்சாட்டும் குமாரமங்கலக் குறுநில மன்னர், குடி புகுந்த கட்சியினரின் யோக்யதை எப்படி இருந்தது என்பது மாரிசனுக்குத் தெரியாதிருக்கலாம், தெரிந்தாலும், டாக்டருக்குப் பதில் கூறவேண்டிய அவசியமில்லை என்றும் கருதலாம். ஆனால் நமக்கோ, காங்கிரசார் ஆளத்தொடங்கியதும், புதுப் பிறவிகளானது, நினைப்பை விட்டகல மறுக்கிறது. வறண்டு கிடந்த ஆற்றிலே வெள்ளம் புரண்டோடி வந்தால், வழிநெடுக வயலையும் சாலையையும், மனையையும் மலர்ச் சோலையையும் அழித்தொழிப்பதுபோல பதவி பெற்றதும் காங்கிரசார் உண்டாக்கிய அழிவின் அறிகுறிகள் இன்றும் காணக் கிடக்கின்றன. மாரிசன் மாறிவிட்டார் என்று மாரடித்தழுவதைச் சற்று நிறுத்தி டாக்டர் சுப்பராயன், மனமாரக் கூறட்டும், காங்கிரசின் சிந்தனையும் செயலும் மாறி பதவி பெற்றதும் திமிர் பிடித்தலைந்து எதிர்ப்பட்டோரை அழித்தது போல, எந்த நாட்டிலேனும் பதவிபெற்ற கட்சி செய்ததுண்டா?

வெள்ளையரை விரட்டப்போன இவ்வீரர்கள், கைவலித்தாலும் கருத்து வலியின்றி வெண்சாமரம் வீசிக்கிடந்த விந்தையும், கடல்கடந்துவந்த வெள்ளைக் காக்கையே! என்று கேலி மொழிக்கு இலக்கான வெள்ளை வர்க்கத்தினரான கவர்னரை, நண்பரே! வழிகாட்டியே! ஞானாசிரியனே! என்று அர்ச்சித்த வேடிக்கையும், ஏகாதிபத்யத்தை எரிக்கப்போனவர்கள், ராஜவிசுவாசப் பிரமாண மெடுத்ததும், சட்டத்தைச் சுக்குநூறாக்கச் சென்றவர்கள் சட்டசபையிலே சாய்ந்து கிடந்ததும், சம்பளத்தைக் கண்டித்தவர்கள் சட்டசபையிலே பேசாமடந்தைகளாக இருப்பதற்கு மாதம் எழுபத்துஐந்து பெற்றதும், யார் மறந்தார்கள் என்று கேட்கிறோம். ஆளப்புகுமுன் தவசி, ஆட்சியிலேயோ அகப்பட்டவரைக் கற்பழிக்கும் பரதேசியாக இருந்தனரே! எத்தகைய மாற்றம் அவர்களுடையது! வரி குறைப்போம் என்று வாஞ்சனையுடன் பேசியவர்கள், வரிமேல் வரி போடத்தான் செய்வோம், பணம் வேண்டுமே என்று பேசியது, மாரிசன் மாறியதைவிடக் குறைவானது என்று டாக்டர் சுப்பராயன்கூற முடியுமா? அடக்குமுறைகளை ஒழிப்போம் என்று பேசிய சுதந்திரச் சுருதிப்பெட்டிகள், 144, கிரிமினல் சீர்திருத்த சட்டம், என்ற பல்வேறு அடக்குமுறைகளை வீசும் ஆர்ப்பாட்டக்காரராக மாறவில்லையா? ஒற்றுமை வளர்க்கும் உத்தமராக நடித்தவர்கள், முஸ்லீம்களுக்கு மயிர்களையும் மனையிலும் பங்கு கேட்பர் போலும் என்று திமிர் பேசும் மாற்றத்தை நாம் காணவில்லையா? தமிழருக்கு நாங்கள் தாசராகவோம் என்று தளுக்காகப் பேசியவர்கள், தமிழ் வேண்டும் என்று கூறிய தமிழரில் ஆயிரவருக்கு மேல் சிறை தள்ளிய செருக்கு செந்தமிழ் நாட்டிலே தோன்றிடக் கண்டோமே! தொழிலாளருக்குத் தோழர்கள் என்று பேசியவர்கள், சூளை, மதுரை, பசுமலை ஆகிய இடங்களிலே நடந்த வேலை நிறுத்தங்களின்போது தடியடி தர்பார் நடத்தியது, மாரிசனின் மனமாற்றத்தைவிடக் குறைந்ததா என்று கேட்கிறோம். சீராளாவிலும், சித்தவலசாவிலும், தொழிலாளர்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம் செய்ததை மறக்கவேண்டுமா, முடியுமா? பதவி கிடைக்கும்வரை பசுத்தோலைப் போர்த்துக்கொண்டிருந்த புலிகளல்லவா, டாக்டரின் சகாக்கள்! அந்த மாறுதலைவிட, மாரிசனின் மனமாற்றம், விசித்திரமானது என்று நாம் கருதவில்லை, நாம் கூறியுள்ள காரணங்களைக் கருத்தூன்றிப் பார்ப்பவர்களும், கருதமாட்டார்கள். மந்திமுகவதி மற்ற முகத்தைக் கேலிகாட்டக் கூடாதே, என்றே நாம், மாரிசனைக் குறை கூறிய டாக்டருக்கு இதைக் கூறினோம். காங்கிரசாட்சியிலே அவர்கள் பதவிக்கு முன் சொன்னதை எவ்வளவு மாற்றிக்கொண்டு, நடந்தார்கள் என்பதற்குப் பலப்பல கூறலாம், நாம், டாக்டருக்கு, அதிலே, ஒரே ஒரு டோஸ் மட்டுமே கொடுத்திருக்கிறோம்.

17.10.1943