அறிஞர் அண்ணாவின் கட்டுரைகள்


‘டிராம்வே‘ வேலை நிறுத்தம்!

“நஷ்டம் வருகிறது – ஆகவே மூடுகிறோம்“ என்பதாகத் தெரிவித்துவிட்டு சென்னை டிராம்வே முதலாளிகள், 1600க்கு மேற்பட்ட தொழிலாளர்களை, அனாதைகளாக்கி விட்டனர்.

‘டிராம்‘ ஓடாதததால் ஏழைகளும் மத்திய தரவர்க்கத்தாரும், தினசரி தொல்லைகள், காணச்சகிக்கவில்லை. நிலைமையைச் சமாளிப்பதற்காக அரசியலார் அதிக பஸ்களை விடும் பயிற்சியி லீடுபட்டிருக்கிறார்களென்றாலும், கட்டணம் அதிகமாயிருப்பதால், பலரால் செல்ல முடியவில்லை, வேதனைப்படுகிறார்கள்.

சில தினங்களுக்கு முன்வரை, மக்களின் முக்கிய போக்குவரத்து சாதனமாயிருந்த டிராம்கள் திடீரென நிறுத்தப்பட்டு, பல்லாயிரக்கணக்கான மக்கள் அவதி அடைவதென்றால், இந்தக் கேட்டுக்கு டிராம்வே முதலாளிகளே பொறுப்பாளியாவார்கள்.

தனிப்பட்ட சில முதலாளிகளின் விரல் அசைந்தால், ஆயிரக்கணக்கானோர் வேலை இழக்க வேண்டும்! பல்லாயிரக்கணக்கானோர், தொல்லைக்கு ஆளாக வேண்டும்!.

விசித்திரமான அமைப்பு, இது. சமுதாயத்தின் மேடு பள்ளங்களில் மனிதனின் வாழ்வு உருட்டப்படுவதை எவரும் சகித்துக் கொண்டு காலம் தள்ள முடியாது.

ஆங்காங்கும் அரசியல் விழிப்புகள் ஏற்பட்டுவரும் இந்த நேரத்தில், முதலாளிகள் வசமிருக்கும் டிராம்வே நிர்வாகத்தை, சர்க்காரே ஏற்று நடத்த வேண்டும். ‘சர்க்கார் நடத்தினால் நஷ்டம் வரும்‘ என்று காரணங் கூறப்படுவது, சரியானதல்ல. ஒழுங்காகவும், தொழிலாளர்களின் உள்ளத்தைத் துன்புறுத்தாமலும், நிர்வாகம் நடைபெற்றால், எப்படி நஷ்டம் வரமுடியும்? – ஆகவே, தேவையானால் அவசரச் சட்டம் ஒன்று பிறப்பித்து, டிராம்வே நிர்வாகத்தை மேற்கொள்ளுமாறு வலியுறுத்துகிறோம்.

‘பஸ் இலாகாவால் சமாளித்து விடமுடியும்‘, என்று சர்க்கார் பெருமை பேசிக் கொள்வது, சில நாட்களுக்கே முடியும். ஆகவே, தொழிலாளருக்கு நன்மை பயக்கும் வகையில் மேற்படி நிர்வாகப் பொறுப்பை சர்க்கார் எடுத்துக் கொள்ள வேண்டும்.

இவ்விதம் செய்தால்தான், பொது மக்களுக்கு நன்மை செய்யும் துறையிலீடுபட்டிருக்கும் முதலாளிகள், தமது பொறுப்பை உணருவார்கள்.

ஆகவே, தொழிலாளர்களின் குடும்பங்களில் எழும் கண்ணீரைத் துடைக்கவும், முதலாளிகளின் போக்கைக் கண்டிக்கும் வகையிலும், உடனடியாக நடவடிக்கைகளை எடுக்குமாறு வலியுறுத்துகிறோம்.

திராவிட நாடு 19-4-53